கீதை
காட்டும் பாதை 40
பரந்துபட்ட உலகம், பல கோடி மனிதர்கள், பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு
தேவைகள் என்று இருக்கையில் வழிபாட்டு முறையும், வழிபடும் தெய்வமும் ஒன்றாக இருக்க
முடியும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. 
அதை உணர்ந்தே ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகக்
கூறுகிறார். 
அர்ஜுனா! எவர்கள் வேறு தேவதைகளிடம் பக்தி
கொண்டு சிரத்தையுடன் பூஜை செய்கிறார்களோ அவர்களும் முறை தவறிய வழியில் என்னையே
தான் பூஜை செய்கிறார்கள்.
சகல யக்ஞங்களையும் பெற்றுக் கொள்பவனும்,
பரிபாலிப்பவனும் நானே. ஆனால் அவர்கள் என்னை உள்ளபடி தெரிந்து கொள்வதில்லை. அதனால்
யக்ஞபலனை நழுவ விடுகிறார்கள்.
தேவர்களுக்காக விரதம் இருப்பவர்கள்
தேவர்களை அடைகிறார்கள். பித்ருக்களை வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள். பேய்
பூதம் போன்றவைகளைத் தொழுபவர்கள் அவைகளையே அடைகிறார்கள். என்னை உபாசனை
செய்கிறவர்கள் என்னையே அடைகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் ஆதிமூலமாகிய இறைவன்
ஒருவனாகவே இருக்க முடியும் என்றாலும் கூட மனிதர்கள் தங்கள் தேவைகளைத் தீர்த்து
வைக்கும் தேவதைகளைத் தேர்ந்தெடுத்து வணங்குகிறார்கள். ஆனால் அப்படி வணங்கும் பூஜைகள்
பக்தி சிரத்தையுடன் இருக்குமானால் சுற்றுவழியில் ஆதிமூலமாகிய இறைவனையே பூஜிப்பது
போலத் தான். கடைசியில் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்பவன் அவனே தான் என்றாலும் அது
நேரடி வழிபாடல்ல. எல்லா வேள்விகளிலும் படைக்கப்படும் அனைத்தையும் பெற்றுக்
கொள்பவன் ஒருவனேயான பரம்பொருளே. அந்தப் பரம்பொருளை  உண்மையாக உள்ளபடியே அறிந்து கொள்ளத் தவறும் போது
அந்த வேள்விகளை முறையாகச் செய்தாலும் கூட முழுமையான பலனைப் பெறவும் மனிதர்கள்
தவறிவிடுகிறார்கள். புரிதலில் உள்ள தவறு செயலின் விளைவையும் சிதைத்து விடுகிறது.  
மனிதன் வணங்கும் போது என்னவாக நினைத்து
வணங்குகிறானோ அப்படியே அதைச் சென்றடைகிறான். அவன் மனதில் வடித்திருப்பது
தேவர்களானால் அவன் தேவர்களை அடைகிறான். மனதில் வடித்திருப்பது பித்ருக்களானால்
அவன் பித்ருக்களை அடைகிறான். வணங்குவது பேய், பூதமானால் கூட அவற்றையே அவன்
அடைகிறான். உள்ளது உள்ளபடியாக அறிந்து அந்தப் பரம்பொருளை வணங்கினால் மனிதன் அந்தப்
பரம்பொருளையே அடைகிறான். வணங்கத் தேர்ந்தெடுப்பதையே மனிதன் சென்றடைவான் என்கிற
உத்திரவாதம் இறைவனால் அளிக்கப்பட்டிருக்கிறது. எதையும் வணங்க சுதந்திரம் உள்ள
மனிதன் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதை வைத்து அவன் சென்றடையும் இலக்கும் நிர்ணயமாகிறது.
அதனால், தான் வணங்குவதை அவன் புரிந்து கொள்வது மிக முக்கியமாகிறது.  
பைபிளில் “அற்பமாக விதைப்பவர்கள் அற்பமாகவே
அறுவடை செய்கிறார்கள். ஏராளமாக விதைப்பவர்கள் ஏராளமாக அறுவடை செய்கிறார்கள்” என்ற வசனம் உண்டு. பரம்பொருளான மகாசக்தியை விட குறைவான சக்திகளை
வணங்குபவர்கள் அற்பமாக அறுவடை செய்பவர்கள். பரம்பொருளையே வணங்குபவர்கள் ஏராளமாக
அறுவடை செய்பவர்கள். 
சரி, இறைவனுக்கு என்ன
படைத்து வணங்க வேண்டும், எவ்வளவு படைக்க வேண்டும், எப்படி வணங்க வேண்டும் என்ற
கேள்வி எழுமல்லவா? அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து ”பத்ரம், புஷ்பம்,
பலம், தோயம்” என்று ஆரம்பிக்கும் அருமையான சுலோகத்தைச் சொல்கிறார். 
எவனொருவன் ஓர் இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ,
ஜலமோ இவைகளில் ஏதாவது ஒன்றை எனக்கு பக்தியுடன் தருகிறானோ அப்படி சுத்தமான
மனமுள்ளவன் பக்தியோடு கொடுத்தவைகளை நான் திருப்தியாக ஏற்றுக் கொள்கிறேன். 
உண்மையில் இறைவனுக்கு என்று எந்தத்
தேவைகளும் இல்லை. அனைத்தையும் படைக்க முடிந்தவனுக்கு என்ன தேவை தான் இருக்க
முடியும். மனிதன் தன் திருப்திக்காகவே இறைவனுக்கு எதையாவது படைத்து வணங்குகிறான்.
அவன் எதைத் தருகிறானோ அதை சுத்தமான மனதோடும், பக்தியோடும் தருவதாக இருந்தால்
மட்டுமே இறைவன் திருப்தியோடு ஏற்றுக் கொள்வான். அது விலையுயந்த பொருள்களாய் இருக்க
வேண்டியதில்லை. ஒரு பச்சிலையாகவோ, பூவாகவோ, பழமாகவோ, வெறும் நீராகவோ இருந்தால் கூட
போதும். இறைவன் அதன் மதிப்பை பணத்தை வைத்து அளப்பதில்லை. தருவதன் பின்னால்
இருக்கும் மனத்தை வைதே அளக்கிறான்.
வினோபா சொல்வார். ““ஆண்டவன் எதிரே எவ்வளவு
கொண்டு போய்க் குவித்தோம் என்பதற்கல்ல சிறப்பு. பேருக்கோ, உருவுக்கோ, பொருளின்
விலைக்கோ அங்கே மதிப்பில்லை. பாவனை ஒன்றுக்கே மதிப்பு. எதை எவ்வளவு அர்ப்பணம்
செய்தோம் என கேள்வி இல்லை. எப்படி அர்ப்பணம் செய்தோம் என்பதே கேள்வி.”
எல்லாவற்றையும் பணத்தால் மட்டும் அளக்க
முடிந்த மனிதனுக்கு மட்டுமே இந்த உண்மை விளங்காமல் இருப்பது தான் பிரச்னையே.
சாமிக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வெள்ளி மண்டபம், கட்டுக்கட்டாய் பணம் என்று
தந்தால் அவர் பிரத்யேகமாய் தன்னைக் கவனித்துக் கொள்வார் என்று பணம் சார்ந்த
வழிபாட்டுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறான்.
ஒரு அம்மாள் என்னிடம் யதார்த்தமாகவே
“எனக்கு நீ கொடு. உனக்கு நான் கண்டிப்பாக செய்கிறேன்” என்று கடவுளிடம் சொல்லி
விட்டதாக ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவித்தார். அவர் செய்வதாகச் சொன்னது
வெள்ளிக்காப்போ, வேலோ சரியாக எனக்கு நினைவில்லை. கடவுளுக்குத் தேவையானால் இவருக்கு
வேண்டியதைச் செய்து தர வேண்டும். இல்லா விட்டால் நஷ்டம் கடவுளுக்குத் தான் என்பது
போல அவர் பேச்சு இருந்தது.   
மனிதனின்
முட்டாள்தனத்திற்கு எல்லை தான் என்ன! 
அங்கமெல்லாம்
புழுதியுடன், உடம்பில் கந்தலாடையுடன், மிதியடிகள் காணாத கால்களுடன் ஸ்ரீகிருஷ்ணரைப்
பார்க்க வந்தார் குசேலர். செல்வச் செழிப்பான அரண்மனையில் தங்க சிம்மாசனத்தில்
அவருடைய பால்ய சிநேகிதன். இமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர். பாதாளத்தில் குசேலர். ஆனால்
அந்த இடைவெளி பரந்தாமனைப் பொருத்த வரை இருக்கவில்லை. ஓடோடிச் சென்று ஆரத்தழுவி,
குசேலர் கந்தலாடையில் கட்டி வைத்திருந்த அவலை அள்ளி எடுத்து சாப்பிட்டு ‘என்ன ருசி’ என்றல்லவா ஆனந்தமாக அவர் சாப்பிட்டார். ஸ்ரீகிருஷ்ணரின் அரண்மனையில் இல்லாத
பண்டங்களா? பின் அப்படியென்ன மகத்துவம் அந்த அவலில். குசேலரின் கள்ளமில்லாத
மனமும், ஆழமான அன்பும் அதில் கலந்திருந்தது தான் மகத்துவம். 
இது போல் விதுரர்
வீட்டில் சமைத்த சாமான்யக் கீரையிலும், சபரி தந்த எச்சில் பழத்திலும்
எப்படியெல்லாம் பகவான் மனம் மகிழ்ந்தார் என்று எத்தனையோ நிகழ்வுகள் பற்றிப்
படித்திருந்தாலும் மனிதர்கள் மனதில் அந்த உண்மை பதிந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை
சுத்தமான மனது தேவை என்ற ஷரத்து கீதையில் இருந்ததால், அது இல்லாததை சரிக்கட்ட
பணத்தை வைத்து ஈடுசெய்ய நினைக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. 
தருகிறேன் என்கிற எண்ணம் கூடத் தவறு என்று
பெரியோர்கள் சொல்வார்கள். அன்பு மேலிடுகிற இடத்தில் கணக்கு இருப்பதில்லை. அதனாலேயே
கர்வமும் வருவதில்லை. கணக்கு சொல்ல முடிந்தால் அந்த அன்பு சந்தேகத்திற்குரியதே. சக
மனிதர்களிடமே இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் போது இறைவனிடம் சொல்ல
வேண்டியதே இல்லை. தருவதாக பெருமையுடன் நினைத்தாலும் அது குற்றமே.  
எனவே சுத்தமான மனமும், பக்தியும் இருந்து
ஒருவர் என்ன செய்தாலும் அது தெய்வத்திற்கு உகந்த காணிக்கையே. அவை இரண்டும்
இல்லாமல் ஒருவர் எத்தனை செய்தாலும் அது விளம்பரமே!
பாதை நீளும்.....
என்.கணேசன்                        

அருமை
ReplyDeleteகீதை சுலோகங்களுக்கு எளிமையான அருமையான விளக்கம்.
ReplyDeleteஆண்டவனுக்கு தருவது பற்றி... கிருஷ்ணனின் வாழ்க்கைச் சம்பவங்களை உதாரணத்துடன் கூறியது அருமை...
ReplyDelete