”அவன்
மனுஷனே இல்லை” சங்கரமணி உறுதியாகச் சொன்னார். எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று அவரது மருமகனும் பேரனும் கேட்கவில்லை. ஆனால் அவரே காரணத்தையும் சொன்னார். “உடனடியா கொன்னுடற
அந்தக் கடுமையான பாம்போட விஷம் கூட அவனைக் கொன்னுடலைன்னா வேற என்ன சொல்றது!”
மாணிக்கம்
தன் மாமன் ஏதோ வானிலை அறிக்கை வாசிக்கிறார் என்பது போன்ற முகபாவனையில் இருந்தார். மணீஷோ
தாங்கள் கிளம்பும் போது கூட ஹரிணி க்ரிஷ் வீட்டில் இருந்து கிளம்பி விடவில்லை என்கிற
கவலையில் இருந்தான். க்ரிஷும், ஹரிணியும் பழையபடி காதலில் மூழ்கி விடுவார்களோ என்கிற
எண்ணமே அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அதனால் தாத்தா சொன்னது அவன் காதில் அரைகுறையாய்
தான் வந்தது.
அடுத்தகட்ட
நடவடிக்கை எதாவது எடுத்தாக வேண்டும் என்கிற அவசர மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சங்கரமணிக்கு
அவர்கள் இருவரும் பட்டும் படாமலும் இருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது. “என்னடா ஒன்னும்
சொல்ல மாடேங்கறீங்க. தோத்ததை ஒத்துகிட்டு பேசாம ஒதுங்கி உட்கார்ந்துக்கலாம்னு நினைக்கிறீங்களா?”
என்று கோபத்தோடு கேட்டார்.
மாணிக்கம்
அமைதியாகக் கேட்டார். “இப்ப என்ன ஆச்சுன்னு நீங்க பதறுறீங்க?”
“இன்னும்
என்னடா ஆகணும்? கமலக்கண்ணன் பையன் இது வரைக்கும் மூளையில தான் கெட்டிக்காரனா இருந்தான்.
இது வரைக்கும் உடம்பளவுலயாவது சாதாரணமாயிருந்தவன்
அதுலயும் இப்ப சூப்பர் மேனா திரும்பி வந்திருக்கான். வாடகைக் கொலையாளியையே கொன்ன அந்தப்
பாம்பு விஷம் க்ரிஷ்ஷ ஒன்னும் செஞ்சுடலீயேடா. அவன் ஏதோ ஆராய்ச்சி பண்ணி அதுல தேறிட்டான்
போல இருக்கு. அந்த மாஸ்டர் அவன் வெளிநாட்டுல இருக்கறதா சொன்னார். அந்த ஆள் சொன்ன மாதிரியே
தான் அவன் செல்போன் டவர் சிக்னலும் சொல்லுச்சு. ஆனா இப்ப பாத்தா அலுங்காம அந்த மலைக்கே
திரும்பி வந்து வந்துருக்கான். இத்தன செலவு செஞ்சு, திட்டம் போட்டு அவன் வலது கால்
கட்டை விரல்ல வடுவை ஏற்படுத்தினது தான் மிச்சம்….. இத்தனை பண்ணிட்டு வந்தவன் கிட்ட
என்னடா ஆச்சுன்னு கேட்டா எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லைன்னு சொன்னான் பாரு, சிவாஜி கணேசன்
செத்தாண்டா…… என்னவொரு நடிப்புடா சாமி….. இத்தனை நடந்திருக்கு. அடுத்ததா என்ன செய்யலாம்கிற
யோசனை உங்க ரெண்டு பேருக்குமே இல்லை. அவன் மூஞ்சைத் தொங்கப் போட்டுட்டு உட்கார்ந்திருக்கான்…..
நீ எந்தக் கவலையுமே இல்லாம உட்கார்ந்திருக்காய்…….” சங்கரமணி பொரிந்து தள்ளினார்.
”மாமா
அவன் பிழைச்சு வந்ததுல எனக்கும் ஏமாற்றம் தான். ஆனா இதுல இன்னொரு நல்ல விஷயம் நடந்திருக்கறதை
நீங்க ரெண்டு பேருமே கவனிக்கலை….”
மணீஷும்
சங்கரமணியும் திகைப்புடன் அவரைப் பார்த்தார்கள். சங்கரமணி மெல்லக் கேட்டார். “என்னது?”
“அவன்
இன்னொரு எதிரியைச் சம்பாதிச்சிருக்கற மாதிரி தெரியுது…. அந்த எதிரி நம்மள விட சக்தி
வாய்ந்தவனா இருப்பான் போல தெரியுது. அவனும் க்ரிஷை சாகடிக்கறதுல குறியாயிருக்கான்…..”
“என்னடா
இது புதுக்கதை…” சங்கரமணிக்கு தலை வெடித்து விடும் போல இருந்தது.
“இப்ப
தான் தகவல் வந்தது.” என்ற மாணிக்கம் லாரி மூலம் க்ரிஷைக் கொல்ல நடந்த முயற்சியை விவரித்தார்.
“யாருப்பா
அந்த எதிரி?” மணீஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
“தெரியல”
“அப்ப
எதை வெச்சு அவன் நம்மள விட சக்தி வாய்ந்த எதிரிங்கறே?” சங்கரமணி கேட்டார்.
“க்ரிஷோட
செல்போன் சிக்னல் எப்ப நம்ம பக்கத்து எல்லைக்குள்ளே வந்துச்சுன்னு விசாரிச்சேன். அது
அவன் உதய்க்குப் போன் செஞ்சதுக்கு சில நிமிஷங்களுக்கு முன்னாடி தான்னு தகவல் வந்துச்சு.
கொல்ல முயற்சி செஞ்ச எதிரிக்கும் எவ்வளவு சீக்கிரம்னாலும்
அப்ப தான் தகவல் தெரிஞ்சிருக்கும். ஆனா கிட்டத்தட்ட ரெண்டரை, மூணு மணி நேரத்துல இந்தக்
கொலையைத் திட்டம் போட்டு அதை அமல்படுத்தியும் இருக்கான்னா அவன் சாதாரணமானவனா இருக்க
வாய்ப்பில்லை…..”
அவர்
சொன்னது சரியென்றே மணீஷுக்கும், சங்கரமணிக்கும் பட்டது. அவர்களுக்கே க்ரிஷைக் கொல்லத்
திட்டம் போட பல நாட்கள் தேவைப்பட்டது. இந்தப் புது எதிரி மூன்று மணி நேரத்தில் இத்தனை
கச்சிதமாய் திட்டம் போட்டு செயல்படுத்தியிருக்கிறான்.
சங்கரமணி
அங்கலாய்த்தார். “ஆனாலும் சனியன் மயிரிழையில தப்பிச்சுட்டானே……”
“ஆனாலும்
அவனுக்கு இன்னும் கொஞ்ச காலம் வரைக்கும் கண்டம் இருக்கறதா கண்ணன் சொன்ன ஞாபகம்…” என்று
அர்த்தத்தோடு சொன்ன மாணிக்கம் எதுவும் இப்போதே முடிந்து விடவில்லை என்பதை அமைதியாகச்
சுட்டிக் காட்டினார். சந்தர்ப்பம்
கிடைத்தால் அந்த எதிரியுடன் கை கோர்த்து அடுத்த முயற்சியைச் செய்யலாம் என்பது அவர்
எண்ணமாய் இருந்தது.
மர்ம
மனிதன் வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு வாழ்ந்தவன். இலக்கைத் தீர்மானித்த பிறகு
அவன் வேறெந்த சிந்தனையிலும் சிக்காதவன். இலக்கை அடைந்த பிறகு அவன் அடுத்த இலக்கைத்
தேர்ந்தெடுப்பான். பின் அதிலேயே அவன் முழுக்கவனமும் இருக்கும். ஒவ்வொரு இலக்கு நோக்கிய
பயணத்திலும் அவன் தடைகளைப் பொருட்படுத்தியதில்லை. தடைகளை உடைத்தெறிய அவனுக்கு அதிக
நேரம் ஆனதில்லை. காட்டாறாய் அவன் போகும் பாதையில் தடைகள் தடயமில்லாமல் தூக்கியெறியப்பட்டிருக்கின்றன.
முதல் முறையாக க்ரிஷ் என்ற தடை அவன் பாதையில் தங்கி விட்டிருக்கிறது. அதை அவனால் ரசிக்க
முடியவில்லை. அவன் அழிக்க நினைத்த விதை அழிய மறுக்கிறது.
’ஒரு
விதைக்குள்ளே எத்தனை மரங்கள், எத்தனை காடுகள் ஒளிஞ்சிருக்குன்னு யாரால சொல்ல முடியும்’
என்று சதாசிவ நம்பூதிரி சொன்னது மீண்டும் அவன்
காதில் நாராசமாய் ஒலித்தது.
இஸ்ரோ
விஞ்ஞானிகள் நம்புவது போல க்ரிஷ் சந்தித்தது ஏலியனாகத் தான் இருக்கும் போல் இருக்கிறது.
அவனைப் பாம்புக்கடியிலிருந்து காப்பாற்றியது போல லாரி விபத்திலிருந்தும் காப்பாற்றியிருக்கிறது.
பாம்புக்கடியில் காப்பாற்றிய ஏலியன் அந்த வாடகைக் கொலையாளியைக் கொன்று விட்டது போல்
லாரி டிரைவரை எதுவும் செய்து விடவில்லை. இப்போதும் லாரி டிரைவர் உயிரோடு தான் இருக்கிறான்.
போலீஸார் தேடுவது தெரிந்து தலைமறைவாய் இருந்தபடியே சற்று முன் தான் மனோகரிடம் பேசியிருக்கிறான்.
அதே போல் சங்கரமணியை போனில் அழைத்துப் பயமுறுத்தியது போல தன்னிடம் எந்த விதத்திலும்
ஏலியன் தொடர்பு கொள்ளாததும், தன் வழிக்கு வராததும் மர்ம மனிதனுக்கு மர்மமாக இருந்தது…..
அவன்
அலைபேசியில் ஒரு குறுந்தகவல் வந்தது. “நாளை மாலை மாஸ்டரைச் சந்திக்க க்ரிஷ் போகின்றான்.
உத்தேசமாக ஆறு மணிக்குப் போவான் போல் தெரிகிறது”
மர்ம
மனிதன் இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தான். என்ன நடக்கின்றது என்பதை
அவன் நேரடியாக அறிந்தேயாக வேண்டும். மாஸ்டர் க்ரிஷிடம் இருந்து என்ன அறிந்து கொள்கிறார்
என்பதையும், க்ரிஷ் மாஸ்டரிடமிருந்து என்ன அறிந்து கொள்கிறான் என்பதையும் உடனுக்குடன்
அறிய வேண்டும். எப்படி ஒருவரை ஒருவர் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் அறிய வேண்டும்.
க்ரிஷ் என்ற புதிரைப் புரிந்து கொள்வது அவனை எப்படிக் கையாள்வது என்பதைத் தீர்மானிக்க
உதவும். ஆனால் க்ரிஷ் என்ற புதிரைப் புரிந்து கொள்ளப்போகும் போது மாஸ்டரின் மனோசக்தியில்
தட்டுப்பட்டு விடக்கூடாது. அது ஆபத்து….
மாஸ்டரிடமிருந்து
அறிய வேண்டிய ரகசியங்கள் ஒன்றிரண்டு அவனுக்கு ஏற்கெனவே இருந்தன. அவர் வாரணாசியில் பாழடைந்த
கோயிலுக்குப் போய் விட்டு வந்ததை அவன் அறிந்த பின்பு, அவர் அந்தக் கோயில் பற்றியும்,
அதில் இருந்த ரகசியக்குறிப்பு பற்றியும் எப்படி அறிந்தார் என்பது அவனுக்குத் தெரிய
வேண்டியிருந்தது. குரு எப்போதாவது ஒரு சந்திப்பில் தன் மரணத்திற்குப் பின் அங்கு போய்
அந்த ரகசியக்குறிப்பை எடுத்துக் கொள்ளச் சொல்லி இருக்கலாம் என்று அனுமானித்தாலும் அதை
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவன் பல முறை எண்ணியிருக்கிறான். அப்படியே இருந்தாலும்
குரு இறந்தவுடன் மாஸ்டர் அங்கு போயிருக்க வேண்டும். அப்படிப் போகாமல் வளர்பிறை சப்தமி
நாளில் மாஸ்டர் போனது தற்செயல் என்று மர்ம மனிதன் நினைக்கவில்லை. வளர்பிறை சப்தமி நாள்
சில ரகசிய சமிக்ஞைகள் அறிய சிறந்த நாள் என்பதை பழங்கால ஓலைச்சுவடிகள் சொல்வதைப் படித்திருக்கிறான்.
மாஸ்டரை அங்கு அந்த நாளில் போக வைத்தது அவர் உள்ளுணர்வா இல்லை அதுவும் அவருடைய குரு
சொல்லித் தானா? அதையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அவர் தேடிப் போன அந்த
ரகசியக் குறிப்பை மர்ம மனிதன் முன்பே அங்கிருந்து எடுத்து வந்து விட்டதால் அங்கு எதுவும்
கிடைக்காத போது மாஸ்டரின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அறியும் ஆவல் அவனிடம் இருந்தது.
ஆனால் அவர் மனதில் எட்டிப் பார்க்கப் போக அவன் எச்சரிக்கை உணர்வு தடுத்திருந்தது.
ஆனால்
இப்போது மாஸ்டர் – க்ரிஷ் சந்திப்பை அவன் நேரடியாகவே அறிந்து கொள்ள வேண்டும். அது ஆபத்தானதாக
இருந்தாலும் கூட. சிறிது நேரமே ஆனாலும் க்ரிஷ் மேல் அவர் கவனம் முழுவதுமாக இருக்கையில்
அவர் மனதை எட்டிப் பார்த்து விட வேண்டும். பழைய சந்தேகங்களையும் அவன் தீர்த்துக் கொள்ள
வேண்டும். அவர் அவனை உணர்வதற்கு முன் அந்த அலைவரிசைகளில் விடுபட்டு விட வேண்டும். மனதில்
அந்தத் தீர்மானம் உறுதிப்பட அவனும் சென்னைக்குப் பயணமாக முடிவெடுத்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
Eagerly waiting for Master - Krish meet.
ReplyDeleteஎன்ன சார் எதிரிகள் ரெண்டு பேரையும் ஜாயிண்ட் பண்ணி விட்டுடுவீங்க போல இருக்கே. மாஸ்டர் க்ரிஷ் ரெண்டு பேரும் சந்திக்கிற காட்சியை மர்ம மனிதனும் பார்க்க வருவதை எதிர்பார்க்கவில்லை. மூணு பேரும் சேர்ந்து வருகிற காட்சி முதல் தடவையாக வரப்போகிறது.என்ன ஆகும்? பரபரப்பு தாங்க முடியவில்லை.
ReplyDeleteAwww
ReplyDeleteWow.....மும்முனை சந்திப்பு....நிகழ்ப் போகின்றதா....
ReplyDeletewaitinggggg
வளர்பிறை சப்தமி பற்றி தகவல் அருமை ஐயா...
ReplyDeleteஇந்த வார தொடர் சில பயனுள்ள தகவல்களை கொடுத்துள்ளது...
ReplyDeleteஅதுவும்... அடுத்தவர் மனதினை படிக்கும் கலையில்,இவ்வளவு நுணுக்கங்கள் உள்ளதா?
வியப்பாக உள்ளது சார்....
எதிரிகள் எப்போதும் ஒன்று கூடிவிடுவார்கள் எப்படியாவது .......மர்ம மனிதனை மோப்பம் பிடித்துவிடுவாரா மாஸ்ட்டர்........ கிரிஷ்யையும் உணரவைப்பாரா? பட்டை தீட்டப்படுவான அவரால்......... இவர்கள் பின் இஸ்ரோ CM
ReplyDeleteயை சந்திக்க போகும் செந்தில் நாதன் புலனாய்வு தொடங்கிவிடுமா இன்ரஸ்ட்டா போகுது .......ஜி
marma manidhan yaar? Vishvama?
ReplyDelete