Monday, May 20, 2019

சத்ரபதி 73


கிளம்புவதற்கு முன் ஒரு முறை அன்னை பவானி சிலை முன் சிவாஜி சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தித்தான். அவன் நண்பன் யேசாஜி கங்க் வந்து சொன்னான். “அப்சல்கான் கூடாரத்திற்கு வந்து சேர்ந்து விட்டதாகத் தகவல் வந்திருக்கிறது சிவாஜி
        
சிவாஜி சொன்னான். “பண்டாஜி கோபிநாத்தை இங்கே வரச் சொல்

சிவாஜிக்காகக் காத்திருந்த அப்சல்கான் சிவாஜிக்குப் பதிலாக பண்டாஜி கோபிநாத் வந்து காலில் விழுந்ததில் எரிச்சலடைந்தான். பண்டாஜி கோபிநாத் அவனுடைய எரிச்சலைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. வளைந்து வணங்கியபடி சொன்னார். “வாருங்கள் பிரபு. உங்கள் வருகையால் எங்கள் பூமி பெருமகிழ்ச்சி கொள்கிறது. நாங்கள் பாக்கியசாலிகள்…. சிவாஜி வந்து கொண்டிருக்கிறார்….. தந்தைக்குச் சமமான உங்களைச் சந்திக்கவிருப்பதில் அவர் நேற்றிலிருந்தே உற்சாகத்தில் இருக்கிறார்…..”
                
அப்சல்கான் பொறுமையின்றி இடைமறித்தான். “சிவாஜியைச் சீக்கிரம் வரச்சொல் கோமாளியே. காத்திருந்து பழக்கப்பட்டவன் அல்ல நான்…..”

தங்கள் உத்தரவு பிரபுஎன்று பாதி வளைந்து வாய் மேல் கை வைத்தபடி பண்டாஜி கோபிநாத் அங்கிருந்து வெளியேறினார்.

ண்டாஜி கோபிநாத் சிவாஜியிடம் தெரிவித்தார். “மன்னா அவன் இடையில் வாள் இருக்கிறது. நிராயுதபாணியாக வர வேண்டும் என்றதை அவன் அனுசரிக்கவில்லைஅவனுடன் சையத் பாண்டாவும், கிருஷ்ணாஜி பாஸ்கரும் இருக்கிறார்கள்….. கிருஷ்ணாஜி பாஸ்கர் இடையிலும் ஒரு வாள் இருக்கிறது. அந்தணரானாலும் அவர் வாள்பயிற்சி பெற்றவர் போலத் தெரிகிறது. சையத் பாண்டாவும் நீண்டதொரு வாளை வைத்துக் கொண்டு அப்சல்கான் பின்னால் நிற்கிறான். அவனே எமன் போலத் தெரிகிறான்……

சிவாஜி சிறிது யோசித்து விட்டுமறுபடி போய் இப்படிச் சொல்லுங்கள் பண்டாஜிஎன்று பேச வேண்டியதைச் சொல்லிக் கொடுத்து விட்டு அங்கே செல்லத் தயாராக ஆரம்பித்தான்.

றுபடியும் சிவாஜிக்குப் பதிலாக பண்டாஜி கோபிநாத் தயக்கத்துடன் உள்ளே நுழைந்ததும் அப்சல்கான் கோபத்துடன் கேட்டான். “மறுபடி என்ன?”

கேள்விக்குறியாய் மறுபடி வளைந்து, வாய் மீது விரல் வைத்து பவ்யத்தையும், பணிவையும் காட்டியபடி தயக்கத்துடன் பண்டாஜி கோபிநாத் சொன்னார். “சையத் பாண்டா தங்களுடன் இருக்கையில் இங்கே வர மன்னர் சிவாஜி பயப்படுகிறார் பிரபு. பேசப்போவது நீங்கள் இருவர். இங்கே யுத்தம் எதுவும் நடக்கப் போவதில்லை. அப்படி இருக்கையில் கூடவே அவர் எதற்கு என்று மன்னர் கேட்கிறார்…. சையத் பாண்டா குறைந்த பட்சம் வெளியிலாவது நிற்கட்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். உங்களுடன் மன்னர் அறிந்த கிருஷ்ணாஜி பாஸ்கர் அவர்கள் இருக்கட்டும் என்று சொல்கிறார். மன்னரும்  அழைத்து வரும் இருவர்களில் ஒருவரைக் கூடாரத்திற்கு வெளியே நிற்க வைத்து விட்டு ஒருவருடன் தான் உள்ளே வருவதாகவும் உறுதி கூறுகிறார்…..”

அப்சல்கான் பொறுமையிழந்தான். “நான் மறுத்தால்?”

தயக்கத்துடன் பண்டாஜி கோபிநாத் சொன்னார். “இந்தச் சந்திப்பு நடைபெறாது பிரபு

அப்சல்கான் திகைத்தான். என்ன இது! எத்தனை சிரமப்பட்டு காடு மலை தாண்டி இவ்வளவு தூரம் வந்தது வீணா? கோபத்தில் கொதித்தவனாகமூடனே சிவாஜி விளையாடுகிறானா?” என்று அப்சல்கான் கேட்டான்.

விளையாடும் மனநிலையில் அவர் இல்லை பிரபு. அவர் அச்சத்தில் சிக்கித் தவிக்கிறார். அவ்வளவு தான். தங்கள் ஒருவரிடமே அச்சப்படும் அவர் தங்களை தந்தையைப் போல் நினைத்து தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கையில் சையத் பாண்டாவையும் அருகில் வைத்துக் கொண்டு உங்களிடம் பேசப் பயப்படுகிறார். உங்களுக்கு சையத் பாண்டா கூட இருந்தால் தான் மன்னர் சிவாஜியிடம் பேசத் தைரியம் வரும் என்றால் அதையும் நான் அவரிடம் தெரிவித்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறேன்…..”

சிவாஜி எதிர்பார்த்த பதில் அப்சல்கானிடமிருந்து உடனடியாக வந்தது. ”உன் மன்னனைப் போல் பேடி அல்ல நான். சையத் பாண்டா கூடாரத்திற்கு வெளியே கூப்பிடு தூரத்தில் இருப்பான். உன் மன்னன் பயப்படாத கிருஷ்ணாஜி பாஸ்கரை என்னுடன் இருப்பார். இனிமேலாவது சிவாஜி இங்கே வருவானா?” அப்சல்கான் ஏளனமாகக் கேட்டான்.

பிரபு. உங்கள் தைரியத்திற்கும் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன். கண்டிப்பாக மன்னர் சிவாஜி தங்களைச் சந்திக்க உடனே வருவார். இந்தப் பேச்சு வார்த்தை நன்மையில் முடியட்டும்.” என்று வளைந்து பதில் சொல்லி விட்டு பண்டாஜி கோபிநாத் வேகமாக வெளியேறினார்.

அப்சல்கான் சையத் பாண்டாவை வெளியே நிற்கச் சைகை செய்தான். சையத் பாண்டா வெளியே செல்வதற்கு முன் சொன்னான். “பிரபு. தாங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும். அடுத்த கணம் நான் இங்கு இருப்பேன்.”

அப்சல்கான் அலட்சியமாகச் சொன்னான். “அந்தப் பேடியைச் சமாளிக்க நான் ஒருவன் போதும் பாண்டா. கவலைப்படாமல் செல். என் இடையில் வாள் இருக்கிறது. அதை அந்தக் கோமாளி ஆட்சேபிக்கவில்லை. அவன் கவனிக்கவில்லை போலிருக்கிறது. முட்டாள். சிவாஜியைப் போல் மூன்று பேரை நான் ஒருவனாகவே சமாளிப்பேன்

சிவாஜி இரும்புக்கவசம் அணிந்து கொண்டு அதன் மேல் வெண்ணிறப் பட்டாடை அணிந்து கொண்டான். தலையில் ஒரு இரும்புக் குல்லாய் அணிந்து கொண்டு அதன் மேல் தலைப்பாகை அணிந்து கொண்டான். நான்கு ரம்பப் பற்கள் கொண்ட புலிநகத்தை இடது கை விரல்களில் மாட்டிக் கொண்டு நீண்டதும் வலது கை மணிக்கட்டில் பிச்சுவாக்கத்தி ஒன்றை சொருகிக் கொண்டதும் அவன் போட்டிருந்த நீளமான முழுக்கைச் சட்டையால் வெளியே தெரியவில்லை.

வெளியே ஜீவ மஹல்லாவும் சம்பாஜி காவ்ஜியும் இடுப்பில் ஒரு வாளும், கையில் ஒரு நீண்ட வாளும் வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். சிவாஜி அவர்களுடன் கிளம்பினான். ”ஜீவ மஹல்லா நீ என்னுடன் கூடாரத்திற்குள்ளே வா. சம்பாஜி நீ கூடாரத்திற்கு வெளியே நின்று கொள்.”

இருவரும் தலையசைத்தார்கள். சிவாஜி அமைதியாக நடக்க ஆரம்பித்தான். இருவரும் அவனுடன் நடக்க நடக்க சிவாஜி அவர்களிடம் சொன்னான். “ஜீவ மஹல்லா. கூடாரத்திற்குள்ளே நீ என்னுடன் வந்தாலும் கூடாரத்தின் வெளியே இருந்து என்னேரமும் வரக்கூடிய சையத் பாண்டா உள்ளே வந்த பின் அவன் மேல் தான் உன் முழுக் கவனமும் இருக்க வேண்டும். அதே போல் என் முழுக் கவனமும் அப்சல்கான் மேல் தான் இருக்கும்…. சம்பாஜி நீ என் அழைப்புக்குரல் கேட்டால் ஒழிய என்ன நடந்தாலும் கூடாரத்திற்குள்  வரவேண்டியதில்லை. ஆனால் கூடாரத்திலிருந்து அப்சல்கானோ, சையத் பாண்டாவோ வெளியே வந்தால் அவர்கள் உயிரோடு நிறைய தூரம் போய் விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. இருவருக்கும் புரிந்ததல்லவா?”

இருவரும் புரிந்தது என்று தலையசைத்தார்கள். சிவாஜி அமைதியாகச் சொன்னான். “நம் நால்வர் படை நிச்சயம் வெல்லும் கவலைப்படாதீர்கள்

ஜீவ மஹல்லா திரும்பிப் பார்த்தான். யாருமில்லை. இருப்பது மூன்று பேர் அல்லவா? நான்கு என்று சிவாஜி சொல்கிறானே என்று குழம்பினான்.

சிவாஜி அவன் குழப்பத்தைக் கவனித்து விட்டுச் சொன்னான். “நம்முடன் வரும் அன்னை பவானியை நீ கணக்கில் எடுக்க மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன்….”

ஜீவ மஹல்லாவும் சம்பாஜி காவ்ஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இறைவனை வணங்கும் அவர்களுக்கு இறைவனைக் கூட்டாளியாகக் கணக்கில் வைக்க இது வரை முடிந்ததில்லை. அது சிவாஜி போன்ற வெகுசிலருக்கு மட்டுமே சாத்தியம் போல் அவர்களுக்குத் தோன்றியது.

அவர்கள் கூடாரத்தை நெருங்கிய போது கூடாரத்திற்கு வெளியே சையத் பாண்டா தன் நீண்ட வாளுடன் நின்றிருந்தான். சுமார் நூறடிகள் தள்ளி அப்சல்கானின் பல்லக்கும், பல்லக்கு தூக்கிய வீரர்களும் இருந்தார்கள்இந்தப்பக்கம் நூறடிகள் தள்ளி சிவாஜியின் ஏழெட்டு வீரர்கள் நின்றிருந்தார்கள். அவ்வளவு தான்.

சிவாஜி சையத் பாண்டாவைப் பார்த்து லேசாகத் தலையசைத்தான். ஆனால் சையத் பாண்டா சிலை போல் நின்று அவனை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான். சிவாஜியின் நடையில் சீரான வேகம் இருந்தது. அவன் சையத் பாண்டாவின் அலட்சியத்தில் சிறிதும் பாதிக்கப்படாதவனாய் கூடாரத்தில் நுழைந்தான். சம்பாஜி காவ்ஜி வெளியே நின்று கொள்ள ஜீவ மஹல்லா சிவாஜியுடன் உள்ளே நுழைந்தான்.

கூடாரத்தில் உள்ளே நுழைந்ததும் சிவாஜி புதிய ஆளாய் மாறினான். அவனைப் பார்த்ததும் எழுந்து நின்ற அப்சல்கானின் ஏழடி ஆஜானுபாகுவான உருவத்தில் பயந்து போனவன் போல் சிவாஜி தன்னைக் காட்டிக் கொண்டான். அவன் கால்கள் லேசாக நடுங்குவது போல் அப்சல்கானுக்குத் தெரிந்தது. தைரியம் இழந்த சிவாஜி அதை ஈடுகட்ட ஜீவ மஹல்லாவின் அருகாமையை எதிர்பார்ப்பது போல் அவனைப் பார்த்தான். ஜீவ மஹல்லா அவனுக்கு நெருங்கியே இருந்தான். இருவரும் முன்னேறி வந்தனர்..

கிருஷ்ணாஜி பாஸ்கர் அப்சல்கானுக்கு சிவாஜியை அறிமுகப்படுத்தினார். “பிரபு தங்கள் நண்பர் ஷாஹாஜியின் மகன் மன்னர் சிவாஜி இவர் தான்…. மன்னரே தங்கள் தந்தையின் மிக நெருங்கிய நண்பர் பிரபு மேன்மைமிகு அப்சல்கானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்…”


தயங்கியபடியே வந்த சிவாஜியை வேகமாக நெருங்கிய அப்சல்கான் ஆரத்தழுவிக் கொண்டான். தழுவிய போது அவன் மார்பு வரை கூட சிவாஜி எட்டவில்லை என்பது அப்சல்கானுக்கு வேடிக்கையாக இருந்தது. அணைத்தபடியே பக்கவாட்டுக்கு சிவாஜியின் தலையைத் தள்ளியவன் அவன் தலை தன் உடம்புக்கும் கைக்கும் இடையே வந்தவுடன் திடீரென்று அவனுடைய இரும்புக்கரத்தால் சிவாஜியின் கழுத்தை அசுரத்தனமாய் அழுத்த ஆரம்பித்தான்.. சிவாஜி திமிறப் பார்த்தான். திமிற முடியவில்லை. சிவாஜியால் மூச்சு விடவும் முடியவில்லை….. அவன் மயக்கமடையப் போவது போல் உணர்ந்தான்….

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. I felt as if I was there. Very interesting.

    ReplyDelete
  2. About Afzal khan, Copied From Wiki:
    சத்கபர் (Saat Kabar) என்பது கர்நாடக மாநிலம், பிஜப்பூரில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தளம் ஆகும். இங்குதான் அப்சல்கான் மற்றும் அவரின் அறுபது (60) மனைவிகளின் கல்லறைகள் அமைந்துள்ளன. இந்தக் கல்லறைகள் குறித்து நிலவும் கதை பின்வறுமாறு மாராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மீது அப்சல்கான் போர் தொடுத்ததே இக்கல்லறை அமைய காரணம். ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட அப்சல்கான் தமது தலைமை ஜோதிடரை அழைத்து சிவாஜியின் மீது போர் தொடுத்தால் போரில் வெற்றி பெற முடியுமா என வினவினான். அதற்கு தலைமை ஜோதிடர், சிவாஜி மீது போர் தொடுத்தல் போரில் நிச்சயம் நீ கொல்லப்படுவாய் என கூறினார். இதைக்கேட்டு மனமுடைந்த அப்சல்கான் ஒரு வேளை தாம் போரில் தோற்று உயிரிழந்தால் தம் அறுபது மனைவிகளும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வார்கள் என பயந்தான். அதனால் தம் அறுபது மனைவிகளையும் ஒரே இடத்தில் கூடச் செய்து தமது படை வீரர்களை விட்டு கொல்ல முடிவு செய்தான். அவர்களில் இருவர் தப்பிவிட அவர்களையும் தேடி கண்டுபிடித்து கொலை செய்தான். பிறகு அறுபது சடலங்களும் உள்ளதா என உறுதி செய்து கொண்டு போருக்கு புறப்பட்டான். போரில் ஜோதிடர் கூறியபடியே அப்சல்கான் சிவாஜியால் புலி நகத்தால் கிழித்துக் கொல்லப்பட்டான்.

    ReplyDelete
  3. படிக்கும் போதே திக்..திக் உணர்வு ஏற்படுகிறது...
    இறுதியில் பேசாமலே அப்சல்கான் கழுத்தை நெறிக்கும் காட்சி பயங்கரம்... அடுத்து என்ன? என்ற ஆவலுடன்...?

    ReplyDelete