Thursday, February 26, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 35


ரகதத்தை வீடு வரை தொடர்ந்து வந்து அந்தப் பகுதியை ஆராய்ந்து விட்டுப் போன மர்ம மனிதன் விதி தனக்கு சாதகமாக இருப்பதாக எண்ணி சந்தோஷப்பட்டான். இல்லா விட்டால் அந்த வீட்டின் எதிர் வீட்டிலேயே “To Let”  பலகை தொங்கிக் கொண்டிருந்திருக்காது. விசாரித்ததில் அந்த வீட்டில் குடியிருந்த ஒரு பெரிய குடும்பம் பத்து நாட்கள் முன்பு காலி செய்து விட்டதாகவும் இப்போது வீட்டின் கீழ் பகுதியில் மட்டும் ஒரு சிறிய குடும்பம் குடிவரப் போவதாகவும், இரண்டு அறைகள் மட்டுமே உள்ள மாடிப் பகுதி காலியாக இருக்கிறதென்றும் தெரிய வந்தது.
                                        
மறுநாள் மாலை வரை அவன் காத்திருந்து பிறகு அந்தப் பகுதி புரோக்கர் ஒருவனை சந்தித்தான். ஒரு சினிமாவுக்கு கதை வசனம் எழுத தனிமையைத் தேடி வந்திருக்கும் எழுத்தாளனாக தன்னை அவன் புரோக்கரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். கோயமுத்தூரில் அந்தப் பகுதியில் நடப்பதாக ஒரு கதை எழுதுவதாகவும், அதை அந்தப் பகுதியிலேயே இருந்து கொண்டு எழுதினால் இயல்பாக இருக்கும் என்று எண்ணுவதாகவும் சொன்னான். அதற்கு ஏற்ற ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என்று சொன்ன அவன் அந்த வீடு எப்படி இருக்க வேண்டும் என்று வர்ணித்து விட்டு வாடகை எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவன் சொன்ன போது அந்த புரோக்கர் ஆச்சரியப்பட்டான்.

இருபது வருடங்களாக அந்தத் தொழிலில் அந்த புரோக்கர் இருக்கிறான். ஆட்கள் தேடி வரும் வகையான வீடுகள் பெரும்பாலும் காலி இருப்பதில்லை. காலியாக இருக்கும் வீடுகள் ஆட்களுக்குப் பிடிப்பதில்லை. தப்பித் தவறி இரண்டும் பொருந்தி விட்டாலோ வாடகை ஒத்துப் போவதில்லை. இத்தனையையும் மீறி தொழில் நடக்கிறது என்றால் பேச்சுத் திறமையால் இரண்டு சாராரில் ஒரு சாராரை தங்கள் எதிர்பார்ப்பைக் குறைத்து விடச் செய்வதன் மூலம் தான். ஆனால் முதல் முறையாக காலியாக, தயாராகவும் இருக்கிற ஒரு வீட்டை ஒரு ஆள் தேடிக் கொண்டு வந்திருக்கிறான்.

நீங்கள் சொன்ன மாதிரியே ஒரு வீட்டில் மாடி போர்ஷன் காலி இருக்கிறது சார். இப்போது கீழ் போர்ஷனில் ஒரு சின்ன குடும்பம் வாடகைக்கு வரப் போகிறது.... வீட்டுக்காரர் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார். அதுவும் அவர் வீடு தான். எச்சில் கையால் காக்காயை ஓட்ட மாட்டார். அவ்வளவு தாராளமான ஆள்... பேச்சு மட்டும் சர்க்கரையாய் இருக்கும்.... வாடகை நாலாயிரம் சொல்கிறார். பரவாயில்லையா?

அந்த மர்ம மனிதன் தலையசைத்தான். புரோக்கர் மகிழ்ச்சியுடன் அந்த மர்ம மனிதனை அக்‌ஷய் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு அழைத்துப் போனான். அப்போது இருட்டி இருந்தது. வெளியிலேயே நின்று மாடி போர்ஷனைக் காண்பித்து விட்டுச் சொன்னான். “இது தான் வீடு”. 

வீட்டுக்காரரிடம் சாவி வாங்கிக் கொண்டு வர புரோக்கர் போன போது அந்த மர்ம மனிதனின் பார்வை அக்‌ஷய் வீட்டின் மீதே இருந்தது. வீட்டின் வெளியே யாரும் தெரியவில்லை..... 

புரோக்கர் சாவியோடு வந்தான். மாடி போர்ஷனைத் திறந்து காட்டினான். மர்ம மனிதன் வீட்டை மேலோட்டமாகவே பார்த்தான். பின் ஜன்னல் அருகே வந்து நின்று கொண்டான். ஜன்னல் வழியே எதிர் வீடு தெளிவாகத் தெரிந்தது. எதிர் வீட்டு ஹாலின் ஜன்னல் பெரிதாக இருந்தது. அது திறந்தே இருந்தது. அங்கு ஹாலில் நடப்பது இங்கிருந்து தெளிவாகவே தெரிந்தது. கையில் ஒரு பைனாகுலரும் இருந்து விட்டால் நேரில் பார்ப்பது போலவே பார்க்க முடியும்.... தற்போது அந்த ஹாலில் ஒரு சிறுவன் மட்டும் தான் தெரிந்தான். அவன் ஏதோ ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தான்.....

புரோக்கர் அருகில் வந்து நின்றான். அந்த மர்ம மனிதனுக்கு எதிர் வீட்டைப் பற்றி அவனிடம் விசாரிக்கலாமா என்று ஒரு கணம் தோன்றினாலும் பின் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். மூன்று செவிக்கு எட்டிய செய்தி மூடு மந்திரமாகாது!

“வீடு பிடித்திருக்கா சார்?புரோக்கர் கேட்டான்.

மர்ம மனிதன் பிடித்திருப்பதாகச் சொன்னான். புரோக்கர் அவனை வீட்டுக்காரரிடம் அழைத்துப் போனான்.

வாடகைக்கு வரப் போகும் ஆள் சினிமாக்காரன் என்று தெரிந்த பிறகு முதலில் புரோக்கரிடம் சொல்லி இருந்த நான்காயிரம் வாடகை குறைவாய் போனதாய் வீட்டுக்காரர் மனதிற்குள் அங்கலாய்த்துக் கொண்டார். சினிமாக்காரர்களுக்கு நான்காயிரம் எல்லாம் பிச்சைக்காசாயிற்றே, அதிகம் சொல்லி இருக்கலாமே என்று தோன்ற ஆரம்பித்தது. இது வரை வந்து பார்த்து விட்டுப் போன ஆட்கள் அந்தப் போர்ஷனுக்கு மூன்றாயிரத்துக்கு மேல் தருவது அதிகம் என்று சொல்லி விட்டுப் போனது எல்லாம் அவருக்கு மறந்து போனது.

‘எத்தனை மாதம் இருப்பீர்கள்?என்று மர்ம மனிதனைக் கேட்டார்.

“அதிக பட்சம் மூன்று மாதம்

“குறைந்த பட்சம் ஆறு மாதமாவது இருக்கிற ஆள் வந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.....வீட்டுக்காரர் இழுத்தார்.

மூன்று மாதத்தில் காலி செய்தால் கூட ஆறு மாத வாடகை கொடுத்து விட்டே போகிறேன்

வீட்டுக்காரருக்கு அதற்கு மேல் அந்த சினிமாக்காரனை எதுவும் கேட்டுத் தெரிந்து கொள்கிற அவசியம் இருப்பதாய் தோன்றவில்லை.
   
எப்போது குடி வருகிறீர்கள்?என்று கேட்டார்.

“நாளைக்கே வருகிறேன்என்றான் அந்த மர்ம மனிதன்.


க்‌ஷயை அதிகாலைப் பட்சிகளின் ஒலி எழுப்பியது. கண்விழித்தான். மைத்ரேயன் இன்னும் அமைதியான உறக்கத்தில் தான் இருந்தான். குளிர் சற்று அதிகமாகவே இருந்ததால் அவன் தாய் தந்திருந்த சால்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு அக்‌ஷயின் மடியில் படுத்திருந்தான். அக்‌ஷய் தூங்குகிற அந்தச் சிறுவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தலைமுடியை கிட்டத்தட்ட நுனி வரை வெட்டி இருந்த விதம் புத்தபிக்குச் சிறுவன் வேடத்துக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தி இருந்ததாக அக்‌ஷய் எண்ணிய அதே கணம் அந்த எண்ணம் அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. புத்தரின் மறு அவதாரம் என்று பலராலும் நினைக்கப்படுகிற அந்தச் சிறுவனின் இயல்பான உடையே இதுவாக அல்லவா இருக்க வேண்டும், இதை ஏன் வேடம் என்று நினைக்கிறோம் என்று அவன் தன்னைக் கடிந்து கொண்டான். 

அக்‌ஷய் அவனை மெல்லத் தட்டி எழுப்பினான். உடனே மைத்ரேயன் விழித்துக் கொண்டான்.

அக்‌ஷய் அவனிடம் சொன்னான். “முடிந்த வரை சீக்கிரமாகவே நாம் இங்கிருந்து போய் விடுவது நல்லது.

மைத்ரேயன் சரியென்று தலையசைத்தான். அக்‌ஷய் அவனிடம் கேட்டான். இப்போது நாம் இங்கிருந்து எப்படிப் போவது நல்லது என்று முடிவு செய்ய வேண்டும். பஸ், மினிபஸ், ஜீப் மூன்றில் பெரும்பாலும் நீ எதில் போவாயோ அதில் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். அதில் போனால் உன்னை அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளவும், நம்மை விசாரித்துக் கொண்டு வருபவர்களுக்கு அதைச் சொல்லி விடவும் வாய்ப்பு இருக்கிறது...

மைத்ரேயன் சொன்னான். “நான் எப்போதும் மினிபஸ் அல்லது பஸ்ஸில் தான் போவேன்.

முன்பே சேடாங் நகரப் பகுதிப் போக்குவரத்தைப் பற்றி முழுவிவரங்களையும் அக்‌ஷய் படித்து அறிந்திருந்தான். மைத்ரேயனை அடையாளம் கண்டுபிடிக்கும் சாத்தியமுள்ள பஸ், மினிபஸ் பயணங்களைத் தவிர்த்து விட அக்‌ஷய் தீர்மானித்தான். மிஞ்சி இருப்பது ஜீப் தான். அப்பகுதியில் ஜீப் பெரும்பாலும் தனியார் வாடகைக்கு அமர்த்திக் கொண்டு போகும் வாகனமாகவே இருந்தது. அதில் பயணிக்க கட்டணமும் அதிகம். சுற்றுலாப் பயணிகள் தனியாக ஏற்பாடு செய்து கொண்டு போகும் ஜீப்களில் இடம் காலியாக இருந்தால் அவர்கள் சம்மதத்துடன் வழியில் மற்ற பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதும் உண்டு.  அதிலும் ஆபத்து இருக்கத் தான் இருக்கிறது. குறைவான ஆட்களுடன் போகிற வாகனங்களில் ஒருவரை ஒருவர் அதிகம் கவனிக்கவும், நினைவு வைத்திருக்கவும் சாத்தியம் உண்டு. அதைத் தவிர்க்க முடியாது....

மைத்ரேயனிடம் அக்‌ஷய் சொன்னான். “ஜீப்பிலேயே போவோம்.... எங்கே போகலாம் என்று நீ சொல்

“சம்யே மடாலயம் போகலாம்.என்று உடனடியாக மைத்ரேயன் பதில் அளித்தான்.  பத்மசாம்பவாவின் உதவியால் திபெத்தில் கட்டப்பட்ட முதல் புத்த மடாலயம்.... சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒரு இடம்...

அக்‌ஷய் சந்தேகத்துடன் கேட்டான். “அது சுற்றுலாப் பயணிகள் அதிகம் போகும் இடமல்லவா? அங்கு நம்மால் மறைவாய் இருக்க முடியுமா?

முடியும் என்பது போல் மைத்ரேயன் தலையசைத்தான். அதற்கு மேல் அவன் விளக்க முற்படவில்லை. அக்‌ஷய்க்கு அவனை எந்த அளவு நம்பலாம் என்று தெரியவில்லை. சில சமயங்களில் மந்த புத்திக்காரனாகத் தெரிகிறான். சில சமயங்களில் சாதாரணமாகத் தெரிகிறான். சில சமயங்களில் எல்லாம் அறிந்தவன் போலத் தெரிகிறான். இதில் உண்மையில் இவன் எந்த வகையில் சேர்த்தி?

குன்றின் பின் புறத்திலிருந்து இருவரும் தெருவுக்கு வந்தார்கள். அப்போது நன்றாக விடிந்து விட்டிருந்தது.... 


லீ க்யாங் நினைத்தபடியே அந்த புத்தபிக்குவின் பாஸ்போர்ட்டும், கூட வந்த சிறுவனின் பாஸ்போர்ட்டும் போலி என்பது தெரிந்து விட்டது. அதோடு அவன் திபெத்தில் கேட்டிருந்த முக்கியத் தகவல்கள் அவனுக்கு விரைவாக வந்து சேர்ந்தன. சேடாங் நகர சுற்று வட்டாரத்தில் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் பிறந்திருந்த குழந்தைகள் ஏழு பேர் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் யாரும் நீண்ட தூரம் இடமாற்றமும் ஆகவில்லை. அவர்கள் புகைப்படம், குடும்பம் பற்றிய தகவல்கள், தனிப்பட்ட குணாதிசயங்கள் ஆகியவற்றை லீ க்யாங் ஆராய்ந்தான். முடிவில் அந்த ஏழு பேரில் ஆறு பேரை எந்த விதத்திலும் மைத்ரேயனாக இருக்க சாத்தியமில்லாதவர்களாக லீ க்யாங் ஒதுக்கித் தள்ளி விட்டான். ஏழாவது சிறுவனைக் கூட மைத்ரேயன் என்று அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவன் முகத்தில் ஒரு தெய்வீகக் களையோ, உடலில் வழுக்கைத் தலையன் சொன்னது போல புனிதச்சின்னம் இருப்பது போன்றோ தெரியவில்லை என்றாலும் அந்தச் சிறுவன் பற்றி கூறப்பட்டிருந்த சில விசித்திர குணாதிசயங்கள் ஒரு சாதாரண சிறுவனிடம் இருக்க முடியாதவை என்பது நிச்சயம். அவர்களில் ஒருவன் தான் மைத்ரேயன் என்றால் கண்டிப்பாக அந்த ஏழாவது சிறுவனாகத் தான் இருக்க முடியும்....! லீ க்யாங் உடனடியாக அந்தச் சிறுவனின் புகைப்படத்தையும் விலாசத்தையும் வாங் சாவொவிற்கு அனுப்பி வைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, February 25, 2015

துக்ளக்கில் என் நூல் “இங்கே நிம்மதி” விமர்சனம்!


நன்றி: துக்ளக் 04.03.2015

நூலை வாங்கிப் படிக்க பதிப்பாளரை 9600123146, 7667886991 எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
என்.கணேசன்

Monday, February 23, 2015

வாரணாசியில் நடமாடும் சிவன்!

12 மகாசக்தி மனிதர்கள்


ன்னிடம் அளவற்ற சக்திகள் இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக த்ரைலங்க சுவாமி நினைத்தவரல்ல. பொருளாசை, புகழாசை, மற்ற ஆசைகள் என அனைத்தையும் துறந்த உண்மையான துறவியாகவே அவர் வாழ்ந்தார். அதிகம் பேசாமல் மௌனமாகவே பெரும்பாலும் கழித்த அவர் பல நேரங்களில் சைகைகளிலேயே மற்றவர்களிடம் தன் கருத்தைத் தெரிவித்து வந்தார்.

த்ரைலங்க சுவாமியைப் பற்றி கேள்விப்பட்டு இராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைச் சந்திக்க வாரணாசி வந்தார். அப்போது நல்ல வெயில் காலம். த்ரைலங்க சுவாமி கங்கைக் கரையில் சுட்டெரிக்கும் மணலில் படுத்துக் கிடந்தார். செருப்பு இல்லாமல் மணலில் காலை வைக்க முடியாத நிலையில் மற்றவர்கள் இருந்த போது குளுமையில் படுத்திருப்பது போல் த்ரைலங்க சுவாமி இருந்தார். அவரிடம் இராமகிருஷ்ண பரமஹம்சர் சைகையிலேயே பேசியதாக ஒரு சுவாரசியமான சம்பவத்தை த்ரைலங்க சுவாமியின் சீடர்கள் சொல்கிறார்கள்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சுட்டு விரலைக் காட்டி பின் அடுத்த விரலையும் காட்டினாராம். அதை, ஆத்மா ஒன்று தான் என்கிற அத்வைதம் சரியா அல்லது பரமாத்மா ஜீவாத்மா என்கிற இருநிலை உள்ள த்வைதம் சரியா என்ற கேள்வியாகச் சொல்கிறார்கள்.

த்ரைலங்க சுவாமி தன் சுட்டு விரலைக் காண்பித்து அடுத்த விரலையும் காண்பித்து கடைசியில் இரு விரல்களையும் சேர்த்துக் காண்பித்தாராம். ஆத்மா ஒன்று தான். ஆனால் பக்தி பாவனையுடன் விலகி நின்று ஜீவாத்மா பரமாத்மாவை வழிபடும் போது ஒன்று இரண்டாகிறது. மறுபடி ஜீவாத்மா, பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடும் போது மீண்டும் ஒன்றாகி விடுகிறது என்கிற பதிலாக த்ரைலங்க சுவாமியின் சைகையைச் சொல்கிறார்கள்.  

த்ரைலங்க சுவாமியின் தெய்வீக சக்திகளை உணர்ந்திருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் அவரை “வாரணாசியின் நடமாடும் சிவன்என்று குறிப்பிட்டுள்ளார். சக்தி அலைகளை உணர்வதில் நிபுணரான இராமகிருஷ்ண பரமஹம்சர் த்ரைலங்க சுவாமியின் இருப்பால் வாரணாசியே தெய்வீக அலைகளில் தோய்ந்து போய் ஜொலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சைகையால் பெரிய தத்துவங்களை இராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்ற மகான்களிடம் பேசலாம். ஆனால் அந்த தத்துவங்களை சாதாரண லௌகீக மனிதர்களிடம் பேசினால் புரியுமா? த்ரைலங்க சுவாமி ஆன்மிக தத்துவங்களை லௌகீக மனிதரிடம் அபூர்வமாய் பேசிய ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

உஜ்ஜயினியின் அரசர் ஒருவர் தன் படகில் வாரணாசிக்கு யாத்திரை வந்திருந்த போது கங்கையில் மிதந்து கொண்டிருந்த த்ரைலங்க சுவாமியைக் கண்டார். அவர் ஒரு யோகி என்று முன்பே கேள்விப்பட்டிருந்த அரசர் அவரைத் தன் படகிற்கு வருமாறு அழைத்தார். த்ரைலங்க சுவாமியும் வந்தார். அரசரிடம் ரத்தினங்கள்  பதிக்கப்பட்ட ஒரு வாள் இருந்தது. அது அவருக்கு வைஸ்ராய் பரிசளித்தது. அதை அவர் தன் மிகப்பெரிய பொக்கிஷமாக நினைத்து பெருமையோடு எப்போதும் தன்னுடனேயே வைத்திருந்தார். அந்த வாளையே த்ரைலங்க சுவாமி பார்க்க  அரசர் அந்த வாளின் முக்கியத்துவத்தைச் சொல்லி அதை எடுத்து த்ரைலங்க சுவாமி கையில் தந்தார். அந்த வாளை வாங்கி ஆராய்ந்த த்ரைலங்க சுவாமி பிறகு திடீரென்று அதை கங்கையில் வீசி எறிந்தார்.

அரசர் அதிர்ந்து போனார். பிறகு அந்த வாளைத் திருப்பித் தருமாறு கெஞ்சிக் கேட்டார். த்ரைலங்க சுவாமி அசையாமல் அமைதியாக அமர்ந்திருக்க அரசர் கோபத்துடன் அவரை மிரட்டிக் கேட்டார். என்னுடைய வாளை உடனடியாகத் தராவிட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்என்றார்.

த்ரைலங்க சுவாமி கங்கையில் கையை விட்டு இரண்டு வாள்களை எடுத்தார். இரண்டும் ஒரே போல இருந்தன. “இதில் எந்த வாள் உங்களுடையதுஎன்று த்ரைலங்க சுவாமி கேட்டார். இரண்டு வாள்களும் தன்னுடைய வாள் போன்றே இருக்கவே அதில் எது தன்னுடையது என்று கண்டு பிடிக்க முடியாமல் அரசர் திணறினார்.

“உங்களுடையது என்று அவ்வளவு பெரிதாக சொல்லிக் கொள்கிறீர்கள். அதை அடையாளம் காணக் கூட உங்களால் முடியவில்லையேஎன்று த்ரைலங்க சுவாமி கேட்க அரசர் வெட்கத்துடன் தலை குனிந்தார். த்ரைலங்க சுவாமி ஒரு வாளை கங்கையில் எறிந்து விட்டு அரசரிடம் அமைதியாகச் சொன்னார். கர்மா மட்டுமே உன்னுடையது அரசனே. அதன் பலன்கள் மட்டுமே கடைசி வரை உன்னுடன் வரும். இந்த வாள் உட்பட மற்ற எதுவுமே உன்னுடையதல்ல. கடைசி வரை உன்னுடன் வரப் போவதல்ல. நேற்று வைஸ்ராயிடம் இருந்தது. இன்று உன்னிடம் இருக்கிறது. நாளை வேறொருவனிடம் போய் விடக்கூடியது.  அதனால் இது போன்ற பொருள்களைப் பெரிதாக நினைக்காமல் கடைசி வரை உன்னுடன் இருக்கப் போகிற உன் கர்மாவில் கவனமாய் இரு

அரசர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த அறிவுரை அந்த அரசருக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரையாகவே எடுத்துக் கொண்டால் நல்லதொரு மாற்றத்தை நாமும் காண முடியும்!   

ஆசைகளே பிரச்னை என்றும் அவற்றிலிருந்து விலகுவதே தீர்வு என்றும் உபதேசித்து வந்த த்ரைலங்க சுவாமி உண்மைத் துறவியாகவே கடைசி வரை வாழ்ந்த போதும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறவர்களைக் குறைவாக நினைத்ததில்லை. ஒரு முறை பரமஹம்சரின் குருவின் குருவான லாஹிரி மஹாசாயாவை மிகவும் உயர்வாக த்ரைலங்க சுவாமி கருத்து தெரிவித்தார்.

அதற்கு அவருடைய சீடர் ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். “லாஹிரி மஹாசாயா திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர். அவரை  தங்களைப் போன்ற துறவி பாராட்டுவது சரியல்ல

த்ரைலங்க சுவாமி மறுத்து சொன்னார். “இறைவன் அவரை வைத்திருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, கொடுத்திருக்கிற வேஷத்தை சரியாக செய்து கொண்டிருப்பவர் லாஹிரி மஹாசாயா. நான் உடையைக் கூட துறந்து அடைந்திருக்கிற ஆத்மஞானத்தை, குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே பெற்றிருக்கிறார் அவர்.

தன் வழியே சிறந்த வழி என்று கருதாமல் இலக்கை அடைகிற மாற்று வழியும் சிறந்த வழியே என்று தெளிவாக இருந்த த்ரைலங்க சுவாமி தன் கடைசி காலத்தை நெருங்க நெருங்க பேசுவதை யோக நித்திரையில் அதிக காலம் தங்கியிருக்க ஆரம்பித்தார். ஒரு மலைப்பாம்பு எவ்வித அசைவும் இல்லாமல் மிக நீண்ட காலம் இருப்பது போல த்ரைலங்க சுவாமியும் இருக்க ஆரம்பித்தார்.

நோய்களைக் குணப்படுத்தும் யோகி, மகாசக்திகள் கொண்ட யோகி என்றெல்லாம் அவர் புகழ் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்ததால் அவரை தரிசித்து விட்டுச் செல்ல வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. அவரை தரிசித்தே நலம் பல பெற்ற பக்தர்களில் செல்வந்தர்கள் தங்கள் காணிக்கையாக தங்க நகைகளை அவர் மீது அணிவித்தும், பணத்தை அவர் காலடியில் போட்டு விட்டும் செல்ல ஆரம்பித்தார்கள். அந்த நகைகளையும், பணத்தையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

இரவு நேரங்களில் அவர் மீது போடப்பட்டிருந்த நகைகளை சில திருடர்கள் திருடிக் கொண்டு போனார்கள். அதையும் அவர் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. யாரோ தருகிறார்கள். யாரோ எடுத்துக் கொண்டு போகிறார்கள். இந்த இரண்டுமே எனக்கு சம்பந்தமில்லாதது என்பது போல இருந்தது அவர் நிலை.

இராமகிருஷ்ண பரமஹம்சர் வர்ணித்தது போல அந்திம காலத்தில் அவரை பக்தர்கள் சிவனின் வடிவாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். சிலர் அசைவற்று கிடக்கும் அவர் மேல் தண்ணீரால் அபிஷேகம் எல்லாம் செய்து வணங்க ஆரம்பித்தார்கள். அதுவும் அவரைப் பாதிக்கவில்லை. 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் கங்கையிலேயே ஜலசமாதி அடைந்த த்ரைலங்க சுவாமியின் உண்மையான பெருமை அவர் கொண்டிருந்த மகாசக்திகளில் இல்லை, அந்த மகாசக்திகளும் மாற்றி விடாத அவருடைய மெய்ஞானத்திலும் பணிவிலும் இருந்தது என்று ஆர்வலர்கள் கருதுகிறார்கள்!

280 ஆண்டு காலம் வாழ்ந்த யோகியைப் பார்த்து விட்டோம். இனி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருப்பதாக ரஜினிகாந்த் உட்பட பலரும் நம்பும் மகா அவதார் பாபாஜியைப் பற்றி அறிந்து கொள்வோமா!

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 28.11.2014




Thursday, February 19, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 34

சேடாங் நகர எல்லையைத் தாண்டி வெளியே வந்த பின் இளைப்பாற அக்‌ஷய் ஒரு குன்றின் பின்புறத்தைத் தேர்ந்தெடுத்தான். பாதையின் ஓரத்தில் இருந்த அந்தக் குன்றின் பின்புறம், பாதையில் பயணிப்போர் கண்ணில் படாதபடி மறைவாக இருந்தது. மைத்ரேயன் நிறையவே களைத்துப் போய் இருந்ததால் அதற்கு மேலும் பயணம் செய்ய அக்‌ஷய்க்கு மனம் வரவில்லை. மைத்ரேயன் தானாய் வாய் திறந்து களைப்பாய் இருப்பதாய் சொல்லா விட்டாலும் கூட அவன் களைப்பை அக்‌ஷயால் உணர முடிந்தது. அவன் மகன் கௌதம் இதில் பாதி தூரம் கூட நடந்திருக்க மாட்டான்..... 
                              
அமைதியாக இருவரும் அமர்ந்திருந்தார்கள். மைத்ரேயன் பார்வை அந்த தூரத்து நட்சத்திரத்திலேயே இருந்தது. அவனாக ஏதாவது கேட்பான் என்று அக்‌ஷ்ய் ஆரம்பத்தில் எதிர்பார்த்தான். அந்த வயது சிறுவர்கள் யாராka இருந்திருந்தாலும் இப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில் இது வரை குறைந்தபட்சம் நூறு கேள்வியாவது கேட்டிருப்பார்கள். யாரோ ஒரு அன்னியனுடன் குடும்பத்தை விட்டு வெளியேறி வந்திருக்கும் மைத்ரேயன் அதில் சில கேள்விகளாவது கேட்டிருந்தால் தான் இயல்பாக இருந்திருக்கும்.

அக்‌ஷய் தன் பையில் மைத்ரேயனுக்காக வைத்திருந்த புத்தபிக்கு உடைகளில் ஒன்றை எடுத்து நீட்டினான். “இதை நீ உடுத்துக் கொள்

மைத்ரேயன் மௌனமாக அதை வாங்கி உடுத்திக் கொண்டான்.  உடுத்தி இருந்த உடைகளை பத்திரமாகத் தன் பையில் போட்டுக் கொண்டான். அப்போதும் ஏன் எதற்கென்ற கேள்வி இல்லை.

அவனையே அக்‌ஷய் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்க மைத்ரேயன் அவனை என்ன என்பது போலப் பார்த்தான்.

“நாம் திபெத்தை விட்டு வெளியே இந்த உடையில் தான் போகப் போகிறோம். கிட்டத்தட்ட உன்னைப் போலவே இருக்கிற ஒருவனை அழைத்துக் கொண்டு திபெத்திற்குள் புனித யாத்திரை வருபவர்கள் போல நான் நுழைந்திருக்கிறேன். போகும் போது அவனுக்குப் பதிலாக உன்னை அழைத்துப் போவது தான் திட்டம். இப்போதிருக்கும் ஆபத்தான சூழ்நிலைக்கு உடனடியாக வெளியேறுவது தான் நல்லது என்றாலும் புனித யாத்திரைக்கு வேண்டிய குறைந்த பட்ச நாட்கள் கூட தங்காமல் திரும்பிப் போனால் அவர்கள் சந்தேகப்படுவார்கள். அதனால் இரண்டு நாளாவது இங்கே எங்கேயாவது நாம் ரகசியமாய் தங்க வேண்டும்.  பலர் கண்ணில் பட்டால் அவர்கள் நம்மை எங்கே பார்த்தார்கள் என்பதை ஞாபகம் வைத்திருக்கலாம். அது பிறகு நமக்கு பிரச்னையாகலாம்.....

மைத்ரேயன் தலையசைத்தான்.

அக்‌ஷய் கூர்ந்து பார்த்துக் கொண்டே தொடர்ந்தான். “எங்கே ரகசியமாய் தங்கலாம் என்பதை நீ தான் எனக்குச் சொல்ல வேண்டும்

இப்போது மைத்ரேயன் பார்வை கூர்மையாகியது. அக்‌ஷய் விளக்கினான். “நீ அடிக்கடி எங்காவது போய் யாரும் தொந்திரவு செய்யாத இடங்களில் தங்கி விட்டு வருவதாக ஆசான் சொல்லி இருக்கிறார். நாம் போகும் வரை யார் கண்ணிலும் படாமல் இருப்பது நல்லது என்பதால் தான் உன்னைக் கேட்கிறேன்...

ஆசான் மைத்ரேயனைத் தூரத்தில் இருந்து மட்டுமே சில முறை பார்த்ததாகத் தெரிவித்திருப்பதால் மைத்ரேயனுக்கு சாதாரண முறையில் ஆசானைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனாலும் மைத்ரேயன் ஆசான் யார், அவருக்கு நான் அப்படிப் போவது எப்படித் தெரியும் என்றெல்லாம் கேட்கவில்லை.

இப்படி எந்தக் கேள்வியுமே கேட்காமல் இருக்க இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பது. யாரோ ஒரு ஆளைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சலிப்பாய் உணர்வது. இன்னொன்று எல்லாமே தெரிந்து வைத்திருப்பது. தெரிந்த ஒன்றைப் பற்றி ஏன் கேட்க வேண்டும். இதில் இவன் எந்த வகை என்று அக்‌ஷய்க்குப் புரியவில்லை.

ரகசியமாய் தங்க முடிந்த இடங்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மைத்ரேயன் பதில் சொல்வானா இல்லை புரியாதது போல் விழிப்பானா என்று அக்‌ஷயால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அதிசயமாக மைத்ரேயன் சொன்னான். “சில இடங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த இடங்களுக்கு நம்மால் நடந்து போக முடியாது. பஸ், ஜீப், அல்லது மினி பஸ்ஸில் தான் போக முடியும்... நாளை காலை தான் இதெல்லாம் கிடைக்கும்.....

அக்‌ஷய் அவனை ஆச்சரியப்பார்வை பார்த்தான். “உன்னால் இவ்வளவு வார்த்தைகள் சேர்ந்தாற்போல் பேச முடியுமா என்ன!என்கிற மாதிரியாய் அவன் பார்த்ததை மைத்ரேயன் புரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. மெள்ள கொட்டாவி விட்டான்.

அக்‌ஷய் சொன்னான். “அப்படியானால் காலை வரை நமக்கு நேரம் இருக்கிறது. அது வரை நீ வேண்டுமானால் என் மடியில் படுத்துக் கொள்

எந்தவொரு தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் மைத்ரேயன் அக்‌ஷயின் மடியில் படுத்துக் கொண்டான். சில வினாடிகளில் உறங்கியும் போனான். அக்‌ஷய்க்கு தன் மகன்கள் நினைவு வந்தது. வருணும், கௌதமும் தான் இவ்வளவு உரிமையுடன் படுத்துக் கொள்வார்கள்.... முதல் முறையாக அக்‌ஷய்க்கு அந்தச் சிறுவன் மீது இனம்புரியாத பாசம் பிறந்தது. நிலவொளியில் மைத்ரேயனையே மென்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் உட்கார்ந்தபடியே தானும் கண்ணயர்ந்தான்.  



லீ க்யாங் கவுரவிடம் அப்போது தான் பேசி முடித்திருந்தான். இது வரை புதிராக இருந்த பல விஷயங்கள் இப்போது புரிந்தன. வழுக்கைத் தலையர் மைத்ரேயர் பற்றி ஒரு புத்தகம் எழுதப் போவதாய் தலாய் லாமாவிடம் விமான நிலையத்தில் சொல்லி இருக்க வேண்டும். மைத்ரேயன் இருப்பதையே மிக ரகசியமாய் வைத்திருந்த தலாய் லாமா அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்....

அதே போல் பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி கிடைத்தவுடன் அதில் முக்கியமான ஒரு பக்கத்தை லாமாக்கள் ஒளித்து வைத்து இருக்க முடியும்  என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றவர்கள் மைத்ரேயன் யார் என்று அறியாத போது அவர்கள் மட்டும் மைத்ரேயனை அடையாளம் கண்டு வைத்திருந்தது எப்படி என்றும் இப்போது விளங்கியது.

அதே போல் மைத்ரேயன் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய நகரம் சேடாங் என்ற அனுமானத்திற்கு வழுக்கைத் தலையர் வந்த விதமும் அறிவுபூர்வமாகவே லீ க்யாங்குக்குப் பட்டது. திபெத்தின் முதல் புத்த மடாலயமான சம்யே மடாலயம், முதல் அரண்மனையான யும்பூ லாகாங், புனித குளமான லாமோ லாட்சோ மூன்றுக்கு அருகாமையில் இருக்கும் சிறப்பு நகரம் சேடாங் தான்.

மைத்ரேயனைக் காப்பற்ற இந்தியாவில் இருந்து திபெத் வந்து சேர்ந்த அந்த ரகசிய மனிதனின் திட்டம் கூட அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அந்த மனிதன் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சிந்திக்கிறான் என்பதற்கு புத்தகயாவில் கண்காணித்துக் கொண்டிருந்த ஒற்றர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அவன் தப்பித்த விதமும், இப்போது தைரியமாக ஒரு புத்த பிக்கு வேடத்தில் திபெத்தில் வந்திறங்கிய விதமுமே நல்ல உதாரணங்கள். தனியாக திபெத் போய் மைத்ரேயனோடு திரும்புவது கஷ்டம் என்று புரிந்து கொண்டவன், மைத்ரேயன் வயதும் தோற்றமும் கொண்ட ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து அவனைக் கூட்டிக் கொண்டு திபெத்திற்கு வந்து திரும்பும் போது அந்தச் சிறுவனைத் திபெத்தில் விட்டு விட்டு அவனுக்குப் பதிலாக உண்மையான மைத்ரேயனை  அழைத்துக் கொண்டு போகத் திட்டமிட்டதும் கூட லீ க்யாங்குக்கு நல்ல அறிவுக் கூர்மைக்கு அடையாளமாகவே தோன்றியது. யாருக்கும் சந்தேகம் வரக் காரணம் இல்லை. அந்த போலிச் சிறுவன் முகபாவனை காட்டிக் கொடுத்திரா விட்டால் லீ க்யாங் அந்த ரகசிய மனிதனின் திட்டத்தை அறிய மேலும் அதிக காலம் ஆகியிருக்கும்!

எல்லாம் தெளிவான பின் லீ க்யாங் காலத்தை வீணாக்கவில்லை. சேடாங் நகரத்திலும், சுற்றியுள்ள பகுதியிலும் பத்து ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதம் வளர்பிறையில் பிறந்த குழந்தைகள் பட்டியல் உடனடியாக தனக்கு வந்து சேர வேண்டும் என்று போனில் கட்டளை இட்டான். லாஸா விமான நிலையத்தில் வந்திறங்கிய புத்த பிக்கு மற்றும் சிறுவனின் பாஸ் போர்ட்களில் இருந்த விலாசங்கள் உண்மையானவை தானா என்று கண்டுபிடிக்க உத்தரவிட்டான். நூறு சதவீதம் பொய் விலாசங்களாகவே அவை இருக்க வேண்டும் என்றாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வதில் அவன் அலட்சியம் காட்ட விரும்பவில்லை. அவை பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே அந்தப் பாஸ்போர்ட்களை முடக்கி விட வேண்டும் என்று உத்தரவிட்டான்.

மைத்ரேயனைக் காப்பாற்ற வந்தவன் இன்னேரம் மைத்ரேயனை அவனது வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு போயிருக்கவும் கூடும் என்று லீ க்யாங் கணித்தான். மிக நிதானமாய் பாதம் வைத்து திபெத்தில் நுழைந்தவன் மிக வேகமாகவும் இயங்க முடிந்தவன் என்ற கணிப்புக்கு லீ க்யாங் இப்போது வந்து விட்டிருந்தான். அப்படிப் போயிருந்தால் மைத்ரேயன் இப்போது அவனுடன் தான் இருக்க வேண்டும்.... 

லீ க்யாங் மனதினுள் அந்த ரகசிய இந்தியனிடம் பேசினான். “திபெத்தில் நுழைந்த அளவுக்கு அங்கிருந்து வெளியேறுவது சுலபமல்ல ரகசிய மனிதனே. உங்கள் நாட்டு இதிகாசமான மகாபாரத யுத்தத்தில் அபிமன்யுக்கு சக்கர வியூகத்தின் உள்ளே மட்டும் தான் நுழைய முடிந்தது, உயிரோடு வெளியேற முடியவில்லை என்பதை நீ படித்திருப்பாய். உனக்கு திபெத் வெளியே செல்ல முடியாத சக்கர வியூகமாகவே இருக்கப் போகிறது

ஆனாலும் தன்னையே உயர்வாக எண்ணியும், எதிரியைப் பலம் குறைத்து எண்ணியும் ஏமாந்து விட லீ க்யாங் விரும்பவில்லை. தோற்பதற்கான நிச்சய காரணம் தலைக்கனம் என்பதை அவன் அறிவான். நீண்ட நேரம் யோசித்தான். பீஜிங்கில் இருந்து கொண்டு திபெத்தில் இயக்க முடிந்த விவகாரம் இது அல்ல என்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது.

உடனடியாக திபெத் செல்ல சீன உளவுத் துறையின் உபதலைவனான லீ க்யாங்கால் முடியாது. அவன் திபெத் விவகாரத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு மற்றவற்றை அலட்சியப்படுத்தி விட முடியாது. அதற்கு அவன் அரசாங்கம் அனுமதி தராது. சீனாவுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் பல பிரச்னைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவன் இங்கிருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் அதே சமயம் மைத்ரேயன் விவகாரம் அவன் தனிப்பட்ட பிரத்தியேக கவனம் செலுத்தி திட்டமிட்டு கையில் எடுத்துக் கொண்ட விவகாரம்....

நீண்ட யோசனைக்குப் பிறகு வாங் சாவொவிற்கு போன் செய்தான்.  “உடனடியாக திபெத்திற்குப் போ....

என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற தெளிவான கட்டளைகள் லீ க்யாங் வாங் சாவொவிற்குப் பிறப்பித்தான். எல்லா விதங்களிலும் யோசித்து வைத்திருந்த லீ க்யாங் வாங் சாவொவைப் பிரமிக்க வைத்தான்.....

(தொடரும்)
என்.கணேசன்


Monday, February 16, 2015

கங்கையில் மிதந்தும் மூழ்கியும் வாழ்ந்த யோகி!

11. மகாசக்தி மனிதர்கள்


ந்திய யோகிகளின் அபூர்வ சக்திகளின் வெளிப்பாட்டிற்கு இன்னொரு உதாரணம் த்ரைலங்க சுவாமி (Trailanga Swami ). தெலங்க சுவாமி மற்றும் கணபதி சுவாமி என்ற பெயர்களாலும் அறியப்படுகிற அவர் கிபி 1607 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் விஜயநகரம் பகுதியில் பிறந்து 1887 ஆம் ஆண்டு காசியில் சமாதி அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 280 ஆண்டு காலம் வாழ்ந்த அவரைப் பற்றி பரமஹம்ச யோகானந்தர் தன் “யோகியின் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை அவருடைய சீடர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் உமாச்சரண் முக்கோபாத்யா (Umacharan Mukhopadhay) என்ற சீடர் வங்காள மொழியில் எழுதிய வாழ்க்கை வரலாறு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அது பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

பெற்றோரின் மறைவுக்குப் பின் தன் நாற்பதாவது வயதில் துறவறம் பூண்ட த்ரைலங்க சுவாமி பின் மயானங்களிலேயே தங்கி சுமார் இருபதாண்டு காலம் கடும் சாதகம் புரிந்து அபூர்வ சக்திகள் பெற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பின் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று அந்த இடங்களிலும் தவ வாழ்க்கையைத் தொடர்ந்து தன் அபூர்வ சக்திகளை மேலும் வலிமையாக்கிக் கொண்டு உயர்ந்த மெய்ஞானத்தையும் பெற்ற அவர் கடைசியில் 1737 ஆம் ஆண்டு வாரணாசி சென்றடைந்தார். பின் அங்கேயே  150 ஆண்டு காலம் வாழ்ந்து சமாதியான அவர் வெளிப்படுத்திய மகாசக்திகளை இங்கே பார்ப்போம்.  

த்ரைலங்க சுவாமி யாசகம் செய்து உண்பதில்லை என்று உறுதியோடு இருந்ததால் ஆரம்ப கால துறவு வாழ்க்கையில் பல வாரங்கள் தொடர்ந்து பட்டினி கிடந்தவர். தனிமையில் அவர் அதிக காலம் கழித்தவர் என்பதால் அவரைத் தேடிச் சென்று கண்டுபிடித்து உணவளித்தவர்கள் ஆரம்ப காலங்களில் மிகவும் குறைவு. பருமனான உடல்வாகு கொண்டவராக இருந்த போதும் அவருக்கு உணவு அத்தியாவசியமாக இருந்ததே இல்லை. சில சமயங்களில் விஷ உணவுகளையும் உண்டு எந்த எதிர்விளைவுகளும் இல்லாமல் அவர் இருந்ததுண்டு.

முன்னூறு பவுண்டுகள் (136 கிலோகிராம்) எடைக்கும் கூடுதல் எடை கொண்ட அவர் கங்கையில் நாட்கணக்கில் மிதந்தபடி இருந்ததை அந்நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் கண்டிருக்கிறார்கள். அதைச் சிலர் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். சில நாட்கள் கங்கையின் மேற்பரப்பில் அமர்ந்திருப்பாராம். சில நாட்கள் தொடர்ந்து மூழ்கி இருப்பாராம். அதே போல கொளுத்தும் வெயிலில் ஆடைகள் எதுவுமில்லாமல் நிர்வாணமாகவே பாறைகளில் அவர் நாட்கணக்கில் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் படுத்துக் கிடப்பதும் உண்டாம். அந்தக் காட்சிகளை நேரில் கண்டிருந்த பலர் பரமஹம்ச யோகானந்தரின் காலத்தில் உயிரோடிருந்ததாக அவர் தன் “ஒரு யோகியின் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.  

ஒரு யோகி தன் தவ அமைதியில் ஆழ்ந்து கிடக்கும் போது அற்புதங்களைப் படைத்துக் காட்டும் வல்லமையைப் பெற்று விடுகிறார். இயற்கையின் விதிகளில் பலவும் யோகசக்தியின் முன் வலுவிழந்து போகின்றன என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே நல்ல உதாரணம். அப்படி இல்லை என்றால் 136 கிலோ எடைக்கும் அதிகமான ஒரு மனிதர் கங்கையில் நாட்கணக்கில் மிதக்க முடியுமா? கங்கையில் மூழ்கி மூச்சு முட்டாமல் நாட்கணக்கில் இருக்க முடியுமா? பல வாரங்கள் தொடர்ந்து உண்ணாமல் இருந்தும் உடலில் எந்த பலவீனத்தையும் உணராமல் இருக்க முடியுமா?

போலிகளையே அதிகம் கண்டிருந்ததால் உண்மையான யோகியையும் அடையாளம் காணத்தவறிய ஒரு போக்கிரி,  த்ரைலங்க சுவாமியை போலி சாமியார் என்று நினைத்தான். அவருடைய உண்மை சொரூபத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட நினைத்தான்.  வீட்டு சுவருக்குப் பூச என்று வாங்கியிருந்த சுண்ணாம்பைத் தண்ணீரில் நன்றாகக் கலக்கி எடுத்துக் கொண்டு வந்த அவன் அதை மோர் என்று சொல்லி த்ரைலங்க சுவாமிக்கு குடிக்க போலித்தனமான பயபக்தியுடன் கொடுத்தான்.

த்ரைலங்க சுவாமி அதை அமைதியாக வாங்கிக் குடித்தார். அந்த சுண்ணாம்புத் தண்ணீர் அவரையும் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக அந்த போக்கிரியின் வயிறு அந்த சுண்ணாம்புத் தண்ணீரைப் பருகியது போல எரிய ஆரம்பித்தது. தரையில் விழுந்து புரண்டு துடித்துக் கொண்டே “வயிறு கடுமையாக எரிகிறது. என்னை மன்னித்து விடுங்கள் சுவாமிஎன்று கதறினான்.  

த்ரைலங்க சுவாமி பெரும்பாலும் மௌனத்தையே அனுசரிப்பவர். ஆனால் தன் மௌனத்தைக் கலைத்து அந்த போக்கிரியிடம் அன்று சொன்னார். “எனக்கு சுண்ணாம்புத் தண்ணீரைத் தந்த போது என் உயிர் உன் உயிரோடு சம்பந்தப்பட்டது என்று நீ அறியவில்லை. ஒவ்வொரு அணுவிலும் இறைசக்தி இருப்பது போல என் வயிற்றிலும் இறைசக்தி இருப்பதை நான் உணர்ந்து நான் என்னைத் தற்காத்துக் கொண்டிருக்கா விட்டால் சுண்ணாம்புத் தண்ணீர் என் உயிரைப் பறித்திருக்கும். நீ செய்கின்ற கர்மவினையின் பலன்கள் பூமராங்க் போலக் கண்டிப்பாகத் திரும்பவும் உன்னிடத்திற்கே வரும் என்பதை இனியாவது நினைவில் வைத்துக் கொள். அடுத்தவர்க்கு தீங்கு செய்வதைத் தவிர்தன் தவறை உணர்ந்த பிறகு அந்தப் போக்கிரிக்கு வலி குறைய ஆரம்பித்தது.



த்ரைலங்க சுவாமி ஆடை ஏதும் அணியாமல் வாரணாசியில் திரிந்து கொண்டிருந்தது போலீஸாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சில மணி நேரங்களில் அவர் மறுபடியும் வாரணாசி வீதிகளில் சென்று கொண்டிருந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே சென்று சிறையைச் சோதனையிட்டார்கள். அவரைப் பூட்டி வைத்திருந்த சிறை அறையின் கதவு அப்போதும் பூட்டப்பட்டே இருந்தது. பூட்டிய சிறையில் இருந்து அவர் எப்படி தப்பித்திருக்க முடியும் என்று மூளையைக் கசக்கி யோசித்தும் போலீஸாருக்கு விடை கிடைக்கவில்லை.

மறுபடியும் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார் அவர் அறைக்கு வெளியே ஒரு காவலாளியையும் கண்காணிக்க நிறுத்தி வைத்தார்கள். அவரையே கண்காணித்துக் கொண்டிருந்த காவலாளி இரவில் சற்று கண்ணயர்ந்து பின் விழித்துப் பார்க்கையில் சிறையின் கூறையில் த்ரைலங்க சுவாமி நடந்து கொண்டிருந்தார். போலீஸார் அவரைக் கைது செய்வதில் எந்தப் பலனும் இல்லை என்பதை உணர்ந்து பின் அவரைக் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டார்கள்.

த்ரைலங்க சுவாமியின் அருகே சென்று அவரால் தொடப்பட்ட ஒருசில நோயாளிகளின் நோய் அவர் தொட்ட மாத்திரத்திலேயே குணமாகி விட அந்தச் செய்தி வேகமாக மக்களிடம் பரவ ஆரம்பத்தது. அதனால் வாரணாசி மக்கள் அல்லாமல் அக்கம்பக்க ஊர்களில் இருந்தும் பலரும் அவரைக் கண்டு செல்ல வர ஆரம்பித்தார்கள். பலரது நோய்கள் குணமாகின.

த்ரைலங்க சுவாமிகளின் யோகசக்தி வெளிப்பாடுகள் குறித்து அவரது சீடர்களும், நேரில் கண்டவர்களும் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் கட்டுக்கதைகள் அல்ல உண்மையை அடிப்படையாகக் கொண்டவையே என்று ராபர்ட் ஆர்னெட் (Robert Arnett) என்ற இக்கால அமெரிக்க எழுத்தாளர் தன் ஆய்வுக்குப் பிறகு கூறியுள்ளார். அவர் “திரை விலக்கப்பட்ட இந்தியா” (India Unveiled) என்ற நூலை எழுதியவர். 25 வருட காலத்திற்கும் மேலாக இந்தியாவின் கலை, கலாச்சாரம், மதம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

இந்த அளவுக்கு த்ரைலங்க சுவாமி மகாசக்திகளைப் பெற்றிருந்தது நம் போன்ற இக்கால மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் யோக சக்திகளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தவர்கள் ஆச்சரியப்படுவதில்லை. சுவாமி சிவானந்தர் த்ரைலங்க சுவாமியின் சக்திகளை “பூதஜயாஎன்ற யோகசக்தி வகையில் சேர்க்கிறார். பஞ்சபூதங்களையும் ஜெயித்திருக்கும் யோகசக்தி அது. ‘அந்த சக்தியை முழுமையாகப் பெற்றிருந்தவனை நெருப்பு சுடாது, தண்ணீர் மூழ்க வைக்காதுஎன்கிறார் அவர்.

(தொடரும்)
என்.கணேசன் 
நன்றி: தினத்தந்தி – 21.11.2014



Thursday, February 12, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 33


ள்ளிரவு நேரத்தில் கதவு தட்டப்பட்டது மிகவும் மெலிதாய்த் தான் என்ற போதும் மைத்ரேயனின் தாய் கலவரமடைந்தாள். அவளுடைய முதல் இரண்டு மகன்களும் திடுக்கிட்டு படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தார்கள். அவர்கள் முகத்திலும் லேசாய் பயம் தெரிந்தது. இத்தனை நாட்கள் அவர்கள் யாரும் இது போன்றதொரு பயத்தை உணர்ந்ததில்லை. இழக்க எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, யாருக்கும் அவர்கள் எதிரியும் அல்ல என்பதால் பயப்படக் காரணம் இருந்ததில்லை.  ஆனால் இப்போதோ குடும்பத்தின் இளைய மகன் மைத்ரேயன் என்பதும், அவன் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரிவிக்கப்பட்டது அச்சத்தின் விதைகளை அவர்கள் மனதில் ஊன்ற வைத்து விட்டன. வந்திருப்பது இந்தியாவில் இருந்து வந்த ஆளா இல்லை எதிரிகளா?

அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் மறுபடியும் மெலிதாகவே கதவு தட்டப்பட்டது. இந்த முறை மைத்ரேயனும் கண்விழித்தான்.

தாய் தன் மூத்த பிள்ளைகளைப் பார்க்க அவர்கள் எழுந்து கதவைத் திறக்கப் போனார்கள். தாய் தன் கடைசிப் பிள்ளையை அரவணைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். வந்திருப்பது எதிரியாக இருந்தால் அவள் உயிரை எடுக்காமல் அவள் மகனை நெருங்க முடியாது. அவள் விட மாட்டாள்.

மூத்த மகன் கதவைத் திறக்க இரண்டாம் மகன் அவனை ஒட்டியே நின்றான். வாசலில் கருணையே வடிவாக ஒரு புத்த பிக்கு நின்றிருந்தார். அவர்கள் இருவர் முகங்களிலும் தெரிந்த பயத்தை உணர்ந்த புத்த பிக்கு உடனடியாக திபெத்திய மொழியில் சொன்னார். “புனிதர் தலாய் லாமா அனுப்பி இருக்கும் நபர் நான் தான். இந்தியாவிலிருந்து வருகிறேன்

இருவர் முகத்திலும் இருந்த பயம் அகன்றது. மூத்த மகன் அவரை உள்ளே வரச் சொன்னான். அவர் உள்ளே வந்ததும் அவன் அவசரமாகக் கதவைச் சாத்தினான். உள்ளே இடம் சிறியதாய் இருந்தாலும் தட்டுமுட்டுச்சாமான்கள் நிறைய கிடந்தன. இரண்டாம் மகன் அங்கிருந்த சில சாமான்களை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு மரப்பலகையைத் துடைத்து வைத்து அவரை அமர மரியாதையுடன் சொன்னான். புத்த பிக்கு அமர்ந்தார்.

இங்கே அதிக நேரம் எங்களால் தங்க முடியாது. என்னேரமும் எதிரிகள் வந்து விடலாம். மைத்ரேயரை உடனடியாக என்னுடன் அனுப்பி வைத்தால் நல்லது

அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் தலையசைத்தார்கள். அந்த வார்த்தைகள் காதில் விழுந்தவுடன் உள்ளே இருந்த தாய் தன் கடைசி மகனைப் பார்த்தாள். அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

வீட்டின் மூத்த மகன் அந்த புத்த பிக்குவை ஆராய்ந்தான். முடிவில் அவனுக்கு தலாய் லாமா மீது கோபம் வந்தது. அவன் தம்பியைக் காப்பாற்ற இப்படி ஒரு புத்த பிக்குவை அவர் அனுப்பி வைக்கலாமா? எதிரிகளில் ஒருவன் வந்து ஒரு தட்டு தட்டினால் இந்த புத்த பிக்கு தாங்குவாரா?  

அவன் பார்த்த சந்தேகப் பார்வையின் அர்த்தம் அக்‌ஷய்க்குப் புரிந்தது. மெலிதாய் புன்னகைத்த அவனுக்கு அந்த சந்தேகத்தைப் போக்க நேரம் இல்லை என்பதால் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். “மைத்ரேயர் தயார் தானே?

மைத்ரேயரை அழைத்துக் கொண்டு தாய் முன் அறைக்கு வந்தாள். அவள் கையில் மைத்ரேயரின் ஆடைகள் வைத்திருந்த பழைய துணிப்பை இருந்தது. அவள் கண்கள் ஈரமாக இருந்தன. அவளுக்கு வணக்கம் தெரிவித்த அக்‌ஷய்  அந்தச் சிறுவனைக் கூர்ந்து பார்த்தான். புகைப்படத்தில் பார்த்தது போல தான் அந்தச் சிறுவன் நேரிலும் தெரிந்தான்.  தெய்வப்பிறவி என்பதற்கு எந்த அறிகுறியும் அவனிடம் தெரியவில்லை. சொல்லப் போனால் அவன் மகன் கௌதம் கூட இந்த மைத்ரேயனை விட இலட்சணமாக இருந்தான்.

மைத்ரேயனும் அக்‌ஷயைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அந்தப் பார்வையில் கூர்மை இருக்கவில்லை. கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் மைத்ரேயன் முகத்தில் ஒரு மந்தஹாசப் புன்னகை வந்து மறைந்தது போல் தோன்றியது நிஜமா பிரமையா என்பதை அக்‌ஷயால் ஊகிக்க முடியவில்லை. அவன் எண்ணத்தை அந்தச் சிறுவன் படித்துக் கொண்டிருந்தான் என்ற எண்ணம் பலமாக அவன் மனதில் எழுந்தது. இத்தனைக்கும் எந்த எண்ணங்களையும் அக்‌ஷய் வெளிப்பார்வைக்குக் காட்டுபவன் அல்ல. என்ன உணர்ச்சி வெளியே தெரிய வேண்டுமோ அதை மட்டுமே காட்டிப் பழக்கப் பட்டவன் அவன். அப்படி இருந்தும் அதை அந்தச் சிறுவன் படித்திருக்க முடிந்திருக்குமா?

அந்த சந்தேகத்தை அலச இப்போது அவனுக்கு நேரமில்லை என்பதால் அதை மனதில் ஒரு மூலைக்குத் தள்ளி விட்டு மைத்ரேயனின் குடும்பத்திடம் சொல்ல வேண்டி இருந்ததை அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். “இனி எந்த நேரமும் எதிரிகள் மைத்ரேயரைத் தேடி உங்கள் வீட்டுக்கு வரலாம். அப்படி வந்து கேட்கும் போது மூன்று பேரும் ஒரே மாதிரி தான் பதில் சொல்ல வேண்டும். குழப்பமோ, மாறி மாறி சொல்வதோ இருக்கக்கூடாது.

அவன் பேசிய தொனி ஒரு புத்த பிக்குவினுடையதாக இருக்கவில்லை. சகலத்தையும் முன்கூட்டியே அறிந்து அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வலிமையான மனிதனின் தொனியாக இருந்தது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அவன் விவரமாய் சொன்னதைக் கேட்கும் போதோ எல்லாமே அறிவு பூர்வமாக இருந்தது. மூவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டு தலையசைத்தார்கள்.  மைத்ரேயனின் மூத்த அண்ணன் தன் முந்தைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது.

அக்‌ஷய் எழுந்து நின்று மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் தாயின் கையில் இருந்த துணிப்பையை வாங்கிக் கொண்டு அக்‌ஷய் அருகில் வந்தான். அவன் முகத்தில் கேள்விகள் இல்லை, தயக்கம் இல்லை, துக்கம் இல்லை..... இது ஒரு அசாதாரண நிகழ்வே அல்ல என்பது போல் இருந்தது அந்தச் சிறுவனின் நடவடிக்கை.

அவன் தாய் கண்கள் தான் குளமாயின. அண்ணன்களுக்கும் அந்தக் கணத்தில் துக்கத்தைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. இளைய அண்ணன் தன் தம்பி கையில் திபெத்திய பண (Renminbi (RMB) நோட்டுகள் சிலவற்றைத் திணித்தான். அது பெரிய தொகை அல்ல என்றாலும் சிறிதாவது தம்பிக்குப் பயன்படும் என்று அவன் எண்ணினான். அதைப் பார்த்து விட்டு மூத்த அண்ணனும் சில நோட்டுகளைத் தம்பி கையில் திணித்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த தாய் கதறி அழுதாள். அண்ணன்களைப் பார்த்துப் புன்னகைத்த மைத்ரேயன் தாய் அருகே வந்து அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு அழாதே என்பது போலத் தலையசைத்தான். மகன் அப்படிச் செய்வது அந்தத் தாயின் துக்கத்தை அதிகப்படுத்தியதே ஒழிய குறைக்கவில்லை. ஆனால் அதற்கு மேல் அந்தச் சிறுவன் தாய் அருகில் நிற்கவில்லை. அண்ணன்கள் தந்த பணத்தை தன் துணிப்பையில் வைத்துக் கொண்டே அக்‌ஷய் அருகே வந்தான்.

அக்‌ஷய் அவனை அழைத்துக் கொண்டு கிளம்பும் போது அந்தத் தாய் அழுகையினூடே சொன்னாள். “என் குழந்தை எதையுமே வாய் விட்டுக் கேட்க மாட்டான். பசித்தால் கூட சொல்ல மாட்டான். நாமாய் ஏதாவது தந்தால் தான் உண்டு.....அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியவில்லை. கண்ணீர் அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்க இருகைகளையும் கூப்பி அக்‌ஷயை அவள் வணங்கி நின்றாள்.
அதைப் பார்த்த போது அக்‌ஷய்க்குத் தன் தாயின் நினைவு வந்தது. அவன் காணாமல் போன பின் மகன் வயிறு நிறைந்திருக்க வேண்டும் என்று வருடக்கணக்கில் அவள் விரதம் இருந்த விதம் நினைவுக்கு வந்தது. அவன் கண்களும் ஈரமாயின. “கவலைப்படாதீர்கள் அம்மா. உங்கள் மகன் வயதில் எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். நான் பார்த்துக் கொள்கிறேன்என்று குரல் கரகரக்கச் சொன்னான்.

மைத்ரேயனின் அண்ணன்களுக்கும் கண்ணீரைத் தவிர்க்க முடியவில்லை. அங்கே பாதிப்பே இல்லாமல் இருந்தது மைத்ரேயன் மட்டுமே. அவன் ஜன்னலுக்கு வெளியே பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மைத்ரேயனின் இளைய அண்ணன் முதல் முறையாக வாயைத் திறந்து அக்‌ஷயிடம் உருக்கமாகக் கேட்டான். “ஒரு வேளை இவன் மைத்ரேயன் இல்லை என்று தெரிய வந்தால் இவனை அப்படியே எங்காவது கைவிட்டு விட மாட்டீர்களே? இவனை எங்களிடம் மறுபடி கொண்டு வந்து விட்டு விடுவீர்கள் தானே?

அக்‌ஷய் தலை அசைத்து தைரியம் தந்தான். அவர்களுக்கும் அவன் மைத்ரேயன் தான் என்று பூரண நம்பிக்கை இல்லாமல் இருப்பது புரிந்தது... இனி தாமதிக்க நேரம் இல்லை என்று உணர்ந்தவனாக அங்கிருந்து கிளம்ப மைத்ரேயனின் கையைப் பற்றினான். மைத்ரேயனின் கை மென்மையாக இருந்தது. அவனைத் தொட்டவுடன் அக்‌ஷய் தன் நாகமச்சத்தில் ஏதோ ஒரு சிலிர்ப்பை உடனடியாக உணர்ந்தான். ஆசான் பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி பற்றி சொன்ன போது உணர்ந்த அதே சிலிர்ப்பு இப்போதும்.... பிரமையா இல்லை நிஜமா?

திகைப்புடன் மைத்ரேயனை அவன் கூர்ந்து பார்த்தான். மைத்ரேயனின் பார்வை இன்னும் அந்த நட்சத்திரத்தின் மீது தான் இருந்தது. அக்‌ஷயின் அந்தச் சிலிர்ப்பு மெள்ள அடங்கியது.  

மைத்ரேயனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அக்‌ஷய் வெளியேறினான். வெளியே குளிர் கடுமையாக இருந்தது. ஓடி வந்து மகன் மீது ஒரு பழைய சால்வையைப் போர்த்திய மைத்ரேயனின் தாய் அந்தக் கணமே தன் பாரபட்சத் தன்மையை உணர்ந்தவளாக புத்தபிக்கு உடையில் இருந்த அக்‌ஷய்க்குத் தான் போர்த்தியிருந்த நைந்து போயிருந்த சால்வையைத் தர முன் வந்தாள்.

அக்‌ஷய் புன்னகையுடன் மறுத்தான். “எனக்கு இந்தக் குளிர் பழக்கமானது தான் அம்மா

அக்‌ஷயும் மைத்ரேயனும் தெருவில் நடக்க ஆரம்பித்தார்கள். ஊரே உறங்கிக் கொண்டிருந்ததால் யாருமே தெருவில் இல்லை. சிறிது தூரம் சென்ற பின் அக்‌ஷய் திரும்பிப் பார்த்தான். மைத்ரேயனின் தாயும் அண்ணன்களும் நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பது தெரு விளக்கின் மங்கலான ஒளியில் தெரிந்தது. தாய் தன் பிள்ளைகளை விட சில அடிகள் முன்னால் நின்றிருந்தாள்.  அவள் கையை அசைத்தாள். அதைப் பார்த்த அவள் பிள்ளைகளும் கையசைத்தார்கள்.

அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் பின்னால் திரும்பிப் பார்ப்பதாய் இல்லை. அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். “உன் அம்மாவும், அண்ணாக்களும் கையசைக்கிறார்கள்

அவன் சொன்னது மைத்ரேயனைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அக்‌ஷய்க்கு அந்தச் சிறுவனின் உணர்ச்சியற்ற தன்மை பிடிக்கவில்லை. ‘மைத்ரேயனாக இருக்கிறானோ இல்லையோ குறைந்த பட்சம் மனிதனாகவாவது இருக்கலாம் என்று தோன்றியது.

மைத்ரேயன் திடீரென்று திரும்பிப் பார்த்துக் கையசைத்தான். அவன் தாயும் அண்ணன்களும் வேகமாக உணர்ச்சிகரமாகக் கையசைத்தார்கள். மைத்ரேயன் அக்‌ஷயை ஒரு முறை பார்த்து விட்டு அவனுடன் சேர்ந்து முன்னோக்கி நடக்க ஆரம்பித்தான்.

‘இந்தச் சிறுவன் முன்னால் நினைப்பது கூட ரகசியமாக இருக்காது போல் இருக்கிறதேஎன்ற எண்ணம் அக்‌ஷய்க்கு வந்து போனது. உடனே மைத்ரேயனை ஒரு முறை அவன் பார்த்துக் கொண்டான். இப்போது மைத்ரேயன் அவனைப் பார்க்கவில்லை.

அந்த நள்ளிரவில் அவர்கள் இருவரும் மௌனமாக நடந்தார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, February 9, 2015

மறுபிறவி இல்லா மகோன்னத நிலை அடைய ...


கீதை காட்டும் பாதை 35

வாழ்க்கையின் இறுதிக் கணத்தில் இறைவனை நினைக்க முடிவது எளிதில் யாருக்கும் கைகூடுகிற பாக்கியம் இல்லை என்று பார்த்தோம். வாழும் நாட்களில் இறைவனை எந்த அளவு பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அந்தக் கடைசி கணம் காட்டிக் கொடுத்து விடும்.

யோகியானவன் அந்தக் கடைசிக் கணத்திற்கு எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கிறான். வாழ்க்கை என்ற நாடகத்தில் அவனுக்குக் கிடைத்திருக்கும் வேடம் அரசனுடையதாய் இருந்தாலும், பிச்சைக்காரனுடையதாக இருந்தாலும் அவனுக்கு உண்மையில் தான் யார் என்கிற எண்ணம் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் இருக்கும். கிடைத்திருக்கிற வேடம் அரசனுடையது என்றால் அதுவாகவே தன்னை பாவித்து அகமகிழ்ந்தும், கிடைத்திருக்கிற வேடம் பிச்சைக்காரனுடையது என்றால் அதுவாகவே மாறி துக்கத்தில் உழன்றும், தன்னை மறந்து போகும் பேதைமை அவனிடத்தில் இருக்காது.  கிடைத்திருப்பது மகுடமானாலும் சரி, திருவோடானாலும் சரி முடிவில் அங்கேயே விட்டு விட்டுப் போக வேண்டியவன் அவன். அவை அவனுடையதல்ல. அந்த வேடத்தின் பொருள்கள் மட்டுமல்ல, அதன் சௌபாக்கியங்களும், பிரச்னைகளும் கூட அவனுடையதல்ல. அந்த மனப்பாங்கையே ஸ்ரீகிருஷ்ணர் பல இடங்களில் பகவத் கீதையில் வலியுறுத்துகிறார்.

ஆனால் நாடகத்தின் வேடதாரிக்கு நாடகத்திற்கு வரும் முன் கிளம்பி வந்த வீடு நினைவிருக்கிறது, தான் யார் என்ற நினைவிருக்கிறது, இரண்டு மூன்று மணி நேரங்கள் என்று நாடகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறுகிய கால அவகாசம் இருக்கிறது, நாடகம் எப்படியெல்லாம் போகும் என்று அவன் அறிவான். வாழ்க்கை நாடகத்தில் ஈடுபட்டவனுக்கு இந்த சௌகரியங்கள் இருப்பதில்லை. இந்த வேடமும், இந்த வாழ்க்கையும் தான் அவனுக்குத் தெரிந்த ஒரே நிஜமாக இருக்கிறது. இது எப்போது முடியும், முடிவதற்கு முன் என்னென்ன நிகழும் என்பதும் அவனுக்கு நிச்சயமில்லை.

அதனால் வாழ்க்கையே பல சமயங்களில் அவனுக்கு பிரச்னையாகவும், போராட்டமாகியும் விடுகிறது. தொடரின் ஆரம்பத்தில் சொன்னது போல தினம் தினம் குருட்சேத்திரத்தை அவன் சந்திக்க வேண்டி வருகிறது. மானசீக யுத்தம் செய்ய வேண்டி வருகிறது. இந்தப் போராட்டத்தை தனி மனிதனாக சந்திக்கும் திராணியை பல சமயங்களில் இழந்தும் விடுகிறான். அவனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

ஆகவே எல்லாக் காலங்களிலும் என்னையே நினைத்துக் கொண்டு யுத்தம் செய். என்னிடமே உன் மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வாயானால் என்னையே நீ அடைவாய். இதில் சந்தேகமில்லை.

மனமும் புத்தியும் எல்லாம் வல்ல இறைவனிடம் உண்மையாகவும் முழுமையாகவும் நிலைக்கும் தருணங்களில் மனிதன் இறைசக்தியுடன் தொடர்பில் இருக்கிறான். இறைசக்தியுடன் தொடர்பில் இருந்து கொண்டு செயல்படும் மனிதனால் முடியாதது என்ன இருக்க முடியும்? அப்படி நிலைத்த மனத்தையும், புத்தியையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்து விடும் பக்குவமும் அமைந்தால் அவன் முடிவில் இறைவனை அடைந்தே விடுகிறான்.   

பரம்பொருளான இறைவனை அடையும் வழியைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

எல்லாமறிந்தவனும், அநாதியானவனும் (மிகப்பழமையானவனும்), அனைத்தையும் ஆள்பவனும், அணுவைக் காட்டிலும் மிக நுட்பமானவனும், அனைத்தையும் படைத்தவனும், சிந்தனைக்கெட்டாத வடிவுடையவனும், சூரியனின் ஒளி போன்ற ஞான ஒளியுள்ளவனும், அஞ்ஞான இருளைக் கடந்தவனுமான பரம்பொருளை எவனொருவன் மரண காலத்தில் மனதை நிலைநிறுத்தி பக்தியுடன் புருவங்களின் மத்தியில் பிராணனை நிறுத்தி நன்றாக சிந்திப்பானோ அவன் அந்த ஒளிப்பிழம்பான பரம்பொருளையே அடைகிறான்.

புலன்களை அவைகளின் விஷயங்களில் செல்ல விடாமல் தடுத்து மனத்தை இதயக்கமலத்தில் நிறுத்தி தன்னுடைய பிராணனை தலை உச்சியில் நிலைநிறுத்தி யோகதாரணையை மேற்கொண்டு, பிரம்மத்தைச் சொல்லும் ஓம் என்னும் ஓர் எழுத்தைச் சொல்லிக் கொண்டும், என்னை நினைத்துக் கொண்டும் எவனொருவன் உடலை விடுகிறானோ அவன் உயர்ந்த கதியை அடைகிறான்.

எதை அதிகம் எண்ணுகிறானோ மனிதன் அதுவாகவே மாறி விட முடிந்தவன். எனவே எண்ணத்தில் இருக்கிறது சூட்சுமம். எல்லாமறிந்தவன், மிகப்பழமையானவன், அனைத்தையும் ஆள்பவன், அணுவைக் காட்டிலும் மிக நுட்பமானவன், அனைத்தையும் படைத்தவன், சிந்தனைக்கெட்டாத வடிவுடையவன், சூரியனின் ஒளி போன்ற ஞான ஒளியுள்ளவன், அஞ்ஞான இருளைக் கடந்தவன் என்பதான சிறப்பு அம்சங்கள் கொண்ட ஒப்பில்லாத பரம்பொருளை மனதில் பூரணமாய் நிரப்பி மரணத்தைச் சந்திப்பவன் பரம்பொருளையே அடைகிறான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இந்த சுலோகங்களில் புருவ மத்தியில் (ஆக்ஞா சக்ரா) பிராணனை நிலைநிறுத்துவதையும், தலை உச்சியில் (சஹஸ்ராரா சக்ரா) பிராணனை நிலைநிறுத்துவதையும், ஓம் என்ற ஓங்காரத்தை உச்சரிப்பதையும் கூட ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். ஓம் உச்சரிப்பு நம் அறிவுக்கு எட்டிய விஷயம். பிராணனை அந்தச் சக்ராவில் நிலைநிறுத்துவது யோகிகளுக்கே புரியவும்,  முடியவும் கூடிய விஷயம். அதனால் சாதாரண மனிதர்களைப் பொருத்த வரை மனதைக் கண்ட இடங்களில் சஞ்சரிக்க விடாமல் பிடித்து இழுத்து இறைவனிடம் தங்க வைப்பது ஒன்றே இறைவனை அடையப் போதுமானது.

இறைவனை அடைந்த பின் என்ன? ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
உயர்ந்த சித்தியடைந்த மகாத்மாக்கள் என்னை அடைந்த பின் துக்கத்தின் இருப்பிடமும், நிலையற்றதுமான மறுபிறவியை எடுக்க மாட்டார்கள்.

பிறப்பெடுத்த பிறகு அதிர்ஷ்டசாலியானாலும் சரி, துரதிர்ஷ்டசாலியானாலும் சரி நிலைத்த மகிழ்ச்சியை அனுபவித்து வாழ்வதில்லை. இன்பத்தோடு துன்பமும் பிணைந்து இழைக்கப்படுவதே வாழ்க்கை. மாறி மாறி இன்பதுன்பங்களால் அலைக்கழிக்கப்படும் வாழ்க்கையை துன்பத்தின் இருப்பிடம் என்றும் நிலையற்றது என்றும் கூறுகிற பகவான் தன்னை அடைந்தவர்கள் மறுபிறவி எடுக்க மாட்டார்கள் என்று உறுதி அளிக்கிறார்.

“இன்னுமோர் அன்னைக் கருப்பையூர் வாராமைக் காஎன்று பட்டினத்தார் இறைவனிடம் வேண்டுவது போல ஆசைப்படுபவர்கள் திரும்பி வராத அந்த திவ்யப் பிரதேசத்திற்குப் போய் சேர்ந்து விட வேண்டும். முன்பே சொன்னது போல் மரண காலத்தில் பரம்பொருளை நினைத்தால் போதும் என்று தப்புக் கணக்கு போட்டு விடாமல் வாழும் காலத்தில் பயற்சி செய்து பழகி அந்த இயல்பைப் பெற்றால் மட்டுமே கடைசி காலத்தில் கடவுள் நினைவுக்கு வருவார். இறைவனடி சேர முடியும்.   


எட்டாம் அத்தியாயமான அக்ஷர ப்ரம்ம யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறும் சுலோகங்கள் பிரம்மாவுக்கு ஆயிரம் யுகங்கள் ஒரு பகல், ஆயிரம் யுகங்கள் ஒரு இரவு என்கிற தகவலையும், எந்தெந்த காலங்களில் ஒரு யோகி உயிர்நீத்தால் மறுபிறவி இல்லை, எந்தெந்த காலங்களில் உயிர் நீத்தால் மறுபிறவி உண்டு என்கிற தகவல்களையும் சொல்கிறார்.

இறைவனை அடைந்தால் மறுபிறவி இல்லை என்கிற அந்த உறுதிமொழியே போதும் என்பதால் அந்தத் விளக்குவது அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

இனி அடுத்த அத்தியாயத்தில் பயணிப்போம்.

பாதை நீளும்....

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, February 5, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 32



வுரவ் கையில் துப்பாக்கியைப் பார்த்த போது சந்திரகாந்த் முகர்ஜிக்கு ஒரு கணம் எதுவுமே புரியவில்லை. குழப்பத்துடன் அவனைப் பார்த்தார்.

அவன் கைத்துப்பாக்கியை அவர் நெஞ்சுக்கு நேராக குறி வைத்தபடி சொன்னான். அந்த ரகசியத்தை அறிய உங்கள் புத்தகம் வரும் வரை காத்திருக்கும் பொறுமை எனக்கு இல்லை... எனக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும்”.

அவன் முகத்திலும், குரலிலும் கடுமை தெரிந்த போதிலும் கூட அவர் தங்களைப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் வீடியோ காமிராக்களைப் பார்த்த போது அவருக்குப் பெரிதுபடுத்தத் தோன்றவில்லை. யாராவது காமிராக்களின் முன்பே இந்த மாதிரி செய்வார்களா?என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அதனால் உடனேயே சந்திரகாந்த் முகர்ஜி அவன் தன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சுவாரசியம் ஏற்படுத்தத் தான் இப்படி ஏதோ நடிக்கிறான் என்று நினைத்துக் கொண்டு விட்டார். ‘இந்த டிவிகாரர்கள் தங்கள் சீரியல்களின் ரேட்டிங் அதிகப்படுத்த என்னவெல்லாம் நாடகம் போடுகிறார்கள் என்று எண்ணி புன்னகையும் செய்தார்.

அவன் உணர்ச்சியே இல்லாமல் அவரைக் கூர்ந்து பார்த்தான். என்ன இந்தக் கிறுக்கன் சிரிக்கிறான்என்று அவனுக்கு உள்ளூர கோபமும் வந்தது. உடனே துப்பாக்கியை வலது கால் முட்டிக்குக் குறி பார்த்தபடி கேட்டான். “எவ்வளவு வலி தாங்குவீர்கள்?

அவன் கை விரல் துப்பாக்கியின் விசையில் தயாராக இருந்ததும் அவன் முகத்தில் குரூரமாய் ஒரு வன்மம் தெரிந்ததும் சந்திரகாந்த் முகர்ஜியை திகைக்க வைத்தன. லேசாக எழ ஆரம்பித்த பயத்தை மறைத்துக் கொண்டு அவர் பதட்டத்துடன் கேட்டார். “நீங்கள் தமாஷ் செய்கிறீர்களா?

கவுரவ் மெல்ல கேட்டான். “சுட்டால் தான் நம்புவீர்களா?அவன் கைவிரல் துப்பாக்கி விசையின் மேலும் அழுத்தம் தர ஆரம்பித்தது. அவன் எந்த தயக்கமும் இல்லாமல் அவர் முட்டியைப் பெயர்த்து விடுவான் என்பது நிதர்சனமாகப் புரிந்த போது அவர் பீதி அடைய ஆரம்பித்தார். வந்திருப்பவன் டிஸ்கவரி சேனல் ஆசாமி அல்ல என்ற செய்தி மூளைக்கு எட்டியது. பின் யார்? எதற்காக மைத்ரேயர் பற்றிய விவரங்களைப் புத்தகத்தில் வருவதற்கு முன்பே அறிய ஆசைப்படுகிறான் என்ற கேள்விகள் மனதினுள் எழ பயத்துடன் மெல்ல கேட்டார். “எதற்காக நான் கண்டு பிடித்த விஷயங்களை இப்போதே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள்?

இங்கே கேள்வி நான் மட்டும் தான் கேட்பேன். பதில் வரா விட்டால் உடம்பில் ஒவ்வொரு இடமாக குறி பார்த்து சுட ஆரம்பிப்பேன். ஆரம்பத்தில் உயிர் போகாத இடமாய் பார்த்து தான் சுடுவேன். அதனால் உடனேயே உயிர் போய் விடுமோ என்று பயப்பட வேண்டாம்... சுட ஆரம்பிக்கட்டுமா, இல்லை சொல்ல ஆரம்பிக்கிறீர்களா?

மைத்ரேயர் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி வைத்த பத்மசாம்பவா மைத்ரேயர் பற்றி ஆராய்பவர்களுக்கும் ஆபத்து என்பதை சங்கேத வார்த்தைகளில் எழுதி வைத்திருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் அந்த வரலாற்று ஆராய்ச்சியாளருக்கு அந்த நேரத்திலும் வந்தது. உயிருக்கு மிஞ்சி என்ன இருக்கிறது என்று நினைத்தவராக குரல் நடுங்க கேட்டார். “சொல்லி விடுகிறேன். சொன்னால் என்னை விட்டு விடுவீர்கள் அல்லவா?

“விட்டு விடுவேன். தனிப்பட்ட முறையில் உங்களுடன் எனக்கு எந்த விரோதமும் இல்லையே”  என்று நம்பிக்கை ஏற்படுத்தும் தொனியில் கவுரவ் சொன்னான். சந்திரகாந்த் முகர்ஜியின் பேச்சை அனுபவித்தவன் என்பதால் “சொல்வதை சுருக்கமாகச் சொன்னால் சீக்கிரம் போய் விடுவேன்என்பதை சேர்த்துச் சொன்னான்.

தன் இரண்டு வருட உழைப்பின் பலனை துப்பாக்கி முனையில் பயமுறுத்திக் கேட்கிறானே இந்த அயோக்கியன் என்று தனக்குள் புலம்பிய சந்திரகாந்த் முகர்ஜி அவன் சீக்கிரமாக இங்கிருந்து போனால் போதும் என்று நினைத்தவராக கஷ்டப்பட்டு சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார். “பத்மசாம்பவா மர்ம முடிச்சுகளுடன் சொன்னது இது தான். “மைத்ரேயர் திபெத்திய பூமியில் முதல் மடாலயம்,  முதல் அரண்மனை, புனித குளம் லாமோ லாட்சோ என்ற மூன்றுக்கும் அருகே உள்ள இடத்தில் ஜனனம் எடுப்பார். அவர் உடலில் புனிதச் சின்னம் இருக்கும்....

கவுரவ் திபெத்திய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை அறிந்தவன் அல்ல. லீ கியாங் கண்டிப்பாக அறிந்திருக்கலாம் என்றாலும் சந்திரகாந்த் முகர்ஜி வாயாலேயே அதை அறிந்து கொள்ள நினைத்து கேட்டான். “அந்த மூன்றுக்கும் அருகே மைத்ரேயர் பிறந்திருக்கும் இடம் என்ன?

இந்த நாசமாய் போனவனிடம் சொல்ல வேண்டி வந்து விட்டதே என்று நொந்தவராக சந்திரகாந்த் முகர்ஜி சொன்னார். “சேடாங்காக தான் இருக்க வேண்டும்

“பிறந்திருக்கும் ஊர் பெயர் தெரிந்து விட்டால் போதுமா? அங்கே மைத்ரேயரை எப்படிக் கண்டுபிடிப்பது?”  கவுரவ் கேட்டான்.

சந்திரகாந்த் முகர்ஜி சொன்னார். “சுமார் 52000 மட்டுமே ஜனத்தொகை இருக்கும் சின்ன ஊரில் பத்து வருடங்களுக்கு முன்னால் மார்கழி மாதத்தில் வளர்பிறை காலத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்திருக்கப் போகிறார்கள்? அப்படி பிறந்த குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் உடலில் புனிதச் சின்னம் இருக்க முடியும்?

அவர் சொன்னது சரியென்றே அவனுக்குத் தோன்றியது. உடனே அடுத்த சந்தேகம் எழுந்தது. “அங்கே பிறந்திருக்கும் குழந்தை அங்கேயே வளர்ந்து கொண்டிருக்கும் என்பது எப்படி நிச்சயம்?

“பத்மசாம்பவா அந்த பூமியிலேயே தான் மைத்ரேயர் வளர்ந்து வருவார் என்று சொல்லி இருக்கிறார். அதனால் மைத்ரேயர் அங்கேயே தான் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்...

“நீங்கள் மைத்ரேயரை நேரில் சந்திக்க முயற்சி செய்திருக்கிறீர்களா?

“போக வேண்டும், அவரைக் கண்டுபிடித்து என் புத்தகத்தில் அவர் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்....

கவுரவ் துப்பாக்கியை அவர் நெற்றிப் பொட்டைக் குறி வைத்தபடி அமைதியாகச் சொன்னான். “எங்கேயாவது யாருக்காவது ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தால் அது போன்ற சமாச்சாரங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனம். ஏனென்றால் ஆபத்து, சம்பந்தப்படுபவர்களை எல்லாம் கூடத் தொற்றிக் கொள்ளலாம்

அவன் துப்பாக்கியால் குறி வைப்பதைப் பார்த்த சந்திரகாந்த் முகர்ஜி நடுநடுங்கிப் போனார். அவசரமாக அவனுக்கு நினைவூட்டினார். “நான் கண்டுபிடித்ததை எல்லாம் சொல்லி விட்டால் என்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சொன்னீர்களே

“நான் சும்மா சொன்னேன்என்ற கவுரவ் அவர் அதற்கு மேலே எதுவும் சொல்வதற்கு முன் லீ க்யாங்கின் இரண்டாம் திட்டத்தை நிறைவேற்றினான்.

அந்த ஆளுக்கு மைத்ரேயர் பற்றிப் புதிதாக எதுவும் தெரியவில்லை, இது வரை பொதுவாக எல்லோருக்கும் தெரிந்திருப்பது மட்டும் தான் தெரியும் என்றால் வீடியோ எடுத்து விட்டு சும்மா வந்து விடு. அந்த ஆளுக்கு மைத்ரேயர் பற்றி நமக்குத் தெரியாத கூடுதல் தகவல்கள் தெரியும், மைத்ரேயரை அந்த ஆள் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டி விடக்கூடும் என்று தோன்றினால் அந்த ஆளைத் தீர்த்துக் கட்டிவிடுஎன்று இரண்டு திட்டங்களை லீ க்யாங் சொல்லி இருந்தான்.

அந்த இரண்டாம் திட்டத்தின்படி சந்திரகாந்த் முகர்ஜி அவன் துப்பாக்கி ரவைக்குப் பலியானார். கீழே சாய்ந்த அவர் முகத்தில் கடைசி உணர்ச்சியாய் அதிர்ச்சியே தங்கிப் போனது. சீக்கிரமாகவே உயிர் பிரிந்தது.

முதலில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்ததை எல்லாம் வேகமாக அழித்து விட்டு கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டு கவுரவ் வேகமாக இயங்கினான். எங்கெல்லாம் தன் கைரேகை பதிந்திருக்கக் கூடிய இடங்களை எல்லாம் வேகமாய் அழித்தான். பின் சந்திரகாந்த் முகர்ஜி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி எடுத்துக் கொண்டான். அவர் அறையில் பீரோவில் வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டான். தன் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டு வெளியே யாராவது இருக்கிறார்களா என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். யாரும் இருக்கவில்லை.

சந்திரகாந்த் முகர்ஜி வீட்டு சாவியை  வரவேற்பறையில் ஒரு ஆணியில் மாட்டி வைத்திருந்தார். கவுரவ் அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டி விட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். நல்ல வேளையாக வீட்டில் இருந்து அவன் வெளியே வந்ததை யாரும் பார்க்கவில்லை.   

பிணம் கண்டுபிடிக்கப்பட்ட பின், பணம் மற்றும் நகைக்காகத் தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது என்ற கோணத்தில் தான் விசாரணை நடக்கும். மைத்ரேயர் விவகாரம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் யாருக்கும் வர வாய்ப்பில்லை..

அந்தத் தெருவைக் கடந்து அவன் போவதற்குள் அவன் சிலர் கண்ணில் பட்டான். ஆனால் யாருக்குமே அவன் சந்திரகாந்த் முகர்ஜி வீட்டில் இருந்து வெளியே வந்தவன் என்றோ ஒரு கொலை செய்து விட்டு வந்திருக்கிறான் என்றோ சந்தேகம் கூட வரவில்லை.  ஏதோ ஆழ்ந்த சிந்தனையுடன் நடந்து போகும் ஒரு வாட்ட சாட்டமான கண்ணியமான நபரையே அவர்கள் பார்த்தார்கள்.

அவன் அவர்கள் கண்டது போல உண்மையிலேயே ஆழ்ந்த சிந்தனையில் தான் இருந்தான். இந்த வழுக்கைத் தலையர் சொல்வது போல் அந்த மைத்ரேயர் அந்த வருட மார்கழி மாத வளர்பிறை காலத்தில் பிறந்தவராக இருந்து உடலில் புனிதச்சின்னமும் இருந்தால் எப்படி இது வரை மற்றவர்களால் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்க முடியும்?என்ற கேள்வி அவனைக் குழப்பியது.


ந்தக் கேள்விக்குப் பதில் மைத்ரேயரின் தாய்க்கே முந்தின நாள் இரவு தான் கிடைத்திருந்தது. மகன் எந்த நேரமும் போய் விடுவான் என்ற துக்கத்தில் அவள் தூக்கம் வராமல் அமர்ந்து அவ்வப்போது அழுது கொண்டிருந்தாள். அவளுடைய முதல் இரண்டு மகன்களும் அன்று கேள்விப்பட்ட தகவலை ஜீரணிக்க முடியாமல் தூக்கமும் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தனர்.

நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் கடைசி மகன் உறங்குவது அந்தத் தாய்க்கு துக்கத்தின் நடுவே வேடிக்கையாகவும் இருந்தது.  அவனையே மிகுந்த பாசத்துடன் பார்த்தாள். அவன் போர்த்திக் கொண்டிருந்த போர்வையில் இரண்டு இடங்களில் கிழிந்திருந்தது.

‘இவன் புத்தரின் மறு பிறவியாக இருந்திருந்தால் ஏன் இந்த தரித்திர வீட்டில் பிறந்திருக்க வேண்டும். இந்த வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நூறாவது தடவையாக தனக்குள்ளேயே அந்தத் தாய் கேட்டுக் கொண்டாள். அவளுடைய கடைசி மகன் புரண்டு படுத்தான். அவன் வலது கால் பாதம் போர்வையின் கிழிசலின் வழியாக வெளியே வந்தது. குளிரை அவன் உணர்ந்து விடக்கூடும் என்று எச்சரிக்கையோடு அந்தப் போர்வையை சரி செய்ய நெருங்கியவள் மகனுடைய பாதத்தைப் பார்த்து அதிர்ந்தாள். மகனுடைய பாதத்தில் தர்மசக்கரம் தெளிவாகத் தெரிந்தது.

அவன் சிறு குழந்தையாக இருந்த போது அந்தப் பாதத்தில் முத்தமிட்டுக் கொஞ்சிய போது ஏராளமான ரேகைகள் அதில் இருந்ததை அவள் பல முறை கவனித்திருக்கிறாள். ஒரு வடிவமில்லாமல் கலைந்திருந்த அந்த ரேகைகள் இப்போது தெளிவாக தர்மசக்கர வடிவத்தில் சேர்ந்து விட்டிருந்தன.

அந்த தர்மசக்கரத்தை புத்த மடாலயத்தில் ஒரு தூணில் அவள் பார்த்திருக்கிறாள்.... பல விதமான உணர்ச்சிகள் அவளுக்குள் ஒரே நேரத்தில் எழுந்தன.....

அந்த நள்ளிரவு நேரத்தில் அவர்கள் வீட்டுக்கதவு தட்டப்பட்டது.

(தொடரும்)
என்.கணேசன்