Thursday, January 10, 2019

இருவேறு உலகம் – 118


விஸ்வம் தன் மிக முக்கிய வேலையாட்களைத் தன் சக்திகளின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தான். எப்போது வேண்டுமானாலும் அவன் அவர்களைப் படிக்க முடியும். அவர்கள் உணர்வதை அவன் அறிந்து கொள்ள முடியும். அவர்கள் பார்ப்பதை அவனால் பார்க்க முடியும். இந்த சக்தி வளையத்திற்குள் தான் அவன் புதுடெல்லி உயரதிகாரியையும் கொண்டு வந்திருந்தான். இது அவன் மாஸ்டரை ஏமாற்றியது போல எந்த ஒரு வேலையாளும் அவனை ஏமாற்றி விட முடியாத நிலையில் நிறுத்தி இருந்தது. யாருக்குள் எல்லாம் அவன் புகுந்து ஒரு தொடர்பு அலைவரிசையை ஏற்படுத்தி இருந்தானோ அவர்களை எல்லாம்  எப்போது வேண்டுமானாலும் அவன் உடனடித் தொடர்பு ஏற்படுத்தி அனைத்தையும் அறிந்து கொள்ள உதவியது. ஆனால் இதில் எல்லாம் அவன் சக்தியும் விரயம் ஆகிறது என்பதால் அவசியப்பட்ட அவசரக்காலங்களில் மட்டும் அதைப் பயன்படுத்தினான். மற்ற சமயங்களில் செல்போனிலேயே தொடர்பு கொண்டான். ஹரிணி தப்பித்து மனோகர் காணாமல் போன இந்த அவசரத் தருணத்தில் உடனடியாக மனோகரை அலைவரிசைகளில் தொடர்பு கொண்டான். இருட்டையும் பயத்தையுமே அவன் உணர முடிந்தது. மனோகரை இருட்டறையில் கண்களையும் கட்டி சிறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவுடன் கொதித்துப் போனான்.

அவன் நேரடியாக வெளியாட்களிடம் தொடர்பு கொள்வது குறைவு. மிரட்டல், வசூல் முதலானவை அவனுடைய ஆட்கள் மூலமாகவே நடத்தப்படும். ஆனால் இந்த அவசர நிலைமையில் வேறு வழியில்லாமல் மாணிக்கத்தைத் தொடர்பு கொண்டான்.

தன் அந்தரங்க செல்போன் அலறிய போது மாணிக்கம் திகிலுடன் எந்த எண் என்று பார்த்தார். அறியாத எண் என்றாலும் பயம் அடிவயிற்றில் இருந்து பிறந்தது. எதிரியாகவே இருக்க வேண்டும். சில மணிகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது இப்போது வருகிறது. பயத்துடனேயே போனில் பேசினார். “ஹலோ”

“ஹரிணியை உன் போலீஸ் காப்பாற்றி விட்டது. என் ஆள் எங்கே?”

எதிரி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. முதலமைச்சரிடம் பேசுகிறோம் என்ற மரியாதை தரவில்லை. எதிரியின் குரல் அதிரவில்லை. கத்தவில்லை. ஆனால் அந்தக் கட்டுப்பாட்டாடான குரலில் விஷம் இருந்தது.

மாணிக்கம் எனக்கு ஒன்றுமே தெரியாது. அவளைக் கடத்தியது நீங்கள் தானா, உங்கள் ஆள் தானா, தெரிந்திருந்தால் நான் போலீஸை அனுப்பி இருக்க மாட்டேனே என்று சொல்லத்தான் முதலில் நினைத்தார். மனோகர் அவரிடம் தெரிவித்து விட்டுக் கடத்தவில்லை. கடத்திய பின்னும் கடத்தியது நான் என்று தெரிவிக்கவுமில்லை. அதனால் எதிரி அவரிடம் கோபப்படுவதும் நியாயமில்லை. முதலாவதாக இது வரை பேசியிருக்காத அந்தக் குரல் குறைந்தபட்சம் தன்னை அறிமுகமாவது செய்து விட்டு, பின் தான் பேசியிருக்க வேண்டும். அதுவுமில்லை என்பதால் நீங்கள் யார் என்று கூடக் கேட்டு ஆரம்பிக்க வேண்டும் என்றும் மாணிக்கம் நினைத்தார். ஆனால் எதிரியிடம் வார்த்தை ஜாலங்கள் பயன்படுத்துவது ஆபத்து என்று உள்மனம் அவரை எச்சரித்தது. எச்சிலை விழுங்கியபடியே சொன்னார். “தெரியல. செந்தில்நாதன் தான்  அவளைக் காப்பாத்தியிருக்கார். அவர் எங்கேன்னு தெரியலை. தகவலும் இல்லை”

“இன்னமும் போலீஸ் துறை உன் கிட்ட தானே இருக்கு மாணிக்கம்….”

மாணிக்கம் நாக்கு வறண்டது. “ஆமா. உதய் கேட்டுகிட்டதால தான் செந்தில்நாதனை அந்த வழக்குக்கு அனுப்பிச்சேன். உண்மையைச் சொல்லணும்னா நீங்க சம்பந்தப்பட்ட விஷயத்துல எல்லாமே பக்காவா இருக்கும், செந்தில்நாதன் கண்டுபிடிக்க முடியாதுன்னு நம்பினேன். இப்படியாகும்னு நான் கனவுல கூட நினைக்கல சார்”

அவர் சொல்வது நூறு சதவீத உண்மை என்று விஸ்வத்துக்குப் புரிந்தது.செந்தில்நாதன் எங்கேன்னு உதய் கிட்ட கேள்”

“அவன் கிட்ட கேட்டுட்டேன். தெரியலங்கறான்.”

இந்த எதிர்பாராத பின்னடைவு விஸ்வத்துக்கு சகிக்க முடியாததாய் இருந்தது. சற்று முன் தானே எல்லாம் கச்சிதமாய் நடந்து கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். இல்லுமினாட்டி உறுப்பினரும் ஆகி விட்ட இந்த நிலைமையில் க்ரிஷ் கை ஓங்கியது அபசகுனமாய் பட்டது. “சரி இனி என்ன பண்றதாய் இருக்கே மாணிக்கம். எனக்கு என் ஆள் உடனடியா வரணும்.”

மாணிக்கம் இது என்ன வம்பாகப் போகி விட்டது என்று நினைத்தவராக மெல்லச் சொன்னார். “நான் வழக்கமான வழிகள்ல தான் ஏதாவது செய்ய முடியும். நீங்க அந்த லாரி முயற்சியோட நிறுத்தாம அவனை எதாவது செய்திருந்தா இத்தனை பிரச்னைகள் இருந்திருக்காது”

க்ரிஷ் இறந்திருந்தால் ஹரிணியை மணீஷுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திருந்திருக்கலாம். ஹரிணியைக் கடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது. இப்படி இவன் ஆளும் செந்தில்நாதனுமா சேர்ந்து காணாமல் போகும் நிலைமையும் வந்திருக்காது….. இப்படி இந்த ஆள் என்னை மிரட்டும் நிலைமையும் வந்திருக்காது. என்று மாணிக்கம் நினைத்தார்.

விஸ்வம் தன் குறைகளை அடுத்தவர் சுட்டிக் காட்டுவதை சகித்ததில்லை. காரணம் குறைகளே அவனுக்குக் கிடையாது. ஒன்றைச் செய்யாமல் இருக்கிறான் என்றால் அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது என்று அர்த்தம். க்ரிஷின் பாதுகாப்பு அரணில் என்னென்ன இருக்கிறது என்று யார் அறிவார்? லாரியில் இருந்து காப்பாற்றிய ஏலியன் மறுபடி க்ரிஷை நிராயுதபாணியாகவே விட்டுச் சென்றிருப்பான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஏதாவது ஏற்பாடு கண்டிப்பாக செய்து விட்டு தான் போயிருக்க வேண்டும். அந்த ஏற்பாடு க்ரிஷைக் கொல்ல முயல்பவர்களைத் திருப்பித் தாக்கும் ப்ரோகிராமாகக் கூட இருக்கலாம். உச்ச சக்திகளில் அனுப்பிய ஆளுக்கே திருப்பி விடும் யுக்தியும் உண்டு. அது தெரியாமல் மறுபடி ஒரு முயற்சி செய்து சிக்கிக் கொள்ள விஸ்வம் விரும்பவில்லை. அதை எல்லாம் மாணிக்கத்திடம் சொல்லும் அவசியமும் அவனுக்கில்லை.

”க்ரிஷை எப்படி சமாளிப்பது என்று நான் பார்த்துக் கொள்கிறேன். நீ ஹரிணியை மறுபடி அடைத்து வை. என் ஆள் வெளிவராமல் நீ அவளை வெளியே விடக்கூடாது”

மாணிக்கம் திகைத்தார். “நான் அவளைக் கடத்துவதா?”

“ஆட்சியாளன் அடைத்தால் அது கடத்துவதாகாது மாணிக்கம். நீ அவளை ஏதாவது வழக்கில் கைது செய்.”

மாணிக்கம் அதிர்ந்தார். “சார்…. என் மகனே என்னைக் காரித்துப்புவான். அவன் உண்மையாவே அந்தப் பெண்ணைக் காதலிக்கிறான்…..”

“பிரச்னை உன் பையனாய் இருந்தா அவனை நான் அப்புறப்படுத்திடட்டுமா?”

மாணிக்கத்தின் ரத்தம் சில்லிட்டது. அவர் உடம்பெல்லாம் வியர்த்தது. அவர் நடுங்கி விட்டார். பேச வாய் வரவில்லை. சங்கரமணி மருமகனை எப்போதுமே இப்படி ஆடிப் போய் பார்த்ததில்லை. எல்லா சமயங்களிலும் அவர் மருமகன் நிதானம் இழக்காதவன். அவனே இப்படி நடுங்குகிறான் என்றால் எதிரி ஏதோ பிரம்மாஸ்திரம் தான் விட்டிருக்க வேண்டும்….. அவருக்கே படபடப்பு அதிகமாகியது.

“சார்….. சார்…. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?” சொல்லும் போதே மாணிக்கம் பாதி செத்தார்.

“எனக்கு வீண் பேச்சு பேசிப் பழக்கம் இல்லை மாணிக்கம். எனக்கு என் ஆள் வரணும். க்ரிஷ் வீட்டுக்காரங்க தான் அவனை எங்கேயோ அடைச்சி வச்சிருக்காங்க. செந்தில்நாதன் அவங்க ஆளா மாறி அதுக்கு ஒத்துழைச்சு இருக்கான். என் ஆளைக் கொடுத்துட்டு அவங்க ஹரிணியைக் காப்பாத்திக்கட்டும்….. அவளைக் கைது மட்டும் பண்ணு. அவனுங்க தானா வழிக்கு வருவாங்க….”

“என்னன்னு நான் ஹரிணியைக் கைது பண்றது…..”

“ஆட்சி நடத்தற உங்களுக்குச் சொல்லியா தரணும். விபசாரமோ, போதை மருந்து வச்சிருந்தான்னு சொல்லியோ ஏதாவது சொல்லிக் கைது பண்ணு. இல்லாட்டி உன் மகனை மறந்துடு….”

விஸ்வம் போனை வைத்து விட்டான். மாணிக்கத்தின் கையில் இருந்து  செல்போன் நழுவிக் கீழே விழுந்தது.


”நீங்க அவனைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

இல்லுமினாட்டியின் தலைவர் எர்னெஸ்டோவிடம் உபதலைவரான அந்த வழுக்கைத்தலையர் கேட்டார். விஸ்வம் எல்லார் மனதிலும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி விட்டுப் போயிருந்தான்.

எர்னெஸ்டோ சொன்னார். “இப்படி ஒரு சக்தி வாய்ந்தவன் நான் பார்த்த வரைக்கும் நம் இயக்கத்தில் இருந்ததில்லை….. அவன் சொன்ன மாதிரி அவன் காண்பிக்காத சக்திகள் கூட நிறைய இருக்கு. இதை வேற ஆள்கள் மூலமாவும் உறுதிப்படுத்திகிட்டோம்…..”

வழுக்கைத் தலையர் சொன்னார். “இந்தியாவில் இருந்து வந்திருக்கான். நம்ம சிக்காகோ கோயில்ல கிடைச்ச சுவடி சொல்ற ஆள் இவனா இருக்குமோ?”

“அதுல இருக்கற மத்த வர்ணனைகளும் பொருந்தினா தான் உறுதியாய் சொல்ல முடியும். பார்க்கலாம். இப்பத் தானே சேர்ந்திருக்கான்…..”

(தொடரும்)

என்.கணேசன் 


2 comments:

  1. Tense moments. What will happen to Harini?

    ReplyDelete
  2. எனக்கும் நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது... "க்ரிஷை கொல்ல ஏன் மறுபடி முயற்ச்சிக்கவில்லை?" என்று...
    இப்போது அந்த சந்தேகம் விலகியது...

    ஹரிணியை மீண்டும் கடத்துவது.... தவறான ஒரு திட்டமாக தோன்றுகிறது... 'விஸ்வம் சறுக்கி விழப்போகிறான்' என நினைக்கிறேன்...

    ReplyDelete