Monday, September 12, 2016

முள்பாதையைக் கடந்து முன்னேறியவர்


அகரம் தொட்ட சிகரம்-5

பிரம்மாண்டமான வெற்றியை நோக்கிச் செல்லும் பாதை என்றுமே ராஜ பாதையாக இருப்பதில்லை. வென்ற பின் தாராளம் காட்டும் உலகம் அது வரை வெற்றிப்பாதையின் பயணிகளைப் பெரும்பாலும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தனியாகவே அந்தப் பாதையில் பயணிக்கும் மனிதன் மனம் தளர்ந்து திரும்பி விட சந்தர்ப்பங்களோ ஏராளமாக அமைகின்றன. பிரச்னைகளும், சோதனைகளும், அவமானங்களும் மட்டுமே அவன் சந்திக்கும் யதார்த்தங்களாக இருக்கின்றன. இதில் எல்லாம் தாக்குப்பிடித்து பாதையெல்லாம் நிறைந்திருக்கும் முட்களைப் பார்த்து தயங்கியோ, பின் வாங்கியோ விடாமல் தன் கனவுகளைத் தொடர்பவர்களே சாதித்து மகுடம் சூடுகிறார்கள். அப்படி ஒரு சாதனை புரிந்தவர் தான் புகழ்பெற்ற அமெரிக்க நடிகரான சில்வஸ்டர் ஸ்டலோன்.


1946 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் சதா சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிறந்தவர் சில்வஸ்டர் ஸ்டலோன். பெற்றோரின் சண்டை காரணமாக அவரது வீட்டில் அமைதி என்பதே காணாமல் போயிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்தார்கள். அதனால் அவர் சில காலம் கருணை இல்லங்களில் வாழ வேண்டி இருந்தது. அவர் தாயார் மறுமணம் செய்து கொண்ட பிறகு அங்கு சென்று சில்வஸ்டர் ஸ்டலோன் வாழ்ந்தார். அங்கும் அமைதியான அன்பான சூழல் இல்லை. அதனால் அவர் சென்று படித்த பள்ளிகளில் சக மாணவர்களுடன் சண்டை போட்டார். பள்ளி விதிகளின் படி அனுசரணையாக நடந்து கொள்ளத் தவறினார். அதனால் சில பள்ளிகளில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். கடைசியில் பிரச்னைக்குரிய மாணவர்கள் இருக்கும் சீர்திருத்தப்பள்ளியில் அவர் படிக்க வேண்டி வந்தது.


எப்படியோ படித்து முடித்து நாடகம், நடிப்பு ஆகியவை படிக்க கல்லூரிக்குச் சென்றார். அங்கும் அவர் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நடிகனாகும் கனவோடு கல்லூரியை விட்டு வெளியே வந்த சில்வஸ்டர் ஸ்டலோனை யதார்த்த உலகம் கசப்பாக வரவேற்றது. திரை உலகை அவரால் சுலபமாக நெருங்க முடியவில்லை. அதனால் எடுபிடி வேலைகள் உட்பட பல சின்ன வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டினார். ஒரு சினிமா தியேட்டரில் வேலை, செண்ட்ரல் பார்க் மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களின் கூண்டுகளைக் கழுவி விடும் வேலை எல்லாம் செய்து பிழைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வேலை எதுவும் இல்லாமல், தங்க இடமும் இல்லாமல் நியூயார்க் நகர வீதிகளில் வாழ்ந்திருக்கிறார். வீதிகளில் இருந்த குளிர் தாங்க முடியாமல் நூலகத்தின் உள்ளே அடைக்கலம் புகுந்த அவர் காலத்தைப் போக்க வேண்டி படிக்க ஆரம்பித்து வெற்றிகரமான கதை அம்சங்களை ஓரளவு புரிந்து கொண்டார். இதுவே அவருக்கு பிற்காலத்தில் திரைக்கதை அமைக்க உதவியிருக்க வேண்டும்.


பின்னர் ஓரிரண்டு படங்களில் சின்ன வேடங்கள் அவருக்குக் கிடைத்தன. அவையும் சொல்லும் அளவுக்கு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் எல்லா விதங்களிலும் வாழ்க்கையில் சுமை கூடிக் கொண்டே போனதே ஒழிய குறையவில்லை. மனைவியின் நகையைத் திருடி விற்றுச் சாப்பிடும் அளவு வாழ்க்கை மிக மோசமானது. அந்தப் பணமும் தீர்ந்து போன போது அவருடன் அவரது நாயைத் தவிர துணையாக யாருமில்லை. அந்த நாயிற்கும் உணவிட முடியாமல் போன போது அவரால் அதைத் தாங்க முடியவில்லை. தன் நாயாவது எங்காவது நல்லபடியாக பிழைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்தவராக அவர் ஒரு மதுபானக்கடைக்கு வெளியே அந்த நாயை ஒருவரிடம் 25 டாலருக்கு விற்று விட்டார். விற்று விட்டு அந்த இடத்தை விட்டுச் சென்ற போது பெருகிய கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.


இரண்டு வாரங்கள் கழித்து குத்துச்சண்டை வீரர் முகமது அலியும், மற்றொரு வீரரும் பங்கெடுத்த ஒரு குத்துச்சண்டையை சில்வஸ்டர் ஸ்டலோன் பார்த்தார். அந்தக் குத்துச்சண்டை அவருள் ஒரு கதைக்கருவை உருவாக்கியது. இரண்டு நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து ராக்கி திரைக் கதையை சில்வஸ்டர் ஸ்டலோன் உருவாக்கினார். அதை எடுத்துக் கொண்டு அவர் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக அணுகினார். இதெல்லாம் விலை போகாது, இந்த மாதிரி திரைப்படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள், இதில் என்ன இருக்கிறது என்பது போன்ற விமர்சனங்கள் தான் அவருக்குக் கிடைத்தன. ஆனாலும் தான் எடுத்துக் கொண்ட பணியில் ஆத்மார்த்தமான நம்பிக்கை வைத்திருந்த சில்வஸ்டர் ஸ்டலோன் இதிலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார்.


ஒரு தயாரிப்பு கம்பெனி மட்டும் அவரது திரைக்கதையில் ஆர்வம் காட்டியது. அது அவருக்கு 1,25,000 டாலர்கள் தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால் சில்வஸ்டர் ஸ்டலோன் ஒரு நிபந்தனை விதித்தார். அந்த திரைப்படத்தில் தானே கதாநாயகனாக நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்களிடம் பிரபலமாகாத ஒரு நடிகரை வைத்து அந்தப் படத்தை எடுத்து கையைச் சுட்டுக் கொள்ள அவர்கள் விரும்பாமல் பின் வாங்கினார்கள். ஆனால் அந்தத் திரைக்கதையில் வெற்றிக்கான அம்சம் இருப்பதாக உணர்ந்த அவர்கள் ஒரு பிரபல நடிகரை வைத்து அந்தப்படத்தை எடுத்தால் வெற்றிப்படமாக்கலாம் என்று நினைத்து 2,50,000 டாலர்கள், 3,50,0000 டாலர்கள் வரை தர முன்வந்தார்கள். நாயைக்கூட 25 டாலருக்கு விற்க வேண்டிய நிலைக்கு வந்திருந்த போதும் சில்வஸ்டர் ஸ்டலோன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் அவரைக் கதாநாயகனாகப் போடும் பட்சத்தில் வெறும் 35,000 டாலர்கள் மட்டுமே திரைக்கதைக்கும், நடிப்பிற்கும் சேர்த்து தருவோம் என்று அவர்கள் சொன்னார்கள். உடனே சில்வஸ்டர் ஸ்டலோன் ஒத்துக் கொண்டார்.


கிடைத்த பணத்தில் அவர் செய்த முதல் வேலை நாயைத் திரும்பவும் வாங்க முயற்சித்தது தான். எந்த மதுபானக்கடையின் வெளியே தன் நாயை அவர் விற்றாரோ அதே மது பானக்கடையின் வெளியே மூன்று நாட்கள் காத்திருந்து கடைசியில் நாயை வாங்கியவரை அவர் சந்தித்தார். நடந்ததை எல்லாம் தெரிவித்து அந்த நாய்க்கு நூறு டாலர்கள் தருவதாக அவர் சொன்னாலும் அந்த ஆள் திரும்ப நாயை விற்க சம்மதிக்கவில்லை. ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏற்றிக் கொண்டே போனாலும் சம்மதிக்காத அந்த ஆள் 15,000 டாலர்களும், ராக்கி திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வாய்ப்பும் தந்தால் தான் திரும்ப நாயைத் தருவேன் என்று சொல்லி விட்டார். சில்வஸ்டர் ஸ்டலோன் ஒத்துக் கொண்டார். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ராக்கி படத்தில் அந்த ஆளும், அந்த நாயும் கூட நடித்திருக்கிறது.


பத்து ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ராக்கி திரைப்படம் முடிவில் சிறந்த திரைப்படம், சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்‌ஷன் என்ற மூன்று ஆஸ்கர்களை வென்றது. மீதி வரலாறாகியது. ராக்கியின் பல தொடர் சினிமாக்கள், ஃபர்ஸ்ஃப் ப்ளட், ராம்போ போன்ற பல திரைப்படங்கள் தந்து புகழ், செலவம் இரண்டிலுமே சிகரங்களைப் பிடித்த சில்வஸ்டர் ஸ்டலோன் வேறுபல விருதுகளையும் பெற்றுள்ளார். நியூயார்க் நகரின் வீதிகளில் வசிக்க நேர்ந்த சில்வஸ்டர் ஸ்டலோன் பலநூறு கோடிகளின் அதிபதியாகி அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் கண்கவரும் மாளிகைகளை வாங்கி இருக்கிறார். உதாரணத்திற்கு பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவரது மாளிகையை இங்கே பாருங்கள்.




கஷ்ட காலங்கள், முள் பாதைகள் எல்லாம் எல்லார் வாழ்விலும் உண்டு. அவற்றைப் பார்க்காமல் சிகரங்களை அடைந்தவர்கள் மிகவும் குறைவு. அவற்றைக் கடக்கையில் தான் நீங்கள் உங்களையும், உங்களைச் சுற்றி உள்ள உலகத்தையும் தெளிவாக உணர முடியும். பிற்காலத்தில் உங்களைத் தூக்கி நிறுத்துவது அந்த அனுபவங்களின் வலிமையாகவே இருக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.


-என்.கணேசன்

5 comments:

  1. Naan sornthu pogum pothu ellam unga thalathuku varukiren

    ReplyDelete
  2. அவருடைய முகத்திலும் ஒரு பகுதி வேலை செய்யாது

    ReplyDelete
  3. I think tittle is... may be 'Sikaram Thotta Akaram"....

    ReplyDelete