Saturday, August 30, 2014

தினத்தந்தியில் என் புதிய தொடர் “மகாசக்தி மனிதர்கள்”


அன்பு வாசகர்களே, 

வணக்கம்.

மனித கற்பனைகளுக்கெட்டாத அபூர்வ சக்திகள் படைத்தவர்கள் யோகிகள். அவர்களுடைய சக்திகளை விஞ்ஞானத்தாலும் விளக்கி விட முடியாது.

திருமூலரும், பதஞ்சலியும் யோகிகள் அஷ்டமகாசக்திகள் பெற முடிந்தவர்கள் என்று அக்காலத்திலேயே பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். அக்காலத்தில் அப்படி மகாசக்திகள் பெற்ற மனிதர்கள் அதிகம் இருந்தார்கள். காலப் போக்கில் அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வந்து அதற்கு பதிலாக அந்த யோகிகளின் போர்வையில் போலிகள் நிறைய வலம் வர ஆரம்பித்து விட்டார்கள்.


போலிகள் அதிகம் என்பதாலேயே அந்த மகாசக்திகளையும், உண்மையான மகாசக்தி மனிதர்களையும் கற்பனை என்று நாம் ஒதுக்கி விட முடியாது. அப்படிப்பட்ட மகாசக்தி மனிதர்கள் குறித்து ஆதாரபூர்வமான சுவாரசியமான தகவல்களை விவரிக்கும் விதமாக நான் எழுதும் ”மகாசக்தி மனிதர்கள்” என்ற தொடர் தினத்தந்தியில் அடுத்த வாரம் 5.9.2014 முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வெளியாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்குத் தெரிந்த வரை தமிழில் இது போன்றதொரு தொடர் இது வரை வந்ததில்லை. இது போன்ற விஷயங்களில் ஆர்வமுள்ள வாசக அன்பர்கள் இந்த வித்தியாசமான தொடரைத் தொடர்ந்து படித்து மகிழலாம்.

அன்புடன்

என்.கணேசன்


Thursday, August 28, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 9


ருண் அப்படிச் சொன்ன பிறகும் அக்‌ஷய் எந்த அபிப்பிராயமும் தெரிவிக்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

வருண் தாயையும் பாட்டியையும் பார்த்தான். அவர்களும் தன்னுடன் சேர்ந்து அக்‌ஷயைத் தடுப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர்கள் முகத்தில் பயமும் கவலையும் தெரிந்தாலும அவர்கள் அப்போதும் ஒன்றும் சொல்லாமல் அக்‌ஷயையே பார்த்தார்கள்.
                                                                                                                                                                                     
ஆனந்த் தலாய் லாமாவின் வேண்டுகோளுடன் இங்கே வந்திருக்க வேண்டாம் என்று வருணுக்குத் தோன்றியது. இவரே முடியாது என்று சொல்லி இருக்கலாமேஎன்று வருண் நினைத்தான். இந்தப் பதிமூன்று வருட அமைதியான வாழ்க்கைக்கு ஒரு முடிவு வரப் போகிறது என்று நினைக்கையில் மனம் பதைத்தது. தலாய் லாமா மீதும், திபெத் மீதும், ஆனந்த் மீதுமே கூட அவனுக்குக் கோபம் வந்தது.

கோபம் கலந்த ஏளனத்தோடு வருண் சொன்னான். “உலகத்தையே காப்பாற்றி தர்மத்தை நிலை நாட்டப்போகிற மைத்ரேய புத்தருக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதா என்ன?  

ஆனந்த் புன்னகைத்தான். அவன் மனதிலும் அந்தக் கேள்வி எழாமல் இல்லை. தலாய் லாமா அக்‌ஷயின் உதவியை எதிர்பார்ப்பதற்கான எல்லா காரணங்களையும் தெரிவிக்கவில்லை என்று அவன் உள்மனம் சொன்னது. இதற்காவது தம்பி ஏதாவது சொல்வானா என்று பார்த்தான். ஆனால் அக்‌ஷய் வருணை மென்மையாகப் பார்த்தானே ஒழிய அவன் சொன்னதை மறுக்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை.

உயிருக்கு உயிருக்காக நேசித்த வளர்ப்புத் தந்தையின் மௌனம் வருணுக்கு அபாயச்சங்கு ஊதியது. அழாத குறையாக ஆனந்த் பக்கம் திரும்பி கேட்டான். “ஏன் பெரியப்பா, அப்பாவுக்கு இதில் எந்த அபாயமும் இல்லை என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?

அவன் கேள்வியில் மறைமுகமான குற்றச்சாட்டும் இருந்தது ஆனந்துக்கு தவறாகத் தோன்றவில்லை. அவனே சோம்நாத் சொன்ன போது கோபம் கொண்டவன் தானே. அக்‌ஷய் மீது அன்பு வைத்திருக்கும் யாருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனந்த் சொன்னான். “வருண் அக்‌ஷய்க்கு இதில் ஆபத்து அதிகம் இருக்கிறது என்று நான் வெளிப்படையாகவே உளவுத்துறை தலைமை அதிகாரியிடம் சொல்லி விட்டேன். இன்னும் தலிபான் தீவிரவாதிகள் அக்‌ஷயை மறந்து விடவில்லை. அமெரிக்காவில் இவனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் அவ்வப்போது எனக்கு வருகிறது. இவன் பாதுகாப்புக்காக நானே முயற்சி எடுத்து அமெரிக்காவில் எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறேன் என்று தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அறிவித்த ஒரு மில்லியன் டாலர் சன்மானம் இப்போதும் பல பேரை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இப்போது இவன் வெளியே வந்தால் அந்த தலிபான் தீவிரவாதிகள் கண்ணில் படாமல் இருக்க முடியாது. சீனாவிடம் சிக்காமல் திபெத்துக்குப் போய் மைத்ரேய புத்தரை அழைத்துக் கொண்டு வருவதும் சுலபம் அல்ல. இதை ஏற்றுக் கொண்டால் இரட்டிப்பு ஆபத்து தான். ஒருபக்கம் சீனா, இன்னொரு பக்கம் தலிபான் தீவிரவாதிகள்...

வருண் கோபத்துடன் ஆனந்திடம் கேட்டான். இப்படி நிலைமை இருக்கையில் அவர்கள் எப்படி அப்பாவிடம் இந்த உதவியை எதிர்பார்க்கிறார்கள்? நம் பிரதமர் எப்படி இதற்கு ஒத்துக் கொள்ளலாம்?

ஆனந்த் பொறுமையாகச் சொன்னான். “வருண். தலாய் லாமா உதவி கேட்டிருக்கிறார். அதை பிரதமர் நம்மிடம் சொல்லி இருக்கிறார். ஒரு வேளை அக்‌ஷய் ஏற்றுக் கொண்டால் அக்‌ஷய்க்குத் தேவையான எல்லாவிதமான உதவிகளையும் ரகசியமாய் செய்துதர உத்தரவிட்டிருக்கிறார் அவ்வளவு தான். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் பிரதமர் வற்புறுத்தவில்லை. பிரதமர் அக்‌ஷயைக் கேட்காமல் தலாய் லாமாவிடம் முடியாது என்று சொல்ல முடியாது. நானும் அக்‌ஷயைக் கேட்காமல் அப்படி மறுக்க முடியாது. முடிவு எடுக்க வேண்டியது அக்‌ஷய் தான். இதில் எந்தக் க்ட்டாயமும் இல்லை.

‘இனி என்ன, மறுக்க வேண்டியது தானே?என்கிற மாதிரி வருண் அக்‌ஷயைப் பார்த்தான். ஆனந்த், சஹானா, மரகதம் மூவரும் அப்படியே அக்‌ஷயைப் பார்த்தார்கள்.  ஆனால் அக்‌ஷய் ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆழமாய் அவன் சிந்திக்கும் போதெல்லாம் அவன் அப்படித்தான் இருப்பான். இப்போது அவன் என்ன நினைக்கிறான்  என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை.

உண்மையில் அக்‌ஷய் கடந்த காலத்தில் இருந்தான். அவன் திபெத்தில் இருந்த இளமைக்கால நினைவுகள் மனத்திரையில் ஓடின...

ஒரு நாள் திபெத்தில் கடுங்குளிர் காலத்தில் மலைப்பகுதியில் நடந்து கொண்டிருந்த போது அவன் அந்த அதிசயத்தைப் பார்த்தான். எதிரில் ஒரு மனிதன்(?), நம்ப முடியாத வேகத்தில் வந்து கொண்டிருந்தான். நடந்து வந்து கொண்டிருந்தது போல் அக்‌ஷய்க்குத் தெரியவில்லை. அந்த மனிதன் நீண்ட தூரங்களில் காலடி வைத்து குதித்து ஓடி வருவது போல் தெரிந்தது. ஒரு காலடி இங்கு வைத்தால் எட்டடி தள்ளி அடுத்த காலடியை அந்த மனிதன் வைத்தான். அந்தக் கால் நிலத்தில் சரியாகப் பதிவதற்கு முன்பாகவே அடுத்த காலடிக்கு அவன் தயாரானது போல் பிரமை ஏற்பட்டது. இதெப்படி சாத்தியம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த மனிதன் அக்‌ஷயை நெருங்கி விட்டிருந்தான். ஆனால் அவன் அக்‌ஷயைப் பார்க்கவில்லை. அவன் பார்வை வெகுதூரத்தில் எங்கோ நிலைத்திருந்தது.   அந்தக் கடுங்குளிரில் கூட அவன் இடுப்புக்கு மேல் ஆடை எதுவும் அணிந்திராமல் இருந்ததும் அக்‌ஷயை ஆச்சரியப்படுத்தியது. அவனை மேலும் சரியாகப் பார்க்கும் முன் அவன் அக்‌ஷயைக் கடந்து வெகு தூரம் போயிருந்தான்.

பார்த்தது நிஜம் தானா அல்லது பிரமையா என்ற சந்தேகம் அக்‌ஷய்க்கு அந்த நாள் முழுவதும் இருந்தது. அந்த இடத்தில் அவனையும் அந்த மனிதனையும் தவிர வேறு யாரும் இருந்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர்களிடம் கேட்டு பார்த்ததை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பான்....

பின் அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்த போது அவன் கண்டது பிரமை அல்ல, நிஜம் தான் என்று சொன்னார்கள். நீங்கள் லங்-கோம்-பா (lung-gom-pa) ஓட்டக்காரர்களைப் பார்த்திருப்பீர்கள் என்றார்கள்.     

ஆர்வம் அதிகமாகி அக்‌ஷய் மேலும் அது பற்றி விசாரிக்கையில் விளக்கியவர் ஒரு புத்த பிக்கு. கடுமையான யோகப்பயிற்சியால் உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி ஒருவர் லங்-கோம்-பாவில் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னார். உடலை எடையற்ற இறகு போல் ஆக்கிக் கொள்ள முடியும் என்றும் பல நூறு மைல்களை குறுகிய காலத்தில் சிறிதும் களைப்பில்லாமல் தொடர்ந்து கடக்க முடியும் என்றும் சொன்னார். ஒரு காலத்தில் அப்படி நிறைய பேர் இருந்தார்கள் என்றும் இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இப்போது இருக்கிறார்கள் என்றும் சொன்னார். கண் முன்னால் அந்த மனிதனைப் பார்த்திரா விட்டால் அக்‌ஷய் அவர் சொன்னதை நம்பி இருக்க மாட்டான்....

அதை எப்படி கற்றுக் கொள்வது?என்று அவன் கேட்ட போது அந்த புத்த பிக்கு சாதாரண மனிதர்களுக்கு அது அவ்வளவு சுலபமில்லை என்று சொன்னார். “.... அந்தப் பயிற்சிகளை மூன்று நாள் கூட தொடர்ந்து செய்ய முடிவது கஷ்டம். ஆனால் வெற்றியடைய வருடக் கணக்கில் சளைக்காமல் செய்ய வேண்டும். அதை முழுமையாகக் கற்றுத்தரும் குருமார்களும் அதிகம் இல்லை... திபெத்தில் இப்போது ஒரே ஒருவர் தான் இருக்கிறார். பெரிய யோகி.... மற்றவர்கள் எல்லாம் அரைகுறைகள்....

அக்‌ஷய் அந்த ஒரே ஒருவரைத் தேடிப் போனான். அந்த வயதான யோகி அவனையே நிறைய நேரம் கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார். “இதற்கு எத்தனை காலம் ஆகும் என்று சொல்ல முடியாது. உனக்குத் திறமை இருந்து நீ முழு மனதோடு உறுதியாய் முயன்றால் கூட வருடக்கணக்கில் ஆகலாம்

அக்‌ஷய் சொன்னான். “எனக்கு அவசரமில்லை

அவர் கேட்டார். “ஆனால் அவசியமா? அப்படி நடந்து என்ன சாதிக்கப் போகிறாய்?....

அந்தக் கேள்வி அவனை யோசிக்க வைத்தது. அந்த அதிவேக மனிதனைப் பார்த்த பிரமிப்பில் அவனும் ஆசைப்பட்டானே ஒழிய அதைக் கற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்பதை அவன் யோசித்திருக்கவே இல்லை....

அவருக்கு நன்றி கூறி வணங்கி விட்டு அக்‌ஷய் திரும்பி சில அடிகள் போயிருப்பான். அந்த யோகி அவனை அழைத்தார்.

“ஆனால் அதில் சில சிறிய வித்தைகளைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. அது உன் வாழ்க்கைக்கு நிறைய உதவும்....

அவரிடம் அவன் சிஷ்யனாக சேர்ந்தான். அவர் சொன்ன அந்த சிறிய வித்தைகளைக் கற்றுத் தேறவே அவனுக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. அதற்கே அவன் ஒவ்வொரு நாளும் விடாமல் பயிற்சிகள் செய்ய வேண்டி இருந்தது. அவன் பொறுமையாகச் செய்தான். அந்தப் பயிற்சிகள் அல்லாமல் வேறு எத்தனையோ அவரிடமிருந்து அவன் கற்றுக் கொண்டான். ஒரு வருடம் கழித்து அங்கிருந்து கிளம்பிய போது ஒரு புதிய மனிதனாக மாறி இருந்தான். அவருக்கு குரு தட்சிணையாக என்ன வேண்டும் என்று அவன் கேட்ட போது அவர் எதையும் வாங்க மறுத்தார். அவன் மறுபடியும் வற்புறுத்திக் கேட்டான். உடனடியாக ஒன்றும் சொல்லாமல் அவனையும் தாண்டி வெற்றிடத்தைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றவர் பின் என்றாவது ஒரு நாள் இந்த புனித மண் உன்னிடமிருந்து குருதட்சிணை கேட்டு வாங்கிக் கொள்ளும்என்று சொல்லி அனுப்பினார். அப்போது புரியவில்லை.  அந்த நாள் இப்போது வந்திருக்கிறது என்றே அக்‌ஷய் நினைத்தான்.

ஆனால் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவன் குடும்பத்தினர் முகத்திலோ தயவு செய்து போக வேண்டாம்...என்ற கோரிக்கை கெஞ்சலோடு தெரிந்தது.....


சோம்நாத்  தன் முன்னால் இருந்த அந்த ரகசியக் குறிப்பை ஆழ்ந்த யோசனையுடன் மறுபடி படித்தார். தலாய் லாமாவின் புதுடெல்லி விஜயத்தின் போது வந்திருந்த சந்தேகப்படும்படியான ஒற்றர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது என்பதே அந்த ரகசியக் குறிப்பின் சாராம்சம். ஒருவேளை தலாய் லாமா எதற்காக இங்கே வந்தார் என்ற தகவல் சீன உளவுத்துறைக்கு எட்டியிருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது.

(தொடரும்)

-என்.கணேசன்

  (அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)
  

Monday, August 25, 2014

பத்திரகிரியாரும் மெய்ஞானப் புலம்பலும்!

அறிவார்ந்த ஆன்மிகம்-47

தினெட்டு சித்தர்களில் ஒருவர் பத்திரகிரியார். பத்ருஹரி என்ற பெயரில் உஜ்ஜயினியில் அரசராக இருந்த அவர் துறவியானது ஒரு சுவாரசியமான கதை. துறவியான பட்டினத்தார் யாத்திரை ஒன்றின் போது உஜ்ஜயினியில் மஹாகாளேஸ்வரர் ஆலயத்தில் இறை தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு வெளியே வந்து அங்கிருந்த காட்டுப் பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

உஜ்ஜயினி அரண்மனையில் மிகுந்திருந்த செல்வத்தைக் கவர்வதற்காகச் செல்லும் முன் அந்தக் காட்டுப் பிள்ளையாரை வணங்கி விட்டுச் சென்றிருந்த காட்டுக் கொள்ளையர்கள் வெற்றிகரமாக அரண்மனைச் செல்வத்தைக் கொள்ளையடித்து விட்டு வந்து காணிக்கையாக அதில் ஒரு விலை உயர்ந்த முத்துமாலையினை பிள்ளையார் மீது வீசி விட்டுப் போனார்கள்.  அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. தியானத்தில் மூழ்கி இருந்த பட்டினத்தார் அதையும் அறியாமல் இருந்தார். கொள்ளையரைத் துரத்தி வந்த அரண்மனைக் காவலர்கள் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் பட்டினத்தார் வீற்றிருந்த்தைப் பார்த்தார்கள். அவரிடம் முத்துமாலை எப்படிக் கிடைத்தது என்று கேட்டார்கள்.  நடந்தது எதையும் அறியாத பட்டினத்தார் பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.  காவலர்களோ  இவரே கொள்ளைக் கூட்டத் தலைவராக இருக்க வேண்டும்,  இப்போது ஏதும் அறியாதது போல் நடிக்கிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்

மன்னர் பத்ருஹரியும் வந்து விசாரித்தார். பட்டினத்தார் பதில் ஏதும் சொல்லவில்லை. உடனே மன்னருக்குச் சினம் ஏற்பட்டு  “கள்வனைக் கழுவில் ஏற்றுக!என்று ஆணையிட்டார். கழுமரம் தயார் செய்யப் பட்டது.  பட்டினத்தாரும் கழுவில் ஏற்றப்பட்டார். கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும் கலங்காத பட்டினத்தார்  விதியின் வலிமையை எண்ணி என் செயலாவது யாதொன்றுமில்லை, இனி தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்எனத் தொடங்கும் பாடலைப் பாடக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது.  இதைக் கண்ட மன்னர் பட்டினத்தாரின் மகிமையை உணர்ந்து அறியாமல் இழைத்த தன் பிழை பொறுக்குமாறு அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.  

ஞான திருஷ்டியால் மன்னர் துறவுக்கான முழு பக்குவத்தோடு காத்திருப்பதை அறிந்த பட்டினத்தார் மன்னர் அறியாத மேலும் பல உள்ளன என்றும் மன்னரின் மனைவியே கணவருக்கு துரோகம் செய்வதையும் மன்னர் அறியவில்லை என்றும் தெரிவித்தார். உடனே அதை உறுதிப்படுத்திக் கொண்ட மன்னர் அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார். பட்டினத்தாரும், பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் சென்றடைந்தார்கள்.

உஜ்ஜயினி மகாராணி கணவர் பிரிந்தவுடன் தன் குற்றத்திற்காக வருந்தி இறந்து போய் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து பத்திரகிரியாரையைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வந்த. தம்மைச் சுற்றி வந்த பத்திரகிரியார் அந்த நாய்க்கும் உணவிட்டு வந்தார். அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் ஒரு துறவி வந்து பிட்சை கேட்க,  பட்டினத்தார் சிரித்தபடி  “நானோ சந்நியாசி, என்னிடம் கொடுக்க ஏதுமில்லை. அதோ இருக்கிறானே என் சீடன், அவன் சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமில்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அவனைக் கேளுங்கள்.என்று கை காட்டி விட்டார்.

இதைக் கேட்ட பத்திரகிரியார் ஆஹா, துறவியாக மாறிய என்னை இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் சம்சாரியாக அல்லவா ஆக்கிவிட்டன.  என்று வருந்தி சோற்றுச் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைத்து விடுகிறார். அப்போது சிதறிய சட்டித்துண்டு ஒன்று நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது. அதைக் கண்ட பத்திரகிரியார் திகைத்து நிற்க பட்டினத்தார் தெளிவு படுத்துகிறார். பத்திரகிரியாரின் மனைவியே அந்த நாய் எனவும், இப்போது அவள் பாவம் தீர்ந்து விட்டதென்றும், அடுத்த பிறவியில் நல்லதொரு அரசகுடும்பத்தில் பிறந்து மீண்டும் நாடி வருவாள்  என்றும் சொல்கிறார்.

அதன்படியே தன் தவறை உணர்ந்து வருந்திநாய்ப் பிறவி எடுத்து தன் பாவத்தைக் கழித்த மகாராணி காசிராஜனுக்கு மகளாய்ப் பிறக்கிறாள். பேரழகு வாய்ந்த பெண்ணாள் வளர்கிறாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்களும், இளவரசர்களும் போட்டி போட்டனர். காசிராஜனும் மகளுக்கு மணமகன் தேடவேண்டிச் சுயம்வரம் நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ சுயம்வரத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்தாள். தான் வேறொருவருக்குச் சொந்தமானவள் என்றாள். திருவிடைமருதூரில் ஈசனோடு ஐக்கியமாகி இருக்கும் பத்திரகிரியாரைக் குறித்துச் சொல்லி அவரிடம் தன்னைச் சேர்ப்பிக்கச் சொல்கிறாள். மன்னன் மகளை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து சேர்கிறான். பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான். தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான்.

காசிராஜன் மகளும் தங்களின் அடிமையாகிய இந்த நாய் மீண்டும் தங்கள் திருவடி தேடி வந்திருக்கிறது என்று அவர் பாதம் பணிந்தாள். அவளுக்குத் தன் பூர்வ ஜன்ம நினைவுகள் மறையவே இல்லை என்பதைக் கண்ட  பத்திரகிரியார் இது என்ன புதுத் தொல்லை என எண்ணி தன் குருநாதரான பட்டினத்தாரிடம் போய் இந்த பழைய பந்த சிக்கலில் இருந்து தன்னை மீட்க வேண்டிக் கொண்டார். பட்டினத்தாரும்  ஈசன் திருவருளை நினைத்து வேண்ட அப்போது தோன்றிய பெரும் ஜோதியில் அந்தப் பெண்ணும் பத்திரகிரியாரும் ஐக்கியம் ஆனார்கள்.

பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் என்ற பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. அவை மெய்ஞானம் குறித்த ஆன்மீகத் தேடலை வெளிப்படுத்துவதோடு மெய்ஞானம் அடையும் வழிகளையும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிற பாடல்கள். ‘எக்காலம்?என்று முடியும் இருநூற்றிற்கும் மேற்பட்ட பாடல்களில், சிலவற்றைப் பார்ப்போம்.

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்?
பற்றற்று நீரில் படர்தாமரை இலைபோல்
சுற்றத்தை நீக்கி மனம் தூரநிற்பதெக்காலம்?

புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?
நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்?
கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?
அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்?
காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்?
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?
என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?


இந்தப் பாடல்களில் ஆன்மிக இலக்கை அடைய எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்கிற அறிவுரை, விருப்பமாக முதல் ஒன்றரை அடிகளில் வெளிப்படுகின்றது. அப்படி இருக்க முடிவது எக்காலம் என்ற ஏக்கத்தையும் அது பிரதிபலிக்கின்றது.

நான் என்ற ஆங்காரத்தை ஏற்படுத்தக் கூடிய ஐம்புலன்களின் ஆதிக்கத்தை அறுத்தல், தாமரை இலை தண்ணீரில் இருந்தாலும் அதனுடன் ஒட்டாது இருப்பது போல பந்தங்களில் இருந்து விலகி இருத்தல், புல்லில் இருந்து மனிதப் பிறவி வரை ஒவ்வொரு பிறவியாக எடுத்து மாயை என்ற இருளில் சிக்குவதிலிருந்து விடுபடுதல், பொய்யான இரவல் வாங்கி வைத்திருக்கும் கருத்துக்களை விட்டு உள்ளத்தின் உண்மையான கருத்தை அறிதல், காந்தம் இரும்பை இழுப்பது போல் இறைவனுடைய திருவடி நம் மனதை இழுத்தல், நம்மில் இருந்து நீங்காமல் உள்ளேயே இருக்கும் இறைவனை அறிந்து மனதளவில் அவனிடம் இருந்து நீங்காமல் இருத்தல் போன்ற ஆன்மிக இலக்கின் பரிமாணங்களை விளக்கிக் கொண்டே போகும் பத்திரகிரியார் பாடல்களில் பக்குவப்பட்ட மனிதனின் அந்தராத்மாவின் கதறலைக் கேட்க முடிகிறது. அந்தப் பாடல்கள் மனிதன் போக வேண்டிய ஞான வழியையும் காட்டுகிறது என்பது ஆன்மிக அன்பர்களுக்கு நற்செய்தி!

-          என்.கணேசன் 

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம்- 28.01.2014

Thursday, August 21, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 8


விமானம் ஏறும் வரை கூட ஆனந்துக்கு தன்னை யாரும் கண்காணிக்கிறார்களோ, பின் தொடர்ந்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பு அடிக்கடி உணர்ந்த பயம் அது. அப்போது அமானுஷ்யன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த அவன் தம்பி அக்‌ஷய் பேராபத்தில் சிக்கி இருந்தான். இப்போதைய பயமும் தம்பிக்காகத் தான். அக்‌ஷயின் இருப்பிடம் அவனுடைய எதிரிகளுக்குத் தெரிந்தால் பழைய பேராபத்து பல மடங்காய் திரும்பி விடும். நல்ல வேளையாக யாரும் பின் தொடரவில்லை. அவன் நியமித்திருந்த சிபிஐ ஆள் நூறு அடிகள் இடைவெளியிலேயே விமானநிலையம் வரை வந்து அதை குறுந்தகவல் அனுப்பி உறுதி செய்தான். மனம் நிம்மதியானது.

அவன் பயத்தைச் சொன்னால் அக்‌ஷய் வாய் விட்டுச் சிரிப்பான். கிண்டல் செய்வான். கடவுள் எனக்கு குறித்த நேரத்திலிருந்து ஒரு வினாடி முன்பும் என்னை யாரும் கொல்ல முடியாது. அதற்கு ஒரு வினாடி பின்பும் யாரும் என்னைக் காப்பாற்ற முடியாது. அப்படி இருக்கையில் நீ ஏன் பயப்படுகிறாய்?என்று தத்துவம் பேசுவான்.

விமானம் கிளம்பியது. இருக்கையில் சாய்ந்து கொண்டு தம்பியை நினைக்கையில் அவன் முகத்தில் சின்னதாய் புன்னகை அரும்பியது. அக்‌ஷய் வெறும் தத்துவமாக பயம் வீண் என்று சொல்பவன் அல்ல. சொன்னபடியே தைரியமாக இருந்தவன் அவன். பயமே அறியாத அக்‌ஷயைப் பார்த்து பயந்தவர்கள் தான் ஏராளம். தனிக்கட்டையாய் இருந்த போதிருந்த அந்த அசாத்திய தைரியம் இப்போதும் அதே அளவில் அவனுக்கு இருக்குமா என்று ஆனந்த் யோசித்தான். மனைவி, மக்கள், குடும்பம் என்று வந்த பிறகு பொதுவாக மனிதர்கள் பலவீனமாக அல்லவா ஆகி விடுகிறார்கள்? தனக்காக இல்லா விட்டாலும் அவர்களுக்காக சில பராக்கிரம செயல்களுக்குத் தயங்க அல்லவா வேண்டி வருகிறது....

சஹானா நினைவு வந்த போது மறுபடி ஆனந்த் புன்னகைத்தான். அக்‌ஷய்க்கு அவளை விடப் பொருத்தமான மனைவி கிடைத்திருக்க முடியாது. இமயமலைச்சாரலில் ஒரு விபத்தில் இருந்து தன் குழந்தையைக் காப்பாற்றியவன் என்ற ஒரே காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளும், போலீஸ்காரர்களும் வலைவீசித் தேடிக்கொண்டிருந்த அக்‌ஷய்க்கு ஆரம்பத்தில் அடைக்கலம் கொடுத்தவள் அவள். சீக்கிரமாகவே அவள், அவள் மகன் வருண், மாமியார் மரகதம் – மூவர் மனதிலும் அவன் இடம் பிடித்து விட்டான். இளம் விதவையான சஹானா மனதில் அக்‌ஷய் இடம் பெற்றது கூட ஆனந்துக்கு ஆச்சரியம் இல்லை. வருண், மரகதம் இருவரும் அக்‌ஷயை அளவுகடந்து நேசிப்பது இப்போதும் அவனுக்கு வியப்பாய் இருக்கிறது. தந்தையின் ஸ்தானத்தில் வருணும், மகன் ஸ்தானத்தில் மரகதமும் அக்‌ஷயை ஏற்றுக் கொள்ள முடிந்தது பெரிய விஷயம் தான். சொல்லப் போனால் இறந்து போயிருந்த வருணின் தந்தை சேகரை விட பலமடங்கு மேலாகவே அவர்கள் அக்‌ஷயை நேசித்தார்கள். வாழும் காலத்தில் சேகர் ஒரு நாகரிக கொடுமைக்காரனாக இருந்திருந்தான் என்பது பிறகு தான் ஆனந்துக்குத் தெரிய வந்தது. அக்‌ஷயைப் போன்ற அன்பு மயமானவனை சேகருக்கு மாற்றாய் ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்குத் தயக்கம் எதுவும் இருக்கவில்லை. திருமணமாகி மூன்று வருடத்தில் அக்‌ஷய்-சஹானா தம்பதிக்கு கௌதம் பிறந்தான்....

ஆனந்த் கண்ணயர்ந்தான். கோயமுத்தூரில் விமானம் தரையிறங்கிய போது தான் அவன் கண்விழித்தான். விமானநிலையத்திலிருந்து அக்‌ஷய் வீட்டுக்குப் போகும் போது தம்பியைப் பார்க்கப் போகிற ஆர்வத்தில் மனம் பரபரப்பாக இருந்தது. இந்த பதிமூன்று வருட காலத்தில் இரண்டே முறை தான் அவன் அக்‌ஷயை சந்தித்திருக்கிறான். ஏழு வருடங்களுக்கு முன் அவர்கள் தாய் இறந்த போது தான் நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் முறை. இரண்டு வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு கோடை விடுதியில் இருவர் குடும்பங்களும் சேர்ந்து மூன்று நாட்கள் கழித்தார்கள். அப்போதும் எதிரிகள் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் மட்டும் ஆனந்துக்கு இருந்து கொண்டே இருந்தது. இரண்டு குடும்பங்களையும் சேர்ந்து பார்க்கையில் கடந்த கால சம்பந்தப்பட்டவர்கள் யாருக்காவது சந்தேகம் வந்து விடலாம் என்பதால் கூடுமான வரை சுற்றுலா பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களை அவர்கள் தவிர்த்தார்கள்.

இத்தனைக்கும் அக்‌ஷயும் சஹானாவும் தோற்றத்தில் நிறையவே மாறுதல்களைச் செய்து கொண்டிருந்ததால் பார்க்கின்ற பழைய ஆட்களுக்கும் அவ்வளவு சுலபமாக அவர்களை அடையாளம் காண முடியாத நிலையே இருந்தது. அவர்கள் தொழிலிலும் கடந்த காலத்தின் சாயல் இருக்கவில்லை. கோயமுத்தூரில் ஒரு பள்ளியில் சஹானா  ஆங்கில ஆசிரியையாகவும், அக்‌ஷய் உடற்பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார்கள். வருண் அழகான இளைஞனாக வளர்ந்திருந்தான். டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறான். கௌதம் நான்காம் வகுப்பு மாணவனாக இருந்தான்....

கால் டாக்சியில் இருந்து இறங்கிய ஆனந்தை முதலில் பார்த்தவன் அக்‌ஷய் தான். அக்‌ஷய் முன்பிருந்தது போலவே எடை கூடாமல் கச்சிதமாய் உடம்பை வைத்திருந்தான். அவன் அளவு கடந்த மகிழ்ச்சியோடு ஓடி வந்து அண்ணனைக் கட்டி அணைத்துக் கொண்டான். தம்பி ஓடி வருவதில் கூட ஒரு தாள லயத்தை, லாவகத்தை ஆனந்த் கவனித்தான். எந்த சூழ்நிலையிலும் ஒரு ஒழுங்கான இயக்கம் அவனிடம் இருக்கும். டிஸ்கவரி சேனலில் பல முறை சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளின் இயக்கத்தைப் பார்க்கிற போதெல்லாம் அவனுக்குத் தன் தம்பி நினைவு வரும். மின்னல் வேகத்தில் இயங்கினால் கூட, அந்த அதிக வேகத்திலும் அவசரமிருக்காது. பதட்டம் இருக்காது....



ஹாய் ஹீரோ எப்படி இருக்கிறாய்?என்று அக்‌ஷய் அன்போடு அண்ணனை விசாரித்தான். தன் அண்ணன் சினிமா கதாநாயகன் போல் மிக அழகானவன் என்பதில் அக்‌ஷய்க்கு என்றுமே ஒரு பெருமிதம் உண்டு. அதனால் பார்க்கும் போதெல்லாம் ஹீரோ என்று அழைப்பான். ஆனந்துக்குத் தான் யார் முன்பாவது அவன் அப்படி அழைப்பது தர்மசங்கடமாக இருக்கும்… ஆனந்த் நலமென்று சொன்னான்.


எதிர்பாராமல், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த ஆனந்தை வீட்டின் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அவன் வரவு ஆச்சரியத்தை அளித்தது. ஏதாவது தகவல் அனுப்புவதாக இருந்தாலும் ஆனந்த் தன் ஆட்கள் யாரையாவது அனுப்புவானே ஒழிய நேரில் வருவதைத் தவிர்ப்பவன்...

அக்‌ஷய் கேட்டான். “அண்ணியும் அஞ்சனாவும் எப்படி இருக்கிறார்கள்?

அஞ்சனா ஆனந்தின் மகள். ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். ஆனந்த் அவர்கள் நலமென்றான். ஆனந்தை சூழ்ந்து அமர்ந்து கொண்டு அனைவரும் அன்பான உபசரிப்புகள் செய்த போது அவனுக்கு நிறைவாக இருந்தது. வந்த காரணத்தைச் சொல்லும் போது அவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள், என்ன சொல்வார்கள் என்று யோசித்தான். அக்‌ஷய் என்ன சொல்வான் என்று தெரியாவிட்டாலும் மற்றவர்கள் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. அன்பான குடும்பம்....! ஆனந்த் சோம்நாத்தை மனதில் சபித்தான்.

குளியல், டிபன் எல்லாம் முடிந்து கௌதமைத் தவிர (அவன் விளையாடப் போய் விட்டிருந்தான்) அனைவரும் சேர்ந்திருக்கையில் ஆனந்த் ஆரம்பித்தான்.

அக்‌ஷய் நீ மைத்ரேய புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?

அக்‌ஷய் ஆர்வத்துடன் சொன்னான். “நமக்கு கல்கி அவதாரம் மாதிரி, பௌத்தர்களுக்கு மைத்ரேய புத்தர். புத்தரின் அவதாரம். தர்மம் முழுவதும் அழிந்து போகும் போது உலகத்தைக் காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்ட வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். நான் திபெத்தில் இருந்த போது இன்னும் சில வருடங்களில் அவர் பிறப்பார் என்று அங்கிருந்த லாமாக்கள் நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.... ஏன் திடீர் என்று மைத்ரேய புத்தரைப் பற்றிக் கேட்கிறாய்?

அவர் பத்து வருடங்களுக்கு முன்பே திபெத்தில் பிறந்திருக்கிறாராம்...

அப்படி பிறந்திருந்தால் உடனே எல்லாருக்கும் தகவல் பரவியிருக்குமே..

அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்து இருந்ததால் லாமாக்கள் ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்கள்....

அக்‌ஷய் ஆனந்த் ஏதோ முக்கிய விஷயமாகத்தான் வந்திருக்கிறான் என்று ஆரம்பத்திலேயே சந்தேகித்திருந்தான். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் ஆனந்த், மைத்ரேய புத்தர் விஷயத்தை ஏன் பேசுகிறான் என்று புரியவில்லை....

ஆனந்த் தொடர்ந்தான். “இப்போது அந்த ரகசியம் வெளியாகிவிடப் போகிறது என்று ஏதோ காரணங்களால் பயப்படுகிறார்கள். அதனால் மைத்ரேய புத்தரை திபெத்தில் இருந்து ரகசியமாய் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று லாமாக்கள் நினைக்கிறார்கள். அதற்காக தலாய் லாமா நம் பிரதமரிடம் உதவி கேட்டு வந்திருக்கிறார்....

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்பு வேலை பார்த்திருந்த சஹானா தலாய் லாமாவை ஒருமுறை பேட்டி எடுத்திருக்கிறாள். தலாய் லாமா மீது அவளுக்குத் தனி மரியாதை இருந்தது. அதனால் ஆர்வத்துடன் அவள் ஆனந்தைக் கேட்டாள். “என்ன விதமாய் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்?

திபெத்திற்குப் போய் மைத்ரேய புத்தரை ரகசியமாய் அழைத்து வர அமானுஷ்யன் என்ற நபரின் உதவியை அவர் எதிர்பார்க்கிறார்...

ஆனந்த் முடித்த பின் அங்கு கனத்த மௌனம் நிலவியது. மரகதம், சஹானா, வருண் மூவரும் அக்‌ஷயையே பார்த்தார்கள். அவர்கள் மூவர் பார்வையிலும் பயம் பிரதானமாய் தெரிந்தது. அக்‌ஷய் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

முதலில் வாயைத் திறந்தது வருண் தான். பதிமூன்று வருடத்திற்கு முந்தைய அனுபவங்கள் பேரலைகளாய் அவன் மனதைத் தாக்க, வரப்போகிற அபாயத்தின் அளவு தெளிவாய் தெரிய, அவன் அக்‌ஷயைப் பார்த்து உறுதியாய் சொன்னான். “அப்பா நீங்கள் போகப் போவதில்லை....


  

(தொடரும்)

-என்.கணேசன்



(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)
  

Monday, August 18, 2014

உலகப் பழமொழிகள் – 6



51. இதயத்தை விரிவாக்குவோன் வாயைச் சுருக்குவான்.

52. அன்பு குறைந்து வருகையில் குறைகள் பெரிதாகத் தெரியும்.

53. ஏழைகளுக்குத் திறவாத பணப்பெட்டி வைத்தியனுக்குத் திறக்கும்.

54. தானம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பிச்சை எடுக்க நேரிடாது.

55. ஓநாய்க்காவது சில சமயம் திருப்தி உண்டு. உலோபிக்கு அதுவும் கிடையாது.

56. நன்றியும் கோதுமையும் நல்ல நிலத்தில் தான் விளையும்.

57. கொடுத்து செலவழித்ததை கடவுள் நிரப்பி வைப்பார்.

58. ஒரு ஏழை இன்னொரு ஏழைக்கு உதவி செய்யும் போதெல்லாம் கடவுள் புன்னைகை செய்கிறார்.

59. நம்பிக்கையும் இல்லாதவன் தான் பரம தரித்திரன்.

60. நம்பிக்கைக் குதிரைகள் பாய்ந்து செல்லும். அனுபவக் குதிரைகள் மெதுவாகவே செல்லும்.

தொகுப்பு: என்.கணேசன்


Thursday, August 14, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 7


மானுஷ்யன் ஃபைலைப் படித்து முடித்த பின் பிரதமர் முகத்தில் தெரிந்த பிரமிப்பைக் கண்டு இந்திய உளவுத்துறை தலைமை அதிகாரி சோம்நாத் ஆச்சரியப்படவில்லை. அமானுஷ்யனைப் பற்றியும், அவனது திறமைகளைப் பற்றியும் முதல் முறையாக அறிய நேரும் போது பிரமிக்காமல் இருந்தால் அது தான் ஆச்சரியம். பிரதமர் அந்த ஃபைலைப் படிக்கையில் எதிரில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்த சோம்நாத்தை ஆச்சரியப்படுத்தியது அமானுஷ்யனைப் பற்றி முன் அறிந்திராத பிரதமர் இப்போது திடீர் என்று ஆர்வம் காட்டியது தான். அமானுஷ்யனைப் பற்றி பிரதமருக்கு யார் தெரிவித்திருப்பார்கள்? பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அந்த ஃபைல் இப்போது திறக்கப்படக் காரணம் என்ன?

ஃபைலைப் படித்து முடித்த பின் உடனடியாக எதுவும் சொல்லாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்த பிரதமர் இன்னும் சந்தேகம் தெளியாதவராய் கேட்டார். “இதில் எதுவும் கற்பனை இல்லையே?

சோம்நாத் புன்னகையுடன் சொன்னார். “கற்பனை இல்லை. நிஜம் தான்

பின் ஏன் இப்படிப்பட்ட மனிதனை நாம் பிறகு பயன்படுத்திக் கொள்ளவில்லை?

“அதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். அவன் சம்மதிக்கவில்லை. அவன் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பினான். பொதுவாக எல்லோரும் ஆசைப்படும் பணம், புகழ், அதிகாரம் எல்லாம் அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.....    

பணம், புகழ், அதிகாரம் என்ற மூன்றின் பின்னால் ஓடுபவன் என்றும் அமைதியைக் காண முடியாது என்று புரிந்து கொண்டு அவற்றை அலட்சியப்படுத்தி, அதனால் அவன் அமைதியாக வாழ்கிறான் என்று சோம்நாத் சொல்ல வருகிறாரா என்ற சந்தேகம் பிரதமருக்கு வந்தது. அப்படி சொல்லி இருந்தாலும் அது தப்பில்லை என்ற எண்ணம் உடனடியாக வந்தது. இந்த மூன்றும் மனிதனை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கின்றன, என்னவெல்லாம் செய்ய வைக்கின்றன என்று பலநிலைகளில் பார்த்து வந்த அனுபவஸ்தர் அவர். திறமைகளில் மட்டுமல்ல, பக்குவத்திலும் அவன் அமானுஷ்யனே!...

பிரதமர் அபிப்பிராயத்தில் அவன் உயர்ந்து போனது அவர் முகபாவனையில் இருந்து சோம்நாத்திற்குப் புரிந்தது. ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு பிரதமர் அவரிடம் ஆதங்கத்துடன் சொன்னார்.  இப்படிப்பட்ட திறமைகள் இருப்பவன் ஒதுங்கி வாழ்வது உண்மையில் நாட்டிற்கு நஷ்டம் தான். நான் சினிமாக்களில் மட்டும் தான் இப்படிப்பட்ட திறமையுள்ள ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.

உண்மை தான். அவனைச் செயலில் பார்க்காதவர்கள் நம்ப முடியாது. அவனுடைய வித்தைகள் எல்லாம் திபெத்தில் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்......

பிரதமர் விதியின் விளையாட்டை எண்ணி ஒரு கணம் வியந்தார். ”.... அந்த திபெத் இப்போது அவனுடைய உதவியை எதிர்பார்க்கிறது....என்று சொன்னார்.

சோம்நாத் புரியாமல் விழித்தார். பிரதமர் தலாய் லாமாவின் கோரிக்கையை அவரிடம் தெரிவித்தார். சோம்நாத் யோசனையுடன் சொன்னார். “இந்த விஷயத்தில் அவர்களுக்கு அமானுஷ்யன் உதவ முடிந்தவன் தான். சொல்லப் போனால் இந்த வேலைக்கு அவனைத் தவிர பொருத்தமான வேறு ஒரு ஆள் அவர்களுக்குக் கிடைக்க முடியாது. ஆனால்....

பிரதமர் அவர் வாக்கியத்தை முடிக்க காத்திருந்தார். ஆனால் சோம்நாத் தொடரவில்லை.

பிரதமர் சொன்னார். “தலாய் லாமா சொன்னதை அவனிடம் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அவனைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவன் இஷ்டம்...

சோம்நாத் தலையசைத்தார்.

பிரதமர் சொன்னார். “ஒருவேளை அவன் ஏற்றுக் கொண்டால் இந்த விஷயத்தில் நம் தரப்பில் இருந்து என்ன உதவி வேண்டுமானாலும் மறைமுகமாகச் செய்து கொடுங்கள்...

சோம்நாத் சரியென்றார்.

பிரதமர் கேட்டார். “இந்த விஷயம் எந்த விதத்திலும் வெளியே கசியக்கூடாது. யாருக்கும் சந்தேகம் கூட வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்..... எப்படி அமானுஷ்யனுக்குத் தெரிவிக்கப் போகிறீர்கள்?.

“சிபிஐயில் இருக்கும் அமானுஷ்யனின் அண்ணா ஆனந்த் மூலம் தெரிவிக்கிறேன்....


சோம்நாத் ஆனந்தைச் சந்தித்து தலாய் லாமாவின் கோரிக்கையைச் சொன்ன போது ஆனந்த் அதிர்ந்து போனான். இப்படி ஒரு கோரிக்கையை அமானுஷ்யன் முன் வைப்பதே அநியாயமாய் அவனுக்குத் தோன்றியது. அவன் அதை வாய் விட்டுச் சொன்னான்.

சோம்நாத் எத்தனையோ துப்பறிதல்களில் ஆனந்திற்கு உதவியவர், உதவி வாங்கியவர். நேர்மையும், அறிவுகூர்மையும் கொண்ட ஆனந்த் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவன் அநியாயம் என்று சொன்னதை பெரிதாகப் பொருட்படுத்தாமல் அவர் அமைதியாக இருந்தார்.

ஆனந்த் உணர்ச்சி வசப்பட்டு அவரிடம் சொன்னான். “அவன் மறைவில் இருந்து வெளியே வந்தால் கொன்று விட தலிபான் தீவிரவாதிகள் இப்போதும் வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சார். அவனைக் கொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு அப்போதே அவர்கள் ஆட்களிடம் ரகசியமாய் அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பு இப்போதும் அமலில் இருக்கிறது.

சோம்நாத் அந்த அறிவிப்பை அறியாதவர் அல்ல. அமானுஷ்யனுக்கு இருக்கும் ஆபத்தின் தன்மையையும் உணராதவர் அல்ல. அமானுஷ்யன் அவர் தம்பியாக இருந்தால் அவரும் இப்படித்தான் பயப்படுவார்....

சோம்நாத் அமைதியாகச் சொன்னார். அதனால் தான் பிரதமர் உன் தம்பியைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை ஆனந்த். தலாய் லாமா சொன்னதைத் தெரிவிக்க மட்டும் தான் சொல்லி இருக்கிறார். முடிவெடுப்பது உன் தம்பி கையில் இருக்கிறது. ஒருவேளை உன் தம்பி ஒத்துக் கொண்டால் எல்லா வகையிலும் எங்களை உதவி செய்யச் சொல்லி இருக்கிறார். உன் தம்பி ஒத்துக் கொள்ளா விட்டால் தலாய் லாமாவிடம் அதை பிரதமர் தலாய் லாமாவிடம் தெரிவித்து விடுவார். அவ்வளவு தான். முடிவு எதுவாக இருந்தாலும் இரண்டே நாளில் சொன்னால் நன்றாக இருக்கும்....

சோம்நாத் சென்ற பின் நீண்ட நேரம் ஆனந்த் சிலை போல் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் மனதிலோ பழைய நினைவுகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. தலிபான் தீவிரவாதிகளுடன், ஒரு சக்தி வாய்ந்த இந்திய அமைச்சரும் கைகோர்த்துக் கொண்டு செய்த சதியிலிருந்து இந்த தேசத்தைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய போது எத்தனையோ முறை அவன் தம்பி மரணத்தை மயிரிழையில் உரசி இருக்கிறான். பெற்ற தாய் கூட எதிரிகளிடம் பிணயக்கைதியாய் சிக்க வேண்டி வந்திருக்கிறது. அவனைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் அந்த சதி வலையில் இருந்து மீண்டு வந்திருக்க முடியாது.

அப்போது இழந்த கௌரவத்தை தலிபான் தீவிரவாதிகளால் இன்று வரை ஜீரணிக்க முடிந்ததில்லை. அவர்கள் அமானுஷ்யன் என்ற எதிரிக்காக இன்றும் காத்திருக்கிறார்கள். அவன் எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்பதை அறிய அவர்கள் செய்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் அவனை கொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாக தலிபான் தீவிரவாதிகள் தங்கள் இயக்கத்திலும், தங்கள் நட்பு இயக்கங்களிலும் அறிவித்தார்கள்.



அதனால் அமானுஷ்யனை அவர்களிடம் இருந்து மறைத்து வைக்க ஆனந்த் பெரும்பாடு பட்டிருக்கிறான். ஆனந்த் உட்பட அவனுடன் சம்பந்தம் வைத்திருந்த அத்தனை நெருக்கமானவர்களும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டி வந்தது. ஏனென்றால் தலிபான் தீவிரவாதிகளின் விசுவாசிகள் அவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் பல காலம் நிழலாய் தொடர்ந்து வந்தார்கள். அவர்களில் யாராவது ஒருவன் அமானுஷ்யனிடம் தங்களைக் கொண்டு போய் விடுவான் என்று நம்பினார்கள். மூன்று வருடங்கள் கழித்து அமானுஷ்யன் அமெரிக்காவில் ஒரு ரகசிய இடத்தில் செட்டில் ஆகி புது வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டதாக ரகசிய வதந்தியை ஆனந்த் கிளப்பி விட்டான். பலரையும் பேச வைத்து நம்ப வைத்தான். ஆனாலும் கூட தலிபான் தீவிரவாதிகளின் ஆட்கள் தங்கள் ரகசியப் பின் தொடரலை நிறுத்தவில்லை. முக்கியமாக ஆனந்தை பெரும் நம்பிக்கையுடன் கண்காணித்து வந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் தீவிரம் குறைந்து போனது. ஆனாலும் முன்னெச்சரிக்கையின் காரணமாக ஆனந்த் தன் தம்பியை நேரில் சென்று பார்ப்பதையோ, போனில் தொடர்பு கொள்வதையோ நீண்டகாலம் முற்றிலும் தவிர்த்து விட்டிருந்தான்.....


பாரதப் பிரதமரின் போன் அழைப்பு தலாய் லாமாவுக்கு வந்த போது தனதறையில் இருந்து ரகசியமாய் சோடென்னும் ஒட்டுக் கேட்டான். பாரதப் பிரதமர் தலாய் லாமாவிடம் ரத்தினச் சுருக்கமாய் சொன்னார்.

“நாங்கள் அவனுக்குத் தகவல் அனுப்பி இருக்கிறோம். அவன் சம்மதித்தால் தொடர்பு கொள்வான்  

தலாய் லாமா தன் நன்றிகளை பாரத பிரதமருக்குத் தெரிவித்தார். பிரதமர் தன் வணக்கங்களைத் தெரிவித்து விட்டு பேச்சை முடித்துக் கொண்டார். தலாய் லாமா அமானுஷ்யனின் பதிலுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார். காத்திருப்பில் பிரார்த்தனையும் கலந்து கொண்டது. காத்திருப்பும் பிரார்த்தனையும் நீள ஆரம்பித்தன....

சோடென் பாரதப் பிரதமர் தலாய் லாமாவிற்கு அனுப்பிய செய்தியை அப்படியே வாங் சாவொவிற்கு அனுப்பி வைத்தான்.  வாங் சாவொ தலாய் லாமாவை கண்கொத்திப் பாம்பாய் கண்காணிக்கச் சொன்னான். அவரை யார் எல்லாம் வந்து சந்திக்கிறார்கள், என்ன எல்லாம் சொல்கிறார்கள் என்ற தகவல்கள் தனக்கு அவ்வப்போது உடனடியாக வந்து சேர வேண்டும் என்று கட்டளை இட்டான். தலாய் லாமாவைச் சந்திக்க வரக்கூடும் என்று அவர்கள் நம்புகிற ஆள் மிக முக்கியமான ஆள் என்பது சோடென்னுக்குப் புரிந்தது. அந்தக் கணத்திலிருந்து சோடென் உடம்பெல்லாம் கண்ணும் காதுமானான்....


தே நேரத்தில் புதுடெல்லியில் முழுத்தலையும் நரைத்த டாக்சி டிரைவர்களை எல்லாம் தேடிப்பிடித்து க்வாங் சாவொவின் ஆட்கள் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். புதுடெல்லி விமான நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்களில் ஒருவர் கொண்டு போய் விட்ட அந்த வழுக்கைத் தலையரைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் மிக மும்முரமாக இருந்தார்கள்...

(தொடரும்)
-என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

Monday, August 11, 2014

நான்கு உண்மைகள், எட்டு வழிகள்!

அறிவார்ந்த ஆன்மிகம்- 45 


ஆன்மிகத்தின் ஆரம்பமே உலக வாழ்க்கையில் ஏற்படும் திருப்தியின்மை அல்லது நிம்மதியின்மை தான். தனி மனிதர்களின் ஆன்மிக சிந்தனைகள் மற்றும் தேர்ச்சி அவனுக்கு ஞானத்தையும் அமைதியையும் ஏற்படுத்துகின்றன என்றால் ஞானிகளின் ஆன்மிகத் தேர்ச்சி உலகத்திற்கே ஞானவழியையும், அமைதி வழியையும் அடையாளம் காட்டும்படி அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஞானிகளில் முதலிடம் கௌதம புத்தருக்கு உண்டு.


அரசனின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் பிற்காலத்தில் உலகையே ஆளும் சக்கரவர்த்தியாகவோ, அல்லது உலகமே வணங்கும் துறவியாகவோ வருவான் என்று ஒரு தீர்க்கதரிசி கூற தந்தையான சுத்தோதனருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொரு துக்கம். மகனுக்கு சக்கரவர்த்தியாகத் திகழும் அம்சம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி, அவன் துறவியாகவும் மாறலாம் என்பதில் துக்கம். மகன் துறவியாகி விடக்கூடாது என்று சித்தார்த்தனுக்கு உலகின் எந்தத் துன்பமும் கண்ணில் பட்டுவிடாமல் அவர் வளர்க்க ஆரம்பித்தார். யசோதரை என்ற அரசகுமாரியை சித்தார்த்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ராகுலன் என்ற மகனும் சித்தார்த்தனுக்குப் பிறந்தான். அரசபோக வாழ்க்கையை சித்தார்த்தன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் தந்தையின் கட்டுப்பாட்டை மீறி வெளியுலகத்திற்கு வந்த சித்தார்த்தன் மூன்று காட்சிகளைக் காண நேர்ந்தது. தள்ளாமையுடன் நடந்து கொண்டிருந்த ஒரு முதியவரையும், நோயின் பிடியில் சிக்கி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளியையும், இறந்து போன மனிதனின் சடலத்தையும் பார்த்த சித்தார்த்தன் நிலைகுலைந்து போனான். அவன் இருக்கும் கற்பனை உலகம் வேறு, துன்பங்கள் நிறைந்த இந்த நிஜ உலகம் வேறு எனப் புரிந்த போது இந்தத் துன்பங்களில் இருந்து விடுபட வழியை மனம் தேட ஆரம்பித்தது. ஒரு நள்ளிரவில் மனைவி, மகன், ராஜ்ஜியம் அனைத்தையும் விட்டு விட்டு வெளியேறிய சித்தார்த்தன் 29வது வயதில் துறவியானான்.

ஞானத்தைத் தேடி அலைந்த சித்தார்த்தனுக்கு பல குருமார்கள் கிடைத்தனர். சித்தார்த்தன் வேதங்களைக் கற்றறிந்தான். ஞான நூல்களில் தேர்ச்சி பெற்றான். தன்னை வருத்திக் கொள்ளும் விதத்தில் கடுமையான நோன்புகள் இருந்தான். எதுவும் சித்தார்த்தனுக்கு மன அமைதியை ஏற்படுத்தி விடவில்லை. எதிலும் தெளிவு பிறக்கவில்லை. ஒரு நாள் ஞானம் பெறாமல் எழ மாட்டேன் என்று போதிமரத்தின் அடியில் அமர்ந்த சித்தார்த்தன் ஞானம் பெற்று கௌதம புத்தராக எழுந்தது வரலாறு. புத்தர் என்றால் விழிப்புணர்வு உடையவர் என்று பொருள். 

புத்தரின் ஞானம் தத்துவ வேதாந்தக் குவியலாக இருக்கவில்லை. உலக வாழ்க்கையில் ஈடுபட்டு துன்பப்படும் சாதாரண மனிதனின் துயரங்களுக்கு அது விடையாக அமைந்தது. கணிதக் கோட்பாடுகள் போல படிப்படியாக உண்மையை அலசி மனிதனை அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துப் போவதாக அவர் ஞான உபதேசம் அமைந்தது. 35 ஆம் வயதில் ஞானம் பெற்ற கௌதம புத்தர் 80வது வயதில் இறக்கும் வரை தன் போதனைகளை எளிமையாகவும், வலிமையாகவும் மக்களிடம் பரப்பினார். இந்தியா எங்கிலும் பரவிய புத்தமதம் வெளிநாடுகளிலும் பரவி பிரசித்தி பெற்றது.

புத்தரின் போதனைகள் நான்கு பேருண்மைகளையும் எட்டு வழிகளையும் அடக்கியது. அவற்றை விளக்கமாகப் பார்ப்போம்.

1. துன்பம்: இந்த உலக வாழ்க்கை துன்பகரமானது. நோய், மூப்பு, இறப்பு போன்ற உடல்ரீதியான துன்பங்கள் மட்டுமல்ல, ஏழ்மை போன்ற பொருளாதார ரீதியான துன்பங்கள் உடபட பலவிதங்களில் வாழ்க்கை துன்பகரமானதாகவும், திருப்தியைத் தராததாகவும் இருக்கிறது. இதை மறுக்க முடியாத முதல் உண்மையாக புத்தர் சொல்கிறார். இருப்பவர், இல்லாதவர் என்ற இருதரப்பும் ஏதோ ஒரு துன்பத்திலும், அதிருப்தியிலும் உழலுவதை இன்றளவும் நாமும் கண்டு வருகிறோம் அல்லவா?

2. துன்பத்தின் தோற்றம்: துன்பம் இருக்கிறது என்பது தெளிவான உணமை என்றான பின் அது ஏன் தோன்றுகிறது, அது உருவாகக் காரணம் என்ன என்று சிந்திப்பது முக்கியம் அல்லவா? புத்தர் அந்த சிந்தனையின் விளைவாக துன்பம் தோன்றக் காரணம் ஆசைகள் தான் என்று உறுதியாகக் கூறுகிறார். ஆசைகள் நிறைவேறி திருப்தி அடைந்தவன் உலகில் யாரும் இல்லை. ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று ஆசைகள் எழுந்து கொண்டே இருக்க அதில் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி இல்லாமல் இருக்கிற மனிதன் நிறைவேறாத ஆசைகள் ஒருசில இருந்தாலும் கூட வருத்தத்தின் பிடியில் சிக்கிக் கொள்கின்றான்.

3. துன்பத்தை ஒழித்தல்: துன்பம் உருவாகக் காரணம் ஆசைகள் என்றால் அந்தத் துன்பத்தை ஒழிக்க ஒரே வழி ஆசைகளை ஒழிப்பதே அல்லவா? துன்பத்திலேயே மனிதன் உழன்று கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆசைகளை ஒழித்தால் துன்பத்தையும் ஒழிக்கலாம் என்பதை அறிவது முக்கியம் எனக்கூறுகிறார் புத்தர்.

4. துன்பத்தை ஒழிக்கும் வழிகள்: ஆசைகளை ஒழித்து துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது சுலபம் என்றால் அனைவருமே அப்படி விடுதலை அடைந்து அமைதியைப் பெற்று விட முடியுமே, பிரச்சினையே ஆசைகளை எப்படி ஒழிப்பது என்பது தானே என்ற கேள்வி அடுத்தபடியாக எழும் அல்லவா? ஆசைகளை ஒழித்து வாழ்வியல் துன்பங்களில் இருந்து விடுபடும் வழிகளைத் தான் “அஷ்டசீலம்” என்று புத்தர் குறிப்பிடுகிறார்.

அஷ்டசீலம் என்றழைக்கப்படும் அந்த எட்டு வழிகளைப் பார்ப்போம்.

1. சரியாகப் புரிந்து கொள்ளல்: எந்தப் பிரச்சினையையும் சரியாகப் புரிந்து கொண்டோம் என்றால் அதிலேயே அந்தப் பிரச்சினைக்கான தீர்வு புலப்பட்டு விடும் அல்லவா? எனவே முதல் வழியாக சரியாகப் புரிந்து கொள்வதைப் புத்தர் குறிப்பிடுகிறார். தன்னுடைய உபதேசங்களையே கூட சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் அதில் இருந்து நற்பலன்களை ஒருவர் காண முடியாது என்பது அவருடைய கருத்தாக இருந்தது. 

2. சரியான நோக்கம்: நோக்கம் சரியாக இல்லாத போது பின் தொடர்வது எதுவுமே சரியாக இருக்காது என்பது புத்தரின் தெளிவான புரிதல். எனவே எப்போதும் வாழ்க்கையில் சரியான நோக்கம் முக்கியம் என்கிறார் அவர்.

3. சரியான பேச்சு: பேச்சினால் வரும் துன்பங்கள் ஏராளம். அதனால் தான் திருவள்ளுவரே “யாகாவாராயினும் நாகாக்க” என்று எச்சரித்தார். துன்பங்களில் இருந்து விடுபட விரும்பும் மனிதன் சரியாகப் பேச வேண்டும், சரியாகப் பேச எதுவும் இல்லாத போது மௌனமாக இருக்க வேண்டும் என்பது புத்தரின் மூன்றாவது வழி. கடுமையாகவும், பயனற்ற வழிகளிலும் ஒருவருடைய பேச்சு இருக்கலாகாது என்று அவர் உபதேசிக்கிறார்.

4. சரியான செயல்: துன்பங்களை ஏற்படுத்தும்படியான செயல்களில் ஈடுபடாமல் சரியான செயல்களில் மட்டுமே தெளிவுடன் ஈடுபடுவது முக்கியம் என்கிறார் புத்தர். அடுத்தவரைத் துன்புறுத்தாமல் இருப்பது, களவு முதலான தவறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது போன்றவற்றை புத்தர் வலியுறுத்தினார்.

5. சரியான வாழ்க்கை: நியாயமான முறையான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே ஒருவரால் அமைதியைக் காண முடியும் என்கிறார் புத்தர். மற்றவரை ஏமாற்றாமல், மற்றவர்க்குத் துன்பம் விளைவிக்காமல் நேர்மையாக வாழ்ந்தால் மனிதன் துன்பத்தில் இருந்து விடுபடலாம் என்கிறார்.

6. சரியான முயற்சி: சரியான முயற்சி சரியான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அரைகுறையான முயற்சிகள், தவறான முயற்சிகள் பிரச்சினைகளிலும், துன்பத்திலும் தான் ஒருவரைக் கொண்டு போய் நிறுத்தும் என்கிறார் புத்தர்.

7. சரியான விழிப்புணர்வு: விழிப்புணர்வு என்பது சரியாக இருக்கும் போது மனிதன் தவறுகளைச் செய்யவோ, தவறான வழிகளில் செல்லவோ முடியாது. கண்ணைத் திறந்து கொண்டு கவனமாகச் செல்லும் மனிதன் துன்பக்குழிகளில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாகப் பயணிப்பான் அல்லவா?

8. சரியான கவனக்குவிப்பு: சரியான அவசியமான விஷயங்களில் தன் கவனத்தை சரியாகக் குவிக்க முடிந்த மனிதன் வெற்றியையும், அமைதியையும் ஒருங்கே பெற்று விடுகிறான். தவறானவற்றிலும், பிழையானவற்றிலும் கவனம் குவிக்கும் போது அதுவே அதன்பின் தொடரப் போகும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகி விடுகின்றது. எனவே தான் கடைசி வழியாக இதை புத்தர் வலியுறுத்துகிறார்.

இந்த நான்கு உண்மைகளை உணர்ந்து, இந்த எட்டு வழிகளைக் கடைபிடித்தால் துன்பம் அடையாமல் இன்பமாகவே வாழ்ந்து முடிக்கலாம் என்பது புத்தரின் உத்திரவாதம்.


என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 21.1.2014

Sunday, August 10, 2014

மூன்றாம் பதிப்பு காணும் என் இரு நூல்கள்!


அன்பு வாசக நண்பர்களே,

வணக்கம்.

தங்கள் பேராதரவால் பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் நூலும், வாழ்ந்து படிக்கும் பாடங்கள் நூலும் தற்போது மூன்றாம் பதிப்பைக் கண்டுள்ளன.

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் நூல் ஆன்மிக வாசகர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்ற நூல். நள்ளிரவில் பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து ஆரம்பித்த பால் ப்ரண்டனின் ஆன்மீக, அமானுஷ்ய அனுபவங்கள் பண்டைய எகிப்தின் மற்ற மெய்ஞான ரகசியங்களை அறிந்து கொள்ளும் விதங்களை விளக்கும் இந்த நூலின் விலை ரூ.110/-

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த வித சூழ்நிலைகளிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்காக எழுதப்பட்டது. ஒரு வருட காலத்திற்குள் மூன்று பதிப்புகள் கண்ட இந்த நூலை தங்களுக்காக வாங்கியதோடு மட்டுமல்லாமல், தாங்கள் அக்கறை வைத்துள்ள மற்ற நண்பர்களுக்கு பரிசு கொடுப்பதற்காகவும் வாசகர்கள் வாங்கி வருகிறார்கள். அதனால் ஒருவரே பல பிரதிகள் வாங்கும் வெற்றி நூலாக இது அமைந்துள்ளது. இந்த நூலின் விலையும் ரூ110/-

தாங்கள் படித்தும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்தும் இந்த நூல்களை வெற்றி நூல்களாக மாற்றிய வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
என்.கணேசன்


நூல்களை வாங்கவும், தங்கள் ஊர்களில் எங்கு கிடைக்கும் என அறியவும், பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் – 
Mobile: 9600123146
email: blackholemedia@gmail.com 




ப்ளாக்ஹோல் மீடியாவில் இருந்து தபாலில் நூல்கள் பெற:


தங்களுக்கு தேவைப்படும் நூல்களின், மொத்த விலையை மட்டும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். நூல்கள் கூரியர் மூலம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். (முகவரி தமிழகம், புதுவை எனில் கூரியர் செலவாக ரூ-20/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும்.) வங்கியில் பணம் செலுத்தியதும் தகவலையும், முகவரியையும், மின்னஞ்சல்( blackholemedia@gmail.com )மூலமோ,
மொபைல் நம்பருக்கு( 9600123146 ) sms மூலமோ தெரியப்படுத்துதல் மிக முக்கியம்.

பிற மாநில முகவரி எனில் கூரியர் செலவாக ரூ-40/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வாசகர்கள் கூரியர் செலவு முழுவதையும் நூல் விலையோடு சேர்த்து அனுப்ப வேண்டும். வங்கி வசதி இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் மணியாடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும்
blackhole media publication ltd என்ற பெயரில் அலுவலக முகவரிக்கு அனுப்பப்படும் காசோலை, வங்கி வரையோலை ஏற்றுக்கொள்ளப்படும்.vpp சேவை இல்லை.


வங்கி எண்:

name: blackhole media publication ltd
indian overseas bank, current/account no:165302000000377
branch:alandur, chennai
ifsc code: ioba 0001653

மேலும் விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க 9600123146