மாணிக்கம் அரசியலில் இருந்து விலகியதும், கமலக்கண்ணன் முதல்
அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தெரிய வந்த போது விஸ்வம் ஆச்சரியப்பட்டு விடவில்லை.
மாணிக்கத்தின் மகனின் மரணச் செய்தியைக் கேட்ட போதே இப்படி தான் வந்து முடியும் என்று
அவன் எதிர்பார்த்திருந்தான். அவனை ஆச்சரியப்படுத்தியதுடன் சந்தோஷமும் படுத்திய இன்னொரு
தகவல் மாஸ்டர் அனைத்தையும் விட்டு விட்டு இமயம் போய்ச் சேர்ந்தது. அணுகுண்டைப் போல
ஆபத்தானவர், கவனமாய்க் கையாள வேண்டும் என்று அவன் எப்போதுமே நினைக்கும் மாஸ்டர் போய்த்
தொலைந்தது நிம்மதியாக இருந்தது. ஆனால் மிகவும் சந்தேகப்பட வைத்தது கூடவே வந்த இன்னொரு
தகவல் தான். க்ரிஷை ஒரு மனிதர் சந்தித்து விட்டுப் போனதாக படத்துடன் அவனுக்கு வந்த
அந்தத் தகவலில், அந்த மனிதர் யார் என்பது தெரிந்ததும்
சந்தேகத்துடன் லேசான அதிர்ச்சியும் சேர்ந்து கொண்டது. இல்லுமினாட்டியைத் தான் தேடிப்
போக வேண்டி இருந்த போது இல்லுமினாட்டி க்ரிஷைத் தேடிப் போனது சற்று சகிக்க முடியாததாகத்
தான் இருந்தது. எல்லாமே அவனுக்கு அனுகூலமாக
நடந்து வந்து கொண்டிருக்கையில் அவன் பின்னாலேயே க்ரிஷையும் ஏதோ ஒரு வகையில் இழுத்து
வருவது விதியா, இல்லை அந்த ஏலியன் ஏதோ ப்ரோகிராமாய் போட்டு விட்டுப் போன சதியா என்பது
விஸ்வத்துக்கு விளங்கவில்லை.
ஒரு
விஷயத்தில் இறங்கிய பின் அதை ஆழமாய் அலசி அதில் அவன் அறியாதது இல்லை என்ற அளவு புரிந்து
கொள்ளாமல் விஸ்வம் இருந்தது கிடையாது. அந்த வகையில் இல்லுமினாட்டியையும், அதன் செயல்முறைகளையும்
அவன் துல்லியமாக அறிந்திருந்தான். ஒவ்வொரு இல்லுமினாட்டி உறுப்பினருக்கும் முதல் எஜமானன்,
கடவுள் எல்லாமே இல்லுமினாட்டி இயக்கம் தான். குடும்பம் உட்பட மற்றதெல்லாமே இரண்டாம்
பட்சமே. எந்த முக்கியமான புதிய தகவல் ஒரு இல்லுமினாட்டிக்குக் கிடைத்தாலும் அவன் அதை
உடனடியாக இல்லுமினாட்டி உறுப்பினர்களின் பொதுத் தகவல் மையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அது ரகசியமானதாக இருக்கும் பட்சத்தில் தலைமை செயற்குழு ஐவர்க்கு மட்டும் முதலில் தனியாக
அனுப்பப்படும். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகே அது அவர்களுடைய பொதுத் தகவல் மையத்தில்
பகிரப்படும். சில விசேஷ சமயங்களில் தலைவர் அல்லது உபதலைவர் ஒரு இல்லுமினாட்டியிடம்
விசேஷத் தகவல் பெற்றுத் தரும்படி ஆணை பிறப்பிக்கலாம். அந்த சமயங்களில் கேட்டவருக்கு
மட்டும் அந்தத் தகவலைப் பெற்ற இல்லுமினாட்டி நேரடியாகவோ மிக நம்பகமான தனி மனிதர் மூலமாகவோ
அனுப்பி வைப்பார்.
விஸ்வேஸ்வரய்யா
க்ரிஷைச் சந்தித்துப் பெற்ற தகவலை பொதுத் தகவல் மையத்தில் பகிரவில்லை. விஸ்வம் தலைமைச்
செயற்குழு உறுப்பினரில் ஒருவரான ஃப்ராங்பர்ட் நகரத்தில் வசிக்கும் கலைப்பொருள் சேகரிப்பாளரைப்
போனில் தொடர்பு கொண்டான். பொதுவான விஷயங்கள் பேசினான். அந்த மனிதர் இல்லுமினாட்டியின்
சின்னம் அவனுக்கு இமயமலைத் தவசி மூலம் கிடைத்ததற்கு வாழ்த்துத் தெரிவித்தார். அவன்
சீக்கிரமே இல்லுமினாட்டியின் மிகச் சிறந்த ஆளுமையாக ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை
என்றார். அவர் விஸ்வேஸ்வரய்யா பெற்று வந்த தகவலைத் தெரிவிக்கவில்லை. தெரிந்து மறைக்கும்
ஆள் அவர் அல்ல. ஒருவேளை அப்படி ஒரு தகவல் கிடைத்து அது விஸ்வத்துக்கு எதிரானதாக இருந்திருந்தால்
விஸ்வம் இல்லுமினாட்டியின் மிகச்சிறந்த ஆளுமையாக ஆகும் காலம் தொலைவில் இல்லை என்ற வார்த்தையைச்
சொல்லியிருக்க மாட்டார். அப்படியானால் தலைவரோ உபதலைவரோ சொல்லித் தான் விஸ்வேஸ்வரய்யா
போயிருக்க வேண்டும். உபதலைவர் ஐக்கிய நாடுகளின் ஏதோ கூட்டத் தொடரில் கலந்து கொள்ளச்
சென்றிருக்கிறார். அது நான்கு நாட்கள் நடக்கும் நிகழ்வு. அதற்கு இடையே அவர் விஸ்வேஸ்வரய்யாவை
இதற்கு அனுப்பி இருக்க வழியில்லை. அப்படியானால் கடைசியில் தலைவரான எர்னெஸ்டோ சொல்லித்தான்
க்ரிஷைச் சந்திக்கும் வேலை நடந்திருக்கிறது…… இந்த முடிவை எட்டிய போது க்ரிஷ் பெற்ற
முக்கியத்துவம் அவனுக்குக் கசந்தது.
க்ரிஷின் மனம் இந்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய மாற்றத்தை
அடைந்திருந்தது. இந்த இரண்டு நாட்களில் அவன் பெரிதாக எதையும் படிக்கவில்லை. தியானமோ,
மற்ற பயிற்சிகளோ செய்யவில்லை. ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை. இது வரை படித்தது, கேட்டது,
உணர்ந்தது, இப்போதைய நிலவரம் எல்லாவற்றையும் ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
ஆரம்பத்திலிருந்தே
இது தனியொரு மனிதனால் மாற்றவோ, கட்டுப்படுத்தவோ முடிந்த விஷயமல்ல என்பதை அவன் உணர்ந்திருந்தான். ஆனாலும் வேற்றுக்கிரகவாசி இந்தப் பொறுப்பை அவன்
தலையில் திணித்திருக்கிறான். அவன் முட்டாள் அல்ல. அறிவிலும், சக்தியிலும் மனிதர்களால்
கற்பனை செய்யக்கூட முடியாத உயரத்தில் இருப்பவன். அப்படிப்பட்டவன் தேர்ந்தெடுத்திருப்பதே
ஏதோ ஒரு தகுதியின் அடிப்படையில் தான்…..
சுமக்க
முடியாத சுமையை மனிதன் மீது இறைவன் சுமத்துவது இல்லை என்று எங்கோ படித்தது அவன் மனதில்
பசுமையாகப் பதிந்திருந்தது. சுமக்க முடியுமா என்று பார்க்கிறேன், அதற்கான சக்தியை இறைவன்
எனக்குக் கொடுப்பான் என்று நினைத்தபடி ஒன்றை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் தான் மனிதன்
வரவழைத்துக் கொள்ள வேண்டியது என்று தோன்றியது. அந்த மனோபாவத்தில் தான் அவன் சிலநாட்களாக
இருந்து வருகிறான். எதிரியான விஸ்வம் மகாசக்திகள் வாய்ந்தவனாக இருக்கலாம். க்ரிஷ் எட்ட
முடியாத உயரத்தில் இருக்கலாம். ஆனால் அவன் இறைவனை விடச் சக்தி வாய்ந்தவன் அல்ல. இறைவனை
விட உயரத்திலும் இல்லை. இந்த எண்ணம் இரண்டு நாட்களாக க்ரிஷிடம் மேலோங்கி வந்தது. அதற்கு
முன்னிருந்த கவலை, தன்னம்பிக்கைக் குறைவு எல்லாம் தானாகக் குறைந்து காணாமல் போயிற்று.
எல்லாமே
அவன் பார்த்துக் கொள்வான், அவனைச் சரணடைந்தால் போதும் என்கிற சரணாகதித் தத்துவம் இரண்டு
நாட்கள் முன் வரையில் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாய் இருந்தது. எல்லாமே அவன்
தான் என்றால், நாம் என்ன களிமண்ணா, நாம் இருந்து என்ன பயன் என்றெல்லாம் அவனுக்குத்
தோன்றும். சுயமுயற்சிக்கு மதிப்பில்லாமல் போவது சரியல்ல என்று அவனுக்குத் தோன்றும்.
சரணாகதித் தத்துவம் சோம்பேறிகளின் புகலிடம் என்று கூட நினைத்ததுண்டு.
ஆனால்
இப்போது இன்னொரு கோணத்தில் இருந்து அவனால் பார்க்க முடிந்தது. அண்டசராசரங்களை இத்தனை
கச்சிதமாய் இயக்கும் இறைவன் என்று பலரும் அழைக்கும் பிரபஞ்ச சக்தி ஆக்கல், காத்தல்,
அழித்தல் வழிகளில் அனைத்தையும் செய்கிறது. அது நினைக்கும் போது ஆக்கும், அது நினைக்கும்
போது காக்கும், அது நினைக்கும் போது அழிக்கும்… அது நினைப்பது தான்தோன்றித்தனமான வகையில்
அல்ல. பரிணாம வளர்ச்சியின் நிலைகளையும் தேவைகளையும் கணக்கில் கொண்டு தான் செய்கிறது.
அதனால் மனிதன் எல்லாமே நீ தான் என்று சொல்வது எந்த விதத்திலும் தவறல்ல. அது தீர்மானிக்காத
ஒன்று நடக்கப் போவதில்லை.
ஆனால்
அது தீர்மானித்த பிறகு நடத்த வேண்டியதை, தான் படைத்த படைப்புகள் மூலமாகத் தான் நடத்திக்
கொள்கிறது. இங்கு தான் அதன் படைப்பான மனிதனுடைய பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அவன்
அந்த மகாசக்தி உத்தேசித்ததை அதன் கருவியாக இருந்து நிறைவேற்றுகிறான். அப்படி நிறைவேற்றுகையில்
அவன் முடியுமா என்று சந்தேகிக்கத் தேவையில்லை. முடியாமல் போகுமா என்று பயப்படத் தேவையில்லை.
எப்படி முடிப்பேன் என்று மலைக்கத் தேவையில்லை. அவனுக்குத் தேவையானதை செய்து முடிக்க
வேண்டிய எதையும் வழங்க இருக்கவே இருக்கிறது நிக்கோலா டெஸ்லா சொன்ன எல்லாம் வல்ல பிரபஞ்ச
சக்தி மையம். அந்தப் பிரபஞ்ச சக்தி மையம் கற்பக விருட்சம். அங்கு எதுவும், எப்போதும்
இல்லாமை, போதாமை என்பதில்லை.
அதனால்
எதையும் நிச்சயிக்கும் விஷயத்தில் எல்லாமே அந்த பிரபஞ்ச சக்தியின் தீர்மானம் என்று
சரணாகதி அடைவதும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ‘உன் உதவியுடன் எல்லாமே நான்’ என்று
உற்சாகத்துடன் இயங்குவதும் தான் மனிதன் செய்ய வேண்டியது. பிரபஞ்ச சக்தியின் தீர்மானம்
எது என்று எப்படித் தெரிந்து கொள்வது? அந்தராத்மாவில் அவன் தொடர்ந்து உணரும் உணர்வுகளில்
இருந்து…. பிரபஞ்ச சக்தி அனுப்பி வரும் செய்திகளை கவனிப்பதிலிருந்து…. இதில் வெற்றி
தோல்விகள் தனிமனிதனுக்கு இல்லை. அவை இறைவனின் சித்தம் . அவனுடைய உண்மையான வெற்றி எதையும்
முழுமையாகச் சிறப்பாகச் செய்வது. அவனுடைய உண்மையான தோல்வி அரைகுறையாய் செய்வது, ஆத்மார்த்தமாய்
எதையும் செய்யத் தவறுவது……
இந்த
உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பது இறைவன் சித்தமானால் அதை அது நடத்தி வைக்கும்.
அதில் அவனுடைய பங்கு ஏதாவது தெரிய வந்தால் அதை அவன் சிறிதும் தயங்காமல் நூறு சதவீதம்
ஆத்மார்த்தமாய் செய்து முடிப்பான். உலகம் அழிந்து, புதிதாய் உருவாகித் தான் மேல் வர வேண்டுமென்றால் க்ரிஷ் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.
தெய்வ சித்தப்படி நடக்கட்டும். கடைசியாக இந்த சிந்தனை ஓட்டத்தில் அவன் மன அமைதி அடைந்தான்.
பல நாட்கள் கழித்து அன்றிரவு அவன் நிம்மதியாக உறங்கினான்.
நவீன்சந்திர
ஷா விஸ்வத்துக்குப் போன் செய்தான். ”எர்னெஸ்டோவும்,
உபதலைவரும் இல்லுமினாட்டி ரகசியக் காப்பறையில் இருக்கும் அந்தப் பழங்காலச் சுவடியை
எடுத்துப் படிக்க வாஷிங்டன் வருகிறார்கள். அதற்காக உபதலைவர் ஐக்கியநாட்டுக் கூட்டத்தொடரைப்
பாதியில் விட்டு விட்டு வருகிறார்.”
(தொடரும்)
என்.கணேசன்
அருமை - மிகவும் ஆர்வமான திருப்பம் - குழப்பமான விஸ்வம் என்ன ஆவார்? காத்திருக்கிறோம் - நன்றி
ReplyDeleteLogic+philosophy superji.
ReplyDeleteஅருமை ஐயா. ஆழமான கருத்துகள் கொண்ட அத்தியாயம் இது. தங்களுடைய பரமன் இரகசியம், புத்தம் சரணம் கச்சாமி நாவல்களில் சில அத்தியாயங்களைத் திரும்பத் திரும்ப படித்து வியந்த நினைவு வருகிறது. தங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள். - சுந்தரமூர்த்தி
ReplyDeleteHats off!
ReplyDeleteஎன் நீண்ட நாள் கேள்விகளை இப்போது இங்கே கேட்கிறேன். நிச்சயமாய் தெரிந்து கொள்ள மட்டுமே . விவாதம் செய்ய அல்ல .எல்லாமே முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டது என்றால் , Law of attrcation, parallel reality, quantum jumping எல்லாமே தவறா ? மேலும் என் செயல்களுக்கு நான் பொறுப்பு இல்லையா ? கர்மா என்பது இல்லையா ?
ReplyDeleteஆழமாக விளக்க ஆரம்பித்தால் பல பக்கங்கள் எழுத வேண்டி வரும். சுருக்கமாக இந்தக் கட்டுரையில் விளக்கி இருக்கிறேன். படிக்கவும்.
Deletehttps://enganeshan.blogspot.com/2009/01/blog-post_18.html
நம் கடமைகளை நூறு சதவீதம் சரியாக செய்ய வேண்டும்.... அந்த நூறு சதவீதம் சரியான செயல் செய்வதற்கே...இவை அனைத்தும் உள்ளது....
Deleteமேலும் சரணடைந்தால் அனைத்து தளைகளில் இருந்தும் விடுபடலாம் என்பதை பல முறை கீதை காட்டும் பாதை தொடரில் படித்திருக்கிறேன்...
தயவு செய்து உங்கள் கருத்துக்களை சொல்லவும் . நன்றி
ReplyDeleteவிஸ்வம் இல்லுமினாட்டியை செல்கிறான்...
ReplyDeleteஇல்லுமினாட்டி கிரிஷை தேடிச் செல்கிறது....
இல்லுமினாட்டி தலைவரின் முடிவு என்னவாக இருக்கும்....?
அவரின் முக்கியத்தும் கிரிஷ்கா? விஸ்வத்துக்கா..??
பத்மாவதியை கிண்டல் செய்த கிரிஷ்....இப்போது தானே சரணாகதி தத்துவத்தை உயர்வென்று சொல்கிறான்....
கிரிஷின் இந்த பக்குவம் அடுத்து என்ன நிலைக்கு கொண்டு செல்லும்? பிரபஞ்சம் எவ்வாறு உதவும்???