Thursday, June 6, 2019

இருவேறு உலகம் – 139


விஸ்வம் குவித்து வீசிய சக்திகளை அந்தச் சின்னம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டதைப் போல விஸ்வம் உணர்ந்தான். ஏனோ அந்தக் குகையில் அகஸ்டின் அவனது இடுப்புக் கம்பளியைப் பிடித்துக் கொண்ட போது உணர்ந்ததை இப்போதும் உணர்ந்தான். கூடவே அவனுடைய சக்திகளை அவனிடமிருந்து உருவுவது போலவும் உணர ஆரம்பித்தான். அன்று அவன் அணிந்திருந்த கம்பளித் துணி மூலம், இன்று அவன் வீசியிருந்த சக்திகள் மூலம்….. தன் சக்திகள் இழுக்கப்படுவதை விஸ்வம் தடை செய்ய முயன்றான். அதற்கு அவன் நிறையவே போராட வேண்டி இருந்தது….. அவன் அனுப்பிய சக்திகள் அந்த சின்னத்தை மேலும் ஒளிர வைத்ததோடு பேசிக் கொண்டிருந்த க்ரிஷையும் சேர்ந்து பிரகாசிக்க வைத்தது. க்ரிஷ் ஒரு கணம் தேவதூதன் போலவும், கண்களைக் கட்டியிருந்த நீதி தேவதை போலவும் தெரிந்தான். அப்படித்தானே அவன் மற்றவர்களுக்கும் தெரிவான்!.. தன்னுடைய போராட்டத்தோடு விஸ்வம் இதையும் பார்த்துச் சகிக்க வேண்டியிருந்தது. ’க்ரிஷுடன் சேர்ந்து சதி செய்யாமல். சனியனே மங்கித் தான் தொலையேன்’ என்று அந்தச் சின்னத்தைப் பார்த்து மனதினுள் கூக்குரலிட்டான். அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த யுத்தத்தை அருகில் இருப்பவர்கள் உணர்ந்தது போலத் தெரியவில்லை. அவர்கள் க்ரிஷை பிரமிப்புடன் பார்த்தபடி அவன் பேச்சில் ஆழ்ந்திருந்தார்கள்.

க்ரிஷுடைய குரல் மிகவும் மென்மையாகியது. “நம் குறைகள் நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒழிய நமக்குத் தெரிவதில்லை. ஆனால் நம் பிரச்னை நாம் ஆராய்வதில்லை என்பது தான். ஆராய்ந்து அடுத்தவர் சொல்லி விட்டால் அவர்களை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். பல சமயங்களில் நம்மை விட்டு விலகி நிற்கவும், உயர்ந்து நிற்கவும் முடிந்தவர்களுக்கு நாமிருக்கும் நிலையைத் தெளிவாகப் பார்த்துத் தெரிவிக்க முடியும். அப்படித்தான் இந்த உலக நிலைமையை  என் வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னான். அவன் சொன்னது எல்லோருக்கும் பொதுவானது. என் மூலம் உங்களுக்கும், உங்கள் மூலம் மற்றவர்களுக்கும் சேர வேண்டியதாக அந்த சத்தியங்கள் இருக்கலாம். நாம் நல்ல முறையில் மாற வேண்டும், உயர வேண்டும், அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையில் அவன் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் சொன்னான்:…”

அறிவும், நல்ல மனமும் சேர்ந்திருக்கும் மனிதர்களாலேயே எந்த ஒரு சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லாமல் போகும் போது, அப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தும் அவர்கள் பொது நலனில் அக்கறை காட்டாத போது அழிந்திருக்கிறது.  நல்ல மனிதர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போது எல்லாமே நாசமாகிப் போகிறது...

“உண்மையான எதிரி ஒரு தனிமனிதன் அல்ல. உங்கள் சமூகத்தில் புறையோடியிருக்கும் சுயநலம், பேராசை, வெறுப்பு, அலட்சியம் எல்லாம் தான்.

தனிமனித மதிப்பீடுகள் தரம் குறையும் போது அவன் வாழும் சமுதாயத்தின் தரமும் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது தான் அழிவிற்கான விதைகள் விதைக்கப் படுகின்றன. பொதுநலம் மறக்கப்பட்டு, தன் உண்மையான நலமும் எதுவெனத் தெரியாமல் மனிதன் மயங்கும் சூழ்நிலை உருவாக ஆரம்பித்து, அந்தச் சூழ்நிலையில் தீமைகள் வேகமாக விளைய ஆரம்பிக்கின்றன. அப்போது தன் நிலைமைக்குத் தானே பொறுப்பேற்க மனிதன் மறக்கிறான். அடுத்தபடியாக உடனடிக் கிளர்ச்சிகளுக்காகவும் அற்ப சந்தோஷங்களுக்காகவும், நீண்டகால நன்மைகளையும், உயர்வுகளையும் மனிதன் அலட்சியம் செய்ய ஆரம்பித்து, தன்னை அழித்துக் கொள்ளத் தயாராகிறான். அவன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவது குறைய ஆரம்பிக்கிறது. அழிவின் வேகம் அதிகரிக்கிறது…..

அந்தச் சின்னம் இப்போது வைரம் போல் ஜொலிக்க ஆரம்பித்தது. இருட்டில் இருந்த அரங்கம் அந்த ஜொலிப்பில் பௌர்ணமி நிலவொளியில் வெட்டவெளியில் இருப்பது போல ஒளி வெள்ளத்தில் மிதந்தது. எல்லோர் முகத்திலும் பிரமிப்பு தெரிய ஆரம்பித்தது. விஸ்வத்திற்கு வெளியே இதைப் பார்க்கச் சகிக்கவில்லை. உள்ளேயோ சக்திகள் உருவப்படாமல் தடை செய்யும் முயற்சி தோல்வியடைந்து அவன் படிப்படியாக பலம் இழந்து கொண்டிருந்தான். அவனை ஏதோ ஒரு சக்தி கட்டிப் போட்டது. அவனால் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. எத்தனையோ பேரை இப்படிக் கட்டுப்போட்டிருக்கிறான். அந்த அனுபவம் அவனுக்கே வந்து சேரும் என்பதை அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

அந்தச் சின்னத்தின் ஜொலிப்பில் க்ரிஷும் தேஜஸுடன் தெரிந்தான். ஒவ்வொருவரின் அந்தராத்மாவுடனும் பேசுவது போல் க்ரிஷ் மேலும் சொன்னான். என் வேற்றுக்கிரகவாசி நண்பன் அழிவின் போக்கைக் கணக்கு போல படிப்படியாக விளக்கியது  மகத்தான உண்மை. தனிமனிதர்களாக நீங்கள் உங்கள் பொறுப்பை உணர்வதோடு தலைவர்கள் என்ற நிலையில் தனிமனிதர்களை மாற்ற முடிந்த சாத்தியத்தை உணர வேண்டும்…..உலகத்தில் மிக உயர்ந்த உத்தமனும் சரி, மகா மோசமானவனும் சரி எக்காலத்திலும் பெரும்பாலும் மாறாதவர்களாகவே இருப்பார்கள். எந்த மோசமான சூழ்நிலையிலும் மிக மிக நல்லவன் கெட்டது செய்யத் துணிய மாட்டான். எத்தனை தான் நல்ல சூழல் இருந்தாலும் மகா மோசமானவன் நன்மைக்கு மாற மாட்டான். இந்த இரண்டு உச்சங்களும் தங்கள் நிலை மாறாதவை. இவர்கள் விஷயத்தில் யாரும் எதுவும் செய்யவும் முடியாது. ஆனால் இவர்களின் அளவு மிகக்குறைவு. ஓரிரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். மற்ற எல்லாரும் இடைப்பட்டவர்களே. உங்களால் மாற்ற முடிந்தவர்களும், பெரும்பான்மை மனிதர்களும் இவர்களே….”

“இந்த இடைப்பட்டவர்கள் இரண்டு நிலைகளுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் ஒட்டு மொத்தமாய் தீய நிலைக்கு சரிவார்களேயானால் அந்த சமூகம் அழிவது நிச்சயம். அது தான் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இடைப்பட்டவர்களை நல்ல தன்மைக்கு மாற்றும்படியான சூழல் இல்லை. அந்த நன்மை அலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். அந்த அலைகளை அதிகப்படுத்தவே இந்தியாவின் அந்த ஆன்மிக இயக்கமும், தன்னலமில்லா தவசிகளும், உங்கள் அகஸ்டினும் கூடத் தவமிருந்தார். நுண்ணுணர்வு கொண்டவர்கள் அந்த நல்ல அலைவரிசைகளை வாங்கி மாறுவார்கள், தங்கள் உதாரணங்களால் மற்றவர்களையும் மாற்றுவார்கள் என்பது தான் அவர்கள் நோக்கமாய் இருந்தது. இது முட்டாள்தனம் அல்ல. தொலைநோக்கு….”

“ஒருவன் தன் மன உலகில் உருவாக்குவதையே வெளியுலகில் காண்கிறான். உள் உலகில் உருவாக்குபவை மேற்போக்காகவும், வீரியம் இல்லாமலும் இருக்கும் போது வெளியுலகிலும் குழப்பமாகவே எல்லாம் உருவாகிறது. உள் உலகில் தெளிவாகவும் உறுதியாகவும் தொடர்ந்து நினைப்பதும் மதிப்பதும் உயர்வாகவே இருக்கையில் அதன்படியே அவனுக்கு வெளியுலக வாழ்க்கை அமைகின்றது. இந்த இருவேறு உலகங்களில் ஒன்று அவன் உருவாக்குவது. இன்னொன்று அவன் காண்பது. அந்த வகையில் இருவேறு உலகமும் ஒன்றே. வெளியே காண்பது பிடிக்காத போது அவன் உள்ளுக்குள் உருவாக்குவதை மாற்றிக் கொள்வது ஒன்றே வழி”

“இன்னொரு விதமாகச் சொன்னால் எதை மனிதன் அதிகமாகவும் அழுத்தமாகவும் நினைக்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான் என்பது பிரபஞ்ச விதி. அதுவே அவனைத் தேடி வருகிறது. அதற்குரிய சூழல்களையே உருவாக்கியும் தருகிறது. ஆகவே எண்ணங்களிலும் நோக்கங்களிலும் இருக்கிறது எல்லாச் சூட்சுமமும். யோகிகள் தங்கள் ஞான அலைகளை பரவச் செய்து பலன் பெறத் தகுதியான அலைவரிசைகளில் இருப்பவர்களை உயர வைப்பது போல, ஆளுமை உள்ள மனிதர்களும் தங்கள் எண்ணங்களாலும், செய்கைகளாலும் எத்தனையோ நுட்பமான மாற்றங்களை உருவாக்கி விட முடியும். அந்த வகையில் தலைவர்கள் முடிந்த வரை உதாரண புருஷர்களாய் இருக்க வேண்டும். நன்மைக்கு மதிப்பும் மரியாதையும் தர வேண்டும். நன்மை போற்றப்படுகிறது, அதுவே கௌரவம், அதற்கே மதிப்பு என்ற நம்பிக்கையான சூழலை நாம் உருவாக்கினால் ஒழிய இந்த இடைப்பட்ட பெரும்பான்மையான மனிதர்களை நாம் நன்மையின் போக்கிற்கு மாற்றி விட முடியாது.”

“அப்படி மனிதர்களை மாற்றி அவர்களை மேலுக்கு உயர்த்தி அவர்களுக்குத் தலைமை தாங்குவது  தான் உண்மையில் தலைமைக்குப் பெருமை. முட்டாள்களையும், தற்குறிகளையும், கேடிகளையும், போக்கிரிகளையும், கொள்ளையர்களையும், தீவிரவாதிகளையும் சமாளித்து அதிலும் சுய சம்பாத்தியம் பார்ப்பதைத் தலைமை என்று பெருமையாகச் சொல்ல முடியுமா? இல்லுமினாட்டி எந்த மாதிரியான மனிதர்களுக்குத் தலைமை தாங்க நினைக்கிறது? எந்த விதமான தலைமையை அது பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்…. அறிவும் ஞானமும் படைத்த நீங்கள் யோசித்துப் பாருங்கள்.  நல்ல மனிதர்களைப் போற்றுங்கள். திறமைக்கு ஆதரவு கொடுங்கள். எது எல்லாம் உயர உதவுமோ அதை எல்லாம் சிலாகியுங்கள். உண்மைக்கு உரிய கவுரவம் கொடுங்கள். இந்த இடைப்பட்ட மனிதர்கள் கண்டிப்பாக நன்மையின் பக்கம் திரும்புவார்கள். உயர ஆரம்பிப்பார்கள்…. இதுவே உலகம் காப்பாற்றப்படும் வழி. அதைவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று இன்றைய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்வதைப் போல எல்லா இடங்களில் இருந்தும் சுருட்டிக் கொண்டே போனால் கடைசியில் எதுவும் மிஞ்சாது. இப்படி ஒருவன் சேர்த்ததை அவனுக்கு மேல் வலிமையானவன் பிடுங்கி, அவன் பிடுங்கியதை அதற்கு மேல் வலிமையானவன் பிடுங்கி வலிமை என்றாலே ஏமாற்றிப் பிடுங்குவது என்றாகி கடைசியில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தான் சாக வேண்டும்…. அழிப்பதற்கு எந்தத் தனித்திறமையும் தேவையில்லை. பலவீனமானவர்களை ஏமாற்றியும், பயமுறுத்தியும் கொள்ளையடிப்பது பெருமையும் அல்ல.”

அசைய முடியாமல் கட்டப்பட்டவன் போல் இருந்த விஸ்வம் சக்திகள் இழந்ததாலோ என்னவோ அந்தச் சின்னத்தில் இருந்து வெளிப்பட்ட பேரொளி நெருப்பாய் சுடுவது போல் உணர்ந்தான்.   அவனுக்கு முன்னால் விரிந்த குகைக்காட்சியில் மாஸ்டர் விஸ்வத்தை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய இரக்கம் அவனுக்கு நெருப்பை விட அதிகமாகச் சுட்டது. அவர் கண்களை மூடித் தியானத்தில் ஆழ ஆரம்பித்தார். அந்த நேரத்தில் தான் குகையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அவனுடைய கம்பளித்துணியின் நுனி மெல்ல எரிய ஆரம்பித்திருந்ததை விஸ்வம் கவனித்தான். விஸ்வம் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனான். அந்த எரியும் கம்பளி அவனையும் எரிப்பது போல் உணர ஆரம்பித்தான்.  சதாசிவ நம்பூதிரி சொன்ன விதை விருட்சமாகி காடாகி பெருக ஆரம்பிக்கையில் பிரம்மாண்ட விருட்சமாக இருந்த அவன் நெருப்பினால் எரிக்கப்பட்டு சாம்பலாகிக் கொண்டிருக்கிறான்…. உலகத்தின் விதி எழுதி அனைவரும் பார்க்க உச்சியில் நிற்க ஆசைப்பட்டவன் அருகிலிருந்த மனிதர்கள் கூட அறியாமல் செத்துக் கொண்டிருக்கிறான். கடைசியாக அவன் பார்வையில் பட்டது க்ரிஷ் கையில் ஜொலித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னம். கண்களை மூடிக் கொண்டான். அவனவனுக்குச் சேர வேண்டியதை அடுத்தவன் இடையே பிடுங்கிக் கொண்டாலும் கூட விதி பிடுங்கியவன் மூலமாகவே கூட சேர வேண்டியதைச் சேர வேண்டியவனிடம் சேர்த்தும் விடுகிறது என்பது அவன் கடைசி சிந்தனையாக இருந்தது.

க்ரிஷ் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே விஸ்வம் இறந்து போனான். “எல்லா மாற்றங்களும் உடனடியாக சாத்தியமாகி விடாது என்பது உண்மையே. ஆனால் அழிவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் சின்னச் சின்ன மாற்றங்களை உடனே நாம் ஏற்படுத்த வேண்டும். நம் நண்பர் சொன்ன அக்னி நமக்குள் இருக்குமானால், அது தணியாமல் நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால் பெரிய பெரிய மாற்றங்களும் சாத்தியமாகும். அவர் சொன்னது போலவே இலக்கு நோக்கித் தளர்வில்லாமல் போய்க் கொண்டிருந்தோமானால் எல்லா உயரங்களும் நமக்குச் சாத்தியமே”

விஸ்வம் முகத்தில் சோகம் கலந்த புன்னகை தங்கிப் போனது….

(அடுத்த வாரம் முடியும்)

என்.கணேசன்



19 comments:

  1. மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையோ தீமையோ நம்மை வந்தடையும். அதை விஸ்வம் மூலம் உணர்த்தியுள்ளீர்கள். கிரிஷின் பேச்சு அருமை. கொடியவன் ஆனாலும் விஸ்வத்தின் மரணம் சிறிது வலியைத் தருகிறது.

    ReplyDelete
  2. Superb Speech by Krish. All are golden words.

    ReplyDelete
  3. நல்ல எண்ணத்தையும் செயல்களையும் செய்வதே உயர்வு அதைப்பற்றிய உள்மன எண்ணங்களுமே ஒரு தனி மனிதனையும் அவன் வாழ்வியல் சூழலையும் சமுதாயத்தையும் மற்றும் மனிதகுல உயர்வுக்கு அழைத்து செல்லும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறீர்கள்....
    சிறப்பு..

    வாசகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்....

    ReplyDelete
  4. Similar climax like your earlier story. Well explained that even though powerful when it is used for wrong purposes the same power destroy.

    Even in your stories villans Are more interesting than heroes

    Hope our politician's will read these lines and practice.

    ReplyDelete
  5. Excellent ... கிருஷ் என்கிற கதாபாத்திரம் வாயிலாக திரு . கணேசன் அவர்கள் மனிதகுலத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கையும் , எடுத்துக்கூறிய அறிவுரையும் , தற்கால மனிதசமுதாயத்திற்கு மிகமிக அவசியமானவை ... ஆத்மஞானிகளுக்கே உரித்தான சிந்தனையும் ,பூவுலகின் ... மனிதர்களின் மீதான அக்கறையும் கண்டு வியக்கிறேன் ... வாழ்த்துகிறேன் ... இன்னும் பல யுகங்கள் இந்த உலகம் நிலைத்திருக்கட்டும் ... செழித்திருக்கட்டும் ...

    ReplyDelete
  6. Wisdom is always better than knowledge...

    ReplyDelete
  7. All are goldenn words to act as seeds for good thoughts, by Ganesan sir! Thoughts for us, the readers to think thru n spread good vibrations and a way to reverse the path of destruction India is going to! ��

    ReplyDelete
  8. You have said nice words through Krish...

    Viswam, ... "as you sow, so you reap"

    ReplyDelete
  9. க்ரிஷ்ஷின் பேச்சு எனக்கே கூறப்பட்டது போல தோன்றியது. இது மானுடத்திற்கே கூறியது என்பது புலனானது. 2-3 முறை படித்தேன், ரசித்தேன்

    ReplyDelete
  10. The words are so deep that understanding it in one read was not easy. Thanks for such excellent writing which is true to every soul in the world.

    ReplyDelete
  11. விஸ்வமோ அல்லது கிரிஷோ உண்மையை பேசும் போது முக்கோண கல் ஒளிர்வது அருமையான காட்சி...

    அகஸ்டின் அந்த கம்பளியை உருவும் போது "உன் சக்திகள் உருவப்படும்" என்பதைத் தான் குறிப்பின் மூலம் தெரிவித்தாரோ...??

    "விஸ்வத்தின் பெரிய குறை அவன் பக்கம் தர்மம் இல்லை" என கிரிஷ் ஒருமுறை கூறியுள்ளான்...அதே போல் உண்மை விஸ்வரூபம் எடுக்கும் போது யாருக்கும் தெரியாமல் விஸ்வம் காணாமல் போகிவிட்டான்...

    உலகில் பெரும்பாலன மனிதர்கள் இடைப்பட்டவர்களே..... அவர்களை எப்படி மாற்றி... உலக அழிவை தடுக்க வேண்டும்.... என்ற உண்மையை இந்த நாவல் மூலம் கூறியதற்க்கு நன்றிகள் ஐயா....

    உள் உலகம், வெளி உலகம் மற்றும் உண்மையான தலைமை இவை பற்றி கூறிய அனைத்தும் சிறப்பு...

    கிரிஷ் என்ன பேச வேண்டும் என்பதை வேற்று கிரகவாசி ஆரம்பத்திலேயே கூறிவிட்டு சென்றிருக்கிறான்...

    "பிரபஞ்சம் நினைப்பதை... ஒரு நூலளவு கூட பிழையில்லாமல் நடத்தி முடித்து விடும்... நாம் தேவையில்லாமல் மனதை குழப்பிக் கொண்டிருக்காமல், நம் கடமையை நூறு சதவீதம் சிறப்பாக செய்ய வேண்டும்" என்பதை புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  12. I have read last chapter and this chapter many times to fully understand the depth of your message Ganeshan Sir. No words to express my wonder. I am proud to be your reader Sir. Hats off to you.

    ReplyDelete
  13. ஒருவன் என்னவாக வேண்டும் என்று கிடந்து தவிக்கிறானோ அவன் அதுவாகவோ மாறுகிறான் என்ற பகவத் கீதையின் சாராம்சத்தை உங்கள் கதை எனக்கு நினைவுறுத்துகிறது.

    மிக சிறப்பு. வாழ்க உமது புகழ், வளர்க உங்கள் சேவை.

    Everyone has a purpose for this life, I'm trying to understand mine from past 2 decades. I strongly believe that the life will reveal it at some point of time. If so then how to recognize it?. இதை பற்றி தங்கள் கருத்தை உணர விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Your heart will identify it. Whatever you do against that will not satisfy you. Again and again it will push you to the purpose. Your only choice is obey it. Otherwise you will never know peace. Sooner you follow your path, greater will be period of peace.

      Delete
  14. I have read last chapter and this chapter many times Sir. No words to express my wonder. I am proud to be your reader Thank you

    ReplyDelete
  15. As all the commentators said, the last 3 chapters where Girish talks is the sum and substance of all wordly knowledge. we hope we will adhere to it in our all walks of life. Let it be the greatest lesson to all.

    மிக அருமை சார். மிகவும் நேர்த்தியான ஒரு படைப்பு. ஒரு எழுத்தாளனாக நீங்க்ள் நிச்சயம் பெருமை பட்டுக்கொள்ளலாம்,
    ஒரு வாசகராக நாங்களும் மிகுந்த சந்தோஷமும் இதைப் படித்தோம் என்ற பெருமையயும் அடைகிறோம்.

    ReplyDelete