Thursday, February 11, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 85



”யார் அந்த ஆள்?” என்று மைத்ரேயனிடம் அந்த வீரன் தாழ்ந்த குரலில் கேட்ட போது அக்‌ஷய் தானே அதற்குப் பதில் சொல்லி நிலைமையைச் சமாளிக்கத் தான் உடனடியாக நினைத்தான். ஆனால் அது அந்த வீரனின் வீண் சந்தேகத்தைத் தூண்ட வாய்ப்பு இருப்பதாக அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. அந்த வீரன் நேபாள மொழியில் கேட்டது என்ன என்றாவது மைத்ரேயனுக்குப் புரிந்திருக்குமா என்பது தெரியவில்லை.

ஆனால் மைத்ரேயன் குழம்பவில்லை. அந்த வீரனைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே “அப்பா” என்று நேபாள மொழியிலேயே பதில் அளித்தான். அந்த வீரன் மைத்ரேயனின் வீங்கிய கன்னத்தை கனிவுடன் வருடி விட்டு அவனை வண்டிக்குள் ஏற விட்டான்.

பின் அவன் அக்‌ஷயிடம் கஷ்டப்பட்டு பொறுமையை வரவழைத்துக் கொண்டு அறிவுரை சொன்னான். “பிள்ளையைப் பாசத்தோடு வளர்க்கப் பார். உனக்கு வயதாகும் காலத்தில் அவன் உன்னைப் பற்றி நினைக்க நல்லது நிறைய இருந்தால் தான் அப்போது உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வான்.....”

அக்‌ஷய் லேசான குற்ற உணர்ச்சியை முகத்தில் காட்டித் தலையசைத்தான். அடுத்த கணமே தூரத்தில் தெரிந்த ஆடுகளைப் பரிதாபமாகப் பார்த்துத் தன் பற்றி அந்த வீரன் கொண்டிருந்த அபிப்பிராயத்தை உறுதிப்படுத்தினான். அவர்கள் வண்டி ஏறியதைக் கண்ட குட்டி ஆடு புல்லைத் தின்பதை விட்டு வேலி அருகே வந்து நின்று கொண்டு மைத்ரேயனையே பார்த்தது. அவனைப் பார்த்து ஒரு வித்தியாசக்குரலில் ஓலமிட்டது. அதைக் கேட்ட பெரிய ஆடும் தனக்குப் பிடித்தமான புல்லை சாப்பிடுவதையும் விட்டு வேலியோரம் வந்து நின்று அவர்களையே பார்த்து நின்றது. மைத்ரேயன் அந்த ஆடுகளை அமைதியாகப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான்.

வாகனத்தின் கதவை அந்த வீரன் சாத்தி விட்டு டிரைவருக்குக் குரல் கொடுத்தான். “போகலாம்”

வாகனம் கிளம்பியது. போகும் போது கம்பியிட்ட ஜன்னல் வழியே அக்‌ஷய் அந்த ஆடுகளைப் பார்த்தான். இப்போது இரண்டு ஆடுகளுமே சேர்ந்து ஓலமிட்டன. முதலில் வேலியைக் கடந்த வேகத்தில் திரும்பிக் கடந்து வர முடியவில்லை போல் இருந்தது. சிறிது தூரம் வேலியோரமாகவே இரண்டும் ஓடி வந்தன. ஆக்‌ஷய்க்கு மனம் என்னவோ செய்தது. அவன் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அந்தப் பக்கமே திரும்பவில்லை.....

சில வினாடிகளில் அவை இரண்டும் பார்வையில் இருந்து மறைய கனத்த மனதுடன் அக்‌ஷய் திரும்பி உட்கார்ந்தான். எல்லையிலேயே அந்த ஆடுகளை விட்டுப் பிரிவது தான் திட்டமே என்றாலும் கூட இந்த இரண்டு நாட்களில் அவை நெருக்கமாக விளையாடிப் பழகியதை நினைக்கையில் சின்னதாய் ஒரு சோகத்தை அவனால் உணராமல் இருக்க முடியவில்லை. மைத்ரேயன் தான் அந்த ஆடுகளுடன் அதிக நட்பாய் இருந்தவன் என்றாலும் பிரிவில் பாதிக்கப்படாமல் அவன் இருக்க முடிந்தது, யோசித்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இல்லை. பெற்ற தாயை விட்டுப் பிரிந்து வரும் போதும் அவன் பாதிக்கப்படவில்லை..... மைத்ரேயன் திரும்பிய போது அவனுடைய வீங்கிய கன்னம் பார்வைக்கு வர அக்‌ஷய் மீண்டும் கடுமையான குற்ற உணர்ச்சிக்கு உள்ளானான். அவன் தன் மகன்களையே இது வரை ஒரு முறை கூட அடித்தவன் அல்ல. வேறு வீட்டுப் பிள்ளை, வேறு நாட்டுப் பிள்ளை, அதுவும் புத்தனின் அவதாரமாகக் கருதப்படுபவன்... மைத்ரேயனின் தாயின் கண்ணீர் மல்கிய முகம் நினைவுக்கு வந்தது. மனம் ரணமாகியது....

செல்லும் வழியில் இரண்டு இடங்களில் வாகனத்தை நிறுத்தி அந்த டிரைவரிடம் சில வீரர்கள் சில வார்த்தைகள் பேசினார்கள். நல்ல வேளையாக உள்ளே இவர்கள் இருப்பதை அந்த டிரைவர் பேச்சினூடே சொல்லவில்லை...

ராணுவ கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியை நெருங்கிய பின் அந்த வாகனத்தை பிரதான கதவு அருகே நிறுத்தி விட்டு அந்த டிரைவர் அலுவலக அறைக்குக் கையெழுத்திடச் சென்றான். அவன் அங்கு போய் வரும் வரை அக்‌ஷய் மிக எச்சரிக்கையாகவே இருந்தான். ஆனால் டிரைவர் போன வேகத்திலேயே வந்து வாகனத்தைக் கிளப்பினான். சிறிது தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு வந்து பின் கதவைத் திறந்து விட்டான். “இறங்குங்கள்”

இருவரும் இறங்கினார்கள். அவர்களிடமிருந்து வந்த நெடி அவன் மூக்கைத் துளைத்தது. அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டே அக்‌ஷயிடம் வறண்ட குரலில் சொன்னான். “இனி இது போல் முட்டாள்தனமாய் போய் விடாதீர்கள். என்ன ஏது என்று விசாரிக்காமலேயே சுட்டு விடுவார்கள். இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது. உங்கள் அதிர்ஷ்டம் என் நண்பன் கண்ணில் மட்டும் பட்டது....”

அக்‌ஷய் தலையசைத்தான்.

“தயவு செய்து வாரத்திற்கு ஒரு தடவையாவது குளியுங்கள்”

சொல்லி விட்டு அவன் வாகனத்தில் ஏறிப் போய் விட்டான். வாகனம் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு அக்‌ஷய் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு பக்கம் அடர்ந்த மரங்களும் மறுபக்கம் யாரும் இல்லாத பொட்டல்வெளியுமாகத் தான் அந்த இடம் இருந்தது. கண்கள் கலங்க அவன் மைத்ரேயனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு உடைந்த குரலில் சொன்னான். “என்னை மன்னித்து விடு மைத்ரேயா!…”

அவன் விரல்கள் மைத்ரேயனின் வீங்கிய கன்னத்தை மென்மையாக வருடின. மைத்ரேயன் புன்னகைத்தபடி தன் கையால் அக்‌ஷயின் வாயைப் பொத்தி விட்டுச் சொன்னான். “என் கன்னம் வீங்காமல் இருந்திருந்தால் அந்த வீரனுக்கு என் மேல் கருணை பிறந்திருக்காது”

அக்‌ஷய்க்கு அவன் புரிந்து கொண்டது குற்ற உணர்ச்சியை ஓரளவு குறைத்தது. அவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். “அந்த ஆள் நேபாள மொழியில் என்னை யார் என்று கேட்ட போது உனக்குப் புரியுமா என்பது சந்தேகமாய் இருந்தது...”

மைத்ரேயன் சொன்னான். “என் வீட்டுப்பக்கம் ஒரு நேபாளி நண்பன் இருக்கிறான். அவன் வீட்டுக்கு நான் போவதுண்டு. அதனால் நேபாள மொழி ஓரளவு தெரியும்....”

“நீ தடுமாறி இருந்தால் அவன் கண்டிப்பாக சந்தேகப்பட்டிருப்பான்...... நல்ல வேளை...”

”முக்கியமாக நீங்கள் எல்லையிலிருந்து உள்ளே வருவது போல் காட்டிக் கொள்ளாமல் உள்ளே இருந்து எல்லை நோக்கிப் போவது போல் காட்டியது நல்ல திட்டம். அதற்கு அந்த ஆடுகளும் உதவியாக இருந்தன....”

அவனாக அந்த ஆடுகள் பேச்சை எடுத்ததால் அக்‌ஷய் சொன்னான். “பாவம் அந்த ஆடுகள் நம்மைப் பார்த்து ஓலமிட்டன. சிறிது தூரம் வேலியோரமாகவே ஓடியும் வந்தன... நீ தான் கவனிக்கவில்லை... உன்னுடன் மிக நெருக்கமாக இருந்தனவே, விட்டு வருகையில் உனக்கு வருத்தமாகவில்லையா?”

மைத்ரேயன் சாந்தமாகப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “நம் வாழ்க்கையில் யார் எத்தனை காலம் நம்முடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது விதி தான். அவ்வப்போது சில பேரைச் சேர்க்கும், சில பேரை விலக்கும். இதில் விதி நம் அபிப்பிராயங்களை லட்சியம் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் இப்படித் தான் என்று இருக்கையில் யார் நம் வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் இருக்கும் வரை அன்பாகவும், இணக்கமாகவும் இருந்து விட்டு, அவர்கள் போகும் போது புரிதலோடு விடை கொடுப்பது தானே புத்திசாலித்தனம்....”

அக்‌ஷய்க்கு அவன் சொன்ன விதம் பிடித்திருந்தது. அறிவுக்கு எட்டும் எத்தனையோ விஷயங்கள் இதயத்தை எட்டுவதில்லை. இவனைப் பொருத்த வரை அறிவும் இதயமும் இணைந்தே செயல்படுவது போலத்தான் தெரிகிறது. அக்‌ஷயே கூட பொதுவான செயல்பாடுகளில் அப்படித்தான் என்றாலும் அன்பு, பாசம், குடும்பம் என்று வரும் போது சிறிது பலவீனமாகி விடுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.....

மைத்ரேயன் தொடர்ந்து சொன்னான். “உங்கள் திட்டமே கூட ஆடுகளை ஒரு கட்டத்தில் விட்டுப் போக வேண்டும் என்பதாக அல்லவா இருந்திருக்கும்.... “

ஆம் என்று ஒத்துக் கொண்டான் அக்‌ஷய். மைத்ரேயன் சொன்னான். “அந்த ஆடுகள் நாளையே என்னை மறந்து விடும்.....”

“ஆடுகள் சரி.... உன் தாய்?” அக்‌ஷயால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“உடன் இல்லா விட்டாலும் எங்கோ மகன் பாதுகாப்பாக இருக்கிறான் என்று என்று நினைத்து ஆறுதல் அடையலாம்....” மைத்ரேயன் அமைதி மாறாமல் சொன்னான்.

எந்தத் தாய்க்குமே அது எல்லா நேரங்களிலும் சாத்தியம் அல்ல என்பது அக்‌ஷய்க்குத் தெரியும். ஏனென்றால் அவனே சிறிய வயதில் காணமால் போனவன் தான். அவன் தாய் அந்தப் பிரிவினால் எப்படி நடைப்பிணமாய் வாழ்ந்தாள் என்பதை அறிவான். எங்கிருந்தாலும் அவன் நலமாய் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனைகளிலும், விரதங்களிலும் அவள் கழித்த விதத்தை எண்ணிப் பார்த்தான். இவன் தாயும் அப்படித் தான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது.....

மைத்ரேயன் கேட்டான் ”அந்த வீரன் நம்மை இப்படி வண்டியில் ஏற்றி அனுப்புவான் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?”

அவன் எண்ண ஓட்டத்தை திசை திருப்பத்தான் இந்தக் கேள்வியை அவன் கேட்பதாக அக்‌ஷய்க்குத் தோன்றியது. அக்‌ஷய் சொன்னான். “இதை நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஒன்றிரண்டு வித்தைகளையாவது காட்ட வேண்டி இருக்கும் என்று நினைத்திருந்தேன்.....”

தூரத்தில் ஏதோ வாகனம் வரும் சத்தம் கேட்டது. மைத்ரேயனுக்கு சமிக்ஞை செய்த அக்‌ஷய் பாதையிலிருந்து வேகமாக விலகி அருகே மரங்கள் அதிகம் இருந்த பகுதிக்கு ஓட மைத்ரேயனும் அதே வேகத்தில் பின் தொடர்ந்தான். மரங்களின் பின்னால் இருந்து பார்த்தார்கள். இராணுவ வாகனம் ஒன்று எல்லைக் காவல் பகுதிக்கு நிதானமாகச் சென்றது.

அக்‌ஷயும் மைத்ரேயனின் ஒரு அகலமான மரத்தின் கீழே அமர்ந்து கொண்டார்கள். அக்‌ஷய் தன் தோளில் சுமந்து கொண்டிருந்த பையில் ஒரு பகுதியை கத்தியால் அறுத்து ஒளித்து வைத்திருந்த ஒரு அலைபேசியை வெளியே எடுத்தான். மைத்ரேயனின் பையை வாங்கி அதிலும் ரகசியமாய் ஒளித்து வைத்திருந்த ’சிம்’மை எடுத்து அலைபேசியில் பொருத்தி விட்டு ஆசானுக்குப் போன் செய்தான்.

ஆசான் சில மாதங்களுக்கு முன் தான் இந்த ரகசிய எண்ணை உபயோகிக்க ஆரம்பித்திருந்தார். அதுவும் மிக முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே அதை அவர் பயன்படுத்தி வந்தார். சொல்லப்போனால் இந்த மூன்று மாதங்களில் அவர் அதை எட்டு முறை தான் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் லீ க்யாங் நியமித்திருந்த ஒற்றர் படை அந்த எட்டாவது முறையில் அவர் எண்ணைக் கண்டுபிடித்து விட்டது. நவீன உபகரணங்களுடன் அவர் பேசும் அனைத்தையும் ஒட்டுக் கேட்க ஏற்பாடு செய்திருந்த அந்த ஒற்றர் கூட்டம் 24 மணி நேரமும் அதன் கண்காணிப்பில் இருந்தது.

அக்‌ஷய் ஆசானின் எண்ணுக்குப் போன் செய்தவுடனேயே சின்ன அதிர்வுடன் ஒரு சிவப்பு விளக்கு அந்த உபகரணத்தில் எரிய, ஒரு ஒற்றன் விரைந்து ஒட்டுக் கேட்கத் தயாரானான்.


(தொடரும்)

என்.கணேசன்

7 comments:

  1. padikkum poothu engalukum antha pathatram thoththikolgirathu./.... arumai

    ReplyDelete
  2. அவர்கள் தப்பிக்கிற வரை டென்ஷன் ஆனேன். வாரத்திற்கு ஒரு முறையாவது குளியுங்கள் படிக்கையில் சிரித்தேன். மைத்ரேயன் வாழ்க்கையில் வருபவர்கள் பற்றி சொல்கையில் சிந்தித்தேன். அருமையான அத்தியாயம் கணேசன் சார்.

    ReplyDelete
  3. மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. அடுத்த அத்தியாயத்திற்கு இன்னும் 7நாட்கள் நீண்டு இருக்கிறது

    ReplyDelete
  4. Couldn't wait for next Thursday. If it comes in book form It will be a real success.

    ReplyDelete
  5. Awesome Anna. . .
    Thanks for sharing. . . _/\_ . . .

    ReplyDelete
  6. மைத்ரேயன் கேரக்டர் மெருகேறி வருகிறது. விதி வாழ்க்கையில் மனிதர்களை சேர்க்கும் விலக்கும் என்று சொல்கிற வார்த்தைகள் மிக அருமை.

    ReplyDelete