Monday, January 1, 2018

சத்ரபதி – 1


ஷிவ்னேரி கோட்டை மேல்தளத்தில் இருந்த சிறப்புக் காவலன் வெகுதூரத்தில் எறும்புகளாய் ஊர்ந்து வந்து கொண்டிருக்கும் உருவங்களைக் கண்களைச் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கூர்மையும் அனுமானத் திறமையும் அபாரமானது. நகரும் வேகத்தைப் பார்க்கையில் அவர்கள் குதிரைகளில் மிக வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வருபவர்கள் நண்பர்களா, பகைவர்களா என்று தெரியவில்லை. யார் என்பது அவர்களை முந்திக் கொண்டு அவர்களை விட வேகமாக ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கும் ஒற்றன் மூலம் தெரிந்து விடும். வருபவர்களின் எண்ணிக்கை அறுபதிலிருந்து எண்பதற்குள் இருக்கும் என்று சிறப்புக் காவலனுக்குத் தோன்றியது. இந்த வேகத்திலேயே வந்தார்களானால் ஒன்று அல்லது ஒன்றே கால் நாழிகைக்குள் இங்கு வந்து சேர்ந்து விடுவார்கள் என்று கணக்குப் போட்டவன் கூக்குரலிட்டு கீழ்த் தளத்தில் இருந்து இரு காவலர்களை மேல் தளத்திற்கு வரவழைத்தான். அவர்களைக் காவலுக்கு நிறுத்தி விட்டு கோட்டைத் தலைவருக்குத் தகவல் தர விரைந்தான். போகிற வழியில் அவன் மற்ற காவலர்களையும் எச்சரிக்கை செய்ய அபாய மணி அடிக்கப்பட்டது. கோட்டையின் நூற்றுக் கணக்கான காவலர்கள் அவரவர் காவல் இடத்திற்கு தங்கள் ஆயுதங்களுடன் விரைந்தார்கள். அந்தக் காவலன் கோட்டைத் தலைவரின் இருப்பிடத்தை அடைவதற்கு முன், அபாய மணி ஓசை கேட்டு அவரே வேகமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவன் தகவலை அவரிடம் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டே அவர்  கோட்டையின் மேல்தளத்திற்கு விரைந்தார்….

நம் கதைக்களக் காலமான பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதத்தின் தக்காணப் பீடபூமி மூன்று சுல்தான்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அகமதுநகர், பீஜாப்பூர், கோல்கொண்டா என்ற அந்த மூன்று பகுதி சுல்தான்களும் மாறி மாறித் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும், சமாதானமாய் போய்க் கொண்டும் வாழ்ந்த காலம் அது. அவர்கள் ராஜ்ஜியத்துக்குள்ளேயே பல உள்நாட்டுக் கலவரங்களும் வெடிக்கும். அதில் மற்ற சுல்தான்களின் பங்கும் இருக்கும். அதை அடக்குவது, மற்றவர்களுடன் போரிடுவது, வெற்றி தோல்விகளின் முடிவில் தங்கள் ராஜ்ஜியத்தின் சில பகுதிகளையும், குதிரைகள் யானைகளையும், பெரும் செல்வத்தையும் தந்தும், எடுத்துக் கொண்டும், சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்வது தொடர்ந்து நடக்கும். எந்த உடன்படிக்கையும் நீண்டகாலம் நீடிக்காது. தோற்றவன் வலிமையை வளர்த்துக் கொண்டவுடன் மறுபடி போருக்குக் கிளம்பி பழைய சரித்திரம் சிறு சிறு மாறுதல்களுடன் திரும்பத் திரும்ப எழுதப்படும். இவர்களுடன் கூட்டுச் சேரவும், சண்டையிடவும் அடிக்கடி வடக்கிலிருந்து முகலாயப் பேரரசின் ஒரு படையும் வந்து சேரும். இவர்களுக்கிடையே அணிகள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்தக் காலத்தில் இவர்கள் மட்டுமல்லாமல் சிலர் தனிப்படைகள் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள் போல அங்கங்கே இவர்களுக்கு நடுவில் இருந்தார்கள். அவர்களும் ஒருசில கோட்டைகள், படைகள், வைத்துக் கொண்டு சுயேச்சையாக இயங்கி வந்தார்கள். அவர்களும் தங்களுடைய இலாப நஷ்டங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கூட்டணி வைத்துக் கொள்வதும், பிரிவதும், அணி மாறுவதுமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு தனிப்படையின் தலைவர் தான்  ஷிவ்னேரிக் கோட்டையின் தலைவரான ஸ்ரீனிவாசராவ். 

அவர் கைவசம் இருந்த இந்த ஷிவ்னேரிக் கோட்டை வலிமையான கோட்டைகளில் ஒன்று. பூனாவில் இருந்து சுமார் 56 மைல் தொலைவில் இருந்த இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் குடும்பங்கள் அடைக்கலம் புகலாம். அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை வெளியுதவி இல்லாமல் அவர் அந்தக் கோட்டையில் அடைக்கலம் தர முடியும் அளவு நிதி நிலைமையும், தன்னிறைவான அமைப்பும் இருந்தது.

இப்படி சுல்தான்களும், முகலாயப் பேரரசரும், தனிப்படைத் தலைவர்களும் விளையாடும் இந்த சரித்திரக் களத்தில் யாருக்கும் யாரும் நிரந்தர நண்பர்களும் அல்ல, நிரந்தரப் பகைவர்களும் அல்ல. இன்றைய நண்பன் நாளைய பகைவனாகலாம். எதிர்கால நண்பனாக மறுபடி மாறலாம். அதே போல் இன்றைய பகைவன் நாளைய கூட்டாளியாகலாம். எதிர்கால எதிரியாக மறுபடியும் மாறலாம். இங்கே மாற்றம் ஒன்றே நியதி. அப்போதைய லாபம் ஒன்றே குறிக்கோள். எல்லோருக்குமே எதிர்காலம் நிச்சயமில்லாத ஒன்றாய் இருந்ததால் எதிர்காலத்தைப் பற்றி யாரும் பெரிதாய் சிந்தித்ததில்லை. எதிர்காலம் என்று ஒன்றிருந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்….


ஸ்ரீனிவாசராவ் கோட்டையின் மேல்தளத்திற்குச் சென்று சேர்ந்த போது குதிரையில் வேகமாகக் கோட்டை வாசலில் வந்திறங்கிய ஒற்றன் “வருவது ஷாஹாஜி போன்ஸ்லே” என்று கத்தினான். 

ஷாஹாஜி போன்ஸ்லே அகமதுநகர சுல்தான் நிஜாம்ஷாவிடம் படைத்தளபதியாக இருப்பவர். அகமதுநகர் அரசின் தற்போதைய சுல்தான் இரண்டாம் நிஜாம் ஷா சொந்த புத்தி இல்லாதவனாகவும், பலவீனமானவனாகவும்  இருந்ததோடு நல்ல அறிவுரைகளை ஏற்கவும் தெரியாதவனாக இருந்ததால் ஷாஹாஜி போன்ஸ்லே பல சிரமங்களை உணர்ந்து வந்தார். இதனிடையே முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் பெரும்படை ஒன்று அகமதுநகர மஹூலிக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது. ’கூடுமான வரை ஆறு மாத காலம் வீரத்தோடு தாக்குப் பிடித்த ஷாஹாஜி போன்ஸ்லேயால் முகலாயப் பெரும்படையை அதற்கு மேல் தாக்குப்பிடித்திருக்க வழியில்லை. அதனால் அவர் தான் தப்பித்து வந்து கொண்டிருக்கிறார்…..!’ அதை யூகித்து, வருவது எதிரியல்ல என்பதால் ஸ்ரீனிவாசராவ் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கூடவே இந்த மனிதரிடம் எந்த வகையில் ஆதாயம் பெறலாம் என்கிற சிந்தனை ஸ்ரீனிவாசராவின் மனதில் ஓட ஆரம்பித்தது. பல வருடங்களாக ஷாஹாஜி போன்ஸ்லேயும் அவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிவார்கள், பல களங்களில் ஒரே அணியில் சேர்ந்து போராடி இருக்கிறார்கள் என்றாலும் தற்போதைய சூழ்நிலையைக் கொள்முதலாக்க எண்ணியபடியே அவர் காவலாளிகளுக்கு ஷாஹாஜி போன்ஸ்லேயை வரவேற்று அழைத்துவர உத்தரவிட்டு தன் சிறு மாளிகைக்குத் திரும்பினார். 

சிறிது நேரத்தில் ஷாஹாஜி போன்ஸ்லேயும் அவரது ஆட்களும் ஷிவ்னேரிக் கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாஹாஜியின் மனைவி ஜீஜாபாயும், அவர்களுடைய நான்குவயது மகன் சாம்பாஜியும்  இருந்தார்கள். ஷாஹாஜியும், அவர் மனைவி ஜீஜாபாயும், சாம்பாஜியும் மிகுந்த மரியாதையுடன் காவலர்களால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்ரீனிவாசராவும் குடும்பத்தினரும் அவர்களது சிறு மாளிகையின் வாசலில் அவர்களை வரவேற்க நின்றிருந்தனர். ஸ்ரீனிவாசராவும், ஷாஹாஜியும் அணைத்து அன்பைத் தெரிவித்துக் கொண்டார்கள். மனைவியையும், சாம்பாஜியையும் ஸ்ரீனிவாசராவ் குடும்பத்தினரின் உபசரிப்பில் விட்டு விட்டு ஷாஹாஜி ஸ்ரீனிவாசராவைத் தனியறைக்கு அழைத்துச் சென்றார்.

“என்ன நண்பரே. தாக்குப்பிடிக்க முடியவில்லையா?” ஸ்ரீனிவாசராவ் கவலையுடன் கேட்டார்.

“ஆம் நண்பரே, ஒரு தற்காலிகப் பின்னடைவு. இந்தச் சூழலில் உங்களிடம் ஒரு உதவியைத் தேடி வந்திருக்கிறேன். நண்பரே” ஷாஹாஜி உடனடியாக விஷயத்துக்கு வந்தார். ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானதாக இருப்பதாலும், உயிரைப் பணயம் வைத்துக் கிளம்பிய பயணத்தின் இடையே இருப்பதாலும் மற்ற உபசார வார்த்தைகள் பேச அவருக்கு நேரமில்லை.

“சொல்லுங்கள் நண்பரே. தக்க சமயத்தில் உதவுவதற்காக அல்லவா நண்பர்கள் இருக்கிறார்கள்” என்றார் ஸ்ரீனிவாசராவ்.

“என் மனைவியை இங்கே விட்டுச் செல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். நிறைமாத கர்ப்பிணியை நான் இவ்வளவு தூரம் குதிரையில் அழைத்து வந்திருப்பதே ஆபத்து. இனியும் அவளை என்னோடு அழைத்துப் போவது அவள் உயிருக்கும் சிசு உயிருக்கும் ஆபத்தாகவே முடியும். அதனால் சில மாதங்கள் அவள் இங்கிருக்கட்டும்….. பின் அவளை அழைத்துச் செல்கிறேன்….”

ஸ்ரீனிவாசராவ் யோசிப்பது போல் காட்டினார். பின் தயக்கத்துடன். “அடைக்கலம் கொடுத்திருப்பது முகலாயர்களுக்குத் தெரிந்தால் ……” என்று இழுத்தார். இது பேரத்தின் துவக்க வார்த்தை என்பது தெரிந்த போதிலும் ஷாஹாஜிக்கு அது வருத்தம் தரவில்லை. இங்கே மகான்களும், உத்தம புருஷர்களும் இல்லை. தங்கள் லாப நஷ்டக்கணக்கிலேயே கண்ணாய் இருக்கும் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்…! பேரம் பேச அதிக காலம் தன்னிடம் இல்லாததால் ஷாஹாஜி தங்க நாணயங்கள் நிரப்பியிருந்த இரு சிறு பட்டுத்துணி மூட்டைகளை உடனடியாக எடுத்துத் தந்தார். நிலைமை சரியானவுடன் 500 குதிரைகள் தருவதாகவும் வாக்குத் தந்தார். ஓரளவு திருப்தியுடன் ஸ்ரீனிவாசராவ் மெல்லத் தலையசைத்தார்.

“நன்றி நண்பரே! மீண்டும் நல்லதொரு சூழலில் சந்திப்போம். இப்போது விரைகிறேன்…..” என்று கூறி ஸ்ரீனிவாசராவை மீண்டும் ஒரு முறை தழுவி ஷாஹாஜி கிளம்பினார்.

மனைவியிடம் வந்த ஷாஹாஜி “உனக்கு இங்கே பரிபூரண பாதுகாப்பு கிடைக்கும். உன் பாதுகாப்புக்கும் சேவை புரிவதற்கும் நம்பிக்கைக்குரிய இருபது பேரை இங்கே விட்டுப் போகிறேன் ஜீஜா. நிலைமை சரியானவுடன் உன்னை அழைத்துக் கொள்கிறேன். பத்திரமாக இரு. நீ வணங்கும் இறைவன் உனக்குத் துணை இருப்பான்….” என்று சொல்ல ஜீஜாபாயின் கண்கள் கலங்கின. அவள் பேச வார்த்தைகள் வராமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

மகன் சாம்பாஜியை ஷாஹாஜி தூக்கிக் கொண்டது செல்வதற்கு முன் அவனை ஒரு முறை கொஞ்சி விட்டுத் திருப்பித் தரத்தான் என்று நினைத்த ஜீஜாபாய் ஷாஹாஜி “எங்களுக்கு விடைகொடு ஜீஜா” என்றவுடன் துணுக்குற்றாள்.

நான்கு வயதுக் குழந்தையையும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதை சாஹாஜி அவளிடம் முன்பே தெரிவித்திருக்கவுமில்லை.

“குழந்தையை எதற்காக அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று குரலடைக்க ஜீஜாபாய் கேட்டாள்.

“அவன் உன்னுடன் இருப்பது அவனுக்கும் ஆபத்து, உனக்கும் ஆபத்து ஜீஜா. அவனைப் பணயக்கைதியாய்ப் பிடித்து வைக்க எதிரிகள் கண்டிப்பாக முயற்சி செய்வார்கள். அவனை வைத்தே என்னை வரவழைக்கப் பார்ப்பார்கள்……”

ஷாஹாஜி சொன்னது உண்மை தான். போரில் பணயக்கைதியாகப் பிள்ளைகளை வைத்துக் கொள்வது அக்காலத்தில் சர்வசகஜம். மனைவியைப் பணயக்கைதியாகப் பிடித்தால் அது பல நேரங்களில் எந்தப் பலனையும் அளிப்பதில்லை. கணவன் இன்னொருத்தியை மணந்து கொண்டு பாதிப்பே இல்லாமல் வாழ்வைத் தொடர்வது சகஜமாக இருந்தது. ஆனால் பிள்ளைகள் என்ற போது தந்தைகள் ரத்தபாசத்தினால் வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு வந்தே ஆகும் சூழல் இருந்தது.  அந்த உண்மையையும் மீறிய இன்னொரு உண்மை - ஷாஹாஜி தன் மூத்த பிள்ளை சாம்பாஜி மேல் உயிரையே வைத்திருந்தார் என்பது தான். அவனை விட்டுப் பிரிந்திருக்க அவரால் முடியாது என்பதாலேயும் தான் அவனை கூட்டிச் செல்கிறார். சாம்பாஜிக்கும் தந்தையுடன் பயணம் போவதில் எப்போதுமே மகிழ்ச்சி தான். ஜீஜாபாய் மறுத்து எதுவும் சொல்ல முடியாமல் கனத்த மனதுடன் தலையசைத்தாள். ஷாஹாஜி வேகமாகச் செல்ல அவளும் கோட்டை வாசல் வரை கூடவே வேகமாகப் போனாள். வைத்த ஒவ்வொரு காலடியிலும் அவள் மனதின் கனம் கூடிக் கொண்டே போனது.

ஷாஹாஜி வெளியே குதிரை ஏறிய போது சாம்பாஜி திரும்பித் தாயைப் பார்த்தான். தாய் தங்களோடு வராமல் கோட்டை வாசலிலேயே நிற்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் பிஞ்சுக் கைகளை ஆட்டி தாயை வரச் சொன்னான். “அம்மா நீயும் வா”

ஜீஜாபாயின் கண்கள் குளமாயின. பார்வையிலிருந்து அவள் கணவனும் பிள்ளையும் சென்று மறையும் முன்பே கண்ணீர்த் திரை முந்திக் கொண்டு மறைத்தது….. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் பார்த்த போது அவர்கள் நீண்ட தொலைவை அடைந்திருந்தார்கள். இருட்ட ஆரம்பித்திருந்தது. அவள் இதயம் வெடித்து விடும் போலிருந்தது. சோகத்துடன் கோட்டைக்குள் திரும்ப நுழைந்தாள்…..

ஒன்றரை நாழிகை நேரம் கழித்து எதிரிப்படையினர் ஷிவ்னேரிக் கோட்டையை நோக்கி வந்து கொண்டிருப்பதை ஒரு ஒற்றன் ஸ்ரீனிவாசராவிடம் தெரிவித்தான்…

(தொடரும்)

என்.கணேசன்



இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

7 comments:

  1. Fantastic sir! Superb beginning.

    ReplyDelete
  2. அட்டகாசமான ஆரம்பம் சார். ஜீஜாபாய் மனதில் பதிகிறார். என்ன சார் வரலாற்று நாவலைக் கூட சஸ்பென்ஸ்லயே வச்சு கொண்டு போகிறீங்களே. வியாழக்கிழமைக்கு காக்கற மாதிரி திங்கள்கிழமைக்கும் காக்க வைக்கிறீங்களே. அமர்க்களம். அதகளம். அருமை.

    ReplyDelete
  3. Fantastic start
    Even in historical novel, you are maintaining the thriller element
    waiting

    ReplyDelete
  4. சத்ரபதியைப் பற்றி பள்ளியில் படித்ததுதான்....அதிக விவரம் தெரியாது....
    அவரைப் பற்றிய வரலாற்றை உங்கள் எழுத்துகளில் படிக்க மிகவும், ஆவலாக உள்ளேன்...
    நன்றி...G

    ReplyDelete
  5. You have started an historical thriller it seems. Nobody has written historical novel in Tamil in this genre. Very interesting Bro. As another reader told many of us know Sivaji only by textbook. We are glad to read in depth in your beautiful writing style.Kudos to your efforts!

    ReplyDelete
  6. புது வருடத்தில் புதிய நாவலின் தொடக்கம் மிகவும் அருமை.கதையோட்டத்தில் படிப்பவர்களையும் பாத்திரங்களோடு ஒன்றிடவைக்கும் தங்கள் எழுத்தின் வலிமை மிகஅபாரம்.சரித்திர நாவலிலும் தங்களுடைய முத்திரையைப்பதியுங்கள்.வாழ்த்துகள்.நன்றி.வணக்கம்

    ReplyDelete
  7. அருமை...தொடரட்டும்.

    ReplyDelete