இறைவன்
இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி வேதகாலங்களிலேயே கேட்கப்பட்டிருக்கிறது. அக்காலங்களிலேயே நிறைய விவாதங்கள்
நடந்திருக்கின்றன. நாத்திக ரிஷிகளும் அக்காலத்தில் இருந்து தங்கள் தரப்பு வாதங்களை
விவரித்திருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு வியாசரும் பகவத்கீதையில் பதிமூன்றாம் அத்தியாயத்தில்
ஸ்ரீகிருஷ்ணர் மூலம் மிக நுட்பமான பதிலைச் சொல்லியிருக்கிறார்:
எது
அறியப்பட வேண்டியதோ, எதை அறிவதால் அமிர்தம் பருகியது போல் இறவாநிலை அடைய முடியுமோ,
அதை விளக்குகிறேன். அந்த ஆதியற்ற பரம்பொருளை உண்டு என்றோ இல்லை என்றோ கூற முடியாது.
ஆதியற்ற
பரம்பொருளைச் சான்றுகள் மூலம் நிரூபிக்க முடியாது. அது ஆத்மார்த்தமாய் உள்ளுணர்வில்
உணரும் விஷயம். நம்பிக்கை அற்றவர்கள் முன் எத்தனை வாதங்கள் வைத்தாலும் அவர்கள் அவற்றில்
நிச்சயமாய் சில குறைபாடுகளையும் பலவீனங்களையும் கூறுவார்கள். சான்றுகளால் எட்ட முடியாத இறைவனை இல்லை என்பதையும் சான்றுகளால் நிரூபிக்க முடியாது. எந்தப் பரம்பொருளால், எந்த
மகாசக்தியால் இந்தப் பிரபஞ்சம் இயங்கி வருகிறதோ அதை இல்லவே இல்லை என்று சொல்லவும் சான்றுகளும்
வாதங்களும் போதாது. அனைத்தையும் இயக்கும் ஒரு சக்தியை மறுக்கவோ, மறுத்த பின் எப்படி
பிரபஞ்சம் இயங்குகிறது என்பதை விளக்கவோ அவர்களாலும் முடியாது. அதனால் அவரவர் புரிதலின்படியும்,
விருப்பத்தின்படியும் முடிவில் அவரவர் உண்டு அல்லது என்ற நிலைப்பாட்டில் நிற்கலாமே
ஒழிய சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதியாய் விளக்கி மற்றவர்களுக்குத் தெளிய வைப்பது அறிவுக்கு
முடிந்த வேலை இல்லை.
விரலால்
நிலவைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் நிலவு விரல் நுனியில் இல்லை. கையால் எட்டும் தூரத்திலும்
இல்லை. விரல் நுனியிலிருந்து வானில் மின்னிக் கொண்டிருக்கும் நிலவிற்குப் பார்வையைத்
திருப்ப வேண்டுமல்லவா? அப்படி இறைவன் இருப்பதை ஒருவன் குறிப்பால் உணர்த்தலாம். குறிப்பால்
உணர்த்தியதை வார்த்தைகளிலேயே நின்று கொண்டிருப்பவனால் உணர முடியாது. ஏனென்றால் வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்டவன் இறைவன். விரல்நுனியிலிருந்து நிலவிற்கு உள்ள தூரமும், வார்த்தைகளிலிருந்து
இறைவனுக்கு இருக்கும் தூரமும் மிக மிக அதிகம் அல்லவா?
அதனால்
தான் மகாநிர்வாணம் அடைந்து அனைத்து ஞானத்தையும் பெற்ற கௌதமபுத்தரும் அந்தக் கேள்விக்கு
விடை சொல்ல மறுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். வீண் விவாதங்களில் அவர் ஈடுபட விரும்பவில்லை
போல் இருக்கிறது.
ஏனிந்த
சிக்கல் என்பதை அடுத்து ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.
அது
எல்லா இடங்களிலும், கைகளும், கால்களும், கண்களும், தலைகளும், முகங்களும், காதுகளும்
உடையது.. அது உலகம் அனைத்திலும் வியாபித்து இருக்கிறது. புலன்கள் இல்லாமலேயே புலன்நுகர்ப்
பொருட்களை அறிவது. .எதையும் சார்ந்து நிற்காமல் எல்லாவற்றையும் தாங்கக் கூடியது. குணங்கள்
இல்லாமலேயே குணங்களை அனுபவிப்பது.
பரம்பொருளுக்கு
எங்கும் கண்கள் உண்டு. அவர் பார்க்க முடியாத இடம் இல்லை. எங்கும் காதுகள் உண்டு. யார் எங்கிருந்து பிரார்த்தித்தாலும் அவருக்குக்
கேட்கும். தோற்றமே இல்லாமல் இருந்தும் எங்கும் அது வியாபித்திருக்கிறது. புலன்கள் இல்லாமல்
அனைத்தையும் புலன்கள் இருந்தால் எப்படி அறிய முடியுமோ அப்படி அது அறிகிறது. அதையும்
சார்ந்து இல்லை ஆனால் எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறது. குணங்கள் இல்லாமல் குணங்களை
அனுபவிக்கிறது.
யோசிக்கையில்
இது என்ன முரண்பாடு என்று தோன்றுகிறதல்லவா? கண்களும், காதுகளும் எப்படி எல்லா இடங்களிலும்
இருக்க முடியும்? புலன்கள் இல்லாமல் அதன்வழி விஷயங்களை எப்படி அறிய முடியும்? இதை எல்லாம்
அறிவு ஒத்துக் கொள்ள மறுக்கிறதல்லவா?
ஆனால்
விஞ்ஞானம் இதை உண்மை என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. மரணம் வரை சென்று இறந்து விட்டதாக
மருத்துவர்கள் கருதி மறுபடியும் உயிர் பிழைத்த மனிதர்களின் மரண விளிம்பு அனுபவங்களை
ஆராய்ந்த விஞ்ஞானிகள் அந்த இறந்து பிழைத்த சில நிமிடங்களில் அவர்கள் எல்லாம் காணவும்,
கேட்கவும் முடிந்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்
என்னவென்றால் அவர்களில் சிலர் பிறவிக் குருடர்கள். வாழ்ந்த நாட்களில் கூட எதையும் காண
முடியாதவர்கள். அவர்களுக்கு உடலை விட்டுப் பிரியும் நேரத்தில் புலன்கள் இல்லாமலேயே
அனைத்தையும் அறிய முடிந்திருக்கிறது. (இந்த ஆராய்ச்சிகளை விரிவாக ஆழ்மனதின் அற்புத சக்திகள்
நூலில் எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் அதைப் படிக்கலாம்)
சார்ந்திராமல்
தாங்கக் கூடியது என்பது சாதாரண விஷயமல்ல. அது மனிதர்களுக்குச் சுலபமாய் முடியாதது.
பெற்றோர் ஒரு காலத்தில் பிள்ளைகளைத் தாங்குகிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பிள்ளைகளைச்
சார்ந்திருக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றையும் தாங்கி இருந்தும் எதையுமே சார்ந்திராமல்
இருப்பது அந்தப் பரம்பொருள் ஒன்றுக்கே சாத்தியம். அந்த விசேஷ குணத்தையும் இங்கே கீதை
சுட்டிக் காட்டுகிறது.
ஸ்ரீகிருஷ்ணர்
தொடர்ந்து கூறுகிறார்.
அது
எல்லா உயிர்களின் உள்ளும், புறமும் நிறைந்திருக்கிறது. அசைவன, அசையாதவற்றின் வடிவிலும்
அதுவே உள்ளது. மிக நுட்பமாக இருப்பதால் அறிய முடியாதது. மிக அருகிலும் மிக தூரத்திலும்
இருப்பது அதுவே.
அறிய
வேண்டியதான அந்தப் பரப்பிரம்மம் பிரிவுபடாமல் இருந்தாலும் உயிர்கள் அனைத்திலும் பிரிந்திருப்பது
போலத் தோன்றுகிறது. அது உயிர்களைப் பாதுகாக்கிறது. அதுவே அழிக்கவும் செய்கிறது. அதுவே
படைக்கவும் செய்கிறது.
உள்ளும்
புறமும் நிறைந்திருப்பது என்பதற்கு கடலின் அலைகளையும், பனிக்கட்டியையும் உதாரணமாகச் சொல்லலாம். அலைக்கு
உள்ளேயும், வெளியேயும் இருப்பது கடலே அல்லவா? அதே போல பனிக்கட்டிக்கு உள்ளேயும், வெளியேயும்
இருப்பது கடல்நீரே அல்லவா?
அடுத்ததாக
பரம்பொருள் மிகமிக நுட்பமானது. நுட்பமான பொருள்களை நாம் புறக்கண்களால் காண முடிவதில்லை.
செல்கள், பாக்டீரியாக்கள் ஆகியவை எல்லாம் விஞ்ஞானக்கருவிகள் மூலமாகவே நம்மால் பார்க்க
முடிகிறது. அப்படி இருக்கையில் நுட்பத்தில் நுட்பமான பரம் பொருளை புறக்கண்களால் நாம்
காண முடியுமா? பாக்டீரியாக்களைக் காண சக்தி வாய்ந்த விசேஷக் கருவிகள் தேவைப்படுவது
போல பரம்பொருளைக் காண ஞானம் மிக்க இதயம் தேவைப்படுகிறது. எல்லா இடங்களிலும் இருப்பதால்
பரம்பொருள் மிக மிக அருகில் இருப்பதும், மிக மிகத் தொலைவில் இருப்பதும் சாத்தியமாகிறது.
இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் நம்பிக்கை இருப்பவர்க்கு பரம்பொருள் மிகமிக அருகில் இருக்கிறது. அதனால் உணர முடிகிறது. நம்பிக்கை
இல்லாதவர்களுக்கு வெகுதொலைவில் இருக்கிறது அதனால் அதை உணர முடியாமல் போவதால் அது இல்லவே
இல்லை என்று சாதிக்கிறார்கள். அந்த வகையிலும் இரண்டும் உண்மையே.
பிரிந்திருப்பது
போலத் தோன்றினாலும் பிரிந்திராத தன்மை பரம்பொருளின் இன்னொரு தனித்தன்மை. உதாரணத்திற்கு
வெற்றிடத்தைச் சொல்லலாம். மண்பாத்திரங்கள் பல இருந்தாலும், தனித்தனியாக பாத்திரங்களின்
உள்ளே வெற்றிடம் இருந்தாலும் மண்பாத்திரங்கள் உடையும் போது மீண்டும் வியாபித்திருப்பது
வெற்றிடமே அல்லவா? மண்பாண்டத்தில் இருந்து பேரண்டம் வரை அதுவே நிறைந்திருக்கிறதல்லவா?
அந்தப் பரம்பொருள் காக்கிறது, அழிக்கிறது, மீண்டும் படைக்கிறது, காக்கிறது….. இப்படியாக
பிரபஞ்சம் இயங்குகிறது.
அந்தப்
பரப்பிரம்மம் ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது. மாயைக்கு அப்பாற்பட்டது. அறியப்பட வேண்டியதும்,
தத்துவ ஞானத்தினால் அடையத் தக்கதும் அதுவே. எலோருடைய இதயத்திலும் அதுவே விசேஷமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட
இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவன். விளக்கு, சந்திரன், சூரியன், மின்னல் என்று ஒளியைத்
தருகிற அத்தனைக்கும் ஒளியைத் தருவது அந்தப் பரம்பொருளே. நாம் அறிய வேண்டியதும் அந்தப்
பரம்பொருளையே. அதை அறிந்த பின் வேறெதையும் அறிய வேண்டியதில்லை. ஏனென்றால் பரம்பொருளை
அறிந்தால் மற்றவை எல்லாம் தானாக விளங்கி விடும். அந்த அறிய வேண்டிய பரம்பொருளை எங்கே
காண்பது என்கிறீர்களா? அதைக் காண அங்குமிங்கும் அலைய வேண்டாம். அது உங்கள் இதயத்தில்,
ஆழத்திலும் ஆழத்தில், விசேஷமாக வீற்றிருக்கிறது. இதயத்தின் உள்ளே போங்கள். அந்த விசேஷப்
பரம்பொருளைக் கண்டிப்பாகக் காண்பீர்கள்.
பாதை
நீளும்…..
என்.கணேசன்
Wonderful explanation. Thank you sir.
ReplyDeleteவசனங்களுக்கு ஆழமான விளக்கம் அருமை... கடல்,பனிக்கட்டி உதாரணங்கள் அருமையோ அருமை....
ReplyDeleteமுதல் வசனத்துல..."குணங்கள் இல்லாமலேயே குணங்களை அனுபவிப்பது"//// இந்த வசனம் புரியவில்லை...இதற்கான விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDeleteஇதயத்தின் உள்ளே போங்கள்...மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteபடித்ததும் எனக்குத் தோன்றியது இதுதான்: "இங்கு வந்ததின் பயனாக சிறிதாவது அமைதியையும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும்...." என்று எழுதி இருந்தீர்கள். அவ்வாறே அடைந்தேன்.
ReplyDelete