Monday, December 11, 2017

ஒரு ஷாமன் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?


அமானுஷ்ய ஆன்மீகம் - 23 

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஷாமனிஸம் என்கிற ஆன்மிக முறை இப்போதும் உலக நாடுகளின் பல பகுதி மக்களின் கவனத்தைக் கவருவதற்கும், அதில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கும் மிக முக்கிய காரணம் இருக்கிறது. ஒரு ஷாமனால் கடவுளுடனும், மற்ற சக்திகளுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறிய வேண்டியதை அறிய முடிகிறது என்பதே அந்தக் காரணம். தொடர்பு கொள்ள முடிந்த மற்ற சக்திகளில் தாவரம், விலங்குகள், ஆவிகள் என்று எல்லாமே சேர்கின்றன. அறிய முடிந்த விஷயங்களில் ஆரோக்கியம், ஞானம், வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற அனைத்து நன்மைகள் எல்லாம் சேர்கின்றன. இப்படி மனிதனின் தினசரி வாழ்க்கைக்கும், அவனுக்கு வேண்டிய சுபிட்சத்துக்கும் என்ன செய்ய வேண்டும் என்று வழிநடத்துவதால் ஷாமனிஸத்தில் ஒருவித நெருக்கத்தை நவீன மனிதனும் உணர முடிகிறது என்கிறார்கள் ஷாமனிஸ ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால் இதை எல்லாம் அறிந்து சொல்கிற ஷாமன் அந்த சமூகத்தில் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லது அடையாளம் காணப்படுகிறார் என்பது சுவாரசியமான விஷயம். ஷாமனிஸம் உலகத்தின் பல பகுதிகளில் சிற்சில வித்தியாசங்களுடன் பின்பற்றப்படுவதால் ஷாமனாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் கூட அதே போல் சில வித்தியாசங்களுடன் பொதுவானதாகவே இருக்கிறது.

ஷாமனாக ஒருவர் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கும் போதே ஷாமன் அதற்கேற்ற தகுதிகளுடன் வித்தியாசமாகவே பிறக்கிறார் என்று பல பகுதிகளில் பின்பற்றப்படும் ஷாமனிஸமும் நம்புகின்றது. சில சமயங்களில் ஒரு விரலோ, ஒரு பல்லோ, ஒரு எலும்போ கூடுதலாக அந்த நபரிடம் இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது பிரத்தியேக அம்சம் பார்ப்பவர் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்து கொள்ளும்படி அந்த நபர் இருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். சில நேரங்களில் ஏதாவது ஊனம் இருந்து, கூடவே அதீதமான நுட்பமான உயர் உணர்வுநிலை இருக்கும் பட்சத்தில் அதுவும் ஷாமனுக்கான அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆசைப்படுவதால் யாரும் ஷாமனாகி விட முடியாது என்றும் மேலான சக்திகள் தாங்கள் மனிதர்களிடம் தெரிவிக்க விரும்பும் செய்திகளைச் சரியாக அறிய முடிந்த நுண்ணறிவு படைத்த ஒருவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன என்றும் ஷாமனிஸம் நம்புகிறது.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று அறிவது பெரும்பாலும் பிள்ளைப் பிராயம் முடிந்து இளமை அரும்பும் காலகட்டத்தில் தான். தத்ரூபமாக திவ்ய தரிசனமாய் ஏதாவது விசேஷக் காட்சிகள் தெரிதல், அடிக்கடி மயக்கமாதல், கடுமையாக உணர்ச்சிவசப்படுதல் முதலான அனுபவங்கள் தொடர்ந்து பல வாரங்கள் அவர்களுக்கு இருக்குமாம். பின் இறுதியாக ஒருநாள் அவர்கள் கனவில் மேலான சக்தி அல்லது ஆவி தோன்றி அவர்கள் அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்குமாம். அந்த நபருக்குள் அவரே அறியாமல் மறைந்திருக்கும் சக்திகளையும், அந்த நபரிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பது என்னவெல்லாம் என்பதையும் தெரிவிக்குமாம்.

அப்படி ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லாரும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. சிலர் பொதுவான இயல்பான வாழ்க்கை வாழ விரும்புவதும் உண்டு. ஆனால் அவர்கள் ஷாமனாவதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரும் வரை அவர்களை அந்த மேலான சக்தி அல்லது ஆவி ஏதாவது வகையில் வாட்டிக் கொண்டிருக்குமாம். மறுத்து விட்ட பின் அவர்கள் சரியாக உறங்குவதோ, நிம்மதியாக இருப்பதோ முடியாத காரியம் என்கிறார்கள். ஒருவழியாக அவர்கள் மானசீகமாக சம்மதம் தெரிவித்தபின் தான் அவர்கள் நிம்மதியாக இருக்க அந்த சக்தி அல்லது ஆவி அனுமதிக்குமாம். அதன் பின் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்கள் மிக ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். அதை ஷாமனின் நோய்க்காலம் என்கிறார்கள். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் அந்த உறக்க காலம் சில வாரங்கள் வரை தொடர்ந்து நீடிக்குமாம். அந்த நேரங்களில் வெளியுலக சத்தங்கள், நிகழ்வுகள் எதுவும் அந்த ஷாமனைப் பாதிப்பதில்லை.


அந்த நீண்ட தூக்க சமயத்தில் தான் மேலான சக்திகள் ஷாமனின் சூட்சும சரீரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து ஷாமனை அமானுஷ்ய சக்திகளுக்குத் தயார்ப்படுத்தும் என்கிறார்கள். அந்த சக்திகள் மேலும் பல சக்திகளை அந்த ஷாமனுக்கு அறிமுகப்படுத்துவதுடன் சில ரகசியங்களையும் வெளிப்படுத்தும் என்கிறார்கள். சக்திகளின் பாதையில் சூட்சும நிலையில் அது நீண்ட யாத்திரையாகவும், பல புதிய பரிமாணங்களின் படிப்பினையாகவும் அந்தப் புதிய ஷாமனுக்கு அந்தக் காலம் இருக்கும் என்கிறார்கள். அந்த ஷாமனின் நோய்க்காலத்தில் வெளியுலகப் பார்வைக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அந்த ஷாமன் தேர்வாளர் சில சமயங்களில் அர்த்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருப்பாராம். சில சமயங்களில் மயக்க நிலையிலேயே எழுந்து அங்குமிங்கும் ஓடுவதும் உண்டாம். அதன் பின் மீண்டும் பிணம் போல அசைவில்லாமல் படுத்துக் கிடப்பாராம்.  

சைபீரியா போன்ற பகுதிகளில் ஷாமனின் பிள்ளைகளில் ஒருவர் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தன் தந்தையிடமிருந்து ஷாமனிஸ யாத்திரைக் கதைகள் கேட்டு, தந்தையின் ஷாமனிஸ செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்து குழந்தைப்பருவத்திலிருந்தே தயாராவது இயல்பாக அப்பகுதிகளில் கருதப்படுகிறது. ஆனால் ஒரு ஷாமனின் எல்லாக் குழந்தைகளும் ஷாமனாக மாறிவிடுவதில்லை. மாறிவிடவும் முடியாது. அதற்கென்று பிரத்தியேக குணங்கள் ஒரு குழந்தைக்காவது தரப்பட்டிருக்கும் என்றும் அந்தக் குழந்தை ஷாமனாக உருவாகும் என்று நம்புகிறார்கள்

ஆனால் அப்படி உருவாகும் ஷாமன் கூட தந்தையிடமிருந்து அனைத்தும் கற்றுக் கொள்ள முடியாது. உண்மையான ஷாமனிஸ சூட்சுமங்களையும், ரகசியங்களையும் மேலுலக சக்திகள், ஆவிகளிடமிருந்தே அந்த ஷாமனும் பெற்றாக வேண்டும். அதனால் உண்மையான கற்றல் என்கிற நிகழ்வு அந்த ஷாமனின் நோய்க்காலத்தில் சூட்சும உலகிலேயே நடைபெறுகிறது. எல்லாம் கற்ற பின் தன் நோயைக் குணமாக்கிக் கொண்டு தெளிவாகிய பின்னரே ஒரு ஷாமன் புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்.

அமெரிக்கப் பழங்குடி இன ஷாமனிஸ மக்கள் ஷாமனைத் தேர்ந்தெடுக்கும் விதம் சற்று வித்தியாசமானது. ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின் தங்கள் பிள்ளைகளை அவர்கள் காட்டுக்கு அனுப்பி விடுவார்கள். காட்டில் தங்களை தற்காத்துக் கொண்டு பட்டினி கிடந்தும், மேலுலக சக்திகளிடம் பிரார்த்தனை செய்தும் அவர்கள் வாழ வேண்டும். அவர்களில் ஓரிருவருக்கு மட்டுமே மேலுலக சக்திகள், ஆவிகள் உயர்ந்த ஞானத்தின் திவ்ய தரிசனம் ஏதாவது ஒன்றைக் காட்டும். மற்றவர்கள் சாதாரணமாகத் திரும்பி வரும் போது அந்த ஓரிரு பிள்ளைகள் மட்டும் ஞானத்தின் திவ்ய தரிசனம் பெற்றவர்களாகத் திரும்பி வருவார்கள். அவர்கள் அங்குள்ள ஷாமனிடம் தங்கள் அனுபவத்தைச் சொல்ல அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட அந்த ஷாமன் மேலும் சில கேள்விகள் கேட்டு கிடைக்கும் பதில்களை வைத்து அந்தப் பிள்ளைகள் உண்மையில் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்று தீர்மானிப்பார்.

அந்தப் பிள்ளைகள் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் அந்த ஷாமனிடம் மேலும் சில பாடங்கள் பெறுவார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் ஷாமனாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் காத்திருக்க வேண்டும். அவர்கள் கனவில் மேல் உலக சக்திகள் பேசி நேரடியாகச் சிலவற்றைச் சொல்லி, அந்தப்பிள்ளைகளும் ஷாமனாக சம்மதித்து ஒரு நீண்ட உறக்க மயக்க நிலையில் கிடந்து, முறையான பாடங்களையும் உண்மைகளையும் சூட்சும உலகில் பெற்ற பின்னரே ஷாமனாக மாற முடியும்.

மேலுலக அழைப்பு வந்த பின்னும் ஷாமனாக ஒருவர் சம்மதிக்கா விட்டால் என்ன ஆகும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு ஷாமனிடம் கேட்ட போது மரணம் தான் நிகழும்என்று அந்த ஷாமன் சொல்லியிருக்கிறார். “நானே ஷாமனாக இருந்திராவிட்டால் என்றோ இறந்திருப்பேன்.”
                                                             
இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாமன் பின் சந்திக்கும் நிலைகள் என்ன? அந்த அமானுஷ்ய ஆன்மிக சுவாரசியங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

(அமானுஷ்யம் தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 11.8.2017

4 comments:

  1. The next concept sounds very interesting Sir. I also want to know these kind of Shamans still exist bow.

    ReplyDelete
    Replies
    1. They exist with some difference. It will be explained in this series later.

      Delete
  2. வரதராசன்December 12, 2017 at 8:08 AM

    வூடூ, அகோரி, ஷாமன் ஆகியன குறித்து தமிழில் நூல்கள் இல்லை. எளிய தமிழில் அவற்றின் சாராம்சத்தை அற்புதமாகத் தந்து தமிழர்க்கு அரிய சேவை புரிந்து வருகிறீர்கள் கணேசன். உளமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும். சுவாரசியமாகவும் சொல்லி படிக்கத் தூண்டும் வகையில் இந்த அரிய விஷயங்களை எழுதும் பாணியால் இவை காலம் கடந்து நின்று உங்கள் பெயரைச் சொல்லும் என்பது உறுதி.

    ReplyDelete
  3. ஷாமன் நமக்கு புரியுற‌ பாணியில... சொன்ன விதம் சூப்பர்...சார்...

    ReplyDelete