Thursday, December 6, 2018

இருவேறு உலகம் – 113

னோகர் சிசிடிவி கேமராவில் ஹரிணியின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்று கவனித்தான். அவனிடம் பேசிய பேச்சு காரமாக இருந்தாலும் கூட தன் யதார்த்த நிலையை உணர்ந்திருந்தது போல அவள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே இருந்தாள். நல்லது என்று எண்ணிய மனோகர் அடுத்தபடியாக வெளியே இருந்த கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகளை கவனமாகப் பார்த்தான். என்னதான் அவர்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பே இல்லாவிட்டாலும் கூட எச்சரிக்கையாகவே இருப்பதன் அவசியத்தை அவன் உணர்ந்திருந்தான். அன்றைய தினம் வழக்கத்தை விட அதிகமான ஆட்கள் அந்தத் தெரு வழியாகப் போயிருப்பது அவனது சந்தேகத்தைக் கிளப்பியது. மறுபடி நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு மனிதன் கடந்த போதும், ஒவ்வொரு வாகனம் கடந்த போதும் சந்தேகப்படும்படியான நபர் வேவு பார்ப்பதாக இருக்குமோ என்று கவனமாகப் பார்த்தான். கிட்டத்தட்ட எல்லோரும் எதிர்ப்பக்கத்தைப் பார்த்த அளவுக்குத் தான் இந்தக் குடோன் பக்கமும் பார்த்தார்கள். சிலர் அந்த அளவு கூடப் பார்க்கவில்லை. உடனே மனம் அமைதியானது என்றாலும் இரவிலும் பல முறை எழுந்து வெளிப்போக்குவரத்தைக் கண்காணித்தான். பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. அதிகாலை மூன்று மணி அளவில் தான் பயம் முழுமையாக நீங்கி நிம்மதியாகத் தூங்கினான்.

ஹரிணி முன் தினம் பேசியதை அவன் முன் தினமே விஸ்வத்திடம் தெரிவித்திருந்தான். அதனால் வீராவேசமாக ஏதாவது அவள் பிரச்னை செய்கிறாளா என்று அறிந்து கொள்ள அதிகாலை ஐந்து மணிக்கு விஸ்வம் போன் செய்து ஒரு பிரச்சினையும் இல்லையே என்று கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று மனோகர் தெரிவித்தான். விஸ்வம் நிம்மதியாக ம்யூனிக் நகருக்குக் கிளம்பினான்.


னிருத் க்ரிஷிடம் போனில் பேசினான். ”அந்த ஆறாவது அக்கவுண்டையும் கண்டுபிடிச்சுட்டேன். பேர் வித்தியாசமாய் இருந்தது. அதையும் குடைஞ்சு பார்த்தா அந்த அக்கவுண்ட் இல்லுமினாட்டியோட அக்கவுண்டா இருக்கு க்ரிஷ்”

க்ரிஷ் ஒரு நிமிடம் பேச்சிழந்தான். இல்லுமினாட்டியா! மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ரகசியமாகவும், பரபரப்பாகவும் பேசப்படும் பெயர் இல்லுமினாட்டி. அது பற்றிக் கிடைக்கும் சரித்திரத்தை விட கற்பனைகள் அதிகம். சினிமாப்படங்கள் எடுத்திருக்கிறார்கள், நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். உலகத்தையே ரகசியமாய் ஆளும் இயக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது பற்றின நிஜங்களை விட கற்பனைகளே வலம் வருவது அதிகம்…..

பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பவேரியாவில் தான் முதல் முதலாக இல்லுமினாட்டி என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில்  அது  அரசாட்சிக்கும், மதவாதத்திற்கும் எதிரானதாக அறிவாளிகளால் ஆரம்பிக்கப்பட்ட அந்த இயக்கத்திற்கு அரசாங்கமும், மதத்தலைவர்களும் எதிராக இருந்தனர். அடக்குமுறையையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து இயங்கிய அந்த இயக்கத்துக்குக் கடுமையான சட்டங்கள், தண்டனைகள் மூலம் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே மூடுவிழா நடத்துவதில் ஆட்சியாளர்கள் வெற்றி கண்டனர். ஆனால் ரகசியமாக இல்லுமினாட்டி இயங்கி வருவதாகப் பலரும் நம்பினார்கள். பேசினார்கள். பேரறிவாளர்களும், சக்தி வாய்ந்தவர்களும் மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் இல்லுமினாட்டி தன் இருப்பை உலகின் எல்லா முக்கிய நாடுகளிலும் பலப்படுத்திக் கொண்டு வருவதாக இன்றளவும் பேச்சு அடிபடுவதுண்டு. சில சமயங்களில் எங்கேயாவது மிக முக்கியமான மாறுதல் வருமானால் அது இல்லுமினாட்டியால் தான் என்று அடித்துச் சொல்லும் ஆட்கள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால் ஆதார பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படாததால் பெரும்பாலானோர் அது கட்டுக்கதைகளே என்று நம்பினார்கள்….. இந்த நிலையில் இவனும் இல்லுமினாட்டி பற்றிச் சொல்கிறான்.

க்ரிஷ் சொன்னான். “உனக்கெப்படி அது இல்லுமினாட்டியின் அக்கவுண்ட் என்று தெரியும். இல்லுமினாட்டி என்பதே கற்பனை என்றல்லவா பலரும் நினைக்கிறாங்க”

“இல்லை க்ரிஷ். இல்லுமினாட்டி கற்பனை அல்ல….. அந்தப் பேர்ல சில பொய்யான ஆள்கள் வெப் சைட் வெச்சிருக்காங்க….. சில பேர் சேர்ந்து இல்லுமினாட்டி நாங்க தான்னு பகிரங்கமா சொல்லிக்கிறாங்க. நான் அவங்கள எல்லாம் சொல்லலை. நிஜமான இல்லுமினாட்டி, சத்தமில்லாம இப்பவும் வலிமையா ரகசியமா இயங்கிட்டு தான் இருக்கு. அது முதல்லயே எனக்குத் தெரியும். அப்பவே இன்னொரு விஷயமும் எனக்குத் தெரிஞ்சிருந்தது - அதிகாரபூர்வமா இல்லாம வெளியில் இருந்து யாரும் சுலபமா அவங்க அக்கவுண்டுக்கு உள்ளே நுழைஞ்சுட முடியாது. அப்படியே நுழைஞ்சா கூட யாரும் முப்பது வினாடிகளுக்கு மேல அந்த அக்கவுண்ட்ல இருக்க முடியாதபடி இல்லுமினாட்டில ஒரு தனி பாதுகாப்பு வசதி இருக்கு.  தானா வெளிய தள்ளிடும். திரும்பவும் அந்த வழியா எப்பவுமே உள்ளே நுழைஞ்சிட முடியாது. இந்த அக்கவுண்ட்லயும் அது தான் ஆச்சு. திரும்பவும் நுழைய என்னாலயும் முடியல…. அத வச்சு தான் அது இல்லுமினாட்டியோடதா தான் இருக்கணும்னு உறுதியா சொல்றேன். அவங்களோட இந்தப் பாதுகாப்பு வசதிகள் பத்தி நான் பலர் சொல்லக் கேட்டுருக்கேன். இப்ப உறுதியாயிடுச்சு.… அந்த அக்கவுண்ட் பேர்லயும் பவேரியாங்கற வார்த்தை இருக்கு. உனக்குத் தெரிஞ்சிருக்கும் அது தான் இல்லுமினாட்டி ஆரம்பிச்ச இடம்…..”

க்ரிஷுக்குத் தலைசுற்றியது. இல்லுமினாட்டி இருக்கிறது, இல்லுமினாட்டிக்கும் எதிரிக்கும் தொடர்பு இருக்கிறது என்ற இரு தகவல்களின் சேர்க்கை தற்போதைய நிலைமை பேராபத்து என்பதைப் புரிய வைத்தது….. இல்லுமினாட்டி இயக்கம் குறித்து அடிக்கடி சொல்லப்படும் வாக்கியங்கள் நினைவில் நிழலாடின. “அவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் அறிவார்கள்….” வேற்றுக்கிரகவாசி சொன்னது போல் அழிவு வேகமாக நெருங்குகிறதோ?


ரு மணி ஐம்பத்திரண்டு நிமிடங்களில் ம்யூனிக்கில் இருந்த எர்னெஸ்டோவுக்கு அவர் கேட்ட தகவலை முன்பு போனில் பேசியவன் விவரமாகச் சொன்னான்.

“… பேரு அனிருத்…. வயசு 26. கல்யாணம் ஆகலை…. கம்ப்யூட்டர், நெட்வர்க் விஷயங்கள்ல ஜீனியஸ். பெரும்பாலும் ஆன்லைன் நெட்வர்க் மோசடிகளைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கிறது அவனோட தனித்தன்மை…. அப்பா அம்மா ரெண்டு பேரும் கவர்மெண்ட் உத்தியோகம்…. இந்தியாவோட ரகசிய ஆன்மிக இயக்கத்தோட உறுப்பினர்….. சில வாரங்களுக்கு முன்னால் அவங்க அக்கவுண்ட்ல இருந்து நம்ம அக்கவுண்டுக்கு வந்த பணம் பத்தி தெரிஞ்சுக்க வந்திருக்கான் போல இருக்கு….. முப்பது வினாடில அவன் அதிகமா எதுவும் பார்த்திருக்க வாய்ப்பில்ல……”

“சரி” ஒற்றைச் சொல்லில் பேச்சை முடித்துக் கொண்ட எர்னெஸ்டோ ஆழ்ந்து சிறிது நேரம் யோசித்தார். பின் தன் கம்ப்யூட்டரில் “இந்தியா” என்ற ஃபோல்டரில் சேர்த்து வைத்திருந்த சில தகவல்களை மேலோட்டமாய் படித்தார். பின் ஒரு எண்ணிற்குப் போன் செய்தார்.

“இந்தியால இஸ்ரோக்காரங்க அந்த ஏலியன் விஷயமா சமீபத்துல என்ன கண்டுபிடிச்சிருக்காங்கங்கறத எனக்கு அனுப்பு…. அதோட அந்த ரகசிய ஆன்மிக இயக்கம் பத்தின எல்லாத் தகவல்களையும் அனுப்பு….”

அரை மணி நேரத்தில் அவர் கேட்ட தகவல்கள் வந்து சேர்ந்தன. எர்னெஸ்டோ நள்ளிரவு கழிந்து அதிகாலை மூன்று மணி வரை அவற்றைப் படித்தார். முன்பே அவரிடம் இருந்த சில தகவல்களோடு இப்போது பெற்ற தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து முடித்த போது அதிகாலை நான்காகி இருந்தது. எண்பத்தியாறு வயதை எட்டிய அவர் கம்ப்யூட்டரை மூடி டேபிளில் இடம் மாறி இருந்த சில பொருட்களை அதனதன் இடத்தில் வைத்து விட்டு பின் தான் படுக்கையில் சாய்ந்தார்.

அதற்குப் பின் வந்த தொலைபேசி அழைப்புகள் எவையும் சத்தம் எழுப்பி அவர் உறக்கத்தைக் கலைக்கவில்லை. அவர் மதியம் ஒரு மணிக்கு எழுந்த பின் இரண்டின் சத்தங்களையும் கூட்டி வைத்தார். அந்த சமயத்திலேயே தொலைபேசி அலறியது.  ரிசீவரை எடுத்தார். “ஹலோ”

“நல்ல வேளை நீங்கள் போன் எடுக்காததால் நான் பயந்துட்டேன்….” என்று நிம்மதியடைந்த குரலில் மறுபக்கம் சொன்னது.

”கவலைப்படாதே. அவ்வளவு சீக்கிரம் சாக மாட்டேன். என்ன விஷயம்?”

“அந்த இந்தியப் பையனை என்ன செய்யலாம்?”

“ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அவங்க கவனத்துக்கு இப்போதைக்கு நாம் வர்றதை நான் விரும்பலை…”

“நாம் அவங்க கவனத்துக்கு இப்பவே வந்திருப்போம். அதனால தான் கேட்டேன்.”

“இப்பவும் கொஞ்சம் சந்தேகம்  இருக்கும். அப்படியே இருக்கட்டும்….. இனி வேற எதாவது வழில அந்தப் பையன் நம்ம அக்கவுண்டுக்கு மறுபடியும் வந்தா மட்டும் கொன்னுடுங்க….”

(தொடரும்)
என்.கணேசன்   

6 comments:

  1. Story plot is entering into a new dimension. Superb sir.

    ReplyDelete
  2. அருமையான தொடர் - காத்திருந்து படித்து விட்டேன் - நன்றி

    ReplyDelete
  3. வில்லனும் சரி... வில்லனின் ஆட்களும் சரி... சினிமாவைப் போல...எதையும் எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று செய்யாமல்... நன்றாக திட்டமிட்டு...முன் யோசனையுடன் செய்படுவது...புதுமையான வில்லத்தனமாக இருக்கு...

    இல்லுமினாட்டி எப்படி தான் இவ்வளவு ஆண்டுகள் ஒற்றுமையுடன்...ரகசியத்தை பாதுகாத்து வருகிறார்கள்...என்பது ஆச்சரியமளிக்கிறது....

    ReplyDelete
  4. Hello Sir, I would like to know your opinion about Illuminati.!
    Do u think it is real.? Or just added in story as most of the Hollywood film makers do.?

    ReplyDelete
    Replies
    1. The origin is real. But stories of their present supremacy is not fully believable. It is added in this story for the scope of suspense and interest. In "இல்லுமினாட்டி” the sequel to this novel it is dealt in depth.

      Delete
    2. Thank a lot ji..!
      Awaiting for more on Illuminati.!
      Name "Ernesto" is a nice selection. somehow giving a feel of Moriarty in Sherlock Holmes.

      Delete