Thursday, December 22, 2016

இருவேறு உலகம் – 9



செந்தில்நாதன் இதற்கு முன் மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்தோ, பொது நிகழ்ச்சிகளிலோ தான் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். தனியாக முதலமைச்சரை அவர் சந்தித்துப் பேசியதில்லை. அமைச்சர் கமலக்கண்ணனின் மகனுடைய அடியாட்களை அவர் கைது செய்த போது கூட, பதவி உயர்வும், இடமாற்றமும் வழக்கமான அதிகாரபூர்வ வழியில் வந்ததே ஒழிய, முதலமைச்சர் அவரை போனில் கூட அழைத்துப் பேசவில்லை. அதனால் முதலமைச்சரின் அழைப்பு அவரை ஆச்சரியப்படுத்தியது. அழைத்த காரணம் என்னவாக இருக்கும் என்றறிய முடியாமல் குழப்பத்துடன் தான் முதலமைச்சரைச் சந்திக்க அவர் போனார்.

ராஜதுரை அவரை நீண்டநாள் நண்பரை வரவேற்பது போல இன்முகத்துடன் வரவேற்றார். “வாங்க..... உட்காருங்க..... சௌக்கியம் தானே?

மரியாதையோடு வணக்கம் தெரிவித்து விட்டு எதிர் நாற்காலியின் நுனியில் செந்தில்நாதன் அமர்ந்தார். “சௌக்கியம் தான் சார்

ஓரிரு வினாடிகள் அவரைப் புன்னகையோடு பார்த்து விட்டு ராஜதுரை சொன்னார். “எதிர்பாராத விதமா திடீர்னு ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு. என்ன ஆயிருக்கும்னு புரியல. அதை ரகசியமா துப்பறிய வேண்டிய சூழல்.... அந்த வழக்கை நம்பிக்கைக்குரிய நேர்மையான புத்திசாலியான அதிகாரி ஒருத்தர் கிட்ட ஒப்படைக்க வேண்டிய நிலைமை வந்தவுடனே எனக்கு முதல்ல ஞாபகம் வந்தது உங்க பேர் தான்....

எடுத்தவுடனே இப்படித் தலையில் ஐஸ்கட்டியாய் வைக்கிறாரே என்று கூச்சப்பட்டாலும் கூட முதல்வர் வாயிலிருந்து இந்தப் புகழுரை வந்தது செந்தில்நாதனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. பணிவுடன் “நன்றி சார்என்றார்.

ராஜதுரை நேரடியாக விஷயத்திற்கு வந்தார். க்ரிஷ் காணாமல் போனது பற்றியும், அது சம்பந்தமாக கமலக்கண்ணன் தெரிவித்த தகவல்களையும் சுருக்கமாகச் சொன்ன ராஜதுரை, “இதை நீங்கள் தான் ரகசியமாய் விசாரித்து உண்மையை அறிந்து சொல்ல வேண்டும்என்ற போது செந்தில்நாதன் முகம் சிறுத்துப் போனது. கமலக்கண்ணன் மகனின் அடியாட்களைக் கைது செய்த பின் அவருக்கு ஏற்பட்ட அவமானம் சிறியதல்ல. அந்த சம்பவத்தில் எதிர்பாராமல் பதவி உயர்வு கிடைத்தது ஒன்று தான் முழு அவமானமாக மாறி விடாமல் அவர் தன்மானத்தைச் சிறிதாவது காப்பாற்றியது. திரும்பவும் அந்தக் காட்டான்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில் அவருக்கு உடன்பாடில்லை.

செந்தில்நாதன் மெல்லச் சொன்னார். “சார் முதல்லயே அவங்களுக்கும் எனக்கும் இடையே மனக்கசப்பு இருக்கு.....

ராஜதுரை உடனடியாகச் சொன்னார். “நம்மள மாதிரி பொது ஊழியர்களோட வேலைல மனக்கசப்புகள் தவிர்க்க முடியாதது. அந்த மனக்கசப்புகள் நாம் செய்ய வேண்டிய கடமைக்குத் தடையாகறத நாம அனுமதிக்கக் கூடாது....

செந்தில்நாதனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதல்வர் அவரையும்,  தன்னையும் சேர்த்தே பொது ஊழியர் என்று சொன்னதும், அதைத் தொடர்ந்து சொன்னதில் உள்ள நியாயமும் கறாராக மறுக்க உத்தேசித்திருந்தவரைத் தயங்க வைத்தது. அதே சமயத்தில் ஒத்துக் கொள்வதற்கும் அவர் தன்மானம் மறுத்தது. அவர் தயக்கத்துடன் சொன்னார். “அவங்களுக்கும் இந்த விசாரணையை நான் செய்யறதுல உடன்பாடிருக்காது.....

கண்ணன் கிட்ட சொல்லிட்டேன். அவரும் ஒத்துகிட்டாச்சு...என்று சொன்ன ராஜதுரை கமலக்கண்ணனும் இப்படியே தான் ஆரம்பத்தில் தயங்கினார் என்கிற விஷயத்தைச் சொல்லவில்லை.

கண்ணன் என்று அவர் கமலக்கண்ணனைத் தான் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள செந்தில்நாதனுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன. என்ன இப்படி தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறாரே என்று நினைத்த செந்தில்நாதன் பணிவான குரலில் சொன்னார். “பிடிக்காதவங்க விசாரிக்கப் போனா ஒத்துழைப்பு இருக்காது, மரியாதை இருக்காது.....

“இதுல உங்க உதவி அவங்களுக்குத் தேவைங்கறதாலயும், உங்கள நியமிச்சது நான்ங்கறதாலயும் அப்படியெல்லாம் நடக்காது. அதனால தயக்கமே தேவையில்லை.... ராஜதுரை ஆணித்தரமாகச் சொன்னார்.

செந்தில்நாதன் பேச்சிழந்து போனார். இனி சொல்ல அவருக்கு ஒன்றுமில்லை. ஆனால் இப்படி இருதரப்பினரையும் கட்டாயப்படுத்தி அவரையே முதல்வர் இதில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது அவருக்கு விளங்கவில்லை.

ராஜதுரை மென்மையாகச் சொன்னார். “க்ரிஷ்ஷ அவன் பிறந்ததுல இருந்தே பார்த்துகிட்டு வர்றேன்.  ரொம்ப நல்ல பையன்.  ஜீனியஸ். அவன் இப்படி திடீர்னு காணாம போனது கண்ணனை மட்டுமல்ல என்னையே ரொம்ப கவலைப்பட வெச்சுடுச்சு.....

அவர் பேசப் பேச செந்தில்நாதனுக்கு சில மாதங்களுக்கு முன் க்ரிஷ் முதலமைச்சரின் திட்டம் ஒன்றை முட்டாள்தனம் என்று சொன்னதைப் படித்த ஞாபகம் வந்தது. பிறகு அலட்டாமல் முதல்வர் அதைச் சமாளித்த விதமும் நினைவுக்கு வந்தது. அவன் அப்படிச் சொல்லியும் அவன் மீது எந்தக் கோபமும், மனத்தாங்கலும் வைத்திருக்காமல் அவன் பற்றி நல்ல விதமாகவே மனப்பூர்வமாகச் சொன்னதும், அவனைக் கண்டுபிடிக்க தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுவதும் அவர் பார்வையில் முதல்வரை மேலே உயர்த்தியது.  

”.....வெளிப்படையான விசாரணை மீடியா கவனத்துக்கு வந்துடும். சர்க்குலேஷனுக்கும், ரேட்டிங்குக்கும் அவங்க செய்யற அலப்பறை தாங்க முடியாது. அதனால தான் ரகசியமா விசாரிக்க தீர்மானிச்சோம்.... க்ரிஷ் காணாம போனது சம்பந்தமா உங்க ஆரம்ப அபிப்பிராயம் என்ன? என்ன ஆயிருக்கும்னு நினைக்கிறீங்க?

செந்தில்நாதன் சில வினாடிகள் யோசித்து விட்டுச் சொன்னார். “இப்போதைக்கு கடத்தப்பட்டிருப்பான்னு தான் நினைக்கத் தோணுது. ஆனா பணத்துக்காக கடத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவு. ஏன்னா அதிகார வர்க்கத்து வீட்டு ஆள்களைப் பொதுவா யாரும் கடத்தறதில்லை. போலீஸ் தீவிரமா செயல்பட்டு, சகல வழிகளையும் கையாண்டு பிடிச்சுடும்னு அவங்களுக்கும் தெரியும்..... ஒன்னா முன்விரோதம் காரணமா இருக்கலாம்... இல்லைன்னா நம்ம கவனத்துக்கு வராத வேறெதாவது காரணம் இருக்கலாம்....

செந்தில்நாதன் தெளிவாகச் சொன்ன விதம் ராஜதுரையை மிகவும் கவர்ந்தது. செந்தில்நாதன் பற்றி பல மேலதிகாரிகள் சொல்லியிருந்த நல்லபிப்பிராயம் மேம்படுத்திச் சொல்லப்பட்டதல்ல என்பது உறுதியாகியது.

“சரி.... நீங்கள் இந்த விசாரணையை உடனடியாக ஆரம்பிக்கலாம். என்ன உதவி வேணும்னாலும் என் செக்ரட்டரி கிட்ட பேசுங்க..... நான் சொன்னபடி உங்க விசாரணை ரகசியமாவே இருக்கட்டும். முக்கியமா மீடியாவுக்கு தகவல் கசியக்கூடாது....  வாழ்த்துக்கள்என்று ராஜதுரை சொன்னார்.  

சந்திப்பு முடிவுக்கு வந்து விட்டதை உணர்ந்த செந்தில்நாதன் வேறு வழியில்லாமல் எழுந்து வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகும் ராஜதுரை சிறிது நேரம் அமைதியாக அப்படியே உட்கார்ந்திருந்தார். க்ரிஷ் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்ட போதே இதன் பின்னணியில் ஏதோ மிகப்பெரிய சதி இருப்பதாக அவருடைய உள்ளுணர்வு எச்சரித்திருந்தது. அவர் தன் உள்ளுணர்வின் சின்னக்குரலை என்றுமே அலட்சியப்படுத்தியதில்லை. செந்தில்நாதனைப் போன்ற அதிநேர்மையும், அறிவுக்கூர்மையும் உள்ள ஒரு அதிகாரியிடம் இந்த வழக்கை ஒப்படைத்த பின்பு இப்போது தான் அவர் மனம் அமைதியடைந்திருக்கிறது. அவர் உதவியாளர் அடுத்த சந்திப்பு குறித்துச் சொல்ல உள்ளே வர, அவர் கவனம் க்ரிஷ் விவகாரத்திலிருந்து விடை பெற்றது.


பெங்களூருவில் பீன்யா பகுதியில் இயங்கும்  ISRO Telemetry, Tracking and Command Network (ISTRAC) நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஆராய்ச்சியாளன் வழக்கத்தை விட அரை மணி நேரம் முன்பே தன் அலுவலக அறைக்கு வந்து விட்டிருந்தான்.  Astrosat என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் தினந்தோறும் அனுப்பும் பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களையும், தகவல்களையும் முதலில் பார்வையிடுபவன் அவன் தான். அதில் அவனுக்கு ஆர்வம் இருக்கும் தகவல்களை மட்டும் அந்த தகவல்குவியலில் இருந்து நீக்கி எடுத்துக் கொள்வான். மீதமிருக்கும் தகவல் குறிப்புகள் மட்டுமே பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு சேமிப்பிற்கும் வினியோகத்திற்கும் போகும்.

இன்று அவன் சீக்கிரமாகவே வந்திருப்பதற்குப் பிரத்தியேக காரணம் இருந்தது. அவன் பரபரப்பில் இருந்தான். அவசர அவசரமாகத் தன் கம்ப்யூட்டரில் வந்து குவிந்திருக்கும் தகவல்களில், குறிப்பிட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் மட்டும் பார்த்தான். ஆரம்பத்தில் மேலோட்டமாகப் பார்த்தான். பின் மறுபடியும் கூர்ந்து பார்த்தான். பார்த்தவனுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. கண்களை விரித்து திகைப்புடன் மூன்றாம் முறை பார்த்து விட்டு அவசரமாகத் தன் செல்போனில் ஒரு எண்ணை அழைத்தான். செல்போன் அடித்து ஓய்ந்ததே ஒழிய மறுபக்கத்தில் எடுத்து பேசப்படவில்லை. மூன்று முறை முயன்று சலித்துப் போனவன் செல்போனில் தகவல் அனுப்பினான். “தமிழகத்தில் நேற்றிரவு ஒரு அசாதாரண நிகழ்வு.  உடனே பேசவும்

அனுப்பி விட்டு எப்போது அழைப்பு வரும் என்று பொறுமையில்லாமல் காத்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்  

9 comments:

  1. சேட்டிலைட் ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டீங்க உங்க எழுத்தை. சி.எம். செந்தில்நாதனை ஹேண்டில் பண்ணின விதம் சூப்பர். என்ன கேரக்டரைசேசன் சார். சான்ஸே இல்லை. செம.

    ReplyDelete
  2. //
    அனுப்பி விட்டு எப்போது அழைப்பு வரும் என்று பொறுமையில்லாமல் காத்திருந்தான்
    //
    நாங்களும் தான் அடுத்த வியாழனுக்காக...

    ReplyDelete
  3. அடுத்து இது தான் நடக்கப்போகுது என்று கொஞ்சம் கூட அனுமானிக்கவே முடியவில்லை...எப்பவும் போல வித்தியாசமான கதைக்களம்.... Astrosat அனுப்பிய படம் என்னவாக இருக்கும்? really have no clue...

    ReplyDelete
  4. Hello sar iwant to copy this story

    ReplyDelete
  5. Looks like Alien is involved in this novel :)

    ReplyDelete