அக்ஷய் ஜீப்பில் இருந்து இறங்கி மலையை நோக்கி ஓடினான். ஓடினான் என்று சொல்வதை விடப் பறந்தான் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆசான் அவன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு வேகமாகப் பின் தொடர்ந்தார்.
மாரா குகைக்கோயில் உள்ளே இருந்து தன் சக்திக்குவிப்பால் அக்ஷய் மலை ஏறுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். உண்மையிலேயே வியந்தான். என்னவொரு வேகம், அந்த வேகத்திலும் என்னவொரு பதற்றமில்லாத ஒழுங்கு.... யார் மேலே வந்தாலும் சுட்டுத் தள்ள முன்பே காவலர்களிடம் மாரா சொல்லி இருந்தான். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றாலும் அவனுடைய கோப்பில் படித்த ஒரு தகவல் நினைவுக்கு வந்தது. இமயமலை உச்சியில் பல பேர் அவனைத் தொடர்ந்து சுட்டும் அவன் உடலில் ஒரே ஒரு குண்டு மட்டும் தான் பாய்ந்ததாகப் படித்திருந்தான். முன்பே சக்தி வாய்ந்தவன் மைத்ரேயன் எழுப்பி விட்டிருந்த கூடுதல் நாகசக்தியால் இப்போது மேலும் சக்தி வாய்ந்தவனாக விட்டிருக்கிறான். வெளியே இருந்த நான்கு காவலர்களில் ஒருவன் டோர்ஜேயை அழைத்துக் கொண்டு போய் விட்டான். மிஞ்சி இருக்கும் மூன்று பேரும் திறமையானவர்கள் தான். ஆனால்....
ஒருவேளை கூடுதல் சக்திகள் பெற்று விட்டிருந்த இந்த அமானுஷ்யனை நம்பி தான் மைத்ரேயன் கவலையில்லாமல் படுத்திருக்கிறானோ என்ற சந்தேகத்துடன் மாரா மைத்ரேயனைப் பார்த்தான். அவன் கண்கள் மூடியே இருந்தாலும் விழிப்பில் இருப்பதை அவன் அலைகள் மாராவுக்குத் தெரிவித்தன.அக்ஷயை மூன்று துப்பாக்கி வீரர்களும் பார்த்து விட்டனர். மூவரில் ஒருவன் குகைக் கோயிலைத் தாண்டி பல அடிகள் மேலே இருந்த பாறையின் அருகே நின்றிருந்தான். மற்ற இருவரும் குகைக் கோயிலுக்கும் சில அடிகள் கீழே இருந்தனர். வரும் எதிரிகளின் கண்களுக்கு குகைக் கோயில் தெரியாது என்பதால் அருகே இருந்து காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று புத்திசாலித்தனமாய் நின்றிருந்தார்கள். மூவரும் மேலே இருந்து அக்ஷயைப் பார்த்து சுட ஆரம்பித்தனர். ஒரு துப்பாக்கி ரவையும் அக்ஷய் உடம்பில் படவில்லை. அதற்குச் சிக்காமல் அக்ஷய் அனாயாசமாக காற்றில் அங்கும் இங்கும் பாய்ந்தது பறந்தது போல் இருந்தது. மூவரும் அப்படி மாரா ஒருவனைத் தான் பார்த்திருக்கிறார்கள். வருபவன் சாதாரணமானவன் அல்ல என்பது புரிந்த பாறையருகே இருந்த ஆள் தன் நண்பர்கள் இப்போதைக்கு சமாளிக்கட்டும் என்று எண்ணியவனாய் பாறைக்குப் பின்னால் சத்தமில்லாமல் பதுங்கிக் கொண்டான். இருவரின் துப்பாக்கி ரவைகளுக்கு ஆட்டம் காட்டி நெருங்கிய அக்ஷய் மின்னல் வேகத்தில் இருவரையும் சீக்கிரமே கீழே சாய்த்தான். இருவரும் கழுத்து திருகி அதிர்ச்சியுடன் கீழே விழுந்து கிடந்தார்கள். அதை ஒளிந்திருந்து பார்த்த மூன்றாவது ஆள் துப்பாக்கியை இப்போது உபயோகிப்பது தன் கழுத்தையும் திருகி விடும் என்று புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாய் அசையாமல் அங்கேயே இருந்தான். மூன்றாவது ஆள் எங்காவது தெரிகிறானா என்று பார்த்த அக்ஷய் அவன் தென்படாமல் போகவே குகைக் கோயில் எங்கே இருக்கிறது என்று பார்த்தான். வெளிப்பார்வைக்கு எங்கேயும் தெரியவில்லை.
முன்பு பார்த்த காட்சியை நினைவுபடுத்திப் பார்த்தான். வலதுபுறம் சற்றே பழுப்பேறிய ஒரு பாறை இருந்தது.... இடது புறம் வித்தியாசமாய் வளைந்து போய் இருந்த மரம் இருந்தது.... அந்த இரண்டையும் தேடினான். சிறிது மேலே இரண்டும் தெரிந்தது. ஆனால் நடுவில் காலி இடம் போலத் தான் தெரிந்தது. உண்மையில் அது காலி இடம் அல்ல என்று உணர்ந்தவனாய் வேகமாய் அதை நோக்கிச் சென்றான்.
சரியாக குகைக் கோயில் வாசலை நோக்கி அமானுஷ்யன் வருவதை மாரா பார்த்தான். இவனால் இந்த குகைக்கோயிலில் காலடி எடுத்து வைக்க முடியுமா என்ற சந்தேகம் மாராவுக்கு வந்தது. மைத்ரேயன் இவனிடம் நாகசக்தியை எழுப்பி இருக்கிறான்... அதனால் முடியலாம். அப்படியே வந்தாலும் இந்த அமானுஷ்யனை தன் சக்தி அலைகளால் தாக்குவது அவனுக்கு மிக சுலபம். அவன் மெல்ல எழுந்திருந்தான். அதே நேரத்தில் மைத்ரேயனும் எழுந்தான். அமானுஷ்யன் உள்ளே நுழையப் போகும் அதே நேரத்தில் மைத்ரேயன் எழுந்தது மாராவுக்கு அபாயத்தை உணர்த்தியது. மாராவின் கவனம் அமானுஷ்யன் மேல் பாயும் போது தன் நண்பனைக் காப்பாற்ற மைத்ரேயன் அந்த அபூர்வ அஸ்திரத்தைக் கையில் எடுப்பானோ? அமானுஷ்யன் மேல் கவனம் போனால் இங்கு கவனம் சிதறி விடுமே.
மாரா யோசித்துக் கொண்டிருக்கும் போதே அக்ஷய் பழுப்பேறிய பாறைக்கும், வித்தியாசமாய் வளைந்த மரத்திற்கும் இடையே உள்ள காலி இடத்தை நெருங்கினான். நெருங்கி காலி இடத்தில் காலடி வைத்த போது குகைக்கோயிலின் வாசலாக அது இருந்து இப்போது பார்வைக்கும் தெரிந்தது. அக்ஷய் உள்ளே நுழைந்தான்.
உள்ளே அவன் மகன் கௌதம் சுயநினைவில்லாமல் கீழே விழுந்து கிடந்தான். அவன் வாயில் நுரை தள்ளி இருந்தது. மைத்ரேயன் சில அடிகள் தள்ளி நின்றிருந்தான். அவன் நேர் எதிரில் மாரா நின்றிருந்தான். அக்ஷய் மாராவின் வலிமையைத் தன் உணர்வுகளில் அழுத்தமாக உணர்ந்தான். அவன் இது போன்றதொரு வலிமையைத் தன் வாழ்வில் என்றும் எங்கும் உணர்ந்ததில்லை.
மைத்ரேயன் குரல் பலவீனமாக ஆனால் தெளிவாக ஒலித்தது. “கௌதமைக் காப்பாற்றுங்கள். விஷ முறிவு மூலிகை ஆசானுக்குத் தெரியும். அதை நாகமச்சத்தைத் தொட்டு விட்டு உங்கள் கையால் கௌதம் வாயில் சாறுபிழியுங்கள்”
மாராவிடம் மைத்ரேயனைத் தனியாக விட்டுப் போவதா என்று அக்ஷய் ஒரு கணம் தயங்கினான். மைத்ரேயன் பார்வை அவனுக்குப் போய்விடு என்று கட்டளை இட்டது. அதற்கு மேல் அக்ஷய் தாமதிக்கவில்லை. ஓடிப்போய் கௌதமைத் தூக்கினான். மாரா தன் சக்திகளால் அக்ஷயை அப்படியே செயலிழக்க வைக்க எண்ணினான். ஆனால் அதே நேரத்தில் மைத்ரேயன் எதற்கோ தயாரானதை உணர்ந்தான். உடனே அக்ஷயை அலட்சியம் செய்து விட்டு மைத்ரேயன் மேல் மாரா தன் கவனத்தைக் குவித்தான். அக்ஷய் தன் மகனைத் தூக்கிக் கொண்டு வேகமாய் குகையை விட்டு ஓடினான்.
மைத்ரேயன் தன் சகல பலத்தையும் திரட்டுவது மாராவுக்குத் தெரிந்தது. இவன் என்ன செய்யப் போகிறான் என்று மாரா குழம்பினான்.
அவன் தெய்வம் அவசரமாக ஏதோ செய்தியை உள்ளுணர்வுக்கு உணர்த்துவது போல் இருந்தது. “உன் சக்திகள்... உன் சக்திகள்.....”
மாரா மைத்ரேயனிடம் இது வரை பார்த்ததில் அடுத்தவர் சக்தியை நகலெடுக்க முடிந்த சக்தி ஒன்று தான் வலிமையானது. இப்போது மாராவின் சக்திகளை மைத்ரேயன் நகல் எடுக்க முற்படுகிறானோ? அதைத் தான் தெய்வம் ”உன் சக்திகள்... உன் சக்திகள்...” என்று சுட்டிக் காட்டுகின்றதோ? இந்த மைத்ரேயன் அப்படி நகல் எடுத்து விட்டால் இருவர் சக்திகளும் இணையாகி விடுமே..... இந்த மைத்ரேயனிடம் என்னவொரு சில்லறைத்தனம். வேண்டுமென்றே கௌதம் பாதுகாப்பாக போகும் வரை ஒன்றும் செய்யாமல் காத்திருந்து விட்டு என் சக்திகளைத் திருடத் தயாராகும் இவன் தன்னையோ பிறரையோ காப்பாற்ற அல்லாமல் வேறெதற்கும் தன் அபூர்வ சக்தியைப் பயன்படுத்த மாட்டான் என்று நம் தெய்வமே தவறாக அன்று புரிந்து கொண்டு விட்டதே. இந்தத் திருடன் என்ன தான் செய்ய மாட்டான்! மாரா ஆத்திரமடைந்தான்.
கௌதமும் சாக வேண்டும், மைத்ரேயனும் சாக வேண்டும். மாரா அந்த இரண்டையும் சாதிப்பான். மாரா இருந்த இடத்தில் இருந்தே, பாறைக்குப் பின் ஒளிந்திருந்த காவலனுக்காக அசுரக்குரலில் கத்தினான். “ஆசானைக் கொல்”
மைத்ரேயன் நகலெடுக்கும் சக்தியைப் பயன்படுத்தும் முன் இயங்க வேண்டிய அவசரத்தை உணர்ந்தவனாய் அடுத்த வினாடியே தன் அனைத்து சக்திகளையும் சேர்த்துக் குவித்து எதிரே இருந்த மைத்ரேயனை அழிக்க மாரா ஏவி விட்டான். மைத்ரேயன் அந்தக் கணத்தில் மிக பலவீனமாகவே இருந்தான் என்றாலும் சகல பலத்தையும் திரட்டித் தயாரானான். அழிக்கும் அலைகள் பிரம்மாண்டமான வீச்சோடு மைத்ரேயனை நோக்கிச் சென்ற போது மைத்ரேயன் தன் முன்னால் வலிமையான கண்ணாடி போன்ற யோகசக்திச் சுவரை எழுப்பி இருந்தான். எதிரில் மைத்ரேயனுக்குப் பதிலாக அந்த யோகக் கண்ணாடியில் மாரா தன்னையே பார்த்தான். வந்த சக்திகள் அந்தச் கண்ணாடிச் சுவரில் மோதி அப்படியே அதே வேகத்தில் மாராவை நோக்கித் திரும்பின.
மாரா ஸ்தம்பித்து நின்றான். அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ’நான் மைத்ரேயனின் சக்திகளை சூனியத்தையும் தாண்டித் துழாவிய போது என் பிம்பத்தையே காட்டியது இது தானா? இதை அஸ்திரமாய் அறிய நான் தான் தவறிவிட்டேனா? உன் சக்திகளே உன்னை அழிக்கப் போகிறது என்பதைத் தான் தெய்வம் சொல்ல வந்ததா? உன்னிடமிருந்தே நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மைத்ரேயன் சொன்னது இந்த அர்த்தத்தில் தானா’
மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “எவ்வளவு பலவீனனாக இருந்தாலும் சேர்த்து வைத்திருப்பது தர்மமாக இருந்தால் தக்க சமயத்தில் அதுவே அவனைக் காக்கும். எவ்வளவு பலவானாக இருந்தாலும் சேர்த்து வைத்திருப்பது தீவினை என்றால் அதுவே சமயம் பார்த்து அவனைக் கவிழ்த்து விடும். எத்தனையோ அறிந்த நீ இந்த எளிமையான சத்தியத்தை அறியத் தவறி விட்டாயே!”
அந்த எளிமையான சத்தியம் நாராசமாய் காதில் விழ மாரா கடைசி கணத்தில் சர்வ பலத்தையும் திரட்டி ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கப் பார்த்தான். அவன் அந்த வித்தையை அறிவான். ஆனால் அதற்குத் தேவையான காலம் அவனிடம் இருக்கவில்லை. அதற்குள் அந்த அழிக்கும் சக்திகள் அவனுள்ளே பாய்ந்தன. அடுத்த கணம் ஒரு பெரும் தீப்பிழம்பாய் மாரா குகையிலிருந்து வெளியே வீசப்பட்டான். குகையின் உள்ளும் மாரா தெய்வச்சிலை தீப்பிழம்பாய் பிளந்து விழுந்தது.
கௌதமைக் காப்பாற்றும் விஷமுறிவு மூலிகையை வேகமாகத் தேடிப் போன ஆசான் தூரத்தில் ஓரிடத்தில் அதைக் கண்டுபிடித்தார். கௌதமின் நாடியைப் பார்த்திருந்த அவருக்கு அதிகமாய் தாமதித்தால் அவன் உயிர்பிழைக்க முடியாது என்பது புரிந்திருந்தது. முன்பே அக்ஷய்க்கு அவர் நிறைய கடன்பட்டிருக்கிறார். அந்த சிறுவனுக்கு ஏதாவது ஆனால் அவர்களுக்கு உதவிய அக்ஷய் தண்டிக்கப்பட்டது போல் ஆகி விடும். இந்த எண்ணத்தில் மூலிகைச் செடி நோக்கி அவர் வேகமாக ஓடிய போது தான் மேலே பாறையின் பின் மறைந்திருந்த காவலன் அவரைச் சுட்டான். அவர் முதுகில் இரண்டு துப்பாக்கி ரவைகள் பாய்ந்தன.
(அடுத்த வியாழன் முடியும்)
என்.கணேசன்
(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)
superooo super....waiting for next Thursday..
ReplyDeleteAdvance Diwali wishes Ganeshan sir....
சற்றும் எதிர்பாராத திருப்பங்களுடனும் பரபரப்புடனும் இந்த வாரம் முடித்துள்ளீர்கள்.அடுத்த அத்தியாத்தை ஆவலுடன் எதிர் நோக்க வைத்துள்ளீர்கள்.பாராட்டுகள்
ReplyDeletenice ji...
ReplyDeleteThanks Ganeshan sir for interesting novel
ReplyDeleteVery super sir... Waiting for next week!
ReplyDeleteVery nice sir.
ReplyDeleteSupper sir. Advance happy diwali
ReplyDeleteSuper.
ReplyDeleteGreat Novel......
ReplyDeleteWith many meaningful insights......
Rocking......