மாஸ்டர்
தொடர்ந்து சொன்னார். “எதிரியை க்ரிஷ் மூலமாகத் தான் கையாள வேண்டும் என்கிற நிலைமையில்
இருக்கும் போது க்ரிஷ் என்னிடம் சில ரகசியக்கலைகள் கற்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்
கொண்டான். பலவிதங்களில் அதை நான் தவிர்க்கப் பார்த்தேன். அவனாகப் பின் வாங்குவானா என்று
பார்த்தேன். ஆனால் அவன் நான் வெளிப்படையாக மாட்டேன் என்று சரியான காரணத்தோடு சொன்னால்
தான் அதை ஏற்றுக் கொள்ளும் உறுதியோடு இருந்தான். நான் என்ன சொல்லி மறுப்பேன்? என் குருவைக்
கொன்றவன் ஆள் அவன் என்றா? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அப்படி இருந்தாலும் அதில்
அவன் பங்கு என்ன இருக்கிறது?”
“எந்தத்
தகுதியும் வெளிப்படையாகத் தெரியாத, தான் தோன்றியாய் சுற்றிக் கொண்டிருந்த என்னிடம்
ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்து என்னைக் கட்டாயப்படுத்திக் கூட்டிக் கொண்டு வந்து எனக்கு
எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்த குருவின் சிஷ்யன் நான். எல்லாத் தகுதியும் இருந்து,
அறிவில் குறையில்லாத, குணத்திலும் எந்தக் களங்கமும் இல்லாத ஒருவன் தானாக வந்து கற்றுக்
கொடுங்கள் என்று கேட்கும் போது மறுப்பது என்ன நியாயம்? அது நான் கற்ற கல்விக்கும்,
குருவுக்கும் நான் செய்கிற மரியாதையாகுமா? என் குருவின் ஆத்மா என்னை மன்னிக்குமா? இந்த
இயக்கத்தின் தலைவனாக நான் யோசிப்பதற்கு முன் மனிதனாக, நான் கற்ற ஞானத்தின் நியாயத்தின்படி
நான் யோசிக்க வேண்டியிருந்தது.”
“எனக்கு
அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. எதிரியின் ஆளாய் அவன்
இருந்தாலும் கூட அவன் சிந்தனையில், அவன் அறிவில் நம் தர்மத்தையும், ஞானத்தையும் கூட
நிறுத்தி வைப்பது என் தர்மம் என்று எனக்குத் தோன்றியது. ஏற்றுக் கொண்டேன். என் தனிமனித
தர்மம் இந்த இயக்கத்தின் தலைவன் என்கிற தர்மத்திற்கு எதிராகி விட்டது என்று நீங்கள்
நினைத்தால் நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்தத் தலைமைப் பதவியை விட்டு இறங்கத் தயாராக
இருக்கிறேன்.”
மாஸ்டர்
பேசி விட்டு அமர்ந்து விட்டார். ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது. மர்ம மனிதன்
அங்கிருந்தவர்களைப் பார்த்தான். இது வரை கோபம் தெரிந்த முகங்களில் குழப்பம் தெரிந்தது.
மறைமுகமாய் அவனாகத் திட்டமிட்டுத் தூண்டி விட்ட கோபம் இப்படி குழப்பத்தின் மட்டத்திற்குச்
சரிந்தது அவனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. யாராவது எழுந்து “தனிமனித தர்மம் அது
இது என்று எப்போது இயக்கத் தலைவனாக உன்னால் செயல்பட முடியவில்லையோ, அப்போது நீ பதவி
விலகுவது தான் சரி” என்ற வார்த்தைகளை ஆணித்தரமாகச் சொன்னால் கண்டிப்பாக இவர்கள் திரும்பவும்
பழைய நிலைக்கு மாறுவார்கள் என்று உறுதியாக நினைத்தான்….
ஒரு
முதிய பெண்மணி பேச எழுந்து நின்றார். அவர் உயர்நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாக இருந்து
ஓய்வு பெற்றவர். பெயர் கிருஷ்ணவேணி. ”மாஸ்டர் தனிமனித தர்மமே மற்ற எல்லாத் தர்மங்களுக்கும் முன்னோடியான
தர்மம். அந்த வகையில் நீங்கள் எடுத்த முடிவு தான் சரி. நீங்கள் சொல்வதைப் பார்க்கையில்
16000 கிலோமீட்டர்கள் தொலைவுக்குச் சில நிமிடங்களில் க்ரிஷை எடுத்துக் கொண்டு போகும்
அளவு சக்தி படைத்தவன் நம் எதிரி என்று தெரிகிறது. அப்படிப்பட்ட சக்தி படைத்தவன் க்ரிஷுக்குச்
சொல்லிக் கொடுக்க முடியாத எந்தப் பெரிய சக்திக்கலை பற்றியும் நீங்கள் சொல்லிக் கொடுத்து
விட முடியாது. அப்படி இருக்கையில் க்ரிஷை ரகசியக்
கலை கற்க உங்களிடம் வரவழைத்தது அவன் இயல்பான நல்ல கர்மாவாக இருக்கலாம், இல்லை உலக நன்மைக்காக
நம்மை போன்ற மனிதர்கள் செய்து வரும் பிரார்த்தனையாக இருக்கலாம். அதனால் க்ரிஷ் உங்களிடம்
வந்ததும், அவனை நீங்கள் சிஷ்யனாக ஒத்துக் கொண்டதும் நன்மைக்கே. நாம் எதிர்பார்ப்பது
போல ஒருவேளை க்ரிஷை எதிரி தீமைக்காகப் பயன்படுத்தும் நிலை வருமானால் அதற்கு இசையாத
ஒரு மன உறுதியை நீங்கள் சொல்லித்தரும் ரகசியக் கலைகளோடு கலந்திருக்கும் ஞானம் க்ரிஷுக்கு
தரலாம். அதனால் நல்லதே நடந்திருக்கிறது. தலைமைப் பதவியை விட்டு விலகும் எண்ணத்தைத்
தயவு செய்து கைவிடுங்கள்”
உயர்நீதிமன்ற
நீதிபதியாக இருந்தவர் என்பதால் பல கோணங்களில் இருந்து பார்த்து முடிவுக்கு வரும் திறமையும்
அதைச் சரியாக வார்த்தைப்படுத்திச் சொல்ல முடிந்த திறமையும் இயல்பாகவே பெற்றிருந்த கிருஷ்ணவேணி பேசி விட்டு அமர்ந்த போது குழப்ப முகங்களில் தெளிவு தெரிய ஆரம்பித்தது. பலரும்
தலையாட்டினார்கள். ’கெடுத்தாளே கிழவி’ என்று மர்ம மனிதன் மனதிற்குள் பொங்கினான்.
மாஸ்டர்
எழுந்து நின்று அந்த மூதாட்டியைத் தலைதாழ்த்தி வணங்கினார்.
மாணிக்கத்திற்கு
நடப்பதெல்லாம் கனவு போல் இருந்தது. ராஜதுரை புகழ்பெற்ற மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்
பிரிவில் இருந்தார். அதற்கு வெளியே மாணிக்கம், கமலக்கண்ணன், வேறு சில அமைச்சர்கள் அமர்ந்திருந்தார்கள்.
மாணிக்கம் முகத்தை சோகமாக வைத்திருந்தார். கமலக்கண்ணன் நிஜமாகவே சோகமாய் இருந்தார்.
நேற்று முழுவதும் அழுது கொண்டிருந்தவர் இன்று டாக்டர்கள் “ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி
விட்டார்” என்று சொன்ன பிறகு தான் ஆறுதல் அடைந்தார். இப்போது விசாரிக்க வருபவர்களிடம்
எல்லாம் “அண்ணன் குணமாயிடுவார்” என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்…..
மாணிக்கத்திற்கு
மனோகர் எப்படி இதை சாதித்தான் என்று விளங்கவில்லை. நேற்று அதிகாலை ராஜதுரைக்கு மாரடைப்பு
என்ற செய்தி வரும் வரை இப்படி நடக்கும் என்கிற முழு நம்பிக்கையும் அவருக்கு வந்து விட்டிருக்கவில்லை.
ஆனால் அந்தச் செய்தியைக் கேட்ட பின்பு அவன் இதைப் போல் மற்றதையும் நடத்திக் காட்டுவான்
என்ற நம்பிக்கை வந்து விட்டது. நேற்று முன்தினம் வந்து பேசிவிட்டுப் போன அவன் பிறகு
தொடர்பு கொள்வான் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவன் தொடர்பு கொள்ளவில்லை. அதிகமாய்
பேசுவதில் அவனுக்கு ஈடுபாடு இல்லை என்பதும், செயலாலேயே பேசுபவன் அவன் என்பதும் நன்றாகப்
புரிந்தது. இப்படிப்பட்டவன் ஆபத்தானவன் என்ற போதும் அவனைப் பகைத்துக் கொள்ளாத வரையில்
நமக்குப் பிரச்னை இல்லை என்று அவர் ஆறுதல் அடைந்தார். அவன் சொன்னது போலவே சங்கரமணி
எம் எல் ஏக்களிடம் இப்போது பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்….
திடீரென்று
கமலக்கண்ணன் அவரிடம் சொன்னார். “எதுக்கும் நம்ம மாஸ்டர் சுவாமி கிட்ட கொஞ்சம் பேசிப்பாரேன்
மாணிக்கம். அவர் நம்ம அண்ணனை ஒரு தடவை வந்து பார்த்தால் அண்ணன் இன்னும் சீக்கிரமா குணமாயிடுவாருன்னு
தோணுது”
மாஸ்டரின்
பெயரைக் கேட்டவுடனேயே மாணிக்கத்துக்கு உள்ளுக்குள் பகிர் என்றது. அந்த ஆளைப் போய் பார்ப்பதா?
ஆனால் தன் எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் போன் செய்வது போல் நடித்து விட்டு “லைன்
கிடைக்க மாட்டேங்குது கண்ணன்” என்றார்.
பத்து
நிமிடம் கழித்து கமலக்கண்ணன் மறுபடி சொன்னார். “இப்ப செஞ்சு பாரேன்….” என்றார். நல்ல
வேளையாக உதய் அந்த சமயமாக அங்கு வந்தான். அவன் ”மாஸ்டர் அசிஸ்டெண்ட் நம்பர் என் கிட்டயே
இருக்கு. நான் பேசறேன்” என்று சொல்லி சற்று தள்ளிப் போய் போன் செய்தான். மாணிக்கத்திற்கு
திக் திக் என்றிருந்தது. ‘இவன் கூப்பிட்டு அந்த ஆள் வந்து விடுவாரோ. அப்படி வந்தால்
அந்த நேரமாகப் பார்த்து எங்காவது போய் விட வேண்டியது தான். அண்ணனுக்காக ஏதாவது கோயிலுக்குப்
போவதாகச் சொன்னால் நம்புகிற மாதிரி இருக்கும்…’
உதய்
போனில் பேசி விட்டு வந்தான். “மாஸ்டரும் சுரேஷும் ஹரித்வார்ல இருக்காங்க. வர ரெண்டு
நாளாவது ஆகுமாம்”
மாணிக்கம்
தன் மனதிலிருந்து பெரிய பாரம் இறங்கியது போல் உணர்ந்தார்.
உதய்
“க்ரிஷும் என் கூடவே வந்தானே, எங்கே காணோம்” என்று சொன்னபடியே தம்பியைப் பார்வையால்
தேடினான்.
க்ரிஷ்
வந்திருக்கிறான் என்றதும் மாணிக்கத்தின் மனதில் இனம் புரியாத சின்ன பயம் படர ஆரம்பித்தது.
மாஸ்டரிடம் அவன் ஏதோ கற்றுக் கொள்ளப் போகிறான் என்ற தகவல் கேள்விப்பட்டதிலிருந்தே அவர்
அடி மனதில் உணர ஆரம்பித்திருந்த பயம் அது. நினைத்தவுடன் பெரிய பாதுகாப்பு வளையத்தில்
இருக்கிற முதலமைச்சரையே இந்த நிலைமைக்குக் கொண்டு வர முடிந்தவன் கூட க்ரிஷைக் கொல்ல
முயன்று அது தோல்வியில் முடிந்தது என்ற நினைவும் அடிக்கடி வந்து போக ஆரம்பித்திருந்தது.
அவனைப் பார்த்து அவர் மன அமைதி இழந்த அந்த நேரத்தில் மனோகரின் அலைபேசி அழைப்பு அவருக்கு
வந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
ReplyDeleteகிருஷ்ணவேணி யின் தெளிவு மர்ம மதனுக்கு ஒரு பின்னடைவு ....
க்ரிஷ் மாணிக்கத்தின் மனதில் இருப்பதை அறிந்து கொள்வானா ???
நாவல் வாங்கி விட்டேன். சஸ்பென்ஸ் குறையும் ஒரு கட்டத்தில் புக்கை மூடி வைத்துத் தூங்கலாம் என்றால் சஸ்பென்ஸ் குறையவே மாட்டேன்கிறது. ஹரிணி கடத்தப்பட்டிருக்கும் காட்சியில் இருக்கிறேன். இன்னும் 200 பக்கத்துக்கும் மேல் படிக்க இருக்கிறது. படித்து முடித்தால் ஐயோ முடிந்து விட்டது என்று தோன்றுமே என்ற கவலை. என்ன சார் செய்வது? சூப்பர் சுவாரசியம் சார். நிஜமாகவே இது ஒரு க்ளாசிக் தான்.
ReplyDeleteஅருமை!!!! புத்தகமாக வெளிவந்துவிட்டதா... உங்கள் கதைகளை இடையில் நிறுத்தாமல் படிப்பதென்பது தனி சுவாரஸ்யம்....
ReplyDeleteSuperb Sir. Great going.Judge's view points are really intelligent. Political scenario is apt and thrilling.
ReplyDeleteநான் புத்தகக் கண்காட்சியில் வாங்கி விட்டேன். இது போல் தடிமனான நாவல்கள் வருவது அபூர்வமாகி விட்டது. அப்படி தடிமனான நாவல்கள் வந்தாலும் சுவாரசியமாக இருப்பது அபூர்வத்திலும் அபூர்வம். பெரிய நாவல்கள் குறைந்து வரும் சூழலில் உங்கள் பெரிய நாவல்கள் தொடர்ந்து வெளிவருவது மகத்தான வெற்றியென்றே சொல்வேன். பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
ReplyDeleteமாஸ்டரின் தெளிவான,வெளிப்படையான பேச்சு கலக்கல்... கிருஷ்ணவேனி நீதிபதி..தயங்காம....நல்ல நேரத்துல வந்து... சரியா பேசுனாங்க...
ReplyDeleteபாவம் எதுக்கும் சம்பந்தமே இல்லாத... அந்த நல்ல மனிதனை கொலை செய்ததை படிக்கும் போது... சிறிய கவலை... தோன்றுகிறது...