முதலமைச்சர் ராஜதுரை செந்தில்நாதன் சொன்னதை எல்லாம் கேட்ட பின்பு
நடந்திருக்கும் நிகழ்வுகளை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்பினார்.
செந்தில்நாதனும் நடந்ததை எல்லாம் நடந்தபடி சொன்னாரே ஒழிய அது குறித்த தன் அபிப்பிராயங்களைச்
சொல்லவில்லை.
சிறிது
யோசனையில் ஆழ்ந்து விட்டு ராஜதுரை கேட்டார். “இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?””
“க்ரிஷுக்கு
நடந்தது எதுவும் நினைவில்லைங்கறதை என்னால் நம்ப முடியல. அவன் ஏதோ ஆராய்ச்சில இறங்கியிருக்கான்.
அதுல எதோ நடந்துருக்கு. அதைப்பத்தி அவன் பேச விரும்பல. அவன் நடந்ததை எல்லாம் வெளிப்படையா
சொல்றது அவன் ஆராய்ச்சிய பாதிக்கும்னு நினைக்கிறான் போல இருக்கு….. ஆனா அந்த லாரி விஷயத்த
யோசிச்சா அவன் உயிர்க்கு ஆபத்து இருக்குங்கறது நிச்சயம்…. அது யாரால எப்படிங்கறதை எல்லாம்
அவன் வாய் திறந்து எல்லாத்தையும் சொல்லாம நம்மால சொல்ல முடியாது சார்”
”மாணிக்கத்தோட
மாமனார் ஆள் ஒரு மாதிரி தான். அவரு இதுல சம்பந்தப்பட்டிருக்கலான்னு நீங்க சந்தேகப்படற
மாதிரி தெரியுது. ஆனா க்ரிஷ்ஷ பாம்பு கடிச்ச இடத்துலயே வேற ஒருத்தனையும் பாம்பு கடிச்சு
அவன் செத்துப் போனான், அப்படிச் செத்த ஆளுக்கும் மாணிக்கம் மாமனாருக்கும் போன்ல பேச்சு
வார்த்தை நடந்திருக்குங்கறதாலயும், அவரை மாதிரி முடி நரைச்ச ஆளை க்ரிஷ் காணாம போன ராத்திரில
அந்த மலைப்பக்கத்துல ஒருத்தன் பார்த்தான்கிறதாலயும் அவரை இதுல சம்பந்தப்படுத்தறது சரின்னு
தோணலயே”
”எனக்கு
அவரைப் பல வருஷமாய் தெரியும் சார். அதனாலேயே அவர் மேல சந்தேகமாய் இருக்கு” என்று செந்தில்நாதன்
சொன்ன போது ராஜதுரை மெலிதாய் புன்னகைத்தார்.
செந்தில்நாதன்
தொடர்ந்து சொன்னார். “நான் பாம்பு கடிச்சு செத்தவன் பத்தியும் விசாரிக்கச் சொல்லியிருந்தேன்.
நான் உங்களைப் பார்க்க உள்ளே வர வர தான் அதுபத்தி விசாரிச்ச ஆள் போன் பண்ணிருந்தார்….
நீங்க ரெண்டு நிமிஷம் அனுமதி கொடுத்தா அவரைக்கூப்பிட்டு விவரம் கேட்டுச் சொல்றேன்…..”
ராஜதுரை
“பரவாயில்லை பேசுங்க” என்றார். செந்தில்நாதன் அவசரமாக அப்போதே போன் செய்து பேசினார்.
பேசி முடித்து விட்டுச் சொன்னார். ”பாம்பு கடிச்சு இறந்தவன் அந்தப் பாம்பை தன் கிட்டயே
வச்சிருந்ததா சொல்றாங்க. இதுக்கு முன்னாடி சிலர் பாம்பு கடிச்சு சாகறதுக்கு அவன் காரணமாய்
இருக்கலாம்கிற சந்தேகம் இருக்கு. ஆனா சரியான ஆதாரம் இல்லைங்கறதால அவன் மேல வழக்கு பதிவு
பண்ணாம இருந்திருக்காங்க….”
ராஜதுரை
சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். பின் மெல்லக் கேட்டார். ”அந்த மாஸ்டர்
யார் என்னன்னு விசாரிச்சீங்களா?”. அந்த மாஸ்டர் பற்றி கமலக்கண்ணன் முன்பே போன் செய்து
பெருமையாக மகான், மிகவும் சக்தி வாய்ந்தவர்
என்றெல்லாம் சொல்லி இருந்தார். மாணிக்கம் மூலமாய் தான் அவர் அறிமுகமானார் என்பதையும்
சொல்லி இருந்தார். ஆனால் அப்போது சங்கரமணி பற்றிய சந்தேகத்திற்கு இடமான தகவல்கள் எதுவும்
அவருக்குக் கிடைத்திருக்கவில்லை…..
செந்தில்நாதன்
சொன்னார். “அந்த ஆள் எதோ ஆன்மிக இயக்கத்தைச் சேர்ந்தவர்னு சொல்றாங்க. அதுல நிறைய பணக்காரங்க
உறுப்பினர்களா இருக்காங்க. பெரிய பெரிய பதவிகள்லயும் இருக்காங்க….. இப்ப அவர் சென்னைல
தங்கியிருக்கற வீடே ஒரு ரிடையர்டு சுப்ரீம்கோர்ட் ஜட்ஜோட வீடு தான். அந்த ஜட்ஜ் சுவிட்சர்லாந்தில்
இருக்கார்….. அந்த மாஸ்டர் மேல எந்த தவறான அபிப்பிராயமும் யாருக்கும் இல்லை….. அவர்கிட்ட
சக்தி ஏதோ இருக்கறதும் உண்மை தான்….” அவர் போலீஸ் புத்தி என்று சொன்ன விதம் இப்போதும்
செந்தில்நாதனை ஆச்சரியப்படுத்தியது.
ராஜதுரை
யோசித்தார். பின் மெல்லக் கேட்டார். “க்ரிஷுக்குத் தன்னைக் கொல்ல நடந்த முயற்சி பத்தி
தெரியுமா? இல்லை மத்தவங்க மாதிரி ஏதோ விபத்து நடக்க இருந்ததாய் தான் நினைக்கிறானா?”
“அவனை
மாதிரி ஒரு புத்திசாலிக்கு அது கொலை முயற்சின்னு தெரியாம இருக்க வாய்ப்பேயில்லை…..”
க்ரிஷும் உதயும் மாஸ்டர் வீட்டுக்குக் காரில் சென்று கொண்டிருந்தார்கள்.
உதய் மாஸ்டருடனான தன் முதல் சந்திப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் தாறுமாறாய்
காரோட்டிச் சென்ற ஒரு டிரைவரைக் கெட்ட வார்த்தையில் திட்டியதை மாஸ்டர் சொல்லிக் காட்டியதைச்
சொன்ன போது க்ரிஷ் பிரமிப்புடன் கேட்டான். நிகோலா டெஸ்லா சொன்னபடி மனிதனின் மன அலைகளைப்
படிக்க முடிந்த சக்தி படைத்த அந்த மாஸ்டர் அவனை எதிரியாக நினைப்பதாய் வேற்றுக்கிரகவாசி
சொல்லி இருந்தது அவனுக்கு நினைவு வந்தது. அதுமட்டுமல்லாமல் அவரையும் விடப் பல மடங்கு
சக்தி வாய்ந்தவன் அவனுடைய உண்மையான எதிரி என்றும் வேற்றுக்கிரகவாசி சொல்லி இருந்தான்.
இப்படிப்பட்ட சக்தி மலைகளோடு தனியாக மோத விட்டு விட்டு வேற்றுக்கிரகவாசி போய் விட்டான்.
எப்படி மோதுவது என்ன செய்வது என்று கூட அவன் சொல்லித் தரவில்லை…. அவனை விட்டுப் பிரிய
வேண்டி இருந்த குழப்பத்தில் எப்படி அவர்களை எதிர்கொள்வது என்று கேட்பதற்குத் தோன்றவில்லை.
அதற்குப் பதிலாக எனக்காக எதையும் செய்ய மாட்டாயா என்று கேட்க ’எதிரி உன்னைப் படிக்காதபடி பாதுகாப்பு வளையம் போட்டிருக்கிறேன்” என்று சொல்லி
விட்டு அவன் போய் விட்டான்….
க்ரிஷ்
யோசனைகளில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அவர்கள் காரின் அருகிலேயே கிட்டத்தட்ட அந்தக் காரின்
வேகத்திலேயே பைக்கில் மர்ம மனிதன் இணையாகப் பயணித்து வந்தான். க்ரிஷின் அலைகளை மோப்பம்
பிடிக்கும் மோப்ப நாய் போலவே கூட வந்தானேயொழிய மிகவும் கவனமாகத் தன் சக்திகள் எதையும்
அவன் பயன்படுத்தவில்லை. அப்படிப் பயன்படுத்தினால் க்ரிஷைச் சந்திக்கும் போது மாஸ்டர்
அதைக் கண்டுபிடித்து விடுவார். இப்போதே ஏதாவது விதத்தில் க்ரிஷின் கவனத்தை அவன் ஈர்த்தால்
போதும், ஏதாவது விதத்தில் அவன் மனதில் நுழைந்தால் போதும் அவனைச் சந்திக்கும் போது மாஸ்டருக்குத்
தெரியாமல் போகாது….. க்ரிஷைப் பிறகு அறிந்து கொள்ள அவன் அலைகளைப் பரிச்சயம் செய்து
கொண்டிருப்பது மிகவும் அவசியம் என்பதால் தான் தேவையான அளவு வந்து விட்டு மெல்ல ஒரு
குறுக்குத் தெருவில் பிரிந்து விட்டான். மிக ஆழ்ந்த சிந்தனைகளில் இருந்த க்ரிஷ் தன்
பிரதான எதிரி சிறிது தூரம் தங்களுடனேயே பயணித்து வந்ததை அறியவில்லை.
மாஸ்டர்
வீட்டின் முன் உதயின் கார் நின்ற போது மாற்று வழியில் வந்திருந்த மர்ம மனிதன் தெருக்கோடியில்
பைக்கை நிறுத்தியிருந்தான். அதில் அமர்ந்து செல்போனில் எதையோ தீவிரமாகப் பார்த்துக்
கொண்டு இருப்பது போல் பார்வையாளர்களுக்குத் தோன்றினாலும் தன்னைச் சுற்றி ஒரு சக்தி
அரணை மிகுந்த எச்சரிக்கையோடு உருவாக்கிக் கொண்டு இருந்தான்….. மாஸ்டரின் உதவியாளன்
சுரேஷ் மிகவும் ஆர்வமாக வெளியே ஓடி வந்து க்ரிஷையும் உதயையும் வரவேற்ற போது மர்ம மனிதன்
தன் சக்தி அரணை எழுப்பி முடித்திருந்தான். பார்ப்பவர்களுக்கு சிலை போல் அசைவற்று இருந்தவனை
அந்த மாலை அரையிருட்டில் தெருவில் பயணித்த
யாரும் தொடர்ந்து கூர்ந்து கவனிக்கவில்லை. அவரவர் வேலை அவரவர்க்கு.
மாஸ்டர்
மனதில் சமீப காலங்களில் அதிகமாக இருந்த க்ரிஷை
சுரேஷ் வைத்த கண் வாங்காமல் கூர்ந்து பார்த்தான். உதய் கேட்டான். “மாஸ்டர் தியானத்தில்
இருக்காரா?”
“இல்லை
சார். உட்காருங்க. இப்ப வந்துடுவார்” அவர்களை உட்கார வைத்து விட்டு அவசரமாக மாஸ்டரின்
அறைக்குள் சுரேஷ் நுழைந்தான்.
மாஸ்டர்
மானசீகமாகத் தன் குருவை வணங்கிக் கொண்டிருந்தார். சுரேஷ் உள்ளே போய் பரபரப்புடன் சொன்னான்.
“வந்துட்டாங்க”. அவன் குரலில் பரபரப்பைக் கவனித்த மாஸ்டர் புன்னகையுடன் எழுந்தார்.
இது வரை அவன் யார் வந்த போதும் இந்தப் பரபரப்புடன் தெரிவித்ததில்லை.
அவர்
வெளியே வந்தார். உதயும், க்ரிஷும் எழுந்தார்கள். மாஸ்டரின் தேஜஸில் க்ரிஷ் ஒரு கணம்
மெய்மறந்து போனான். அவரையே ஏதோ ஒரு பரவசத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான். மாஸ்டர்
தன் முழுக் கவனத்தையும் அவன் மேல் குவித்தார். மாஸ்டரின் சக்தி அலைகள் ஒரு பெருஞ்சுவற்றில்
மோதித் திரும்பியது போல் அவரிடமே திரும்பின. திகைத்துப் போன மாஸ்டர் தன் சக்தி அலைகளை
மேலும் கூர்மைப்படுத்தி அனுப்பினார். அவன் அரணைத் துளைக்க அவருக்குச் சக்தி போதவில்லை.
மாஸ்டர் ஸ்தம்பித்து நின்றார்.
அதே
நேரத்தில் மர்ம மனிதன் மாஸ்டர் மேல் தன் கவனத்தைக் குவித்தான். ஏக காலத்தில் அவன் அவரையும்,
அவர் மூலமாகக் க்ரிஷையும் அறிய நினைத்தான். மாஸ்டரின் முழுக் கவனமும் க்ரிஷ் மீதிருக்கையில்,
மற்ற இடங்களுக்கு அவர் கவனம் போகாமல் இருக்கையில் அவர் கவனத்தில் இருந்து அவனும் தப்பிப்பான்
அல்லவா? அவருடைய அலைகள் எதையும் அறிய முடியாமல்
திரும்பி வந்ததும் திகைப்பும் தான் பிரதானமாக மர்ம மனிதனுக்குத் தெரிந்தன. அவரைப் போலவே
அவனும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.
மாஸ்டர்
தன் மீது வேறொரு சக்தி ஆக்கிரமிப்பை லேசாக உணர்ந்தார். திகைப்பு மேலும் அதிகமாக க்ரிஷ்
மேல் இருந்த கவனக்குவிப்பை அவர் விலக்க ஆரம்பித்த அந்த முதல் கணத்தில் ஆபத்தை உணர்ந்த மர்ம
மனிதன் அந்தக் கணமே சக்தி இணைப்பைத் துண்டித்து விலகினான்.
தன்னை
ஆக்கிரமிக்க ஆரம்பித்த சக்தி கண நேரமும் தங்காமல் உடனடியாக விலகியதால் மாஸ்டர் அந்த
ஆக்கிரமிப்பு பற்றியும் சரியாக உணர முடியாமல் திகைத்தார். மர்ம மனிதன்
அதற்கு மேல் அந்த எல்லைக்குள் இருப்பதன் ஆபத்தை உணர்ந்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து
பைக்கில் பறந்தான். பல மைல் தூரம் கடந்து பாதுகாப்பான தொலைவை எட்டி விட்டோம் என்று
உறுதியான பின் க்ரிஷுக்காகக் காத்து நின்றான்.
(தொடரும்)
என்.கணேசன்
த்ரில்லிங் படம் பார்க்கற மாதிரி ஒரு ஃபீலிங் இருந்தது சார் சூப்பர்.
ReplyDeleteAmazing sir. The meeting scene is superb and thrilling. We felt as if we are in the spot.
ReplyDeleteசீட் நுனிக்கு வந்துட்டேன்...தொடரும் போட்டதால தப்பிச்சேன்...
ReplyDeleteதீயை மிஞ்சியது.
ReplyDeleteரொம்ப பரபரப்பாகவும்....பல திருப்புமுனைகளுடனும்....இந்த வார தொடர் அமைந்தது...அருமை ஐயா...
ReplyDeleteமனதை படிக்கும் சக்தியை கையாளும் விதம்.....
ReplyDeleteஅதில் உள்ள நுணுக்கங்கள்...
தடுப்பு சுவர் உணர்தல்....
மற்றவர்கள் படிப்பதை உணர்தல்...
நாம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பது...
போன்ற பயனுள்ள தகவல்களை நாவலுடன்...சேர்த்து கொடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது...
செந்தில் நாதன் கிரீஷை சரியாக அனுமானிக்கிறார்......
ReplyDeleteமாஸ்டர்,கிரிஷ் சந்திப்பு தொடருமா....? இருவருக்கும் இடையே உரையாடல்கள்
இருக்கும் என் நினைத்தால், மாஸ்டர் மன அலைகள் வழியே அவனை ஊடுருவ நினைக்கிறார்.......Mr.MM அதற்கும் மேல்.....மாஸ்டர் வழியாக , கிரிஷின் எண்ண அலைகளை அறிய முற்படுகிறான்....தன்னை மாஸ்டர் உணராமல் இருப்பதற்கு அவன் எடுக்கும் முன்எச்சரிக்கை.....simply superb....இப்போதைக்கு அவனது முயற்சியில் தோல்வி...அடுத்து என்ன செய்யப் போகிறான்...?இரண்டு சக்தி வாய்ந்தவர்கள் மத்தியில்
கிரிஷ்......!!!!
அற்புதம் மும்முனை திகைப்பு வியப்பு மாஸ்டர் மட்டுமே யாருக்கு யார் உதவி என்பதை அறிய வேண்டிய நிலை
ReplyDeleteத்ரில்லிங் ஸ்டோரி பார்க்கறமாதிரி இருக்கு.என்னக்கு க்ரிஷ் அண்ட் மாஸ்டர் கேரக்டர் ரொம்போ அழகா எழுதுறீங்க.ரெண்டு பெருத்த பத்தி படிக்கறப்போ ரொம்போ இன்டெரெஸ்டிங்கா இருக்கு . Your creativity is amazing.After started reading this novel I started to read more about Nicola tesla.
ReplyDelete