”சிவாஜி எங்கே?” ஷாஹாஜி சாம்பாஜியிடம் கேட்டார்.
சாம்பாஜி
சிரித்தபடி சொன்னான். “குதிரை லாயத்தில் இருக்கிறான். குதிரைகளை ஆராய்ந்து கொண்டும்
அவற்றுடன் பேசிக்கொண்டும் இருக்கிறான். நேற்றெல்லாம் யானைகளோடு இருந்தான்….”
ஷாஹாஜி
சத்தமில்லாமல் குதிரை லாயத்திற்குப் போய் இளைய மகனைக் கவனித்தார். சிவாஜி ஒவ்வொரு குதிரையாக
ஆராய்ச்சி செய்து கொண்டும், அதன் மீது ஏறி சிறிது தொலைவு சுற்றி வந்து கொண்டும் இருந்தான்.
அவன் குதிரையில் செல்வது ஒரு லயத்தோடு இருந்தது. குதிரைகள் அவன் சொன்னபடி இணங்கிச்
சென்றன. இறங்கும் போது ஒவ்வொரு குதிரையையும் சிவாஜி அன்பாகத் தட்டிக் கொடுத்து விட்டே
இறங்கினான். தந்தையைக் கவனித்த பின் குதிரைகளை விட்டு விட்டு புன்னகையுடன் தந்தையிடம்
வந்தான். இருவரும் குதிரைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடு திரும்பினார்கள். மகன் குதிரைகளைப்
பற்றிப் பேசிய விஷயங்கள் ஆழமானதாகவும் நுட்பமானதாகவும் இருந்ததை ஷாஹாஜி கவனித்தார்.
மகனை நினைக்க தந்தைக்குப் பெருமையாக இருந்தது. ‘இத்தனை அறிவுடன் இருக்கும் இவன் சற்று
அனுசரித்தும் போகிறவனாக இருந்தால் மிகப்பெரிய நிலைகளை எளிதில் எட்டி விடுவான்…..’ என்று
அவர் நினைத்துக் கொண்டார்.
வீட்டுக்கு
வந்தவுடன் மெள்ள ஆதில்ஷா அவனை அழைத்து வரச் சொன்னதை சிவாஜியிடம் அவர் தெரிவித்தார்.
சிவாஜி அந்த அழைப்பில் உற்சாகத்தைக் காட்டவில்லை. அவன் வயதில் வேறு யாராவது இருந்திருந்தால்
சுல்தானின் அழைப்பில் புளங்காகிதம் அடைந்திருப்பார்கள். சிவாஜி ஒன்றும் கூறாமல் மௌனம்
சாதித்தான். அவர் வற்புறுத்திச் சொன்ன பிறகு தான் கடைசியில் சிவாஜி வேண்டாவெறுப்பாகச்
சம்மதித்தான். ஷாஹாஜி பாதி நிம்மதி அடைந்தார்.
மீதி நிம்மதி அவன் அரசவையில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொறுத்தது…. சுல்தான்
ஆதில்ஷா தங்கமான மனிதர், ஷாஹாஜியிடம் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர், எத்தனையோ
விஷயங்களில் பெருந்தன்மையாக நடந்து கொண்டவர் என்பதையெல்லாம் அவர் இளைய மகனிடம் சொன்னார்.
அவர் எதற்காக இதையெல்லாம் சொல்கிறார் என்று புரிந்து கொண்ட சிவாஜி கடைசியில் சொன்னான்.
“கவலை வேண்டாம் தந்தையே. நான் சுல்தானிடம் அவமரியாதையாக நடந்து கொள்ள மாட்டேன்”
ஷாஹாஜிக்கு
மகன் சொன்னது முழு நிம்மதியைத் தந்து விடவில்லை. ’மரியாதையாக நடந்து கொள்வேன் என்று
சொல்வதற்கும் அவமரியாதையாக நடந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வதற்கும் இடையே உள்ள வித்தியாசம்
பெரியதல்லவா!’ ஆனால் இதற்கும் மேல் ஏதாவது சொன்னால் நாளை அரசவைக்கு வர மறுத்தாலும்
மறுத்து விடுவான் என்கிற எண்ணம் வந்து பிறகு அமைதி காத்தார்.
மறுநாள்
அவனை அரசவைக்கு ஷாஹாஜி அழைத்துச் சென்றார். அரசவையில் சுல்தான் இன்னமும் வந்திருக்கவில்லை.
அங்கு இருந்த பலரும் சிவாஜியை நட்பு பாராட்டி வரவேற்றார்கள். அப்படி வரவேற்றவர்களில்
சிலர் பொதுவாகவே அதிக கௌரவம் பார்ப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் மகனை மதித்து வரவேற்றதில்
ஷாஹாஜி பெருமிதம் அடைந்தார்.
சுல்தான்
அரசவைக்கு வந்தவுடன் புதியவர்களும், அவரிடம் ஏதோ விண்ணப்பிக்க வந்தவர்களும், தூதர்களும்
தரை வரை தலை தாழ்த்தி வணங்கி விட்டு அவரிடம் பணிவுடன் பேசினார்கள். சிவாஜி அதையெல்லாம்
கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்த ஷாஹாஜி அரச மரியாதை முறைகளைப் புரிந்து
கொண்டு அதன்படி நடந்து கொள்வான் என்று எண்ணினார். எதையும் சொல்லித்தந்து கற்றுக் கொள்வதை
விடக் கவனித்துத் தானே கற்றுக் கொள்வது தான் சிறப்பு. சிவாஜி எத்தனையோ அப்படிக் கற்றுக்
கொண்டிருக்கிறான் என்றும் தாதாஜி கொண்டதேவ் அவரிடம் கூறியிருக்கிறார்…..
ஷாஹாஜி
சிவாஜியை சுல்தானிடம் அறிமுகப்படுத்திய தருணம் வந்த போது சிவாஜி எழுந்து நின்று சற்றுத்
தலைதாழ்த்தி மட்டும் சுல்தானுக்கு வணக்கம் தெரிவித்தான். ஷாஹாஜி துணுக்குற்றார்.. அரசவையில்
சிறிய சலசலப்பு எழுந்தது. ஷாஹாஜியின் மனம் பதறியது. மகனை ஓரக்கண்ணால் பார்த்தார். சிவாஜியின்
முகத்தில் புன்னகை கலந்த அமைதி நிலவியதே தவிர அவன் தவறுதலாக நடந்து கொண்டதை உணர்ந்தது
போல் தெரியவில்லை.
“ஷாஹாஜியின்
இளைய மகன் நீ தானா? உன் பெயர் என்ன?” என்று சுல்தான் ஆதில் ஷா புன்னகையுடன் கேட்டார்.
“சிவாஜி
அரசே”
“நீ
அரசவைக்குப் புதியவன் என்பதால் ஒரு அரசருக்கு வணக்கம் செலுத்தும் விதத்தை அறியவில்லை
என்பது புரிகிறது. ஆனால் உன்னை இங்கு பலரும் அறிவாளியாக என்னிடம் சொல்லியிருந்தார்கள்.
அப்படிப்பட்ட நீ மற்றவர்கள் வணக்கம் செலுத்தும் முறையைக் கண்ட பின்னும் கற்றுக் கொள்ள
மறந்தது தான் வியப்பாக இருக்கிறது….” ஆதில் ஷா சிவாஜியைக் கூர்ந்து பார்த்தபடியே சொன்னார்.
ஷாஹாஜியின்
பதற்றம் அதிகமாகியது. மகனுக்காகத் தானே மன்னிப்பு கேட்பது என்ற முடிவுக்கு அவர் வருவதற்குள்
சிவாஜி புன்னகை மாறாமல் சொன்னான். “தாங்கள் கூறியது போல் நான் அரசவைக்குப் புதியவன்
தான் அரசே. மற்றவர்கள் தங்களை வணங்கிய முறையையும் நான் கவனித்தேன். ஆனால் நான் அனைவரையும்
விட அதிகமாய் நேசிக்கவும், வணங்கவும் செய்யும் என் தந்தையின் நினைவே எனக்குத் தங்களைப்
பார்க்கையில் ஏற்பட்டது. அதனால் தான் என் தந்தையை வணங்குவது போலவே தங்களையும் வணங்கினேன்.
வேறு விதமாய் வணங்கி நான் உள்ளே உணர்ந்த அன்பைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை…”
அரசவையில்
அசாத்திய அமைதி நிலவியது. அதை ஆதில்ஷாவின் பெருஞ்சிரிப்பு தான் கடைசியில் கலைத்தது.
“உன்னைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை தான் என்று இப்போது புரிகிறது.…. உன்
பேச்சு சாமர்த்தியம் எனக்குப் பிடித்திருக்கிறது சிவாஜி…”. என்று சிரிப்புனூடே ஆதில்
ஷா சொல்ல சிவாஜி மறுபடி தன் தலையைச் சற்றே தாழ்த்தி மரியாதை காட்டினான்.
ஆதில்ஷாவின்
சிரிப்பும் அவர் சிவாஜியின் மரியாதைக் குறைவையும் விளையாட்டாய் எடுத்துக் கொண்டதும்
ஷாஹாஜியை வியப்பில் ஆழ்த்தின. மனதிலிருந்த பெரும் பாரம் விலக ஷாஹாஜி நிம்மதி அடைந்தார்.
“பீஜாப்பூர்
எப்படி இருக்கிறது சிவாஜி” ஆதில் ஷா கேட்டார்.
“தங்கள்
ஆட்சியில் சகல சிறப்புகளுடனும் இருக்கிறது மன்னா. இங்குள்ள மாளிகைகளின் அழகு மனதைக்
கவர்வதாக உள்ளது. அதே போல இங்குள்ள சில பாரசீகக் குதிரைகளிடம் என் மனதைப் பறிகொடுத்து
விட்டேன் மன்னா….”
ஆதில்ஷாவும்
குதிரைகள் மீது தனியார்வம் கொண்டவர் என்பதால் பேச்சு குதிரைகள் மீது திரும்பியது. சற்று
நேரத்தில் அரசவையில் இருந்தவர்களும் அந்தப் பேச்சில் கலந்து கொண்டார்கள். குதிரைகள்,
அவற்றின் வகைகள், இயல்புகள், உடல் அமைப்புகளின் சூட்சுமங்கள் பற்றி எல்லாம் அங்கு அலசப்பட்டன.
சிவாஜி சொன்ன சில தகவல்கள் அவர்களில் பலருக்கும் புதியதாக இருந்தன. அவர்களின் பல கவனிப்புகளும்,
அனுபவங்களும் சிவாஜிக்குப் புதியதாகவும், சுவாரசியமாகவும் இருந்தன. அவன் பேசும் போது
தெளிவாகவும், கர்வமில்லாமலும், ஆர்வத்துடனும் பேசினான். மற்றவர்கள் பேசும் போது இடைமறிக்காமல்
முழு கவனத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டான். ஷாஹாஜி பிரமிப்புடன் மகனைப் பார்த்துக்
கொண்டிருந்தார்….
நீண்ட
நேர சம்பாஷணைக்குப் பிறகு ஆதில்ஷா திருப்தியுடன் சொன்னார். “பல காலத்திற்குப் பிறகு
இந்த அரசவையில் ஒரு அறிவார்ந்த சம்பாஷணை நடந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் சிவாஜி.
“ ஆதில்ஷா சிவாஜிக்கு விலையுயர்ந்த பட்டும், ஆபரணங்களும், தங்கக் காசுகளும் வழங்கி
சபையில் கௌரவித்தார். பலரும் ஷாஹாஜிக்கும் சிவாஜிக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
வீடு
திரும்பும் போது மகன் பெரும் மகிழ்ச்சி எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருந்ததை ஷாஹாஜி
கவனித்தார். ஆதில்ஷாவின் அன்பளிப்புகள் பெரியதாக அவனைப் பாதித்து விடவில்லை. வீட்டுக்கு
வந்த பிறகு துகாபாயும், சாம்பாஜியும் சிவாஜிக்கு வழங்கப்பட்ட பட்டையும், ஆபரணங்களையும்
ஆர்வத்துடன் ஆராய்ந்தார்கள். ஆனால் ஜீஜாபாய் அந்த அளவு ஆர்வம் அந்தப் பரிசுப்பொருள்களில்
காட்டாமல் அரசவையில் நடந்தது என்ன என்றறிய ஆர்வம் காட்டினாள். சிவாஜி தாயிடம் குதிரைகளைப்
பற்றித் தான் புதிதாக அறிந்து கொண்டதை மட்டும் பகிர்ந்து கொண்டான். அங்கு அவன் அறிந்த
புதிய விஷயங்கள் மட்டுமே முக்கியமானது என்பது போலவும், மற்றவை எல்லாம் விவரிக்க அவசியம்
இல்லாதவை என்பது போலவும் விட்டு விட்டான். சிவாஜியும் சாம்பாஜியும் சேர்ந்து வெளியே
போன பிறகு கணவரிடம் அரசவையில் நடந்தது என்ன என்று ஜீஜாபாய் கேட்டாள். ஷாஹாஜி மனைவியிடம் நடந்ததைச் சொன்னார்.
சுல்தானை
முறையாக வணங்க சிவாஜி தவறி விட்டான் என்றதைத் தெரிவித்த போது அவள் முகத்தில் அதிர்ச்சி
தெரியவில்லை. மகன் மீது அவளுக்குக் கோபமும் அவளுக்கு ஏற்படவில்லை என்பதை ஷாஹாஜி கவனித்தார்.
இளைய மகனை அவளிடமே வளர விட்டு விலகி வாழ்ந்தது தவறோ என்ற எண்ணம் அந்தத் தந்தைக்கு மேலோங்க
ஆரம்பித்தது.
அவர்
மனைவியிடம் ஆதங்கத்துடன் சொன்னார். “ஜீஜா, சுல்தான் நடந்ததை வேடிக்கையாக எடுத்துக்
கொண்டு பெருந்தன்மையாக விட்டு விட்டதால் நம் மகன் அவர் அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பித்தான்.
அதை அவர் அவமரியாதையாக நினைத்திருந்தால் என்ன ஆகியிருந்திருக்கும் யோசித்துப் பார்.
பேச்சு சாமர்த்தியம், அறிவார்ந்த பேச்சு எல்லாம் சரி தான். ஆனால் அனுசரணை இல்லாமல்
இருப்பது அவனுக்கு எக்காலத்திலும் ஆபத்தையே உண்டாக்கும் என்பதை நீ உணர்த்த வேண்டும்.
இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். அதனால் அவன் அப்படி இருக்கிறான். ஆனால் வாழ்வின்
கசப்பான யதார்த்தங்களைக் கண்டு வளர்ந்தவர்கள் நாம். அதை அவனுக்கு உணர்த்த வேண்டியது
நம் கடமை அல்லவா….”
“உண்மை
தான். மறுக்கவில்லை. ஆனால் எப்போதுமே அனுசரித்து வாழ்பவர்கள் சரித்திரம் படைப்பதில்லை
என்ற இன்னொரு உண்மை அவனை அதிகமாக அடக்கி வைக்காமல் என்னைத் தடுக்கிறது….”
சரித்திரம்
படைக்க முயன்று பல முறை தோற்றுப் போய் அந்த எண்ணத்தையே விட்டொழித்திருந்த ஷாஹாஜி பெருமூச்சு
விட்டார்.
(தொடரும்)
என்.கணேசன்
Nice story style
ReplyDeleteExcellent Writing Style ji. Dialogues are super.
ReplyDeleteசிவாஜி சுல்தானை சமாளிக்கிற விதம் சூப்பர். ஜீஜாபாய் கடைசியில் கணவரிடம் சொல்வது செம. சரித்திரக் கதையிலயும் கலக்கறீங்க கணேசன் சார்.
ReplyDeleteLast Dialogue from Jijabai is fantastic.
ReplyDeleteஅரசவையில் நடந்த சம்பவம் படிக்கும் போதே... என்ன நடக்கும் என்ற எதிபார்ப்பை...ஏற்படுத்தியது...
ReplyDeleteஜீஜா அவர்கள் இறுதித் தத்துவம் அருமை
படிக்கையில் அதன் காட்சிகளும் மனத்திரையில் ஓடுகிறது... மிக அருமை....
ReplyDeleteகல்கி படைப்புகளை வாசிக்கும் போது காட்சிகள் மனத்திரையில் ஓடும்் அந்த அனுபவம் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் போதும் ஏற்படுகிறது் தமிழ் மன்னர்களின் சரித்திர கதைகளை எமுத வேண்டுகிறேன்
ReplyDeleteஉங்கள் கருத்திற்க்கு எனது ஆதரவுகள்
Delete"எப்போதுமே அனுசரித்து வாழ்பவர்கள் சரித்திரம் படைப்பதில்லை"
ReplyDeleteஒவ்வொரு அத்தியாத்திலும் இது போல் நறுக் வசனம் வைத்து விடுகிறீர்கள்