Monday, June 6, 2016

ஆன்மிக வானில் ஒரு எரிநட்சத்திரம்!

மகாசக்தி மனிதர்கள்-60

ராபர்ட் ஆடம்ஸ் என்ற அமெரிக்கருக்கு திருவண்ணாமலையை விட்டு வேறெங்கும் செல்லாத ரமண மகரிஷி அமெரிக்காவில் காட்சி அளித்தார் என்பதைப் பார்த்தோம். அது தென்னிந்தியாவில் வசிக்கும் ரமண மகரிஷி என்ற யோகி என்பதை அறிந்த பின் ராபர்ட் ஆடம்ஸ் ரமண மகரிஷியின் தீவிர பக்தரானார். ரமணரின் உபதேசங்களையும், அத்வைதத்தையும், ஞான யோகக் கோட்பாடுகளையும் கலிபோர்னியாவில் ஆன்மிக அன்பர்களுக்கு உபதேசித்து வந்தார்.

பால் ப்ரண்டன், ராபர்ட் ஆடம்ஸ் போலவே ரமண மகரிஷியால் சோமர்செட் மாகம் (Somerset Maugham) என்ற பிரபல ஆங்கில நாவலாசிரியர், கார்ல் ஜங் (Carl Jung) என்ற பிரபல மனோதத்துவ மேதை, ஆர்தர் ஓஸ்போர்ன் (Arthur Osborne) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் முதலானோரும் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் ரமண மகரிஷையை இந்தியா வந்து தரிசித்து விட்டுப் போனார்கள். அவர்களில் ஆர்தர் ஓஸ்போர்ன் நீண்ட காலம் ரமணருடன் ரமணாசிரமத்தில் தங்கியும் இருந்தார். அவர் ரமணரின் உபதேசங்கள் குறித்தும், ரமணருடனான தன் அனுபவங்கள் குறித்தும் நூல்களை எழுதி இருக்கிறார். ஆத்மஞானத்தின் பாதை என்ற அவரது நூலுக்கு அப்போதைய குடியரசுத் துணைத்தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அணிந்துரை எழுதி இருக்கிறார்.

திருவண்ணாமலையில் இருந்த ரமணமகரிஷி அமெரிக்காவில் ராபர்ட் ஆடம்ஸுக்குக் காட்சி அளித்தது போலவே, கணபதிமுனி என்ற தீவிர பக்தருக்குத் திருவொற்றியூரில் காட்சி அளித்திருக்கிறார். அந்த நிகழ்வை மெய்சிலிர்ப்போடு கணபதிமுனி பதிவு செய்திருக்கிறார். திருவொற்றியூரில் ஒரு பிள்ளையார் கோயிலில் அமர்ந்திருக்கையில் ரமணரைக் காண வேண்டும் என்ற பேராவல் தன்னுள் திடீர் என்று எழுந்ததாகவும் சிறிது நேரத்தில் ரமண மகரிஷி அந்தக் கோயிலில் நுழைவதைப் பார்த்து ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். ரமணமகரிஷியைக் கண்டவுடன் ஓடிச்சென்று அவர் காலைத் தொட்டு வணங்கியதாகவும், ரமணர் தலையைத் தொட்டு ஆசி வழங்கியதாகவும், ரமணர் தலையைத் தொட்டவுடன் சக்தி வாய்ந்த அலைகள் தன் உடலை ஊடுருவியதாக உணர்ந்ததாகவும், அந்த உணர்வின் தாக்கம் நீண்ட நேரம் அவருக்கு இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் சக்திகளை அனாவசியமாக வெளிப்படுத்துவதிலோ, பிரபலப்படுத்துவதிலோ ரமண மகரிஷிக்கு ஆர்வம் இல்லாத போதிலும் சில அதிசயங்கள் தானாகவே அவர் மூலம் நடந்தன. அப்படி நடந்த இன்னொரு நிகழ்வைப் பார்ப்போம்.

கிரிதலூர் சத்யநாராயண ராவ் என்பவர் புற்று நோயின் முற்றிய நிலையில் இருந்தார். தண்ணீரோ, மருந்தோ, உணவோ உட்கொள்ளக்கூட முடியாத கொடிய நிலை. அவரது குடும்பத்தினர் ரமணரது பரம பக்தர்கள். அவர்கள் சத்யநாராயண ராவை வந்து ஒரு முறை பார்த்து விட்டுச் செல்லும்படி ரமணரை வேண்டிக்கொண்டார்கள். அதனை ஏற்று ரமணர் சத்யநாராயண ராவைச் சென்று பார்த்தார்.

ரமணரைப் பார்த்தவுடன் சத்யநாராயண ராவ் அவரது கையைப் பிடித்துக் கொண்டு கதறினார். “நான் வேண்டுமானால் பாவியாக இருக்கலாம். ஆனால் என் தாயும் சகோதரனும் தங்களுடைய தீவிர பக்தர்கள் அல்லவா? அவர்களுக்காகவாவது என்னைக் காப்பாற்றக் கூடாதா?”

பதில் எதுவும் சொல்லாமல் அவரைப் படுக்கச் சொல்லி விட்டு அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ரமணர் அங்கிருந்து கிளம்பினார். அன்றிரவு சத்யநாராயண ராவ் ரத்த வாந்தி எடுத்தார். ரத்தத்தோடு சதைகளும் வெளியேறின. உள்ளே யாரோ அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த சதைப்பிண்டமும் ரத்தமும் போலத் தோன்றின. மறு நாள் முதல் சத்யநாராயண ராவ் சாப்பிடவும், மருந்து உட்கொள்ளவும் முடிந்தது.

இந்த அளவு அற்புதங்கள் ரமண மகரிஷியின் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த போதிலும் அவர் ஒரு முறை கூட அந்த அற்புதங்களில் தனக்குப் பங்கு இருப்பதாக எந்த சூழ்நிலையிலும் சொல்லிக் கொள்ளவில்லை.

ஞானியால் நிகழ்த்தப்படும் அற்புதங்களைப் பற்றிய பேச்சு ஒரு முறை வந்த போது சொன்னார். “ஏதோ ஒரு சக்தி ஞானியின் மூலமாக வேலை செய்கிறது. அவனது தேகத்தை உபயோகித்து தன் வேலையை முடித்துக் கொள்கிறது.” எல்லாமே அப்படிப்பட்ட சக்தியின் வேலை தான் என்று பட்டும் படாமலும் சொன்னவர் அந்த சக்தியோ, ஞானியோ அவர் என்று மறைமுகமாகவும் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை.

ஒரு முறை அவருடைய ஆசிரமத்திற்கு வந்த ஒருவர் தனது குருவைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். மூன்று வருடங்களுக்கு முன் இறந்து புதைக்கப்பட்ட அவருடைய குரு மறுபடியும் மனித உருவில் வந்து இனி என்ன செய்ய வேண்டும் என்பதை உபதேசித்தார் என்று அவர் சொன்னதைக் கேட்டு விட்டு மெல்ல ரமண மகரிஷி சொன்னார். “ஒரு மனிதன் எத்தனை உடல்களில் புகுந்த போதும் அவன் தன் உண்மையான உறைவிடத்தைக் கண்டு கொண்டான் என்பது ஆகி விடுமா?”. யோசிக்க வேண்டிய உண்மை அல்லவா இது?

விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் நூலைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த பி.வி.நரசிம்ம சுவாமி என்பவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் தொடுதல் மூலமாகவே ஒரு முறை மெய்ஞானப் பேரனுபவத்தை ஏற்படுத்தியதைச் சுட்டிக் காட்டி ரமண மகரிஷிக்கும் அது போன்ற சக்தி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அவர் பதில் கூறும் முன் எச்சம்மாள் என்ற பக்தை ’மகாசக்திகள் அனைவருக்கும் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தவையா’ என்று கேட்டார்.

இரண்டு கேள்விக்கும் பதில் அளிக்கும் விதமாக ரமண மகரிஷி சொன்னார். ”தன்னை அறிந்து தன் உண்மை நிலையிலேயே தங்கி இருப்பது தான் ஒருவனது உண்மையான சாதனையாக இருக்க முடியும். மற்ற அனைத்து சாதனைகளும் கனவில் கண்ட சக்திகள் போன்றவை. உறக்கத்தில் இருந்து விழிக்கும் போது அவை உண்மையாக இருக்குமா? உண்மையை உணர்ந்து அந்த நிலையில் தங்கி இருப்பவனை உண்மையல்லாதவற்றை நீங்கி இருப்பவனை அவை ஏமாற்ற முடியாது”

அவருக்கே புற்று நோய் வந்த போது அவரது பக்தர்கள் வற்புறுத்திய போதும் அதைப் போக்கிக் கொள்ள அவர் சிறிதும் முயற்சிக்கவில்லை. உடலைத் துறப்பது என்பதை சுமையை இறக்கி வைப்பது போலவும், சாப்பிட்ட பின் இலையைத் தூக்கி எறிவதைப் போலவும் உவமை சொன்ன ரமணர் ”நான் போய் விடப் போகிறேன் என்று கவலைப் படுகிறார்கள். எங்கே போவது? எங்கே வருவது? போக்கேது? வரவேது?” என்று கேட்டார்.

ஆனால் பக்தர்கள் முயற்சியால் அறுவை சிகிச்சை உட்பட பல மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் ஒத்துழைத்தார். அவரது முதுகில் புற்று நோயால் ஏற்பட்டிருந்த கட்டியை மயக்க மருந்து இல்லாமலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அவர் அனுமதி அளித்தார். ஆனால் எந்தச் சிகிச்சையும் பலன் அளிக்காமல் போய் புற்று நோயின் பாதிப்புகள் திரும்பத் திரும்ப வந்த போது துக்கப்பட்டவர்கள் அவருடைய பக்தர்கள் மட்டுமே. அவர் சிறிதும் பாதிக்கப்படாமல் தன் இயல்பான அமைதியிலேயே லயித்திருந்தார்.

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இரவு ரமண மகரிஷி உயிர்நீத்த அதே நேரத்தில் வானில் தெற்கே இருந்து கிளம்பி பேரொளி கொண்ட ஒரு எரிநட்சத்திரம் திருவண்ணாமலை உச்சியைத் தொட்டு பின்புறம் மறைந்தது. அதை திருவண்ணாமலையிலும் சுற்றி உள்ள பகுதிகளிலும் பலரும் கண்டிருக்கிறார்கள். ஹென்றி கார்ட்டியர் ப்ரெஸ்ஸன் (Henri Cartier-Bresson) என்ற பிரெஞ்சுப் புகைப்படக்காரர் அந்த சமயத்தில் ரமணாசிரமத்திற்கு வெளியே இருந்திருக்கிறார். அந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டு கடிகார நேரத்தைப் பார்த்து விட்டு ஆசிரமத்திற்கு உள்ளே போன போது சரியாக அந்த 8.47 மணி நேரத்தில் ரமணரின் உயிர் பிரிந்திருப்பதை அறிந்ததாக அவர் சொல்லி இருக்கிறார். இந்த அற்புத நிகழ்வு ரமணரின் மகாசக்திக்கு கடைசி உதாரணமாக இருக்கிறது.

இத்தொடரை ரமண மகரிஷியோடு முடித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அபூர்வ சக்திகள் பெற்றிருப்பது சிறப்பு தான் என்றாலும் ரமணர் சுட்டிக் காட்டியது போல அபூர்வ சக்திகள் என்றுமே மெய்ஞான சித்திக்கு அடையாளமாகி விடாது என்பதை நாம் மறந்து விடலாகாது. அதற்காகவே இத்தொடரில் ஞானிகள், யோகிகள் அல்லாத சிலர் பற்றியும் எழுதி இருந்தோம். ஆனால் அஷ்டமகாசக்திகள் கண்டிப்பாக கற்பனை அல்ல. யோக மார்க்கத்தில் அவை இயல்பாகவே ஒருவருக்கு கைகூடுகின்றன. அவற்றை தேவை இருக்கையில் உபயோகித்துக் கொண்டாலும் உண்மையான யோகிகளும், ஞானிகளும் பின்னர் அதைத்தாண்டிச் சென்று விடுகிறார்கள். அப்படிச் செல்ல முடிவதில் மட்டுமே இருக்கிறது அவர்களின் சிறப்பு!

இது வரை இத்தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு இந்த உண்மையை வலியுறுத்தி விட்டு அன்புடன் விடை பெறுகிறேன்.

- என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 9.10.2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)



3 comments:

  1. The Great Master!!!! || OM NAMO BHAGAVATHE SRI RAMANAYA || Thank you Ganeshan sir for your great effort to write a amazing book lije this!!!!

    ReplyDelete
  2. The great guru g

    ReplyDelete
  3. Sir, your efforts are really great and cannot be compared with others. There may be many writers in this world, but you are the only one to have a Golden Hand. Because no one can tell story like this. While reading the above article I felt some vibration all over my body. You have made a good ending to this "Mahasakthi Manithargal" but I hope you will come with another title soon. I want this generation youngsters to grow by reading your books, which is worth while.

    ReplyDelete