Thursday, November 5, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 70



திகாலையில் இருந்தும் சேகருக்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் போட்டிருந்த பல திட்டங்களும் வந்தனா அந்தப் புகைப்படத்தைக் காட்டிக் கேட்கும் போது வருணின் எதிர்வினை எந்த விதமாய் இருக்கும் என்பதைப் பொருத்தே இருந்தன. வருண் எப்படி எடுத்துக் கொண்டால் எப்படி அணுக வேண்டும் என்று பல விதமாய் யோசித்து வைத்திருந்த அவன் அதைச் செயல்படுத்தும் அந்த முக்கிய நேரத்திற்காகப் பேராவலுடன் காத்திருந்தான். “அப்பா உயிரோடிருக்கிறாராஎன்ற ஆச்சரியம், “எப்படி?என்ற திகைப்பு, “என்ன நடந்தது?என்று அறிந்து கொள்ளும் ஆவல் மாத்திரமல்லாமல் அப்பா மீது அவநம்பிக்கை அல்லது வெறுப்பு ஆகியவற்றையும் அவன் எதிர்பார்க்காமல் இல்லை. எவனையோ அப்பாவாக ஏற்றுக் கொண்டு புகழ்ந்து கொண்டிருக்கும் அவன் இவனை முழுவதுமாய் ஏற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதையும் சேகர் உணர்ந்தே இருந்தான். ஆனால் அதை எல்லாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதையும் அவன் நன்றாக அறிவான்....

சேகர் கடிகாரத்தைப் பார்த்தான். காலை மணி ஏழு. விடுமுறை நாட்களில் வருண் வந்தனாவைப் பார்க்க வரும் நேரம் காலை எட்டு. அவர்கள் இருவரும் பெரும்பாலும் வராந்தா அல்லது ஹாலில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருப்பார்கள். அங்கு பேசுவதை ஒட்டுக்கேட்க சேகர் தயாராக இருந்தான். அவன் அவசரத்திற்கு அசராத கடிகார முள்கள் படுமந்தமாக நகர்ந்து கொண்டிருந்தன.

அவனைப் போலவே வந்தனாவும் படபடப்பில் இருந்தாள். நேரமாக நேரமாக இந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பது சரிதானா என்ற சந்தேகம் அவ்வப்போது அவள் மனதில் வந்து போனது. ஜானகியும் காலை சமையலை வேகமாக முடித்துக் கொண்டு காத்திருந்தாள். மாதவன் மட்டுமே காலை தினசரிப் பத்திரிக்கையில் மூழ்கிப் போயிருந்தார்.

எதிர் வீட்டில் இருந்து வருண் வெளியே வருவதைப் பார்த்த சேகர் பரபரப்பானான். வருண் உற்சாகத்துடன் வந்தனா வீட்டுக்குள் நுழைந்தான். வராந்தாவில் அமர்ந்திருந்த வந்தனாவைப் பார்த்தவுடன் அதீத முகமலர்ச்சியுடன் சொன்னான். “ஹாய்

பதிலுக்கு வந்தனா சொன்ன ஹாயில் உற்சாகத்தை விட படபடப்பு அதிகம் இருந்தது. டீப்பாயில் வைத்திருந்த அந்தப் புகைப்படத்தை வந்தனா ஓரக்கண்ணால் பார்த்தாள். 

அந்தப் புகைப்படத்தைக் கவனிக்காமல் வருண் கரிசனத்துடன் கேட்டான். “ஏன் வந்தனா என்னவோ மாதிரி இருக்கிறாய். உடம்பு சரியில்லையா?

“உடம்புக்கு ஒன்றும் இல்லை. உட்கார்என்று வந்தனா சொன்னாள்.

தள்ளி இருந்த நாற்காலியை மிகுந்த உரிமையுடன் அவள் அருகே இழுத்துப் போட்டு வருண் அமர்ந்தான். அமர்ந்தவன் அவர்கள் கல்லூரித் தோழி ஒருத்தியின் அக்கா திருமணத்திற்கு அவர்கள் வகுப்பு மாணவர்கள் எல்லாருமாய் சேர்ந்து எப்படிப் போகலாம், கல்யாணப்பரிசு என்ன தரலாம் என்றெல்லாம் முடிவெடுத்திருப்பது பற்றி உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தான். வந்தனாவுக்கு அவன் சொன்ன விஷயங்களில் கவனம் சுத்தமாக இருக்கவில்லை. வெறுமனே தலையசைத்து வந்த அவள் அவன் முடித்து விட்டு சிறிது நிறுத்திய போது லேசான நடுக்கத்துடன் டீப்பாயில் வைத்திருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்தாள். ஒன்றுமே சொல்லாமல் அவனிடம் நீட்டினாள்.

உற்சாகத்துடனேயே தான் வருண் அந்தப் புகைப்படத்தை வாங்கினான். ஆனால் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அவன் முகம் வெளிறியது. அவன் கைகளிலிருந்து நழுவி அந்தப் புகைப்படம் கீழே விழுந்தது.

உள்ளே எழுந்த எரிமலையைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவன் முயன்றான். அவளைத் திகைப்புடன் பார்த்துக் கேட்டான். “இது.... இது.... உனக்கு எப்படிக் கிடைத்தது?

“அதை அப்புறம் சொல்கிறேன். இதில் உன்னுடன் இருப்பது யார் வருண்?

உள்ளே எழுந்த கொந்தளிப்பில் அவன் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அவளையே அதிர்ச்சியுடன் பார்த்தான்.

வந்தனா மெல்லக் கேட்டாள். “இதில் இருப்பது உன் அப்பாவா வருண்?

அந்த வார்த்தைகளில் அவர்களுக்கு இடையே இருந்த அனைத்துமே அறுந்து போனது. அவளையே அவன் அதிர்ச்சியுடனும், வலியுடனும் வெறித்துப் பார்த்தான். அவன் முகம் சிறுத்துப் போனது. சிறிதும் எதிர்பாராத விதமாக அவள் அவனை அவமானப்படுத்தி விட்டது போல், உயிரே போகிற மாதிரி காயப்படுத்தி விட்டது போல் அவளை வெறித்துப் பார்த்தான். இந்தப் பார்வையில் பழைய வருணை அவளால் பார்க்க முடியவில்லை. ஒரு அன்னியன் போல அவளைப் பார்த்தவன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மெல்ல எழுந்தான். கடைசியாக ஒரு முறை தீராத வலியுடன் அவளைப் பார்த்துவிட்டு அங்கிருந்து வேகமாகப் போய் விட்டான்.

அந்த வலியை அவள் உணர்ந்தாள். ஏன் என்னைக் காயப்படுத்துகிறாய் என்று அவன் கண்கள் அவளைக் குற்றம் சாட்டியதை உணர்ந்தாள். நெருங்கிய நண்பனாய், அதற்கும் மேலானவனாய் உள்ளே நுழைந்தவன் ஒரு அன்னியனாய் வெளியேறியதை உணர்ந்தாள். மனம் கனத்தது. வாய் விட்டு அழத்தோன்றியது. ஆனால் மறுகணம் கோபம் வந்தது. கேட்டதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் போனது அவளை அவமானப்படுத்தியது போலிருந்தது. அவளை அலட்சியப்படுத்தி விலகியது அவன் திமிர் என்று தோன்றியது. உன் தரப்பு பதிலைச் சொல்ல வேண்டியது தானே, உண்மையை நேருக்கு நேர் சந்திப்பது தானே ஆண்மை என்று கத்திக் கேட்கத் தோன்றியது....

ஒட்டிக் கேட்க காதுகளை சுவரோடு ஒட்ட வைத்திருந்த சேகர் எந்த சத்தமும் கீழே இருந்து வராததில் ஏமாற்றமடைந்தான். என்ன தான் கீழே நடக்கிறது என்று புரியாமல் விழித்தவனுக்கு ஜானகி “என்னடி, எதுவுமே சொல்லாமல் போய் விட்டான்என்று கேட்ட போது தான் அவன் போய் விட்டான் என்பது புரிந்தது. வருண் எப்படி எல்லாம் எதிர்கொள்வான் என்று பல அனுமானங்களைச் செய்து வைத்திருந்த சேகர் இதை மட்டும் யோசித்து வைத்திருக்கவில்லை.....   


க்‌ஷய் மைத்ரேயனை அடைந்த போது மைத்ரேயன் அந்த இரண்டு ஆடுகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தான். சற்று நேரத்திற்கு முன் ஆபத்தில் இருந்து தப்பியதன் அறிகுறியே அவனிடம் இல்லை. அவன் ஓடி ஓரிடத்தில் நிற்க அந்த இரண்டு ஆடுகளும் பின் தொடர்ந்து ஓடிப் போய் அவனருகே நின்றன. அடுத்ததாய் தாய் ஆடு ஓடிப் போய் ஓரிடத்தில் நிற்க மைத்ரேயனும் குட்டி ஆடும் ஓடிப்போய் அந்தத் தாய் ஆட்டை உரசி நின்றார்கள். அக்‌ஷய் திகைப்புடன் அந்தக் காட்சியைப் பார்த்து நின்றான். ஒருசில நிமிடங்களில் அந்த விலங்குகள் மைத்ரேயனுக்கு நட்பானது அவனை வியக்க வைத்தது.  

அக்‌ஷயைப் பார்த்தவுடன் மைத்ரேயன் புன்னகைத்தான். அவன் அக்‌ஷயை நோக்கி நடந்து வர ஆடுகளும் அவனுடனேயே வந்தன.  

அக்‌ஷய் புன்னகையுடன் கேட்டான். “அதற்குள் இந்த இரண்டு ஆடுகளும் உனக்கு நட்பாகி விட்டனவா?

மைத்ரேயன் அன்பாக அந்த ஆடுகளைப் பார்த்து விட்டுத் தலையசைத்தான். அக்‌ஷய் சொன்னான். “இனி நம்மைச் சேர்ந்து யார் பார்த்தாலும் ஆபத்தே. பார்த்தவர்கள் வாயிலிருந்து தகவல் எதிரிகளிடம் எப்படியாவது போய்ச் சேர்ந்து விடும். இது வரை இந்தப் பகுதியில் நாம் சேர்ந்து யார் கண்ணிலும் படாமல் இருந்ததே நம் அதிர்ஷ்டம் தான். அதனால் சாதாரணமாக மனிதர்கள் நடமாடும் பாதைகளில் நாம் இனி செல்ல வேண்டாம்.” 

மைத்ரேயன் தலையசைத்தான். அந்தப் பாதையிலிருந்து மலைப்பகுதியில் செல்லும் கால்வழித்தடத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். ஆடுகளும் பின் தொடர்ந்தன. இனி மலை மீது ஏற ஏற மூச்சு எடுப்பது சாதாரணமானவர்களுக்கு சிரமமாகவே இருக்கும். இவன் சமாளிப்பானா என்று எண்ணியபடி மைத்ரேயனை அக்‌ஷய் பார்த்தான். அவனுக்கு இவனால் எது முடியும் எது முடியாது என்பதை இன்னமும் சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை.

செல்லும் போது இரண்டு ஆடுகளும் மைத்ரேயனை அடிக்கடி முட்டியும் உரசியும் விளையாடிக் கொண்டே வந்தன. இடையிடையே புல் சாப்பிடக் கிடைக்கும் போது தங்கி சாப்பிட்டாலும் சிறிது நேரத்திற்குள் வேகமாய் அவனை வந்து சேர்ந்து கொண்டிருந்தன. நடந்து நடந்து மைத்ரேயன் களைப்பாய் உணர ஆரம்பித்ததால் அவர்கள் ஒரு இடத்தில் களைப்பாறத் தங்கினார்கள். அங்கு சின்னதாய் ஒரு நீரோடை ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீரைக் குடித்ததோடு தங்களிடம் இருந்த பாட்டில்களிலும் நிரப்பிக் கொண்டார்கள்.

மைத்ரேயனுக்கு அருகிலேயே அந்த ஆடுகளும் இளைப்பாறின. அக்‌ஷய் சொன்னான். “நீ மனிதர்களை விட விலங்குகளிடம் சீக்கிரம் நெருங்கி விடுகிறாய். மனிதர்களை விட அதிகமாய் நீ எதையோ விலங்குகளிடம் பார்ப்பது போல் தோன்றுகிறது.

மைத்ரேயன் மெலிதாய் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “விலங்குகளிடம் இருந்து நாம் கற்க எத்தனையோ இருக்கிறது. இவை இந்தக் கணத்தில் வாழ்கின்றன. இருக்கின்ற சூழ்நிலையை வெறுப்பதோ, வேறு விதமாய் இருக்கலாமே என்று நினைப்பதோ இல்லை. வாழ்க்கை எப்படி அமைகின்றதோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு கிடைப்பதை முழுமையாக அனுபவிக்கின்றன. தங்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று ஒவ்வொரு கணமும் பயப்படுவது இல்லை. மற்ற உயிரினங்களோடு தங்களை ஒப்பிட்டு கர்வம் அடைவதோ,  வருத்தமடைவதோ இல்லை. மொத்தத்தில் தங்கள் வாழ்க்கையை விலங்குகள் ஒரு பாரமாக ஆக்கிக் கொள்வதில்லை. கூடுதல் அறிவு கொண்டவர்களாகச் சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் மட்டும் ஏன் வாழ்க்கையைப் பாரமாக்கிக் கொள்கிறார்கள்?....

மைத்ரேயன் சொன்ன வார்த்தைகளும், மிக நிதானமாய் ஆழமாய் உணர்ந்து மென்மையாய் சொன்ன விதமும் அக்‌ஷய் மனதை ஆழமாய் தொட்டன.  சிறிது சிறிதாக இவன் யார் என்பதை வெளிப்படுத்துகிறான் என்று தோன்றியது. சிறிது நேரமாவது அடுத்தது என்ன என்று யோசிக்காமல், திட்டங்கள் போடாமல், பயப்படாமல், கவலைப்படாமல் இருந்து விடவும் அமைதியாக அந்தக் கணத்தில் லயிக்கவும் தோன்றியது. அந்த நீரோடையையும், சுற்றி இருக்கும் மரம், செடி, கொடிகளையும் ரசிக்க ஆரம்பித்த போது அக்‌ஷய்க்கு எல்லாமே புதிதாகவும், பேரழகாகவும் தோன்றியது.

அந்த அமைதியான மனநிலையில் சுமார் அரை மணி நேரம் கடந்து விட அக்‌ஷய் மெல்ல எழுந்தான். “போகலாமா?

மைத்ரேயன் உடனே எழுந்தான். மறுபடி நடக்க ஆரம்பித்தார்கள். ஆடுகள் மைத்ரேயனுடன் பிணைக்கப்பட்டவை போலவே மறுபடியும் தொடர்ந்தன. மலைப் பாதையில் மேலே ஏறுவது அந்த ஆடுகளுக்கு மிக எளிதாக இருந்தது. அக்‌ஷய் அதிக சிரமம் இல்லாமல் நடந்தான். மைத்ரேயன் சற்று சிரமப்படுவது போல் தோன்றவே அவன் மறுப்பையும் பொருட்படுத்தாமல் அக்‌ஷய் அவனைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.

சுற்றிலும் உள்ள இயற்கை அழகை ரசித்துக் கொண்டே நடந்த போது திடீரென்று மைத்ரேயன் பக்கவாட்டில் ஓரிடத்தைத் திரும்பிப் பார்த்தான். சாதாரண பாறைப்பகுதியாய் தோன்றிய அந்த இடம் மைத்ரேயனின் பார்வையின் கூர்மையால் அறுபட்டது போல் இருந்து இடையே ஒரு குகை தெரிந்தது. குகையின் வாசலிலேயே உள்ளே இறங்க ஒரு படியும் தெரிந்தது. மைத்ரேயன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அந்தக் குகையும் மறைந்தது. மைத்ரேயன் பார்வை போன வழியிலேயே அவனுடனே சேர்ந்து பார்த்த காட்சி அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டவுடனேயே காணாமல் போனது அக்‌ஷயைத் திகைக்க வைத்தது. அந்த இடத்தையே மறுபடி அக்‌ஷய் கூர்ந்து பார்த்தான். இப்போது தெளிவாக பாறை மட்டும் தான் தெரிந்தது.

(தொடரும்)

என்.கணேசன்

(வாசகர்களுக்கு தீபாவளி போனஸாக வரும் திங்கட்கிழமை 9ஆம் தேதி மாலை புத்தம் சரணம் கச்சாமி 71 வலைப்பூவில் பதியப்படும்.
அன்புடன்
என்.கணேசன்)
           


19 comments:

  1. To read as a first person it is really thrilling.

    ReplyDelete
  2. மைத்ரேயரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிதர்சனமான உண்மை அண்ணா. . .

    மிக்க மகிழ்ச்சி அண்ணா தங்களின் தீபாவளி பரிசுக்கு_/\__/\_

    ReplyDelete
  3. தொடருங்கள்... தொடர்கிறோம்....

    ReplyDelete
  4. Today's session is very true and philosophical touch of human life.. Great

    ReplyDelete
  5. Hariom sir .wow.thanks sir. deepavali greetings sir to you &your family.

    ReplyDelete
  6. உங்களின் தீபாவளி போனசிற்கு நன்றிகள். அருமையான எழுத்தோட்டோம். விறுவிறுப்பாக கதை நகர்கிறது.

    ReplyDelete
  7. Dear Ganesan Sir,
    Happy Deepavali to you and to you family members!!!

    It is really Deepavali bonus to all of us. Thanks for the same.

    Thanks and regards,
    B. Sudhakar

    ReplyDelete
  8. Deepavali Bonus ku nanri! Ganeshan sir..

    ReplyDelete
  9. You have summarised the essence of Buddhism in one paragraph where Maithreyan talks about animals and humans.
    Excellent writing Mr Ganeshan.

    ReplyDelete
  10. Thank u very much sir

    ReplyDelete
  11. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்< போனஸ் பதிப்பிற்கு நன்றிகள் >

    ReplyDelete
  12. இனிய தீபாவளி பரிசு... நன்றிகள்.

    ReplyDelete
  13. சுந்தர்November 7, 2015 at 9:04 PM

    மர்மம், சாகசம், குடும்பம் ஆகியவற்றோடு தத்துவங்களையும் அழகாய் கலக்கி எழுவது தமிழில் நான் அறிந்தவரை புதுமை தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. it is very interesting and gripping as usual. I have read some of your books also. My best deepavali wishes to you and your family.

    ReplyDelete