Monday, November 14, 2016

ஏழு ஜாடித் தங்கம்


னித மனம் விசித்திரமானது. பேராசை என்னும் பெரும் பேய் ஒருவனைப் பிடித்துக் கொண்டால் பின் அவன் என்னவெல்லாம் செய்யக்கூடும் அல்லது எப்படி எல்லாம் தரம் தாழ்ந்து விடக்கூடும் என்பதை யாராலும் ஊகிக்கவே முடியாது. இதை விளக்க ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்வதுண்டு.

ஒரு ஊரில் நாவிதன் ஒருவன் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான். அவன் அரசனின் நாவிதனும் கூட. எனவே போதுமான அளவு வருமானம் வந்து கொண்டு இருந்தது. அவன் அடிப்படைத் தேவைகளும், அவசரத் தேவைகளும் நன்றாகவே நிறைவேறிக் கொண்டிருந்தன. ஒரு நாள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் அவன் நடந்து கொண்டு இருந்த போது அங்கிருந்த மரம் ஒன்றில் இருந்து “உனக்கு ஏழு ஜாடித் தங்கம் வேண்டுமா?என்ற குரல் கேட்டது. நாவிதன் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. தங்கம் வேண்டுமா என்று கேட்டால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா என நினைத்தவனாக அவன் வேண்டும்என்று சொன்னான்.

“நீ வீடு போய் சேரும் போது உன் வீட்டில் ஏழு ஜாடித் தங்கம் இருக்கும்என்று மீண்டும் குரல் ஒலித்தது.

நாவிதனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. வேகமாக வீட்டுக்கு ஓடினான். வீட்டின் உள்ளே நுழைந்ததும் அங்கே உண்மையாகவே ஏழு ஜாடிகள் இருப்பதைக் கண்டான். அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவற்றைத் திறந்து பார்த்தான். அவற்றில் தங்கக் காசுகள் இருந்தன. ஆறு ஜாடிகள் நிறைய தங்கக் காசுகளும் ஏழாவது ஜாடியில் முக்கால் பாகம் தங்கக் காசுகளும் இருந்தன.

ஆரம்பத்தில் பெருமகிழ்ச்சி தோன்றினாலும் ஏழாவது ஜாடியில் கால் பாகம் குறைவாக இருப்பது ஒரு குறையாக நாவிதனுக்குத் தோன்றியது. அந்த ஏழாவது ஜாடியையும் நிரப்பினால் மட்டுமே தன் அதிர்ஷ்டம் முழுமையானதாக இருக்கும் என்று அவன் நினைத்தான். தன்னிடம் இருந்த வெள்ளி, தங்க நகைகளை எல்லாம் உருக்கி தங்கக் காசுகளாக மாற்றி அந்த ஏழாவது ஜாடியில் அவன் போட்டான். ஆனாலும் அந்த ஜாடி நிரம்பவில்லை. தன்னுடைய வேறு பல உடமைகளையும் விற்றுத் தங்கக் காசுகளாக்கி அந்த ஏழாவது ஜாடியில் போட்டான். அப்போதும் அந்த ஜாடி நிரம்பவில்லை.

மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தவன் தன் வீட்டாரை அரைப்பட்டினி இருக்கச் செய்து தானும் பட்டினி கிடந்தான். தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தங்கக் காசுகளாக மாற்றி அந்த ஜாடியில் போட ஆரம்பித்தான். ஆனாலும் அந்த மாய ஜாடி நிரம்பியபாடில்லை.

அரசனுக்கும் அவன் தான் நாவிதன் என்பதால் அரசனிடம் சம்பளத்தை இரட்டிப்பாக்கிக் கேட்டான். குடும்பத்தை நடத்தப் பணம் போதவில்லை என்று அவன் உருக்கமாகச் சொல்லவே மனம் இரங்கிய அரசன் அவன் சம்பளத்தை இரட்டிப்பாக்கினான். அப்படி கிடைத்த பணத்தையும் தங்கக் காசுகளாக்கி அந்த ஜாடியில் போட்டான். ஜாடி அப்போதும் நிரம்பவில்லை.

பின்னர் அவன் வேலையற்ற நேரங்களில் பிச்சை எடுக்கவும் துணிந்தான். அப்படிப் பிச்சை எடுத்து சம்பாதித்ததையும் அவன் தங்கக் காசுகளாக்கி அந்த ஏழாவது ஜாடியில் போட ஆரம்பித்தான். அப்போதும் அந்த மாயஜாடி நிரம்பாமலேயே இருந்தது. இப்படியே பல காலம் செல்ல நாவிதன் நிலைமை படுமோசமாகிக் கொண்டே சென்றது.

அவன் நிலைமையைக் கண்ட அரசன் ஆச்சரியத்துடன் கேட்டான். “உனக்கு என்ன ஆயிற்று? இப்போது பெறும் சம்பளத்தில் பாதி சம்பளம் பெற்று வந்த காலத்தில் கூட நீ திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். இப்போது இரு மடங்கு சம்பளம் பெற்றாலும் நீ வாடிய முகத்துடனும், துன்பம் நிறைந்தவனாகவும், தரித்திரவாசியாகவும் ஏன் இருக்கிறாய்? ஏழு ஜாடித் தங்கத்தை வாங்கிக் கொண்டாயா என்ன?

நாவிதனுக்கு தூக்கிவாரிப் போட்டது. தான் ரகசியமாக வைத்திருந்த விஷயத்தை அரசன் எப்படி அறிந்து கொண்டான் என்று எண்ணியவனாக அரசே உங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்தவர் யார்?என்று கேட்டான்.

அரசனுக்கு விஷயம் விளங்கி விட்டது. அவன் சொன்னான். “ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு மரத்தில் யட்சன் ஒருவன் இருக்கிறான். யாரிடம் அவன் செல்வம் செல்கிறதோ அவன் இப்படிப்பட்ட நிலைக்கு வந்து விடுவான் என்பது உனக்குத் தெரியாதா? இதை முன்பே அறிந்திருந்த நான் அவன் என்னிடமும் ஏழு ஜாடித் தங்கம் தர முன் வந்த போது சிரித்துக் கொண்டே மறுத்து விட்டேன். அந்த யட்சன் செல்வத்தை யாராலும் செலவழிக்க முடியாது. அது மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தான் தூண்டும். நிம்மதியாக ஒருவனை வாழ விடாது. அதனால் போய் அந்த யட்சனிடம் அந்த ஜாடிகளை எடுத்துக் கொண்டு போகச் சொல்

நாவிதனுக்குப் புத்தி வந்தது. அவன் உடனடியாக அந்த யட்சன் வாழும் மரத்தடிக்குச் சென்று உன் ஏழு ஜாடித் தங்கம் எனக்கு வேண்டாம். அதை நீயே திரும்ப எடுத்துக் கொள் என்று கூறினான். சரி என்று யட்சனின் குரல் வந்தது.

நாவிதன் வீடு வந்து பார்த்த போது ஏழு ஜாடித் தங்கமும் மாயமாகிப் போய் விட்டிருந்தன. ஏழாவது ஜாடியில் அவன் அரும்பாடு பட்டு சேர்த்துப் போட்டிருந்த தங்கக் காசுகளும் சேர்ந்து போயிருந்ததால் அவன் பெரும் வேதனை அடைந்த போதும் நாளா வட்டத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தான்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய இக்கதையில் மனித இயல்பு மிக அழகாக விளக்கப் பட்டுள்ளது. உண்மையான தேவைகளை நிறைவேற்ற, உழைத்து சம்பாதிப்பது அந்த நாவிதனுக்குப் போதுமானதாக இருந்தது. அவன் வீட்டில் அனைவரும் வயிறார சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் பேராசை அவன் மனதில் புகுந்து விட்ட பின் அவன் படிப்படியாக தரம் தாழ்ந்து கொண்டே வந்திருக்கிறான். அவன் நிம்மதியையும் அது போலவே கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வந்திருக்கிறான். அடுத்தவர் பார்த்து பரிதாபப்படும் நிலைக்கு அவன் தள்ளப் பட்டும் விட்டான். ஏழு ஜாடித் தங்கம் வந்த பின் அவன் மிக சுபிட்சமாக வாழ்ந்து வந்திருக்க வேண்டும். அவன் மட்டுமல்ல அவன் தலைமுறைகளே வசதியாக வாழ அந்தச் செல்வம் போதுமானதாக இருந்தது. ஆனால் மாறாக அவனோ பிச்சை எடுக்கக் கூடத் தயங்காத ஒரு பரிதாப நிலைக்குத் தான் தள்ளப்பட்டான்.

தேவைகளுக்காகப் பணம் என்று இருக்கும் போது பணம் மனிதனுக்கு நன்மை தருவதாகவே இருக்கிறது. ஆனால் பணத்திற்காகவே பணம் என்று மாறும் போது எல்லாமே மாறிப் போகிறது. உள்ளதை அனுபவிப்பதைக் காட்டிலும் மேலும் அதிகம் சேர்ப்பது முக்கியமாகிப் போகிறது. அவன் நல்ல தன்மைகளை எல்லாம் அழித்து பணமே பிரதானமாக அவனை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது. ஒரு நல்ல மனிதன் செய்யக் கூசும் செயல்களை எல்லாம் அது அவனை செய்ய வைக்கிறது.  

மனசாட்சியும், தெளிந்த அறிவும் ஆட்சி செய்யும் போது மனிதன் மனிதனாக இருக்கிறான். அவன் தானும் நலமாகி சமூகத்திற்கும் நன்மை தருபவனாக விளங்குகிறான். பணம் அவனை ஆள ஆரம்பித்தால் அவன் மிருகமாகவோ அற்பப் புழுவாகவோ தாழ்ந்து போக ஆரம்பித்து விடுகிறான். பணத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்தனை இல்லை என்றாகி விடுகிறது. அப்படித்தான் சேர்த்த பணத்திலாவது மகிழ்ச்சியுடன் இருக்கிறானா என்றால் அதுவுமில்லை. இன்னும் சேர்க்க வேண்டிய பணம் குறித்த கவலையே அவனை அதிகம் ஆட்கொள்கிறது. பணத்திற்காக எதுவும் செய்யத் துணிபவனாகவும், அதன் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத தீயவனாகவும் கூட மாறி விடுகிறான். இந்த உண்மைக்கான உதாரணங்களை இக்காலத்தில் நம்மால் வேண்டிய அளவு காண முடியும்.

எனவே நீங்கள் பணத்திற்கு என்றும் எஜமானாக இருங்கள். பணத்தை உங்கள் எஜமானாக்கினால் அது அந்த நாவிதனைப் பாடாய் படுத்தியது போல உங்களையும் பாடாய் படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்!.

-        - என்.கணேசன் 


1 comment:

  1. nice story in right time.

    for currency change have you faced any problem sir

    ReplyDelete