Monday, April 8, 2019

சத்ரபதி 67

ப்சல்கான் கேட்ட கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மாவல் வீரர்கள் சிவாஜியின் குடும்பம் எந்த நேரத்திலும் சகாயாத்ரி மலைக்கு இடம் பெயர்ந்து விட முடியும் என்பதையும் அங்கே சென்று அவர்களைப் பிடிக்க வழியில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்கள். அதை நம்பித்தான் சிவாஜி தைரியமாகக் குழந்தையையும், குடும்பத்தையும் விட்டுப் போயிருக்கிறான் என்பதைத் தெரிவித்தார்கள்.

அப்சல்கான் மறுபடி சிவாஜியைப் பிடிக்கும் முடிவுக்கே வந்தான். அதில் உள்ள சிரமங்கள் பற்றி அவன் கவலைப்படவில்லை. ”சிரமங்கள் இல்லாத போர் என்று ஒன்று இருக்கிறதா வீரர்களே. அங்கு போய்ப் போரிட்டாலும் சிவாஜியால் நம்மை வெல்ல முடியுமா?”

“அங்கும் சிவாஜியால் நம்மை வெல்ல முடியாது தான் பிரபு. ஆனால் அவன் கோட்டைக்குள் அடைந்து கொண்டால் குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது தாக்குப் பிடிக்க முடியும். அந்த அளவு கோட்டையை அவன் வலிமையாக வைத்திருக்கிறான்…..”

அப்சல்கான் கேட்டான். “இரண்டு மாதங்கள் கழித்து….”

“அவன் அங்கிருந்து தப்பித்துப் போய் விட வாய்ப்பிருக்கிறது. பிரபோ! அவனுக்கு மலைகளும், காடுகளும் அரண்மனையை விட இனிமையானவை”

அப்சல்கான் உற்சாகம் வடிந்து போனது. சிவாஜியின் கோட்டைகளைப் பிடிப்பதல்ல அவனுக்கு முக்கியம். சிவாஜியையே பிடிப்பது தான் முக்கியம். ஓடிப்போக முடிந்தவனை அந்தக் காடுகளுக்கும் மலைகளுக்கும் உள்ளே துரத்திப் பிடிப்பது தான் எப்படி?

தந்திரமாகத் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அப்சல்கான் யோசிக்க ஆரம்பித்தான்.


ரங்கசீப் தன் மூத்த சகோதரன் தாரா ஷுக்கோவுக்கு மரண தண்டனை வழங்கி, சிரத்சேதம் செய்ய உத்தரவிட்டு, அந்தத் தலையைப் பட்டுத்துணியில்  கட்டிச் சிறையிலிருக்கும் தந்தைக்கு அனுப்பி வைத்த செய்தி கிடைத்த போது சிவாஜி உள்ளம் வெந்தான். ஷாஜஹான் வெட்டுண்ட மூத்த மகன் தலையைப் பார்த்ததும் மூர்ச்சையானவர் இன்னும் பிரக்ஞை திரும்பாமல் படுத்த படுக்கையாக இருக்கிறாராம். சிவாஜிக்குக் கலிகாலம் வந்து விட்டதன் அடையாளமாக என்னெல்லாம் நடக்கும் என்று ஒரு நாள் தாதாஜி கொண்டதேவ் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் சொன்னதில் எல்லாம் கூட இந்தக் குரூரங்கள் இல்லை….

சமகால அரசியலில் எப்படிப்பட்டவர்களுடன் எல்லாம் தொடர்பில் இருக்க வேண்டி இருக்கிறது என்று விரக்தியுடன் நினைத்துக் கொண்ட சிவாஜி தன் இப்போதைய தலைவலியான அப்சல்கானை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தான். அப்சல்கான் பூனாவுக்குச் செல்வதாக இருந்த யோசனையைக் கைவிட்டதாகவும், இப்போது வாய் என்ற பகுதியில் தங்கி இருப்பதாகவும் செய்தி கிடைத்திருந்தது.

பிரதாப்கட் கோட்டை வலிமையும், பாதுகாப்பு நிறைந்ததுமான கோட்டை என்றாலும் மிக நீண்ட காலம் அந்த மலைக்காடுகளின் நடுவில் இருக்கும் கோட்டையில் இருப்பதில் நிறைய அசௌகரியங்கள் இருந்தன. சிவாஜி அங்கேயே இருக்கட்டும், மற்ற கோட்டைகளைக் கைப்பற்றி மீட்போம் என்று அப்சல்கான் தீர்மானித்தால் இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் வீண் ஆகும். மீண்டும் ஷாஹாஜியைக் கைது செய்யவும் பீஜாப்பூர் சுல்தான் எண்ணினாலும் விபரீதமே. இந்த முறை காப்பாற்ற முகலாயர்களும் வரும் வாய்ப்பில்லை. முன்பு காப்பாற்றிய ஷாஜஹானே இப்போது சிறையில் இருக்கிறார். ஔரங்கசீப் சிவாஜி மேல் கோபம் கொண்டிருப்பதால் கண்டிப்பாக உதவ வர மாட்டான்., தாரா ஷுக்கோ சிரத் சேதத்தைக் கேட்டதிலிருந்து அவன் மனம் ஏனோ அமைதி இழந்து தவிக்கிறது….. அப்சல்கான் தானாக ஏதாவது பாதக முடிவை எடுப்பதற்கு முன் அவன் எந்த முடிவெடுக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்தால் என்ன என்று தோன்றியது. சிவாஜி மெல்லப் புன்னகைத்தான்.

ப்சல்கானின் மாவல் படையில் இருக்கும் ஒரு வீரன் அவனைச் சந்திக்க விரும்புவதாகவும், அவனிடம் ஏதோ முக்கியத் தகவல் இருப்பதாகவும், பாதுகாவலன் வந்து சொல்ல அப்சல்கான் நெற்றி சுருக்கியவனாய் “வரச் சொல்” என்றான்.

மாவல் வீரன் தரையில் நெற்றி படும்படி மூன்று முறை வணங்கிப் பணிவுடன் நிற்க “என்ன தகவல் சொல்ல வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

மாவல் வீரன் கைகள் இரண்டையும் கட்டியபடி மரியாதையுடன் சற்றுக் குனிந்தபடியே சொன்னான். “என் உறவினன் ஒருவன் சிவாஜியின் படையில் இருக்கிறான். இப்போது அவன் பிரதாப்கட்டில் இருக்கிறான்…. அவன் நம் படையில் சேர விருப்பம் கொண்டு அங்கிருந்து தப்பித்து வந்திருக்கிறான்”

‘இதைச் சொல்லத் தானா என்னைத் தொந்தரவு செய்கிறாய்’ என்று பார்வையால் சுட்டெரித்த அப்சல்கான் சொன்னான். “இது போன்ற ஆட்கள் ஒற்றர்களாய்க் கூட இருக்கலாம். அவர்களை நம் படையில் அனுமதிக்க முடியாது. மறுத்து அவனைத் திருப்பி அனுப்பி விடு”

“நீங்கள் சொல்வதற்கு முன்பே நான் மறுத்து அவனைத் திருப்பி அனுப்பி விட்டேன். ஆனால் அவன் போகும் முன் சிவாஜி பற்றிச் சொன்ன தகவல் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தகவலாய் என் மனதிற்குப் பட்டது. அது தான்…..”

அப்சல்கான் சற்று சுவாரசியமடைந்து ”என்ன தகவல் அது. சொல்” என்றான்.

“சிவாஜியின் படைத் தளபதிகள் பலரும் உங்களோடு போர் புரிந்தால் தோல்வி நிச்சயம் என்பதால் போரைத் தவிர்க்கச் சொல்கிறார்களாம். அதனால் தான் சிவாஜி ராஜ்கட்டிலிருந்து பிரதாப்கட் கோட்டைக்குப் போயிருக்கிறானாம். ஆனால் இப்போது பிரதாப்கட் கோட்டையில் எத்தனை காலம் பதுங்கி இருக்க முடியும் என்று அவர்கள் கேட்கிறார்களாம். நீங்கள் அங்கும் கண்டிப்பாய் போய்ப் போர் புரிவீர்கள் என்று அவர்கள் நம்பி பயப்படுகிறார்களாம். அது சிவாஜியின் நம்பிக்கையையும் தைரியத்தையும் தளர வைத்திருக்கிறதாம். அவனுக்குச் சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை, மனைவி, குடும்பம் என்று அமைதியாக வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் வாய்விட்டுப் புலம்பிக் கொண்டு இருக்கிறானாம். பிடித்த கோட்டைகள் எல்லாம் கூட பீஜாப்பூர் சுல்தானுக்குத் திரும்பக் கொடுத்து விட்டு ஏதாவது  சிறு இடம் அவனுக்கென்று கிடைத்தால் கூடப் போய் நிம்மதியாக வாழலாம் என்று சொல்கிறானாம். அதை எல்லாம் கேட்டுத் தான் இனி இந்தப் படையில் இருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்து என் உறவினன் இங்கு வந்ததாகச் சொன்னான்…..”

அப்சல்கானின் காதுகளில் விழுந்த அந்தத் தகவல் அவனுக்குத் தேனாக இனித்தது. தன் படைத்தலைவர்களே பயப்படும் போது, தோல்வி நிச்சயம் என்று உணரும் போது சிவாஜி அல்ல எப்படிப்பட்டவனும் தானும் தைரியம் இழந்து விடுவது இயல்பு தான் என்று தோன்றியது. முதல் குழந்தை பிறந்திருக்கிறது. அதைக் கொஞ்சி விளையாட வேண்டிய காலத்தில் அங்கிருந்து ஓடி ஒரு மலைப்பிரதேசத்தில் குடும்பத்தை விட்டுத் தனிமையில் இருப்பது சிவாஜியை மேலும் பலவீனப்படுத்தி இருக்கலாம்.

சிவாஜியின் மனம் பலவீனப்பட்டிருக்கும் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்சல்கான் தீர்மானித்தான். தகவல் சொன்ன மாவல் வீரனுக்குத் தன் கைப்பிடி நிறையப் பொற்காசுகள் பரிசளித்து அனுப்பிய அப்சல்கான் வேகமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். பின் தன்னிடம் திவானாக இருந்த பண்டிதரும், சிறந்த பேச்சாளருமான கிருஷ்ணாஜி பாஸ்கரை அவசரமாக வரவழைத்தான்.

சிவாஜியிடம் ஒரு வீரன் வந்து “அரசே! பீஜாப்பூர் படைத்தலைவர் அப்சல்கானிடமிருந்து ஒரு தூதர் வந்திருக்கிறார். தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்” என்று சொன்ன போது அவன் தன் படைத்தலைவர்களுடனும், நண்பர்களுடனும் ஆலோசனையில் இருந்தான்.

சிவாஜி “வரச் சொல்” என்றான்.

கிருஷ்ணாஜி பாஸ்கர் குடுமியும், நெற்றியில் நாமமுமாகப் பக்திப் பழமாக வந்தார். சிவாஜியை வணங்கி விட்டுச் சொன்னார். “அரசே! இறைவன் அருளால் உங்கள் குலம் தழைக்கட்டும். உங்கள் வாழ்வில் அமைதி பெருகட்டும். தங்கள் தந்தையின் நெருங்கிய நண்பரும், அவருடன் பல போர்களில் ஒருசேர நின்று போர் புரிந்தவருமான  மாவீரர் அப்சல்கான் அவர்களிடமிருந்து தங்களுக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன்….”

அவரை இருக்கையில் மரியாதையுடன் அமர வைத்து சிவாஜி சொன்னான். “சொல்லுங்கள் தூதரே”  

“அரசே! யுத்தத்தின் முடிவில் யார் வென்றாலும் இருபக்கங்களிலும் ஏற்படும் பல நஷ்டங்கள் ஈடு செய்ய முடிந்ததல்ல. பெற்றிருக்கும் எண்ணற்ற செல்வமும், கோட்டைகளும் மரணத்தின் பின் ஒருவனுடன் கூட வர முடிந்ததல்ல. வீரம் ஒருவருக்குப் பெருமை தான் என்றாலும் மரணம் நேருமானால் மனைவி, மக்கள், பெற்றோர் அனைவரையும் சோகப் பெருங்கடலில் அமுக்கி விடும். இதையெல்லாம் தாதாஜி கொண்டதேவின் மாணவனுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. அமைதியின் தூதுவனாக வந்திருக்கும் என் செய்தியைத் தயவுசெய்து செவி சாய்த்துக் கேளுங்கள்….”

அப்சல்கான் சொல்லியனுப்பிய செய்தி என்ன என்பதை அறிய சிவாஜியும் அவன் ஆட்களும் ஆர்வமாக இருந்தார்கள்.



(தொடரும்)

என்.கணேசன்

4 comments:

  1. You make us travel back to our History. Nice and interesting sir.

    ReplyDelete
  2. Great sir..
    https://www.freehelptips.in

    ReplyDelete
  3. சிவாஜி தன் படைபலத்தால் வெல்ல முடியாத சமயங்களில்... தன் புத்திசாலிதனத்தால் எதிரியின் மனநிலையை கட்டுபடுத்தி வைத்திருப்பது அருமை.... அமைதி பேச்சு வார்த்தை எப்படி? அமையுமோ என்று தெரியவில்லை...

    ReplyDelete
  4. கிருஷ்ணாஜி பாஸ்கர் சிவாஜிக்கு வாழைப் பழத்தில் ஊசியை சொருகி தரப் பார்கிறார்

    ReplyDelete