Monday, October 13, 2014

ஆராயப்படும் ஆன்மிகம்!


அறிவார்ந்த ஆன்மிகம் - 50

குத்தறிவு என்பதே ஆன்மிகத்தை எதிர்ப்பது என்ற நிலை ஒரு சாராரிடம் இருக்கிறது. ஆண்டவனையும் ஆன்மிகத்தையும் மறுப்பதே அறிவின் வெளிப்பாடு என்று அவர்கள் கருதுகின்றார்கள். அவர்கள் தங்களை விஞ்ஞான ஆதரவாளர்களாகவும் காட்டிக் கொள்வதுண்டு. எதற்குமே மேலை நாடுகளையும், விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் அவர்கள் மேற்கோள் காட்டிப் பேசுவதுண்டு. ஆனால் இன்றைய நவீனகாலத்தில் விஞ்ஞான ஆராய்ச்சிகளே ஆன்மிகத்தை ஆதரிக்க ஆரம்பித்துள்ளன என்பது அவர்களையும் யோசிக்க வைக்கும் செய்தியாக இருக்கின்றது. அறிவில் மேம்பட்ட விஞ்ஞானிகளும், மருத்துவ அறிஞர்களும் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சிகளையும் அவற்றின் முடிவுகளையும் புத்தகங்களாகவே எழுத முடியும் என்றாலும் சிலவற்றை மட்டும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

டாக்டர் ஆண்ட்ரூ நியூபெர்க் (Dr. Andrew Newberg) என்பவர் உலகின் பிரபல மூளையியல் நிபுணரும் விஞ்ஞானியுமாவார்.  பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் உளவியல் மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார். 15 நாடுகளின் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளில் அடிக்கடி அறிவியல் நிகழ்ச்சிகளைத் தருகிற இவர் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் டைம்ஸ் பத்திரிக்கைகளிலும் அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.  பல ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கும் இவர் கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain)என்ற புத்தகத்தை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.

இந்த புத்தகத்தில் ஆண்ட்ரூ நியூபெர்க் ஆன்மிகம் குறித்த தனது அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்த உண்மைகளை விரிவாக விளக்கியுள்ளார்.  இந்த ஆராய்ச்சிகளில் இவர் பயன்படுத்திய தொழில் நுட்ப உத்தி சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (Single Photon Emission ComputedTomography) என்பதாகும்.  இந்த ஆராய்ச்சியில் ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித வேதிப்பொருள்  ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். பிரான்ஸிஸ்கன் கன்னியாஸ்திரீகள்,  திபெத்திய யோகிகள் உட்பட பல ஆன்மிகப் பயிற்சிகளில் ஆழமாய் ஈடுபடும் பலரை இவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இந்த ஆராய்ச்சிகள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த ஆராய்ச்சிகளின் போது மனிதனின் மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார். அந்த நேரங்களில் மூளையில் விதவிதமான சர்க்யூட்டுகள் என்று சொல்லப்படும் மின்னலை பாதைகள் உருவாகின்றன என்பதையும் கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இறை சிந்தனை, பிரார்த்தனை, தியானம், ஆன்மிகச் சடங்குகள் ஆகிய ஆன்மிகச் செய்கைகளால் மனிதனின் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன என்கிற ஆணித்தரமான முடிவுக்கு அவரால் வர முடிந்தது. இந்த ஆராய்ச்சிகளில் பல மதத்தவரும் பங்கு பெற்றதால் இந்த ஆன்மிகச் செய்கைகளின் விளைவுகள் மதங்களைக் கடந்து ஒரே மாதிரியான நன்மைகளை விளைவிக்கின்றன என்பதை அவரால் அறிய முடிந்தது.

முக்கியமாக நீண்ட கால தியானப் பயிற்சிகள் மூளையின் அமைப்பையே கூட ஓரளவு மாற்றி விடுகின்றன என்றும் அவர்களது சமூகப் பிரக்ஞையும், மற்ற உயிர்களிடத்தில் அன்பும், கருணையும் மற்றவர்களை விட மிகவும் மேம்பட்டதாகவே இருக்கின்றன என்றும் அவர் கண்டறிந்தார். உடல் மற்றும் மன நலனும் மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டிருப்பது அவரது ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரிச்சர்டு ஜே.டேவிட்சன் (Richard J. Davidson) ஸ்பெயின் மற்றும் ஃப்ரான்ஸ் தேச ஆராய்ச்சி மையங்களின் ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து செய்த ஆராய்ச்சிகள் மனித உடலின் ஜீன்களில் (genes) கூட அதிக நேர தியானங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டுபிடித்திருக்கின்றன. பிரச்சினைகள் நிறைந்த சிக்கலான சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டாலும் கூட தியானப் ப்யிற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள் சீக்கிரமே மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்கள் என்று இந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ரிச்சர்டு டேவிட்சன் கூறுகின்றார். “தியானத்தினால் மனிதனுடைய மனம் அமைதியடைவதால் அவனது ஜீன்களின் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்படுவதை உறுதிப்படுத்தி இருக்கும் முதல் ஆராய்ச்சி இது தான். நமது ஜீன்கள் நம்முடைய மனதின் மாற்றத்திற்கேற்ப மாறி செயல்படுவது வியக்கத்தக்க செய்தியே”  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பெர்லா கலிமான் (Perla Kaliman) இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த ஜீன்களின் மாற்றங்கள் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் கட்டுப்படுத்துவதைக் கண்டு பிடித்திருக்கிறோம். இது மேற்கொண்டு கிடைக்கக் கூடிய பலன்களை ஆராய ஆரம்ப முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறோம்என்று கூறுகிறார்.


இங்கிலாந்தில் ஆன்மிகம் மற்றும் உளவியல் சிறப்பு ஆர்வக்குழு (The Spirituality and Psychiatry Special Interest Group (SPSIG)) 1999 ஆம் ஆண்டு உளவியல் அறிஞர்களின் ராயல் கல்லூரி ( Royal College of Psychiatrists )யால் ஆரம்பிக்கப்பட்டது. இக்குழு ஆன்மிகம் உளவியலில் ஏற்படுத்த முடிந்த மாற்றங்களைக் கண்டறியும் நோக்கத்தில் துவக்கப்பட்டது. தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உளவியல் அறிஞர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.

இவர்கள் ஆன்மிகச் செயல்களாக தியானம், யோகா, சீன டாய்சீ (Taichi), பிரார்த்தனை, கூட்டுப் பிரார்த்தனை, புனித நூல்கள் வாசிப்பு மற்றும் கேட்டல், யாத்திரைகள், பூஜைகள், ஆன்மிக இசை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஆராய்ச்சிகள் இந்த ஆன்மிகச் செயல்களால் மனிதர்களின் மன அமைதி வாழ்வின் மோசமான நிகழ்வுகளாலும் பெருமளவு பாதிக்கப்படாமல் பாதுகாக்கப் படுகின்றது என்றும் நோய்வாய்ப்பட்டாலும் அந்த நோய்களில் இருந்து சீக்கிரமே மீள முடிகின்றது என்றும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. எனவே இந்த ஆராய்ச்சிக்குழு தங்கள் சிகிச்சை முறைகளிலும் இந்த ஆன்மிகச் செயல்களில் ஓரிரண்டைப் புகுத்தி குணமாக்குதலில் நல்ல வெற்றி விகிதத்தைக் கண்டிருக்கிறார்கள்.

டி.ஸ்மித் (Smith T), எம். மெக்கலோக் (McCullough M), மற்றும் ஜே.போல்  (Poll J) என்ற மூன்று உளவியலறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியில் ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபடுபவர்கள் மற்றவர்களை விடக் குறைந்த அளவிலேயே மன உளைச்சலால் அவதிப்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்து உள்ளார்கள். அதே போல் அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹெரால்டு ஜி.கோனிக் ( Harold G. Koenig ) இறை நம்பிக்கையும், ஆன்மிக ஈடுபாடும் கொண்ட 65 வயதிற்கு மேற்பட்ட வயதினர்களை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். இதய நோய், கான்சர், நோய்க்கிருமி தாக்குதல் ஆகிய மூன்றிலுமே மற்றவர்களை விட ஆன்மிகவாதிகள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்படுகின்றார்கள் என்று தன் ஆராய்ச்சிகளின் முடிவில் அவர் தெரிவித்து உள்ளார்.  அவரது ஆராய்ச்சிகளின் விவரங்கள் மதம் உங்கள் உடல்நலத்திற்கு நல்லதா? (Is religion good for your health? The effects of religion on physical and mental health) என்ற நூலில் 1997 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளன.

 இது போல் எத்தனையோ ஆராய்ச்சிகள் ஆன்மிகத்தின் நற்பலன்களை உறுதிப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. ஆனால் அந்த நற்பலன்களை நாம் முழுமையாக அடைய நமது ஆன்மிக சிந்தனைகள் ஆழமாகவும், செயல்கள் ஆத்மார்த்தமாகவும் இருக்க வேண்டும். மேற்போக்காக இருந்தால் பலன்களும் அப்படியே பலவீனமாகத் தான் இருக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோமாக!

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 25.02.2014


3 comments:

  1. a thought provoking article really.

    ReplyDelete
  2. Concluding points are really superb!!!

    ReplyDelete
  3. இன்னும் இது போன்ற ஆராய்ச்சி கட்டுரைகள் ஆன்மீகத்தை வளர்க்க வேண்டும்

    ReplyDelete