Monday, February 5, 2018

சத்ரபதி – 6


பைசாப்பூருக்கு வந்த மறுநாளே ஜீஜாபாய் சத்யஜித்திடம் சொன்னாள். ”சகோதரனே, உன்னிடம் ஒரு வேண்டுகோள்…..”

சத்யஜித் ஒரு கணம் திகைத்து விட்டுச் சொன்னான். “ஊழியனிடம் ஆணை தான் பிறப்பிக்க வேண்டும் தாயே! என்னை சகோதரன் நிலைக்கு உயர்த்தி என்னை நீங்கள் தர்மசங்கடப்படுத்துகிறீர்கள்”

“ஊழியம் கூலியோடு முடிந்து விடுகிறது சகோதரனே. ஆனால் உறவுகள் மரணம் வரைத் தொடர்கின்றன. உன்னிடம் நான் விடுக்கும் கோரிக்கை வெறும் ஒரு ஊழியனால் செய்து முடிக்க முடியாதது. எனக்கு இப்போது தாய் வீட்டின் ஆதரவும் இல்லை. இருந்திருந்தாலும் உதவ என் தந்தையும், சகோதரனும் உயிரோடு இல்லை. அதனால் தான் உன்னிடம் வேண்டி நிற்கிறேன். எனக்கு உதவுவாயா?”

ஜீஜாபாயைப் போன்ற ஒரு அரசகுடும்பத்து வீரப்பெண்மணி சகோதரனாக அவனை எண்ணிப் பேசியதில் மனமுருகிப் போன சத்யஜித் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னான். “தாயே நீங்கள் ஆணையிடுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்?”

“எதிரிகள் என்னையும் சிவாஜியையும் கைது செய்ய என்னேரமும் இந்த பைசாப்பூர் கோட்டையைக் கைப்பற்றலாம் என்று அஞ்சுகிறேன். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால் நீ என் மகன் சிவாஜியோடு எப்படியாவது எதிரிகள் பார்வையிலிருந்து தப்பித்து விட வேண்டும். நிலைமை சரியாகிற வரை அவனை ரகசியமாய் வைத்திருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும்”

சத்யஜித் சொன்னான். “தாயே நீங்கள் அனாவசியமாக அஞ்சுகிறீர்கள். இது ஷிவ்னேரிக் கோட்டை அல்ல. நாம் இன்னொருவர் தயவிலும் இல்லை. பைசாப்பூர் தற்போது தங்கள் கணவரின் ஆதிக்கத்திற்கு வந்து விட்டது. அதனால் தான் அவர் ஷிவ்னேரியிலிருந்து இங்கே வந்து விடச் சொல்லி இருக்கிறார்….. ”

“தக்காணப்பீடபூமியில் எந்தக் கோட்டையும் எவர் வசமும் நீண்ட காலம் இருந்ததில்லை சகோதரனே! எதுவும் எப்போதும் கைமாறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் அந்த நேரத்தில் என் உயிருக்குயிரான மகனை நீ ரகசியமாய்க் கொண்டு போய் விட வேண்டும். செய்வாயா?”

“கண்டிப்பாகச் செய்கிறேன் தாயே. அப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள்?”

“ஆபத்தும் துன்பமும் எனக்குப் புதிதல்ல சகோதரனே! நான் சமாளிப்பேன். என் குழந்தையை மட்டும் நீ காப்பாற்று போதும். முகலாயர்கள் கோட்டைகளைக் கைப்பற்றுவதில் வல்லவர்கள். ஆனால் மலையின் சூட்சுமங்களும், ரகசிய மறைவிடங்களும் அவர்கள்  அறியாதவை….….” ஜீஜாபாய் குறிப்பாய் உணர்த்தினாள்.

புரிந்து கொண்ட சத்யஜித் அவளுக்கு வாக்குக் கொடுத்தான்….


தெற்கின் நுழைவாயிலாக இருந்த அகமதுநகரை மிக முக்கியமான பகுதியாக முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் புரிந்து வைத்திருந்தார். ஒன்று வசப்பட்டால் மீதமுள்ள பகுதிகளும் வசப்படும் என்று கணக்குப் போட்ட அவர் அகமதுநகர் அரச வம்சத்தினரின் அத்தனை வாரிசுகளையும் கொன்று விடும்படி ஆணையிட்டார். அதில் அரசகுலத்துக் கர்ப்பிணிப் பெண்களையும் கூடக் கொன்று விடும்படி உத்தரவிட்டார். எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரி அந்தப் பகுதியின் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை.

முழுவதுமாக அகமதுநகர் அரசை தன் ஆதிக்கத்தின் கீழே கொண்டு வர நினைத்த ஷாஜஹானுக்கு ஷாஹாஜி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில அகமதுநகரின் பகுதிகளைக் கைப்பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஷாஹாஜியின் கை ஓங்குவதும் அவருடன் பீஜாப்பூர் சுல்தான் கை கோர்த்ததும் ஆபத்தாகத் தோன்றவே ஷாஜஹான் அகமதுநகரின் மிக முக்கியக் கோட்டையான தௌலதாபாத்தை முற்றுகையிட்டு வென்றிருந்த தளபதி மொகபத்கானிடம் ஷாஹாஜியையும் பீஜாப்பூர் சுல்தானையும் அடக்கச் சொன்னார்.


ப்போது கணவனே முகலாயர்களின் முக்கிய எதிரியாகி விட்ட தகவல் ஜீஜாபாயை வந்தடைந்தது. அவள் பயப்பட்ட நிலைமை வந்து விட்டது. . இனி எதுவும் நடக்கலாம்…..

ஒருநாள் மெல்ல சிவாஜியிடம் ஆரம்பித்தாள். “சிவாஜி, திடீரென்று நம் எதிரிகள் வந்தால் நீ என்ன செய்வாய்?” கேட்டது தான் கேட்டு விட்டாளேயொழிய அவனுக்குக் கேள்வி எந்த அளவு புரியும் என்று அவளுக்குத் தெரியவில்லை.


சிவாஜியிடம் விளையாட்டு வாள் இருந்தது. அவன் அதை எடுத்துக் கொண்டே தாயிடம் மழலையில் சொன்னான். “இதை எடுத்து எதிரியைக் குத்தி விடுவேன்”

ஜீஜாபாய் புன்னகைத்தாள். “அதெல்லாம் நீ வளர்ந்து பெரியவனானவுடன் செய்யலாம்….. அது வரை, நீ முழு பலசாலி ஆகும் வரை, பதுங்கி இருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்…..”

“அது எப்படி?” மழலை மாறாமல் சிவாஜி கேட்டான்.

“நீ சத்யஜித் மாமாவுடன் போய் விடு. அவர் உன்னைப் பத்திரமாய் பார்த்துக் கொள்வார்.”

“அப்படியானால் நீ?”

“நான் இங்கேயே இருப்பேன்….. நான் உன்னுடன் வந்தால் என்னுடன் சேர்ந்து உன்னையும் கண்டுபிடித்து விடுவார்கள்….”

குழந்தை சிவாஜி முகம் வாடியது. “அப்படியானால் நீ என்னுடன் வர மாட்டாயா?”…… எனக்கு சாப்பிட எல்லாம் யார் தருவார்கள்?”

அவன் முன் அழுது அவனைப் பலவீனப்படுத்திவிடக்கூடாது என்று ஜீஜாபாய் பெரும்பாடு பட்டாள். “சாப்பிட சத்யஜித் மாமா தருவார். நீ சமர்த்தாக அவருடன் இருக்க வேண்டும்…. சரியா?”

சிவாஜி தலையாட்டினாலும் அவன் முகத்தில் குழப்பமும் கவலையும் தெரிந்தன. “என்னுடனும் சத்யஜித் மாமாவுடனும் யார் இருப்பார்கள்?”

ஜீஜாபாய் சொன்னாள். “கடவுள் இருப்பார்….”

“அப்படியானால் சரி” என்று சிவாஜி ஓரளவு நிம்மதியடைந்தான். தனியாகப் போய் ஜீஜாபாய் ரகசியமாய் அழுதாள்…..


மொகபத்கான் தக்காணப் பீடபூமிக்கு அனுப்பப்பட்டதை விரும்பவில்லை. தக்காணப்பீடபூமியின் தட்பவெப்பநிலை அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. டெல்லியின் வசதி வாய்ந்த ஆடம்பரமான மாளிகைகளுக்கு எதிர்மாறாக இருந்தன தக்காணப்பீடபூமியின் எண்ணற்ற கோட்டைகள்.  வெளியேயும் வசதிக்குறைவு. உள்ளேயும் வசதிக்குறைவு. போர்ச் சூழ்நிலையோ முடிகிற மாதிரி தெரியவில்லை. முடிந்து தொலைந்தால் வெற்றிகரமாக டெல்லிக்குத் திரும்பலாம். சக்கரவர்த்தியிடம் சன்மானமாகப் பொன்னும் பொருளும் அல்லாமல் ஏதாவது நல்ல பதவியும் கூடக் கிடைக்கலாம். ஆனால் போர் முடிய விடாமல் ஷாஹாஜி போன்ஸ்லே தடையாக இருப்பது மட்டுமல்ல நள்ளிரவில் வந்து கொரில்லாத் தாக்குதல்கள் நடத்தி முகலாயப் பெரும்படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்து விட்டுப் போகும் வழக்கமும் ஷாஹாஜியிடம் இருந்தது.  உறக்கத்திலிருக்கும் முகலாயப்படை சுதாரிப்பதற்குள் காற்றாய் ஷாஹாஜியும் அவரது ஆட்களும் பறந்து போய் விடுவார்கள்.
                       
தௌலதாபாத் அருகே முகாமிட்டிருக்கையில் அப்படி இருமுறை தாக்குதலை நிகழ்த்தி விட்டு ஷாஹாஜி போயிருந்ததால் உறக்கம் கூடச் சரியாக வராமல் பல இரவுகளில் மொகபத்கான் விழித்திருந்தான். எல்லாமாகச் சேர்ந்து மொகபத்கானுக்கு ஷாஹாஜி மேல் கடுங்கோபத்தை உண்டாக்கியிருந்தது. “இந்த வகைத் தாக்குதல்களை ஷாஹாஜி  எங்கே கற்றான்…..” என்று அகமதுநகரப் படைத்தலைவன் ஒருவனிடம் ஒருநாள் மாலை மொகபத்கான் கேட்டான்.

”ஃபதேகானின் தந்தை மாலிக் ஆம்பரிடமிருந்து தான் ஷாஹாஜி இந்த கொரில்லா போர் முறையைக் கற்றுக் கொண்டான் தலைவரே. ஃபதேகான் தன் தந்தையின் திறமையிலும், குணத்திலும் பத்தில் ஒரு பங்கு வைத்திருந்தால் கூட அகமதுநகருக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அந்த அளவு மாலிக் ஆம்பர் வீரரும் புத்திசாலியுமாவார்…. ஷாஹாஜி அவரின் நிழலாக இருந்து அத்தனையும் கற்றுக் கொண்டான்….. அவனுடன் இருக்கும் வீரர்களுக்கும் அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறான்….”

மொகபத்கான் யோசித்து விட்டுக் கேட்டான். “அவன் மனைவியும் ஒரு குழந்தையும் ஷிவ்னேரிக் கோட்டையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே… இன்னும் அங்கே தான் இருக்கிறார்களா?”

“சில நாட்கள் முன்பு அவர்கள் பைசாப்பூர் கோட்டைக்கு வந்து விட்டதாகக் கேள்வி. பைசாப்பூர் இப்போது ஷாஹாஜியின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறது……”

மொகபத்கான் யோசித்தான். பைசாப்பூர் கோட்டை தௌலதாபாத், மஹூலிக் கோட்டைகள் அளவுக்கு வலிமையான கோட்டை அல்ல. அந்தக் கோட்டையைப் பிடிப்பதால் ஷாஹாஜியின் மனைவியையும், குழந்தையையும் சிறைப்பிடிக்கலாமேயொழிய வேறெந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவர்களைச் சிறைப்பிடிப்பதன் மூலம் ஷாஹாஜியை வழிக்குக் கொண்டு வர முடியும் என்றால் அது பெரிய பயன் தான். சீக்கிரமாகப் போரை முடித்துக் கொண்டு  டெல்லி போய்ச் சேரலாம். போதும் இந்த அகமது நகர அரசியலும், காட்டுத்தனமான கொரில்லாப் போர் முறையும், பஞ்சத்தில் இருக்கும் பிரதேசங்களும்…….

இந்த சிந்தனையில் மொகபத்கான் தங்கியிருந்த போது விதியே அனுப்பியது போல் அகமதுநகரின் ஒரு கோட்டைத் தலைவன் அவனைச் சந்திக்க வந்தான்….


(தொடரும்)
என்.கணேசன் 

5 comments:

  1. Very interesting events. these incidents are not known to most of us. It is good to read in your writing.

    ReplyDelete
  2. ஜீஜாபாய் தன் கஷ்டங்களை எதிர்கொள்ளும் விதம் சூப்பர். திக் திக் சூழ்நிலையை வரலாற்றுக் கதையிலும் கூட எப்படி சார் மெய்ண்டெய்ன் பண்றீங்க?

    ReplyDelete
  3. தாயும்..குழந்தையும்.. உரையாடும்‌ இடம்... அருமை சார்.... சேகத்தை ஏற்படுத்துகிறது...

    ReplyDelete
  4. கொரில்லா போர் முறையை உருவாக்கியது மாவீரர் சிவாஜி என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனரே? அது உண்மையா இல்லை நீங்கள் எழுதியிருப்பது உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. கொரில்லா போர் முறையைப் பயன்படுத்திப் பெருவெற்றிகள் பெற்றவர் சிவாஜி என்றாலும் அது அவருக்கு முன்பே அவர் தந்தை உட்பட பலரும் பயன்படுத்திய முறையாக இருந்தது. அதில் பல நுட்பங்களைக் கூட்டி மெருகுபடுத்தியவர் என்று வேண்டுமானால் சிவாஜியைக் கூறலாம்.

      Delete