அப்சல்கான்
பீஜாப்பூரிலிருந்து பெரும்படையுடன் புறப்பட்டான். அலி ஆதில்ஷாவும், ராஜமாதாவும் அவனை
வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள். பீஜாப்பூர் மக்கள் அப்படி ஒரு பெரும்படை திரண்டு
அங்கிருந்து கிளம்புவதைப் பார்த்து நீண்ட காலம் ஆகியிருந்தது. மக்களும் பிரமிப்புடன்
இருமருங்கிலிருந்தும் வேடிக்கை பார்க்க கம்பீரமாகக் கிளம்பினான் அப்சல்கான். படையுடன்
வடக்கே பயணித்து வந்தவன் வழியில் துல்ஜாப்பூரில் தொலைவில் ஒரு கோயிலைக் கண்டான். அப்பகுதியை
நன்கறிந்த தன் படைவீரனிடம் கேட்டான். “அது என்ன கோயில்?”
“பிரபு அது பவானிதேவி கோயில். சிவாஜி வணங்கும் தெய்வம் அது.
அவன் பவானி தேவியை வணங்காமல் எந்தப் போருக்கும் கிளம்ப மாட்டான்….”
“அப்படியானால் பக்தனுக்கு முன்னால் பவானியைப் பார்த்து விட்டுப்
போகலாம்” என்று வேடிக்கையாகச் சொல்லி விட்டு கோயிலை நோக்கிச் சென்ற அப்சல்கான் ஆரம்பத்திலேயே
சிவாஜியைப் பயமுறுத்தும்படியாகத் தன் வலிமை குறித்தும், உறுதியைக் குறித்தும் ஒரு அதிரடி
அபிப்பிராயத்தை ஏற்படுத்த நினைத்தான்.
அப்சல்கான் கோயிலை நோக்கி வருவதைக் கண்டு எச்சரிக்கை அடைந்த
கோயில் அர்ச்சகர் பவானி சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு பின்புறமாக ரகசிய வழியில்
ஓடி விட்டார். அப்சல்கான் கோயிலுக்கு வந்த போது மூல விக்கிரகம் கோயிலில் இல்லை.
அப்சல்கான் வெடிச்சிரிப்பு சிரித்தான். “அப்சல்கானைப் பார்க்கப் பயந்து பவானி கூட ஓடிவிட்டாள்.
பாவம் சிவாஜியின் கடவுளுக்கே இந்த கதி!” என்றவன் கோயிலில் இருந்த மற்ற சிலைகளை உடைத்து
துவம்சம் செய்தான்.
தொடர்ந்து போகும் வழியில் பண்டரிபுரத்தை அடைந்தான். அங்குள்ள
விட்டலன் கோயில் அந்தக் காலத்திலேயே பிரசித்தம். அவன் பண்டரிபுரம் நெருங்குவதைப் பார்த்த
போதே எச்சரிக்கை அடைந்த அர்ச்சகர்கள் மூல விக்கிரகத்தை எடுத்து பீமா நதியின் ஆழமான
பகுதியில் மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள்.
அப்சல்கான் அங்கும் கடவுளைக் காணாமல் ஆத்திரமடைந்தான். ஆத்திரத்தில்
அந்தக் கோயிலிலும் சில சிலைகளை உடைத்தெறிந்து விட்டுப் பயணத்தை பூனாவை நோக்கித் தொடர்ந்தான்.
ஒற்றர்கள் மூலமாகத் தகவல் கிடைக்கும் முன் பவானி மூலமாகவே
சிவாஜிக்குத் தகவல் கிடைத்தது. நள்ளிரவில் துல்ஜாப்பூர் பவானி கோயில் இடிந்து கிடப்பதைப்
போல் சிவாஜி கனவு கண்டான். கனவிலும் சிவாஜி அதைக் கண்டு பதறிப் போனான். பவானி தேவி
கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. பார்க்கையில் பவானி அந்தக் கோயில் இடிபாடுகளுக்கு
வெளியே நின்று கொண்டு சிரிக்கிறாள். பின் சொல்கிறாள்.
”இடங்களின்
அழிவு இறைவனுக்கில்லை மகனே. பதறாதே. நான் உன்னுடன் தான் இருக்கிறேன்”
சிவாஜி
விழித்துக் கொண்டான். அவசரமாகத் தாயின் அறைக்குச் சென்று நித்திரையிலிருந்த தாயை எழுப்பித்
தன் கனவைச் சொன்னான். ஜீஜாபாய் கோயில் இடிபாட்டை அபசகுனமாகக் கண்டு கவலைப்பட்டாள்.
ஆனால் பவானியின் சிரிப்பிலும் வார்த்தைகளிலும் சிவாஜி தைரியம் கொண்டான். மகனுடைய தைரியத்தைத்
தாயால் வரவழைத்துக் கொள்ள முடியவில்லை.
அதிகாலையில்
ஒற்றன் ஒருவன் வந்து அப்சல்கானின் அட்டூழியங்களைச் சொன்னான். கனவு கண்டதற்கேற்றபடியே
நடந்திருப்பதை எண்ணி திகைத்த சிவாஜி தன் படைத்தலைவர்கள், நண்பர்கள், ஆலோசகர்களை உடனடியாக
வரவழைத்துப் பேசினான். தன் கனவைச் சொன்னான். பவானியின் வாசகங்களையும், சிரிப்பையும்
சொன்னான். ஒற்றன் சொன்ன செய்தியைப் பெரும் மனக்கொதிப்புடன் சொன்னான். பவானியின் துணை
தனக்கிருப்பதாகவும் கண்டிப்பாக அப்சல்கானை வெல்லத் தங்களால் முடியும் என்றும் அறிவித்தான்.
ஆனால்
அவன் உறுதியும் உற்சாகமும் அவர்களை ஒட்டிக் கொள்ளவில்லை. ஒரு படைத்தலைவன் வெளிப்படையாகவே
சொன்னான். “அரசே. தங்கள் உற்சாகத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிர்மறையாகச் சொல்கிறேன்
என்று நினைக்காதீர்கள். யதார்த்த நிலை என்னவென்றால் நேரடியாகத் திறந்தவெளியில் போரிட்டால்
கண்டிப்பாக நாம் அவர்களை வெல்ல முடியாது….”
சிவாஜி
மற்றவர்களைப் பார்த்தான். அவர்களும் அதை ஆமோதிப்பதாகவே அவர்கள் முகபாவனை சொல்லியது.
சிவாஜி என்றுமே வெளிப்படையான, அறிவுபூர்வமான அபிப்பிராயங்களுக்கு மதிப்பு தருபவன். பவானி துணை இருப்பாள் என்பதற்காக அறிவை விலக்கி
வைத்து தீர்மானிப்பதும் ஆபத்து என்பதை அவன் அறிவான். யோசித்துப் பார்த்தால் அவர்கள்
நினைப்பதும் சரி என்றே தோன்றியது.
சிவாஜி
சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். ”படைபலத்தை நமக்குப் பெருக்க வழியில்லை. இருக்கும்
படைகளை வைத்துக் கொண்டு நீங்கள் சொன்னது போல திறந்தவெளியில் ஒரு இடத்தில் நாம் அவர்களுடன்
போரிட்டால் தோற்கும் சூழல் இருக்கிறதென்றால் நாம் இடத்தை மாற்றுவோம். அவர்களுக்குப்
பழக்கப்படாத, அவர்களுக்கு அனுகூலக்குறைவான இடத்தில் அவர்களைச் சந்திப்போம்…..”
“எந்த
இடத்தைச் சொல்கிறீர்கள் அரசே”
“ஜாவ்லிக்கு
அருகில் இருக்கும் பிரதாப்கட் கோட்டைக்கு நாம் உடனே போவோம்”
ஜாவ்லியின்
அடர்ந்த மலைக்காட்டுப் பிரதேசத்தின் நடுவில் உள்ள பிரதாப்கட் கோட்டை உண்மையிலேயே ஒரு
பாதுகாப்பான கோட்டை தான். அங்கும் அவர்கள் அறிவுக்கு வெற்றி உத்தரவாதமில்லாத ஒன்று.
ஆனால் அங்கிருந்தால் நிறைய காலம் தாக்குப் பிடிக்கலாம்….. எத்தனையோ முடியாத காரியங்களை
சிவாஜி இதுவரை தன் சாகசத்தாலும், சாதுரியத்தாலும் முடித்துக் காட்டியிருக்கிறான். இதிலும்
ஒரு அற்புதம் நடக்கக்கூடும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
சிவாஜி
அன்னை பவானி சிலை முன் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்து பவானியின் வீரவாளை எடுத்துக்
கொண்டு கிளம்பும் முன் ஜீஜாபாயின் முன்னிலையில் தன் படைத்தலைவர்களை நிறுத்தி விட்டுச்
சொன்னான். “என் மண்ணில் நான் வணங்கும் தெய்வத்தின் கோயிலைச் சிதிலமாக்கியவன் என்னுடன்
போர் புரியக் கிளம்பியிருக்கிறான். அவனுடன் நடத்தும் போரில் நான் என் தெய்வத்தின் துணையால்
வெல்லவும் செய்யலாம். இல்லை என் நம்பிக்கை கற்பனையாக இருந்தால் இறந்தும் போகலாம். அப்படி
ஒரு வேளை நான் இறந்து போனாலும் தயவு செய்து என் சுயராஜ்ஜியக் கனவையும் என்னோடு சேர்த்து
புதைத்து விடாதீர்கள். என் தாயாரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு உங்களையும், நம் கனவையும்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”
மகன்
சொன்னதைக் கேட்டு ஜீஜாபாய் கண்கள் ஈரமாயின. அப்சல்கானைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள்.
அசுர பலம் கொண்டவன், நெடும்படையுடன் கிளம்பி இருக்கிறான் என்ற செய்தி அவளுக்கும் கவலை
அளித்தது. மூத்த மகனை அவனுடைய சூழ்ச்சிக்கு அவள் பறிகொடுத்திருக்கிறாள். இப்போது இளைய
மகனைப் பலத்தால் அழிக்க அந்த அரக்கன் கிளம்பி இருக்கிறான். எந்த வகையிலும் இரு அணிகளும்
சமமில்லாதவை. அவன் உடல் பலத்திற்கும், படை பலத்திற்கும் சிவாஜியும், சிவாஜியின் படையும்
எந்த விதத்திலும் ஈடானதல்ல.
இதை
எல்லாம் எண்ணுகையில் ஜீஜாபாய் மனம் பலவிதமான உணர்ச்சிப் போராட்டங்களால் நிரம்பியது.
இளைய மகனால் எதுவும் முடியும் என்று ஒரு பக்க மனம் நம்பியது. ஆனால் இன்னொரு பக்க மனம்
இதில் அவன் இறந்தால் அவளுக்கு இனி எந்தக் குழந்தையும் மிச்சமில்லை என்று எச்சரித்தது.
சாம்பாஜியின் மறைவுக்குப் பின் அவளால் பழைய தைரியத்தில் இருக்க முடியவில்லை. வணங்கி
எழுந்த மகனை ஆசிர்வதித்து அவன் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு அவள் சொன்னாள். “வென்று
வா மகனே! உனக்காக உன் தாய், உன் மனைவிகள், உன் பிள்ளைகள், உன் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்
என்பதை மறந்து விடாதே….”
அவள்
சொல்லாத பயத்தை அவனாகவே உணர்ந்து சிவாஜி சொன்னான். “உங்கள் மகன் தனிமனிதனாய் செல்லவில்லை.
அவனுடன் அன்னை பவானியின் அருளும் செல்கிறது என்பதை நினைவு வைத்து நிம்மதியாய் இருங்கள்
தாயே. உங்கள் மகன் பழைய கணக்கை முடித்துக் கொண்டு வெற்றியுடன் திரும்புவான். கவலைப்படாதீர்கள்”
ஜீஜாபாய்
புன்னகைக்க முயன்றாள். பழைய கணக்கு தீர்ந்தால் பெருமகிழ்ச்சியே. ஆனால் அது தீர்வதற்குப்
பதிலாக புதிய கணக்கு உருவாகிவிடக் கூடாது என்று அவள் ஆசைப்பட்டாள். ஆண்டவனை வணங்கினாலும்
அவன் அளவு அவளால் தைரியமாய் அந்த நம்பிக்கையிலேயே இருந்து விட முடியவில்லை….. கடைசியில்
கஷ்டப்பட்டு புன்னகையைக் காட்டினாள். தாயின் கையைப் பிடித்து அதில் முத்தமிட்டு விட்டு
மகனைக் கையில் எடுத்துக் கொஞ்சி அவனுக்கும் முத்தமிட்டு விட்டு மனைவியரையும், மகள்களையும்
பார்த்துத் தலையசைத்து விட்டு சிவாஜி தன் படையுடன் கிளம்பினான்.
சாய்பாயும்,
சொர்யாபாயும் கண்கலங்கி நிற்பதை ஜீஜாபாய் கவனித்தாள். மாவீரர்களின் மனைவிகள் இந்த நிச்சயமற்ற
எதிர்காலக் கவலைகளில் இருந்தும், பயத்திலிருந்தும் தப்ப முடியாது… ஷிவ்நேரிக் கோட்டையில்
தன் கணவனையும், குழந்தை சாம்பாஜியையும் அனுப்பி விட்டு பெருந்துக்கத்துடன் நின்ற பழைய
நினைவு மனதில் வந்து நின்றது. அவளுடைய கடந்த கால நிலைமை அவளது மருமகள்களுக்கு வர வேண்டாம்
என்று அவள் மனம் பிரார்த்தித்தது.
சிவாஜி ராஜ்கட் மாளிகையிலிருந்து ஜாவ்லியின் பிரதாப்கட் கோட்டைக்கு
இடம் மாறிவிட்ட செய்தி அப்சல்கானை வந்தடைந்தது. ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக்
கொள்ளாத அப்சல்கானிடம், அவனுடன் இருக்கும் மாவல் வீரர்கள் பிரதாப்கட் கோட்டை அடர்ந்த
காட்டுப்பகுதியின் நடுவில் இருக்கிறது என்றும் அவர்கள் படை அங்கு போய்ச் சண்டை இடுவதில்
நிறையச் சிரமங்கள் இருக்கின்றன என்பதையும் விளக்கினார்கள்.
அப்சல்கானின்
குறுக்கு புத்தி “சிவாஜியின் குழந்தையும் குடும்பமும் இப்போதும் ராஜ்கட் மாளிகையில்
தானே இருக்கிறார்கள்?” என்று கேட்க வைத்தது
(தொடரும்)
என்.கணேசன்
Very interesting and we feel as if the incidents are happening in front of our eyes. Super sir.
ReplyDeleteசுவை குறையாமல் ஆற்றொழுக்கு போன்ற அழகான நடையில் நாவலைக் கொண்டு செல்கிறீர்கள். அருமை ஐயா.
ReplyDeleteஇந்த முறை வெற்றி யாருக்கென்றே கணிக்க முடியவில்லையே...!!! அப்சல்கான் குடும்பத்தின் மீது கை வைக்கமால்...இருக்க...ஏதேனும்...முன்னேற்பாடுகள் செய்திருப்பார்களா...?
ReplyDelete