Monday, July 17, 2017

வூடூவுக்கு எதிரான விமர்சனங்கள்!


வூடூ பற்றிய சுவாரசியமான தகவல்கள் பலவற்றை இது வரை பார்த்த நாம் அதற்கு எதிராக வலுவாக சொல்லப்படும் விமர்சனங்களையும் கவனிக்காமல் விட்டால் வூடூவை முட்டாள்தனமாக நம்புகிற கூட்டத்தில் சேர்ந்து விட நேரிடும். எனவே அதையும் பார்ப்போம். 

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்த ராபர்ட் எல்.பார்க் (Robert L. Park) என்பவர் 2000 ஆம் ஆண்டு எழுதிய வூடூ அறிவியல்: முட்டாள்தனத்தில் இருந்து மோசடிக்கான பாதை (Voodoo Science: The Road from Foolishness to Fraud) என்ற நூலில் வூடூவை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்த அறிஞர்களை சாடியிருக்கிறார். அப்படி அறிவியல் ரீதியான அற்புதங்கள் இல்லவே இல்லை என்று பல உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார். பலரும் பார்க்க விரும்பியதையே பார்த்து அதற்கு சாமர்த்தியமாக அறிவியல் சாயம் பூசுகிறார்கள் என்பது அவரது வாதமாக இருந்தது. ஆனால் அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் “அவர் பார்க்க விரும்பாததைப் பார்க்கவில்லை. சில குறிப்பிட்ட நிகழ்வுகளையும், தகவல்களையும் அலசியிருக்கிறாரே ஒழிய வூடூவின் அனைத்து அம்சங்களையும் திறந்த மனதுடன் ஆராயத் தவறிவிட்டார்என்று அவரைக் குற்றம் சாட்டுகிறார்கள்.     

ராபர்ட் பார்க்கைப் போலவே வால்டர் பி. கேனன் (Walter B. Cannon) என்ற ஆராய்ச்சியாளர் 1942 ஆம் ஆண்டு வூடூ சாவு (Voodoo’ Death) என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். அதில் வூடூ சாவுகள் சிலவற்றை ஆராய்ச்சியில் எடுத்துக் கொண்டு அந்த சாவுகள் வூடூ சக்திகளால் ஏற்பட்டவை என்பதை விட வூடூ குறித்து மக்கள் மனதில் இருந்த பயத்தினால் ஏற்பட்டவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். அவர் காலத்தில் மருத்துவ விஞ்ஞானம் இன்றைய அளவு முன்னேறி இருக்கவில்லை என்றாலும் அவர் அன்று அனுமானித்தவை சரியே என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர் எடுத்துக் கொண்ட நிகழ்வுகளின் அலசலில் அவருக்குப் புரியாத சில அம்சங்களுக்கு இன்றைய விஞ்ஞானம் பதிலை எட்டியிருக்கிறது என்பதை இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வூடூ மரணம் குறித்து வால்டர் பி. கேனன் மற்றும் இன்றைய மருத்துவர்கள் கருத்துக்கு ஆதாரமாக எண்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ந்யூ சயிண்டிஸ்ட் (New Scientist) என்ற பத்திரிக்கை 2009 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டிருக்கிறது. அந்த சம்பவத்தை நான்கு மருத்துவர்கள் நேரடி சாட்சிகளாகக் கண்டிருந்து அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த சுவாரசியமான உண்மை நிகழ்வைப் பார்ப்போம்.

அமெரிக்காவில் அலபாமாவின் ஒரு மயானத்தில் ஒரு நள்ளிரவில் வான்ஸ் வேண்டர்ஸ் (Vance Vanders) என்பவருக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு சூனியக்காரன் ஒரு பாட்டிலில் வைத்திருந்த நாற்றமெடுத்த ஒரு திரவத்தை அவர் முகத்தருகே கொண்டு வந்து ஊதி “இனி நீ சில நாளில் இறந்து விடுவாய். யாருமே உன்னைக் காப்பாற்ற முடியாது” என்று சொல்லி விட்டான். அவர்களுக்குள் முன் பகை எதாவது இருந்ததா, ஏன் அவன் அப்படிச் செய்தான் என்ற தகவல்கள் அந்தப் பத்திரிக்கையில் தரப்படவில்லை.

வீட்டுக்கு வந்த வான்ஸ் வேண்டர்ஸ் படுத்த படிக்கையாகி விட்டார். அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. மிகவும் ஒல்லியாகி விட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு போனார்கள் எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளில் ஒரு பிரச்னையும் தெரியவில்லை. மருத்துவர்களே குழம்பினார்கள். நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே வந்த வேண்டர்ஸ் கிட்டத்தட்ட இறந்தே போய் விடுவார் என்ற நிலை வந்து விட்டது. ”காரணம் இல்லாமல் இப்படியாக வாய்ப்பே இல்லையே, இது மருத்துவத்திற்கே சவாலாக இருக்கிறதே” என்று ட்ரேடன் டொஹெர்ட்டி (Drayton Doherty) என்ற தலைமை மருத்துவர் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய போது வேண்டர்ஸின் மனைவி டொஹெர்ட்டியிடம் அலபாமா மயானத்தில் சூனியக்காரன் ஒருவன் சூனியம் செய்த விவரத்தைத் தயக்கத்துடன் தெரிவித்தார்.

டொஹெர்ட்டி மனித மனத்தையும் அதன் நம்பிக்கைகளின் வலிமையையும் நன்றாக உணர்ந்தவர். அவர் ஆழமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் அவர் வேண்டர்ஸின் படுக்கைக்கு அருகே அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்தார். அவர்களிடம் பரபரப்புடன் சொன்னார். “நேற்று இரவு அந்த சூனியக்காரனை நான் தந்திரமாக அதே மயானத்திற்கு வரவழைத்தேன். அவன் கழுத்தை நெறித்து ஒரு மரத்தோடு அவனை நசுக்கி நிறுத்தி வைத்துக் கேட்டேன். “நீ வேண்டர்ஸுக்குச் செய்த சூனியம் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? என்று கேட்டேன். அவன் உண்மையைக் கக்கி விட்டான். அவன் அப்படி ஊதிய போது சூனிய மந்திரத்தைச் சொல்லி ஒரு பல்லியின் கால்களை வேண்டர்ஸின் வயிற்றில் தடவி இருக்கிறான்.  அந்த சூனியப் பல்லியின் முட்டை ஒன்று வேண்டர்ஸின் வயிற்றிற்குள் போயிருக்கிறது. அந்த முட்டை பொறித்து வேண்டர்ஸின் வயிற்றில் பல்லி உருவாகி அவர் உடலின் உட்பகுதிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதாம்....

வேண்டர்ஸின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள் என்றால் வேண்டர்ஸ் நிலைமை எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம். மிக பலவீனமான நிலையிலும் அவர் வாயைப் பிளந்தார்.

டொஹெர்ட்டி சொன்னார். “இவரைப் பிழைக்க வைக்க ஒரே வழி அந்தப் பல்லியை வெளியே எடுப்பது தான்.”  குடும்பத்தினர் சம்மதித்தார்கள்.   

டொஹெர்ட்டி ஒரு ஊசியை வேண்டர்ஸுக்குப் போட்டார். அடுத்த சில நிமிடங்களில் வேண்டர்ஸ் வாந்தியெடுக்க ஆரம்பித்து விட்டார். அவரால் வாந்தியை சிறிதும் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லோரும் வேண்டர்ஸையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் யாரும் பார்க்காத தருணத்தில் முன்பே ஒரு கருப்புப் பையில் கொண்டு வந்திருந்த பச்சை நிறப் பல்லியை வாந்தி வெள்ளத்தில் நழுவ விட்டார்.

பின் உற்சாகத்துடன் கத்தினார். “வேண்டர்ஸ் உங்கள் வயிற்றில் என்ன இருந்திருக்கிறது என்று பாருங்கள். உங்கள் உடலில் இருந்து சூனியம் வெளியேறி விட்டது”.  வேண்டர்ஸ் பேராச்சரியத்துடன் கண்களைத் திறந்து பலவீனமாக அந்தப் பல்லியைப் பார்த்தார். பின் மிகவும் களைப்புடன் கண்களை மூடிய அவர் நிம்மதியாக உறங்கினார். மறு நாள் தான் கண் விழித்தார். பின் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. மருந்துகளும், ஒழுங்காய் உணவு உட்கொண்டதும் அவரைப் பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்ப வைத்தது. ஒரு வாரத்தில் வீடு திரும்பினார்.

டொஹெர்ட்டி தந்திரமாய் அந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கா விட்டால் வேண்டர்ஸ் வீடு திரும்புவதற்குப் பதிலாக மயானத்திற்கே சென்று புதைக்கப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. மனித மனதில் பயம் ஆழமாக வேரூன்றி விடும் போது அந்தப் பயமே ஒருவரை மரணம் வரை அழைத்துச் செல்ல வல்லது என்பதற்கும், அந்தப் பயம் வேரோடு அழிக்கப்பட்டு நம்பிக்கையை உணர்ந்தால் அதுவே அவரைக் காப்பாற்றி விடுகிறது என்பதற்கும் இதுவே நல்ல உதாரணம்.

இந்த அடிப்படையில் பார்க்கையில் வால்டர் பி கேனன் வூடூ சாவுகள் குறித்து எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் ஆதாரமற்றவை அல்ல என்பதை நம்மாலும் உணர முடிகிறது.  வூடூ சூனியம் வைத்த பின் இறப்பு நிச்சயம் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கையில் அவன் நம்பிக்கையே அவனைச் சாகடிக்க ஆரம்பித்து விடுகிறது. அவன் மரணத்திற்காகக் காத்திருக்கையில் அவனைச் சுற்றி இருப்பவர்களும் நம்ப ஆரம்பித்து இறுதிச்சடங்குகளுக்குக் கூட ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் அந்த நபர் பிழைக்க வழி இருக்கிறதா என்ன?

வூடூ சாவுகள் குறித்து தென்னமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் வெளிவந்த செய்திகள் எல்லாம் வூடூ சக்தியின் விளைவே என்று சொல்ல முடியாது என்றும் அவை சாதாரண விஷமூட்டப்பட்டதன் விளைவாகக் கூட இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். அக்காலங்களில் வூடூ சாவுகளுக்கு முறையான பிரேத பரிசோதனைகள் கூட சரியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்ததால் பல கொலைகள் அடையாளம் காணப்படாமலே போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 

இது போன்ற காரணங்களால் வூடூ குறித்து எதிர்மறையான கருத்துகள் சமூகத்தில் நிலவி வருகின்றன. அதற்கேற்றாற் போல் வில்லியம் சீப்ரூக் (William Seabrook) எழுதிய மேஜிக் ஐலண்ட் போன்ற நாவல்களும், ஜேம்ஸ் பாண்ட் படம் லிவ் அண்ட் லெட் டை (Live and Let Die) போன்ற திரைப்படங்களும் வூடூவைத் தவறானபடியாகவே சித்தரிப்பதும் வூடூ பற்றிய சந்தேகங்களை வளர்க்கின்றன. சரி அப்படியானால் உண்மை தான் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.

- என்.கணேசன்

- நன்றி: தினத்தந்தி 16.5.2017

1 comment: