ஷாஹாஜியை கைது செய்து தான் சிவாஜியைப் பயமுறுத்தி நிறுத்த வேண்டும்
என்ற முடிவுக்கு வந்த ஆதில்ஷா எப்படி அதை நடமுறைப்படுத்துவது என்று ஆலோசிக்க தனக்கு
மிக நெருங்கிய ஆலோசகர் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் ஷாஹாஜியின் ஆதரவாளர்களும்,
அனுதாபிகளும் இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார்.
ஆலோசனைக்கூட்டத்தில் பலரும் கர்னாடகத்தில் ஷாஹாஜியைக் கைது செய்வது அவ்வளவு
சுலபமல்ல என்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.
கூர்மதி
படைத்த ஒருவர் சொன்னார். “அரசே! ஷாஹாஜி அதிர்ஷ்டக்குறைவால் இப்போது இந்த நிலையில் இருக்கிறாரேயொழிய
திறமைக்குறைவால் வீரக்குறைவாலோ அல்ல. கர்னாடகத்தில் ஷாஹாஜி படை ஆதரவுடனும், மக்கள்
ஆதரவுடனும் இருக்கிறார். அவருக்கு எதிராக அவர்களை இயங்க வைப்பது நடவாத காரியம். பலம்
பிரயோகித்தால் கூட நமக்கு எதிராகப் பலர் திரும்பும் சாத்தியமும் உள்ளது. அதனால் வழக்கமான
முறையில் ஷாஹாஜியை அங்கு கைது செய்து இங்கு கொணர்வது முடியாத காரியம் என்றே நான் சொல்வேன்…..”
ஆதில்ஷா
ஆலோசித்தார். இந்தக் கருத்து உண்மை என்றே அவருக்கும் புரிந்திருந்தது. அவர் யோசனையுடன்
சொன்னார். “அப்படியானால் ஷாஹாஜியை இங்கு வரவழைத்து தான் கைது செய்ய வேண்டும்….”
இன்னொருவர்
சொன்னார். “வரவழைப்பதும் சுலபம் என்று தோன்றவில்லை மன்னா. சூழ்நிலை சரியில்லை என்பதை
அறிய முடியாத முட்டாள் அல்ல அவர். அதனால் அழைத்தாலும் உடல்நிலை சரியில்லை என்பது போன்ற
ஏதாவது காரணம் சொல்லி அவர் தவிர்க்கவே பார்ப்பார்….”
“அப்படியானால்
என்ன வழி?” ஆதில்ஷா கேட்டார்.
ஷாஹாஜியின்
மேல் அளவு கடந்த பொறாமை வைத்திருந்தவனும், இதுவரை ஆதில்ஷாவுக்கு ஷாஹாஜியைப் பற்றி எதிரான
அபிப்பிராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தவனுமானவன் இந்த ஒரு கேள்விக்காகவே காத்திருந்தான்.
அவன் அதற்குப் பதிலை முன்பே யோசித்து வைத்திருந்தான். “அரசே தந்திரமாக அங்கேயே கைது
செய்து பின் இங்கே அவரைத் தருவிப்பது தான் புத்திசாலித்தனமான வழி”
ஆதில்ஷா
அவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். அவன் சொன்னான். “மன்னா, ஷாஹாஜி சிறிதும் சந்தேகப்படாத
ஒரு ஆள் மூலமாக திடீரென்று அவரைக் கைது செய்து இங்கு கொணர்வது தான் புத்திசாலித்தனம்.
அந்த ஆள் தந்திரசாலியாக இருந்தால் தான் இது சாத்தியம்…..”
அப்படிப்பட்ட
ஆள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்த ஆதில்ஷாவுக்கு பாஜி கோர்படே என்ற ஆள்
நினைவுக்கு வந்தான். அவன் முதோல் என்ற பகுதிக்குச் சமீபத்தில் தான் தலைவனாக உயர்ந்திருக்கிறான்.
கர்னாநாடகத்திற்கு சமீபத்தில் உள்ள பகுதி அது. பாஜி கோர்படே சூட்டிப்பானவன் மட்டுமல்ல.
அறிவாளியும் கூட. சொல்கிற வழியில் சொன்னால் அவன் கண்டிப்பாக சாதித்துக் காட்ட முடிந்தவன்.
அவன் நிர்வாக விஷயமாக அவர் அனுமதி கேட்டு நேற்று தான் பீஜாப்பூர் வந்திருக்கிறான்……
ஆதில்ஷா அவனை ரகசியமாகத் தருவித்தார்.
பாஜி
கோர்படே நிர்வாக விஷயத்தில் அவன் கேட்டிருந்த விஷயமாகத் தான் பேச சுல்தான் அழைக்கிறார்
என்ற அபிப்பிராயத்துடன் தான் அங்கு வந்தான். ஆனால் ஆதில்ஷா அந்த விஷயமாக அவனிடம் பேசாமல்
ஷாஹாஜியைப் பற்றிப் பேசினார். “பாஜி கோர்படே நீ ஷாஹாஜியை நன்றாக அறிவாயா?”
குழப்பத்துடன்
ஆதில்ஷாவைப் பார்த்த பாஜி கோர்படே “ஓரளவு பரிச்சயம் இருக்கிறது அரசே” என்றான்.
“அவரை
நீ கைது செய்து இங்கே கொண்டு வர வேண்டும். முடியுமா உன்னால்?”
குழப்பம்
திகைப்பாக மாறி அதிர்ச்சியாக முடிந்து அப்படியே தங்கியது. சுல்தானின் நன்மதிப்பு பெற்ற
மேலிடத்து மனிதராகவே ஷாஹாஜியை பாஜி கோர்படே கருதி வந்திருக்கிறான். திடீரென்று சுல்தான்
இப்படிக் கேட்பது ஆழம் பார்க்கவா, நிஜமாகவே ஷாஹாஜி மேல் கோபம் கொண்டிருக்கிறாரா என்று
புரியாமல் யோசனையுடன் சுல்தானைப் பார்த்தான்.
ஆதில்ஷா
அமைதியாகச் சொன்னார். “நான் திறமையானவர்களைத் தான் எந்தப் பகுதிக்கும் தலைவராக நியமிப்பது
வழக்கம். என் அரசவையில் வேறு இரண்டு பேர் முதோல் பகுதிக்குத் தலைவராக நியமிக்கப்பட
வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பம் அறிந்த பின்னும் நான் உன்னை நியமனம்
செய்ததில் அவர்கள் இருவருக்கும் என் மேல் வருத்தமும், உன் மேல் பொறாமையும் கூட உண்டு.
உன் தகுதியையும் திறமையையும் நீ நிரூபிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
முடியுமா உன்னால்?”
பாஜி
கோர்படே புத்திசாலி. முடியாது என்ற பதிலில் தன் இப்போதைய பதவியே பறிக்கப்படும் வாய்ப்பு
இருப்பதை உணர்ந்தான். பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த அவனிடம் வேறு பதில்
இருக்கவில்லை. “முடியும்” என்று உடனே உறுதியாகச் சொன்னான். வழிகளைப் பின்பு ஆலோசிப்போம்….
ஆதில்ஷா
புன்னகைத்தார். ஆனால் அந்தப் புன்னகை வந்த வேகத்திலேயே மறைந்தது. அவர் எச்சரிக்கும்
தொனியில் சொன்னார். “ஷாஹாஜி அறிவாளி. வீரர். அதனால் தகுந்த திட்டத்துடன் போய் இதைக்
கச்சிதமாகச் சாதிக்க வேண்டும். இல்லா விட்டால் நீ சிறைப்படுத்தப்படலாம். அல்லது கொல்லவும்
படலாம். அதனால் நீ மிக மிக எச்சரிக்கையுடன் சிறிய சந்தேகமும் ஏற்படாதபடி கச்சிதமாகத்
திட்டமிட்டால் ஒழிய வெற்றி காண முடியாது. அதனால் தான் மீண்டும் கேட்கிறேன். உண்மையாகவே
இதில் வெற்றி பெற முடியுமா? நன்றாக யோசித்துச் சொல்”
பதவியைத்
தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிந்த பாஜி கோர்படே “உங்கள் ஆணை என் பாக்கியம்
அரசே! யோசித்து விட்டே நான் சொல்கிறேன். விரைவில் உங்கள் ஷாஹாஜியைக் கைது செய்து உங்கள்
எதிரில் கொண்டு வந்து நிறுத்துகிறேன்….” சிறிதும் தயங்காமல் சொன்னான்.
ஆதில்ஷா
சொன்னார். “நல்லது. இனி ஷாஹாஜியோடு வந்து நீ என்னைச் சந்தித்தால் போதும். சென்று வா”
பாஜி
கோர்படே சுல்தானை வணங்கி விட்டுக் கிளம்பினான். அவன் கர்நாடக எல்லையிலேயே அதிகம் இருந்ததால்
சிவாஜி அடுத்தடுத்து கோட்டைகளைக் கைப்பற்றிய தகவல் அவனை எட்டியிருக்கவில்லை. பீஜாப்பூரில்
அவன் நண்பர்களை விசாரித்ததில் தற்போதைய நிலவரங்களை முழுமையாக அறிந்தான். சுல்தானுக்கு
இப்போது ஷாஹாஜி எதிரியாக ஆனது எப்படி என்று புரிந்த அவனுக்கு அந்த எதிரியைக் கைது செய்து
சுல்தானிடம் ஒப்படைத்தால் மேலும் பெற முடிந்த ஆதாயங்களும் ஏராளமாக இருக்கும் என்பதும்
புரிந்தது. அவன் மனம் அதை எல்லாம் எண்ணுகையில் படபடத்தது.
ஆனால்
சுல்தான் அவனிடம் எச்சரித்த வார்த்தைகளும் நூறு சதவீதம் உண்மை என்பதை அவன் அறிவான்.
“தகுந்த திட்டத்துடன் போய் இதைக் கச்சிதமாகச் சாதிக்க வேண்டும். இல்லா விட்டால் நீ
சிறைப்படுத்தப்படலாம். அல்லது கொல்லவும் படலாம்.” அதை நினைக்கையில் மனதில் பதட்டத்தையும்
உணர்ந்தான்.
தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பி வருகையில் வழியெல்லாம் அவன் மனம் பல திட்டங்களைப் போட்டு அவற்றின் சாதக
பாதகங்களையும், அலசிக் கொண்டே வந்தது. ஷாஹாஜியின் பலம் பலவீனங்களையும் அவரது கடந்த கால சரித்திரத்தை வைத்து யோசித்துப் பார்த்தான்..
அவர் பிரபலமானவர் என்பதால் அவரைப் பற்றிப் பலர் மூலம் நன்றாக அவன் அறிவான். மனிதர்
வீரர், அறிவாளி என்பதில் எல்லாம் சந்தேகம் இல்லை… ஆனால் அவருக்கு பாஜி கோர்படேயைப்
பற்றி அந்த அளவு ஆழமாகத் தெரியாது. அவன் அவரளவு பிரபலமில்லாதவன், பழக்கப்படாதவன் என்பதால்
அவனைப் பற்றி முழுமையாக அறியும் வாய்ப்பு அவருக்கு இல்லை. அதுவே தன் பலம் என்று அவனுக்குத்
தோன்றியது. ஒரு சாதாரண பிரதேசத்தின் சாதாரணத் தலைவனாகிய அவன் மூலம் அவருக்கு ஆபத்து
வர முடியும் என்ற எண்ணமே அவருக்குத் தோன்ற
வாய்ப்பில்லை….. அந்த எண்ணமே அவனுக்குப் பெரிய மனபலத்தை ஏற்படுத்தியது.
நன்றாக
யோசித்து ஒரு திட்டத்தைப் போட்டு அதற்கு இரகசியமாய் சில ஏற்பாடுகள் செய்ய அவனுக்கு
பத்து நாட்கள் தேவைப்பட்டன. கச்சிதமாய் அந்த ஏற்பாடுகளைச் செய்து விட்டு என்னவெல்லாம்
நடக்கக்கூடும் என்று பல கோணங்களில் ஆராய்ந்து விட்டு அத்தனைக்கும் வழி ஏற்படுத்திக்
கொண்டு விட்ட பின்பே திருப்தியுடன் அவன் பெங்களூருக்கு ஷாஹாஜியைச் சந்திக்கச் சென்றான்.
(தொடரும்)
என்.கணேசன்
ஐயையோ. இதெல்லாம் சிவாஜிக்கு தெரிய வருமா? சாஹாஜி புத்திசாலித்தனமாய் தப்பித்துக் கொள்வாரா? என்ன சார் இது, இப்படி திக் திக் என்கிற இடமாய் பார்த்து தொடரும் போடுகிறீர்கள்? அடுத்த திங்கள் வரை நாங்கள் தாங்க வேண்டாமா?
ReplyDeleteVery interesting and captivating.
ReplyDeleteஷாஹாஜியை கைது செய்து ...சுல்தான் தன்வசம் இருக்கும் பகுதியையும்...சிவாஜியிடம் இழக்கப் போகிறார்...என்று நினைக்கிறேன்...
ReplyDelete