பஜ கோவிந்தத்தில் ஆதிசங்கரர் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று
கூறுவது போல திரும்பத் திரும்பப் பிறந்தும், இறந்தும் எல்லையில்லா இன்ப துன்ப அலைகளில்
சிக்கி மனிதன் அலைக்கழிக்கப் படுகிறான். ஒரேயடியாக
இதெல்லாம் போதும் என்று அவனுக்குத் தோன்றுவதில்லை. காரணம் துன்பங்கள் மட்டுமல்லாமல்
இடையிடையில் இன்பங்களும் தலையைக் காட்டுகின்றன. விட்டால் இரண்டையும் தான் விட்டொழிக்க
வேண்டும். சராசரி மனிதனோ துன்பங்களை மட்டும் தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். இன்பங்கள்
அவனுக்குத் தேவைப்படுகின்றன. நாணயத்தின் ஒரு பக்கம் மட்டும் வேண்டும் என்று ஆசைப்படுவது
எவ்வளவு அறியாமையோ அதற்கிணையான அறியாமை இன்பங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று
ஆசைப்படுவது. ஆனால் மாயை மனிதனை ஆட்டிப் படைக்கையில் அப்படி ஆசைப்படுவதில் எதிலும்
தவறு இருப்பதாக அவனுக்குத் தெரிவதில்லை.
பிறப்பு
இறப்பு என்னும் இந்தச் சக்கரவட்டத்திலிருந்து ஒருவன் விடுபடுவது எப்படி? இந்தக் கேள்விக்கு
கீதையின் 13 ஆம் அத்தியாயத்தில் அடுத்து வரும் சுலோகங்களில் பதில் அளிக்கிறார்.
பிரகிருதி,
புருஷன் (ஆத்மா) இவை இரண்டுமே அநாதி என்று அறிவாயாக. வேறுபாடுகளும், குணங்களும் பிரகிருதியிலிருந்தே
உண்டானவை என்று அறிந்து கொள்.
சரீரத்தையும்,
புலன்களையும் செயல்படச் செய்வதற்கு பிரகிருதியே காரணம். சுகதுக்கங்களை அனுபவிக்கச்
செய்வதற்குக் காரணம் புருஷனே (ஜீவாத்மா).
புருஷன்
(ஜீவாத்மா) பிரகிருதியில் நின்று பிரகிருதியால் உண்டாகும் குணங்களை அனுபவிக்கிறான்.
அந்தக் குணங்களில் அவன் வைக்கும் பற்றுதலே நல்லதும், தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்குக்
காரணமாகிறது.
இந்த
தேகத்தினுள் உள்ள உயர்ந்த புருஷனை, அருகிலிருந்து பார்க்கும் சாட்சி, அனுமதியளிப்பவன்,
தாங்குபவன், ஆள்பவன், பரமாத்மா என்று பலவிதமாகச் சொல்கிறார்கள்.
எவனொருவன்,
புருஷனையும், பிரகிருதியையும், குணங்களையும் நன்றாகத் தெரிந்து கொள்கிறானோ அவன் எந்த
நிலையிலிருந்தாலும் மறுபடியும் பிறப்பதில்லை.
முன்பே
நம் தேகம் க்ஷேத்ரம் என்றும் நம் தேகத்தை இயக்கும் ஆத்மா க்ஷேத்ரக்ஞன் என்றும் ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப்
பார்த்தோம். உலகின் வஸ்துக்கள் எல்லாம் க்ஷேத்ரம். வஸ்துக்களை இயக்கும் அறிவு க்ஷேத்ரக்ஞன். இரண்டும் இணைவதாலேயே எல்லா
இயக்கங்களும், எல்லா நிகழ்வுகளும், உயிரோட்டமுள்ள வாழ்க்கையும் சாத்தியமாகின்றன என்றும்
பார்த்தோம். இந்தச் சுலோகங்களில் அதே க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் பதங்களுக்குப் பதிலாக பிரகிருதி, புருஷன் என்ற பதங்களைப்
பயன்படுத்துகிறார்.
குணங்களும்,
பற்றுக்களும் இல்லாத ஆத்மா பிரகிருதியில் உள்ள குணங்களைப் பெற்று அதைத் தன்னுடையதாக
பாவித்து விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகி, நல்வினை, தீவினைகள் ஆற்றி அதன் பலனாக அதற்கேற்ற
பிறப்புகளை எடுக்கிறது. ஆத்மா தன்னுடைய இயல்பை மறந்து வேறொன்றின் இயல்பைத் தனதாக்கிக்
கொள்ளும் போது ஜீவாத்மாவாகச் சொல்கிறோம்.
ஜீவாத்மாவின்
பிரச்னையே உடலையும், உடல் சார்ந்த விஷயங்களையும் தனதாகப் பாவிப்பது தான். இழக்கவோ,
பெறவோ எதுவுமில்லாத ஆத்மா ஜீவாத்மாவாகப் பாவித்துக் கொள்ளும் போது இழப்பதாகத் துக்கமடைகிறது.
பெறுவதாக மகிழ்ச்சி அடைகிறது. பல முறை கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் குறிப்பிட்டது போல எதையாவது
பெறுகையில் சந்தோஷப்பட்டால் இழக்கையில் துக்கமடைவதைத் தவிர்க்க முடியாது அல்லவா? விருப்பு
வெறுப்புகளைச் சேர்த்துக் கொள்கையில் செயல்களும் அதற்கேற்றாற்போல் அமைந்து விடுகிறது.
அப்படிப்பட்ட செயல்களைப் புரிந்தபின் அதற்கேற்ற விளைவுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது.
அந்த விளைவுகள் முடிவதற்கு முன்பே மறுபடி பலப்பல வினைகள் விதைக்கிறோம்.. விளைவுகள்….
விளைவுகள்…. விளைவுகள்…. அதற்கேற்ற பிறப்புகள், இறப்புகள்.
ஆனால்
எத்தனை தான் தனது இயல்பை மறந்து உடலையே தான் என்று ஜீவாத்மா மயங்கினாலும், ஆத்மா அல்லது
பரமாத்மா அவனுள் அனைத்துக்கும் சாட்சியாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் அனுமதி
பெற்ற பின்னரே அனைத்தும் செய்யப்படுகின்றன. அணுவிலிருந்து அண்டம் வரை அதுவே அனைத்தையும்
தாங்குகிறது. அதுவே அனைத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட
உயர்ந்த பரமாத்மாவின் அம்சமான ஜீவாத்மா தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அறியாமையால்
பிறந்து, இறந்து, மறுபடி பிறந்து அனுபவிக்கும் இந்தச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டுமானால்
முதலில் அறியாமையிலிருந்து தப்பிக்க வேண்டும். உண்மையை அறிந்து உணர்ந்து அதில் நிலைக்க
வேண்டும். பிரகிருதி அல்லது க்ஷேத்ரம், புருஷன் அல்லது ஆத்மா, குணங்கள் தோன்றுகிற விதம்,
அதன் காரணம், அதன் விளைவுகள் பற்றிய முழுமையான ஞானம் பெற வேண்டும்.
அந்த
நிலைத்த ஞானம் பெற்று விட்டால், பிறந்து இறக்கும் உடலிலும், தோன்றி மறையும் குணங்களிலும்
தன்னை அடையாளப்படுத்திக் கொள்தல் நின்று போகும். அது நின்று போனால் செயல்கள் புரிந்தாலும்
அவை கர்மயோகியின் விருப்பு வெறுப்பற்ற செயல்களாகவே இருக்கும். அதன் பலன்களில் செயல்புரிபவனுக்குப்
பாத்தியம் இல்லை. வினைப் பயன் இல்லாத போது பிறவிகளில் சிக்கக் காரணம் இல்லாமல் போகிறது.
பிறப்பு, இறப்புச் சங்கிலி அறுந்து போகிறது. இப்படிக் கணிதக் கோட்பாடு போல வழிகளை வரிசைப்படுத்தி
வாழ்க்கைக் கணக்கிற்கு விடை கூறுகிறது பகவத் கீதை.
பாதை
நீளும்….
என்.கணேசன்
அருமை
ReplyDeleteஇதை பற்றி ஏற்கனவே கூறி இருந்தாலும்...வேறு ஒரு கோணத்தில் இருந்து, வேறு விதமாக கிருஷ்ணர் கூறுவது... "அறியாமையை ஏன் அழிக்க வேண்டும்?" என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது...
ReplyDeleteஐயா பிரகிருதி என்றால் என்ன என்று தெரியவில்லை? எளிய தமிழில் சொல்ல இயலுமா ? நன்றி.
ReplyDeleteமுழுமுதற்பொருள், மூலப்பொருள், எதுவும் உருவாவதற்கு முன் இருக்கும் நிலைப்பொருள்.
Delete