கீதை
காட்டும் பாதை 38
மூடர்களின் மற்ற லட்சணங்களை ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.
வீணான ஆசைகளையும், வீணான செயல்களையும்,
வீணான அறிவையும் வைத்துக் கொண்டு விவேகமற்றவர்களாய் ராக்ஷஸீம், ஆஸரீம், மோஹினீம்
என்ற தன்மைகளைக் கொண்டவர்களாகிறார்கள்.
மூடர்களின் கச்சாப் பொருள் என்ன தெரியுமா?
வீணான ஆசைகள், வீணான செயல்கள், வீணான அறிவு இந்த மூன்றும் தான். இந்த மூன்றையும்
வைத்துத் தான் தங்கள் வாழ்க்கையையும் நரகமாக்கிக் கொண்டு, மற்றவர்களையும்
துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள். தாங்களே வீணாகிப் போகிறார்கள். எது எதற்கு என்னென்ன
பலன் கிடைக்கும் என்கிற அடிப்படை ஞானம் கொண்டு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதே
விவேகம். அந்த விவேகம் இல்லாத போது தான் வீணானவற்றில் மனம், செயல், அறிவு ஆகியவை
செயல்பட ஆரம்பிக்கிறது. அதனால் உருவாகும் மூன்று வகைத் தன்மைகளை ஸ்ரீகிருஷ்ணர்
சொல்கிறார்.
ராக்ஷஸீம் என்கிற அரக்க குணம் காரணமே
இல்லாமல் பகைமை பாராட்டி அடுத்தவர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
ஆஸரீம் என்கிற அசுரகுணம் காமத்தாலும்
பேராசையாலும் உந்தப்பட்டு தன் சுயநலத்திற்காக அடுத்தவர்க்குத் துன்பம் விளைவிக்கவும்,
பிறர் பொருளை அபகரிக்கவும் முயலும் தன்மை கொண்டது.
மோஹினீம் என்ற குணம் மோகத்தின் வசப்பட்டு
துன்பம் ஏற்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டது.
இந்த மூன்று தன்மைகளாலும் எக்காலத்திலும்
நாசம் அல்லாமல் நன்மைகள் யாருக்கும் விளையப்போவதில்லை. அறிவை மங்க வைத்து, தவறான
ஆசைகளை அதிகரிக்க வைத்து, தறிகெட்டு ஓடும் செயல்களைச் செய்ய வைத்து யாருக்குத்
தான் நன்மைகள் விளைய முடியும்?
மூடர்கள் என்ன செய்வார்கள் என்று
சொல்லியாகி விட்டது. ஞானமுள்ளவர்கள் எப்படி இருப்பார்கள், என்ன செய்வார்கள் என்று
சொல்ல வேண்டும் அல்லவா? அதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
தெய்வீக இயல்புடைய மகாத்மாக்களோ எல்லா
உயிரினங்களுக்கும் மூலமாய், அழிவில்லாதவனாய் என்னை அறிந்து வேறு எதிலும்
நாட்டமில்லாத மனத்துடன் இடைவிடாது வழிபடுகிறார்கள்.
அவர்கள் இடைவிடாது என்னைப்பற்றிப் பாடிக்கொண்டும்,
கடினமான விரதங்களால் முயற்சி செய்து கொண்டும், என்னைப் பக்தியுடன் நமஸ்கரித்துக்
கொண்டும், எப்போதும் என்னுடைய தியானத்தில் நிலைத்திருந்தும் உபாசனை செய்கிறார்கள்
சிலர் ஞான யக்ஞத்தினால் என்னை
உபாசிக்கிறார்கள். சிலர் என்னை இரண்டற்ற
ஒரே தெய்வமாகவும், சிலர் வெவ்வேறு உருவங்களாகவும், சிலர் எங்கும் பரவியுள்ள என்னை
மற்றும் பல விதமாகவும் உபாசிக்கிறார்கள்.
அழிகின்ற வெளிப்புறத் தோற்றங்களில் தெரிகிற
வித்தியாசங்களையே உண்மையாக நம்பி விடாமல் அவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் மூலமான
அழிவில்லாத இறைவனை ஒவ்வொன்றிலும் அடையாளம் காண முடிந்தவனே உண்மையான ஞானி.
அழிவேயில்லாத மூலப்பொருளை உணர முடிந்தவனுக்கு அறிந்து கொள்ளவோ, வழிபடவோ வேறு என்ன
இருக்கிறது? இறைவனால் ஈர்க்கப்பட்டவனை வேறு என்ன தான் ஈர்க்க முடியும்? எனவே தெய்வீக
இயல்புள்ள மகாத்மாக்களின் நாட்டம் முழுவதும் இறைவனிடத்திலேயே இருக்கிறது.
இடைவிடாது இறைவனையே வழிபடுகிறான்.
வழிபடும் விதங்கள் அவரவர் தன்மைக்கேற்ப மாறுபடலாம்.
இறைவனைப் பாடிக் கொண்டும், இறைவனை எண்ணி விரதங்கள் இருந்து கொண்டும், இறைவனைப்
பக்தியுடன் வணங்கிக் கொண்டும், இறைவனைத் தியானித்துக் கொண்டும் வழிபடலாம்.
ஒருவருக்கு இயல்பாக லயிக்க முடிவது மற்றவர்க்கு கடினமாக இருக்கலாம். இந்த
வழிபாட்டு விதங்களில் உயர்வு தாழ்வு இல்லை.
அவர்கள் இறைவனை ஒருவனாகப் பார்க்கலாம்,
இரண்டாகப் பார்க்கலாம், இருபதாகப் பார்க்கலாம், இருநூறாகவும் பார்க்கலாம்.
யக்ஞங்களால் வழிபடலாம், ஞான மார்க்கமாகத் தியானித்து அந்த சுகானுபவத்தில்
நிலைக்கலாம். இப்படி காணும் விதங்களிலும் உயர்வு, தாழ்வு இல்லை. காணப்படும் பொருள்
இறைவனாக இருக்கும் வரையில் காணும் விதம் எதுவாகவும் இருக்கலாம். காணும் விதமும்,
வழிபடும் விதமும் ஆத்மார்த்தமாக இருக்கும் வரையில் எல்லாமே இறைவனுக்கு உகந்ததே.
இந்த சுலோகங்களில் ’இடைவிடாது’ என்பதை ஸ்ரீகிருஷ்ணர்
வலியுறுத்துவதைப் பார்க்கும் போது சிலருக்கு ஒரு யதார்த்தமான சந்தேகம் வரலாம்.
இடைவிடாது இறைவனை நினைப்பது எல்லோருக்கும் சாத்தியமா? உலக வாழ்க்கையைத் துறந்தவன்
இறைவன் நினைவாகவே இருக்க முடியும். மற்றவர்களால் முடியுமா? மெய்ஞான ஈடுபாடு
இருந்தாலும், ஆத்மார்த்தமான தேடுதல் இருந்தாலும் இல்வாழ்க்கையைத் துறக்காதவனுக்கு
இது முடிகிற காரியமா?
வாழ்க்கையைத்
துறக்காமலேயே ஒருவருக்கு இது முடிகிற காரியம் தான். செய்கின்ற எதையும் நீங்கள் இறை
மயமாக்கலாம். ஏன் வாழ்க்கையையே இறை மயமாக்கலாம்.
எப்படி என்று கேட்கிறீர்களா? வினோபா பதில் சொல்கிறார், கேளுங்கள்!
”நம்
அன்றாட வாழ்க்கையில் கழியும் ஒவ்வொரு கணமும் சாதாரணமாகத் தோன்றினாலும் உண்மையில்
அது சாதாரணமானதல்ல. அதில் பெரிய பொருள் பொதிந்திருக்கிறது. வாழ்க்கை முழுவதும் ஒரு
பெரிய யக்ஞ கர்மமே. உனது உறக்கம் என்பதென்ன? அது ஒரு சமாதி நிலை. எல்லா வகைப்
போகங்களையும் நாம் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டுத் தூங்கினால் அத்தூக்கம்
சமாதி நிலை அல்லாமல் வேறென்ன? குளிக்கும் போது புருஷ சுக்தம் சொல்லும் வழக்கம் நம்
முன்னோரிடத்தில் இருந்து வந்தது. குளியலுக்கும் புருஷ சுக்தத்திற்கும் என்ன
சம்பந்தம் என்று எண்ணிப் பாருங்கள். பார்க்க விரும்பினால் நிச்சயம் புலனாகும்”.
”ஆயிரம்
கைகளும், ஆயிரம் கண்களும் உள்ள விராட புருஷனுக்கும், உன் குளியலுக்கும் என்ன
சம்பந்தம் என்றால் நீ எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்ளும் அந்தச் செம்பு நீரில்
ஆயிரக்கணக்கான துளிகள் இருக்கின்றன. அத்துளிகள் ஆண்டவனது ஆயிரம் கைகளில் இருந்து
உன் மீது பொழியும் நீர்த்துளிகளாக எண்ணிக் கொள். இத்துளிகள் மூலமாக உன் தலையின்
உள்ளே உள்ள அழுக்கையும் சேர்ந்து ஆண்டவன் கழுவிக் கொண்டிருக்கிறான். இத்தகைய
தெய்வீக பாவனையை உன் குளியலில் புகுத்துவாயானால் அந்தக் குளியல் ஆண்டவனின் ஆசி
பொழிவது போலாகி அதில் அளவிட முடியாத சக்தி வந்து சேரும்”.
எவ்வளவு அழகாக வினோபா சொல்கின்றார்
பார்த்தீர்களா?
எல்லாவற்றிலும் இறைவனையும், இறைவனின்
செயல்பாட்டையும் உணர முடிவது மிக உயர்ந்த மெய்ஞானம். தினசரி வாழ்க்கையில் இறைவனை
சில நிமிட வழிப்பாட்டு சமாச்சாரமாக மட்டும் ஆக்கி விடாமல் ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது
ஒரு விதத்தில் மனதாரப் பற்றிக் கொண்டு இருப்போமானால் அதற்கு மேல் அடைய வேண்டிய
நிலை என்ன இருக்கிறது?
பாதை நீளும்.....
என்.கணேசன்
Arumai Anna...
ReplyDeleteThangal pathivuhalai sila naatkalaha padithukkondirukkiren migavum arumai nandri
ReplyDeleteவாழ்க்கை இறைமயமாக்க சொன்ன வழிகள் அருமை ஐயா....
ReplyDelete