அடுத்தவர்களால் முட்டாளாக்கப்படுவது சாமானியர்களுக்கே கூட
அதிக அவமானத்தைத் தரக்கூடியது. அப்படியிருக்கையில் முட்டாளாக்கப்படுபவர் அரசராக இருந்தால்
அது சாதாரண அவமானமல்ல, சகிக்க முடியாத அவமானமாகவே இருக்கும். கல்யாண் நிதியைச் சிவாஜி
கைப்பற்றிய தகவல் ஒற்றன் மூலம் முதலில் கேள்விப்பட்ட போது பீஜாப்பூர் சுல்தான் முகமது
ஆதில்ஷா அதை அப்படிச் சகிக்க முடியாத அவமானமாகவே உணர்ந்தார். அவர் பார்த்து வளர்ந்த
சிறுவன், அவர் பதவி கொடுத்து கௌரவித்து அவருடைய சேவகத்திலேயே இருக்கும் ஒருவரின் மகன்
எந்த விதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் அவர் கஜானாவுக்கு வந்து சேர வேண்டிய செல்வத்தை
அபகரித்திருக்கிறான்….. அந்தக் கோபத்திலிருந்து அவர் மீள்வதற்கு முன் அடுத்தடுத்து
செய்திகள் வர ஆரம்பித்தன. சிவாஜி அந்தக் கோட்டையைக் கைப்பற்றி விட்டான்….. இந்தக் கோட்டையை
சிவாஜி கைப்பற்றி விட்டான்…….
கோபம்
அதிகரித்து ஆத்திரமாகி அவர் கொந்தளித்துக் கொண்டிருந்த போது முல்லானா அகமது வந்து சேர்ந்தான்.
முல்லானா அகமது வாயிலாக நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஆதில்ஷா கேட்டுத் தெரிந்து
கொண்டார். முல்லானா அகமதுக்குத் தன் பதவியும் அனுப்பி வைத்த நிதியும் பறிபோன துக்கத்தை
விடத் தன்னை உயிரோடு விட்டதற்கும் மருமகள் கௌரவமாக அனுப்பப்பட்டதற்குமான நிம்மதி மேலோங்கி
இருந்தது. அதனால் தகவல்களைச் சொன்ன போது கூட ஆதில்ஷா எதிர்பார்த்த கோபம் முல்லானா அகமதுக்கு
சிவாஜி மேல் வெளிப்படவில்லை. ஆதில்ஷா அதைக் கவனிக்கத் தவறவில்லை.
அடுத்து
தொடர்ந்து வந்த தகவல்களும் சிவாஜிக்கு அவன் கைப்பற்றிய இடங்களில் கிடைத்த மதிப்பு,
மரியாதையும், குடிமக்கள் அவனை மிக உயர்வாக நினைப்பதைப் பற்றியதாகவே இருந்தன. எல்லாருக்கும்
நல்லவனாக மாறிவிட்ட சிவாஜி இப்போது அவருக்கு மட்டுமே குற்றவாளியாகத் தெரிந்தான். ஆதில்ஷா
உடனே முக்கியஸ்தர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அவனிடம் ஆரம்பத்திலேயே கண்டிப்பைக்
காட்டி இருந்தால் அவன் இந்த அளவு அட்டகாசம் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை நாசுக்காகச்
சிலர் தெரிவித்தார்கள். ஷாஹாஜிக்கு ஆகாத ஆட்கள் ஷாஹாஜியே இதற்குப் பின்னால் இருக்கிறார்,
இந்த அளவு சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்பட சிவாஜிக்கு வயதோ அனுபவமோ கிடையாது என்று
சுட்டிக் காட்டினார்கள். ஆதில்ஷாவுக்கும் அது சரியென்றே தோன்ற ஆரம்பித்தது.
அவர்
மனநிலையை உணர்ந்த ஒருவன் ஷாஹாஜிக்கும், சிவாஜிக்கும் அவர் முன்பு தந்திருந்த உயர்ந்த
இடத்தையும் மதிப்பையும் எண்ணிப் பலகாலம் மனம் புழுங்கியவன். அவன் இந்த சமயத்தைப் பயன்படுத்திக்
கொண்டு சொன்னான். “அரசே. உடனே கைப்பற்றிய அனைத்தையும் திருப்பித் தந்து மன்னிப்புக்
கேட்கும்படி சிவாஜிக்குக் கட்டளையிடுங்கள். அதற்கு சிவாஜியை சம்மதிக்க வைக்கும்படி
ஷாஹாஜிக்கும் கட்டளையிடுங்கள். அப்படி ஒப்படைக்கா விட்டால் இரண்டு பேரையும் சிறைப்படுத்துவது
தான் ஒரே வழி! இதை இப்படியே விட்டால் சிவாஜி போல எத்தனை பேர் தைரியம் பெற்றுக் கிளம்புவார்கள்
என்று சொல்ல முடியாது. அவனுக்கு நீங்கள் சொல்லும் செய்தி அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய
வேண்டும்.”
ஆதில்ஷாவுக்கு
அவன் சொன்னது மிகச்சரியென்றே தோன்றியது. உடனே சிவாஜிக்கும், ஷாஹாஜிக்கும் அவன் சொன்னபடியே
கடிதங்கள் அனுப்பினார்.
கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தன் வசமானது இறைவனின் அருளாலேயே
என்று சிவாஜி நம்பினான். கைப்பற்றிய பகுதிகளில் அனைத்தும் சரியான நிர்வாகத்திற்கு தகுந்த
ஆட்களை நியமித்து விட்டுத் திரும்பும் வழியில் இருந்த ஹரிஹரேஸ்வரர் கோயிலில் நீண்ட
நேரம் அமர்ந்து பிரார்த்தித்தான். அவனுடைய பிரார்த்தனைகள் சில சமயங்களில் இறைவனோடு
செய்த சம்பாஷணைகளாகவே இருந்தன. சில சமயங்களில் இறைவனோடு மௌனமாக மானசீக அளவில் கலந்த
நேரங்களாக இருந்தன. அந்த நேரங்களில் அவன் இந்த உலகையே மறந்திருப்பான். இன்றைய பிரார்த்தனை
இரண்டாவது வகையில் அமைந்திருந்தது. சுமார் ஒன்றைரை மணி நேரம் கழித்து மனம் லேசாகி இறையருளால்
நிறைந்து அவனாக எழுந்து கிளம்பிய போது அவன் நண்பன் யேசாஜி கங்க் சொன்னான்.
“சிவாஜி
அன்னை பவானியின் வீரவாள் ஒன்று பக்கத்திலிருக்கும் கோட்டையில் இருக்கிறது தெரியுமா?”
அன்னை
பவானியின் வீரவாள் என்றதும் சிவாஜி ஒருவித சிலிர்ப்பை உணர்ந்தான். இறையருளால் மனம்
லேசாகி பரவசத்தில் இருக்கையில் இந்த வீரவாளைப் பற்றிக் கேள்விப்பட்டது தேவியின் நிமித்தமாகவே
அவனுக்குத் தோன்றியது.
அவன்
முகத்தில் தெரிந்த ஒளியைக் கண்ட யேசாஜி கங்க் உற்சாகத்துடன் விவரித்தான். “அருகில்
இருக்கும் சின்னக் கோட்டையின் தலைவன் கோவல்கர் சாவந்திடம் இருக்கும் அந்த வீரவாள் மிகவும்
நீளமானது. அது அவன் மூதாதையர் மூலம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. நீ போய்க் கேட்டால்
அவன் தந்து விடுவான். அவனாகத் தராவிட்டால் இத்தனை கோட்டைகளைக் கைப்பற்றிய நமக்கு அந்த
வீரவாளைக் கைப்பற்றுவது பெரிய விஷயமல்ல….”
சிவாஜி
முகத்தில் சின்ன ஏமாற்றம் தெரிந்தது. நண்பனிடம் சொன்னான். “யேசாஜி, பரம்பரை பரம்பரையாக
ஒருவரிடம் இருக்கும் அது போன்ற ஒரு புனிதப்பொருளை நாம் கட்டாயப்படுத்தி வாங்குவதோ,
அபகரிப்பதோ தர்மமல்ல…. ”
யேசாஜி
கங்க் சொன்னான். ”கோவல்கர் சாவந்திற்கு அது வெறும் குடும்ப சொத்து மட்டுமே சிவாஜி.
அவன் உன் அளவுக்கு பவானியின் பக்தனும் அல்ல. அந்த வீரவாள் நீ பூஜிக்கும் அளவுக்கு அவனுக்கு
வணங்கி வரும் பொருள் அல்ல….”
ஆனாலும்
சிவாஜி சம்மதிக்கவில்லை. ”நம் உரிமைகளை அடுத்தவர் பறிக்கும் போது நமக்கு எத்தனை ஆத்திரம்
வருகிறது. அப்படி இருக்கையில் அடுத்தவர்களின் உரிமைகளை நாம் அபகரிக்க நினைப்பது எந்த
விதத்தில் நியாயம்?....”
யேசாஜி
கங்க் பெருமூச்சு விட்டான். சற்று முன் அந்த வீரவாள் பற்றிச் சொன்ன போது நண்பனின் முகம்
பிரகாசித்தது இப்போதும் அவன் மனக்கண்ணில் தங்கியிருக்கிறது…..
சிவாஜி
அந்தப் பகுதியில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது தான் ஆதில்ஷாவின் கடிதமும், ஷாஹாஜியின்
கடிதமும் வந்து சேர்ந்தன. ஆதில்ஷா கடுமையான வார்த்தைகளில் சிவாஜியின் செயல்களைக் கண்டித்திருந்தார்.
ராஜத்துரோகம், திருட்டு, கொள்ளை என்ற சொற்களைத் தாராளமாகப் பயன்படுத்தியிருந்த அவர்
அனுமதியில்லாமல் அவன் கைப்பற்றியிருந்த அனைத்தையும் திரும்பவும் ஒப்படைத்து விடும்படியும்
உடனடியாக பீஜாப்பூருக்கு வந்து சேரும்படியும் சொல்லியிருந்தார். ஷாஹாஜியும் மகன் செயல்களைக் கண்டித்து எழுதியதுடன்
கைப்பற்றிய அனைத்தையும் திரும்ப சுல்தானிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரும்படியும்,
திருந்தும்படியும் எழுதியிருந்தார்.
சிவாஜி
அந்தக் கடிதங்களைக் கொண்டு வந்தவர்களிடமே பதில் கடிதங்களை அனுப்பினான். ஆதில்ஷாவைப்
புகழ்ந்து வாழ்த்தி எழுதி விட்டு ”நான் கைப்பற்றியிருக்கும் கோட்டைகள் அனைத்தும் உங்களுக்கு
ஆரம்பத்திலேயே சொந்தமானதல்ல. ஒரு காலத்தில் என் தந்தைக்கும், அகமதுநகர ராஜ்ஜியத்திற்கும்
சொந்தமான அவை எல்லாம் பின்னர் நீங்களும் கைப்பற்றியதும், முகலாயர்கள் மூலம் உடன்படிக்கை
மூலம் பெற்றுக் கொண்டதும் தான். இப்போது நான்
கைப்பற்றிய பின் மட்டும் நீங்கள் அதை ராஜத்துரோகமாகச் சொல்வது வேடிக்கையே அல்லவா? கல்யாண்
பகுதி நிதியும் அப்பகுதிக்கும், சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கும் நன்மை விளையும் வண்ணம்
பயன்படுத்தப்படும். இப்பகுதி மக்களின் பணம், இங்குள்ளவர்களின் நன்மைக்கே பயன்படுத்தப்படுவது
நியாயமும், தர்மமுமே ஒழிய தாங்கள் குறிப்பிட்டது போல திருட்டோ, கொள்ளையோ ஆகாது. இதற்கு
முன் என் தந்தை இங்கு வரிவசூலித்தத் தொகையைப் பெறுவதற்கு ஆள் அனுப்பிய போது கூட இதே
நிலையை நான் எடுத்து அவருக்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறேன். தாங்கள் அழைத்தது போல
எனக்கும் பீஜாப்பூர் வரவும், தங்களுடன் முன்பு போல பல விஷயங்கள் குறித்து அளவளாவவும்
மிகவும் ஆர்வமாகவே இருக்கிறது. அதனால் நான் கைப்பற்றிய பகுதிகளை நானே தலைவனாக நிர்வாகம்
செய்ய அனுமதித்து நீங்கள் அறிவிப்பு வெளியிட்டால் விரைவிலேயே வந்து தங்களைத் தரிசிக்கக்
காத்திருக்கிறேன்.” என்று ஆதில்ஷாவுக்கு எழுதி அனுப்பினான்.
தந்தைக்கு
எழுதிய கடிதத்தில் சிவாஜி சுருக்கமாகச் சொல்லியிருந்தான். “தந்தையே நான் வளர்ந்து பெரியவனாகி
விட்டேன். எது சரி எது தவறு என்பதைச் சிந்திக்கவும், அதன்படி நடக்கவும் நான் அறிவேன்.
மதிப்பிற்குரிய பீஜாப்பூர் சுல்தான் அவர்களுக்கு முறையான விளக்கங்கள் நான் அனுப்பியுள்ளேன்.
எனவே இந்த விஷயத்தில் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை”
பீஜாப்பூர்
மன்னர் தன் பதிலில் மேலும் ஆத்திரமடைந்து ஏதாவது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார் என்பதை
சிவாஜி அறிந்தே இருந்தான். ஏனென்றால் இந்த முறை அவன் நடவடிக்கைகளிலும் சரி அவன் கடிதத்திலும்
சரி சுற்றி வளைக்கும் குழப்பங்கள் எதுவுமில்லை. ஆமாம் அப்படித்தான் நீ முடிந்ததைச்
செய்து கொள் என்ற தொனியே வார்த்தைகளுக்கு இடையே இழைந்தோடியிருக்கிறது. இதைப்படித்து
விட்டு அவர் இனி என்ன செய்யப் போகிறார் பார்ப்போம் என்று சிவாஜி காத்திருந்தான்…
(தொடரும்)
என்.கணேசன்
Sivaji is becoming bolder and bolder. You are developing his character excellently in this novel. Congrats
ReplyDeleteஅந்தக் காலத்து அரசியல் சூழலையும், அதில் சிவாஜி துணிச்சலாக காய் நகர்த்துவதையும் அழகாய் படம் போல் காட்டுகிறீர்கள். வியாழன் தோறும் பரம(ன்) ரகசியம் முதல் இருவேறு உலகம் வரை தொடர்ந்தவள் இப்போது திங்கள் கிழமை மாலை வந்தாலே இந்த நாவலைப் படிக்க பரபரப்பாகி விடுகிறேன்.
ReplyDeletethis is better than all your Books bro... this going to be BIG... waiting for your Shivaji book
ReplyDeleteசிவாஜியின் திட்டங்களும்,செய்கைகளும் பிரமிக்க வைக்கிறது...
ReplyDeleteதான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் சரியான படி திட்டமிட்டு,அதில் வென்றுகாட்டுவதும் அருமை....