அந்த
முதியவர் சொன்ன பாலைவனப் பகுதிக்கு செந்தில்நாதன் ஒரு டாக்சியில் ஒன்பது மணிக்குப்
போய்ச் சேர்ந்தார். டாக்சிக்காரன் ”இரவு காற்று அதிகம் வீசும் கவனமாக இருங்கள், அது
ஆபத்தான காற்று” என்று எச்சரித்து விட்டுப் போனான். அந்தப் பகுதியில் ஆட்களே இல்லை.
தூரத்தில் சில குடிசைகள் தெரிந்தன. அக்குடிசைகளில் ஏதாவது ஒன்று அந்தப் பக்கிரியினுடையதோ
என்னவோ? நிலவொளியில் பாலைவனம் மிக ரம்மியமாகத் தெரிந்தது. செந்தில்நாதன் ஓரிடத்தில்
உட்கார்ந்து கொண்டார். மிக லேசாக இதமாகக் காற்றடித்தது. ஆகாயத்தில் நட்சத்திரங்கள்
அழகாகக் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. ரசித்தபடி அமர்ந்திருந்தவருக்கு நேரம் போனதே தெரியவில்லை.
திடீரென்று காற்றின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. காற்றில் பாலைவன மணலும் சேர்ந்து
வந்ததால் கண்களைத் திறந்து வைத்திருக்க முடியவில்லை. காற்று அதிகம் என்று முதியவர்
முன்பே எச்சரித்திருந்ததால் அவர் முன்னெச்சரிக்கையாகக் கொண்டு வந்திருந்த கண்ணாடியை
எடுத்து அணிந்து கொண்டார். காற்று அமானுஷ்யமாய் வீச ஆரம்பித்தது. அவருடைய கண்ணாடி காற்றோடு
பறந்து போய் விட்டது. காற்று மணலோடு அவர் மீது வீசியது மட்டுமல்லாமல் அவரைத் தள்ளவும்
ஆரம்பித்தது. அவர் கண்களை மூடிக் கொண்டார். உறுதியாக உட்கார்ந்திருக்க முயற்சி செய்தார்.
காற்றின் வேகம் ஓரளவு குறைந்த போது மெல்லக் கண்களைத் திறந்து பார்த்த போது சுற்றுப்புறமே
மாறி இருந்தது. முன்பு மேடான இடங்கள் இப்போது பள்ளமாகவும், பள்ளமாய் இருந்த இடங்கள்
இப்போது மேடாகவும் இருந்தன. அவர் அமர்ந்திருந்த இடம் பள்ளமாகி இருந்தது. மறுபடியும்
காற்று வேகமெடுத்த போது தூரத்தில் காற்று மண்டலத்தின் நடுவே ஒரு ஆள் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருப்பது
தெரிந்தது. அது தான் பக்கிரியோ?
மணல்காற்றின்
வேகத்தில் கண்களைத் தொடர்ந்து திறந்து வைத்திருக்க முடியவில்லை. மறுபடியும் அவர் கண்களை
மூடிக் கொண்டார். காற்று குறைந்த போது கண்களைத் திறந்தார். தூரத்தில் நின்றிருந்த ஆள்
இப்போது அருகில் நின்று கொண்டிருந்தார். பழைய சாயம் போன உடைகளை அந்த ஆள் அணிந்திருந்தார்.
வயது இன்னதென்று தீர்மானிக்க முடியவில்லை. நடுத்தரத்திலிருந்து முதுமை வரை வயது எதுவுமாக
இருக்கலாம்…..
உருது
கலந்த ஹிந்தியில் அந்த ஆள் பேசினார். குரல் கரகரப்பாய் இருந்தது. “உன் அம்மா இறந்து
போய் ஏழு வருடமாகிறது. இப்போதென்ன அவருக்கு வியாதி?”
செந்தில்நாதன்
திகைத்துப் போனார். உண்மையில் அவர் தாயார் இறந்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த ஆள்
அந்தப் பக்கிரியாகவே இருக்க வேண்டும்….
அவர்
ஹிந்தியிலேயே பதில் சொன்னார். “உங்களைப் பார்க்க வேண்டி இருந்தது. யாரும் அதற்கு உதவுவது
மாதிரி தெரியவில்லை. உங்களைத் தெரிந்தவர் போல ஒருத்தர் வந்தார். உண்மையைச் சொல்ல முடியாத
நிலை… அதனால் தான் வாய்க்கு வந்த ஒரு பாசக்கதையைச் சொன்னேன்….”
அந்தப்
பக்கிரி அவர் அருகில் உட்கார்ந்தார். சற்று முன் பெருங்காற்று வீசிய அறிகுறியே இல்லை.
இப்போது இதமாய்க் காற்று வீசியது. ஆனால் அவர் உடல், ஆடையில் எல்லாம் மணல் படிந்திருந்தது.
அது தான் சற்று முன் ஒரு பெருங்காற்று மணலோடு சேர்ந்து வீசியிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக
இருந்தது.
அந்தப்
பக்கிரி சொன்னார். “பாலைவனத்தை நீ எப்போதும் நம்பி விட முடியாது. ஒவ்வொரு நேரத்தில்
ஒவ்வொரு மாதிரி இருக்கும். அழகாகவும் இருக்கும், ஆபத்தாகவும் இருக்கும்….” செந்தில்நாதன்
தலையசைத்தார்.
பக்கிரி
கேட்டார். “எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?”
அவர்
தாய் ஏழு வருடங்களுக்கு முன் இறந்து போனது தெரியும் போது அவர் காண வந்திருக்கும் காரணம்
இந்தப் பக்கிரிக்குத் தெரியாமல் போகுமா என்று நினைத்தாலும் செந்தில்நாதன் சொன்னார்.
“உங்களிடம் படித்த சக்தி வாய்ந்த ஒரு பழைய மாணவனைப் பற்றிக் கேட்க வந்தேன்.”
சதானந்தகிரி
சுவாமிஜி சொன்னதை வைத்து எதிரி இந்த ஆளிடம் தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற
அனுமானத்தில் கேட்டுவிட்டு செந்தில்நாதன் பக்கிரியைக் கூர்ந்து பார்த்தார். அந்தப்
பக்கிரி தெரியாதது போல் காட்டிக் கொள்ளக்கூடும், யார் என்ன என்று கேட்கக்கூடும் என்று
நினைத்தார். பக்கிரி அவர் எதிர்பாராதவிதமாக “எதையும் நான் ஏன் உனக்குச் சொல்ல வேண்டும்?’
என்று கேட்டார்.
திடீரென்று
இப்படிக் கேட்டதும் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் செந்தில்நாதன் விழித்தார்.
போலீஸ்காரனாகக் கேட்க வழியில்லை. பணம் ஏதாவது தருகிறேன் என்று ஆசை காட்டலாம் என்றால்
அந்தப் பக்கிரி காசுக்குப் பெரிய மதிப்பு தருவது போல் தெரியவில்லை. அப்படித் தந்திருந்தால்
அது இந்த ஆளின் உடையிலும், பாவனையிலும் தெரிந்திருக்கும்….. யோசித்த போது சதானந்தகிரி
சுவாமிஜி எதிரிக்குச் சொல்லித்தர மறுத்த காரணம் நினைவுக்கு வந்தது…..
“தகுதியில்லாத
ஒருவனுக்கு ரகசியக்கலைகள் எல்லாம் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அவன் அதைக் கற்றுக்
கொண்டு என்னென்னவோ வேண்டாத செயல்கள் எல்லாம் செய்வது போலத் தெரிகிறது. சட்டப்படி இல்லாவிட்டாலும்
தர்மப்படி அதில் உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறதல்லவா? அப்படி இருக்கையில் விசாரிக்க
வருபவனிடம் விவரங்களைக் கூடச் சொல்ல மாட்டேன் என்பது என்ன நியாயம்? அது அந்தத் தப்புக்குக்
கூட்டு நிற்பது போல் ஆகிவிடாதா?” என்று செந்தில்நாதன் கேட்டார்.
பக்கிரி
கலகலவென்று சிரித்தார். “சதானந்தகிரி சொன்னதை வைத்துச் சொல்கிறாய் நீ. கெட்டிக்காரன்
தான்….. நீ இப்படி யோசித்துப் பார். நான் கத்தி வியாபாரம் செய்பவன். என்னிடமிருந்து
ஒருவன் கத்தி வாங்கிக் கொண்டு போய் இன்னொருவனைக் குத்திக் கொலை செய்து விட்டான் என்று
வைத்துக் கொள். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? கத்தி விற்கக் கூடாத பொருள்
அல்லவே….. என் கத்திகளை வாங்கிக் கொண்டு போய் எத்தனையோ பேர் காய்கறிகளை நறுக்கி சமைத்துப்
போட்டு மற்றவர் பசியைப் போக்குகிறார்கள். அப்படி என்றால் வயிறு நிரம்பிய புண்ணியத்தில்
எனக்கும் பங்கு இருக்குமா என்ன?....”
செந்தில்நாதன்
உடனடியாகச் சொன்னார். “கத்தி விற்பவனுக்கு வாங்குபவன் கொலை செய்யக் கேட்கிறானா, இல்லை
காய்கறி நறுக்கக் கேட்கிறானா என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்ற சக்தி
வாய்ந்த ஆளுக்கு படிக்க வருபவனுடைய நோக்கம் தெரியாமல் போக வாய்ப்பே இல்லையே”
பக்கிரி
ஒன்றும் சொல்லாமல் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தார். பின் மெல்லச் சொன்னார். “மனிதனுடைய
இதய ஆழத்தில் என்ன வைத்திருக்கிறான், அதை வைத்து
அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அல்லா ஒருவரே அறிவார். கடந்த காலம் மட்டுமே எங்கள்
பார்வைக்கு அகப்படுகிறது. எதிர்காலம் எங்கள் கருத்திற்குச் சிக்குவதில்லை…..”
செந்தில்நாதன்
அந்த வார்த்தைகளை யோசித்தபடி மௌனமாக இருந்தார். பக்கிரி மெல்லச் சொல்ல ஆரம்பித்தார்.
“அவன் என்னிடம் படிக்க வந்த போது உடனடியாக நான் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. உன்னைப்
போல் தான் அவனும் என்னைத் தேடி இங்கே வந்தான். அவன் வந்த நாளே நான் அவன் கண்ணில் தட்டுப்படவில்லை.
இந்தப் பாலைவனத்தில் மூன்று நாட்கள் எனக்காகக் காத்திருந்தான். ஒன்று வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அவன்
அது கிடைக்கும் வரை விட மாட்டான். பின்வாங்க மாட்டான். ஆசையை மாற்றிக் கொள்ள மாட்டான்.
அவனைப் போன்ற ஒருவனை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அத்தனை மன உறுதி. அத்தனை பொறுமை.
அத்தனை விடாமுயற்சி….. மூன்று நாட்களில் இந்தப் பாலைவனத்தில் காத்திருந்தவனை மறுக்க
ஏனோ மனம் வரவில்லை…. இந்த அளவு மன உறுதி இருக்கிற, ஆர்வம் இருக்கிற மாணவனும் ஒரு ஆசிரியனுக்குச்
சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை. அதனால் நான் அவனை ஏற்றுக் கொண்டேன்……”
“அவன்
அறிவு கூர்மையும் நான் இது வரையில் எங்கும் பார்த்திருக்காதது. அவன் கற்பூரம் போல.
உடனே பற்றிக் கொள்வான். படிக்கக் கிடைப்பதை முடிக்கும் வரை விட மாட்டான்….. அவனுக்குக்
கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். கூடவே நானும் சிலதை அவனிடமிருந்து கற்றுக் கொண்டேன்…..
அவன் தினமும் அதிகமாக மூன்று மணி நேரம் தான் தூங்குவான். விழித்திருந்த சமயங்களில்
எல்லாம் சொல்லிக் கொடுத்ததைப் பயிற்சி செய்து கொண்டிருப்பான்….. கவனம் சிதறுவது என்பதே
அவனுக்குக் கிடையாது. கவனச்சிதறலுக்கு அவன் மனதில் அனுமதி இல்லை என்பது போல் தோன்றும்….
அந்த அளவு கட்டுப்பாட்டுடன், விடாமுயற்சியுடன், நான் இது வரை கண்டிராத அறிவுடன் அவன்
கற்றுக் கொண்டான். நான் பதினைந்து வருடங்களில் கற்றுக் கொண்டதை அவன் மூன்றே வருடங்களில்
கற்றுக் கொண்டான்…..”
சொல்லும்
போதே இப்போதும் பக்கிரியின் குரலில் பிரமிப்பு தெரிந்தது. செந்தில்நாதனையும் அந்தப்
பிரமிப்பு தொற்றிக் கொண்டது. இப்படியும் ஒருவனா என்று வியந்தார்.
”நீங்கள்
அவனுக்கு என்னவெல்லாம் கற்றுக் கொடுத்தீர்கள்?” என்று செந்தில்நாதன் கேட்டார்.
(தொடரும்)
Marvelous. This novel is getting more and more interesting. The dialogues between Senthilnathan and Fakir is very meaningful.
ReplyDeleteஐயா உங்கள் எழுத்தாற்றல் பிரமிக்க வைக்கிறது.
ReplyDeleteநல்லவனாக.... இருந்தாலும் சரி...
ReplyDeleteகெட்டவனாக.... இருந்தாலும் சரி..
உச்சத்தை அடைய வேண்டுமெனில்..? மர்ம மனிதனின் இந்த குணாதியசிங்கள் அவசியம் தேவை... என்பது அர்புதமான கருத்து ஐயா...
சுவாமிஜி கற்றுதர மாட்டார் என உறுதியாக தெரிந்தவுடன். மர்ம மனிதன் விலகி விட்டான்..
பக்கிரி மனமிரங்கி வருவார்... என தெரிந்து... பொறுமையுடன் மர்ம மனிதன் காத்துக்கொண்டிருக்கிறான்... மர்ம மனிதனின் கணிக்கும் திறன் அருமை....
சுவாமிஜியின் தர்மத்தையும்.... பக்கரியின் தர்மத்தையும்... மர்ம மனிதன் நன்றாகவே அறித்து வைத்திருக்கிறான்...
மர்ம மனிதன் உண்மையிலே பிரமிக்க வைக்கிறான்...
ஒரு வாரம் காத்திருந்து படிக்கும் போது படிக்க ஆரம்பிப்பதற்குள் முடிவது போல் உள்ளது. episode அளவு சற்று அதிகப்படுத்துங்கள்
ReplyDeleteஆழமான கருத்துக்கள் அதை மிக அழகாக எழுத்து நடையில் கொடுக்கும் உங்க திறமை அபாரம் G அருமையாக போகிறது இப்பொது எதிர்பார்ப்புடன் செந்தில்நாதனும் கற்று கொள்வதில் கடமைக்காக என்றாலும் தேர்ந்துவிட்டார் பிரமிப்புடன் அடுத்தடுத்த என்னவாக இருக்கும் என்பதை நோக்கி ......
ReplyDelete.......பக்கிரி சாமியும், க்ரீஷூம் சந்திக்கும் நிகழ்வு வருமா.....????
ReplyDeleteஆவலை தூண்டி விடும், பதிவு.... மர்ம மனிதனும்,,க்ரீஷூம் ஒத்த குணங்களை
உடையவர்களாக இருக்கிறார்கள். தேடல்,அறிவு கூர்மை மற்றும் விடாமுயற்சி
போன்றவற்றில் .....