Monday, November 17, 2014

மரண காலத்தில் கடைசி நினைவு!


கீதை காட்டும் பாதை 34


ரண காலம் மனிதனுக்கு மிக முக்கியமானது. அவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதை மரண காலம் அவனுக்குத் தெளிவாகச் சொல்லும். மரண காலத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயமான அக்‌ஷர ப்ரஹ்ம யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மிகத் தெளிவாகச் சொல்கிறார். அதற்கு அச்சாரமாக கீதையின் ஏழாம் அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தின் கடைசி சுலோகத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

அதிபூதம், அதிவைதம், அதியக்ஞம் – இவற்றுடன் கூடியவனாகவும், எல்லாவற்றிற்கும் ஆத்மசொரூபனாகவும் உள்ள என்னை மரணத்தறுவாயிலும் கூட அறிகிறார்களோ, அத்தகைய ஒன்றிய மனதோடு கூடிய அவர்கள் என்னையே அறிகிறார்கள்- அடைகிறார்கள்.

அந்த மூன்று சொற்களும் அர்ஜுனனுக்குப் புதிதானதால் அவன் அதிபூதம் அதிவைதம் அதியக்ஞம் என்ற சொற்களுக்கு என்ன பொருள் என்றும் இந்த சரீரத்தை விட்டுப் புறப்படும் போது மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் உன்னை எப்படி அறிய வேண்டும் என்று கேட்பதில் இருந்து எட்டாம் அத்தியாயம் ஆரம்பமாகிறது.

அதற்கு பகவான் பதிலளிக்கிறார்.

“அழியும் சுபாவமுள்ளது அதிபூதம். புருஷன் அதிவைதம். இந்த உடலில் அதியக்ஞமாக இருப்பவன் நானே.

மரண காலத்திலும் என்னையே தியானித்துக் கொண்டு சரீரத்தை விட்டுச் செல்பவன் என் நிலையை அடைகிறான். அதில் சந்தேகமேயில்லை.

குந்திமகனே! மரண காலத்தில் எந்தெந்த எண்ணங்களை நினைத்தபடியாக மனிதன் சரீரத்தைத் துறக்கிறானோ எப்போது அந்த நிலையையே நினைத்ததன் பலனாக அவன் அந்தந்த நிலையையே அடைகிறான்.

அதிபூதம் என்பது மூலப்பொருள்கள். இயற்கையாகவே தோன்றி, அழியும் சுபாவம் உள்ளது. அதில் உறைந்திருந்து அது இயங்கத் தேவையான  தனிப்பட்ட சக்தி (இங்கு புருஷன் என்ற சொல் கையாளப்படுகிறது) அதிவைதம். அதில் மூல சக்தியாக இருப்பது இறைசக்தியான அதியக்ஞம்.

இந்த மூன்று பிரிவுகளின் மூலமாகவும் இயங்குவது எல்லாம் வல்ல இறைவனே. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் அணுக்கள் மூலக்கூறுகள் என்ற ஜடப்பொருள், அவற்றிற்குள் உறைந்திருக்கும் தனிப்பட்ட இயங்கு சக்தி, எல்லாவற்றையும் தீர்மானித்து இயக்கும் பிரபஞ்ச சக்தி எனச் சொல்லலாம்.

இன்றைய விஞ்ஞானிகள் அணுவையும் துளைத்தெடுத்து கடைசியில் ஜடப்பொருளாகத் தோற்றம் அளிக்கும் அணுவில் இருந்து அண்டம் வரை ஆராய்ந்து கொண்டே போனால் மிஞ்சுவது அனைத்துமே சக்தி வீச்சுக்களே, சக்தியின் பேரியக்கமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதையே தான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.

அடுத்ததாக இங்கு மரண காலத்திற்கும், அந்தக் கட்டத்தில் என்ன நினைக்கிறோம் என்பதற்கும்  இவ்வளவு முக்கியத்துவம் ஸ்ரீகிருஷ்ணர் தந்திருப்பது ஏன் என்று பார்ப்போம்.

ஒருவிதத்தில் பார்த்தால் வாழ்க்கையே மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பயணம் தான். மற்ற எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு முயற்சியை மனிதன் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் மரணத்திற்கு அவன் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அது தானாக ஒரு நாள் நிகழும். அதிலிருந்து அவன் தப்பிக்க முடியாது. ஒரு இடத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் அமரும் பயணி தானாக மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தானாக அந்த ஸ்டேஷனுக்கு அவனை ரயில் அழைத்துப் போகும். அப்படித்தான் நாமும் மரணத்திற்கு டிக்கெட் வாங்கி வந்தவர்கள். வாழ்க்கை தானாக அதில் கொண்டு போய் விட்டு விடும்.

ஆனால் இந்த வாழ்க்கைப் பயணத்தில் இருக்கும் பெரிய வித்தியாசம் என்ன என்றால் மரணம் என்ற அந்த ஸ்டேஷனில் இறங்கும் போது நமக்கிருக்கும் மனநிலை அடுத்த பயணத்தைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றதாக இருக்கிறது என்பதே. அதன் சூட்சுமத்தை இனி ஆராய்வோம்.

காலையில் விழித்தெழும் கணத்திலிருந்து இரவு உறங்கப் போகும் கணம் வரை மனிதன் ஆயிரக்கணக்கான செயல்களில் ஈடுபடுகிறான். தானாக செய்யும் செயல்கள், அனிச்சையாகச் செய்யும் செயல்கள் என தொடர்ந்து அவன் செய்யும் செயல்கள் எண்ணிக்கையில் பல்லாயிரமாக விரிந்தாலும் இரவில் உறங்கும் முன் தன் அன்றைய வாழ்வை அவன் திரும்பிப் பார்த்தானானால் நினைவில் மிஞ்சுவது கைவிரல்களால் எண்ண முடிந்த மிகச்சில செயல்களே. அவையே அவனுக்கு அன்றைய முக்கிய செயல்கள். அல்லது அவற்றின் தொடர்ச்சியாக அவன் மேற்கொண்டு செய்ய வேண்டி இருப்பவை. மற்றவை எல்லாம் பரிபூரணமாக முடிந்து விட்டவை. அவற்றின் நோக்கம் முடிந்து விட்டதால் அவன் தொடர வேண்டியிருக்காத செயல்கள். அதனால் அவை மறக்கப்பட்டு விட்டன.

இப்படி ஒரு நாளைப் போலத் தான் வாரங்கள், மாதங்கள், வருடங்கள் வாழ்க்கை முழுவதும் நடக்கின்றது. மரணத்தறுவாயில் மனிதனின் நினைவில் மிஞ்சுவது வாழ்க்கையின் சாராம்சமும், முக்கியமாய் நினைத்திருந்து முடித்து விடாத விஷயங்களும் மட்டுமே.

முழுமையாக வாழ்ந்து முடிந்தவனுக்கு மட்டுமே மரணத்தறுவாயில் இறைவன் நினைவு வரும். பிரபஞ்சத்தின் ஜடப்பொருள்கள் முதலான அனைத்திலும் அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனை உணர்ந்தவன் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு நிகழ்விலும் இறைவனைக் காணுவதைத் தவற விடுவதில்லை. வாழ்க்கையின் முடிவிலோ, அவன் வாழ்நாள் எல்லாம் உணர்ந்ததன் தாக்கம் கண்டிப்பாகத் தங்கவே செய்யும். அதனால் அந்த நேரத்தில் அவனால் இறைவனை மனதார நினைக்கவும் தியானிக்கவும் முடியும். அதுவே அவனை இறைநிலையை அடையவும் செய்யும். இதைத்தான் பகவத் கீதை சொல்கிறது.  

நல்ல உதாரணமாய் மகாத்மா காந்தியைச் சொல்லலாம். சிறிதும் எதிர்பாராமல் சுடப்பட்ட அதிர்ச்சியான நேரத்திலும் “ஹே ராம்என்று அவரால் சொல்ல முடிந்தது மனதளவில் அவர் இருந்த தயார்நிலையையே சுட்டிக் காட்டுகிறது. வாழ்நாள் பூராவும் வாயால் மட்டுமல்லாமல் மனதார வாழ்ந்த ஆன்மிக வாழ்க்கை அவரை அந்தக் கணத்திலும் இறைவனை நினைக்க வைத்திருக்கிறது.

வெறும் வார்த்தைகளினால் மட்டும் இறைவன் இருந்திருப்பாரேயானால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு கிளிப்பிள்ளையின் உதாரணத்தை பெரியோர் சொல்வார்கள். எப்போது பார்த்தாலும் ராதே கிருஷ்ணா என்று அந்தக் கிளி சொல்லிக் கொண்டிருக்கும். அதை வளர்த்தும் வீட்டாருக்கோ அதை நினைக்கையில் ஒரே பெருமை. ஒருநாள் வீட்டு ஆள்கள் வெளியே சென்றிருக்கையில் ஒரு பூனை வந்து விட்டது. அந்தப் பூனை கிளியைப் பிடிக்கையில் அது வரை ராதே கிருஷ்ணாசொல்லிக் கொண்டிருந்த அந்தக்கிளி கீச்சு கீச்சென்று கத்த ஆரம்பித்து விட்டது.

வாழ்நாள் எல்லாம் வாயளவில் சொன்னாலும் இதயத்தில் நிலைக்காத வரை இறை நினைவு இறுதியில் வராது!

பாதை நீளும்.....

என்.கணேசன்

5 comments:

  1. அருமை.அந்த காலகட்டத்திலேயே இவ்வளவு எண்ணம் அதற்கு விளக்கம் வேறு...ஆச்சரியம் தான்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு ஐயா...

    ReplyDelete
  3. இந்த கருத்தை இன்னும் நீங்கள் விரிவாக எழுத வேண்டும் என்பது என் அவா.

    பிறந்தது முதல் அந்திமக் காலம் வரை பொருள் சேர்ப்பதே குறிக்கோளாக வைத்திருக்கிறோம்.. 'உன் கையே உனக்கு உதவி, நீ சேர்த்து வைப்பதே உனக்கு உதவும்' என்று திரும்ப திரும்பச் சொல்லி பொருள் சேர்த்து வைப்பதே ஒரு மிகப்பெரிய கடமையாக சொல்லிதரப்படுகிறது. ஆகவே பிறந்தது முதல் மனிதன் பணம் பணம் என்றே அலைய வேண்டி இருக்கிறது. பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை. இப்படி நினைத்து பழக்கப்பட்ட மனத்தை எப்படி திருத்துவது?

    பணம் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் பொருள் மட்டும் உதவாது. பொருளுடன் நிறைய அருளும் சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்று மனதுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். நாம் வாழ்வது பொருளால் அல்ல, அருளால் தான் என்று உணர வேண்டும். இப்படி உணர வேண்டும் என்றால் பொருளால் என்ன வெல்லாம் செய்ய முடிந்தது என்று பார்ப்பதை விட்டு விட்டு பொருளால் என்ன செய்ய முடியவெல்லை என்று பார்க்க தெரிந்து கொள்ளவேண்டும்

    பொருள் முக்கியம் என்று எப்படி மனம் பழகிற்றோ அதே போல அருளும் முக்கியம் என்று மனதிற்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்... பிறகு பொருளை விட அருளே முக்கியம் என்று மனதிற்க்கு உணர்த்த வேண்டும்.
    உணர வேண்டும். மீண்டும் மீண்டும் பழக வேண்டும்.. இப்படி திரும்பத் திரும்ப உணர்வதாலும் உணர்த்தப்படுவதாலும் தான் இறை நிலை யைப் பற்றி எப்போதும் நினைத்திருக்கும் ம்னம் வரும். வாழ்க்கையில் என்னவெல்லாமோ கற்றுக் கொள்கிறோம். இதைக் கற்றுக்ககோள்ள வேண்டாமா?

    ஆனால். சொல்வது எளிது, செய்வது அரிதாய் இருக்கிறதே.
    அதனால் தான் ' அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...."

    அனந்தராமன். SK

    ReplyDelete
  4. உதாரணங்கள் மிக அருமையாகவும் பொருத்தமாகவும் உள்ளது... அனைவரும் இதனை பின்பற்றுவோமாக

    ReplyDelete
  5. எளிய உதாரணத்துடன் கொடுத்த விளக்கம் அருமை....

    ReplyDelete