Thursday, November 24, 2016

இருவேறு உலகம் – 5


ந்த வலிமையான காரணத்தை பத்மாவதி வாய் விட்டே மூத்த மகனிடம் சொன்னாள். “மத்த சமயமா இருந்தா நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். அவனுக்கு இப்ப டைம் சரியில்லடா. இதை அவன் பொறக்கறப்பவே இவரோட பணிக்கர் ஜோசியர் கணிச்சு, அவனுக்கு 23 வயசு முடியற சமயத்துல பெரிய கண்டம் இருக்குன்னு சொல்லியிருக்கார். அதான் பயமா இருக்கு....”  சொல்லச் சொல்ல பத்மாவதிக்குக் குரல் அடைத்தது.

உதய் சொன்னான். “அம்மா, போன வருஷம் டெல்லில ஒரு ஜோசியன் அப்படித்தான் என் ஜாதகம் பாத்து நடந்து முடிஞ்சதை எல்லாம் சரியா சொன்னான். நானும் தாராளமா பணம் தந்தேன். ஆனா அவன் சொன்ன எதிர்காலப் பலன் ஒன்னு கூட சரியாகல

“அந்தப்பணிக்கர் மத்த ஜோசியர் மாதிரியெல்லாம் கிடையாதுடா. அவர் இவருக்குச் சொன்னதுல இது வரைக்கும் எல்லாமே பலிச்சிருக்கு....என்று சொன்ன போது பத்மாவதிக்குக் கண்கள் ஈரமாயின.

கமலக்கண்ணனுக்கும் அதுவே தான் உறுத்தலாக இருந்தது.... பரமேசுவரப் பணிக்கர் இன்று உயிரோடிருந்திருந்தால் அவரிடம் மறுபடி ஆலோசனை கேட்டிருக்கலாம். ஆனால் அவர் இருபதாண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டிருந்தார். பரமேஸ்வரப் பணிக்கரின் மகன் முரளிதரப் பணிக்கர் இன்று நகரின் பிரபல ஜோதிடர்களில் ஒருவர். ஆனால் அவரிடம் தந்தையின் வாக்குப் பலிதம் இல்லை.....


மலக்கண்ணன் படிப்போ, வேலையோ, குறிக்கோளோ இல்லாமல் சுற்றித் திரிந்த இளமைக் காலத்தில் தான் பரமேசுவரப் பணிக்கரை முதல் முதலில் சந்தித்தார். அவரது நண்பன் ஒருவன் தன் ஜாதகத்தைக் காட்டச் சென்றிருந்த போது அவரும் அவன் கூடப் போயிருந்தார். அப்போது பரமேசுவரப் பணிக்கருக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். நண்பனின் ஜாதகம் பார்த்து விட்டுப் பலன் சொன்ன பணிக்கரிடம் கமலக்கண்ணனின் ஜாதகத்தையும் நண்பன் பார்க்கச் சொன்னான். கமலக்கண்ணனிடம் ஜாதகம் கூட இருக்கவில்லை. பிறந்த தேதி, நேரம், இடம் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஐந்தே நிமிடங்களில் பஞ்சாங்கம் பார்த்து பணிக்கர் ஜாதகம் கணித்தார். பின் கமலக்கண்ணனின் ஜாதகப் பலன் பார்க்க பரமேசுவரப் பணிக்கருக்கு மூன்று நிமிடங்களுக்கு மேல் தேவைப்படவில்லை. அவருடைய ஜாதகம் ராஜயோக ஜாதகம் என்றும், மிக உயர்ந்த பதவிக்கு நிச்சயம் போவார் என்றும் பணிக்கர் சொன்ன போது கமலக்கண்ணன் வாய் விட்டுச் சிரித்தார். “யோவ், உனக்கு டீ வாங்கிக் குடுக்கக்கூட என்கிட்ட காசில்லைய்யா. சும்மா ரீல் விடாதே

கமலக்கண்ணனின் பரிகாசம் பணிக்கரைச் சிறிதும் பாதிக்கவில்லை. “நீ இப்ப காசே தர வேண்டாம். நல்ல நெலமைக்கு வந்த பிறகு குடு போதும்என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ஆனாலும் கமலக்கண்ணனின் நண்பன் பணம் தர முன் வந்தான். அவனிடமும் மறுத்து விட்டு “அவன் கிட்டயே பெரிய தொகையாய் இன்னொரு காலம் வாங்கிக்கறேன்என்று அவர் சொன்ன போது கமலக்கண்ணனுக்கு அந்த ஆள் பைத்தியம் என்று தான் தோன்றியது. ஏனென்றால் ராஜ யோகம் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாக அவருக்கு அப்போது தென்பட்டிருக்கவில்லை. தகுதி ஏதாவது இருப்பதாகவும் அவரே நம்பியிருக்கவில்லை.

ஆனால் காலம் எதையும் எப்படியும் மாற்றி அமைக்கும் வல்லமை படைத்தது. அது கமலக்கண்ணனை அப்போது தான் ஒரு புதுக்கட்சி ஆரம்பித்திருந்த ராஜதுரை என்ற இளம் அரசியல்வாதியிடம் கொண்டு போய் சேர்த்தது. ராஜதுரையின் அடியாட்களில் ஒருவனாகப் போய்ச் சேர்ந்த கமலக்கண்ணனின் தைரியமும், சுறுசுறுப்பும் ராஜதுரையை மிகவும் கவர்ந்தது. செய்து கொடுத்த சில வேலைகளில் கமலக்கண்ணனின் விசுவாசமும் உறுதிப்பட்டு விடவே ஆறு மாதங்களுக்குள்ளாகவே கமலக்கண்ணன் ராஜதுரையின் உள் வட்டத்தில் இடம் பிடித்து விட்டார். இரண்டு வருடங்கள் கழித்து நடந்த பொதுத்தேர்தலில் சட்டசபை உறுப்பினராக நிற்கும் வாய்ப்பை ராஜதுரை தந்த போது கமலக்கண்ணனுக்கே நடப்பதெல்லாம் நிஜம் தானா என்கிற பிரமிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தத் தேர்தலில் அவர் ஜெயிக்கவும் செய்தார். ஜெயித்தவுடன் முதலில் ராஜதுரையிடம் சென்று வணங்கி ஆசிபெற்று விட்டு அவர் பார்க்கப் போனது பரமேசுவரப் பணிக்கரைத் தான். ஒரு தங்க கைக்கடிகாரத்தை அந்த மனிதருக்குப் பரிசாக அளித்து விட்டு வணங்கி விட்டும் வந்தார்.

பரமேசுவரப் பணிக்கர் மீது கமலக்கண்ணனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால் அடுத்ததாக திருமண காலம் வந்து பத்மாவதியை வாழ்க்கைத் துணைவியாக ஆக்கிக் கொள்வதற்கு முன்பும் அவர் பரமேசுவரப் பணிக்கரின் ஆலோசனை கேட்டார். பத்மாவதியுடன் சகல சௌபாக்கியங்களும் அவர் வாழ்க்கையில் நுழையும் என்று பணிக்கர் சொல்ல அதுவும் அப்படியே நடந்தது. பத்மாவதியின் ஜாதகம் பார்க்கவும் பணிக்கர் மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. விரைவிலேயே ராஜதுரை ஆட்சியமைத்து முதலமைச்சரான போது கமலக்கண்ணன் மந்திரியானார்.

மூத்த பிள்ளை உதய் பிறந்த போதும் ஜாதகம் பார்த்து பணிக்கர் சொன்னார். “பையன் தைரியசாலியாயும், அதிர்ஷ்டசாலியாயும் இருப்பான். சீக்கிரமே அரசியலுக்கு வருவான். மந்திரியுமாவான். அதைச் சொல்லவும் அவர் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் சொன்னபடியே தைரியசாலியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருந்த உதய் சீக்கிரமே அரசியலுக்கும் வந்து, வளர்ந்து, இப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறான். மந்திரி பதவிக்கு இனி அதிக தூரமில்லை. அதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இரண்டாவது பிள்ளை க்ரிஷ் பிறந்தவுடன் அவன் ஜாதகம் பார்க்க மட்டும் பரமேசுவரப் பணிக்கர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். பலன் சொல்ல மூன்று நிமிடங்களுக்கு மேல் தேவைப்படாத பணிக்கர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொண்ட போது கமலக்கண்ணன் ஆபத்தை உணர்ந்தார். என்ன பணிக்கரே, ஜாதகத்துல எதாவது பிரச்னையா?  

பரமேசுவரப் பணிக்கர் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. மேலும் சில கணக்குகள் போட்டுப் பார்த்து விட்டுத் தலைநிமிர்ந்தவர் சொன்னார். “இது சாதாரண ஜாதகம் இல்லை, கமலக்கண்ணன். அசாதாரணமான ஜாதகம். உங்க பையன் பெரிய ஜீனியஸா இருப்பான். ரொம்ப நல்லவனா இருப்பான். ஆயுளோட இருந்தான்னா உலகப்புகழ் பெறுவான்.....

மகன் ஜீனியஸா இருப்பான் என்கிற வார்த்தை கமலக்கண்ணனை மனம் குளிர வைத்தது. ஆனால் ‘ஆயுளோட இருந்தால்என்கிற சொற்கள் பரமேசுவரப் பணிக்கருடைய வாயில் இருந்து வந்தது அபசகுனமாகவும் பட்டது. கவலையில் ஆழ்ந்தவராக கமலக்கண்ணன் கேட்டார். “என்ன பணிக்கரே இப்படிச் சொல்றீங்க?

“இவனுக்கு இருபத்திமூணு வயசு முடியறப்ப ஒரு பெரிய கண்டம் இருக்கு....

அதுக்குப் பரிகாரம் எதாவது இருக்கா?

பரமேசுவரப் பணிக்கர் ஒரு பெரிய பட்டியலே போட ஆரம்பித்தார். சில சிவன் கோயில்களுக்குச் செல்வது, சில ஹோமங்கள் செய்வது, சில தானங்கள் செய்வது பற்றியெல்லாம் அவர் எழுத ஆரம்பித்த போது கமலக்கண்ணன் சொன்னார். “அதை ஏன் இப்பவே எழுதறீங்க? நான் அந்த சமயத்துல வந்து கேட்டு வாங்கிக்கறேன்

“எனக்கு ஆயுசு அது வரைக்கும் இருக்கணுமே. இன்னும் மூணு வருஷத்துல நானே போய்ச் சேர்ந்துடுவேன்...என்று புன்னகையுடன் சொன்ன பரமேசுவரப் பணிக்கர் முழுவதும் எழுதிய பட்டியலை கமலக்கண்ணனிடம் தந்தார்.

பணிக்கரே மூன்று வருடங்களில் காலமாகி விடுவார் என்கிற தகவலும் கமலக்கண்ணனுக்கு வருத்தத்தைத் தந்தது. எப்போதும் தருவதை விட இரட்டிப்பாய் பணம் அவர் கையில் தந்து வணங்கி விட்டுக் கிளம்பினார். அதுவே பணிக்கருடனான அவருடைய கடைசி சந்திப்பாய் அமைந்து விட்டது. பரமேசுவரப் பணிக்கர், தான் சொன்னது போலவே மூன்று வருடங்கள் முடிவடைவதற்கு முன் காலமானார்....


மலக்கண்ணனின் பழைய நினைவுகளை செல்போன் பாடிக் கலைத்தது. அவர் அழைப்பது யார் என்று பார்த்தார். அந்த மலையில் அவருடைய மகனைத் தேடிப் போயிருந்த அவருடைய ஆட்களில் முக்கியமானவன் தான் அழைக்கிறான். அவசரமாக செல்போனை எடுத்துப் பேசினார்.
கேள்விப்பட்ட விஷயம் அவருடைய அடிவயிற்றைக் கலக்கியது.

 (தொடரும்)

என்.கணேசன் 


5 comments:

  1. இந்த இடத்துல தொடரும்னு போட்டு எங்க அடிவயிற்றையும் கலக்குறீங்களே சார் நியாயமா?

    ReplyDelete
  2. Na Ithu varaikkum evlovo Periya Periya eluthalargal eluthina books ellam padithurukken , books padikkurathu enakku sappadu , thanni pola, Ana Unga eluthukkal thani vashiyam pannuthu..

    ReplyDelete

  3. அருமையான பகிர்வு

    ReplyDelete