விஸ்வம் ஒருசில சக்திகளைத் தன் வசப்படுத்தி விட்ட பிறகு மறுபடி
ஒரு முறை அந்த ஜிப்ஸி அவன் பார்வைக்கு அகப்பட்டான். மைசூரை அடுத்த சாமுண்டி மலையில்
சாமுண்டேஸ்வரி சிலையில் யோகசக்திக்கான சூட்சுமம் உள்ளது என்றும் கண்டுவரவும் சொல்லி
ஒரு குரு அவனை அனுப்பி வைத்தார். ஒரு மாலைப்
பொழுதில் அவன் அங்கு போய்ச் சேர்ந்த போது கோயிலுக்கு வெளியே இருந்த பிரம்மாண்டமான மஹிசாசுரன்
சிலைக்குக் கீழே தலை கவிழ்த்தபடி அந்த ஜிப்ஸி உட்கார்ந்திருந்தான். ஆரம்பத்தில் விஸ்வம்
அவனைக் கவனிக்கவில்லை. மஹிசாசுரனின் வலது கையில் இருந்த வாளையும், இடது கையில் இருந்த
பெரிய நாகத்தையும் பார்த்துக் கொண்டே விஸ்வம் அவனைக் கடந்து போகையில் தற்செயலாக விஸ்வத்தின்
கண்களுக்குத் முதலில் தட்டுப்பட்டது அந்த ஜிப்ஸியின் கிதார் தான். உடனே நின்று அந்த
கிதார் அருகில் இருந்த உருவத்தை விஸ்வம் பரபரப்புடன் கூர்ந்து பார்த்தான். தலையைக்
கவிழ்த்திருந்தாலும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்தது அந்த ஜிப்ஸியே தான். ஜிப்ஸி
அந்தக் கணத்தில் தலையை நிமிர்த்தி அவனைப் புன்னகையுடன் பார்த்தபடி எழுந்து நின்று கேட்டான்.
“எப்படி இருக்கிறாய்?”
விஸ்வம்
தன் வாழ்க்கையில் சிறிதாவது உண்மையாக நெருக்கத்தை உணர்ந்தது அந்த ஜிப்ஸியிடம் தான்.
அந்த ஜிப்ஸியால் தான் அவன் வாழ்க்கை மாற ஆரம்பித்தது என்ற காரணத்தினால் தானா இல்லை
வேறு எதாவது காரணமா என்று அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. புன்னகையுடன் சொன்னான்.
“நன்றாக இருக்கிறேன்…..”
ஒரு
சுற்றுலாப் பயண கும்பல் மஹிசாசுரன் சிலையை நோக்கி வரவே இருவரும் அங்கிருந்து
நகர்ந்தார்கள். நடந்தபடியே விஸ்வம் ஆர்வத்துடன் கேட்டான். “இப்போது என்னைப்
பார்த்தால் உனக்கு என்ன தெரிகிறது?”
அந்தக்
கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஜிப்ஸி கேட்டான். “உனக்கு இல்லுமினாட்டி பற்றித் தெரியுமா?”
“கேள்விப்பட்டிருக்கேன்.
அப்படி ஒரு இயக்கம் உண்மையாய் இருக்கிறதா என்ன?”
“இருக்கிறது.
இந்த உலகத்தின் விதியை ஒருநாள் அது எழுதலாம்….. அதற்கு வேண்டிய எல்லா பலத்தையும் பெற்று
நாளுக்கு நாள் அது உச்ச சக்தியை நெருங்கி வருகிறது….”
விஸ்வத்திற்கு
ஏமாற்றமாக இருந்தது. உலகத்தின் விதியை அவன் எழுத ஆசைப்பட ஆரம்பித்திருந்தான்….
ஜிப்ஸி
கேட்டான். “மேசன் கோயில்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“இல்லை”
“அவை
இல்லுமினாட்டியின் கோயில்கள். பல ரகசியச் சுவடிகள், எதிர்கால ஆருடங்கள் எல்லாம் மேசன்
கோயில்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் சிகாகோவில் உலகிலேயே பெரிய
மேசன் கோயில் 1892 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
21 மாடிகள் கொண்ட அந்தக் கோயில் அக்காலத்தில் சிகாகோவிலேயே மிக உயர்ந்த கட்டிடமாய்
இருந்தது. அந்தக் கட்டிடத்தை 1939 ஆம் ஆண்டு சில காரணங்களால் இடித்தார்கள். அப்படி
இடிக்கும் போது அஸ்திவாரத்தில் ஒரு பெட்டியில் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்த ஒரு பழங்காலச்
சுவடி இல்லுமினாட்டியின் கைகளில் கிடைத்திருக்கிறது. அதில் உள்ள ஒரு எதிர்கால ஆருடம்
உனக்கு உபயோகமாகலாம்…..”
“என்ன
அது?”
“இந்தியாவில்
இருந்து வரும் ஒருவன் இல்லுமினாட்டியின் போக்கை மாற்றி நிர்ணயிப்பான். புதிய சரித்திரம்
படைப்பான் என்று இருக்கிறது. இல்லுமினாட்டியின் சக்தி வாய்ந்த சில தலைவர்களுக்கு மட்டும்
இந்த ரகசியம் தெரியும். அந்தச் சுவடி இப்போதும் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது….
அவனைப் பற்றி நிறைய வர்ணனைகளும் அந்த சுவடில இருக்கு….”
விஸ்வம்
தன் வாழ்க்கையில் இது வரை உணர்ந்திராத பரபரப்பை உணர்ந்தான். “என்ன வர்ணனைகள்?”
“தெரியலை. இல்லுமினாட்டிகள் அந்த வர்ணனைக்கேற்ற மாதிரி செயற்கையா
ஒருத்தன் தயாராகி வர்றதை விரும்பல. அதனால அது பரம ரகசியமா இருக்கு.”
விஸ்வம்
அவன் கையைப் பிடித்து நிறுத்தினான். “அரைகுறையாய் சொல்லி விட்டுப் போகிறாயே. முழுசா
சொல்லேன்”
“எனக்குத்
தெரிஞ்சதே அவ்வளவு தான். நீ தான் இப்ப சக்திகள் சேர்க்க ஆரம்பிச்சிருக்கியே. கண்டுபிடிச்சுக்கோ”
“சரி
அன்றைக்கு முடிவுல மங்கலா தெரியுதுன்னு சொன்னாயே. இப்ப பார்த்து சொல்லு….”
ஜிப்ஸி
அவனைக் கூர்ந்து பார்த்தான். “அது இப்பவும் மங்கலா தானிருக்கு. விதியே இன்னும் தீர்மானிக்கலையா
இல்லை எனக்கு காட்ட மாட்டேங்குதான்னு தெரியல….. அந்தச் சுவடில இருக்கு எல்லா ரகசியமும்.
அதுல நீ உன் விதியையும் படிச்சுக்க முடியும்….கிளம்பட்டுமா?”
அவனிடம்
விஸ்வம் கேட்டான். “மீண்டும் எப்போது சந்திப்போம்?”
“இனி
நம் சந்திப்பு இருக்காது. அது உனக்குத் தேவையும் படாது. உன் விதியை நீயே எழுதிக் கொள்வாய்…
ஆனால் கவனமாய் எழுது. ஏன்னா இதில் அழித்தல், திருத்தல் கிடையாது…..”
அவன்
போய் விட்டான். போய் விட்டான் என்பதை விட சட்டேன்று மறைந்தான் என்பதே பொருத்தமாக இருக்கும்.
யாரவன்? ஒவ்வொரு முறையும் வந்து அடுத்த கட்ட வழியைச் சொல்லித் தந்து விட்டுப் போகிறானே.
விஸ்வம் தன் சக்திகளை எல்லாம் திரட்டி ஜிப்ஸியை உணர முயன்றான். இப்போதைய அளவு இல்லாவிட்டாலும்
அப்போது அவன் ஓரளவு வலிமையான சக்தியே பெற்றிருந்தான். ஆனாலும் மங்கலான பனிமூட்டமும்
அதனூடே தூரத்தில் ஒரு பிரகாசமான நட்சத்திரமும் தெரிந்தது….. அதற்கு என்ன அர்த்தம் என்று
சரியாக விளங்கா விட்டாலும் விதி அனுப்பிய ஆளே அவன் என்று விஸ்வம் உணர்ந்தான். அவன் கனவு இலக்கிற்கான வழி அவனுக்குத் தெரிந்து
விட்டது. இனி அந்த வழியில் பயணிப்பது தான் அவன் செய்ய வேண்டியது…..
இல்லுமினாட்டி
பற்றிய தகவல்கள் அவன் சேகரிக்க முயன்ற போது கற்பனை எது நிஜம் எது என்று பிரித்தறிய
முடியாத அளவு எல்லாம் கலந்தே கிடைத்துக் குழப்பின. ஒன்றே ஒன்று தெளிவாகத் தெரிந்தது.
இதை நவீன ஊடகங்கள் வழியாக அவன் கண்டிப்பாக எட்ட முடியாது. இல்லுமினாட்டி அறிஞர்களும்,
சக்தி வாய்ந்த மனிதர்களும் நிறைந்த இயக்கம். அதிலும் அறிவும், சக்தியும் உச்சமானால்
மட்டுமே இல்லுமினாட்டியில் இணைய முடியும் என்பதில் அபிப்பிராய பேதம் யாருக்கும் இருக்கவில்லை.
அதனால் அந்த இரண்டும் அதிகமுள்ள மனிதர்களுடன் நெருக்கமானால் இல்லுமினாட்டியின் ஏதாவது
ஒரு தொடர்பு இழை அவனுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முதலில் அறிவு, சக்தி நிறைந்த சூழலில் இணைய வேண்டும்
என்று அவன் எண்ணிய போது தான் அவனுக்கு மாஸ்டரின் ஆன்மீக இயக்கம் பற்றிக் கேள்விப்பட்டான்.
ஆன்மீகமும், மானுட நன்மையும் பிரதானமாக இருந்தாலும் மற்ற விதங்களில் கிட்டத்தட்ட இல்லுமினாட்டி
உறுப்பினர்கள் போல சக்தி, அதிகாரம் மிக்கவர்களே அதிலும் இருந்தார்கள். ஒரு காலத்தில்
அவன் கண்டிப்பாக இல்லுமினாட்டியையே தன் வசத்தில் கொண்டு வருவான். அதற்கு முன்னோடியாக
அந்த இந்திய இயக்கத்தில் சேர்ந்து அது போன்றதொரு இயக்கத்தின் சூழலில் இருந்து கற்கத்
திட்டமிட்டு அவன் அதில் இணைந்தான்.
விஸ்வம்
அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டான். முக்கியமாக மாஸ்டரிடம் இருந்து ஒரு இயக்கத்தின்
தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் கற்றுக்
கொண்டான். சில விஷயங்களில் மாஸ்டர் சிறந்த தலைவனாக இருந்தார். பிரச்னை என்று வரும்
போது அதன் வேர் வரை சென்று புரிந்து அதைத் தீர்த்து வைப்பதில் அவர் சிறந்திருந்தார்.
அவர் சொல்வதை மறுப்பில்லாமல் இயக்கத்தினர் கேட்டுப் பின்பற்ற வைக்கும் ஆளுமையும் அவரிடம்
இருந்தது. ஆனால் ஒரு முறை நம்பியவரை அவ்வப்போது சோதித்துப் பார்க்க அவர் தவறினார்.
யாரும் ஒரு முறை தோன்றுவது போல கடைசி வரை இருந்து விடுவார்கள் என்று நம்புவது முட்டாள்தனம்
என்பதை அவர் உணரவில்லை. அந்த முட்டாள்தனத்தால் இயக்கத்தின் செல்வம் முழுவதும் இழந்து
விட்டு ஒரு சரித்திர உதாரணமாக மாறி விட்டார்….
அந்த
ரகசிய ஆன்மிக இயக்கத்தின் உறுப்பினர்களில் சக்தி வாய்ந்த அலைகள் வெளிப்படுத்துவோரிடம்
மற்ற சக்தியும் அதிகாரமும் சேர்ந்திருக்கும் மனிதர்கள் பற்றி சிறிது பேச்சுக் கொடுத்தான். அவர்கள்
சொல்லும் மனிதர்கள் பற்றி குறித்துக் கொண்டு மாறுவேடத்தில் சென்று அந்த மனிதர்களிடம்
பழகினான். அளவாக அவர்களிடம் தன் சக்தி அலைகளைப் பயன்படுத்தி அளந்தான். அலைவீச்சு அதிகமாக
இருந்தால் அதை அவர்கள் உணர்வார்கள். அவனைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசுவார்கள். அதை
அவன் விரும்பவில்லை. உண்மையான ஒரு இல்லுமினாட்டியிடம் மட்டுமே அவன் தன் சக்திகளின்
உயரத்தைக் காட்ட நினைத்தான். அதில் தான் அவனுக்குப் பயனும் உண்டு. கண்டவனிடம் எல்லாம்
சக்தி காட்டி அவன் அடையப் போவதென்ன? அளந்து அவர்கள் இல்லுமினாட்டியாக இல்லாதபட்சத்திலும்
அவர்களிடம் மற்ற சக்தி, அதிகாரம் வாய்ந்த மனிதர்கள் பற்றிப் பேசினான். அவர்கள் சொல்லும்
நபரைக் குறித்துக் கொண்டான்…. இப்படியே சங்கிலித் தொடராய் போனதில் ஒரு இல்லுமினாட்டியின்
தொடர்பு அவனுக்குக் கிடைத்தது.
(தொடரும்)
Every week new turns and twists. Nobody could guess what next. Real classic thriller.
ReplyDeleteசார் இந்த எபிசோடை படிச்சுட்டு நான் கூகுளில் 21 மாடி மேசன் கோயில் சிகாகோ என்று தேடினேன். நீங்க சொன்னது போலவே 1939 ஆம் வருஷம் இடிச்சதாய் போட்டிருந்துச்சு. அப்படியொரு கோயில் இருந்ததும், இடிக்கப்பட்டதும் உண்மை மாதிரியே அஸ்திவாரத்தில் ரகசியமாய் வச்சிருந்த பெட்டியும் உண்மை தானா?
ReplyDeleteமேசன் கோயில் பற்றி எழுதியது உண்மைத் தகவலை வைத்தே. அதே போல் அந்த மேசன் கோயில்களில் பல ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுவதும் உண்மையே. ஆனால் இந்த அத்தியாயத்தில் வரும் ரகசியப் பெட்டி கற்பனையே.
Delete"யாரும் ஒரு முறை தோன்றுவது போல கடைசி வரை இருந்து விடுவதில்லை"...விஸ்வத்தின் இந்த கருத்து நமக்கும் பயனுள்ள கருத்து...
ReplyDeleteஇப்பொழுது தான் episode சுவாரஸ்வமாக செல்கிறது...விஸ்வம் எவ்வாறு இல்லுமினாட்டியில் இணைந்தான்? அதன் போக்கை எப்படி மாற்றினான்? அவன் எழுதப் போகும் விதி என்ன?? என்பதை அறிய காத்திருக்கிறேன்.
இல்லுமினாட்டிஸ் பற்றி வந்ததும், கதை சுவரஸ்யமாக இருக்கு....
ReplyDeleteஇல்லுமினாட்டிஸ் போக்கை மாற்றப் போகும். இந்தியன், “ அக்ஷ்ஷையா.” ?