Monday, August 11, 2014

நான்கு உண்மைகள், எட்டு வழிகள்!

அறிவார்ந்த ஆன்மிகம்- 45 


ஆன்மிகத்தின் ஆரம்பமே உலக வாழ்க்கையில் ஏற்படும் திருப்தியின்மை அல்லது நிம்மதியின்மை தான். தனி மனிதர்களின் ஆன்மிக சிந்தனைகள் மற்றும் தேர்ச்சி அவனுக்கு ஞானத்தையும் அமைதியையும் ஏற்படுத்துகின்றன என்றால் ஞானிகளின் ஆன்மிகத் தேர்ச்சி உலகத்திற்கே ஞானவழியையும், அமைதி வழியையும் அடையாளம் காட்டும்படி அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஞானிகளில் முதலிடம் கௌதம புத்தருக்கு உண்டு.


அரசனின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் பிற்காலத்தில் உலகையே ஆளும் சக்கரவர்த்தியாகவோ, அல்லது உலகமே வணங்கும் துறவியாகவோ வருவான் என்று ஒரு தீர்க்கதரிசி கூற தந்தையான சுத்தோதனருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொரு துக்கம். மகனுக்கு சக்கரவர்த்தியாகத் திகழும் அம்சம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி, அவன் துறவியாகவும் மாறலாம் என்பதில் துக்கம். மகன் துறவியாகி விடக்கூடாது என்று சித்தார்த்தனுக்கு உலகின் எந்தத் துன்பமும் கண்ணில் பட்டுவிடாமல் அவர் வளர்க்க ஆரம்பித்தார். யசோதரை என்ற அரசகுமாரியை சித்தார்த்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ராகுலன் என்ற மகனும் சித்தார்த்தனுக்குப் பிறந்தான். அரசபோக வாழ்க்கையை சித்தார்த்தன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் தந்தையின் கட்டுப்பாட்டை மீறி வெளியுலகத்திற்கு வந்த சித்தார்த்தன் மூன்று காட்சிகளைக் காண நேர்ந்தது. தள்ளாமையுடன் நடந்து கொண்டிருந்த ஒரு முதியவரையும், நோயின் பிடியில் சிக்கி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளியையும், இறந்து போன மனிதனின் சடலத்தையும் பார்த்த சித்தார்த்தன் நிலைகுலைந்து போனான். அவன் இருக்கும் கற்பனை உலகம் வேறு, துன்பங்கள் நிறைந்த இந்த நிஜ உலகம் வேறு எனப் புரிந்த போது இந்தத் துன்பங்களில் இருந்து விடுபட வழியை மனம் தேட ஆரம்பித்தது. ஒரு நள்ளிரவில் மனைவி, மகன், ராஜ்ஜியம் அனைத்தையும் விட்டு விட்டு வெளியேறிய சித்தார்த்தன் 29வது வயதில் துறவியானான்.

ஞானத்தைத் தேடி அலைந்த சித்தார்த்தனுக்கு பல குருமார்கள் கிடைத்தனர். சித்தார்த்தன் வேதங்களைக் கற்றறிந்தான். ஞான நூல்களில் தேர்ச்சி பெற்றான். தன்னை வருத்திக் கொள்ளும் விதத்தில் கடுமையான நோன்புகள் இருந்தான். எதுவும் சித்தார்த்தனுக்கு மன அமைதியை ஏற்படுத்தி விடவில்லை. எதிலும் தெளிவு பிறக்கவில்லை. ஒரு நாள் ஞானம் பெறாமல் எழ மாட்டேன் என்று போதிமரத்தின் அடியில் அமர்ந்த சித்தார்த்தன் ஞானம் பெற்று கௌதம புத்தராக எழுந்தது வரலாறு. புத்தர் என்றால் விழிப்புணர்வு உடையவர் என்று பொருள். 

புத்தரின் ஞானம் தத்துவ வேதாந்தக் குவியலாக இருக்கவில்லை. உலக வாழ்க்கையில் ஈடுபட்டு துன்பப்படும் சாதாரண மனிதனின் துயரங்களுக்கு அது விடையாக அமைந்தது. கணிதக் கோட்பாடுகள் போல படிப்படியாக உண்மையை அலசி மனிதனை அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துப் போவதாக அவர் ஞான உபதேசம் அமைந்தது. 35 ஆம் வயதில் ஞானம் பெற்ற கௌதம புத்தர் 80வது வயதில் இறக்கும் வரை தன் போதனைகளை எளிமையாகவும், வலிமையாகவும் மக்களிடம் பரப்பினார். இந்தியா எங்கிலும் பரவிய புத்தமதம் வெளிநாடுகளிலும் பரவி பிரசித்தி பெற்றது.

புத்தரின் போதனைகள் நான்கு பேருண்மைகளையும் எட்டு வழிகளையும் அடக்கியது. அவற்றை விளக்கமாகப் பார்ப்போம்.

1. துன்பம்: இந்த உலக வாழ்க்கை துன்பகரமானது. நோய், மூப்பு, இறப்பு போன்ற உடல்ரீதியான துன்பங்கள் மட்டுமல்ல, ஏழ்மை போன்ற பொருளாதார ரீதியான துன்பங்கள் உடபட பலவிதங்களில் வாழ்க்கை துன்பகரமானதாகவும், திருப்தியைத் தராததாகவும் இருக்கிறது. இதை மறுக்க முடியாத முதல் உண்மையாக புத்தர் சொல்கிறார். இருப்பவர், இல்லாதவர் என்ற இருதரப்பும் ஏதோ ஒரு துன்பத்திலும், அதிருப்தியிலும் உழலுவதை இன்றளவும் நாமும் கண்டு வருகிறோம் அல்லவா?

2. துன்பத்தின் தோற்றம்: துன்பம் இருக்கிறது என்பது தெளிவான உணமை என்றான பின் அது ஏன் தோன்றுகிறது, அது உருவாகக் காரணம் என்ன என்று சிந்திப்பது முக்கியம் அல்லவா? புத்தர் அந்த சிந்தனையின் விளைவாக துன்பம் தோன்றக் காரணம் ஆசைகள் தான் என்று உறுதியாகக் கூறுகிறார். ஆசைகள் நிறைவேறி திருப்தி அடைந்தவன் உலகில் யாரும் இல்லை. ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று ஆசைகள் எழுந்து கொண்டே இருக்க அதில் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி இல்லாமல் இருக்கிற மனிதன் நிறைவேறாத ஆசைகள் ஒருசில இருந்தாலும் கூட வருத்தத்தின் பிடியில் சிக்கிக் கொள்கின்றான்.

3. துன்பத்தை ஒழித்தல்: துன்பம் உருவாகக் காரணம் ஆசைகள் என்றால் அந்தத் துன்பத்தை ஒழிக்க ஒரே வழி ஆசைகளை ஒழிப்பதே அல்லவா? துன்பத்திலேயே மனிதன் உழன்று கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆசைகளை ஒழித்தால் துன்பத்தையும் ஒழிக்கலாம் என்பதை அறிவது முக்கியம் எனக்கூறுகிறார் புத்தர்.

4. துன்பத்தை ஒழிக்கும் வழிகள்: ஆசைகளை ஒழித்து துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது சுலபம் என்றால் அனைவருமே அப்படி விடுதலை அடைந்து அமைதியைப் பெற்று விட முடியுமே, பிரச்சினையே ஆசைகளை எப்படி ஒழிப்பது என்பது தானே என்ற கேள்வி அடுத்தபடியாக எழும் அல்லவா? ஆசைகளை ஒழித்து வாழ்வியல் துன்பங்களில் இருந்து விடுபடும் வழிகளைத் தான் “அஷ்டசீலம்” என்று புத்தர் குறிப்பிடுகிறார்.

அஷ்டசீலம் என்றழைக்கப்படும் அந்த எட்டு வழிகளைப் பார்ப்போம்.

1. சரியாகப் புரிந்து கொள்ளல்: எந்தப் பிரச்சினையையும் சரியாகப் புரிந்து கொண்டோம் என்றால் அதிலேயே அந்தப் பிரச்சினைக்கான தீர்வு புலப்பட்டு விடும் அல்லவா? எனவே முதல் வழியாக சரியாகப் புரிந்து கொள்வதைப் புத்தர் குறிப்பிடுகிறார். தன்னுடைய உபதேசங்களையே கூட சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் அதில் இருந்து நற்பலன்களை ஒருவர் காண முடியாது என்பது அவருடைய கருத்தாக இருந்தது. 

2. சரியான நோக்கம்: நோக்கம் சரியாக இல்லாத போது பின் தொடர்வது எதுவுமே சரியாக இருக்காது என்பது புத்தரின் தெளிவான புரிதல். எனவே எப்போதும் வாழ்க்கையில் சரியான நோக்கம் முக்கியம் என்கிறார் அவர்.

3. சரியான பேச்சு: பேச்சினால் வரும் துன்பங்கள் ஏராளம். அதனால் தான் திருவள்ளுவரே “யாகாவாராயினும் நாகாக்க” என்று எச்சரித்தார். துன்பங்களில் இருந்து விடுபட விரும்பும் மனிதன் சரியாகப் பேச வேண்டும், சரியாகப் பேச எதுவும் இல்லாத போது மௌனமாக இருக்க வேண்டும் என்பது புத்தரின் மூன்றாவது வழி. கடுமையாகவும், பயனற்ற வழிகளிலும் ஒருவருடைய பேச்சு இருக்கலாகாது என்று அவர் உபதேசிக்கிறார்.

4. சரியான செயல்: துன்பங்களை ஏற்படுத்தும்படியான செயல்களில் ஈடுபடாமல் சரியான செயல்களில் மட்டுமே தெளிவுடன் ஈடுபடுவது முக்கியம் என்கிறார் புத்தர். அடுத்தவரைத் துன்புறுத்தாமல் இருப்பது, களவு முதலான தவறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது போன்றவற்றை புத்தர் வலியுறுத்தினார்.

5. சரியான வாழ்க்கை: நியாயமான முறையான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே ஒருவரால் அமைதியைக் காண முடியும் என்கிறார் புத்தர். மற்றவரை ஏமாற்றாமல், மற்றவர்க்குத் துன்பம் விளைவிக்காமல் நேர்மையாக வாழ்ந்தால் மனிதன் துன்பத்தில் இருந்து விடுபடலாம் என்கிறார்.

6. சரியான முயற்சி: சரியான முயற்சி சரியான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அரைகுறையான முயற்சிகள், தவறான முயற்சிகள் பிரச்சினைகளிலும், துன்பத்திலும் தான் ஒருவரைக் கொண்டு போய் நிறுத்தும் என்கிறார் புத்தர்.

7. சரியான விழிப்புணர்வு: விழிப்புணர்வு என்பது சரியாக இருக்கும் போது மனிதன் தவறுகளைச் செய்யவோ, தவறான வழிகளில் செல்லவோ முடியாது. கண்ணைத் திறந்து கொண்டு கவனமாகச் செல்லும் மனிதன் துன்பக்குழிகளில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாகப் பயணிப்பான் அல்லவா?

8. சரியான கவனக்குவிப்பு: சரியான அவசியமான விஷயங்களில் தன் கவனத்தை சரியாகக் குவிக்க முடிந்த மனிதன் வெற்றியையும், அமைதியையும் ஒருங்கே பெற்று விடுகிறான். தவறானவற்றிலும், பிழையானவற்றிலும் கவனம் குவிக்கும் போது அதுவே அதன்பின் தொடரப் போகும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகி விடுகின்றது. எனவே தான் கடைசி வழியாக இதை புத்தர் வலியுறுத்துகிறார்.

இந்த நான்கு உண்மைகளை உணர்ந்து, இந்த எட்டு வழிகளைக் கடைபிடித்தால் துன்பம் அடையாமல் இன்பமாகவே வாழ்ந்து முடிக்கலாம் என்பது புத்தரின் உத்திரவாதம்.


என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 21.1.2014

9 comments:

  1. அருமையான கட்டுரை...
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  2. Very Nice Explanation Sir...

    ReplyDelete
  3. புத்தனின் போதனைகள் ஆசையைக் கொல்லும்.
    ஆசை மறுபடியும் வெல்லும்.

    ReplyDelete
  4. Can you tell about Mahavir Vardhamana and His policies?

    I'd also like to know about Jews (Judaism) and Tao (Taoism)... Can you help me?

    ReplyDelete
    Replies
    1. Mahavir's teachings will be published in next month. Taoism principles were discussed in many of my earlier articles (with stories).

      Delete
  5. Arumaiyana matrum elimaiya na vazhi

    ReplyDelete
  6. Sir; i used to hear one speech "Its all our Fate" when i will discuss with my friends/relative about life problem;
    If all our life activity is already predetermined; then what "Supreme Power" expecting from us; Whatever it was happened and Whatever is happening ; it is expected to be happen; If everything is already decided as our Fate; then there is no point to differentiate good/bad soul; The soul is doing the work what it was ordered;
    I feel Our every action is not pre determined;
    Plz tell me Is it really a true statement "Itz all our fate";

    Thanks & Regards
    Ramkumar

    ReplyDelete