Monday, August 20, 2018

சத்ரபதி – 34


ற்றும் எதிர்பாராத விதமாய் நள்ளிரவு வேளையில் சிவாஜி அங்கே வந்தது பாஜி மொஹிடேயுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. வந்து நின்றவன் எமனாகவே அவன் கண்களுக்குத் தோன்றினான். பாஜி மொஹிடே பேச வாயைத் திறந்தான். ஆனால் நாக்கு நகரவில்லை. வெளியே அவன் காவலாளிகள் என்ன ஆனார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. சிவாஜி பேச வந்திருக்கிறானா இல்லை அவனைக் கொல்ல வந்திருக்கிறானா என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. பீஜாப்பூரில் ஒரு கசாப்புக்காரன் கழுத்து கண நேரத்தில் பறந்து போன நிகழ்வு ஏனோ இப்போது வந்து தொலைத்தது. மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பே எதைப் பற்றியும் யோசிக்காமல் பட்டப்பகலில் அன்னிய மண்ணில் ஒருவனை வெட்டிச் சாய்த்தவன் இப்போது இங்கு என்ன செய்ய மாட்டான் என்று எண்ணிய போது வயிற்றைக் கலக்கியது. கஷ்டப்பட்டு சுதாரித்துக் கொண்டாலும் குரல் பலவீனமாகத் தான் வெளிவந்தது. “என்ன சிவாஜி திடீர் என்று….”

சிவாஜி அவர் கட்டிலுக்கு அருகே இருந்த ஆசனத்தை மேலும் நெருக்கமாக இழுத்து அதில் வெகு இயல்பாக அமர்ந்தான். “என்ன செய்வது மாமா? ஆள் அனுப்பி வரச் சொன்னால் வர மறுக்கிறீர்கள். நேரில் வராவிட்டாலும் பரவாயில்லை தருவதையாவது தாருங்கள் என்று கேட்டால் தரவும் மறுக்கிறீர்கள். மருமகனை நேரில் பார்க்க ஆசைப்படுகிறீர்கள் என்று மட்டும் புரிந்தது. அதற்கு மேல் தாமதிக்கவில்லை. உடனே கிளம்பி வந்து விட்டேன்.”

கோபக்காரன் உடனடியாக மேலே பாயவில்லை என்றானதும் பாஜி மொஹிடே சிறிது தைரியம் பெற்றான். ஆனாலும் எச்சரிக்கையுடனே தான் பேசினான். “நான் சொன்னதில் தவறு எதாவது இருக்கிறதா சிவாஜி”

“உங்கள் மீது தவறேயில்லை மாமா. நானே நேரடியாக வந்து இப்போதைய நிலைமையைத் தங்களுக்கு விளக்கியிருக்க வேண்டும். நான் நீங்களாகப் புரிந்து கொள்வீர்கள் என்றெண்ணி சற்று அலட்சியமாக இருந்து விட்டேன். அது என் தவறு தான்.”

“என்ன இப்போதைய நிலைமை…..?” பாஜி மொஹிடே மெல்ல சந்தேகத்துடன் கேட்டான்.

“ஒரு தந்தையின் வயோதிக காலத்தில் பிள்ளைகள் அவருடைய சுமைகளை சுமந்து கொண்டு அவரை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்பதல்லவா பிள்ளைகளின் தர்மம். அந்த வகையில் இந்தப் பகுதிகளின் நிர்வாகச்சுமையை தொடர்ந்து அவர் மேல் திணிக்க நான் விரும்பவில்லை மாமா. அதனால் இந்த நிர்வாகத்தை நானே அவரிடம் இருந்து எடுத்துக் கொண்டு விட்டேன். இப்போது இங்கே நான் தான் தலைவன்…..”

அலட்டாமல் சிவாஜி சொன்னது பாஜி மொஹிடேயின் அடிவயிற்றைக் கலக்கியது. “உன் தந்தையின் அனுமதி?”  

“அன்பின் காரணமாக அவராக அனுமதிக்க மாட்டார் என்பதை நான் அறிவேன் மாமா. இளவயதிலேயே கூடுதல் பாரத்தை நான் ஏற்பதை அவர் அனுமதிக்க விரும்ப மாட்டார். ஆனாலும் கர்நாடக பாரத்தோடு தொலைவில் இருக்கும் மராட்டிய பாரமும் அவர் சுமப்பதை நான் விரும்பவில்லை….”

பாஜி மொஹிடே சொன்னான். “ஆனால் அங்கே உன் சகோதரன் உன்னை விட மூத்தவனாக இருந்த போதும் இந்த வேலையில் இறங்கவில்லை. யோசித்துப் பார் சிவாஜி”

“நான் அவனுக்கு அறிவுரை வழங்க முடியாது மாமா. அது நன்றாகவும் இருக்காது. தந்தையின் நிழலிலேயே இருக்கும் அவன் அவரைச் சார்ந்தே வாழ்ந்து பழகி விட்டான். என்ன செய்வது?”

பாஜி மொஹிடே ஏளனம் பேசும் இவனிடம் பேசிப் பலனில்லை என்று முடிவுக்கு வந்து வெளிப்படையாகவே சொன்னான். “என்னைப் பொருத்த வரை உன் தந்தை தான் என் தலைவர். அவர் சொன்னால் தான் எதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். என்னை மன்னித்து விடு சிவாஜி”

“மன்னிப்பு என்பது பெரிய வார்த்தை மாமா. இந்தச் சிறுவனிடம் நீங்கள் அதைக் கேட்பது மனவருத்தம் அளிக்கிறது. நீங்கள் வெளிப்படையாகப் பேசியதற்கு நன்றி. நானும் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். இது என் பூமி. இதை இப்போது ஆள்பவன் நான் தான். என்னை ஏற்றுக் கொள்ளாதவர்களை நானும் ஏற்றுக் கொள்ள முடியாது…..” சொல்கையில் குரல் சற்றும் உயரவில்லை என்றாலும் சிவாஜியின் கண்களில் எரிந்த தீப்பந்தங்கள் பேரபாயத்தை பாஜி மொஹிடேயிற்கு உணர்த்தின.

இனி என்ன இவன் செய்வானோ என்கிற அச்சம் ஆட்கொள்ள தன்னையும் அறியாமல் பாஜி மொஹிடே நடுங்கினான். அதற்கேற்றாற் போல் சிவாஜி அமைதியாகச் சொன்னான். “தலைமைக்கு எதிராகச் செயல்படுவதும், உத்தரவை மதிக்காமல் இருப்பதும் மரண தண்டனை வரை விதிக்கக் கூடிய குற்றங்கள் என்றாலும் நான் அப்படி தண்டனை வழங்குபவனல்ல மாமா பயப்படாதீர்கள்.  உங்களை இப்பகுதியின் நிர்வாகப் பணியிலிருந்து விடுவிக்கிறேன். நீங்கள் உங்கள் தலைவரிடம் திரும்பிப் போக அனுமதிக்கிறேன். நீங்கள் உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு நாளை அதிகாலையிலேயே நீங்கள் கிளம்பலாம். உங்களுடன் உங்களுக்கு வேண்டியவர்களை, உடன் வர விருப்பமிருந்தால் அழைத்துச் செல்லவும் எனக்கு ஆட்சேபணை இல்லை….”

சிவாஜி முடிவாகச் சொல்லி விட்டு எழுந்தான். ஆத்திரத்தின் எல்லைக்கே போனாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் பாஜி மொஹிடே தவித்தான். சிவாஜியின் இடுப்பில் இருந்த குறுவாள் அவனை அதிகப்பிரசங்கித்தனமாய் எதையும் செய்ய விடாமல் தடுத்தது.

சிவாஜி அழைத்தான். “யாரங்கே?”

சிவாஜியின் வீரர்கள் பத்து பேர் உள்ளே நுழைந்தார்கள். சிவாஜி சொன்னான். “மாமா நாளை அதிகாலையிலேயே கர்னாடகத்திற்குப் பயணம் செய்யவிருக்கிறார். அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்து தாருங்கள்”

சிவாஜி சொல்லி விட்டுப் போய் விட்டான்.  இந்த மாளிகையும் சுற்றியுள்ள பகுதிகளும் சிவாஜியின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதென்பது பாஜி மொஹிடேயிற்குப் புரிந்தது. வேறு வழியில்லாமல் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு பாஜி மொஹிடே கிளம்பினான். அவனுடன் பீஜாப்பூர் ஆட்கள் இருபத்தைந்து பேர் கிளம்பினார்கள். மற்றவர்கள் அனைவரும் சிவாஜியின் தலைமையை ஏற்று அங்கேயே தங்கி விட்டார்கள்.

சுபா பகுதியை விட்டு குதிரையில் வெளியேறிய போது உயிர் பிழைத்ததே பெரிய காரியம் என்று பாஜி மொஹிடேயிற்குத் தோன்றினாலும் கர்னாடகம் நோக்கிச் செல்லச் செல்ல ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே போனது. ஆண்ட பகுதியை விட்டு ஆண்டியைப் போல் வெளியேறும் அவலம் தனக்கு நேர்ந்து விட்டதே என்று கோபம் கலந்த சோகத்தீயில் பொசுங்கிக் கொண்டே போனான்.

பெங்களூரை அடைந்து தன் அத்தனை ஆத்திரத்தையும் ஷாஹாஜி முன் கொட்டிய பாஜி மொஹிடே அவரிடமும் ஆத்திரத்தை எதிர்பார்த்தான். ஆனால் ஷாஹாஜி அமைதியாக வரிவசூலிக்கச் சென்ற ஆட்களிடம் சிவாஜி சொன்னதைத் தெரிவித்தார். ”என் ஆட்களிடமே அப்படிச் சொன்னவன் உன்னை உயிரோடு அனுப்பியதே பெரிது என்று நினைக்கிறேன்.”

“ஆனாலும் நீங்கள் ஆத்திரமடையாதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்று பாஜி மொஹிடே பொங்கினான்.

“நீயும் ஆத்திரமடைந்தாய். என்ன பலன்? நானும் ஆத்திரமடைந்து என்ன பலன் காணப்போகிறேன். யோசித்துப் பார் பாஜி.  சுல்தானையே மதிக்காதவன் நம்மை எங்கே மதிக்கப் போகிறான். தாதாஜி இருந்த வரை அவன் அடங்கி இருந்தான். அப்போதே வெளிப்பகுதிகளில் தன்னிச்சைப் படியே நடந்து கொண்டான் என்றாலும் அவர் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் அடங்கியே இருந்தான். அதுவும் அவனால் முடியாமல் அல்ல. ஆசிரியரின் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் அவருக்கு எதிராக இயங்காமல் அவனைத் தடுத்தது…..”

இப்போதும் மகனின் புகழே பாடும் ஷாஹாஜி மீதும் பாஜி மொஹிடேயிற்கு ஆத்திரம் வந்தது. உடனே சொன்னான். “ஆசிரியர் மேல் இருந்த மதிப்பில் சிறு துளியாவது தந்தை மேல் அவனுக்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”

ஷாஹாஜி அதற்கும் கோபமோ, பாதிப்போ அடையாமல் அமைதியாகவே சொன்னார். “அவன் ஆசிரியர் அவனுக்குச் செய்ததில் சிறு அளவாவது நான் அவனுக்குச் செய்திருந்தால் அவன் எனக்கும் அடங்கி இருந்திருக்கலாம். என்ன செய்வது பாஜி. எல்லாம் விதி….”

பாஜி மொஹிடே திகைப்புடன் கேட்டான். “அப்படியானால் அவனை அவன் விருப்பப்படியே விட்டு விடுவீர்களா? அதை அனுமதிக்கிறீர்களா? உங்களுக்கு இதில் வருத்தமே இல்லையா?”

“பிள்ளைகள் வளர்ந்தவுடன் அவர்கள் விருப்பப்படியே நடந்து கொள்கிறார்கள். எல்லாவற்றையும் அவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள். எதற்கும் நம் அனுமதியும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களுடன் யுத்தமா செய்ய முடியும்? அப்படியே செய்தாலும் யார் தோற்றாலும் வலிப்பது நமக்கே அல்லவா? உனக்கு இப்போது நான் சொல்வது எதுவும் புரியாது பாஜி. உன் குழந்தைகள் வளர்ந்து பெரிதான பிறகு புரியும்”

ஆத்திரம் தாங்காமல் எதுவும் சொல்ல முடியாமல் அங்கேயிருந்து வேகமாக பாஜி மொஹிடே வெளியேறினான். அவன் கண்ணிலிருந்து மறைந்த பின்னர் ஷாஹாஜி புன்னகைத்தார். ’மகன் வளர்ந்து விட்டான்….!’

(தொடரும்)
என்.கணேசன் 

7 comments:

  1. The silent understanding between the son and father is marvelous. Nice update sir.

    ReplyDelete
  2. சிவாஜி பாஜி மொஹிடேயைக் கையாளும் விதம் அருமை. ஷாஹாஜி அதை எடுத்துக் கொள்ளும் விதமும் அருமை. கண்முன்னே காட்சிகள் காண வைக்கிறீர்கள் கணேசன் சார். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

    ReplyDelete
  4. How old was
    Sivaji during this chain of events
    ?

    ReplyDelete
  5. சிவாஜி ...பாஜிமொஹிடேயை ...அனுப்பிய விதமும்...ஷாஹாஜி மகனுக்கு ஆதரவாக செயல்படும் விதமும் அருமை...

    ReplyDelete