Monday, October 1, 2018

சத்ரபதி 40


சிவாஜி தேர்ந்தெடுத்திருந்த இடத்திற்கு சில மணி நேரங்கள் முன்பே தன் படைவீரர்களுடன் போய்ச் சேர்ந்து விட்டான். அங்கு சென்றவுடன் தன் வீரர்களிடம் தன் திட்டத்தை விரிவாக விளக்கினான். யார் யார் எங்கு இருக்க வேண்டும், கல்யாண் படை நெருங்கியவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தான்.

“திட்டத்தைச் செயல்படுத்தும் போது குழப்பமே இருக்கக்கூடாது. முழுத் தெளிவுடன் வேகமாகச் செயல்பட்டால் தான் நாம் வெற்றி அடைய முடியும். சந்தேகம் இருந்தால் இப்போதே கேட்டுக் கொள்ளுங்கள்.”

ஓரிருவர் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டார்கள். பின் இரண்டு குழுக்கள் இருமருங்கு மலைகளிலும் ஏறி பாறைகளின் பின் பதுங்கிக் கொண்டார்கள். மற்ற படைவீரர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டார்கள். ஒரு பிரிவு குறுகலாகப் பாதை துவங்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி மலைச்சரிவான பகுதியில் மறைந்து கொண்டார்கள். வரும் படைவீரர்கள் பாதையின் விளிம்பு வரை வந்து எட்டிப் பார்த்தால் ஒழிய படைவீரர்கள் பதுங்கி இருப்பதை அறிய முடியாது. மற்றொரு பிரிவுப் படைவீரர்கள் குறுகலான பாதையின் முடிவில் பக்கவாட்டில், அகன்ற பகுதியில், மறைவாகக் காத்திருந்தார்கள்.

சிவாஜி ஒரு மலையில் உயரமான பாறை ஒன்றின் பின் மறைவாய்க் காத்திருந்தான். ஒரு மணி நேரம் கழித்து ஒரு குதிரை வீரன் தெரிந்தான். அவன் கையில் பீஜாப்பூர் கொடியை வைத்திருந்தான். பொதுவாக இது போன்ற செல்வப் பேழைகள் கொண்டு செல்லப்படும் போதோ, அரசகுலத்து இளம்பெண்கள் பயணிக்கும் போதோ அவர்களுக்குச் சில நிமிடங்கள் முன்னதாகவே ஒரு வீரன் பயணிப்பது வழக்கம். வழியில் எங்காவது ஆபத்தை அவன் கண்டால் அவன் விசேஷமாக ஏதாவது வகையில் கூக்குரலிட்டு ஆபத்தைப் பின்னால் வருபவர்களுக்கு எச்சரிக்கை செய்வான். பின்னால் வரும் வீரர்கள் முழு எச்சரிக்கையடைந்து விடுவார்கள். செல்வப்பேழைகளுக்கோ, அரச குலத்துப் பெண்மணிகளுக்கோ பாதுகாப்பாக ஒரு வலிமையான படை சூழ்ந்து கொண்டு அரணாகக் காக்க, மற்ற படை வேகமாக ஆபத்தை ஏற்படுத்தக் காத்திருப்பவர்களைத் தாக்கப் பாய்ந்து வரும். அதனால் முன்னால் வரும் வீரன் பெரும்பாலும்  பின்னால் இருப்பவர்களின் பார்வையிலேயே இருக்கும் படியே பயணிப்பான். அவனைத் தாக்கிக் கூக்குரலிடாதபடி கொள்ளையர்கள் அவன் வாயடைக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் அவன் தொலைதூரத்திலும் தங்கள் பார்வைக்குத் தெரியா விட்டால் பயணத்தை நிறுத்தி படைவீரர்களில் ஒருவன் அவனுக்கு என்ன ஆயிற்றென்று பார்க்க முன்னால் விரைந்து செல்வான். இந்த எளிய ஏற்பாடு பெரும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி இருப்பதால் இதை அனைவரும் பின்பற்றினார்கள்.

சிவாஜி முன்னால் வரும் குதிரை வீரனைக் கூர்மையான பார்வையினால் அளந்து விட்டு வேகமாக மலையிலிருந்து இறங்கினான். வரும் குதிரை வீரனின் உடல்வாகு, உயரம் உள்ள தன் வீரன் ஒருவனைச் சுட்டிக் காட்டித் தலையசைத்தான். அந்த வீரன் உடனே குறுகலான பாதையின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு பாறையின் பின் ஓடிச்சென்று ஒளிந்து கொண்டான். 

அந்தக் குறுகலான பாதை ஆரம்பிக்கும் இடம் ஒரு வளைந்து திரும்பும் பாதை. அந்த வளைந்த பாதையில் அந்த முன்னால் குதிரை வீரன் வருகையில் சிறிது தூரம் வரை சற்றுப் பின்னால் வரும் படைவீரர்கள் கண்ணில் அவன் பட முடியாது. மலைப்பாதைகளில் இது போன்ற வளைவுகளில் இது தவிர்க்க முடியாதது.

முன்னால் வரும் குதிரை வீரன் வளைவில் திரும்பியவுடன் மூன்று வீரர்கள் மேல்பகுதி பாறைகளில் இருந்து அவன் மீது லாவகமாகக் குதித்து கீழே தள்ளினார்கள். மூவரில் ஒருவன் குதிரைகளை மிக நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவன். அவன் குதிரை பீதியடைந்து அலறி ஓடி விடாதபடி அதனை நட்புடன் தடவி சமாதானப்படுத்த குதிரை சத்தமில்லாமல் இயல்பாகவே செல்ல ஆரம்பித்தது. வேக வேகமாக அந்தக் குதிரை வீரனின் வாயைப் பொத்தி ஆடைகளைக் களைந்து பாறைக்கருகே முன்பே ஒளிந்து இருக்கும் வீரன் மீது வீச அவன் மின்னல் வேகத்தில் அந்த உடைகளுக்கு மாறிக் கொடியைக் கையில் ஏந்திக் கொண்டு அந்தக் குதிரை மேல் ஏறிக் கொண்டான். இரண்டு நிமிடங்களில் பின்னால் வரும் படைவீரர்கள் வளைவில் திரும்ப ஆரம்பித்த போது தொலைவில் முன்னால் சென்று கொண்டிருப்பது தங்கள் ஆளல்ல என்பது அவர்களுக்குத் தோன்றவே இல்லை. அதே உடையோடு, அதே உடல்வாகோடு, அவர்களது அதே கொடியைப் பிடித்துக் கொண்டு அதே வேகத்தில் சீராக அவன் போய்க் கொண்டிருந்ததால் அவர்களுக்கு சிறிய சந்தேகம் கூட ஏற்பட்டு விடவில்லை.  

அவர்கள் படை காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் அந்த குறுகலான பாதையில் பயணித்தது. முன்னால் செல்லும் வீரர்கள் குறுகலான பாதையில் எல்லையை அடையும் வரை எதுவும் நிகழவில்லை. ஆனால் அது அந்த எல்லையை நெருங்கிய கணம் கடைசி வீரர்கள் கிட்டத்தட்ட அந்த ஆரம்பப் பகுதியைக் கடந்து முழுவதுமாகக் குறுகலான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்ட கணமாகவும் இருந்தது. இந்தக் கணத்தைக் கவனித்து சமிக்ஞை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தவன் மலைப்பகுதிப் பறவை போல் ஓசையெழுப்பினான். அந்த ஓசையும் அப்பகுதிப் பறவை எழுப்பும் ஒலியாகவே தோன்றியதால் கல்யாண் வீரர்கள் அப்போதும் சந்தேகம் கொள்ளவில்லை. அதனால் நடுப்பகுதியில் பாறைகளுக்கு மேல் இருந்து சிவாஜியின் வீரர்கள் அந்தப் பேழைகள் இருக்கும் ரதங்களின் மேல் குதித்த போது அவர்கள் குழப்பத்துடன் அதிர்ந்து போனார்கள்.

நடுப்பகுதியில் வீரர்கள் குதிக்கும் சத்தம் கேட்டு திகைப்புடன் முன்னால் சென்று கொண்டிருந்த வீரர்கள் கவனமும், கடைசியில் வந்து கொண்டிருந்த வீரர்கள் கவனமும் நடுப்பகுதிக்குச் சென்ற அந்தக் கணத்தில் முன்னால் மறைவாக வீரர்களுடன் காத்திருந்த சிவாஜி முன்னால் இருந்து அந்தப் படையைத் தாக்க ஆரம்பித்தான். அதே நேரத்தில் பின்னால் மலைச்சரிவில் காத்திருந்த சிவாஜியின் இன்னொரு பிரிவுப் படைவீரர்கள் பின்னால் வேகமாக வந்து பின் பகுதிப் படையைத் தாக்க ஆரம்பித்தார்கள். இப்படி முன்னாலும், மையத்திலும், பின்னாலும் சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தவுடன் கல்யாண் வீரர்களுக்குச் சுதாரிக்கவே சிறிது நேரம் தேவைப்பட்டது.

முன்பே நிறைய தூரம் பயணித்திருந்த அவர்கள் பயணக்களைப்பில் இருந்ததாலும், சிறிது தூரத்தில் இளைப்பாறும் இடம் என்று தெரிந்து வைத்திருந்ததாலும் அவர்கள் மனம் சிவாஜி எதிர்பார்த்தபடியே சண்டைக்குப் பதிலாக இளைப்பாறவே தயார்நிலையில் இருந்தது. அவர்கள் சுதாரித்து யுத்த மனநிலைக்கு வரும் முன் சிவாஜியின் கை ஓங்கி வீட்டிருந்தது. கல்யாண் வீரர்கள் நிறைய பேர் உயிரிழந்தும் காயப்பட்டும் இருந்தார்கள். ஆனாலும் சுதாரித்த பின் அவர்கள் வீரத்துடனேயே போராடினார்கள். அந்த மலைப்பகுதியின் குறுகலான பகுதியும், சிவாஜி வீரர்களின் கொரில்லா முறைகளும், எல்லாவற்றுக்கும் மேலாக சிவாஜியின் வீரமும் அவர்கள் தாக்குப்பிடிக்க முடியாததாக இருந்தது. சிவாஜி மின்னல் வேகத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து கொண்டிருந்தான். அவன் பாய்ந்த இடங்களில் எல்லாம் மரணமே உறுதி என்றாக இருந்தது. அவன் தனி மனிதனாகத் தோன்றவில்லை. ஏதோ பெரும் சக்தி இயக்கும் எமனாகவே தெரிந்தான். அவன் வீரர்களும் அவன் அந்தச் சக்தியைத் தாராளமாக வினியோகித்தது போல் அவர்களும் உத்வேகமாகப் போராடினார்கள்.

சிவாஜியின் பக்கம் சில வீரர்கள் உயிரிழந்தார்கள். சில வீரர்கள் பெரும் காயமடைந்தார்கள். ஆனால் கல்யாண் படையில் இந்த இழப்பு மும்மடங்காக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் கல்யாண் படைத்தலைவன் தோல்வியை ஒப்புக் கொண்டு வாளைக் கீழே வைத்து சிவாஜி முன் மண்டியிட்டான். அதைக் கண்ட அவர்கள் வீரர்களும் அவனைப் பின்பற்றினார்கள். மண்டியிட்டாலும் அந்தப் படைத்தலைவன் சொல்லிப் பார்த்தான்.

“சிவாஜி. இது எங்கள் செல்வம் அல்ல. பீஜாப்பூர் சுல்தானின் செல்வம். அவர் கஜானாவிற்குப் போக வேண்டிய செல்வத்தை நீ கைப்பற்ற நினைக்கிறாய். அவருடைய சாம்ராஜ்ஜியத்தின் குடிமகனாகிய நீ இப்படிச் செய்வது ராஜத் துரோகம் அதை நினைவில் வைத்துக் கொள்”

சிவாஜி அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “நான் பீஜாப்பூர் சுல்தானின் குடிமகன் அல்ல. இப்பகுதியின் தலைவன் நான். நாளை உன் கல்யாண் பகுதிக்கும் தலைவனாகப் போகிறவன். என் செல்வம் இன்னொரு கஜானாவிற்குச் செல்வதை நான் விரும்பவில்லை வீரனே. இங்கு ஏழைகள் இரண்டு வேளை உணவுக்கே போராடிக் கொண்டிருக்கையில் உன் பீஜாப்பூர் சுல்தான் இங்கு திரட்டிய இந்தச் செல்வத்தில் கட்டிடங்கள் எழுப்பிக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை….”

சிவாஜி சொன்னதில் இருந்த உண்மையை அந்தப் படைத்தலைவனால் மறுக்க முடியவில்லை. பீஜாப்பூர் சுல்தான் முகமது ஆதில்ஷா கட்டிடப்பிரியர். அவர் காலத்தில் பீஜாப்பூரில் கட்டப்பட்ட அழகுக் கட்டிடங்கள் ஏராளம்.  அந்தக் கட்டிடங்களில் காட்டிய அக்கறையை அவர் ஏழைக் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளுக்குக் காட்டவில்லை. ஆனால் அரசனின் தீர்மானத்தைக் கேள்வி கேட்கவோ மறுக்கவோ நீ யார் என்று அந்தப் படைத்தலைவனுக்குக் கேட்கத் தோன்றியது.

ஆனால் சிவாஜி நின்றிருந்த தோரணை ‘இங்கு நானே அரசன்’ என்று சொல்வது போல் அவனுக்குத் தோன்றியது. வார்த்தைகளை விட வலிமையாய் அந்தத் தோரணை மனதில் பதிய படைத்தலைவன் களைப்புடன் பெருமூச்சு விட்டான்…..

(தொடரும்)
என்.கணேசன்

27.9.2018 முதல் 07.10.2018 வரை தேவக்கோட்டையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில்  அரங்கு எண் 61 (ராமகிருஷ்ணா மட அரங்கு)ல் என் நூல்கள் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அங்கு செல்ல முடிந்த வாசகர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும். 

5 comments:

  1. Wow sir! I felt as if I am watching a thrilling hollywood movie.

    ReplyDelete
  2. அருமையான காட்சியமைப்பு. சிவாஜியின் திட்டமும் செயல்படுத்திய விதமும் அற்புதம். வரலாற்று நாவலிலும் நீங்கள் முத்திரை பதித்து விட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சண்டை நடைபெறும் காட்சியை தத்துரூபமாக நீங்கள் கூறியவிதம் அருமையாக இருந்தது..ஐயா..
    சிவாஜியின் திட்டமும் அருமை...

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete