Thursday, September 20, 2018

இருவேறு உலகம் – 101

மாஸ்டர் சிந்தனைகள் நடந்து முடிந்த நிகழ்வுகளிலேயே தொடர்ந்து இருந்தன. யோசிக்கையில் பல பழைய நிகழ்வுகளுக்குப் புது அர்த்தங்கள் இப்போது தெரிந்தன. சில ஆச்சரிய நிகழ்வுகள் ஏன் நடந்தன என்ற இயல்பான கேள்வி அவை நடந்த சமயங்களில் அவர் மனதில் எழவில்லை. அதனால் அதற்கான பதிலையும் அவர் யோசித்திருக்கவில்லை. இப்போது ஒன்றொன்றாக அவை எழுந்தன. வேற்றுக்கிரகவாசி க்ரிஷைத் தொடர்பு கொண்டது இஸ்ரோவிலேயே சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தது. உமா நாயக் மூலமாக அவர் இயக்கத்தின் மிக முக்கிய உறுப்பினர்கள் சிலருக்குத் தெரிந்திருந்தது. அந்த உண்மை தெரிந்ததால் தான் அவன் தான் பரஞ்சோதி முனிவர் சொன்ன ‘அன்னிய சக்தியின் கைப்பாவை’ என்ற அனுமானத்திற்கு அவரது இயக்கத்தின் மிக முக்கிய உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் யாரும் அது குறித்து மற்ற பொது உறுப்பினர்களுடன் பேசவோ, விவாதிக்கவோ மாட்டார்கள். அப்படி இருக்கையில் அது குறித்து உறுப்பினர்கள் அனைவரும் அறிந்திருந்தது எப்படி? க்ரிஷை சீடனாக  அவர் ஏற்றுக் கொண்டவுடன் சுரேஷ் சொன்னது நினைவுக்கு வந்தது... “எல்லாருமே க்ரிஷை எதிரி ஸ்தானத்துல வெச்சு தான் பார்க்கறாங்க. நீங்க வாரணாசி போயிருந்த போது இயக்கத்து ஆள்களைக் கூட்டி விஸ்வம் ஐயா குருவோட மரணத்தைச் சொன்ன போது எல்லாருமே கொதிச்சுப் போனதை நான் என் கண்ணால பார்த்தேன். எதிரியின் ஆளை நீங்க சிஷ்யனாய் ஏத்துகிட்டதை அவங்களால ஏத்துக்க முடியுமான்னு பயப்படறேன்…..”

க்ரிஷ் பற்றியே அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத போது எல்லாருமே அறிந்திருந்ததும், க்ரிஷை எதிரி ஸ்தானத்தில் வைத்து பார்க்க ஆரம்பித்திருந்ததும் எப்படி? அது மட்டுமல்ல, அப்படி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் க்ரிஷை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டதைத் தெரிவிக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்ன அவர் அந்தத் தகவலைக் கூட்டத்தில் தெரிவித்து ஏன் ஏற்றுக் கொண்டேன் என்ற காரணத்தையும் சொல்ல எண்ணி இருந்தார். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு முன்பே அவர் க்ரிஷை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டிருந்தது தெரிந்திருந்தது. அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போதே அந்தத் தகவலையும் சேர்த்து சொல்லியிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தைக் கூட்ட விஸ்வத்திடம் தான் சொல்லியிருந்தார். அதே போல் குரு மரணத்தைக் கூட்டம் கூட்டித்  தெரிவித்ததும் விஸ்வம் தான்.  அதைச்   சொல்லும் போது வேற்றுக்கிரகவாசி தான் எதிரி, க்ரிஷ் அவனது ஆள் என்பதைச் சேர்த்தும் அவர் தான் தெரிவித்திருக்கிறார்.

இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரியும் இந்த விஷயங்கள் முன்பு சின்ன சந்தேகத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கவில்லை. விஸ்வம் என்ற மனிதனுடன் நெருங்கிப் பழகும் போது கூட அந்தக் கபட அலைகளை அவரால் அடையாளம் கண்டுபிடித்திருக்க முடியவில்லை. இயல்பான விழிப்புணர்வும் வேலை செய்யவில்லை, கற்ற வித்தைகளும் இந்த விஷயத்தில் கைகொடுக்கவில்லை…… மாஸ்டருக்குத் தன் மீதே வெறுப்பாக இருந்தது.

நடந்தவற்றை எல்லாம் இயக்கத்திற்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதைத் தெரிவித்து விட்டு அவமானத்துடன் தலைமைப் பொறுப்பை விட்டு விலகுவது தவிர வேறு வழியில்லை. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்தக் கறையைப் போக்க முடியாது என்று மனம் கதறியது. இயக்கத்தின் அவசரப் பொதுக்கூட்டத்தை உடனே நடத்த ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.


செந்தில்நாதன் ஹரிணி கடத்தல் சம்பந்தமாக இதுவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து விசாரணைத் தகவல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தார். அவள் காணாமல் போன அன்று கல்லூரி வாசலில் சிலர் பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு அவளை யாரும் பார்க்கவில்லை. ஹரிணி கல்லூரியில் இருந்து வீடு போகும் வழித் தெருக்கள் எல்லாம் என்னேரமும் ஆள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இருக்கக்கூடியவை. அந்த வழித் தெருக்கள் அனைத்திலும் போலீஸ் அதிகாரிகள் விரிவாகவே விசாரித்திருக்கிறார்கள். விசாரித்ததில் யாரும் ஒரு பெண் கடத்தல் சம்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகப்படும்படியாக அந்த குறிப்பிட்ட மாலைப் பொழுதில் எதுவும் அசாதாரணமாய் பார்க்கவில்லை என்றே சொல்லி இருக்கிறார்கள். அவளது நெருங்கிய தோழிகள், நண்பர்கள், உறவினர்கள் எல்லாரையுமே கூட விசாரித்திருக்கிறார்கள். ஒருவேளை வீட்டுக்குப் போகாமல் அங்கே எங்காவது போயிருக்கலாம், போகிற வழியில் கடத்தல் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்திருக்கிறார்கள். அதுவும் இல்லை, கடத்தல்காரர்களிடமிருந்து போனும் வரவில்லை என்றான பிறகு இனி எப்படி விசாரணையைத் தொடர்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

செந்தில்நாதன் கிரிஜா, க்ரிஷ், ஹரிணியின் தோழிகள் ஆகியோரிடம் கேட்டதில் அவள் எப்போதும் போகும் பாதையை அடிக்கடி மாற்றுவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. செந்தில்நாதனே அந்த நேரத்தில் அந்த வழியில் போய்ப் பார்த்தார். போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. அந்தப் பாதைத் தெருக்களில் அவள் காணாமல் போன மாலையில் பெண் கடத்தல் போன்ற அசாதாரண சம்பவம் நடக்கவில்லை என்று விசாரித்து அறிந்ததில்  தவறிருக்க வாய்ப்பில்லை. ஆனால் வேறு எதாவது வித்தியாசமாகவோ, அசாதாரணமாகவோ நடந்திருக்கலாம். அதன் மறைவில் இந்தக் கடத்தல் நடந்திருக்கலாம்….. அதை விசாரிக்க ஆரம்பித்தார்.

இது போன்ற நிகழ்வுகளை விரிவாக முழுவதுமாகக் காண நேரமும், சூழலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. அப்படி இருக்கக்கூடிய ரகத்தினர் சிலர் உண்டு. தெருவோரப் பிச்சைக்காரர்கள், செருப்பு தைப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், டீக்கடையில் ஒரு டீ குடித்து விட்டு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்து பேப்பர் அனைத்தையும் படித்து, வந்து போகிறவர்களிடம் சினிமா, அரசியல் எல்லாம் பேசி அலசி விட்டுப் போகும் வேறு வேலையில்லாதவர்கள்.... செந்தில்நாதன் அவர்களை விசாரிக்க ஆரம்பித்தார். ஒரு பிச்சைக்காரன் சொன்னான். “நீல்கிரிஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு முன்னாடி ஒரு பைக்கும் ஆட்டோவும் மோதி கொஞ்ச நேரத்துக்கு டிராபிக் ஜாம் ஆயிடுச்சு சார். சண்டையின்னா சண்டை அப்படி சண்டை….. கடைசில சமாதானம் ஆயிப் போனாங்க. அப்பறம் தான் டிராபிக் சரியாச்சு…..”

செந்தில்நாதன் அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர் செக்யூரிட்டியிடம் விசாரித்தார். “ஆமா சார். அன்னிக்கு சாய்ங்காலம் டிராபிக் ஜாம் இங்க ஆச்சு. தப்பு பைக் காரன் மேல தான். அவன் சிக்னல் குடுக்காம திடீர்னு க்ராஸ் பண்ணிட்டான் சார்….. ஆனா தப்ப ஒத்துக்க மாட்டேங்கிறான். கடசில பஞ்சாயத்து பண்ணி எல்லாரும் சேர்ந்து ப்ரச்சனய முடிச்சு வெச்சாங்க….. என்ன சார்?... அந்த டைம்ல டூ வீலர்ஸ் கொஞ்ச பேர் அட்ஜஸ்ட் பண்ணி எப்படியோ சைடுல போனாங்க…. சில பேர் பக்கத்து தெரு வழியா போய் சுத்தி மெய்ன் ரோட்டுக்குப் போனாங்க…..”

செந்தில்நாதன் பக்கத்து தெருவுக்குப் போனார். சின்ன தெரு. பெரிய வாகனங்கள் செல்வது ஒரு பெரிய மரம் கால்பாகத் தெருவை அடைத்து நின்றதால் சற்று சிரமம் தான். இரண்டு சக்கர வாகனங்கள் ஆட்டோரிக்‌ஷா எல்லாம் போகலாம்… அந்த வழியாகப் போய்ப் பார்த்தார். அந்தத் தெருவிலும், குறுக்குத் தெருக்களிலும் அதிக ஆள்நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லை. ஹரிணி போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்தத் தெருவில் திரும்பி இருக்க வேண்டும். அவள் சென்றவுடன் பெரிய வாகனம் ஏதாவது பின்னால் வந்து அந்த மரம் அருகே வந்து தெருவை அடைத்து நின்றால் மற்ற வாகனங்கள் அவளைத் தொடர்ந்து வந்திருக்க முடியாது. குறுக்குத் தெருவில் முன்பே கடத்தல்காரர்கள் காத்திருந்தால் அவளை வழிமறித்து கடத்திச் சென்றிருப்பது சுலபம். அவளைக் கடத்திய பின் மெல்ல அவள் பின் வந்த பெரிய வாகனம் கஷ்டப்பட்டு கடப்பது போலக் கடந்திருக்கும். யாருக்கும் எந்த சந்தேகமும் தோன்றியிருக்காது…. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று செந்தில்நாதன் யூகித்தார்.


புதுடெல்லி உயரதிகாரியின் செல்போன் அலறியது. அழைப்பது யாரென்று பார்த்தான். அந்த ரகசிய மனிதன். ஏனோ மனம் திகிலடைந்தது. கூடவே வருமானம் என்றும் மனம் சொன்னது. உயரதிகாரி பேசினான். “ஹலோ”

அந்த மறக்க முடியாத குரல் சொன்னது. “போன தடவை புனே போன போது இஸ்ரோ டைரக்டர் நாசா விஞ்ஞானிகளிடம் பேசி பூமியில் சமீபத்தில் அபூர்வ சக்தி அலைகள் ஊடுருவியதைப் பற்றிச் சொன்னது நினைவிருக்கிறதா?”

உயரதிகாரிக்கு நினைவில்லை. ஆனால் நினைவில்லை என்றால் கிடைக்கின்ற பணம் குறையலாம். அதனால் நினைவிருப்பதாக அவன் சொன்னான்.

“நல்லது. நீங்கள் அந்த டைரக்டருக்குப் போன் செய்து மேற்கொண்டு அந்த அபூர்வ சக்தி அலைகள் பற்றி நாசாவில் இருந்து என்ன புதிய தகவல் வந்திருக்கின்றது என்று கேட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதைச் சொல்லுங்கள். அவசரம்”

(தொடரும்)
என்.கணேசன் 

2 comments:

  1. மாஸ்டர் சிந்தனை ஓட்டத்தின் விதமும்...அவர் கண்டறியும் விதமும் சூப்பார்...
    செந்திலநாதன் கண்டுபிடிக்கும் விதமும்ம்.... அருமை...

    ReplyDelete