Thursday, December 8, 2016

இருவேறு உலகம் – 7


செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியால் மகனுக்கு ஆபத்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்த போது மகன் ஜீனியஸாக இல்லாமல் சாதாரணமாகவே இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. மகன் அறிவு எந்த அளவுக்குப் பெருமையைச் சேர்த்ததோ அந்த அளவு பல சமயங்களில் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அறிவு மட்டுமல்லாமல் சற்றும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையும் கொண்டிருந்த க்ரிஷ், தன் வீட்டார்களே சின்னத் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவதில் சிறிது அலட்சியம் காட்டவில்லை. கடுமையான குற்றத்திற்கு, கண்டிப்பான நீதிபதி தீர்ப்பு சொல்வது போல, சுட்டிக்காட்டுவான்.  

பத்மாவதி வேலைக்காரிகளிடம் கனிவில்லாமல் நடந்து கொள்ளும் போது அவன் அருகில் இருந்தானென்றால் தாயைக் கடிந்து கொள்வான். (வயித்துப் பிழைப்புக்காக நாளெல்லாம் வேலை செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிற ஏழைகள் கிட்ட நீயும் ஏம்மா கடுமையா நடந்துக்கறாய்?”). தொகுதி மக்களை கமலக்கண்ணன் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்யும் போது கடுமையாகவே சொல்லிக்காட்டுவான். (ஏறுன படியை மறந்துடாதப்பா. இறங்கறப்ப கஷ்டப்படுவே”). அவ்வப்போது கர்வத்துடன் மற்றவர்களைத் துச்சமாக நடத்தும் உதயையும் கடுமையாகத் திட்டுவான்.  (மந்திரி மகன்கிறத தவிர உன் கிட்ட வேற எதாவது தகுதி இருக்கா? சும்மா ஆடாதே”)  சுருக்கமாகச் சொன்னாலும் சுருக்கென்று குத்துமளவு அவன் பேச்சு இருக்கும். அவன் சொல்வது மனசாட்சியைச் சற்றாவது உலுக்கும்படி உண்மையானதாக இருக்கும். சில சமயங்களில் ஓங்கி அறைவது போல் கூட இருக்கும். ஆனால் அடுத்த நிமிடமே மகனாகவும், தம்பியாகவும் அன்பின் உருவமாக மாறிப் பழகும் அவனிடம் அவர்களால் கோபமாகவே இருந்து விடவும் முடிந்ததில்லை.

கமலக்கண்ணனை மிக மிகக் கோபமூட்டிய நிகழ்வொன்று சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் வைத்து ராஜதுரை ஒரு இலவசத்திட்டத்தை அப்போது அறிவித்திருந்தார். க்ரிஷ் ஒரு கல்லூரியில் ஒரு விஞ்ஞானக் கருத்தரங்கில் பேசப்போன போது ஒரு நிருபர் அவனிடம் அந்த இலவசத்திட்டம் பற்றிக் கருத்து கேட்டார். க்ரிஷ் சிறிதும் தயங்காமல் அது ஒரு முட்டாள்தனமான திட்டம் என்று சொல்லி விட்டான். அந்தச் செய்தி பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக வெளிவந்தது. எதிர்க்கட்சிகள் உங்கள் அமைச்சர் மகனே இப்படிச் சொல்கிற அளவில் தான் உங்கள் திட்டம் இருக்கிறதுஎன்று கடுமையாக விமர்சித்தார்கள். கமலக்கண்ணன் பதறிப்போனார். அவர் தலைவனாகவும், தமையனாகவும் மிக உயரத்தில் வைத்திருக்கும் ராஜதுரையை க்ரிஷ் வெளிப்படையாக விமர்சித்ததற்கு எரிமலையாக மகனிடம் வெடித்தார். “உன் மனசுல என்னடா நெனச்சிருக்கே...என்று ஆரம்பித்து அரை மணி நேரம் திட்டித் தீர்த்ததை இடைமறிக்காமல் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மகனிடம் கடைசியில் சொன்னார். “.... உடனே போய் அவர் கிட்ட மன்னிப்பு கேளு

“உண்மையைச் சொன்னதுக்கெல்லாம் நான் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அது நான் உண்மையை அசிங்கப்படுத்தற மாதிரி ...என்று அமைதியாகச் சொல்லி விட்டு அவனறைக்குப் போய் விட்டான்.

கடைசியில் அவர் தான் போய் ராஜதுரையின் காலில் விழுந்து கண்கலங்கினார். அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்ணே...

ராஜதுரை கமலக்கண்ணனைத் தூக்கி நிறுத்தி, “அவன் சரியாத் தானே சொல்லியிருக்கான்என்று சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தார். அந்தப் பெருந்தன்மையில் கமலக்கண்ணன் நெகிழ்ந்தும், பிரமித்தும் போனார்.

மறுநாளே நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் ஒரு நிருபர் ராஜதுரையிடம் க்ரிஷ் விமர்சனம் பற்றிக் கேட்ட போது “எங்கள் பிள்ளைகள் மனதில் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்வதை நாங்கள் தடுப்பதில்லை. பரிபூரண ஜனநாயகம் எங்கள் வீட்டிலே இருந்து தான் ஆரம்பிக்கிறது...என்று புன்னகையுடன் சொன்னவர், முட்டாள்தனத்தினால் ஏழைகள் பலன் அடைகிறார்கள் என்றால் அதைச் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதை நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியுடன் செய்வேன்....என்று அலட்டாமல் பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு நகர்ந்தார்.   

இப்படி எதிலும் சமரசம் செய்து கொள்ள முடியாத க்ரிஷ், தனக்கு நம்பிக்கை இல்லாத எதையும் செய்வதிலும் கூட உடன்பாடில்லாதவனாக இருந்தான். பரமேசுவரப் பணிக்கர் சொன்ன பிராயச்சித்தங்களைச் செய்ய, கமலக்கண்ணனும் பத்மாவதியும் முற்பட்ட போது அவன் ஒத்துழைக்கவில்லை. பரிகாரங்களுக்காக அவனைச்  சில திருத்தலங்களுக்கு அழைத்துப் போகவும், அங்கு சில ஹோமங்கள் நடத்தவும் பணிக்கர் சொல்லி இருந்ததற்கு க்ரிஷ் ஒத்துக் கொள்ளவில்லை.

பத்மாவதி மகனிடம் கெஞ்சிப் பார்த்தாள். அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கமலக்கண்ணன் எத்தனையோ சொல்லிப் பார்த்தார். மறுத்த க்ரிஷ் கடைசியில் சொன்னான். “... அப்படியும் எதாவது செய்யணும்னா பாவப்பட்ட ஜனங்களுக்கு ஏதாவது தர்மம் செய்ப்பா. உழைச்சு சம்பாதிச்ச காசுல செய். விளம்பரமில்லாம செய். அது தான் உண்மையான தர்மம். தர்மம் தலைகாக்கும்னு சொல்வாங்க.  அது என்னைக் காப்பாத்துதான்னு பார்ப்போம்..

உழைச்சு சம்பாதிச்ச காசுலஎன்று அழுத்திச் சொன்ன மகனை பார்வையால் சுட்டெரித்தாலும் கமலக்கண்ணனுக்கு அவன் சொன்னதைத் தவிர வேறு எதையும் செய்ய வழி தெரியவில்லை. அவர் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறிய 23 ஏழை மாணவ மாணவியரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மேற்படிப்புக்கான முழுத்தொகையும் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் உதவுவதை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே சொல்லக்கூடாது என்ற உறுதிமொழி பெறப்பட்டது. விளம்பரம் இல்லாமல் எந்த நல்ல காரியத்தையும் செய்யாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நல்ல மனிதரா என்று அந்தக் குடும்பங்கள் வியந்தன. கமலக்கண்ணன் அந்த தர்ம காரியத்திற்குத் தன் நேர்வழி சம்பாத்தியத்தை மட்டுமே பயன்படுத்தினார். ஏழைப் பிள்ளைகள் அறிவுச் செல்வம் பெற அவர் செய்யும் தர்மம், அறிவுஜீவியான அவர் மகனைக் காப்பாற்றட்டும் என்று கடவுளை மனமார வேண்டிக் கொண்டார்.

அவரது கோரிக்கையும் தர்மமும் தெய்வ சன்னிதானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்று இப்போது அவருக்குத் தெரியவில்லை....

அவர் கார் முதலமைச்சர் இல்லத்தை அடைந்தது.   


ஞ்சுத் தலையரிடம் அந்த இளைஞன் சொன்னான். “கமலக்கண்ணன் முதலமைச்சரப் பார்க்கப் போயிருக்கார்.

அவருக்கு அந்தத் தகவல் கசந்தது. “அவன் ஏன் ஆன்னா ஊன்னா அந்த ஆள் கிட்ட ஓடறான்?...என்று அவர் முகச்சுளிப்புடன் கேட்டார். ராஜதுரை இந்த விவகாரத்தில் நுழைவது அவருக்குப் பிடிக்கவில்லை.  ராஜதுரை அவர் சிறிதும் யூகிக்க முடியாத நபர். எப்போது எந்த முடிவெடுப்பார், எதை எப்படிக் கையாள்வார் என்பதை அவர் மட்டுமல்ல, யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நபர் அதிகார உச்சத்தில் இருந்து இந்த வழக்கில் ஈடுபாடு காண்பிப்பது, தலைக்கு மேல் கத்தி என்றே அவருக்குத் தோன்றியது.

க்ரிஷின் பிணம் கிடைக்காதது, அந்தப் பாம்பு க்ரிஷைக் கடித்ததாகச் சொல்லப்படும் இடத்திலேயே அந்த வாடகைக் கொலையாளி கடிபட்டு இறந்தது, அவன் செல்போனில் இருந்து அழைப்பு வந்து, பேச்சுக்குப் பதிலாக அந்த மலையடிவாரத்தில் கேட்ட அமானுஷ்ய ஒலியே கேட்டது என்று ஏற்கெனவே வில்லங்கமான பல வில்லங்கமான விஷயங்கள் அவர் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கையில் இந்த ஆள் தலையீடு இன்னொரு புதுத்தலைவலி!....

“ராஜதுரை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடுவானா?என்று பஞ்சுத் தலையர் அந்த இளைஞனின் அபிப்பிராயத்தைக் கேட்டார்.

“வாய்ப்பிருக்குஎன்று அவன் பட்டும் படாமலும் சொன்ன அவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். “க்ரைம் ப்ராஞ்சில் நம்ம ஆளுக எத்தனை பேர் இருப்பாங்க  இது போன்ற விவரங்கள் எப்போதும் அவர் விரல்நுனியில் இருக்கும்....

அவர் யோசிக்காமல் சொன்னார். “ஆறு பேர்

“சிபிசிஐடியில்...

“நாலு பேர்

பஞ்சுத்தலையரின் செல்போன் இசைத்தது. இதயம் படபடக்க அவர் அழைப்பது யார் என்று பார்த்தார். V K .... கைகள் நடுங்க செல்போனை எடுத்து அந்த இளைஞனிடம் தந்து “நீ பேசுஎன்று சைகை செய்தார்.

(தொடரும்)

என்.கணேசன் 

7 comments:

  1. Excellent as usual. Krish mesmerizes us.

    ReplyDelete
  2. சூப்பர் கணேசன் சார். படிக்க படிக்க போத மாட்டேன்கிறது உங்கள் எழுத்து. க்ரிஷ் கேரக்டர் செம.

    ReplyDelete
  3. Sir, I am mesmerized on your writings. I guess God has gifted you a wonderful brain for creative writing.

    I will proudly say you "MAN WITH THE GOLDEN PEN".

    ReplyDelete
  4. Hello Ganeshan sir,
    Read all your books and when I started reading your previous series, it was already half completed.. so it was easy to follow.. could you please give a intro/summary about this story..!
    It's a lot of surprise and couldn't wait..

    ReplyDelete