Monday, June 12, 2017

வூடூவில் எது, எதற்கு, எப்படிப் பயன்படுகிறது?


வூடூ சடங்குகளை முறையாக அறிந்தவர்களும், அவற்றின் சாராம்சங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு தவறில்லாமல் நடத்தியவர்களும் காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்தனர். மேலும் வூடூ சடங்குகளும் மிக நீண்டதாகவும் எல்லா இடங்களிலும் முறைப்படி நடத்த முடியாதபடியும் இருந்தன. எனவே அதன் நீண்ட சடங்குகள் முறைப்படி நடப்பது குறைந்து கொண்டே வந்து பின் அரிதாகி அதன் சில அம்சங்களை மட்டும் தேவைப்படும் இடங்களில் அவசர வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பமாகி விட்டது.

வூடு சடங்குகள் பரந்த பல விஷயங்களை உள்ளடக்கியவை. அவை அனைவராலும் சரியாகப் புரிந்து முறையாகச் செய்யப்பட முடியாத அளவு நுணுக்கமானவை. அவற்றைத் தவறாகச் செய்து விட்டால் வூடூ சக்திகள் செய்பவரையே திருப்பித் தாக்கும் அபாயம் உள்ளது. அதன் விளைவாக சடங்குகளின் இடத்தைப் பிற்காலத்தில் பொருள்கள் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தன. இந்தப் பொருளை இந்த முறையில் பயன்படுத்தினால் தேவையான இந்த விளைவு ஏற்படும் என்ற சிக்கல் இல்லாத அளவில் வூடூவை விற்பனை செய்வோரும் பயன்படுத்துவோரும் அதிகரித்தனர்.

ஹூடூ மூலிகை மற்றும் வேர் மேஜிக் (Hoodoo Herb and Root Magic) என்ற புத்தகத்தில் கேத்தரைன் ரோன்வோட் (Catherine Yronwode) என்ற ஆராய்ச்சியாளர் சுமார் 500 வகையான தாவர, விலங்கின, உலோகப் பொருள்கள் வூடூவில் இடம் பெறுவதாகத் தெரிவிக்கிறார். ஆனால் தற்கால நடைமுறையில் நூற்றுக்கும் குறைவாகவே அவை பயன்பாட்டில் உள்ளன. அந்த இயற்கைப் பொருள்களுக்குப் பதிலாக நிறைய தயாரிப்புப் பொருள்கள் பயன்பாட்டில் புகுந்து விட்டன.

வூடூவில் எதை, எதற்கு, எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்ற சில தகவல்களைப் பார்ப்போம்.


வெற்றியாளன் ஹை ஜான் (High John the Conqueror):
ஹை ஜான் என்பவன் ஆப்பிரிக்க-அமெரிக்க கர்ணபரம்பரைக் கதைப்படி காங்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டின் இளவரசன். ஒரு போரில் தோற்கடிக்கப்பட்டு கைதியாகி அமெரிக்காவில் அடிமையாக விற்கப்படுகிறான்.  அவன் அங்கு ஏராளமான பிரச்னைகளுக்கும், சோதனைகளுக்கும் ஆளாகி கஷ்டப்பட்டாலும் மனம் தளராமல் பல அபூர்வ சக்திகளைப் பெற்று தப்பித்து தன் நாட்டுக்கே சென்று விடுகிறான். ஆனால் செல்லும் போது தன் சக்திகளை ஒரு செடியின் வேரில் விட்டுச் செல்கிறான்.

எனவே மோசமான சூழ்நிலைகளிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், பிரச்னைகளிலிருந்து விடுபட நினைப்பவர்கள் வெற்றியாளன் ஹை ஜான் என்று அவன் பெயரிலேயே அழைக்கப்படும் அந்த வேரை தங்களிடம் வைத்திருந்து அவனை வேண்டிக் கொண்டால் அவர்கள் நோக்கம் நிறைவேற்றப்படும் என்று வூடூவினர் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மனோதைரியம் பெறவும் ஹை ஜான் வேரை வைத்துக் கொள்கிறார்கள்.  ஒரு அதிர்ஷ்டம் தரும் பொருளாகக் கருதப்படும் ஹை ஜான் வேரைப் பச்சை நிறப் பையில் வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம், செல்வம், அதிகாரம் ஆகியவை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். காதலிப்பவர்களின் தலைமுடியோடு அந்த வேரைச் சேர்த்து சிவப்புப் பையில் வைத்துக் கொண்டால் காதல் வெற்றியடையும் என்றும் நம்புகிறார்கள். அடுத்தவர் அனுப்பும் தீய சக்திகள் தங்களைப் பாதிக்காமல் இருக்கவும் ஹைஜான் வேரை தங்களிடம் வைத்துக் கொள்கிறார்கள்.


கருப்புப்பூனையின் எலும்பு

கருப்புப் பூனையின் எலும்பு சில அமானுஷ்ய சக்திகளைப் பெற உதவும் என்று வூடூவினர் நம்புகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் கருப்புப்பூனையை உயிரோடு வேக வைத்து தோல் உரிந்து கிடைக்கும் எலும்புகளின் மேல் மட்டத்தில் இருக்கும் முதல் எலும்பு வூடூவில் அமானுஷ்ய சக்திகளைப் பெற உதவுவதாக நம்பப்படுகிறது. அந்த எலும்பை வைத்துக் கொண்டு நள்ளிரவு நேரங்களில் சில பயிற்சிகளுடன் மந்திரங்களையும் சொல்லி வந்தால் மாயமாய் மறைவது உட்பட சில அமானுஷ்ய சக்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.


கல்லறை மண்

கல்லறை மீது இருக்கும் மண் அடுத்தவருக்குத் துன்பம் விளைவிக்க வூடுவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த மண்ணை ஒருவர் பயன்படுத்தி வரும் செருப்பில் தூவி விட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு பல துன்பங்களை ஏற்படுத்த முடியும் என்று வூடூவினர் நம்புகிறார்கள். மேலும் சூதாட்டத்தில் ஜெயிக்கவும் கல்லறை மண் உதவுவதாக நினைக்கிறார்கள். 



மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகளையும் வூடூவினர் பல நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். வாசனைத் திரவியங்களால் தோய்க்கப்பட்ட மெழுகுவர்த்திகள் பெரும்பாலும் காதலிப்பவர்களை ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு நீல நிற மெழுகுவர்த்தியில் காதலிப்பவரின் பெயரை ஏழு முறை எழுத வேண்டும். பின் அந்த மெழுகுவர்த்தியை வாசனைத் திரவியத்தில் உருட்ட வேண்டும். பின் காதல் நிறைவேற வேண்டி பிரார்த்தனை செய்து விட்டு மெழுகுவர்த்தியை காலை 6.00 மணி, மதியம் 12.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு ஐந்தைந்து நிமிடங்கள் எரிய வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்வது காதலிப்பவர்க்கு நம்மிடம் ஈர்ப்பை அதிகப்படுத்தும் என்று நம்புகிறார்கள். வேலை கிடைக்கவும், எதிரிகளையும் அழிக்கவும் கூட வூடூவில் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துகிறார்கள். மெழுகுவர்த்திகளில் எழுதுவது நோக்கத்திற்கேற்ப மாறுபடுவதே வித்தியாசம்.


மேஜிக் விளக்குகள்
விளக்கெண்ணையும், ஆலிவ் எண்ணையும் கலந்து விளக்குகளில் ஊற்றி நடுவீட்டில் தொங்க விடுவது வீட்டுக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பாக வூடூவில் கருதுகின்றனர். நடுநாயகமாக வீட்டில் எரியும் அந்த விளக்கொளியில் எல்லா தீய சக்திகளும் துரத்தப்படுவதாக நம்பப்படுகின்றது. அந்த தொங்கும் விளக்குகள் வூடூ பொருள்களின் விற்பனைக்கடையில் அதிகமாக விற்பனையாகின்றன.


காலடித்தடங்கள்

வூடூவில் பொருள்கள் மட்டுமல்லாமல் மனிதர்களின் காலடித்தடங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது சுவாரசியமான செய்தி. ஒருவர் எப்போதும் போகின்ற பாதையில் தெளிவாக அவர்கள் காலடித்தடங்கள் பதிவாகி இருக்கிற ஒரு சந்தர்ப்பத்தில் இரு காலடித்தடங்களுக்கு இடையே இருக்கின்ற தூரத்தை வூடூ முறையில் தயாரிக்கப்படும் சிறிய அளவுகோளால் அளந்து விட்டு அங்கேயே சில மந்திரங்கள் ஜெபித்து புதைத்து விடுகிறார்கள். தொடர்ந்து சில நாட்கள் அந்த வழியாகப் பயணித்த பின் அந்த நபரால் அந்த ஊரிலேயே இருக்க முடியாமல் ஊரை விட்டே போக நேரிடும் என்கிறார்கள். தங்கள் எதிரிகளை ஊரை விட்டுத் துரத்த இந்த முறையை வூடூவில் பயன்படுத்துகிறார்கள்.

மற்ற பொருள்கள்

மேலே சொன்னவை மட்டுமல்லாமல் பல விதமான பொருள்களை வூடூவில் பயன்படுத்துகிறார்கள். ஐந்து இலை இருக்கும் ஒரு புல் பண வரவு சம்பந்தமான அதிர்ஷ்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாம் ஏவாள் வேர் என்ற ஒரு வகை வேர் காதலில் அதிர்ஷ்டத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.  முயலின் கால்கள் வேகமான அதிர்ஷ்டத்திற்கும், பன்றியின் நாக்கு நீதிமன்ற வழக்குகளில் வெற்றிக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரது தலைமுடி, வெட்டிய நகம் போன்றவை கூட அவர் மீது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுகிறது. அவை கிடைக்காத போது அதற்குப் பதிலாக ஒரு தாளில் அவர் பெயரை எழுதியும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நம் நாட்டில் செய்வது போல் வெள்ளியால் செய்த தாயத்துகள் மந்திரித்து ஜெபித்து கயிறில் கட்டி கழுத்திலோ மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளும் வழக்கமும் வூடூவில் உண்டு. சில சமயங்களில் குறிப்பிட்ட வேர், குறிப்பிட்ட தகடு, வேறு ஏதாவது வூடூ பொருள் சேர்த்து ஒருவரது ஆடையில் தைத்து அதை அணிந்து கொண்டு செல்வது போகின்ற வேலையை வெற்றியாக்கும் என்று நம்புகிறார்கள். குறிப்பாக சூதாட்டங்களுக்குச் செல்லும் போது அதிகம் இப்படிச் செய்கிறார்கள்.

பொருள்களைப் போலவே இடங்களும் நேரங்களும் கூட  வூடூவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. தேவாலயங்கள், சுடுகாடுகள், நான்கு தெருமுனை சந்திப்புகள் போன்ற இடங்களும், அதிகாலை, நள்ளிரவு ஆகிய நேரங்களும் வூடூ பயிற்சிகளுக்கும், ஏவல் செயல்பாடுகளுக்கும் ஏற்ற இடங்களாக நம்பப்படுகின்றன.

-     என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 25.04.2017

3 comments:

  1. இதையெல்லாம் திகில் படங்களில் தான் பார்த்திருக்கிறேன்.... இதன் பின் உள்ள விளக்கங்களை...தங்களின் பதிவின் மூலமே அறிகிறேன்...நன்றி

    ReplyDelete
  2. Dear Sit

    Is Mara character in your earlier novel based on Hoodoo?

    ReplyDelete