Thursday, August 7, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 6


புதுடெல்லி விமான நிலையத்தின் ரகசிய காமிரா பதிவுகளை பத்திரப்படுத்தி வைக்கும் அந்த அதிகாரிக்கு வேலையில் இருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன.  ஆனால் மனதளவில் அவர் இப்போதே ஓய்வு பெற்று விட்டார். அவருடைய இப்போதைய சிந்தனை எல்லாம் ஓய்வு பெற்ற பின் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. அவருடைய உதவியாளன் சாப்பிட்டு வர வெளியே சென்றிருந்தான். தனியாக அமர்ந்து தன் எதிர்காலத் திட்டங்களுடன் அமர்ந்து இருந்த அவர் தனிமையை ஓட்டமும் நடையுமாய் வந்து மூச்சு வாங்கி நின்ற ஒரு நடுத்தர வயது மனிதர் கலைத்தார்.

அந்த மனிதர் பார்க்க கண்ணியமானவராகத் தெரிந்தார். அவர் முகத்தில் பெரும் கவலை குடியேறி இருந்தது. எதோ தொலைத்தவர் போலத் தெரிந்தார்.

அதிகாரி என்ன என்பது போல அவரைப் பார்த்தார். அந்த மனிதர் ஒரு விசிட்டிங் கார்டை நீட்டினார். ஏதோ தனியார் கம்பெனியின் எக்சிக்யூடிவ் டைரக்டர், பெயர் ஆர்.பி.குப்தா என்று விசிட்டிங் கார்டு தெரிவித்தது.

குப்தா சிறிது தயக்கத்துடன் சொன்னார். “எனக்கு ஒரு உதவி வேண்டும்....

“சொல்லுங்கள்.

மறுபடி தயங்கி பரிதாபமாய் பார்த்த குப்தா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “நேற்றிலிருந்து என் மகளைக் காணோம்.... அவளை நேற்று காலை ஒரு பையனுடன் இங்கே விமானநிலையத்தில் யாரோ பார்த்ததாய் சொன்னார்கள்.... அது உண்மையா என்று எனக்குத் தெரிய வேண்டும்.... அவர்கள் சொன்னது போல்  அவள் இங்கு வந்திருந்தால் உங்கள் காமிராவில் பதிவாகி இருக்கும் அல்லவா?...

அந்த அதிகாரிக்கும் கல்யாண வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஒரு தந்தையாக அவருக்கு குப்தாவின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. இரக்கத்துடன் சொன்னார். “இந்த காமிரா பதிவுகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. இதைப் பார்க்க வேண்டுமென்றால் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் இந்தக் காரணம் எல்லாம் சொல்லி உங்களை மாதிரி ஒரு தனிநபர் விண்ணப்பித்தால் தர முடியாது.... போலீஸிடம் புகார் செய்து அவர்கள் எங்களைக் கேட்டால் நாங்கள் காட்டலாம்.....

குப்தா அழுகிற நிலைமைக்கு வந்த மாதிரி இருந்தது.  பரிதாபமாக அவர் சொன்னார். எனக்கு அதை நீங்கள் தர வேண்டாம். இங்கேயே காட்டினால் போதும், நான் பார்த்துக் கொள்கிறேன். தயவு செய்யுங்கள்.... போலீஸிடம் போக எனக்கு என்னவோ போல் இருக்கிறது.....

அதிகாரிக்கு அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது.  “சட்டப்படி நான் உங்களுக்குக் காட்டக்கூடாது. அப்படியே காட்டுவதாக வைத்துக் கொண்டாலும் எத்தனை காமிரா பதிவுகளை உங்களுக்குக் காட்ட முடியும். காலையில் பதிவானதைக் காட்டுவது என்றாலே ஏகப்பட்ட பதிவுகளைக் காட்ட வேண்டி இருக்கும். சரியான நேரம் தெரியுமா?

“காலையில் பத்தே கால் மணியிலிருந்து பத்தே முக்காலுக்குள் பார்த்ததாகச் சொன்னார்கள் சார்...

அதிகாரி யோசித்தார். பாதுகாப்பு விதிகளின்படி இந்த மனிதருக்குக் காமிரா பதிவுகளைக் காட்ட முடியாது. காட்டக் கூடாது. ஆனால் காமிரா பதிவுகள் இங்கிருந்து வெளியே போகாமல் இங்கேயே இருந்து அவரைப் போல ஒரு தந்தை தன் மகள் தெரிகிறாளா என்று பார்ப்பதில் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது?

அதிகாரி அனுமதித்தார். அந்தக் கால் மணி நேரத்தின் பல காமிரா பதிவுகளைப் பார்த்து விட்டு குப்தா தன் மகள் அதில் தெரியவில்லை என்று தெரிவித்து விட்டு பல முறை நன்றி சொல்லி விட்டு வருத்தத்துடன் கிளம்பினார். அதிகாரிக்கு அந்தத் தந்தையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தன் மகளுக்கு சீக்கிரமே கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்!

அரை மணி நேரத்தில் வாங் சாவொவிற்குத் தகவல் வந்தது. அந்த வழுக்கைத் தலையர் தலாய் லாமா விமானத்தில் இருந்து இறங்கும் போது தான் விமான நிலையத்திற்குள் நுழைந்திருக்கிறார். முழுவதும் தலை நரைத்த ஒரு வயதான டாக்ஸி டிரைவர் விமான நிலையத்தின் முன் வாசற்கதவு வரை சூட்கேஸ் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு திரும்பிருக்கிறார். வழுக்கைத் தலையர் தலாய் லாமாவுடன் பேசி விட்டு கல்கத்தா செல்லும் விமானத்தில் பயணமாகி இருக்கிறார். அவருடன் வேறு யாரும் இருக்கவில்லை. தனியாகத் தான் சென்றிருக்கிறானர்.....

அந்த நரைத்த முடி டாக்ஸி டிரைவரைத் தேடிக் கண்டு பிடித்து வழுக்கைத் தலையர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க்க் கட்டளையிட்ட வாங் சாவொ, லீ க்யாங்குக்கு இந்தத் தகவலை உடனடியாகத் தெரியப்படுத்தினான்.

  
திகாலையில் டெல்லி லோடி கார்டன்ஸ் சென்றால் தங்கள் உடல்நலத்தில் அக்கறை உள்ள பலதரப்பட்ட மக்களை ஒருவர் பார்க்கலாம். நடப்பவர்கள், ஓடுபவர்கள், தங்கள் உடல்களை விதவிதமாய் வளைத்து உடற்பயிற்சி செய்பவர்கள், தெரிந்த யோகாவை தங்கள் விருப்பப்படி செய்து கொண்டிருப்பவர்கள் என எத்தனையோ ரக மனிதர்கள் அங்கு தென்படுவார்கள்.


அப்படி தென்பட்ட மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஜாகிங் செய்து கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு வயது 25க்குள் இருக்கும். ரோஜா நிற டீ ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தான். அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெள்ளை நிற கைக்குட்டை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் ஐந்து கிலோமீட்டர் தூரம் போய் விட்டு அங்கிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் களைத்துப் போய் உட்கார்ந்தான். யாரும் இன்னும் அவனை நெருங்கவில்லை.


லோடி கார்டன்ஸ் மிகப் பெரியது. அங்கே தெரிந்தவர்களைத் தேடுவதே சிரமம் தான். அடையாளம் தெரியாத அந்த ஆள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ? வாங் சாவொ அனுப்பிய அந்த இளைஞன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி 7.18.


திடீரென்று ஒருவன் அமர்ந்திருந்த இடத்தருகே வந்து வளைந்து நின்று வலது கையால் இடது பாதத்தையும், இடது கையால் வலது பாதத்தையும் மாறி மாறி தொட்டு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான். அவனுக்கு வயது முப்பது இருக்கலாம். டென்னிஸ் உடையில் இருந்தான். உடம்பை கச்சிதமாக வைத்திருந்தான். உடற்பயிற்சி செய்து கொண்டே பேச ஆரம்பித்தான். “கொஞ்சம் முன்னுக்கு வா”


வாங் சாவொவினால் அனுப்பப்பட்ட இளைஞன் நிதானமாக சுற்றிலும் பார்த்தான். பக்கத்தில் அந்த ஒரு ஆளைத் தவிர வேறு யாரும் இல்லை. சாய்ந்து அமர்ந்திருந்தவன் கை முட்டிகளை முழங்கால் முட்டிகளில் வைத்து ஏதோ யோசனையில் ஆழ்பவன் போல் முன்னால் குனிந்து உட்கார்ந்தான்.


டென்னிஸ் உடையில் இருந்தவன் உடற்பயிற்சி செய்து கொண்டே சொன்னான். “தலாய் லாமா போன பிறகு பிரதமர் யாரோ ஒருவருடைய ஃபைலை உளவுத் துறையில் கேட்டிருக்கிறார். கம்ப்யூட்டரில் இருக்கிற அந்த ஃபைல் உளவுத்துறையின் தலைமை அதிகாரிகள் இருவரின் அனுமதியுடன் மட்டுமே திறக்கப்பட முடிந்த உச்ச ரகசிய ஃபைல். இருவரில் ஒருவர் நேற்று இல்லாததால் அது இன்று காலை தான் பிரதமர் பார்வைக்குப் போகிறது...”


“அந்த யாருடைய ஃபைல் என்று யூகிக்க வழி இருக்கிறதா?” வாங் சாவொவின் ஆள் கேட்டான்.

“பெயரைக் கூட வாய் விட்டு சத்தமாக யாரும் சொல்ல மாட்டேன் 
என்கிறார்கள். பிரதமர் உளவுத்துறையில் நேரடியாகக் கேட்டிருக்கிறார். அவர்களும் நேரடியாகவே அதை அவருக்குக் காட்டப் போகிறார்கள். பிரதமரின் அந்தரங்க காரியதரிசிக்குக் கூட அது பற்றி எதுவும் தெரியவில்லை.”


“தலாய் லாமா பிரதமரிடம் என்ன பேசினார் என்று ஏதாவது....?”


“தெரியவில்லை.... தலாய் லாமாவுடன் வந்த புத்த பிக்குகளோ, பிரதமரின் காரியதரிசியோ கூட அந்த சமயத்தில் உடன் இருக்கவில்லை...”


டென்னிஸ் உடைக்காரன் திடீரென்று நிமிர்ந்து நின்றான். கைகளை மேலே உயர்த்தி முன்னங்காலில் சிறிது நின்று விட்டு உடலை இருபக்கமும் வளைத்து விட்டு அவன் அங்கிருந்து அவசரமில்லாமல் நகர்ந்தான். அவன் போய் இரண்டு நிமிடங்கள் உட்கார்ந்திருந்த வாங் சாவொவின் ஆள் பிறகு தானும் அங்கிருந்து கிளம்பினான்.


அவன் பெற்ற தகவல் ரகசிய குறீயீடுகள் செய்யப்பட்ட மின்னஞ்சலாக அரை மணி நேரத்தில் மூன்று நாடுகள் பயணம் செய்து கடைசியாக வாங் சாவொவை அடைந்தது. வாங் சாவொ உடனே அதை லீ க்யாங்குக்கு அனுப்பி வைத்தான்.


லீ க்யாங் தனக்குக் கிடைத்த தகவல்களை எல்லாம் வைத்து ஒரு முடிவுக்கு வர முயன்றான். எந்த முடிவுக்கு வந்தாலும் அந்த முடிவே வேறு பல கேள்விகளை எழுப்பி தான் முடிந்தது. மைத்ரேய புத்தர் விவகாரம் என்று பொதுவாகத் தெரிந்த போதிலும் மற்ற எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தலாய் லாமாவின் டெல்லி விஜயம் எதற்கு என்பது இன்னும் சிதம்பர ரகசியமாகவே இருந்தது. தனது இருப்பிடமான தர்மசாலாவுக்கு வந்த பின் நீண்ட நேரம் அவர் பிரார்த்தனை செய்து அமர்ந்திருந்ததாக சோடென் மூலம் தகவல் வந்தது.


மீண்டும் ஆரம்பத்திலிருந்து லீ க்யாங் யோசிக்க ஆரம்பித்தான். மைத்ரேய புத்தர் சம்பந்தமாக மௌன லாமா ஏதோ எச்சரிக்கை விடுத்திருக்கிறார். உடனே தலாய் லாமாவை ஆசான் வந்து சந்திக்கிறார். இருவரும் ஏதோ ரகசியமாய் பேசி கடைசியில் இந்தியப் பிரதமரைச் சந்திக்க தலாய் லாமா முடிவெடுக்கிறார். அப்படியே இந்தியப்பிரதமரை சந்திக்கவும் செய்கிறார். அந்த சந்திப்பின் முடிவில் இந்தியப் பிரதமர் ஏதோ ஒரு ஆளின் ஃபைலை தங்கள் உளவுத்துறையில் கேட்கிறார். அது உச்ச ரகசியமான ஃபைல். இரண்டு உயர் அதிகாரிகள் சேர்ந்து திறந்தால் தான் திறக்கக்கூடிய ஃபைல்.


அது போன்ற ஃபைல்கள் ஒரு நாட்டின் மிக முக்கியமான ஒற்றர்கள் மீது இருப்பதுண்டு. சில சமயங்களில் அந்த ஒற்றர்கள் இரு நாட்டின் ஒற்றர்களாகக் கூட இருப்பதுண்டு. இன்னொரு நாட்டிற்கு ஒரு நாட்டைப் பற்றி ஒற்றுக் கொடுப்பது போல் நடித்து அந்த நாட்டின் ரகசியங்களை அறிந்து முதல் நாட்டுக்குத் தெரிவிப்பவர்கள் டபுள் ஏஜண்ட் என்று அழைக்கப்படும் இருநாட்டு ஒற்றர்கள். அந்த இன்னொரு நாட்டை நம்ப வைக்க வேண்டி நிஜமாகவே சில சில்லறை ரகசியங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அந்த நாட்டின் நம்பிக்கையைப் பெற்ற பின் அவர்களிடமிருந்து பெரிய ரகசியங்களைக் கறந்து முதல் நாட்டிற்கு அனுப்புவார்கள். அந்த ஃபைல் ஆசாமி அந்த மாதிரி ஒற்றனாக இருக்குமோ?


லீ க்யாங் தலாய் லாமா, ஆசான் பேச்சுக்களை மறுபடி மனதில் ஓட விட்டான். அவர்கள் நேரடியாகத் தேட முடியாத ஆசாமி அல்லது வித்தியாசமான பெயர் உடைய ஆசாமி தான் அந்த ரகசிய ஃபைல் ஆசாமி என்று தோன்றியது. ஒருவேளை அவன் பெயரை மௌன லாமாவே எழுதிக் காட்டி இருக்கக்கூடுமோ? அவனுக்கும் மைத்ரேய புத்தருக்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும்? ஏன் இவர்கள் இவ்வளவு அவசரமாக அவனைத் தேடுகிறார்கள்? அவன் மைத்ரேய புத்தர் விவகாரத்தில் இவர்களுக்கு எந்த விதத்தில் தேவைப்படுகிறான்? இந்தியா எந்த அளவு இவர்களுக்கு உதவப் போகிறது?


லீ க்யாங் இதன் பதில்களை பல அனுமானங்களில் தேட ஆரம்பித்தான்.... ஆனால் அனுமானங்கள் எதுவும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது. ரகசிய ஃபைல் இருக்கும் அளவு அந்த மனிதன் இருக்க வேண்டுமானால் அவன் சாதாரணமானவனாக இருக்க வழியில்லை.!


”அவன் சாதாரணமானவனில்லை” என்ற அபிப்பிராயமே பிரதமரிடமும் அந்த ஃபைலைப் படித்து முடித்த பின் மிஞ்சியது. தலாய் லாமாவின் கதை ஒருவித அமானுஷ்யத் தன்மை வாய்ந்தது என்றால் பெயருக்கு ஏற்றபடி ’அவனு’ம் அமானுஷ்யமானவனாகவே தோன்றினான். பொருத்தமான ஆளைத் தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அமானுஷ்யன்!


(தொடரும்)


- என்.கணேசன்


(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க 9600123146 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.)

11 comments:

  1. Video Recording collecting super idea, as well as last five episode review excellent... Great job sir... vazhthukal....

    ReplyDelete
  2. அர்ஜுன்August 7, 2014 at 6:29 PM

    நிஜம் போலவே மிக சுவாரசியமாய் கொண்டு செல்கிறீர்கள். க்ரேட் ஜாப்.

    ReplyDelete
  3. very interesting episode.

    ReplyDelete
  4. லீ க்யாங்.. வாங் சாவொ... Payankara puthisalikal..... Mikuntha viru virupudan pokirathu...arumai

    ReplyDelete
  5. சரோஜினிAugust 7, 2014 at 9:06 PM

    வியாழக்கிழமை எப்ப வரும், சாயங்காலம் ஆறு மணி எப்ப ஆகும்னு வாரா வாரம் ஏங்க வெக்கிறீங்க. சூப்பரா போகுது நாவல். வாழ்த்துகள் கணேசன்.

    ReplyDelete
  6. வாங்க வாங்க ரியல் ஹீரோ. . .

    ReplyDelete
  7. வருக வருக அமானுஷ்யன்

    ReplyDelete
  8. அடுத்தது என்ன என்று மனம் கேள்விக்கனைகளை
    தொடுத்து செல்கிறது. கற்பனை என்று சொல்லிவிட்டு
    கண்முன்னே நடப்பது போல் தாங்கள் கதையை விவரிக்கும்
    விதம் மிகவும் அருமை. அடுத்தது அமானுஷ்யனுக்காக‌
    காத்திருக்கிறோம்

    ReplyDelete
  9. Marupadiyum my hero entry....super sir thankyou sir

    ReplyDelete
  10. அமானுஷ்யனின் வரவை ஆவளாக எதிர்நோக்கி இருக்கிறோம்
    அமானுஷ்யன் பற்றி தெரிய வரும்போது லீ க்யாங் பார்வை எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்

    ReplyDelete
  11. அமானுஷ்யன் * Returns.!!

    ReplyDelete