Thursday, October 6, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 119

”நீ தற்கொலை செய்து கொண்டால் நான் அவனைக் கொல்லாமல் விடுகிறேன்” என்று சொல்லி மைத்ரேயனை இக்கட்டான நிலைக்கு உட்படுத்தியதாக நினைத்த மாராவிடம் அமைதியாக மைத்ரேயன் சொன்னான். “தற்கொலை செய்து கொள்ள எனக்கு உரிமை இல்லை என்று நான் நினைக்கிறேன். வேண்டுமானால் நீ என்னைக் கொன்று விட்டு பிறகு அவனை விடுவிக்கலாம்”

இதே கோயிலில் மகாசக்தி செய்த எச்சரிக்கை மட்டுமே மாராவை மைத்ரேயன் சொன்னதை உடனே முயற்சிக்காமல் தடுத்தது. வலை வீசிப் பார்க்கிறான் என்று மனதில் நினைத்த மாரா சொன்னான். “நானாக கொல்வதென்றால் இருவரையும் கொல்வேன். முதலில் அவனை. பின் உன்னை. நீயாகத் தற்கொலை செய்து கொண்டால் அவனை நீ காப்பாற்றலாம்.”

மைத்ரேயன் எதுவும் சொல்லாமல் அவனையே புன்னகையுடன் கூர்ந்து பார்த்தான். அவன் மனதில் உள்ளதை அவன் படித்து விட்டது தெரிந்தது. மைத்ரேயன் வாய் விட்டுச் சிரித்தான். கௌதம் கூட அவன் அப்படிச் சிரித்து பார்த்திராததால் விளையாடுவதை நிறுத்து விட்டு ஆச்சரியத்துடன் நண்பனைப் பார்த்தான். பின் டோர்ஜேவிடம் மெல்லக் கேட்டான். “அந்த ஆள் என்ன ஜோக் சொன்னார் என்று இவன் இப்படிச் சிரிக்கிறான்.”

டோர்ஜேக்கு கேள்வி புரிந்தாலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் பதில் சொல்லாமல் அவர்களையே பார்க்க, அவர்கள் பேச்சு புரியாத கௌதம் குகையின் மற்ற பகுதிகளை ஆராய ஆரம்பித்தான்.

மாரா முகம் சிவக்க மைத்ரேயனிடம் கேட்டான். “ஏன் சிரிக்கிறாய்?”

“உலகமே என் கையில் என்கிறாய், உலகில் நடப்பது எல்லாவற்றையும் தீர்மானிப்பவன் நான் என்கிறாய். அப்படிப்பட்டவன் என்னைப் பார்த்துப் பயப்படுகிறாயே என்று நினைத்து தான் சிரித்தேன்.”

அதிகபட்சமாய் புன்னகை அல்லது சின்ன சிரிப்பு மட்டுமே வெளிப்படுத்தும் மைத்ரேயன் இந்த ரகசியக் குகைக்கோயிலில் அவர்களது தெய்வச்சிலை முன்னால் இப்படி வாய் விட்டுச் சிரித்ததை பெருத்த அவமானமாக மாரா உணர்ந்தான்.

அவனுடைய கோபம் வெடித்தது. “நீ ஒரு துரும்பு. நான் மலை. உன்னைப் பார்த்து நான் பயப்படவில்லை. என் சக்தி என்ன என்று பார்க்கிறாயா. காட்டட்டுமா....” என்ற மாரா அந்தக் குகைக்குள் மேலே நன்றாகப் பதிந்திருந்த சின்னப் பாறையைக் கூர்ந்து பார்த்து தன் சக்தியைப் பிரயோகிக்க அந்தப் பாறை ஆட்டம் கண்டு கடைசியில் கீழே விழுந்தது.

அதைப் பார்த்து டோர்ஜே நடுங்க ஆரம்பிக்க கௌதம் கண்களை விரித்துச் சொன்னான். “ஓ இந்த ஆளுக்கு இத்தனை சக்தி இருக்கிறதா?”

மாரா மைத்ரேயனிடம் கேட்டான். “இனியும் என் சக்திகளை ஒவ்வொன்றாகக் காண்பிக்கட்டுமா? உன்னால் ஒரு சக்தியை இப்படிக் காட்ட முடியுமா? இல்லை சொல்லத்தான் முடியுமா”. அவன் மனதிற்குள் சின்ன ஆசை இருந்தது. ரோஷப்பட்டு அவன் தன்னிடமுள்ள அந்த அஸ்திரத்தைச் சொல்லிக் காண்பிப்பானா?

மைத்ரேயன் அவன் வலையில் சிக்கவில்லை. அவன் முதல் கேள்வி தவிர வேறு எதுவுமே காதில் விழாதது போல் அமைதியாக அதற்கு மட்டும் பதில் சொன்னான். “வேண்டாம் இது ஒன்றே போதும். இப்போது சொல். இந்தப் பாறை விழுந்து என்ன சாதித்தாய்? இந்த சக்தி உனக்கு எந்த விதத்தில் இப்போது உதவியிருக்கிறது?”

மாராவுக்கு ஆத்திரம் அதிகமாகியது. “அடுத்தவர் சாதனைகளை ஒத்துக் கொள்ளவும் பெருந்தன்மை வேண்டும் மைத்ரேயா. அது உனக்கில்லை”

மைத்ரேயன் சொன்னான். “நீ இது வரை சொன்னது, செய்தது, அடைந்திருப்பது எதுவுமே எனக்கு சாதனையாகத் தோன்றவில்லை. அப்படித் தோன்றி இருந்தால் கண்டிப்பாக ஒத்துக் கொண்டிருப்பேன். உதாரணத்திற்கு உன் செல்வத்தை எடுத்துக் கொள்வோம். உன்னிடம் இருக்கிற பல லட்ச கோடி சொத்தை பிரித்து கோடிக்கணக்கான ஏழைகளுக்குத் தந்தால் அத்தனை பேரும் சந்தோஷமாக வாழ்வார்கள். ஆனால் அத்தனை கோடி பேருக்கு சந்தோஷம் தரும் செல்வத்தை ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்திருக்கும் நீ சந்தோஷமாக இல்லை. திருப்தியாக இல்லை. பெரிய நாடுகள் கூட நீ சொன்னபடி கேட்கும் என்கிறாய். தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், நிறுவனங்கள், லட்சக்கணக்கான ஊழியர்கள் என்று இந்த உலகமே என் கையில் என்கிற அளவு எல்லாவற்றையும் அடைந்திருக்கிற நீ இத்துடனாவது திருப்தி அடைந்து விட்டாயா? இல்லையே. இப்போது இப்படி இரண்டு சிறுவர்களை கடத்திக் கொண்டு அவர்களைக் கொன்று உன் சக்தியை நிரூபிக்க வேண்டிய நிலையில் அல்லவா இருக்கிறாய்?”

மாரா பெரும் கோபத்துடன், வெறுப்புடனும் கேட்டான். “நீ வெறும் சிறுவனா? சொல். வெறும் சிறுவனா? தர்மத்தை நிலை நாட்ட வந்திருக்கும் புத்தரின் அவதாரமல்லவா நீ மைத்ரேயா? நான் சொல்கிறேன் கேள். பணத்தில் மட்டுமல்ல மனித மனதிலும் இந்த உலகத்தை நான் எப்போதோ வென்றாகி விட்டது. உனக்கு இங்கே கால் பதிக்கவும் இடமில்லை. நினைவு வைத்துக் கொள். இன்றைக்கு தர்மம், நியாயம், நீதி, நேர்மை, சத்தியம், தூய்மையான அன்பு எல்லாம் எழுத்திலும் பேச்சிலும் மட்டும் தான் இருக்கிறது. மனிதர்களின் இதயங்களில் இல்லை. பேராசை, பொறாமை, சுயநலம், வஞ்சகம், வெறுப்பு இதெல்லாம் தான் அவர்களை ஆட்சி செய்கிறது. ஒவ்வொருவனும் அரசாங்கத்தையும், சமூகத்தையும், அடுத்தவரையும் குறை சொல்வான். ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கும் இடங்களில் இவன் மற்றவர்களை விட பத்து மடங்கு அதிகமாய் அயோக்கியத்தனம் செய்வான். முடிந்தவன், முடியாதவன் என்ற இரண்டே வகை தான் இப்போது உலகில் இருக்கின்றது. முடியாதவனுக்கு முடியும் போது அவனும் தன் கைவரிசையைக் காட்டுவான். இந்த அளவு இந்த உலகத்தை மாற்றி இருக்கிறோம் மைத்ரேயா. காப்பாற்ற உன்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது. யாரை யாரிடமிருந்து காப்பாற்றுவாய்?”

மைத்ரேயன் அவன் சொன்னதை இடைமறிக்காமல் கேட்டு விட்டுப் பொறுமையாகச் சொன்னான். “இன்றும் பொய் உண்மையின் வேடம் போட்டு தான் ஏமாற்ற வேண்டி இருக்கிறது. ஊரையே ஏமாற்றி பிழைப்பு நடத்துபவன் கூடத் தன் மனைவி, மக்கள், நண்பர்கள் தன்னிடம் தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். நீங்களே கூட உங்களிடம் மற்றவர்கள் உங்கள் சைத்தான் புத்தியைக் காட்டுவதை விரும்புவதில்லை. இதெல்லாம் நீங்களே தர்மத்தை உயர்ந்ததாக மதிப்பதையும், அதர்மத்தை இழிவாக நினைப்பதையும் தான் காட்டுகிறது. இது உங்களுக்குள்ளேயே தர்மம் வென்று நிற்பதைத் தான் காட்டுகிறது. நீ சொன்னது போல யாரும் யாரையும் யாரிடமிருந்தும் காப்பாற்ற முடியாது. ஒருவன் தன்னிடமிருக்கும் தீமையிலிருந்து விலகி தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவான். தொடர்ந்து வரும் துன்பங்களை ஒருவன் எத்தனை காலம், எத்தனை பிறவிகள் தான் தாங்குவான். சலித்துப் போய் நிரந்தரமாய் துக்கத்திலிருந்து விடுபட ஆத்மார்த்தமாய் விரும்பும் இதயத்தில் நான் காலடி வைப்பேன். வழிகாட்டுவேன் ”

மாரா வாய் விட்டுச் சிரித்தான். “நீ மந்திரசக்தியில் பொருள்களைக் கொண்டு வந்தாலோ, உன் சக்திகளால் அவனுக்கு சில்லறை லாபங்களைத் தந்து கொண்டிருந்தாலோ மனிதன் நீயே தெய்வம் என்று கொண்டாடுவான். ஆனால் மனிதனிடம் அவனே தான் பிரச்னை என்றும் அவன் திருந்துவது தான் ஒரே தீர்வு என்றும் சொன்னாயானால் நீ இருக்கிற பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டான். சுட்டிக்காட்ட ஆளே இல்லாத போது கூட மனிதன் கடவுளையும், கிரகங்களையும் காரணம் காட்டுவானே ஒழிய தானே தன் பிரச்னை என்பதை உணர மாட்டான். ஒவ்வொருவனும் பார்க்க மறுக்கிற ஒரே இடம் அவனுக்குள்ளே தான் இருக்கிறது. அந்த நிலைக்கு மனிதனை நான் கொண்டு வந்திருக்கிறேன் மைத்ரேயா”

மைத்ரேயன் சொன்னான். “நீயே அப்படித்தானே இருக்கிறாய். உன் எதிரி நான் என்று நினைத்து அழிக்கத் துடிக்கிறாய். நான் அழிந்தால் நீ நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறாய். ஆனால் உனக்கு நான் எதிரியல்ல. உண்மையில் நான் யாருக்கும் எதிரியல்ல. நீயே தான் உனக்கு எதிரி. நீ தப்பிக்க வேண்டியது உன்னிடமிருந்தே. நீ உன்னிடம் இருப்பதாக ஒரு பட்டியலே சொன்னாயே அதில் நிறைவும் நிம்மதியும் இருக்கிறதா? உன் ஆட்களிடம் தான் இருக்கிறதா? அது இல்லாமல் எது இருந்து என்ன பயன்? இது எதனால் என்று சிந்தித்துப் பார்? காரணம் நானா. இல்லை நீ, உன் செயல்கள்... செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு. வினையைச் செய்துவிட்டு விளைவில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. அழிவு நெருங்கி விட்டதால் தான் ஒரு அப்பாவிச் சிறுவனைக் கொல்லத் துணியும் நிலைக்கு வந்து விட்டாய். அவனை விடுவித்து விட்டு தயவு செய்து உன்னைக் காப்பாற்றிக் கொள்....”


அழியப் போகும் மைத்ரேயன், மாராவுக்கே அழிவு நெருங்கி விட்டதெனச் சொல்லும் துணிச்சல் பெற்றதை மாராவுக்குத் தாங்க முடியவில்லை. அவன் உடல் கோபத்தில் லேசாக நடுங்க ஆரம்பித்தது.

அப்போது தான் தங்கள் தெய்வச்சிலையில் இருந்தும் நடுக்கத்தை மாரா கவனித்தான். மைத்ரேயனை அமைதி இழக்க வைக்க பேச்சுத் தரப் போய் மைத்ரேயன் சாமர்த்தியமாகத் தன்னை அமைதி இழக்க வைத்து விட்டதை மாரா உணர்ந்தான். இத்தனை நேரம் பேசியதிலும் ஒரு முறை கூடத் தன் பெயரை அழைத்துப் பேசாததையும் மாரா கவனித்தான். அவன் பெயர் அங்கீகாரம் கூடத் தனக்கு தரவில்லை என்பதை நினைக்கையில் மனம் கொதித்தது.... இனி அமைதியை மீட்டு பழைய சக்தி நிலையை எட்ட சிறிது நேரம் தேவைப்படும். இதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான் போலிருக்கிறது. மிக முக்கியமான இந்தக் கட்டத்தில் அவன் தன் சக்தியையும், நேரத்தையும் வீணாக்க முடியாது. உடனே எழுந்த மாரா மைத்ரேயனை முழுவதும் அலட்சியம் செய்து விட்டு டோர்ஜேவைத் தன்னருகே அழைத்தான். டோர்ஜே நடுங்கிக் கொண்டே வந்தான்.

“இரண்டு நாளில் நீ மைத்ரேயனாக உலகத்துக்கு அறிமுகமாகப் போகிறாய். அதற்கு நான் எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. நான் சொல்கிறபடி கேட்டு நடந்தால் உலகப்புகழும், ராஜ வாழ்க்கையும் அடையலாம். புரிகிறதா?”

டோர்ஜே தலையை ஆட்டினான்.

“சரி. இனி நம் தெய்வம் இது தான். வணங்கி விட்டுக் கிளம்பு” என்று தங்கள் தெய்வச்சிலையைக் காட்டினான்.

டோர்ஜே மைத்ரேயனை ஓரக்கண்ணால் பார்த்தான். மைத்ரேயன் அதற்குள் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். டோர்ஜே அந்தச் சிலையை வணங்கி எழுந்தான்.

மாரா கைகளைத் தட்ட வெளியே இருந்து துப்பாக்கி ஏந்திய ஒரு காவலன் வந்தான். அவனிடம் மாரா சொன்னான். “இவனை நீ கூட்டிக் கொண்டு போகலாம்....” டோர்ஜே அந்தக் காவலனுடன் நடந்தான். பார்வையிலிருந்து மறையும் முன் திரும்பி தன் நண்பர்களைப் பார்த்தான். மைத்ரேயன் கண் விழிக்கவில்லை. கௌதம் மட்டும் பரிதாபமாக கையசைத்தான். டோர்ஜேயும் கையசைத்தான். வெளியேறும் போது டோர்ஜேயின் கண்கள் கண்ணீர்க் குளமாகி இருந்தன.

கௌதமும் அந்த நண்பனைப் பிரியும் துக்கத்தை உணர்ந்தான். இனி எப்படி நேரம் போக்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை. பசித்தது. மாராவிடம் சொன்னான். “எனக்குப் பசிக்கிறது”

மாரா மைத்ரேயனிடம் கேட்டான். “உனக்கும் சாப்பிட ஏதாவது வேண்டுமா?”

மைத்ரேயன் கண்களைத் திறக்காமலேயே வேண்டாம் என்று சொன்னான். மாரா மறுபடி கைகளைத் தட்டினான். இன்னொரு காவலன் வந்தான். அவனிடம் மிகத் தாழ்ந்த குரலில் மாரா பேசினான். அவன் போய் விஷம் கலந்த உணவை கௌதம் சாப்பிடக் கொண்டு வந்தான்.

கௌதம் உட்கார்ந்து அந்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தான்.


(தொடரும்)

என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

10 comments:

  1. Powerful and thought provoking arguments of both the sides. Excellent writing sir.

    ReplyDelete
  2. I am think nobody will satisfy with one time

    ReplyDelete
  3. Arguments of both sides are strong and thought provoking. Excellent sir,

    ReplyDelete
  4. Hi wait for next update.thanks

    ReplyDelete
  5. Very true.. The problem one faces lies within oneself, not an external agent. Each action of a person has an outcome. There is no escape. Thought provoking statements...

    ReplyDelete
  6. Gowtham pavam. Please

    ReplyDelete
  7. Top notch conversation. Bravo sir.

    ReplyDelete