Thursday, June 21, 2018

இருவேறு உலகம் – 88


மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை எல்லாம் முழு மனதுடன் முறையாகச் செய்து விட்டு மானசீகமாகவும் உயர் உணர்வு நிலைக்குச் சென்று அந்த நிலையிலேயே அமைதியாகச் சில நிமிடங்கள் க்ரிஷ் தங்கினான். எல்லாவற்றையும் உருவாக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்ல மகாசக்தியின் ஒரு அம்சம் என்று தன்னைத் திடமாக நினைக்க கூடுதல் முயற்சி எதுவும் அந்த நிலையில் அவனுக்குத் தேவைப்படவில்லை. அந்த பாவனையிலேயே சிறிது நேரம் இருந்தவன் மெல்ல தன் கவனத்தை எதிரியைப் பார்த்த மனக்காட்சியில் திருப்பினான்.

எதிரியைப் பார்த்த மனக்காட்சியில் எதிரிக்கு முன் பார்த்த பாழடைந்த காளி கோயிலில் இருந்து  க்ரிஷ் தன் மனத்திரைக்குக் காட்சியைக் கொண்டு வந்தான். இருட்டினூடே தெரிந்த ஒரு பாழடைந்த கோயில்..... உள்ளே அரைகுறை வெளிச்சத்தில் கோரமான தெரிந்த பத்ரகாளி சிலை..... உக்கிரமாகத் தெரிந் பத்ரகாளியின் நெருப்பு விழிகள் அசைவு... எட்டு கைகள்...   லக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி, . இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம்.... உடுக்கை சத்தம் ..... தாளலயத்துடன் காளியின் நடனம்....  அவளுடன் சேர்ந்து அண்டசராசரங்களே ஆடுவது போல் உணர்ந்தது... ஒவ்வொரு அசைவிலும் பிரம்மாண்ட அழகைப் பார்த்தது. எல்லாவற்றையும் மறுபடி நுணுக்கமாக உணர்ந்து க்ரிஷ் பார்த்தான். முன்பே பதிவான காணொளி மீண்டும் மறு ஒளிபரப்பு ஆவது போல் தானாகவே காட்சி மனத்திரையில் ஓடியது.  திடீரென்று உடுக்கை சத்தம் நின்று காளி மறுபடியும் சிலையானாள். மயான அமைதி நிலவ ஆரம்பித்தது. தூரத்தில் கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்தபடி எதிரி தெரிந்தான்….. இருட்டில் நின்றிருந்தான். க்ரிஷ் தன் முழுக்கவனத்தையும் எதிரியின் மீது வைத்துப் பார்த்தான். எதிரி மெல்ல காளி கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கோயிலை அவன் நெருங்கி உள்ளே நுழையும் முன் திரும்பிப் பார்த்தான்.

முன்பு கண்ட காட்சி இந்த இடத்தில் தான் அறுந்து போனது. ஆனால் இப்போது அந்தக் காட்சியை க்ரிஷ் அறுபட விடவில்லை. உறுதியான மனதுடன் எதிரியை அறிய முயன்றான்….. திரும்பிப் பார்த்த எதிரியின் கண்கள் இருட்டினூடே இப்போது அவனைப் பார்த்தன. அவனும் அந்தக் கண்களையே பார்த்தான். இருவர் விழிகளும் இப்போதே நேராகப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஊடுருவிப் பார்த்துக் கொண்டன. எதிரியின் கண்களில் திகைப்பு தெரிந்தது…. காட்சி அறுந்து போனது…….

பழைய காட்சியைத் தத்ரூபமாய் மீட்டுக் கொண்டு வந்ததோடு கூடுதலாக சில வினாடிகள் அதை நீட்டிக்கவும் முடிந்த திருப்தி க்ரிஷ் மனதில் வந்தது. இனி அந்தக் கண்களை எங்கே பார்த்தாலும் அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்…. அந்தக் கண்களின் திகைப்பு என்ன சொல்ல வருகிறது…. உண்மையாகவே அவனும் க்ரிஷைப் பார்த்திருப்பானோ?....


தியம் சாப்பிடும் போது  பத்மாவதி க்ரிஷைக் கேட்டாள். “ஏண்டா ஹரிணி அப்புறமா வரலை….. நீ ஏதாவது அவ மனசு நோகற மாதிரி செய்துட்டியா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று க்ரிஷ் சொன்னான். உதய் தம்பிக்கு ஆதரவாய்ச் சொல்வது போல் சொன்னான். “இவன் சொல்றது சரி தான்…. இப்ப எல்லாம் அவள் கட்டுப்பாட்டுல தான் எல்லாம். இல்லாட்டி….” குரலைத் தாழ்த்தி “கன்னம் பழுத்துடும்….. மத்ததெல்லாம் அப்புறம் தான்…..” என்று தம்பி காதில் விழுகிற மாதிரி சொன்னான்.

க்ரிஷ் ஒரு கணம் கட்டுப்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு அருகில் அமர்ந்திருந்த உதயின் தொடையை நன்றாகக் கிள்ளினான். “பாவி” என்று சொல்லி தம்பி கையை உடும்புப் பிடி பிடித்து உதய் இறுக்கினான்.

பத்மாவதி திட்டினாள். “அவன் கையை ஒடிச்சுடாதேடா தடியா. முதல்லயே அவன் நோஞ்சானாய் இருக்கான்…..”

“உன் நோஞ்சான் பையன் என்ன எல்லாம் செஞ்சான்னு தெரியுமா?” என்று உதய் தாயிடம் கேட்க க்ரிஷ் அண்ணனை முறைத்தான். “சரி சரி சொல்லலை….” என்று உதய் சிரித்தான்.

பத்மாவதிக்கு ஹரிணி வராமல் இருந்தது இன்னமும் இளைய மகன் மீது சந்தேகத்தையே தக்க வைத்தது. “எதுக்கும் நான் ஹரிணி கிட்டயே கேட்கறேன்” என்று சொன்னவள் அப்போதே ஹரிணியோடு போனில் பேசினாள். “ஏம்மா நீ இந்தப் பக்கமே மூணு நாளா வரலை…. க்ரிஷ் ஒன்னும் வர வேண்டாம்னு சொல்லலையே…. அலட்சியமா நடந்துக்கலையே…… ஓ அப்படியா….. சரி சரி. உன் வேலைகள் எல்லாம் முடிஞ்ச பின்னாடியே வா. இவன் எதாவது அலட்சியம் பண்ணினான்னா மட்டும் என் கிட்ட சொல்லு. இவனோட புஸ்தகங்கள் எல்லாத்தையும் கொளுத்திடறேன்…… அவன் என்ன கோவிச்சுட்டாலும் சரி….. சிரிக்காதம்மா…… நிஜமா தான் சொல்றேன்….. மனுசங்களுக்கும் மேலயா புஸ்தகங்கள்…..”

அவள் பேசி முடித்து இளைய மகனை ஓரக்கண்ணால் பார்த்தாள். புத்தகங்களைக் கொளுத்தி விடுவேன் என்று சொன்ன தாயை எரித்து விடுவது போல் க்ரிஷ் பார்த்தான். அவனுக்கு ஆட்களை எரிப்பது போலத் தான் புத்தகங்களை எரிப்பதும்…..

க்ரிஷ் பக்கம் திரும்பாமல் மும்முரமாக சாப்பிட ஆரம்பித்த பத்மாவதியைச் சீண்டும் விதமாக உதய் தம்பியிடம் சொன்னான். “பார்த்தியாடா…. மருமகள் மேல பாசமழை பொழியறதை……. அவ வந்து அதிகாரம் பண்றப்ப தெரியும்…..”

”அதிகாரம் பண்ணட்டும்டா எனக்கொரு  பொண்ணு இருந்து அவ அதிகாரம் பண்ற மாதிரி நினைச்சுட்டு போறேன்….. அப்படியாவது என் கிட்ட பேசிகிட்டிருப்பாளே…. பசங்க நீங்க ரெண்டு பேரு இருந்து என்னடா பிரயோஜனம்….. அம்மா கிட்ட பேசறதுக்குக் கூட உங்களுக்கு எங்கடா நேரம்….”

உதய் விடவில்லை. மேலும் சீண்டினான். “இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி டயலாக் பேச நல்லா இருக்கும். அவ வந்து அதிகாரம் பண்றப்ப தெரியும்….. அப்ப பேசறதே வேறயா இருக்கும்….”

“இத்தனை வருஷமாயும் காதலிக்க ஒரு பொண்ணு கூட உனக்கு செட் ஆகாததுக்குக் காரணம் இந்த வாய்த்துடுக்கா தாண்டா இருந்திருக்கணும்……”

உதய் ஒரு கணம் வாயடைத்துப் போய் தாயைப் பார்த்து விட்டு பொய்யான ஆத்திரத்துடன் தாய் காதைப் பிடித்து இழுத்தான்.

“நிம்மதியா சாப்பிடவாவது விடுடா தடியா…” என்று பத்மாவதி திட்ட உதய் பொய்க்கோபத்துடன் சாப்பாட்டுத் தட்டைத் தள்ளி விட்டு எழுந்து போய் விட்டான்.

ஒன்றுமே நடக்காதது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்மாவதியிடன் க்ரிஷ் கேட்டான். “என்னம்மா அவன் கோவிச்சுட்டு சாப்பிடாமயே போறான்…..”

“போய் ஊட்டி விட்டா சாப்பிடுவான்… சோம்பேறி… இப்படி எத்தனை தடவை நடந்திருக்கு” என்று பத்மாவதி புன்னகையுடன் சொன்னாள்.


ர்ம மனிதனுக்கு அது முதல் புதிய அனுபவம். பின்னால் இருந்து யாரோ அவனைப் பார்ப்பது போல் இருந்து அவனும் பின்னால் திரும்பிப் பார்த்த போது இரண்டு கண்களை அவனும் நேரடியாகப் பார்க்க முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்குக் காரணம் அந்த சமயத்தில் அவன் ஒரு அறையில் அமர்ந்திருந்ததும் அவனுக்குப் பின்னால் வெறும் சுவர் மட்டுமே இருந்ததும் தான்…..

அந்தக் கண்கள் க்ரிஷின் கண்கள் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. சில நாள் முன் வரை இந்த அமானுஷ்ய சக்திகளைப் பொருத்த வரை ஒரு கற்றுக்குட்டியாக இருந்த க்ரிஷ் இன்று அவன் கண்களை எங்கிருந்தோ காண முடிவது சாதாரண விஷயமல்ல. இது எப்படி நிகழ்ந்தது என்பது அவனுக்குத் தெரியவில்லை. இத்தனை வேகமாக அவன் அந்த அமானுஷ்ய சக்திகளில் தேர்ச்சி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. இருந்தும் ஏதோ ஒரு அலைவரிசையில் இந்த அசாதாரண சம்பவம் நடந்திருக்கிறது. …. இது பயப்படும் அளவு பெரிய விஷயமல்ல…. ஆனாலும் இது கூட நடந்திருக்கக் கூடாது. …

மர்ம மனிதனுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. இவன் பெரிதாக என்ன செய்து விடப்போகிறான் என்று அலட்சியமாக இருந்து இப்படி நடக்க அனுமதி தந்திருக்கிறோமே என்று கோபப்பட்டான்.  க்ரிஷ் நிம்மதியாக இருப்பதால் அல்லவா இப்படி ஏதேதோ முயற்சிகளை வெற்றிகரமாக எடுத்துக் கொண்டு இருக்கிறான்…. இதில் எல்லாம் ஈடுபடும் அளவுக்கு இனி க்ரிஷ் நிம்மதியாக இருந்து விடக்கூடாது……

அடுத்த ஒரு மணி நேரத்தில் மனோகர் மாணிக்கத்தின் முன்னால் அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் மாணிக்கமும், சங்கரமணியும் இனம் புரியாத ஒருவகை பீதியை உணர்ந்தார்கள். இப்போது என்ன சொல்லப் போகிறானோ?

மனோகர் சொன்னான். “நீங்கள் ஏன் உங்கள் மகன் மணீஷுக்கு ஹரிணியைத் திருமணம் செய்து வைக்கக் கூடாது?”      

(தொடரும்)
என்.கணேசன் 


7 comments:

  1. Superb sir. Marma manithan and Krish eyes meet and their feelings are exceptionally described by you. Padmavathi and Uday combination is so sweet.

    ReplyDelete
  2. க்ரிஷ் நிம்மதியாக இருக்கும் போது ..செய்யும் முயற்சிகளை...
    நிம்மதியை இழக்கும் போது எப்படி செய்வான்? ..என்பதை அறிய காத்திருக்கிறேன்... எனவே இம்முறை மர்ம மனிதனின் திட்டம் வெற்றியடைய ஆவல் கொண்டுள்ளேன்.

    கிரிஷ் மாஸ்டர் சொன்ன பயிற்சிகளை செய்யும் விதமும்..மர்ம மனிதன் உணர்வதும் அருமை...

    ReplyDelete
  3. "மர்ம மனிதனின் திட்டம் வெற்றியடைய ஆவல் கொண்டுள்ளேன்" - நமது இந்த மன நிலைதான் TV சீரியல்கள் வளரக் காரணம்..

    ReplyDelete
  4. இந்த கதையில் அமானுஷ்யன் வருவாரா?

    ReplyDelete
  5. மர்ம மனிதனின் நிம்மதி ஆட்டம் கண்டுவிட்டது கிரிஷி ன் விடாமுயற்சியால் சூப்பர்

    ReplyDelete
  6. தன்னை உணர்ந்த க்ரிஷுன் மனதை
    ஊடுருவ முடியாத கோபம் வேறு இருக்கும்...
    ஆனாலும் இந்த ஹரிணி-மனீஷ் திருமண ஐடியா , மர்ம மனிதனின் புத்திசாலி தனத்தை
    ஒப்பிடும் போது ரொம்ப அற்பமாக தெரிகிறது ...

    ReplyDelete