Thursday, November 27, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 22


த்மசாம்பவாவின் ஓலைச்சுவடிக் குறிப்பையும், மௌனலாமா சொல்லி இருப்பதையும் ஆசான் சொன்ன போது தன் நாகமச்சத்தில் முதல் முறையாக சிலிர்ப்பை உணர்ந்த போதே விதி இந்த விஷயத்தில் முன்பே தன்னை சம்பந்தப்படுத்தி இருக்கிறது என்பதை அக்‌ஷய் உணர்ந்து விட்டான். இதில் இருந்து இனி அவன் விலக முடியாது என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால் மைத்ரேயன் என்கிற சிறுவனின் புகைப்படத்தை ஆசான் காட்டிய போது ஏற்பட்ட ஏமாற்றம் தான் அவனை மறுபரிசீலனை செய்யத் தூண்டியது. அதனாலேயே அவன் முடிவெடுக்கும் முன் தன் ஆபத்து காலங்களிலும் அவசிய காலங்களிலும் ஒலித்த அந்தக் குரலைக் கேட்க முற்பட்டான். அந்தக் குரலும் திபெத்திற்குப் போகவே அவனுக்குக் கட்டளை இட்டது.

அதனால் ஆசான் கேட்டதற்கு அக்‌ஷய் “நான் திபெத் செல்லத் தயார் ஆசானேஎன்றான்.

ஆசான் கண்களில் உடனே நீர் நிரம்பியது. உடனடியாக நன்றியை வார்த்தைகளாக்க முடியாமல் தவித்த அவர் இரு கைகளையும் கூப்பி அவனை வணங்கினார். ஏற்கெனவே பயங்கரமான எதிரிகளை சம்பாதித்து மறைந்து வாழும் அவன் இந்த ஆபத்தான வேலைக்கு ஒத்துக் கொண்டது சாதாரண விஷயமல்ல என்பதை நன்றாகவே உணர்ந்திருந்த ஆசான் பின்பு தழுதழுத்த குரலில் சொன்னார். “நாங்கள் என்றென்றும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம் அன்பரே! எங்கள் பிரார்த்தனையில் நீங்கள் என்றும் இருப்பீர்கள்.....

அக்‌ஷயை அவர் கண்ணீரும், கைகூப்பி ஆத்மார்த்தமாய் சொன்ன வார்த்தைகளும் மனம் நெகிழச் செய்தன. அவருடைய இரண்டு கைகளையும் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு “பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி என்னை தர்மசங்கடத்துக்குள்ளாதீர்கள் ஆசானே. எல்லோரும் நம்மால் முடிந்ததையே செய்கிறோம். அதைக் கூட நாம் செய்வதில்லை. கடவுளே செய்ய வைக்கிறான்....

அக்‌ஷயின் வார்த்தைகள் மேலும் அதிகமாய் ஆசானின் கண்களைக் கலங்க வைத்தன. அக்‌ஷய் பேச்சை மாற்றினான்.

“ஆசானே மைத்ரேயர் திபெத்தில் எங்கே இருக்கிறார்?

ஆசான் மைத்ரேயர் இருக்கும் இடத்தின் பெயரை வாய்விட்டுச் சொல்லவும் தயங்கினார். இடுப்பில் சொருகியிருந்த ஒரு சீட்டை எடுத்து நீட்டினார். அதில் விலாசம் எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த நகரத்துக்கு பல வருடங்களுக்கு முன்பு அவன் ஒரு முறை போயிருக்கிறான்.

“எனக்கு இந்த இடத்தைப் பற்றியும், இங்குள்ள மனிதர்களைப் பற்றியும் விவரங்கள் தேவை ஆசானே

“கேளுங்கள் அன்பரே

அடுத்ததாக அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி ஆசான் களைத்தே போனார். அந்த நகரத்திற்கு எந்தெந்த வழியாக எல்லாம் போகலாம், சீதோஷ்ணநிலை எப்படி இருக்கும், மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ஆரம்பித்து மைத்ரேயர் வீடு இருக்கும் பகுதி எப்படி இருக்கும், அக்கம்பக்கத்து வீடுகளில் குடி இருப்பவர்கள் யார் யார், அவர்கள் எப்படி என்றெல்லாம் கேட்டான். அதற்கெல்லாம் உபரி கேள்விகளும் பல கேட்டான். மைத்ரேயரின் தாயைப் பற்றியும் சகோதரர்களைப் பற்றியும் நிறைய கேள்விகள் கேட்டான். அவர்கள் எப்படிப்பட்டவர்கள், என்ன வேலை செய்கிறார்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், அவர்களுக்கு அக்கம்பக்கத்து ஆட்களுடன் நட்பு எந்த அளவில் உள்ளது, அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிறவர்கள் யார் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள், மைத்ரேயர் மீது குடும்பத்தாருக்கு எந்த அளவு பாசம் உள்ளது என்றெல்லாம் கேட்டான். ஒருசில கேள்விகளுக்கு ஆசானுக்கே பதில் தெளிவாகத் தெரியவில்லை. சில கேள்விகளுக்கு அவர் யோசித்து தான் பதில் சொல்ல வேண்டியிருந்தது.  கடைசியாக மைத்ரேயர் பற்றிக் கேட்டான். மைத்ரேயர் பற்றி மட்டும் அவன் கேள்விகள் கேட்டது அரைமணி நேரம் தொடர்ந்தது.

ஒரு வேலையைத் தொடங்கும் முன் அவன் அது சம்பந்தமான விஷயங்களை எவ்வளவு அதிகம் அறிந்து கொள்ள முயல்கிகிறான் என்று வியந்தார் ஆசான். அவர் பதில்களை வைத்தே அவன் மைத்ரேயரையும், அவர் குடும்பத்தையும் அவர் ஊரையும் துல்லியமாக மனக்கண்ணில் நிறுத்திக் கொண்டு விட்டிருக்கிறான் என்பதை ஆசான் உணர்ந்தார்.

“நான் போய் அழைத்தவுடனேயே அவர்கள் மைத்ரேயரை என்னுடன் அனுப்பி வைப்பார்களா? இல்லை முன்கூட்டியே தெரிவித்து தயார்ப்படுத்துகிறீர்களா?அக்‌ஷய் கேட்டான்.

“முன்கூட்டியே ஆளனுப்பி தெரிவித்து விடுகிறேன் அன்பரே.... நீங்கள் எப்போது போகிறீர்கள், எப்படி போகிறீர்கள்?

“சில விஷயங்கள் உங்களுக்குக்கூடத் தெரியாமல் இருப்பது நல்லது ஆசானே... அவர்களிடம் நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன் என்றே சொல்லி வையுங்கள்.

ஆசான் தலையசைத்தார். சில வினாடிகள் அவனையே பார்த்து விட்டு மெல்ல சொன்னார். அன்பரே, நான் ஒன்று சொன்னால் நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வயதான கிறுக்கனின் அர்த்தமில்லாத பயம் என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்....

‘என்னஎன்பது போல அக்‌ஷய் அவரைப் பார்த்தான்.

“லீ க்யாங் அதிபுத்திசாலி. ஆபத்தானவனும் கூட. நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். நீங்கள் அவனை எந்தக் காரணம் வைத்தும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.... ஆசான் எச்சரித்தார்.

கண்டிப்பாக கவனமாக இருப்பேன் ஆசானே. யாரையுமே குறைத்து மதிப்பிடுவதற்கு இணையான முட்டாள்தனம் வேறிருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

எனக்கு எல்லாம் தெரியும், என்னை மிஞ்ச ஆளில்லை என்கிற மனோபாவம் இல்லாமல் அடக்கமாய் அக்‌ஷய் இருந்தது ஆசானுக்குப் பிடித்திருந்தது. இத்தனைக்கும் இவனும் சாதாரணமானவனல்ல. இவனுடைய எதிரிகள் இவனை அமானுஷ்யன் என்ற பெயரில் மட்டுமல்லாமல் சைத்தான் என்றும் அழைத்ததாக அவர் கேள்விப்பட்டிருந்தார்...

அக்‌ஷய் அவரிடம் சொன்னான். “ஆசானே நீங்கள் இங்கே வந்திருப்பதும் என்ன சந்திக்கப் போவதும் லீ க்யாங்குக்குத் தெரிந்திருக்கிறது என்றால் அவனுக்கு நீங்களும் தலாய் லாமாவும் பேசிக் கொள்கிற விஷயங்கள் தெரிய வருகிறது என்று அர்த்தம். தலாய் லாமாவைச் சுற்றி இருப்பவர்களில் யாராவது உளவாளி இருக்கலாம். அதனால் இனி நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்….”

அதே முடிவுக்கு முன்பே வந்திருந்த ஆசான் சரியெனத் தலையசைத்தார். அவருக்கு திடீரென்று உடனடி பிரச்னை நினைவுக்கு வந்தது. லீ க்யாங்கின் ஆட்கள் இன்னமும் வெளியே இருக்கிறார்கள். அதை அக்‌ஷயிடம் நினைவுபடுத்தி இனி என்ன செய்வது என்று கேட்டார்.

அக்‌ஷய் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “நீங்கள் முதலில் மடாலயத்தை விட்டுக் கிளம்புங்கள் ஆசானே...


டெர்கார் மடாலயத்தில் இருந்து ஆசானும் இன்னொரு பிக்குவும் வெளியே வந்தவுடன் வாங் சாவொவின் ஆட்கள் உஷாரானார்கள். ஆசான் கூனல் எதுவும் இல்லாமல் நிமிர்ந்து வெளியே வந்தது அவர்களைக் குழப்பியது. அப்படியானால் கூனலோடு தெரிந்ததும், கர்மா தார்ஜே மடாலயத்துக்கு கூனலோடு வேகமாய் போனதும் யார்?...  ஆசான் ஒரு ஆட்டோவில் ஏறினார்.... அங்கிருந்த உளவாளிகள் அனைவரும் அவரைப் பின் தொடர ஆரம்பித்தார்கள்.

ஐந்து நிமிடம் கழித்து அக்‌ஷய் டெர்கார் மடாலயத்திலிருந்து அமைதியாக வெளியேறினான்.


ரு மணி நேரம் கழித்து வாங் சாவொ லீ க்யாங்குக்குப் போன் செய்தான். 

ஒரு மணி நேரத்துக்கு முன்னால் ஆசான் திடீரென்று டெர்கார் மடாலயத்திலிருந்து மகாபுத்தர் ஆலயத்துக்குப் போயிருக்கிறார். இப்போதும் மகாபுத்தர் ஆலயத்தில் போதி மரத்துக்குப் பக்கத்தில் தான் தியானத்தில் இருக்கிறார். அவர் கூட இன்னொரு பிக்கு இருக்கிறார்....

லீ க்யாங் உடனடியாகக் கேட்டான். “ஆசான் இப்போதும் கூனோடு தான் இருக்கிறாரா?

“நிமிர்ந்து தான் இருக்கிறார் சார்

லீ க்யாங் அமைதியாகக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய் வாங் சாவொ?

எச்சிலை வாங் சாவொ விழுங்கி விட்டு மெல்ல சொன்னான். “ஆசானைப் பார்க்க வந்த ஆசாமியை நாம் தவற விட்டு விட்டோம் என்று தான் தோன்றுகிறது... கூன் விழுந்த ஆளை ஆசான் என்று நினைத்து இவர்கள் பின் தொடர்ந்த போது ஆளில்லாத நேரமாய் அந்த ஆள் ஆசானைப் பார்த்துப் பேசி விட்டுப் போயிருக்கலாம்...

 “இருக்கலாம்..... இப்போது டெர்கார் மடாலயத்து வாசலில் நம் ஆட்கள் யாராவது இருக்கிறார்களா?

“இல்லை.... இந்த முறை வெளியே வந்தது ஆசான் தான் என்பது உறுதியாக தெரிந்ததால் பிறகு யாரும் அங்கே நிற்கவில்லை....

“அப்படியானால் முன்பு ஆளில்லாத போது ஆசானைப் பார்க்க வந்து, ஆசான் மகாபுத்தர் ஆலயம் போன பிறகு கூட அந்த ஆசாமி வெளியேறியிருக்கலாம்

வாங் சாவொ வாயடைத்துப் போனான். அப்படி நடந்திருந்தால் இரண்டு முறை அவன் ஆட்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். உள்ளூர ஒருவித கோபம் அவனுள் எழுந்தது.

ஆனால் லீ க்யாங்குக்கு கோபம் வரவில்லை. காரணம் அவன் யதார்த்த சூழ்நிலையை மறந்து விடவில்லை. இரகசியம் காக்க வேண்டி, ஒற்றர்களிடம் கூட எப்போதுமே முழு விவரங்களைச் சொல்லி விடுவதில்லை. இப்போதைய விவகாரத்தில் கூட ஆசானை ஒரு ஆள் சந்திக்க வருவான். அவன் புகைப்படமும், அவன் பற்றி தெரிந்து கொள்ள முடிந்த மற்றெல்லா தகவல்களும் வேண்டும் என்று தான் சொல்லி இருந்தார்கள். ஆசானே அங்கே இல்லை என்றால் அவரைச் சந்திக்க அந்த ஆள் எப்படி வர முடியும் என்கிற ரீதியில் அந்த ஒற்றர்கள் எண்ணியதில் ஆச்சரியம் ஏதுமில்லை....

சிறிய புன்னகையுடன் ஆசானின் அந்த ஆசாமியிடம் மனதினுள் பேசினான். இந்தச் சின்ன விஷயத்தில் அடிமட்ட ஒற்றர்களை நீ ஏமாற்றி இருக்கலாம்... ஆனால் நான் நேரடியாக களத்தில் இறங்கிக் காத்திருக்கையில் என்னை ஏமாற்றுவது சுலபமல்ல.... நான் காத்திருக்கிறேன் மனிதனே... ஒரு நாள் சந்திப்போம்....

(தொடரும்)


என்.கணேசன்

Monday, November 24, 2014

ஆதிசங்கரரின் யோக சக்திகள்

மகாசக்தி மனிதர்கள்-2


சித்தர்களும், யோகிகளும் மகாசக்திகள் படைத்தவராக இருந்தார்கள், அஷ்ட மகாசக்திகளும் அவர்கள் வசம் இருந்தன என்ற போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்களாக இருக்கவில்லை. அவர்கள் பற்றி ஆதாரபூர்வமான குறிப்புகள் இருக்கவில்லை. பொது வாழ்வில் புலப்படாமல் ரகசியமாய் வாழ்ந்தவர்கள் தான் அநேகம். வரலாற்றில் பதியப்பட்ட மகா யோகிகளில் முதலாமவராக ஆதிசங்கரரைச் சொல்லலாம். 

ஆதிசங்கரர் மெய்ஞானத்திற்கும், உபதேசித்த அத்வைத தத்துவத்திற்கும் பெயர் போனவர் என்றாலும் தேவைப்பட்ட போது மகாசக்திகளை தன்வசப்படுத்திக் கொண்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன.   

தன் 32 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்த ஆதிசங்கரர் தன் குறுகிய வாழ்நாளில் நிறைய நூல்களையும், ஸ்தோத்திரங்களையும் இயற்றி இருக்கிறார். ஏராளமான விவாதங்களில் பங்கு கொண்டிருக்கிறார். இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் முறையே பூரி, துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரி ஆகிய இடங்களில் பீடங்களை ஏற்படுத்தி இருக்கிறார். அத்துடன் பாரதம் முழுவதும், தமிழகம் முதல் இமயம் வரை பல முறை பயணித்திருக்கிறார். இத்தனை சாதனைகள் மிகக் குறுகிய கால வாழ்க்கையில் அவர் சாதித்திருப்பதற்கு அஷ்டமகா சித்திகள் அவர் வசம் இருந்தது தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

ஆதிசங்கரர் வாழ்ந்த காலம் முடிந்து பதின்மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்ட நவீன காலத்திலும் கூட இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதாரநாத் போன்ற இடங்களுக்குத் தரை மார்க்கமாகப் போக வேண்டுமென்றால் பல சிரமங்கள் இருக்கின்றன. ஒரு வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே போக முடிந்த அந்த இடங்களில், அந்தப் போக முடிந்த காலத்தில் கூட பாதைகளில் பனிப்பாறைகள் விழுமானால் பயணிக்க முடியாது. இராணுவத்தினர் அந்தப் பாதைகளைச் சீர் செய்யும் வரை காத்திருக்க வேண்டியது தான். இன்றும் கூட சில இடங்களில் சாதாரணமாய் நடந்து செல்ல முடியாது. அப்படி ஒரு நிலை இன்றே இருக்கையில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள். தியானம், நூல் இயற்றல், போதித்தல், விவாதங்களில் பங்கு கொள்ளல், போன்ற பல்வேறு வேலைகளுக்கு நடுவே சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்த ஆதிசங்கரர் வாகன வசதிகள் இல்லாத, சாலை வசதிகளும் மேம்பட்டிராத பழங்காலத்தில், கால்நடையாக குறுகிய காலத்தில் இவ்வளவு தூரம் பயணம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது சிந்திக்க முடிந்தவர்களுக்கு விளங்கும். ஆகவே அவர் இலகிமா சக்தியைப் பயன்படுத்தியே இந்த பிரமிக்கத் தக்க சாதனையை நிகழ்த்தி இருக்க வேண்டும் என்பதே அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

ஒரு முறை அவர் பிக்‌ஷைக்குச் சென்ற போது அவர் பிக்‌ஷை கேட்ட வீடு பரம ஏழையினுடையது. தானே உண்ண உணவில்லாமல் வருந்திக் கொண்டிருந்த போதிலும் அந்த வீட்டுப் பெண்மணிக்கு ஆதிசங்கரருக்கு ஒன்றும் தராமல் அனுப்ப மனம் இருக்கவில்லை. அதனால் தன் வீட்டில் இருந்த ஒரே நெல்லிக்கனியை அவருக்குத் தந்து விட்டு இதற்கு மேல் தர இந்த வீட்டில் ஒன்றுமே இல்லை, எனவே அலட்சியப்படுத்தாமல் இந்த நெல்லிக்கனியை ஏற்றுக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டும்என்று வேண்டி நின்றாள்.  ஏழ்மையிலும் அவளுக்கிருந்த உதார சிந்தையை மெச்சி, அவள் ஏழ்மையைப் போக்கி மகாலட்சுமியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடி அந்தப் பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனிகள் மழையாகப் பெய்தனவாம்.  அந்தக் கணத்தில் அவர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரம் இன்றும் செல்வம் வேண்டி பலரும் சொல்லும் ஸ்தோத்திரமாக இருக்கிறது. இது ஈசத்துவம் என்ற இறைசக்தியைப் பயன்படுத்தியதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள்.

அதே போல ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாயும் பிரகாமிய சித்தியையும் பயன்படுத்தினார் என்று அவர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஒரு முறை ஆதிசங்கரர் மஹிஸ்மதி என்ற நாட்டின் ராஜகுருவான மந்தன மிஸ்ரா என்ற பேரறிஞருடன் ஞான மார்க்க சொற்போரில் ஈடுபட்டார். குடும்பஸ்தரான மந்தன மிஸ்ரா போட்டியில் தோற்றால் துறவியாக வேண்டும் என்றும், துறவியான ஆதிசங்கரர் தோற்றால் குடும்பஸ்தராக மாற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மந்தன மிஸ்ராவுடன் பதினேழு நாட்கள் நடந்த விவாதங்களின் முடிவில் ஆதிசங்கரர் வெற்றி அடைந்தார்.  மந்தன மிஸ்ராவின் மனைவி உபயபாரதி கணவரைக் காட்டிலும் அறிவில் சிறந்தவள். சரஸ்வதியின் அவதாரமாகக் கூட அவளைக் கூறுவதுண்டு. தன் கணவன் துறவியாவதை சகிக்க முடியாத உபயபாரதி குடும்பஸ்தரான தன் கணவரில் தானும் ஒரு பாதி என்றும், ஒரு பாதியை மட்டுமே ஆதிசங்கரர் வென்றிருப்பதாகவும், தன்னையும் வென்றால் மட்டுமே வெற்றி முழுமையாக இருக்கும் என்றும் வாதிட்டாள். அது வரை பெண்களிடம் ஞான விவாதங்களில் ஈடுபட்டிராத ஆதிசங்கரர் தயங்கினார். உபயபாரதி வேத காலங்களிலும் அப்படி விவாதங்கள் நடந்திருப்பதாக எடுத்துக்காட்டுகள் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தாள்.

உபயபாரதியுடன் ஆதிசங்கரரிடம் சொற்போரைத் தொடர்ந்தார். எந்த விதத்திலும் ஞானக் குறைவு இல்லாத ஆதிசங்கரரை உபயபாரதியால் வெல்ல முடியவில்லை. ஆனாலும் தோற்க மனமில்லாத உபயபாரதி கலவியல் சம்பந்தமான கேள்வி ஒன்றைக் கேட்க தூய பிரம்மச்சாரியும் துறவியுமான ஆதிசங்கரரால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. உடனே அவர் சில நாட்கள் அவகாசம் கேட்டு தன் உடலை விட்டு அச்சமயம் இறந்து போயிருந்த மன்னரின் உடலில் குடியேறி தங்கி கலவியல் ஞானம் பெற்று, மீண்டும் தன் உடலுக்குத் திரும்பி வந்து உபயபாரதியிடம் சொற்போரைத் தொடர்ந்து வென்றார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

துறவு பூண்ட போது வருந்தி நின்ற தாயிடம் “உன் அந்திம காலத்தில் நான் கண்டிப்பாக வருவேன்என்று வாக்குக் கொடுத்து விட்டுக் கிளம்பியவர் ஆதிசங்கரர்.  அவர்  சிருங்கேரியில் இருக்கும் போது தாயின் அந்திமக் காலம் வந்து விட்டது என்பதும், தன்னை இப்போது நினைக்கிறார் என்பதும் ஆதிசங்கரருக்கு ஞான திருஷ்டியில் தெரிய வந்து உடனே காலடியில் மரணப்படுக்கையில் இருந்த தாயருகே சென்றார் என்று குறிப்புகள் சொல்கின்றன. கர்னாடக மாநிலத்தில் இருக்கும் சிருங்கேரிக்கும், கேரள மாநிலத்தில் இருக்கும் காலடிக்கும் இடையே நூற்றுக் கணக்கான மைல்கள் உள்ளன. அவரால் உடனே அந்த இடைவெளியைக் கடக்க முடிந்தது இலகிமா சக்தியாலேயே இருந்திருக்க வேண்டும்.

அக்காலத்தில் ஒரு துறவி தன் தாய் சிதைக்குத் தீ மூட்டுவது சம்பிரதாயத்துக்கு முரணானது.  யாருக்கும் அந்திமக்கிரியை செய்யும் உரிமை துறவிக்குக் கிடையாது. எனவே காலடியில் இருந்த மற்ற அந்தணர்கள் அவருடைய தாயின் அந்திமக்கிரியைக்கு அவருக்கு துணை நிற்க மறுத்தார்கள். சிதை மூட்ட தீயைக் கூட கொடுத்துதவ அவர்கள் மறுத்த போது ஆதிசங்கரர் தன் சக்தியாலேயே தீ மூட்டினார். இது அஷ்டமகா சித்திகளில் பிராப்தி என்கிற, இயற்கை சக்திகளைத் தன்வசப்படுத்திக் கொண்டதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை 14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை எழுதி வைக்கப்பட்ட சங்கர விஜயநூல்களில் காணப்படுகின்றன. அந்த நூல்கள் அனைத்திலும் பொதுவாக ஏற்றுக் கொண்டு கூறப்பட்ட குறிப்புகளை இங்கு தந்திருக்கிறோம். அஷ்ட மகாசக்திகள் தன்வசமிருந்தும் தேவைப்பட்ட போது மட்டும் தேவையான அளவு மாத்திரம் உபயோகித்த ஆதிசங்கரர் அந்த மகாசக்திகளை விட அதிக முக்கியத்துவத்தை மெய்ஞானத்திற்கே தந்திருந்தார் என்பதே அந்த மகாயோகியின் மாபெரும் சிறப்பு!

என்.கணேசன்

நன்றி. தினத்தந்தி 12-09-2014

Thursday, November 20, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 21



பார்வையாளர் நேரம் முடிந்த பின்னும் லீ க்யாங்கின் உளவாளிகள் டெர்கார் மடாலயம் முன்பு நின்று கொண்டிருப்பது ஆசானுக்கு லேசான கவலையை ஏற்படுத்தினாலும் அக்‌ஷய் அதில் சிறிதும் பாதிக்கப்படவில்லை. அது ஒரு விஷயமே அல்ல என்பது போல் அவன் ஆசானிடம் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

மைத்ரேயனின் குடும்பத்திற்கு அவன் தெய்வீகப்பிறவி என்பது தெரியுமா?

“தெரியாது. குடும்பத்தினர் வாயில் இருந்து தகவல் கசிந்து அதுவே பாதகமாகி விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தோம். சொல்லப் போனால் மைத்ரேயனை அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறவர்களே விரல் விட்டும் எண்ணும் எண்ணிக்கையில் தான் இருக்கிறோம்

“அவன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்

அவர் பெற்றோருக்கு அவர் மூன்றாவது மகன். அவர் தந்தை நான்கு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். தாயும், இரு அண்ணன்களும் சின்னச் சின்ன வேலைகள் செய்து ஏதோ சம்பாதிக்கிறார்கள். ஆனாலும் வறுமையில் தான் அவர் குடும்பம் இருக்கிறது

ஆசான் மைத்ரேயனை “அவர்என்று மரியாதையுடன் அழுத்திச் சொன்னது, அக்‌ஷய் “அவன்என்று சொன்னதைத் திருத்துவது போல இருந்தது.  

ஆசான் தொடர்ந்து சொன்னார். “...மைத்ரேயர் அரசாங்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்....

தோற்றத்தில் சாதாரணம், அரசாங்கப் பள்ளியில் படிப்பு, வறுமையான குடும்பம், இன்னும் புத்தபிக்கு ஆகாமல்- இருப்பது எல்லாமாகச் சேர்ந்து லீ க்யாங்கின் பார்வையில் படாமல் மைத்ரேயனைக் காப்பாற்றி வருவதாக அக்‌ஷய்க்குத் தோன்றியது. கூழாங்கல்லாகவே தோன்றுவதால் தான் வைரம் பத்திரமாய் இருக்கிறதோ! ஆனால் இணையில்லாத அறிவாளி என்று ஆசானே எண்ணி பயப்படும் லீ க்யாங் சீக்கிரமே மைத்ரேயனை நெருங்கி விடுவான் என்பதில் சந்தேகமில்லை.

அக்‌ஷய் சொன்னான். “எனக்கு லீ க்யாங்கைப் பற்றி இன்னும் விவரமாகச் சொல்லுங்கள்....

“லீ க்யாங் ஒரு கண்டிப்பான அடிமட்ட கம்யூனிஸ்ட் தலைவரின் ஒரே மகன். தந்தை அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தாயார் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். அவனுக்கு நாட்டுப்பற்று அதிகம். ஆனால் கம்யூனிஸம் மீது அவனுக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. சுய கட்டுப்பாடு அதிகம். புகை, மது உட்பட அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லை. பெண்களிடமும் விலகியே இருப்பான். அறிவு தாகம் மிகுந்தவன். என்னவெல்லாம் அவனுக்குத் தெரியும் என்பதை முழுமையாக இது வரை யாரும் கண்டுபிடித்ததில்லை. ஆள்களை எடை போடுவதில் நிகரில்லாதவன். ஒரு காலத்தில் செஸ் விளையாட்டில் ஒரு காலத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் முதலிடத்தில் இருந்திருக்கிறான். உளவுத்துறையில் நுழைந்தவுடன் செஸ் ஆடுவதையும் நிறுத்திக் கொண்டவன். தன் சுயலாபத்திற்காக இது வரை அவன் எதையும் செய்ததாக அவன் எதிரிகள் கூட சொல்ல முடியாது. ஆனால் தன் நாட்டுக்காக அவன் எதையும் செய்வான்....
 
நீங்கள் அவனை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?.... உங்களுக்கு நேரடி அனுபவம் எதாவது உண்டா?

திபெத்தில் என் பின்னால் அவன் ஒற்றர்கள் எப்போதும் இருப்பார்கள். அதற்கு தலாய் லாமாவிடம் நான் நெருக்கமாய் இருக்கிறேன், தலாய் லாமாவிடமிருந்து மற்றவர்களுக்கும், மற்றவர்களிடமிருந்து தலாய் லாமாவுக்கும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியாய் இருக்கிறேன் என்பதுவும் ஒரு காரணம். பெரும்பாலும் நான் அவர்களுக்கு சிக்க மாட்டேன்.  ஏதாவது செய்து அவர்களிடம் இருந்து தப்பித்து விடுவேன் அல்லது அவர்களைக் கண்டபடி அலைய வைப்பேன். அவன் ஓற்றர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் என்னைத் தவற விட்டு விடுவார்கள்.... ஒரே ஒரு தடவை அவனே நேரில் வந்தான். அவன் வந்த போது நான் தெருவில் சின்னப் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்...

அக்‌ஷய்க்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. போலி மைத்ரேயனைப் பார்த்த நிகழ்ச்சியைச் சொன்ன போது கூட அவர் சின்னப் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொல்லவில்லை. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அருகில் அவன் வந்த போது தான் பார்த்ததாக மட்டுமே அவர் சொல்லி இருந்தார்.  அதனால் அக்‌ஷ்ய்க்கு தன் காதுகளின் கோளாறோ என்று தான் தோன்றியது. அவன் முகத்தில் தெரிந்த திகைப்பைக் கண்டு ஆசான் கலகலவென்று சிரித்தார். “அன்பரே. நான் மனதளவில் இன்னும் முதுமை அடையவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் என் பிள்ளைப் பிராயத்தைத்  தொட்டு விட்டு வருவேன். அந்த வாய்ப்பு தத்துவ சிந்தனைகளில் மூழ்கும் போதும், புனித நூல்களை வாசிக்கும் போதும், லாமாக்களுடன் பழகும் போதும் கிடைப்பதில்லை. சிறு பிள்ளைகளோடு நாமும் ஒரு பிள்ளையாக மாறும் போது மட்டுமே வாய்க்கும்....

அக்‌ஷய் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. தத்துவங்கள் சொல்வதில் மட்டுமல்ல வாழும் முறையில் ஆசான் வித்தியாசமானவர் தான்....

ஆசான் தொடர்ந்தார். “அவன் என்னை அழைத்து நேரடியாக எதாவது கேள்விகள் கேட்பான் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால் அவன் சாதாரண ஒற்றன் இல்லை. உளவாளிகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன். ஆனால் அவன் என்னை எதுவும் கேட்கவில்லை. என்னையே பார்த்தபடி தூரத்தில் நின்று கொண்டிருந்தான். நான் வழக்கமாக அவன் ஒற்றர்களை அலைக்கழிப்பதைப் போல லீ க்யாங்கையும் செய்யலாம் என்று நினைத்து வேகமாக ஓட்டமும் நடையுமாக எங்கெல்லாமோ போனேன். அவன் எப்போதும் பத்தடிகள் பின்னாலேயே இருந்தான். பாதி நாள் இப்படி ஓடிப்போனது.....

இது போன்ற குறும்புகள் எனக்கு சகஜம் என்பதால் எனக்கு சலிக்கவில்லை. ஆனால் அவனுக்கு சலித்தது போல் இருந்தது. ஒரு இடத்தில் என்னைப் பின் தொடராமல் லேசாய் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்து விட்டு நான் போகும் திசைக்கு எதிர்ப்பக்கமாய் வேகமாய் போனான். எதிர் திசையில் போக ஆரம்பித்தவுடன் எனக்கு சுவாரசியம் போய் விட்டது. அடுத்ததாக சுற்றி வளைத்து நான் ஒரு இடத்திற்குப் போன போது அங்கே தான் போவேன் என்று முன்பே யூகித்து வைத்து அங்கே எனக்காக காத்துக் கொண்டு இருப்பது போல் அதே புன்னகையுடன் அவன் உட்கார்ந்திருந்தான். அவன் என்னை விடாமல் பின் தொடர முடிந்தது கூட என்னை பாதிக்கவில்லை. நான் அடுத்தது எங்கே போவேன் என்று யூகித்து அங்கே எனக்காக காத்துக் கொண்டிருந்தது எனக்கு இப்போதும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது அன்பரே! ஏனென்றால் அது நான் அடிக்கடி போகும் இடமல்ல. அங்கே போகலாம் என்று நான் முன்பே நினைத்திருக்கவுமில்லை...

இப்போது சொல்லும் போது கூட ஆசான் முகத்தில் திகைப்பு தெரிந்தது.

அக்‌ஷய் புன்னகையுடன் சொன்னான். “அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை ஆசானே. நாம் எல்லோரும் பெரும்பாலும் பழக்கங்களின் அடிமைகள். வித்தியாசமாய் ஏதேதோ செய்கிறோம் என்று நினைத்து வேறு விதமாய் நாம் என்ன செய்ய ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு பழகிப்போன ஒழுங்கான, மாற்றாத வழிமுறையையே பின்பற்றுகிறோம். அது நமக்கே பல சமயங்களில் தெரிவதில்லை. லீ க்யாங் உங்களை நிறையவே ஆராய்ந்திருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் பதிந்திருக்கிற அந்த வழிமுறையை அவன் கண்டுபிடித்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போன பிறகு நேராகவோ சுற்றி வளைத்தோ நீங்கள் அடுத்தது இந்த இடத்திற்குத் தான் வருவீர்கள் என்று சரியாக அனுமானித்து அங்கே போயிருக்கிறான்....

ஆசான் பிரமித்துப் போனார். லீ க்யாங்குக்கு சரியான இணை இவன் தான் என்று தோன்ற ஆரம்பித்தது. லீ க்யாங்கிடம் மாட்டாமல் மைத்ரேயனைப் பாதுகாப்பாக இவனால் மட்டுமே கொண்டு வர முடியும் என்று அறிவும் சொன்னது. ஆசான் அக்‌ஷயை ஆவலுடன் பார்த்தார். நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?என்று அவர் பார்வை கேட்டது.

அக்‌ஷய் யோசித்தான். அவனுக்கு அந்த மைத்ரேயனை அடையாளம் காணுவதில் இவர்கள் தவறு செய்து விட்டார்களோ என்ற சந்தேகம் இன்னமும் இருந்தது. மனதில் வரித்து வைத்த வடிவங்கள், கூழாங்கல்-வைரம் உதாரணம் பற்றி எல்லாம் ஆசான் சொன்ன போதும் மனம் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்தது. இனி எதுவும் கேட்பதற்கு முன்னால் அவருக்கு அவன் ஒரு பதில் சொல்லியாக வேண்டும்.... அது தான் நியாயம்.... மனதில் வருணும், கௌதமும், சஹானாவும் வந்து போனார்கள். அவனுடைய திபெத்திய குரு வந்து போனார். ஆசான் பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி பற்றி சொன்ன போது நாகமச்சத்தில் ஏற்பட்ட சிலிர்ப்பும் நினைவுக்கு வந்து போனது. கடைசியில் முடிவெடுக்க தன் அந்தராத்மாவின் குரலைக் கேட்க நினைத்தான்.

ஆசான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அக்‌ஷய் சிலை போல் சமைந்தான். ஆசான் அறியாத தியானம் இல்லை. தியான நிலை என்பது உடனடியாக வாய்க்கும் அனுபவம் அல்ல. சில நொடிகள் தொடர்ந்து தியானத்தில் மனம் லயிக்க எத்தனையோ ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சி வேண்டும். அப்படி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பின்பும் கூட ஆரமபித்தவுடனே தியான நிலை அமைந்து விடாது. குறைந்த பட்சம் சில நிமிடங்களாவது கண்டிப்பாகத் தேவைப்படும். ஆனால் அக்‌ஷயோ ஒரு கணத்தில் இயல்பு நிலையிலிருந்து ஆழ்தியான நிலைக்குப் போனது போல இருந்தது அவருக்கு அடுத்த பிரமிப்பை ஏற்படுத்தியது. என்ன மனிதனிவன்!

அவன் சுமார் இரண்டு நிமிடங்கள் அப்படி இருந்திருப்பான். அவன் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் அவரால் அவனிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. “என்ன திடீரென்று....

அக்‌ஷய் சொன்னான். “மன்னிக்க வேண்டும் ஆசானே. சில தீர்மானங்களை எட்டும் முன் என் அந்தராத்மா என்ன சொல்கிறதென்று கேட்பது என் வழக்கம். அது தான்....

இவ்வளவு விரைவாக அந்த நிலைக்குப் போக முடிந்தவர்களை நான் பார்த்தது இல்லை...ஆசான் உண்மையைச் சொன்னார்.

ஆனால் அக்‌ஷய் ஆசானின் வார்த்தைகளால் புளங்காகிதம் அடைந்து விடவில்லை. அமைதியாகச் சொன்னான். “சில சமயங்களில் வாழ்வா சாவா என்பது போன்ற சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும் ஆசானே. அப்போது நிறைய நேரம் யோசிப்பதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. உடனடியாகத் தீர்மானம் எடுத்து அதைச் செயல்படுத்தினால் தான் நாம் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும். அந்த மாதிரி சமயங்களில் பயன்படுத்த இந்த வித்தையைச் சொல்லித் தந்தவர் உங்கள் திபெத்தைச் சேர்ந்த ஒரு யோகி தான். நான் எத்தனையோ முறை இதை உபயோகப்படுத்தி மரணத்திலிருந்து தப்பித்திருக்கிறேன்....

அந்த வித்தை அவன் உயிரைப் பல முறை காப்பாற்றி இருக்கிறது என்று நன்றியுடன் சொன்னானே ஒழிய இந்த வித்தையைக் கற்றுத் தேர்ந்தவன் நான் என்கிற கர்வம் மறைமுகமாகக் கூட அவன் பேச்சில் இருக்கவில்லை என்பதைக் கவனித்த ஆசானுக்கு அவன் மீது மரியாதை பல மடங்கு பெருகியது.

ஆசான் தன் மனதைப் பெரிதும் வாட்டிக் கொண்டிருந்த கேள்வியை அவனிடம் மெல்ல கேட்டார். “உங்கள் அந்தராத்மா என்ன சொன்னது அன்பரே? மைத்ரேயரை திபெத்திலிருந்து நீங்கள் அழைத்து வருவீர்களா?

(தொடரும்)

என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

Monday, November 17, 2014

மரண காலத்தில் கடைசி நினைவு!


கீதை காட்டும் பாதை 34


ரண காலம் மனிதனுக்கு மிக முக்கியமானது. அவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதை மரண காலம் அவனுக்குத் தெளிவாகச் சொல்லும். மரண காலத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயமான அக்‌ஷர ப்ரஹ்ம யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மிகத் தெளிவாகச் சொல்கிறார். அதற்கு அச்சாரமாக கீதையின் ஏழாம் அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தின் கடைசி சுலோகத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

அதிபூதம், அதிவைதம், அதியக்ஞம் – இவற்றுடன் கூடியவனாகவும், எல்லாவற்றிற்கும் ஆத்மசொரூபனாகவும் உள்ள என்னை மரணத்தறுவாயிலும் கூட அறிகிறார்களோ, அத்தகைய ஒன்றிய மனதோடு கூடிய அவர்கள் என்னையே அறிகிறார்கள்- அடைகிறார்கள்.

அந்த மூன்று சொற்களும் அர்ஜுனனுக்குப் புதிதானதால் அவன் அதிபூதம் அதிவைதம் அதியக்ஞம் என்ற சொற்களுக்கு என்ன பொருள் என்றும் இந்த சரீரத்தை விட்டுப் புறப்படும் போது மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் உன்னை எப்படி அறிய வேண்டும் என்று கேட்பதில் இருந்து எட்டாம் அத்தியாயம் ஆரம்பமாகிறது.

அதற்கு பகவான் பதிலளிக்கிறார்.

“அழியும் சுபாவமுள்ளது அதிபூதம். புருஷன் அதிவைதம். இந்த உடலில் அதியக்ஞமாக இருப்பவன் நானே.

மரண காலத்திலும் என்னையே தியானித்துக் கொண்டு சரீரத்தை விட்டுச் செல்பவன் என் நிலையை அடைகிறான். அதில் சந்தேகமேயில்லை.

குந்திமகனே! மரண காலத்தில் எந்தெந்த எண்ணங்களை நினைத்தபடியாக மனிதன் சரீரத்தைத் துறக்கிறானோ எப்போது அந்த நிலையையே நினைத்ததன் பலனாக அவன் அந்தந்த நிலையையே அடைகிறான்.

அதிபூதம் என்பது மூலப்பொருள்கள். இயற்கையாகவே தோன்றி, அழியும் சுபாவம் உள்ளது. அதில் உறைந்திருந்து அது இயங்கத் தேவையான  தனிப்பட்ட சக்தி (இங்கு புருஷன் என்ற சொல் கையாளப்படுகிறது) அதிவைதம். அதில் மூல சக்தியாக இருப்பது இறைசக்தியான அதியக்ஞம்.

இந்த மூன்று பிரிவுகளின் மூலமாகவும் இயங்குவது எல்லாம் வல்ல இறைவனே. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் அணுக்கள் மூலக்கூறுகள் என்ற ஜடப்பொருள், அவற்றிற்குள் உறைந்திருக்கும் தனிப்பட்ட இயங்கு சக்தி, எல்லாவற்றையும் தீர்மானித்து இயக்கும் பிரபஞ்ச சக்தி எனச் சொல்லலாம்.

இன்றைய விஞ்ஞானிகள் அணுவையும் துளைத்தெடுத்து கடைசியில் ஜடப்பொருளாகத் தோற்றம் அளிக்கும் அணுவில் இருந்து அண்டம் வரை ஆராய்ந்து கொண்டே போனால் மிஞ்சுவது அனைத்துமே சக்தி வீச்சுக்களே, சக்தியின் பேரியக்கமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதையே தான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.

அடுத்ததாக இங்கு மரண காலத்திற்கும், அந்தக் கட்டத்தில் என்ன நினைக்கிறோம் என்பதற்கும்  இவ்வளவு முக்கியத்துவம் ஸ்ரீகிருஷ்ணர் தந்திருப்பது ஏன் என்று பார்ப்போம்.

ஒருவிதத்தில் பார்த்தால் வாழ்க்கையே மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பயணம் தான். மற்ற எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு முயற்சியை மனிதன் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் மரணத்திற்கு அவன் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அது தானாக ஒரு நாள் நிகழும். அதிலிருந்து அவன் தப்பிக்க முடியாது. ஒரு இடத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயிலில் அமரும் பயணி தானாக மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தானாக அந்த ஸ்டேஷனுக்கு அவனை ரயில் அழைத்துப் போகும். அப்படித்தான் நாமும் மரணத்திற்கு டிக்கெட் வாங்கி வந்தவர்கள். வாழ்க்கை தானாக அதில் கொண்டு போய் விட்டு விடும்.

ஆனால் இந்த வாழ்க்கைப் பயணத்தில் இருக்கும் பெரிய வித்தியாசம் என்ன என்றால் மரணம் என்ற அந்த ஸ்டேஷனில் இறங்கும் போது நமக்கிருக்கும் மனநிலை அடுத்த பயணத்தைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றதாக இருக்கிறது என்பதே. அதன் சூட்சுமத்தை இனி ஆராய்வோம்.

காலையில் விழித்தெழும் கணத்திலிருந்து இரவு உறங்கப் போகும் கணம் வரை மனிதன் ஆயிரக்கணக்கான செயல்களில் ஈடுபடுகிறான். தானாக செய்யும் செயல்கள், அனிச்சையாகச் செய்யும் செயல்கள் என தொடர்ந்து அவன் செய்யும் செயல்கள் எண்ணிக்கையில் பல்லாயிரமாக விரிந்தாலும் இரவில் உறங்கும் முன் தன் அன்றைய வாழ்வை அவன் திரும்பிப் பார்த்தானானால் நினைவில் மிஞ்சுவது கைவிரல்களால் எண்ண முடிந்த மிகச்சில செயல்களே. அவையே அவனுக்கு அன்றைய முக்கிய செயல்கள். அல்லது அவற்றின் தொடர்ச்சியாக அவன் மேற்கொண்டு செய்ய வேண்டி இருப்பவை. மற்றவை எல்லாம் பரிபூரணமாக முடிந்து விட்டவை. அவற்றின் நோக்கம் முடிந்து விட்டதால் அவன் தொடர வேண்டியிருக்காத செயல்கள். அதனால் அவை மறக்கப்பட்டு விட்டன.

இப்படி ஒரு நாளைப் போலத் தான் வாரங்கள், மாதங்கள், வருடங்கள் வாழ்க்கை முழுவதும் நடக்கின்றது. மரணத்தறுவாயில் மனிதனின் நினைவில் மிஞ்சுவது வாழ்க்கையின் சாராம்சமும், முக்கியமாய் நினைத்திருந்து முடித்து விடாத விஷயங்களும் மட்டுமே.

முழுமையாக வாழ்ந்து முடிந்தவனுக்கு மட்டுமே மரணத்தறுவாயில் இறைவன் நினைவு வரும். பிரபஞ்சத்தின் ஜடப்பொருள்கள் முதலான அனைத்திலும் அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனை உணர்ந்தவன் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு நிகழ்விலும் இறைவனைக் காணுவதைத் தவற விடுவதில்லை. வாழ்க்கையின் முடிவிலோ, அவன் வாழ்நாள் எல்லாம் உணர்ந்ததன் தாக்கம் கண்டிப்பாகத் தங்கவே செய்யும். அதனால் அந்த நேரத்தில் அவனால் இறைவனை மனதார நினைக்கவும் தியானிக்கவும் முடியும். அதுவே அவனை இறைநிலையை அடையவும் செய்யும். இதைத்தான் பகவத் கீதை சொல்கிறது.  

நல்ல உதாரணமாய் மகாத்மா காந்தியைச் சொல்லலாம். சிறிதும் எதிர்பாராமல் சுடப்பட்ட அதிர்ச்சியான நேரத்திலும் “ஹே ராம்என்று அவரால் சொல்ல முடிந்தது மனதளவில் அவர் இருந்த தயார்நிலையையே சுட்டிக் காட்டுகிறது. வாழ்நாள் பூராவும் வாயால் மட்டுமல்லாமல் மனதார வாழ்ந்த ஆன்மிக வாழ்க்கை அவரை அந்தக் கணத்திலும் இறைவனை நினைக்க வைத்திருக்கிறது.

வெறும் வார்த்தைகளினால் மட்டும் இறைவன் இருந்திருப்பாரேயானால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு கிளிப்பிள்ளையின் உதாரணத்தை பெரியோர் சொல்வார்கள். எப்போது பார்த்தாலும் ராதே கிருஷ்ணா என்று அந்தக் கிளி சொல்லிக் கொண்டிருக்கும். அதை வளர்த்தும் வீட்டாருக்கோ அதை நினைக்கையில் ஒரே பெருமை. ஒருநாள் வீட்டு ஆள்கள் வெளியே சென்றிருக்கையில் ஒரு பூனை வந்து விட்டது. அந்தப் பூனை கிளியைப் பிடிக்கையில் அது வரை ராதே கிருஷ்ணாசொல்லிக் கொண்டிருந்த அந்தக்கிளி கீச்சு கீச்சென்று கத்த ஆரம்பித்து விட்டது.

வாழ்நாள் எல்லாம் வாயளவில் சொன்னாலும் இதயத்தில் நிலைக்காத வரை இறை நினைவு இறுதியில் வராது!

பாதை நீளும்.....

என்.கணேசன்

Thursday, November 13, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 20



டோர்ஜே நெருங்கியவுடன், அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆட்டத்தை நிறுத்தி விட்டு அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். மேட்டில் இருக்கும் வீட்டு ஜன்னல் வழியாக மட்டும் அவ்வப்போது முகம் மட்டுமே தெரியும் டோர்ஜேயை அவர்கள் அப்போது தான் முழுதாகப் பார்க்கிறார்கள். ஆசான் அவர்கள் ஆச்சரியத்தைக் கவனித்து விட்டு டோர்ஜேயைக் கூர்ந்து பார்த்தார். மிக வசீகரமான முகமும், புத்திசாலித்தனமான கண்களும் கொண்ட அந்தச் சிறுவனை அவரும் இது வரை பார்த்தது இல்லை.

ஆசான் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி கேட்டார். “நீ இந்தப் பகுதிக்குப் புதியவனா? உன் பெயர் என்ன?

டோர்ஜே சொன்னான். “நான் புதியவன் அல்ல. நான்கு வருஷங்களாக அந்த வீட்டில் தான் இருக்கிறேன்”. சொல்லியவன் அந்த வீட்டைக் கைநீட்டிக் காட்டவும் செய்தான். ஆசான் அந்த வீட்டைப் பார்க்க, ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஒற்றைக் கண் பிக்கு ஜன்னலில் இருந்து வேகமாகப் பின் வாங்கினார். ஆசான் கண்களில் தானும் பட அவர் விரும்பவில்லை.

டோர்ஜே அவருடைய இரண்டாம் கேள்விக்குப் பதில் சொன்னான். “என் பெயர் மைத்ரேயன்”. லீ க்யாங் அவனிடம் திரும்பத் திரும்ப சொல்லி இருந்தான். “இனி என்றும் உன் பெயர் மைத்ரேயன் தான். டோர்ஜே என்ற பெயரை நீ மறந்து விட வேண்டும்

மைத்ரேயன் என்ற பெயரை டோர்ஜே சொன்னவுடன் ஆசான் சில கணங்களுக்கு இருந்த இடத்திலேயே சிலையானார். மைத்ரேயன் இந்தியப் பெயர். அந்தப் பெயர் திபெத்தில் சாதாரணமாக வைக்கப்படும் பெயரல்ல...

அவர் அவனை மேற்கொண்டு கேள்விகள் கேட்க நினைத்த போது டோர்ஜே தூரத்தில் வந்து கொண்டிருந்த சமையல்காரனைப் பார்த்தான். அவனைப் பார்த்தவுடன் டோர்ஜே முகத்தில் பயம் பரவியது. அவன் தன்னைப் பார்க்கும் முன் பழையபடி வீட்டுக்குள் போய் விடுவது நல்லது என்ற எண்ணம் மேலிட வேகமாக வீட்டை நோக்கி டோர்ஜே ஓட ஆரம்பித்தான். கிட்டத்தட்ட போக ஆரம்பித்திருந்த ஒற்றைக்கண் பிக்குவின் உயிர், டோர்ஜே ஓடி வருவதைப் பார்த்த பின் திரும்பியது. தூரத்தில் சமையல்காரன் வந்து கொண்டிருப்பதையும் கவனித்த பின் தான் டோர்ஜே ஓடி வருவதற்கான காரணம் தெரிந்தது.

ஒற்றைக்கண் பிக்குவுக்கு ஒரு பக்கம் சமையல்காரன் வந்து கொண்டிருப்பது சந்தோஷமாக இருந்தது. அவன் வராமல் இருந்திருந்தால் டோர்ஜே ஆசானிடம் என்னவெல்லாம் சொல்லி இருப்பானோ! இன்னொரு பக்கம் வேறொரு பயம் அவரைப் பிடித்து உலுக்கியது. டோர்ஜே வெளியில் ஆசான் அருகிலும், மற்ற சிறுவர்கள் அருகிலும் நின்று கொண்டிருந்த்தை சமையல்காரன் பார்த்திருப்பானோ? பார்த்திருந்தால் கண்டிப்பாக லீ க்யாங்க் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு போய் விடுவானே!

வேக வேகமாக மூச்சு வாங்கியபடி வந்து நின்ற டோர்ஜேயிடம் பிக்கு கேட்டார். “அந்த தாத்தாவிடம் என்ன பேசினாய்”.  பேசியதை டோர்ஜே சொன்னான். அவன் மைத்ரேயன் என்ற பெயரை ஆசானிடம் சொல்லி இருந்தது பிக்குவை கலக்கமடையச் செய்தது. ரகசியமாய் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். ஆசான் அந்த சிறுவர்களுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்வை அடிக்கடி அவர்கள் வீட்டுப் பக்கம் வந்து போனது.

பிக்கு டோர்ஜேயிடம் பதற்றத்துடன் கேட்டார். “சமையல்காரன் உன்னைப் பார்த்தானா?

இல்லை. அவன் குடித்திருக்கிறான்...

சமையல்காரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. மற்ற சமயங்களில் அவர்களைக் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து அங்கு நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் லீ க்யாங்கிடம் விவரித்துச் சொல்லும் அவன் குடித்து விட்டால் தனியொரு உலகிற்குப் பயணிக்க ஆரம்பித்து விடுவான். ஏதோ கனவுலகில் மிதந்து கொண்டிருப்பான். எந்திரத்தனமாக வேலைகளைச் செய்வான். சுற்றிலும் என்ன நடந்தாலும் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாதவன் போல் இருப்பான்.

பிக்குவுக்கு சிறிது நிம்மதியாயிற்று. ஜன்னல் வழியாக மறுபடி பார்க்கையில் ஆசான் சமையல்காரன் அவர்கள் வீடு நோக்கி வருவதையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. போதையில் இருந்த சமையல்காரன் ஆசானை கவனிக்காமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வாங்கி வந்த சாமான்களை சமையலறையில் வைத்து விட்டு தன்னறைக்குப் போய் அவன் தாளிட்டுக் கொண்டான்.

பிக்கு மீண்டும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த போது ஆசான் போயிருந்தார். அந்த சிறுவர்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தார்கள். பிக்கு டோர்ஜேவை இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டு மெல்ல கேட்டார். “நீ ஏன் சொல்லிக் கொள்ளாமல் அங்கே ஓடினாய்

தலையைக் குனிந்து கொண்ட டோர்ஜே பதில் எதுவும் சொல்லவில்லை.

சமையல்காரன் மட்டும் பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும் தெரியுமா?பிக்கு கேட்டார்.

“என்னை மன்னித்து விடுங்கள் ஆசிரியரேடோர்ஜே சொன்னான்.

பிக்கு அவன் முதுகை வருடியபடியே சொன்னார். லீ க்யாங் மிகவும் பொல்லாதவன் டோர்ஜே. தெரிந்தால் நம்மை கடுமையாக தண்டித்து விடுவான். நம்மால் அதை எல்லாம் தாங்க முடியாது

பிக்குவின் வார்த்தைகளை விட அதிகமாய் அவருடைய பயம் டோர்ஜேக்கு நிலைமையின் பூதாகரத்தைச் சொன்னது. இனி இப்படி செய்ய மாட்டேன் ஆசிரியரே. என்னை மன்னித்து விடுங்கள்

ஆசான் மைத்ரேயன் என்ற பெயரை டோர்ஜே சொன்னதை வைத்து எத்தனை யூகித்திருப்பார் என்பதை பிக்குவால் தீர்மானிக்க முடியவில்லை. இனி இங்கு இருப்பது பாதுகாப்பல்ல என்று தோன்றியது.  ஆனால் வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என்று லீ க்யாங்கிடம் வாய் விட்டு சொல்ல முடியாது. சொன்னால் ஏன்  என்று கேட்பான்.....

“ஆசிரியரே, அந்த தாத்தாவே விளையாடும் போது நீங்கள் ஏன் என்னுடன் விளையாடக் கூடாது”  டோர்ஜே மெல்லக் கேட்டான்.

அந்த நாளிலிருந்து, சமையல்காரன் இல்லாத போது பிக்கு டோர்ஜேயுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். அவருக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்த ஆசான் தன்னை அறியாமல் விளையாட்டையும் சேர்த்துச் சொல்லித்தந்த மாதிரி இருந்தது. பிள்ளைப் பருவம் இரண்டாம் முறை வந்து விட்டது போல ஒரு உணர்வு மேலிட்டது. விளையாடும் போது டோர்ஜேயின் சின்னச் சின்ன குறும்புகளையும் அவரால் ரசிக்க முடிந்தது. ஆனாலும் அவன் பிராயத்தை ஒத்த பிள்ளைகளுக்குத் தான் இணையல்ல என்பதையும் உணர்ந்திருந்த அவருக்கு டோர்ஜேயை பார்க்க பாவமாய் இருந்தது. மைத்ரேயன் என்ற வேடத்திற்காக இந்தக் குழந்தை எத்தனை இழக்க வேண்டி இருக்கிறது!....

அந்த நிகழ்ச்சி முடிந்து மூன்று காலம் முடிந்த போது தான் அவருக்கு நிஜ மைத்ரேயன் பற்றி கேட்க நேர்ந்திருக்கிறது. மடியில் அமர்ந்திருந்த டோர்ஜே அவருக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று மீண்டும் தொட்டுப் பார்த்தான்.

“காய்ச்சல் என்றால் படுத்துக் கொள்ளுங்கள் ஆசிரியரே. இன்றைக்கு பாடமோ விளையாட்டோ வேண்டாம்என்று கனிவான குரலில் டோர்ஜே சொன்னான். அவனுக்குக் காய்ச்சல் வரும் போது அவர் உபயோகிக்கும் அதே வார்த்தைகள், அதே தொனி.....

மனம் நெகிழ்ந்து போன பிக்கு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டார். அவதாரங்களை அவர் சந்தேகிக்க ஆரம்பித்து பல காலம் ஆகிறது. மனிதனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், பயத்தை ஏற்படுத்தவும் ஆன்மீகப் பெரியோர் ஏற்படுத்தியிருக்கும் கற்பனை யுக்தி என்றே அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அதற்கேற்றாற் போலவே மைத்ரேயரைப் பற்றி பெரிதாக பத்து வருடங்களுக்கு முன் பேசப்பட்டு அது புஸ்வாணமாகப் போயிருந்தது. அப்படித் தான் அவர் நினைத்திருந்தார்.  ஆனால் இப்போது லீ க்யாங்கே பேச ஆரம்பித்திருக்கிறான் என்கிற போது அலட்சியப்படுத்த முடியவில்லை. அவரையும் அறியாமல் அவர் உடல் ஏனோ நடுங்கியது.

அந்த நடுக்கத்தை உணர்ந்த டோர்ஜேக்கு அவர் காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை, பயத்தால் தான் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரிய ஆரம்பித்தது. இதற்கு முன் அவன் அவர் பயத்தை உணர்ந்தது அவன் திடீரென்று வெளியே விளையாட ஓடிப் போன போது தான். அவன் வெகுளித்தனமாக அவரைக் கேட்டான். “நான் தான் இன்றைக்கு வெளியே போகவில்லையே ஆசிரியரே, பின் எதற்காக நீங்கள் பயப்படுகிறீர்கள்?


சான் அக்‌ஷயிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “...அந்தப் பெயர் எனக்கு ஏற்படுத்திய சந்தேகம் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று ஆரம்பத்தில் எனக்குத் தோன்றியது அன்பரே! ஆனால் மேலும் விசாரித்ததில் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது போல் வேறு சில தகவல்களும் கிடைத்தன. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது லீ க்யாங் அங்கு போய் வருகிறான் என்பது தெரிந்தது. ஒரு காரணமும் இல்லாமல் அவன் எதையும் செய்து யாரும் பார்த்திருக்க முடியாது..... சீன அதிகார வர்க்கத்திலும் எங்களுக்குத் தகவல் தர ஆள்கள் இருக்கிறார்கள். அவர்களால் எங்களுக்கு வெளிப்படையாக உதவ முடியா விட்டாலும் கசிகிற தகவல்களையாவது அனுப்பி வைப்பார்கள். அவர்களிடமிருந்து மைத்ரேயன் என்று ஒரு சிறுவன் உருவாகி வருகிறான் என்ற உறுதியான தகவல் இரண்டு வாரங்களுக்கு முன் கிடைத்தது....

“அந்தப் பையன் பார்க்க எப்படி இருக்கிறான்அக்‌ஷய் கேட்டான்.

“சினிமாவில் நடிக்கும் பையன் போல இருக்கிறான். களையான முகம்...

“உங்கள் நிஜ மைத்ரேயன் பார்க்க எப்படி இருக்கிறான்?அக்‌ஷய் ஆவலோடு கேட்டான்.

ஆசான் ஒரு புகைப்படத்தை அவனிடம் கொடுத்தார். சற்று தூரத்தில் இருந்து அந்த சிறுவனுக்குத் தெரியாமல் எடுத்த புகைப்படம் என்று நன்றாகவே தெரிந்தது.  மிக ஒல்லியாகவும், பார்க்க சாதாரணமாகவும் இருந்த ஒரு ஏழைச்சிறுவனை அதில் பார்த்த போது அக்‌ஷய்க்கு ஏமாற்றமாய் இருந்தது. புத்தரின் அவதாரமாக இருக்கும் சிறுவன் முகத்தில் ஒரு தேஜஸாவது தெரிய வேண்டாமோ! பார்வையிலும் கவர்ந்திழுக்கும் காந்தம் இல்லை. அந்தச் சிறுவன் எங்கோ தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனால் அவரிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. “இது... இது... நிஜமாகவே நீங்க நம்பும் மைத்ரேயன் தானா?

ஆசான் லேசாகப் புன்னகைத்தார். “நம் மனதில் வரித்து வைத்திருக்கிற உருவங்களைத் தவிர வேறு உருவத்தில் வந்தால் நாம் கடவுளைக் கூட அடையாளம் கண்டு கொள்ள மாட்டோம் அன்பரே.

அக்‌ஷய்க்கு சுருக்கென்றது. அவர் சொல்வது உண்மையே அல்லவா! ஆனால் சாந்த சொரூபமாய் ஆழ்ந்த தியானத்தில் பார்த்திருந்த புத்த உருவங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்த ஒரு தோற்றத்தை மைத்ரேயன் என்று நம்ப இப்போதும் அவனுக்குக் கஷ்டமாய் இருந்தது.

ஆசான் கேட்டார். “பட்டை தீட்டாத வைரத்தைப் பார்த்திருக்கிறீர்களா அன்பரே?

இல்லையென அவன் தலையசைத்தான்.

அவர் சொன்னார். “ஒரு சாதாரண கூழாங்கல்லிற்கும் பட்டை தீட்டாத வைரத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் எதையும் பார்த்து விட முடியாது அன்பரே. அதனால் நாம் போகும் பாதையில் அது கிடந்தாலும் அதை அப்படியே தள்ளி விட்டுத் தான் போவோமே ஒழிய அதை எடுத்துப் பயனடைய மாட்டோம்

அந்த நேரத்தில் அவசரமாக ஒரு பிக்கு உள்ளே நுழைந்தார். “மன்னிக்க வேண்டும் ஆசானே.... வெளியே பழையபடி அந்த உளவாளிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதைத் தெரிவிக்கத் தான் வந்தேன்....

ஒரு பெருமூச்சு விட்ட ஆசான் அக்‌ஷயிடம் சொன்னார். “இது லீ க்யாங்கின் அறிவு கூர்மைக்கு ஒரு சின்ன உதாரணம்


கூடவே அவருக்கு இவன் இதை எப்படி சமாளிக்கப்போகிறான் என்ற கவலை லேசாக எழுந்தது.

(தொடரும்)
என்.கணேசன்


Monday, November 10, 2014

இந்திய யோகிகளும், அஷ்ட மகாசித்திகளும்!


மகாசக்தி மனிதர்கள்-1


லக அளவில் உள்ள மகாசக்தி படைத்த மனிதர்கள் என்று எடுத்துக் கொண்டால் முதல் இடம் பெறுபவர்கள் நம் இந்திய யோகிகள் தான். கற்பனைக்கும் எட்டாத அபூர்வ சக்திகளைப் பெற்றவர்கள் இவர்கள். முற்றிலும் தேர்ச்சி பெற்ற ஒரு யோகிக்கு அஷ்ட மகாசித்திகள் என்று சொல்லப்படும் எட்டு வகையான அபூர்வ சக்திகள் வசப்பட்டிருக்கும் என்று பதஞ்சலி மகரிஷி,  திருமூலர் உள்ளிட்டவர்கள் அந்தக் காலத்திலேயே பதிவு செய்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். 

திருமூலர் கூறுகிறார்:
தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. 

அவர் கூறும் அந்த அஷ்டமகாசித்திகள் இவை தான்:

அணிமா – அணுவைப்  போல் நுட்பமான மிக நுண்ணிய நிலைக்கு உடலைக் கொண்டு சென்று கண்களுக்குப் புலப்படாதிருத்தல்.

மகிமா  உடலை மலையைப்  போல் பிரம்மாண்டமாகப் பெரிதாக்குதல்.

இலகிமா -  காற்றைப்  போல் உடலை லேசாக்குதல். இந்த நிலையை எட்டிய பிறகு ஒரு யோகியால் காற்றில் மிதப்பதும், தண்ணீரில் நடப்பதும் சாத்தியமாகிறது.

கரிமா –  எதனாலும் அசைக்க முடியாதபடி மிகவும் உடலை மிகவும் கனமாக்குதல்.

பிராப்தி -  இயற்கை சக்திகளையும், மற்ற எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல். தன் மனத்தினால் நினைத்த எதையும் மாற்றுதல் மற்றும் அடைதல்.

பிரகாமியம் –  தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்.

வசித்துவம் – விலங்குகள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் வசியப்படுத்தி அனைத்தையும் தன் வசப்படுத்தல்.

ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல் முதலானவற்றைச் செய்யும் இறைசக்தியையே பெற்று விடுதல்.

இந்த அஷ்டமகாசித்திகள் உண்மையான யோகிகளிடம் இயல்பாகவே இருந்த போதிலும் அவர்கள் அந்த மகாசக்திகளை அனாவசியமாகவோ, சுயநலத்திற்காகவோ அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கும் சுயகட்டுப்பாட்டைப் பெற்றிருந்தார்கள். தேவையான சக்தியை, தேவையான அளவு மட்டும் பயன்படுத்திக் கொண்டனர்.

அணிமா என்ற முதல் சக்தி மற்றவர்கள் கண்ணில் படாமல் இருக்க இந்த மகாசக்தி யோகிகளுக்கு மிக உதவியாக இருக்க வல்லது.
போலிச் சாமியார்கள் என்னைக் கவனி, வணங்கு, பாராட்டு என்று விளம்பர யுத்திகளை மேற்கொண்டு பக்தர்களைச் சேர்க்கும் வேலையில் சலிக்காமல் இறங்குவார்கள். ஆனால் தனிமையில் யோக மார்க்கத்தில் பயணிக்கும் யோகிகளும், சித்தர்களும் பொதுமக்கள் பார்வைக்குத் தென்படுவது மிக அபூர்வம். தென்பட்டால் அதைச் செய்து கொடுங்கள், இதை சாதித்துத் தாருங்கள், இரும்பைத் தங்கமாக்குங்கள், என்னை செல்வந்தனாக்குங்கள், என் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள் என்று மக்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளக் கூடும்.  சொந்த ஆசைகளில் இருந்து தப்பித்த அந்த துறவிகள் இவர்கள் ஆசைகளை நிறைவேற்ற ஆரம்பித்தால் அவர்கள் அடுத்து வேறு ஏதாவது வேலையை எப்போதாவது செய்ய முடியுமா என்ன?

எனவே மகாசக்தி வாய்ந்த யோகிகள் அவசியம் நேரும் போது மட்டும் தகுந்த நபர்கள் கண்களில் தென்படுவார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் அடுத்தவர் பார்வையில் இருந்து மறைந்தே இருப்பார்கள். புராணக் கதைகளில் மாயமாக மறைந்தார் என்று படித்திருக்கிறோம். அப்படி அவர்கள் மாயமாக மறைய உதவிய சக்தி அணிமாவாக இருந்திருக்கக் கூடும்.

மகிமா சக்தியை யோகிகள் அதிகம் உபயோகித்ததாகவோ அதற்கான முகாந்திரங்கள் இருந்ததாகவோ தெரியவில்லை. ஆனால் புராணங்களில் இறைசக்தி படைத்தவர்கள் விஸ்வரூபம் எடுத்ததாக என்று நாம் நிறைய படித்திருக்கிறோம். அது மகிமா சக்தியால் தான் சாத்தியமாயிருக்க வேண்டும்.

இந்த இரண்டு சக்திகளையும் யோகிகள், இறைசக்தி பெற்றோர் மட்டுமே தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்ல முடியாது. புராணங்களில் அசுரர்களும் இந்த சக்தியை தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தங்கள் உருவத்தை அசுரர்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப சுருக்கியோ, பெருக்கியோ காட்டினார்கள் என்பதை நாம் படித்திருக்கிறோம்.

உடலை மிக லேசாக்கி காற்றில் மிதப்பதையும், நீரில் நடப்பதையும் சாத்தியமாக்கும் இலகிமா சக்தியை இந்திய, திபெத்திய யோகிகள் தேவைப்படும் போது சர்வசாதாரணமாக உபயோகித்துக் கொண்டார்கள் என்று நிறைய பழங்குறிப்புகள் கூறுகின்றன. கல்லைக்கட்டி திருநாவுக்கரசரைக் கடலில் எறிந்த போது அவர் இந்த இலகிமா சக்தியைப் பயன்படுத்தியே கடலில் மிதந்து உயிர்பிழைத்திருக்க வேண்டும்.

யோகிகளும், பல பௌத்த சமண மத துறவிகளும் அக்காலத்தில் இந்தக் கூடு விட்டு கூடு பாயும் பிரகாமிய சக்தியில் வல்லவர்களாக இருந்தனர் என்பது பல பழமையான ஏடுகளில் இருந்து நம்மால் அறிய முடிகிறது.

கரிமா என்னும், உடலை எளிதில் யாரும் அசைக்க முடியாதபடி கனமாக்கிக் கொள்ளும் சக்தி போதிதர்மர் போன்ற மகாசக்தியாளர்கள் மூலம் இந்தியாவில் இருந்து மேலை நாடுகளுக்குப் பரவி தற்போது தற்காப்புக் கலைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எதிரிகள் தாக்க வரும் போது தூணைப் போல் அசைக்கக்கூட முடியாதபடி நிற்க இந்த சக்தி உதவுகிறது.

விலங்குகளையும், மனிதர்களையும் வசியப்படுத்திக் கொள்ளும் சக்தியான வசித்துவம் யோகிகளிடம் மிக இயல்பாக இருந்தது.  கொடிய விலங்குகள் வாழும் அடர்ந்த காடுகளில் பழங்காலத்தில் வசித்தும் தவமியற்றியும் வந்த யோகிகளும் துறவிகளும் இந்த வசித்துவ சக்தி இல்லாதிருந்தால் உயிரோடிருந்திருக்கவே முடியாதல்லவா?

பிராப்தி மற்றும் ஈசத்துவம் போன்ற மகாசக்திகள் ஒரு முழுமையான யோகிக்கே வாய்ப்பனவாக இருந்தன. இயற்கை சக்திகளைத் தன்வசப்படுத்திக் கொள்வதும் மற்ற இறை சக்திகளை தன் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்வதும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் யோகிகளால் கையாளப்பட்டன. தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு தாங்களே முழுப்பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதாலும், தவறாகப் பயன்படுத்தினால் அது அவர்களுக்கே முதல் கேடு என்பதாலும் மிக கவனமாகவும், அபூர்வமாகவும் மட்டுமே இந்த சக்திகள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன.

முழுமையான யோகிகளாக இல்லா விட்டாலும் யோக மார்க்கத்தில் உண்மையாகப் பயணித்தவர்கள் கூடத் தங்கள் திறமைக்கும், முயற்சிகளுக்கும் ஏற்றபடி பல சக்திகள் பெற்றிருந்தனர். பல நாட்கள் உணவும், நீரும் இல்லாமல் உயிர் வாழ்வது, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிவது, தொலைவில் நடப்பவற்றை பார்க்கவும், கேட்கவும் முடிவது, குளிர், வெப்பம் ஆகியவற்றை எந்த அளவிலும் அசௌகரியப்படாமல் தாங்கிக் கொள்வது போன்ற சக்திகளைப் பெற்றிருந்தார்கள்.
 
இப்படிப்பட்ட மகாசக்தி மனிதர்கள் ஒரு காலத்தில் நம் பாரத நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் காலப் போக்கில் அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வந்து விட்டது என்பது கசப்பான உண்மை. அதற்கு பதிலாக அந்த யோகிகளின் போர்வையில் போலிகள் நிறைய வலம் வர ஆரம்பித்து விட்டார்கள்.

போலிகள் அதிகம் என்பதாலேயே அந்த மகாசக்திகளையும், உண்மையான மகாசக்தி மனிதர்களையும் கற்பனை என்று நாம் ஒதுக்கி விட முடியாது. இது குறித்து நேர்மையான, சந்தேகப்படக் காரணமில்லாத சில பிற்கால மனிதர்கள் சில மகாசக்தி மனிதர்களின் வாழ்வில் நடந்த அற்புதங்களையும், அவர்களுடனான தங்கள் நேரடி அனுபவங்களைப் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.  இனி அவற்றைப் பார்க்கலாமா?

(தொடரும்)

-          என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – 5.9.2014