Wednesday, May 8, 2019

இராமாயணத்தில் கீதாசாரம்!


கவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகத்தில் நுழைகிறோம். இதில் ஆரம்பத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சம்சாரத்தை அரசமரமாக உதாரணம் சொல்லி விளக்குகிறார்.    

சம்சாரம் என்ற அரச மரமானது மேலே வேரும் கீழே கிளைகளும் கொண்டது. அது அழிவில்லாதது. வேதங்கள் அதன் இலைகள்.

அந்த மரத்தின் கிளைகள் மேலும் கீழும் பரவியுள்ளன. அவை சத்வ, ரஜோ, தமோ குணங்களினால் வளர்ந்தவை. புலன்களைத் தளிர்களாகக் கொண்டவை. கர்மங்களுக்கு ஏற்றவாறு மானுட உலகிலும் அந்த மரத்தின் வேர்கள் பரவியுள்ளன.

அந்த சம்சார மரத்தின் உருவம் சொல்லப்படும்படி ஆராயும் போது புலப்படுவதில்லை. அதன் ஆதியும் அந்தமும் காணப்படுவதில்லை. உறுதியாக வேர் பாய்ந்த அந்த அரசமரத்தை பற்றில்லாமை என்ற வலிமை வாய்ந்த வாளால் வெட்டி எறிந்து விட்டுப் பிறகு எந்த நிலையை அடைந்தவர்கள் மறுபடியும் திரும்புவதில்லையோ, அதைத் தேட வேண்டும். அந்தப் பழைய சம்சார அரசமரம் யாரிடமிருந்து உண்டாயிற்றோ, அத்தகைய ஆதி புருஷனைச் சரணடைய வேண்டும்.

கர்வத்தையும், மோகத்தையும் விட்டு, பற்றுதலென்னும் குற்றத்தை வென்று, எப்போதும் ஆத்மஞானத்தில் நிலைத்து, கர்மங்களை விலக்கி, சுக துக்கங்கள் என்னும் இரட்டைகளை விட்டு, ஆத்மாவின் இயல்பை அறிந்தவர்கள், அழிவில்லாத அந்த நிலையை அடைவார்கள்.

பொதுவாக மரங்களின் வேர் அதன் அடியில் தான் இருக்கும். ஆனால் சம்சாரத்தை அரச மரமாக வர்ணிக்கும் ஸ்ரீகிருஷ்ணர் அந்த அரசமரத்தின் வேர் மேலே இருக்கிறது என்கிறார். ஏனென்றால் சம்சாரம் என்ற அந்த மரம் உண்டாகி, விரிவாக வளர்ந்து பரந்து கிடக்கக் காரணம் அனைத்துக்கும் ஆதி மூலமாகிய இறைவனே. இறைவன் உயர்வானவன், அனைத்திற்கும் மேலானவன் என்பதால் உருவாக்கிய அந்த வேர் மேலே இருக்கிறது என்ற வர்ணனை இங்கே பொருத்தமாக வருகிறது.

மேல் உலகில் வேர் விட்டு ஆரம்பித்திருக்கும் அந்த அரச மரத்தின் இலைகள் வேதங்களாக இருக்கின்றன. அதனால் வளமாகப் பெருகி இருக்கும் அந்த சம்சார மரத்தை வளர்ப்பவை சத்வ, ரஜோ, தமோ குணங்கள்.  புலன்கள் அதன் தளிர்கள். மூல வேர்கள் மேல் உலகில் இருக்கின்றன என்றால் கிளை வேர்களோ மனிதர்களின் கர்மங்களுக்கு ஏற்றபடி மானுட உலகிலும் பரவியிருக்கின்றன.

இப்படிப் பிரம்மாண்டமாகத் தோன்றும் சம்சார விருட்சம் ஆராயும் போது நமக்கு அகப்படுவதில்லை. காரணம் மாயை ஒருபோதும் ஆராயக்கிடைப்பதில்லை. ஆராயும் போது அது காணாமல் போகிறது. ஆனால் மற்ற சமயங்களிலோ அது நிஜம் போலவே தோன்றுகிறது. நிஜம் போலத் தோன்றும் போது அது ஏற்படுத்தும் துயரங்களும், பிரச்சினைகளும் ஏராளம். ஆதி அந்தம் தெரியா விட்டாலும் ஆழமாக வேர் விட்டிருக்கும் அந்த சம்சார விருட்சம் நம்மைச் சுற்றியும் படர்ந்து நம்மை நெருக்குகிறது. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி பற்றில்லாமை என்ற வலிமையான வாளால் அந்த மரத்தை வெட்டிச் சாய்ப்பதே!

மாயையாகிய அந்த மரத்தை வெட்டிச் சாய்த்த பின் தான் தனிமனிதன் அது உருவாக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முடியும். அதிலிருந்து தப்பித்த பின் நமக்கு ஒரு புகலிடம் வேண்டுமல்லவா? ஒரு நிரந்தரமான பாதுகாப்பு வேண்டுமல்லவா? நாம் இன்னொன்றில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமல்லவா? அதற்கு நாம் இந்த மாயா உலகத்தை உருவாக்கிப் பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் அந்த பரம்பொருளையே சரணடைய வேண்டும். அதன் பின் தான் பரிபூரண விடுதலை கிடைக்கும்.

முக்குணங்களால் வளர்த்து நாம் சிக்கிக் கொள்ளும் இந்த சம்சார பந்தத்திலிருந்து இப்படித் தப்பிக்கும் வித்தைக்கு இராமாயணத்திலேயே வழிகாட்டப்பட்டு இருப்பதாக வினோபாஜி கூறுகிறார். இராமாயணத்தில் என்னேரமும் செயல்வீரனாக இருக்கும் இராவணன் ரஜோ குணத்திற்கு எடுத்துக்காட்டு. பாதி வாழ்நாளை உறங்கிக் கழித்த கும்பகர்ணன் தமோ குணத்திற்கு எடுத்துக்காட்டு. தர்மத்தின் வழி நடப்பவனும், நன்மையை நாடுபவனுமான விபீஷணன் சத்துவ குணத்திற்கு எடுத்துக்காட்டு. ரஜோ குண இராவணனையும், தமோ குண கும்பகர்ணனையும் அழித்து சத்துவ குண விபீஷணனை ஆதரித்ததோடு நிறைவு வந்து விடவில்லை. அந்த சத்துவ குண விபீஷணன் இறைவனாகிய இராமனைச் சரணாகதி அடைந்த பிறகே குறைகள் முற்றிலும் முடிந்து போயின. அந்தச் சரணாகதியே இங்கே வலியுறுத்தப்படுகிறது. இந்த வகையில் கீதாசாரமே இராமாயணத்தில் விளக்கப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

கர்வம், மோகம், பற்றுதல் மூன்றும் குற்றம் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். மனிதன் தன் இயல்பான ஆத்ம ஞானத்தை மறக்க வைத்து இந்த மூன்றும் அவனை ஆட்கொண்டு விடுவதால் தான் இவை குற்றமாகிறது. ஆராய்ந்து பார்த்தால் கர்வம் ஒரு சுமை தான். அதற்கு நாம் தரும் விலை மிக அதிகம். அது தேவையில்லாத நிலைப்பாட்டை நம்மை எடுக்க வைத்து படாதபாடு படுத்துகிறது. மோகமும், பற்றுதலும் கூட நம்மைச் சிக்க வைக்கும் பொறிகளே. அதன் வழிச் சென்று அமைதியடைந்தவர் எவருமில்லை. இல்லாத கானல் நீரைத் தேடிச் சென்றால் நாம் ஏமாறுவதே நிச்சயம். ஆத்மஞானம் பெற்று விட்டால் தானாக அவை அனைத்தும் உதிர்ந்து போகும். அவற்றை உதிர்த்து விட்டாலும் நமக்கு ஆத்ம ஞானம் கைகூடும். அதுவே ஆனந்தமான நிலை. அதுவே அழிவில்லாத நிலை. அதை நாம் உணர்வோமா?

பாதை நீளும்…
என்.கணேசன்                         

2 comments:

  1. வேர்கள் உதாரணம் அருமை.... ஆனால்,பூமிக்கு அடியிலும் ...மேலேயும் வேர் இருக்கும் மரம் ஆலமரம் தானே...?
    ஏன் அரசமரம் என கூறுகிறார்??(அரசமர வேர் பூமிக்கு அடியில் மட்டுமே இருக்கும்)

    ReplyDelete
  2. அருமையான இலக்கிய சுவை பருகினேன்.
    பாராட்டுகள்.

    ReplyDelete