Monday, February 9, 2015

மறுபிறவி இல்லா மகோன்னத நிலை அடைய ...


கீதை காட்டும் பாதை 35

வாழ்க்கையின் இறுதிக் கணத்தில் இறைவனை நினைக்க முடிவது எளிதில் யாருக்கும் கைகூடுகிற பாக்கியம் இல்லை என்று பார்த்தோம். வாழும் நாட்களில் இறைவனை எந்த அளவு பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அந்தக் கடைசி கணம் காட்டிக் கொடுத்து விடும்.

யோகியானவன் அந்தக் கடைசிக் கணத்திற்கு எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கிறான். வாழ்க்கை என்ற நாடகத்தில் அவனுக்குக் கிடைத்திருக்கும் வேடம் அரசனுடையதாய் இருந்தாலும், பிச்சைக்காரனுடையதாக இருந்தாலும் அவனுக்கு உண்மையில் தான் யார் என்கிற எண்ணம் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் இருக்கும். கிடைத்திருக்கிற வேடம் அரசனுடையது என்றால் அதுவாகவே தன்னை பாவித்து அகமகிழ்ந்தும், கிடைத்திருக்கிற வேடம் பிச்சைக்காரனுடையது என்றால் அதுவாகவே மாறி துக்கத்தில் உழன்றும், தன்னை மறந்து போகும் பேதைமை அவனிடத்தில் இருக்காது.  கிடைத்திருப்பது மகுடமானாலும் சரி, திருவோடானாலும் சரி முடிவில் அங்கேயே விட்டு விட்டுப் போக வேண்டியவன் அவன். அவை அவனுடையதல்ல. அந்த வேடத்தின் பொருள்கள் மட்டுமல்ல, அதன் சௌபாக்கியங்களும், பிரச்னைகளும் கூட அவனுடையதல்ல. அந்த மனப்பாங்கையே ஸ்ரீகிருஷ்ணர் பல இடங்களில் பகவத் கீதையில் வலியுறுத்துகிறார்.

ஆனால் நாடகத்தின் வேடதாரிக்கு நாடகத்திற்கு வரும் முன் கிளம்பி வந்த வீடு நினைவிருக்கிறது, தான் யார் என்ற நினைவிருக்கிறது, இரண்டு மூன்று மணி நேரங்கள் என்று நாடகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறுகிய கால அவகாசம் இருக்கிறது, நாடகம் எப்படியெல்லாம் போகும் என்று அவன் அறிவான். வாழ்க்கை நாடகத்தில் ஈடுபட்டவனுக்கு இந்த சௌகரியங்கள் இருப்பதில்லை. இந்த வேடமும், இந்த வாழ்க்கையும் தான் அவனுக்குத் தெரிந்த ஒரே நிஜமாக இருக்கிறது. இது எப்போது முடியும், முடிவதற்கு முன் என்னென்ன நிகழும் என்பதும் அவனுக்கு நிச்சயமில்லை.

அதனால் வாழ்க்கையே பல சமயங்களில் அவனுக்கு பிரச்னையாகவும், போராட்டமாகியும் விடுகிறது. தொடரின் ஆரம்பத்தில் சொன்னது போல தினம் தினம் குருட்சேத்திரத்தை அவன் சந்திக்க வேண்டி வருகிறது. மானசீக யுத்தம் செய்ய வேண்டி வருகிறது. இந்தப் போராட்டத்தை தனி மனிதனாக சந்திக்கும் திராணியை பல சமயங்களில் இழந்தும் விடுகிறான். அவனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

ஆகவே எல்லாக் காலங்களிலும் என்னையே நினைத்துக் கொண்டு யுத்தம் செய். என்னிடமே உன் மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வாயானால் என்னையே நீ அடைவாய். இதில் சந்தேகமில்லை.

மனமும் புத்தியும் எல்லாம் வல்ல இறைவனிடம் உண்மையாகவும் முழுமையாகவும் நிலைக்கும் தருணங்களில் மனிதன் இறைசக்தியுடன் தொடர்பில் இருக்கிறான். இறைசக்தியுடன் தொடர்பில் இருந்து கொண்டு செயல்படும் மனிதனால் முடியாதது என்ன இருக்க முடியும்? அப்படி நிலைத்த மனத்தையும், புத்தியையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்து விடும் பக்குவமும் அமைந்தால் அவன் முடிவில் இறைவனை அடைந்தே விடுகிறான்.   

பரம்பொருளான இறைவனை அடையும் வழியைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

எல்லாமறிந்தவனும், அநாதியானவனும் (மிகப்பழமையானவனும்), அனைத்தையும் ஆள்பவனும், அணுவைக் காட்டிலும் மிக நுட்பமானவனும், அனைத்தையும் படைத்தவனும், சிந்தனைக்கெட்டாத வடிவுடையவனும், சூரியனின் ஒளி போன்ற ஞான ஒளியுள்ளவனும், அஞ்ஞான இருளைக் கடந்தவனுமான பரம்பொருளை எவனொருவன் மரண காலத்தில் மனதை நிலைநிறுத்தி பக்தியுடன் புருவங்களின் மத்தியில் பிராணனை நிறுத்தி நன்றாக சிந்திப்பானோ அவன் அந்த ஒளிப்பிழம்பான பரம்பொருளையே அடைகிறான்.

புலன்களை அவைகளின் விஷயங்களில் செல்ல விடாமல் தடுத்து மனத்தை இதயக்கமலத்தில் நிறுத்தி தன்னுடைய பிராணனை தலை உச்சியில் நிலைநிறுத்தி யோகதாரணையை மேற்கொண்டு, பிரம்மத்தைச் சொல்லும் ஓம் என்னும் ஓர் எழுத்தைச் சொல்லிக் கொண்டும், என்னை நினைத்துக் கொண்டும் எவனொருவன் உடலை விடுகிறானோ அவன் உயர்ந்த கதியை அடைகிறான்.

எதை அதிகம் எண்ணுகிறானோ மனிதன் அதுவாகவே மாறி விட முடிந்தவன். எனவே எண்ணத்தில் இருக்கிறது சூட்சுமம். எல்லாமறிந்தவன், மிகப்பழமையானவன், அனைத்தையும் ஆள்பவன், அணுவைக் காட்டிலும் மிக நுட்பமானவன், அனைத்தையும் படைத்தவன், சிந்தனைக்கெட்டாத வடிவுடையவன், சூரியனின் ஒளி போன்ற ஞான ஒளியுள்ளவன், அஞ்ஞான இருளைக் கடந்தவன் என்பதான சிறப்பு அம்சங்கள் கொண்ட ஒப்பில்லாத பரம்பொருளை மனதில் பூரணமாய் நிரப்பி மரணத்தைச் சந்திப்பவன் பரம்பொருளையே அடைகிறான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இந்த சுலோகங்களில் புருவ மத்தியில் (ஆக்ஞா சக்ரா) பிராணனை நிலைநிறுத்துவதையும், தலை உச்சியில் (சஹஸ்ராரா சக்ரா) பிராணனை நிலைநிறுத்துவதையும், ஓம் என்ற ஓங்காரத்தை உச்சரிப்பதையும் கூட ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். ஓம் உச்சரிப்பு நம் அறிவுக்கு எட்டிய விஷயம். பிராணனை அந்தச் சக்ராவில் நிலைநிறுத்துவது யோகிகளுக்கே புரியவும்,  முடியவும் கூடிய விஷயம். அதனால் சாதாரண மனிதர்களைப் பொருத்த வரை மனதைக் கண்ட இடங்களில் சஞ்சரிக்க விடாமல் பிடித்து இழுத்து இறைவனிடம் தங்க வைப்பது ஒன்றே இறைவனை அடையப் போதுமானது.

இறைவனை அடைந்த பின் என்ன? ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
உயர்ந்த சித்தியடைந்த மகாத்மாக்கள் என்னை அடைந்த பின் துக்கத்தின் இருப்பிடமும், நிலையற்றதுமான மறுபிறவியை எடுக்க மாட்டார்கள்.

பிறப்பெடுத்த பிறகு அதிர்ஷ்டசாலியானாலும் சரி, துரதிர்ஷ்டசாலியானாலும் சரி நிலைத்த மகிழ்ச்சியை அனுபவித்து வாழ்வதில்லை. இன்பத்தோடு துன்பமும் பிணைந்து இழைக்கப்படுவதே வாழ்க்கை. மாறி மாறி இன்பதுன்பங்களால் அலைக்கழிக்கப்படும் வாழ்க்கையை துன்பத்தின் இருப்பிடம் என்றும் நிலையற்றது என்றும் கூறுகிற பகவான் தன்னை அடைந்தவர்கள் மறுபிறவி எடுக்க மாட்டார்கள் என்று உறுதி அளிக்கிறார்.

“இன்னுமோர் அன்னைக் கருப்பையூர் வாராமைக் காஎன்று பட்டினத்தார் இறைவனிடம் வேண்டுவது போல ஆசைப்படுபவர்கள் திரும்பி வராத அந்த திவ்யப் பிரதேசத்திற்குப் போய் சேர்ந்து விட வேண்டும். முன்பே சொன்னது போல் மரண காலத்தில் பரம்பொருளை நினைத்தால் போதும் என்று தப்புக் கணக்கு போட்டு விடாமல் வாழும் காலத்தில் பயற்சி செய்து பழகி அந்த இயல்பைப் பெற்றால் மட்டுமே கடைசி காலத்தில் கடவுள் நினைவுக்கு வருவார். இறைவனடி சேர முடியும்.   


எட்டாம் அத்தியாயமான அக்ஷர ப்ரம்ம யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறும் சுலோகங்கள் பிரம்மாவுக்கு ஆயிரம் யுகங்கள் ஒரு பகல், ஆயிரம் யுகங்கள் ஒரு இரவு என்கிற தகவலையும், எந்தெந்த காலங்களில் ஒரு யோகி உயிர்நீத்தால் மறுபிறவி இல்லை, எந்தெந்த காலங்களில் உயிர் நீத்தால் மறுபிறவி உண்டு என்கிற தகவல்களையும் சொல்கிறார்.

இறைவனை அடைந்தால் மறுபிறவி இல்லை என்கிற அந்த உறுதிமொழியே போதும் என்பதால் அந்தத் விளக்குவது அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

இனி அடுத்த அத்தியாயத்தில் பயணிப்போம்.

பாதை நீளும்....

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. arumaiyana pativu anna..pikka nanri ..

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை... தொடருங்கள்...

    ReplyDelete
  3. உங்கள் பதவு மிக அருமை.......பகிர்வுக்கு மிக்க நன்றி...

    மலர்

    ReplyDelete
  4. உங்கள் கட்டுரைகளை படிக்க படிக்க மாயை என்னும் புகை விலகுவதை என்னால் உணர முடிகிறது. நன்றி. தொடரட்டும் உங்கள் தொண்டு.

    ReplyDelete
  5. நன்றிங்க ஐயா

    ReplyDelete
  6. ரொம்ப எளிமையா சொல்லியிருகிங்க அருமை....

    ReplyDelete