Monday, December 24, 2018

சத்ரபதி – 52


சிவாஜி தன்னுடைய வீரர்கள் காலிப் பல்லக்குடனும், அனுப்பிய பரிசுப் பொருள்களுடனும் திரும்பி வந்ததைக் கண்டு துகாராமை அவர்களுக்குச் சந்திக்க முடியவில்லை போலிருக்கிறது என்று சந்தேகப்பட்டான். ஆனால் அவன் வீரர்கள் துகாராமிடமிருந்து பதில் மடல் கொண்டு வந்திருந்தார்கள்.

சிவாஜி திகைப்புடன் அந்த மடலைப் படித்தான்.

என்னை அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறாய் அரசனே. விட்டலனின் இந்தப் பக்தன் அவன் சன்னிதானம் விட்டு உன் சன்னிதானத்திற்கு வருவதனால் என்ன பலன் கண்டு விடப்போகிறேன். அதனால் மற்றவர்களுக்கும் என்ன பலன் வந்துவிடப் போகிறது?.

இறைவனைத் தவிர வேறு எவ்வித நோக்குமில்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். அவனைத் தவிர வேறு நோக்கு எதுவும் என்னை மகிழ்விப்பதில்லை. அரண்மனை சுக போகங்கள் எனக்கானதல்ல. எனக்கு ஆகாரம் வேண்டுமென்றால் பிச்சை எடுத்துச் சாப்பிடுகிறேன். பட்டாடைகளும் எனக்குத் தேவையில்லை. உடுத்தக் கந்தல் உடைகள் இருக்கின்றன. படுப்பதற்கு எனக்கு மெத்தை தேவையில்லை. கற்பாறைகள் இருக்கின்றன. உடம்பை மூடிக் கொள்ள ஆகாயம் இருக்கிறது. இப்படியிருக்கிறபோது நான் யாருடைய தயவை எதிர்பார்த்து நிற்கவேண்டும்?  இறைவனிடமிருந்து விலகிப் போய் யாரும் என்ன மேன்மையைக் கண்டுவிட முடியும்?

துகாராம், மனநிறைவு என்ற செல்வத்தை நிறையப் பெற்றிருக்கிறான்; முற்பிறவியில் செய்த புண்ணிய வினைகளின் காரணமாக கடவுளின் அன்பைப் பெற்றிருக்கிறான். அதுவே அவனுடைய ஆஸ்தி. அதுவே அவனுக்குக் கவசம்.

இந்தப் பதிலில் நான் உன்னை அலட்சியப்படுத்துவதாக எண்ணி விடாதே.  இறைவனை அலட்சியப்படுத்த முடியாமல், விலக மனமில்லாமல் எழுதுகின்ற பக்தனின் பதிலாக இதைப் புரிந்து கொள்வாயாக!

சிவாஜியின் மனதை அந்தப் பதில் மடல் என்னென்னவோ செய்தது. கனவில் கேட்பவன் போலத் தன் வீரர்களிடம் அங்கு நடந்ததை எல்லாம் சொல்லச் சொல்லிக் கேட்டான். அவர்கள் துகாராம் விட்டலனைப் பார்த்துப் பேசியதைச் சொன்னார்கள். பழங்கள், பொன், பட்டாடைகளைத் தொடவும் துகாராம் மறுத்ததைச் சொன்னார்கள்….

சிவாஜி நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருந்தான். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அரண்மனையை விட்டு அவன் புறப்பட்டான்.

வீரர்கள் துகாராமைக் கண்ட பாண்டுரங்க விட்டலன் கோயில் வாசலில் இப்போது துகாராம் இருக்கவில்லை. பல இடங்களில் தேடிச் சென்று கடைசியில் ஒரு காட்டுப் பகுதியில் துகாராமை சிவாஜி கண்டான். கருத்து, மெலிந்து, கந்தல் ஆடைகளுடன்  துகாராம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். துகாராம் முகத்தில் தெரிந்த பேரானந்தத்தை சிவாஜி பார்த்தான். மனிதன் பொருள்கள் மூலமாகத் தேடும் பேரானந்தத்தை இறைவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் துறந்து இருந்த அந்தத் துறவியின் முகத்தில் பார்த்த போது வாழ்வின் மிகப்பெரியப் பாடம் அவனுக்குக் கிடைத்தது. அவன் மனம் மிக லேசானது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் அவன் அவர் அருகே சென்றமர்ந்து கொண்டான். அவனும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. பேச்சின் அவசியம் அங்கு இருக்கவில்லை.

அரசன் தன்னைத் தேடி வந்ததும், அருகே வந்தமர்ந்ததும் துகாராமை ஆச்சரியப்படுத்தவில்லை. இறைவனின் லீலைகள் ஏராளம். எதற்கென்று ஆச்சரியப்படுவது?


சிவாஜியைக் காணாமல் அவன் அரண்மனை அல்லோலகல்லோலப்பட்டது. முந்தைய தினம் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்ட ஜீஜாபாய் வறண்ட குரலில் சொன்னாள். “துகாராமைக் கண்டுபிடியுங்கள். உங்கள் அரசனும் அங்கு தான் இருப்பான்”

அவள் பல காலமாகப் பயந்தது நடந்து விட்டது. எதிரிகளிடம் மகனை இழப்போம் என்ற பயம் அவளிடம் என்றுமே இருக்கவில்லை. பிரச்னைகள், துன்பங்கள், மனிதர்களிடம் மகனை இழப்போம் என்று அவள் என்றும் பயந்ததில்லை. அவள் மகனின் உறுதியை அவள் அறிவாள். ஆனால் ஆண்டவன் அவள் மகனின் மிகப்பெரிய பலமாக இருக்கும் அதே சமயம் மிகப்பெரிய பலவீனமாகவும் ஆகிவிடலாம் என்ற பயம் அவளிடம் என்றுமே இருந்து வந்தது. இன்று அது நிரூபணமாக மாறியும் விட்டது.

சிவாஜியைக் காட்டில் கண்டுபிடித்த வீரர்களும், அதிகாரிகளும் அவளிடம் கவலையுடன் வந்து சொன்னார்கள். “ராஜமாதா! மன்னர் அங்கே துகாராம் அருகே அமர்ந்திருக்கிறார். நாங்கள் அழைத்தும் வரவில்லை. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவுமில்லை. வெறித்த பார்வை பார்க்கிறார்…. அந்தத் துறவி துகாராமிடம் மன்னரை அனுப்பச் சொன்னோம். அவர் காதிலும் நாங்கள் சொன்னது விழுந்ததாகத் தெரியவில்லை…..”

சாய்பாயும், சொரயாபாயும் விசித்து அழும் சத்தம் ஜீஜாபாய்க்குக் கேட்டது. உறுதியுடன் எழுந்த ஜீஜாபாய் மகன் வணங்கும் பவானி சிலை முன் சிறிது நேரம் பிரார்த்தித்து விட்டு, பின் அவளே மகனை அழைத்து வரப் புறப்பட்டாள்.


தாயின் வரவும் சிவாஜியின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தி விடவில்லை. அவன் வெறித்த பார்வை பார்த்தவனாக அமைதியாகவே அமர்ந்திருந்தான். துகாராமோ தான் மட்டும் தனிமையில் இருப்பவர் போலவே எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார். ஜீஜாபாய் கம்பீரமாகவும் அமைதியாகவும் அவரை வணங்கி எழுந்து விட்டு மகன் எதிரில் நின்று பேச ஆரம்பித்தாள்.

“மகனே! அனைத்தையும் துறப்பவனே அமைதியைக் காண்கிறான் என்பதை நீ உணர்ந்து தான் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து இங்கு அமர்ந்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன். ஞான மார்க்கம் என் அறிவுக்கு அதிகம் எட்டாதது என்றாலும் உன் ஆசிரியர் உனக்குப் போதித்த எத்தனையோ விஷயங்களை எட்ட இருந்து கேட்டுக் கொண்டு இருந்ததால் மேலோட்டமாகவாவது நான் அறிவேன். நீ ஒரு தனிமனிதனாக மட்டும் இருந்திருந்தால் இன்று நான் உன்னை அழைத்துப் போக வந்திருக்க மாட்டேன். உன் அமைதியைக் குலைக்க விரும்பியிருக்க மாட்டேன். நீ இன்று ஒரு அரசன். ஒரு தலைவன். அதிலும் சாதாரணமான அரசனோ, தலைவனோ அல்ல. இந்த மண்ணின் பெருமையை நிலைநாட்ட சுயராஜ்ஜியக் கனவு கண்டு சபதம் எடுத்துக் கொண்ட மாவீரன். அந்த மாவீரனிடமே நான் பேச வந்திருக்கிறேன்….”

சுயராஜ்ஜியக் கனவு பற்றி அவள் சொன்னதும் சிவாஜியின் கண்களில் ஒரு மின்னல் வந்து போனது. ஆனாலும் அவன் வெறித்த பார்வை மாறி விடவில்லை. ஆனால் தாயைச் சலனமில்லாமலாவது அவன் நேர் பார்வை பார்த்தான்.

“மகனே! கொள்ளைக்காரர்களாகவும், குறிக்கோள் இல்லாதவர்களாகவும் வாழ்ந்து வந்த ஒரு கூட்டத்தை நேர்பாதைக்கு மாற்றி இருக்கிறாய். எது கௌரவம், எது நன்மை என்று காட்டி இருக்கிறாய். சுயராஜ்ஜியக் கனவில் எதிர்களை வீரமாகவும், தந்திரமாகவும் வென்று சிறிது தூரமாகவும் வந்திருக்கிறாய். நீ உன் தனி அமைதியைத் தேடி வந்து விட்டால் உன்னை நம்பி வந்த மக்களுக்கு என்ன வழி? அவர்களை நடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்வார்கள்? நீ இல்லாத நிலையில் பீஜாப்பூர் சுல்தானும், முகலாயச் சக்கரவர்த்தியும் அந்த மக்களையும், நீ சேர்த்ததையும் என்ன செய்வார்கள்? இதையெல்லாம் யோசித்திருக்கிறாயா? உன் சுயராஜ்ஜியச் சபதத்திற்கும், கனவுக்கும் நீ என்ன பதில் வைத்திருக்கிறாய்?”

“இந்தத் துறவி வணங்கும் பாண்டுரங்க விட்டலனே மன்னனாக இருந்தவன். குடும்பஸ்தன். கர்ம யோகி. கீதையைப் போதித்தவன். அரசனாக மட்டுமல்ல, தர்மத்தைக் காப்பதற்காக சாரதியாகவும் கீழிறங்கி வந்து செயல்புரிந்த கதையை உனக்கு உன் ஆசிரியர் போதித்திருக்கிறாரே. அந்தப் போதனைகள் வீணா? அர்ஜுனன் யுத்த களத்தில் துறவே தேவலை என்று முடிவெடுத்தது போல் அல்லவா நீயும் முடிவெடுத்திருக்கிறாய். உனக்கு பகவத் கீதை போதித்த ஆசிரியர் உன் செயலை எந்த உலகில் இருந்தாலும் ஆதரிப்பாரா மகனே, யோசித்துப் பார்”

”அவரவர் கடமையையும், இயல்பையும் மீறி நடந்து கொண்டு யாரும் என்றும் நிரந்தர அமைதி அடைய முடியாது மகனே. உனக்குள் ஓடும் ரத்தம் வீர பரம்பரையுடையது. உன் கடமைகளை முடிக்காமல், உன் சுயராஜ்ஜியக் கனவை நிறைவேற்றாமல் நீ என்றும் அமைதியைக் காண முடியாது. உன் கடமைகளை முடித்த பின், எல்லாரையும் வழிநடத்த மாற்று ஏற்பாடுகள் செய்த பின் திருப்தியுடன் அமைதியை நாடிப் போ சிவாஜி. அப்போது தான் மனசாட்சியின் உறுத்தல் இல்லாமல், கடமைகளை முடித்து வந்திருக்கிற நிறைவில் நீ அமைதியைக் காண முடியும். நான் சொல்வதில் தவறு இருந்தால் நீயோ, இந்தத் துறவியோ சொல்லுங்கள். நான் கேட்டுக் கொள்கிறேன். தவறு இல்லையென்றால் உனக்காக, உன் சுயராஜ்ஜியக் கனவுக்காக, உன்னை நம்பி இருக்கும் மக்களுக்காக நீ என்னுடன் திரும்பி வர வேண்டும்…”

துகாராம் அப்போதும் ஒன்றும் பேசவில்லை. சிவாஜியை அவனுடைய சுயராஜ்ஜியக் கனவையும், கடமைகளையும், கர்மயோகத்தைக் குறித்து தாதாஜி கொண்டதேவ் போதித்த விஷயங்களையும் ஜீஜாபாய் நினைவுபடுத்திச் சொன்ன விதம் பெரிதும் பாதித்தது.

அந்தக் கனவைப் புதைத்து விட்டு அவன் மனம் அமைதி காண முடியுமா? அவன் மக்கள் கஷ்டப்பட்டால் அதைக் கண்ட பிறகும் அமைதி காண முடியுமா? ஜீஜாபாய் சொன்னது போல அவன் தனிமனிதன் அல்லவே? கனத்த மனதுடன் எழுந்த சிவாஜி தாயை வணங்கினான். துகாராமை வணங்கினான். தாயுடன் கிளம்பினான்.

ஜீஜாபாய் கண்கள் கலங்க நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

(தொடரும்)
என்.கணேசன் 

3 comments:

  1. A great mother, a great son, a great writer.

    ReplyDelete
  2. ஜீஜாபாய் எத்தனை உயர்ந்த சாமர்த்தியமான பெண்மணி என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதும். தலை வணங்குகிறோம் தாயே ஒரு மாவீரனைப் பெற்றதற்கும், இப்படி வழிநடத்தியதற்கும்.

    ReplyDelete
  3. "ஞானத்தைப் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது!" என்று கூறிவிட்டு.... இவ்வளவு பெரிய உபதேசத்த சொல்லிட்டிங்களே... ஜீஜாபாய் அம்மா..!!!

    அருமை...அருமை...

    ReplyDelete