Monday, August 14, 2017

பக்தியா, ஞானமா?




லக்கிற்குப் பல வழிகள் இருக்கையில் எந்த வழி சிறந்தது என்பதைக் கண்டுபிடித்து அந்த வழியிலேயே செல்லலாமே என்கிற எண்ணம் அறிவுள்ள மனிதனுக்கு ஏற்படுவது இயற்கை. அர்ஜுனனுக்கும் அந்த எண்ணம் வந்தது. அவனை ஈர்த்த வழிகளான பக்தி, ஞானம் என்ற இரண்டு வழிகளில் எந்த வழி சிறந்தது, எந்த வழி ஸ்ரீகிருஷ்ணருக்கு உகந்தது என்பதை அறிய விரும்பிய அவன் பகவத் கீதையின் பன்னிரண்டாம் அத்தியாயமான பக்தி யோகத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்கிறான்.

எப்பொழுதும் உன் மீது பக்தி கொண்டு உன்னையே வழிபடுபவர்கள் யோகத்தில் சிறந்தவர்களா? உருவமும், அழிவும் அற்ற பிரம்மத்தை வழிபடுபவர்கள் யோகத்தில் சிறந்தவர்களா? இருவகையினரில் யார் யோகத்தில் சிறந்தவர்கள்?

இந்தக் கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

என்னிடத்தில் மனதை ஒருமைப்படுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் எப்போதும் என்னையே வழிபட்டிருப்பவர்களே யோகிகளில் சிறந்தவர்கள் எனக் கருதுகிறேன்.

இரண்டுமே சிறந்த வழிகள் தான் என்றாலும் கூடத் தீர்மானமாக ஒன்றை மட்டும் சொல் என்று அர்ஜுனன் கேட்டது பகவானுக்குத் தர்மசங்கடமான கேள்வி என்று வினோபா கூறுகிறார். தாயிற்கு இரண்டு பிள்ளைகளும் இரு கண்களைப் போல இணையாக முக்கியமானவை. ஆனால் ஒரே ஒருவரைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் தன்னை விட்டு இருக்க முடிந்த பெரிய பிள்ளையை விட, தன்னை விட்டுப் பிரிந்திருக்க முடியாத இளைய பிள்ளையைத் தான் சொல்வாள் அல்லவா? அதே போலத் தான் ஸ்ரீகிருஷ்ணர் பக்தியைச் சொல்வதாகக் கூறுகிறார்.

தன்னை வணங்குபவனே மேலானவன் என்று சொல்வது பகவானே ஆனாலும் அது ’ஈகோ’ எனப்படும் ‘நான்’ என்ற அகம்பாவம் சார்ந்த பதில் அல்லவா என்று சந்தேகப்பட்டால் அது முற்றிலும் தவறு என்றோ அடிப்படைக் காரணம் இல்லாதது என்றோ சொல்ல முடியாதல்லவா? அந்தச் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்தப் பதிலுக்கான காரணங்களை அடுத்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

ஆனால் அழிவில்லாததும், குறிப்பற்றதும், வெளிப்படையாகத் தெரியாததும், எங்கும் பரவியிருப்பதும், நினைத்துப் பார்க்க முடியாததும், எல்லோருக்கும் பொதுவானதும், அசையாததும், நிலையானதுமான பரம்பொருளை யார் வணங்குகிறார்களோ, எவர்கள் புலன்களை அடக்கி, எல்லோரிடமும் சமநோக்குடையவர்களாய் , எல்லா உயிர்களின் நன்மைகளையும் கவனத்தில் கொண்டு இயங்குகிறார்களோ அவர்கள் என்னையே அடைகிறார்கள்.

ஆனால் உருவமில்லாத பிரம்மத்தை வழிபடுவதில் அதிக சிரமம் உண்டு. உடலில் பற்றுடையவர்களால் உருவமற்ற பரம்பொருள் பற்றிய எண்ணமாவது மிகுந்த சிரமத்துடனேயே உண்டாகிறது.

பரம்பொருள் அழிவில்லாதது, உருவமற்றது, புலன்களால் அறிய முடியாதது, எங்கும் பரவியிருந்தாலும் எண்ணத்தில் அடங்காதது, அனைவருக்கும் பொதுவானது (அதனால் தனிப்பட்ட உரிமையை யாரும் பரம்பொருளிடம் கொண்டாட முடியாது), நிலைத்திருப்பது, மாறாதது. இந்த விசேஷ குணாதிசயங்கள் அனைத்துமே சராசரி மனிதன் பற்றிக் கொள்ள முடியாதவை. உடல் சார்ந்து வாழும் மனிதனுக்கு இவற்றை உறுதியாகப் பற்றிக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாததால் வழிபடுவதும் சிரமமாகவே இருக்கும். ஏனென்றால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்றை அவனால் எப்படி ஆத்மார்த்தமாய் வழிபட முடியும்? இந்தச் சிக்கல் ஞானத்தில் இருக்கிறது. அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ள முடிந்தவர்களால் கூட ஆத்மார்த்தமாய் இந்த ஞான முறையில் வழிபட முடிவது மிகவும் கஷ்டமே.

ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தின் இன்னொரு பக்கத்தையும் சொல்கிறார். ஞானம் என்றால் பக்கம் பக்கமாய் தத்துவங்களைப் படித்துச் சொல்வது அல்ல. அதிலிருந்தும் இதிலிருந்தும் உதாரணம் சொல்வதும் அல்ல. உதாரணமாக வாழ்வது தான் ஞானம். ஞானியாக இருப்பவன் எப்படி வாழக்கூடியவன் என்பதையும் கூடவே ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருப்பது சிறப்பு.

மூன்று மிக முக்கியமான அம்சங்களை ஞானத்தின் வெளிப்பாடாக இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். அவை புலனடக்கம், சமநோக்கு, அனைத்துயிர்களின் நன்மை. மூன்றுமே சுலபமானவை அல்ல.

புலன்கள் எவ்வளவு தான் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தோன்றினாலும் எப்போது வேண்டுமானாலும் திடீரென்று தறிகெட்டு ஓடக்கூடும் என்பதே யதார்த்தம். அவற்றை சதா சர்வகாலம் அடக்கி வைக்க வேண்டுமென்றால் அதன் வழியாக வரும் கவர்ச்சிகள் சிறு சலனத்தையும் ஏற்படுத்த முடியாத உயரத்தை ஒருவன் எட்டியிருக்க வேண்டும்.

சமநோக்கும் எளிதில் வசப்படுகிற தன்மை அல்ல. அதே போல அனைத்துயிர்களின் நன்மையும் கருத்தில் கொண்டே இயங்குவது எல்லா நேரங்களிலும் ஒருவரால் கடைபிடிக்க முடிந்த தன்மை அல்ல. அனைத்தையுமே பரம்பொருளாகவும், பரம்பொருளின் அம்சங்களாகவும் காண முடிகிற போதே சமநோக்கும், அனைத்து உயிர்களின் நன்மைகளையும் கருத்தில் கொள்வது சாத்தியப்படும். ’நான்’ என்கிற அகம்பாவம் முழுமையாகக் களையப்பட்டால் ஒழிய இரண்டுமே சாத்தியம் இல்லை.

இப்படிப்பட்ட ஞானம் வருவதும் ஞான முறையிலேயே வாழ்வதும் எத்தனை பேருக்குச் சாத்தியம்? இந்தக் காரணங்களாலேயே இந்த ஞானத்தை விட பக்தி சுலபமானதும், சிறந்ததுமாக ஸ்ரீகிருஷ்ணரால் சொல்லப்படுகிறது.

பக்தியில் பிடித்து நிலைத்து நிற்க உறுதியான இறைவன் உண்டு. மனம் லயிக்க அழகான உருவம் உண்டு. பெருமையாக நினைக்க ஆயிரம் அருமையான குணங்கள் உண்டு. காப்பாற்றுவான் என்ற பூரண நம்பிக்கை உண்டு. உடன் அவன் இருக்கிறான் என்ற அசைக்க முடியாத தைரியம் உண்டு. காதலால் கசிந்துருகி கண நேரமும் மறக்க முடியாத  உன்மத்த நிலை உண்டு. அதனால் பக்தி வழியில் ஆயிரம் வகைகளில் அவன் இறைவனை வழிபடுவான். இதனால் எளியவனுக்கும் பக்தி கைகூடும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் அழகானதொரு சுலோகம் உண்டு. “பசுவிடம் பால் கறக்கும் போதும், தானியங்களை உரலில் குத்தும் போதும், தயிர் கடையும் போதும், வீடு மெழுகும் போதும், குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போதும், அழும் குழந்தையைத் தாலாட்டும் போதும், வீடு பெருக்கும் போதும்,  தண்ணீர் தெளிக்கும் போதும், பிற காரியங்களைச் செய்யும் போதும், அன்பு நிறைந்த உள்ளத்தோடு கண்களில் நீர் பெருகத் தழுதழுத்த குரலில் ஸ்ரீகிருஷ்ணனைப் பாடிப் பரவசம் கொண்டு, எப்பொழுதும் ஸ்ரீகிருஷ்ணனிடம் லயித்தவர்களான அந்த விரஜப் பெண்மணிகள் பெரும்பேறு பெற்றவர்கள்.”

இப்படி எளிய வாழ்க்கையில் அடைந்து கிடக்கும் வீட்டுப் பெண்மணிகளுக்கும் கூட பக்தி மூலம் இறைவனிடம் மனதை நிறுத்துவது சுலபமாக இருக்கிறது. இப்படி வாழ்க்கையே இறைவன் மயமானால் அவனையே அடைவதும் முடிவான நிலையாக ஆகி விடுகிறது.

இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும். ஞானத்தின் மூலமாக அடையும் பரம்பொருளான பிரம்மமும் ஸ்ரீகிருஷ்ணரும் வேறல்ல. அதனால் தான் ஞான வழியை விளக்கிக் கொண்டு வந்த சுலோகத்தில் கூட அவர்கள் முடிவில் என்னையே அடைகிறார்கள் என்று கூறுகிறார்.

பாதை நீளும்….

என்.கணேசன்


1 comment: