தன்னைச் சந்திக்க வந்த போத்தாஜிராவை மொகபத்கான் மிகுந்த மரியாதையுடன்
வரவேற்றான். “வாருங்கள் சிந்துகேத் அரசரே…. இருக்கையில் அமருங்கள்”
போத்தாஜிராவ்
கைகளைக் கூப்பி வணங்கி விட்டு இருக்கையில் அமர்ந்தார். மொகபத்கான் களைப்பாகக் காணப்பட்டான்.
“என்ன படைத்தலைவரே. களைப்பாகத் தென்படுகிறீர்கள்? இரவு உறக்கம் இல்லையா?”
மொகபத்கான்
சொன்னான். “நன்றாக உறங்கிப் பல நாட்களாகின்றன பிரபு! நள்ளிரவில் எந்த நேரம் வந்து ஷாஹாஜி
நம் படையைத் தாக்குவானோ என்கிற அச்சம் காரணமாக சரியாக உறங்க முடிவதில்லை. போதாக்குறைக்கு
அவன் மனைவியை சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அவன் என்னேரமும் தாக்க வரலாம்
என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அப்படி வந்தால் அவனைச் சிறைப்படுத்தி விட வேண்டும்
என்று உறுதியாக இருக்கிறேன்……”
போத்தாஜிராவ்
சொன்னார். “அவன் ஜீஜாபாய்க்காகக் கண்டிப்பாக வர மாட்டான் படைத்தலைவரே. அவன் என்றோ கைவிட்டு
விட்ட மனைவி அவள். அவன் வேறொரு பெண்ணை மணந்து கொண்டிருக்கிறான். புது மனைவி மீதே அன்பை
வைத்திருக்கிறான்….. அதனால் ஜீஜாபாயைச் சிறைப்படுத்தியதில் அவனுக்கு எந்த வருத்தமும்
வந்திருக்க வாய்ப்பில்லை…”
மொகபத்கான்
குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். போத்தாஜிராவ் அவனிடம் விளக்கினார். “அவர்களுக்கு
இடையே நிறைய பிரச்னைகள் ஆரம்பத்திலிருந்தே இருந்தன. அவள் கர்ப்பவதியாக இருக்கிறாள்
என்று காரணம் காட்டி ஷிவ்னேரி கோட்டையில் விட்டுச் சென்றவன் பின் அவளுக்குக் குழந்தை
பிறந்தவுடன் அவளை அழைத்துச் செல்லவில்லை. அந்த இரண்டாம் குழந்தையையும் அவனுடன் அழைத்துக்
கொள்ளவில்லை. அவன் அவர்களைத் தள்ளியே தொடர்ந்து வைத்திருக்கிறான் என்பதையும், இன்னொரு
திருமணம் செய்து கொண்டான் என்பதையும் வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாமே”
மொகபத்கான்
யோசித்தான். அவர் சொல்வது சரியாகத் தான் தோன்றியது.
போத்தாஜிராவ்
தொடர்ந்து சொன்னார். “நான் இப்போது வந்ததே தங்களிடம் ஜீஜாபாய் விஷயமாக உங்களிடம் பேசத்
தான்…..”
மொகபத்கான்
ஆர்வத்துடன் சொன்னான். “சொல்லுங்கள் பிரபு….”
“ஜீஜாபாய்
எங்கள் வீட்டுப் பெண் என்றும் பின் தான் ஷாஹாஜியின் மனைவியானாள் என்பதும் தங்களுக்குத்
தெரிந்திருக்கும்….”
மொகபத்கானுக்கு
அப்போது தான் அவர்களுடைய உறவு நினைவுக்கு வந்தது. அவர்களுக்குள் உறவையும் மீறிய பகை
இருப்பதால் அவனுக்கு அந்த உறவு மறந்தே போயிருந்தது. மொகபத்கான் சொன்னான். “இப்போது
நினைவு வருகிறது. சொல்லுங்கள் பிரபு….”
”ஷாஹாஜியின்
அன்பைப் பெறாதவளும், எந்த விதத்திலும் ஷாஹாஜியை இங்கே வரவழைக்க முடியாதவளுமான ஜீஜாபாயைச்
சிறைப்படுத்தி முகலாயப் பேரரசுக்கு எந்தப் பயனும் இல்லை என்கிற நிலைமை இருப்பதால் அனாவசியமாய்
சிறைக்கைதியாய் மகள் இருப்பது அண்ணியாருக்கு வருத்தமாய் இருக்கிறது. எங்கள் படைவீரர்களும்
இப்போது உங்கள் படைவீரர்களோடு கலந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இங்கேயே ஜீஜாபாய்
சிறைப்பட்டிருப்பது பெரியதொரு உறுத்தலாக இருக்கிறது….. அதனால் அவளை விடுவிக்க நாங்கள்
கூறவில்லை. உரிய மரியாதையுடன் கோட்டை ஒன்றில் பணியாளர்களுடன் அவள் இருக்க ஏற்பாடு செய்ய
வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்கிறோம்……”
மொகபத்கான்
யோசனையுடன் அவரைப் பார்த்தான். போத்தாஜிராவ் தன் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தார்.
”தங்களுக்குத் தயக்கமாய் இருந்தால் அண்ணியார் சக்கரவர்த்திக்குக் கைப்பட மடல் எழுதி
அனுப்பவும் சித்தமாக இருக்கிறார்கள்”
மால்சாபாய்
மீது சக்கரவர்த்திக்கு மிக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை மொகபத்கான் அறிவான். ஜாதவ்ராவ்
மரணத்திற்குப் பின் சகல உரிமைகளையும் அவர் தம்பியான போத்தாஜிராவுக்கு அவர் பெற்றுத்
தந்ததை சக்கரவர்த்தி சிலாகித்துப் பேசிய போது அரசவையில் மொகபத்கானும் இருந்திருக்கிறான்…..
அவன் இப்போது மறுத்து, மால்சாபாய் மடல் அனுப்பிய பிறகு சம்மதித்து சக்கரவர்த்தி ஆணை
பிறப்பிப்பது அவனுக்கு கௌரவக்குறைவு என்பதோடு இவர்களுடன் உள்ள உறவையும் சேதப்படுத்திக்
கொண்டது போலாகும். இந்தப் பாழாய்ப் போன தக்காணப்பீடபூமியில் இருக்கும் வரை இவர்களை
அரவணைத்துப் போவதே உத்தமம் என்று தோன்றியது. அந்த ஜீஜாபாய் அவனைப் பார்க்கும் போதெல்லாம்
என் மகன் எங்கே என்று கேட்பதும் எரிச்சலை உருவாக்கி இருந்தது. அவளுக்காக ஷாஹாஜி ஒரு
துரும்பையும் தள்ளிப் போடப்போவதில்லை என்ற நிலைமை இருக்கும் போது அவளை இங்கே வைத்திருப்பதிலும்
அர்த்தமில்லை…..
மொகபத்கான்
யோசித்து விட்டுச் சொன்னான். “நீங்கள் சொல்லி நான் மறுக்கவா போகிறேன். கொண்டானா கோட்டைக்கு
ஜீஜாபாயை நான் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் சொன்னபடியே அங்கே ஒரு அரசகுலப் பெண்மணிக்குக்
கிடைக்கும் சௌகரியங்களையும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். ஆனாலும் அவளைக் கண்காணிப்பிலேயே
வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் நானிருக்கிறேன் பிரபு. ஏனென்றால் ஷாஹாஜிக்கு
அவள் வேண்டாதவளாக இருக்கலாம். ஆனால் அவனுக்கும், அவளுக்கும் முக்கியமாக இருக்கிற அந்தக்
குழந்தை கிடைக்கிற வரை கண்காணிப்பை நான் தவிர்க்க முடியாது. ஒருவேளை அந்தக் குழந்தை
கிடைத்தாலும் அதை நான் அவளிடம் ஒப்படைக்க முடியாது….. “
போத்தாஜிராவ்
சொன்னார். “மொகலாயப் பேரரசுக்கு அனுகூலமாக இல்லாத எதையும் உறவின் பெயரில் நாங்கள் உங்களிடம்
வேண்ட மாட்டோம் படைத்தலைவரே! அது குறித்துக் கவலை வேண்டாம்”
மொகபத்கான்
முழுவதுமாக அவர்களிடம் பணிந்து போனது போல் இல்லாமல் தன் அதிகாரத்தையும் நிலைநிறுத்திக்
கொண்ட திருப்தியில் தலையசைத்தான். “அவளைக் கொண்டானா கோட்டைக்கு அனுப்பும் முன் பார்த்துப்
பேச விரும்பினால் தாராளமாகப் பேசி விட்டுப் போங்கள் பிரபு”
போத்தாஜிராவ்
எழுந்தார். “ஷாஹாஜி போன்ஸ்லேயின் மனைவியிடம் பேச சிந்துகேத் அரசகுடும்பத்துக்கு எதுவும்
இல்லை படைத்தலைவரே….”
அவர்
போன பின் ஜீஜாபாயைப் பற்றி மொகபத்கான் நிறைய நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். அந்தப்
பெண் துரதிரஷ்டம் பிடித்தவளாகவே தோன்றினாள். கணவனுக்கும் அவள் வேண்டாம். பிறந்த வீட்டுக்கும்
அவள் வேண்டாம்…… இவர்களும் அவளைச் சிறைப்படுத்தி வைத்திருப்பது கௌரவக் குறைவு என்று
நினைக்கிறார்களே ஒழிய அவளை நேரில் பார்க்கவோ, அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று
அறியவோ எந்த ஒரு முயற்சியும் எடுக்க முன்வரவில்லை.
யோசித்துக்
கொண்டே போன போது அந்தப் பெண் மீதும் சந்தேகம் அவனுக்கு வந்தது. ஒருவேளை நடிக்கிறாளோ?
அவளை அழைத்து வந்த படைவீரர்களிடம் விசாரிக்க வேண்டிய முறையில் மொகபத்கான் விசாரித்து
விட்டான். யாரும் அவளுக்குத் தண்ணீரில் மயக்க மருந்தைக் கலக்கித் தரவில்லை என்று சத்தியம்
செய்து சொன்னார்கள்….. அத்தனை பேரும் பொய் சொல்ல வாய்ப்பில்லை….. ஆனால் அவள் அசந்து
தூங்குகையில் அவர்கள் ஆட்கள் குழந்தையைக் கடத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது…….
எதுவாக
இருந்தாலும் அந்தப் பெண் மென்மையானவள் அல்ல. ராஜவம்சத்துத் திமிர் அவளிடம் இருக்கிறது.
சிறைப்பிடிக்கப்பட்ட கைதி போலவே அவள் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. அயூப்கானை இகழ்ச்சியாகப்
பார்த்த விதமும், அப்படியே அவனிடம் பேசிய விதமும் நினைவுக்கு வந்தது. அவர்களிடமே கூட,
எங்கே என் குழந்தை என்று உருக்கமாகக் கேட்கிற மாதிரி காட்டிக் கொண்டாலும் அதற்குப்
பின்னும் ஒரு அதிகார தொனி இருப்பதாகவே தெரிகிறது. ”இந்த ஆள் தான் நீ சொன்ன அற்பப் பதரா?”
என்று அலட்சியமாக இங்கிதமே இல்லாமல் கேட்டாளே! இந்தத் திமிரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்
தான் ஷாஹாஜி இன்னொரு திருமணம் செய்து கொண்டு புத்திசாலித்தனமாக இவளைத் தூரமாகவே வைத்திருக்கிறான்
போலிருக்கிறது…..
ஷாஹாஜிக்குப் பகல் பொழுதுகளில் நிறைய வேலைகள் இருந்தன. சந்திக்க
வேண்டிய மனிதர்களும் நிறைய இருந்தார்கள். வீரர்களோடும், மற்ற சிறு படைத்தலைவர்களோடும்
பேச நிறைய விஷயங்கள் இருந்தன. எடுக்க வேண்டிய முடிவுகளும் நிறைய இருந்தன. ஆனால் இரவு
வேளைகளில் இளைய மகன் அதிகமாய் நினைவுக்கு வந்தான். தாயும் உடன் இல்லாமல் குழந்தை என்ன
கஷ்டப்படுகிறானோ என்று மனம் பரிதவித்தது. அவர் அனுப்பிய ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை.
அவர்கள் சிவாஜியோடு வந்து சேர்வார்கள் என்று ஒவ்வொரு நாளும் ஆவலோடு எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார். ஆனால் நாட்கள் வெறுமையாக நகர்ந்தன.
ஒரு
நாள் அதிகாலையில் அவர் அனுப்பிய ஆட்கள் சிவாஜி இல்லாமலேயே திரும்பி வந்தார்கள்.
“சத்யஜித்
கிடைக்கவில்லையா?” திகைப்புடன் ஷாஹாஜி கேட்டார்.
“கிடைத்தான்….”
மெல்லச் சொன்னான் அவர்களில் ஒருவன்.
“அவனுடன்
சிவாஜி இல்லையா?” பதற்றத்துடன் ஷாஹாஜி கேட்டார்.
“அவனுடன்
தான் சிவாஜி இருப்பதாகச் சொல்கிறான்…..”
“அப்புறம்
என்ன?”
“அவன்
சிவாஜியை உங்களிடம் ஒப்படைக்க மறுக்கிறான்..”
கோபத்தில்
ஷாஹாஜியின் கண்கள் சிவந்தன. “என்ன, என் மகனை என்னிடம் ஒப்படைக்க அவன் தயங்குகிறானா?
என்னவொரு துணிச்சல்? காரணம் என்ன சொல்கிறான். செல்வம் ஏதாவது அவன் எதிர்பார்க்கிறானா?”
“அப்படியெல்லாம்
இல்லை….” அதற்கும் தயக்கத்துடன் வந்தது பதில்.
“பிறகு
ஏன் மறுக்கிறான்?” பொறுமையிழந்து ஷாஹாஜி கேட்டார்.
“தலைவி
அவனிடம் ஒரு சகோதரியாக வேண்டுகோள் விடுத்திருந்தாராம். சிவாஜியைக் காப்பாற்றி அவரிடம்
ஒப்படைக்க வேண்டுமென்று. சிவாஜியை உங்களிடம் ஒப்படைப்பது அவரிடம் ஒப்படைப்பதற்கு சமமாகாது
என்கிறான். உயிரைக் கொடுத்தாவது சிவாஜியைக் காப்பாற்றிக் கடைசியில் அன்னையிடமே ஒப்படைப்பது
தான் அவன் தர்மம் என்கிறான்….. அது மட்டுமல்ல……” சொல்ல அந்த வீரன் தயங்கினான்.
தயக்கத்தைக்
கவனித்த ஷாஹாஜி “பரவாயில்லை சொல்” என்றார்.
”அவன்
சொல்கிறான்…… உங்களுக்கு வேறு மனைவியும், வேறு மகனும் உண்டாம். ஆனால் அவருக்கு சிவாஜியைத்
தவிர வேறு யாருமே இல்லையாம்…… அதனால் சிவாஜியை அவரிடம் ஒப்படைப்பது தான் நியாயமும்
தர்மமும் என்று சொல்கிறான்….”
(தொடரும்)
என்.
கணேசன்
The way of things those times superbly shown by you sir. Pride, family values, etc etc. Each person's point of view is shown as it is without making it good or bad. Excellent.
ReplyDeleteஜீஜாவின் பிறந்த வீட்டாரின் அணுகுமுறை சூப்பர். சத்யஜித் சாஹாஜிக்கு சிவாஜியைக் கொடுக்காததற்கு சொல்லும் காரணம் செம!
ReplyDeleteஜீஜாபாய் பாதுகாப்புக்கு அவரின் அம்மா வழி செய்து விட்டார்....
ReplyDeleteசிவாஜியை தன்னிடம், அனுப்ப மறுத்த பிறகு ஷாஹாஜியின் நடவடிக்கை என்னவாக இருக்கும்....?
ஜீஜாபாய் பாதுகாப்பு சற்று ஆறுதலாக உள்ளது....
ReplyDeleteசத்யஜித் சொன்னது அருமை...